செவ்வாய், 3 ஏப்ரல், 2012

எட்டெட்டு பகுதி 12:: மாயா கேட்ட உதவி!(மாயா ஆவி, கே வி க்குக் கூறிய கதை தொடர்கிறது.)
     
வீட்டில் நடந்த நாடகக் காட்சிகள், மிகவும் திறமையாகக் கையாளப்பட்டன. என் உடலை, ஒரு சேலைத் துணியில் தூக்கு மாட்டி, அதை சீலிங் ஃபேனில் தொங்கவிட்டு, என்னுடைய அப்பாவுக்கு, (குழந்தை பிறக்காத ஏக்கத்தால்) நான் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் கொடுத்து, அவரை உடனே கிளம்பி வரக் கேட்டுக் கொண்டார் என் கணவர்.
   
போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டருக்கு ஒரு லட்சம். தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ் அதிகாரிக்கு ஒரு லட்சம். இன்னும் பலருக்குப் பல லாபங்கள். மறுநாள்தான் ஊருக்கு வந்து சேர்ந்தார் என் அப்பா. ஒன்றுமே பேசாமல், என் உடலைப் பார்ப்பது, கண்ணீர் விடுவது என்று இருந்து கொண்டிருந்தார். அதற்குப் பின் தகவல் அறிந்து அங்கு வந்த காலுசிங் அழுது புரண்டதைக் கண்ட எல்லோர் கண்களும் கலங்கிவிட்டன. காலு சிங், நான் ஹோட்டலில் ஓ ஏ வையும், பிங்கியையும் பார்த்துப் பேசி, அவர்கள் நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றதும், வீட்டுக்கு வந்து தற்கொலை செய்துகொண்டுவிட்டேன் என்று நினைத்தது போலத் தெரிந்தது. என்னால் யாருடைய நினைப்பையும் மாற்ற முடியவில்லை.
   
என்னுடைய உடல் தீயிடப் பட்டதும், 'இனி என்ன?' என்று ஓர் எண்ணமும் வெறுமையும் வந்தது. ஆனால் உடனேயே, வான வெளியில் மிதக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் மெதுவே மேலே செல்ல ஆரம்பித்த நான் பிறகு படிப்படியாக மேலே மேலே வேகமாக நகர்ந்து, முடிவே இல்லாத ஒரு சுரங்கப் பாதையில் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தேன். அந்த சுரங்கப் பாதையின் முடிவில், ஒரே ஒளிவெள்ளம்! முதலில் கண்கள் கூசுகின்ற அந்த வெளிச்சத்தில், எதுவுமே பார்க்க முடியவில்லை. வெகு நேரம் அந்த வெளிச்சம் ஒருவாறு கண்களுக்கு அல்லது மனதுக்கு பரிச்சயமானவுடன், அங்கு சில உருவங்கள் புலப்பட்டன.
  
'மாயா - வந்துவிட்டாயா? உனக்காகத்தான் இங்கே காத்திருக்கின்றேன்.'

'நீங்க யாரு?'

'உனக்கு ஞாபகம் இருக்காது; நாந்தான் உன் அம்மா.'
    
என்னை அதுவரைப் பிடித்திருந்த சோகம் உடனே விலகியது. 'அம்மா! அம்மம்மா!! நான் பிறந்து வளர்ந்த இவ்வளவு வருடங்களில், அப்பா அதற்குப் பின் ஓ ஏ தவிர வேறு யாரையும் உறவாக நினைத்ததே இல்லையே! ஆஹா நான் இந்த உறவை இதுவரை நினைத்துப் பார்த்ததே இல்லையே!' "அம்மா நீ ஏன் என்னை விட்டுப் போனாய்? நீ இல்லாமல் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?"

"பழசை எல்லாம் மறந்துவிடு மாயா! இனி உன்னைப் பிரிய மாட்டேன்"

"அம்மா நான் உன்னைக் கட்டிப் பிடித்துக் கொள்ளலாமா?"

"உம். சர்வம் பிரம்ம மயம். இந்த ஆவி லோகத்தில், நீ என்ன நினைக்கின்றாயோ அது பௌதிகமாக நிகழாமலேயே - நிகழ்ந்தால் என்ன உணர்வு ஏற்படுமோ அது ஏற்படும்."

"ஆமாம் அம்மா ஆமாம். எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா!" 

"ஆமாம் மாயா - இந்த உலகில் எல்லாமே சந்தோஷம்தான். பசி, துக்கம் தாகம், வருத்தம், சோகம் எதுவும் கிடையாது. வெளிச்சம் உண்டு ஆனால் வெப்பம் கிடையாது! நீ பூவுலகில் வாழ்ந்தவரையில், எந்த உயிர்க்கும் எந்த தீங்கும் செய்ததில்லை. ஆகையால் உனக்கு இங்கு சலுகைகள் நிறைய உண்டு." 

"அம்மா பூவுலகில் நான் வாழ்ந்த வாழ்க்கை பற்றி நீ ஒன்றுமே கேட்கவில்லையே!" 

"தேவையே இல்லை மாயா. உன் பக்கத்திலேயே, இன்னும் சொல்லப் போனால், சில கட்டங்களில் நீ எடுத்த முடிவுகளைக் கூட உன் மனதுக்குள் புகுத்தி, உன்னை வழி நடத்தி இருக்கின்றேன். எனக்கு, நடந்தவை எல்லாமே தெரியும்." 

"அம்மா ஓ ஏ மிகவும் நல்லவர்." 

"அப்படி நீ நினைத்தால், அதுவும் சரிதான்." 

"அந்த பிங்கியின் பிடியிலிருந்து அவர் விலகி வந்தால் அது போதும் எனக்கு. மகளாக நினைக்கவேண்டிய ஒருத்தியை அவர் மனைவியாக்கிக் கொள்ள நினைக்கின்றாரே, அது என் மனதை மிகவும் பாதிக்கின்றது. அவர் வேறு யாரையாவது திருமணம் செய்துகொண்டு, சந்தோஷமாக வாழவேண்டும். அதுதான் என் ஆசை." 

"மாயா - இது எல்லாம் இந்த உலகத்திற்கு வந்த பிறகு தேவை இல்லாத பிரச்னைகள். அது அது விதிப் படி எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடக்கும். இதையும் மீறி, நீ ஏதாவது முயற்சி செய்ய விரும்பினால், இந்த உலகின் தலைவர் 'பரம்' இருக்கின்றார். நீ அவரை சந்திக்க நான் வழி காட்டுகின்றேன். " 

"சரி அம்மா." 
           
அம்மாவுடன் சென்று 'பரம்' ஆவியை சந்தித்தேன். அந்தப் பரம் ஆவி, நான் இறந்த நாளில், இறந்த இடத்துக்குச் செல்ல அனுமதி உண்டு என்றும், மேலும் சில நிபந்தனைகளையும் உணர்த்தியது. 
          
சென்ற வருடம் (2007) ஆகஸ்ட் எட்டாம் தேதி இங்கே வந்தபோது இந்த அறையில் யாருமே இல்லை. எனக்குப் பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது. ஆனால், இந்த அறை அப்பொழுது காலு சிங் அறையாக இல்லை என்பது தெரிந்தது. அத்துடன், நான் இறந்த அன்று பூட்டப் பட்ட இந்த மேஜை இழுப்பறை, அதற்குப் பிறகு திறக்கப்படவில்லை என்பது தெரிந்தது. அந்த இரும்புச் சாவி இரண்டாவது இழுப்பறையின் ஒரு பிளைவுட் விரிசலுக்குள் மாட்டிக் கொண்டிருக்கின்றது என்ற விவரமும், அந்த சாவியிலிருந்து வந்த கதிர்களை வைத்துத் தெரிந்துகொண்டேன். 
   
இதோ இந்த வருடம் ஆகஸ்ட் எட்டாம் தேதி இங்கே வந்துவிட்டேன். பரம் கூறிய சில தகவல்களை வைத்து, உங்களுக்கு 'ராமாமிர்தம்' உதவுவார் என்று சொன்னேன். நீங்கள் எனக்கு செய்யவேண்டிய உதவி ரொம்ப சிறிய உதவிதான். பிங்கியும் ஓ ஏ வும் இதுவரையில் திருமணம் செய்துகொள்ளவில்லை. மும்பை ஹோட்டல் திட்டம் முடிவடைந்தவுடன் திருமணம் செய்துகொள்வது என்று முடிவெடுத்துள்ளார்கள். அதற்குள் ஓ ஏ தன்னிலை அறிய வேண்டும். 
      
நாளைக்கு காலு சிங், ஓ ஏ வுக்கும், பிங்கிக்கும் காலை எட்டு மணிக்கு முன்பு கோக்க கோலாவும், ஆரஞ்சு ஜூசும் கொண்டுவருவான். நீங்க இந்த இரண்டாவது இழுப்பறையில் மாட்டிக் கொண்டிருக்கும் இரும்பு சாவியை எடுத்து, முதல் இழுப்பறையில் உள்ள நீல நிற பாட்டிலை எடுத்து, அதிலிருந்து ஒரே ஒரு காவிக் கலர் மாத்திரையை, கோக்க கோலா உள்ள டம்ப்ளரில் போட்டுவிட வேண்டும். மீதி உள்ள ஒரு மாத்திரையை, பாட்டிலுடன், உங்கள் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். அதை என்ன செய்வது என்று சந்தர்ப்பம் வாய்த்தால் பிறகு சொல்கின்றேன். 
   
இதை சொல்லிவிட்டு, மறைந்துவிட்டது அந்த ஆவி உருவம். 
             
(தொடரும்) 
                         

8 கருத்துகள்:

 1. ஹ்ம்ம்ம். நீண்ட இடைவெளிக்கு பின் எட்டெட்டு ..
  நன்றி...
  வினோத்

  பதிலளிநீக்கு
 2. கதை ரொம்ப சுவாரசியமா இருக்கு. துர்மரணம் ஆனவங்கதான் ஆவியா அலைவாங்கன்னு கேள்விபட்டிருக்கேன். மாயவோட அம்மா அங்க எங்க வந்தாங்க? மாயா ஆவியை பாத்தா பாவமா இருக்கு. கொஞ்சம் அந்த கே.வியை மறுக்காம உதவி பண்ண சொல்லுங்க.

  ஆவின்ன உடனே வெளிச்சம் போட்டு ஒரு படம், கருப்பு வெள்ளைல ஒரு உருவம் நிக்கற மாதிரி ஒரு படம்னு போட்டுடீங்க, சரி. ஆனா, கூடவே எதுக்குங்க ஒரு பச்சை கலர் பட்டு புடவை படம். புடவை கலரும் ஜரிகை பார்டரும் படு ஜோர். வைரஊசி மாதிரி இருக்கு. ரொம்ப டெம்ப்ட் ஆயிட்டேன். எந்த கடைல வாங்கினாங்கன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க. :)

  தயவு செய்து அடுத்த பதிவை கொஞ்சம் சீக்கிரமாவே போடுங்க. படிக்க ரொம்ப சுவாரசியமா இருக்கும்.

  பதிலளிநீக்கு
 3. எங்கள் ப்ளாக்5 ஏப்ரல், 2012 அன்று AM 7:32

  அது மாயாவின் அம்மா. வைர ஊசிப் புடவையை அவர் ஆவியுலகில் உள்ள மொன்னை சில்க்ஸ் கடையில் வாங்கியிருப்பார் என்று நினைக்கின்றோம்.

  பதிலளிநீக்கு
 4. குரோம்பேட்டை குறும்பன்8 ஏப்ரல், 2012 அன்று PM 7:49

  கொல்கட்டா இன்றைய மேட்சில், 8/1, 8/2, 8/3 என்று வந்தார்கள். இன்னும் அஞ்சு விக்கெட பறி கொடுத்திருந்தால், 8/8 எடுத்து, எட்டெட்டு க்குப் பெருமை சேர்த்திருப்பார்கள். ஜஸ்ட் மிஸ்டு !!! :))

  பதிலளிநீக்கு
 5. பச்சைக்கலரில் நூறு புடைவை இருந்தாலும் இது ரொம்பவே சூப்பர். மொன்னை சில்க்ஸின் விலாசம் கொடுங்க. இல்லாட்டி வாங்கி அனுப்பிடுங்க.

  அந்த மாத்திரையைப் போட்டுத் தான் கேவி ஓ.ஏ.வைக் கொன்னாரா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!