திங்கள், 23 ஏப்ரல், 2012

??? -- பாஹே

                    
 [புதுமைப் பித்தன் தன் 'காஞ்சனா' கதை பற்றி எழுதியுள்ள வரிகள் : "பேய் பிசாசு கதைகளைச் சொல்லி வாசகர்களைப் பயமுறுத்தணும்னு தோணிச்சு... அதான் இந்தக் கதை!"]
      
வெளி வாயிற்படி கேட்டையொட்டியிருந்த குட்டிச் சுவரின் மீது புறங்கைகளை ஊன்றியபடி வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாட்டி பரபரப்புடன் கூவினாள். 
  
"என்னங்க... உள்ள என்ன பண்றீங்க? சீக்கிரம் இங்கே வாங்க..."

முன் அறையில் 'ஹிந்து'வின் 'ஓபிச்சுவரி' பகுதியில் பிரசுரமாகியிருந்த பெயர்களை தனியே தன் குறிப்பேட்டில் எடுத்து எழுதிக் கொண்டிருந்த தாத்தா, வேகமாக எழுந்து வெளிப்பக்கம் விரைந்து வந்தார்.

"என்ன, என்ன?" 

"அதோ எதிர்சாரி மூணாம் வீட்டு வாசல்ல பாருங்களேன்"
  
பூட்டப் பட்டிருந்த அந்த வீட்டின் வெளியே நின்றிருந்த ஆட்டோவிலிருந்து ஒவ்வொரு சாமானாக சுமந்து சென்று கதவோரம் வைத்துக் கொண்டிருந்த அந்த இளைஞன், அதே சமயம் தற்செயலாகத் திரும்பி இவர்கள் இருவரையும் பார்த்ததும்...
   
"பாருங்க, பாருங்க... இங்கேதான் வர்றான் அவன்..."
              
நெருங்கி விட்ட இளைஞன் நெற்றி வியர்வையைத் துடைத்த படி "நமஸ்காரம் மாமா... நான் இந்த வீட்டுக்கு ஜாகை வரேன்... ஒரு பூட்டு சாவியும், ஒரு பாத்திரத்துல குடிக்கற ஜலமும் தர முடியுமா... நாளைக்குத் திருப்பித் தந்துடறேன்.."
  
பாட்டி உள்ளே வேகமாகச் சென்று, கொண்டு வந்தாள்.

"ஏம்ப்பா... நல்லா விசாரிச்சுட்டுத்தானே இந்த வீட்டைப் புடிச்சே...?"

"ரொம்ப நாளா பூட்டிக் கெடக்கு, போய்ப் பாருன்னு என் ஆபீஸ்ல சொன்னாங்க... வந்து பார்த்தேன். புடிச்சிருந்தது"
  
தாத்தாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"ஏம்ப்பா நீ மட்டும்தானா?"

"இல்லே பாட்டி.... கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆச்சு.. மனைவிக்கு தலைப்ப்ரசவம்.நாளைக்கு மகளையும் குழந்தையையும் அழைச்சுகிட்டு மாமா வர்றார்.."

திரும்பியவன் மறுபடி நின்று பெரியவரை உற்றுப் பார்த்தான். "அட, நீங்களா மாமா....மாமி, உங்களுக்கும் என்னைத் தெரியல்லியா?"

பெரியவர் நினைவு வந்தவராகக் கையைச் சொடுக்கினார். "நாங்க அந்தப் புளிய மரத்துக்குப் பக்கத்துல குடி இருந்தப்போ நீ தெருக்கோடி வேப்ப மரத்தை ஒட்டி இருந்தே இல்லே?"

"ஆமாம், ஆமாம், கரெக்டா சொல்றீங்க... அதை விட இந்தப் புதிய வீடு இரண்டும் நமக்கு வசதியானதுதான்... இப்படிப் பெரிய வீடுகளா காலியா இருந்தது நமக்கு அதிருஷ்டம்தான்..."

"நாங்க கூட மொதல்ல உன்னைப் பார்த்தப்போ 'அடப்பாவமே'ன்னுதான் நெனச்சோம். இப்ப உங்கிட்ட பேசினப்புறம்தானே நீயும் நம்ம ஜாதிதான்னு தெரியுது... உன் ஒய்ஃபும் நம்ம மாதிரிதானா?

"ஆமாமாம்... இல்லேன்னா எப்படி?"

"சரி ஒரு சந்தேகம்... நாங்க வயசானவங்க இப்படி இருக்கறது இயற்கைதான்... நீங்க எப்படி இந்த சின்ன வயசுல...?"

"அது வந்து மாமா...நாங்க காலேஜ் படிக்கிறப்போ லவ் பண்ணினோம்...ரெண்டு வீட்டிலும் எதிர்த்தாங்க... ஒரு வருஷம் குடித்தனம் பண்ணியிருப்போம்.. அவுங்க கூட்டமா வந்து வெளியே கதவைப் பூட்டிபிட்டு வீட்டுக்கு தீ வச்சிட்டாங்க... போலீசுக்கு பயந்து விபத்து மாதிரி காட்டிட்டாங்க.... சாதி சனம் நம்பிடிச்சு... இரக்கப் படாம 'நல்லா வேணும்'னு திருப்திப் பட்டுகிட்டாங்க... அப்போ தொட்டு அந்த மரங்கதான்.... நீங்க சமீபத்துலதான் இந்த வீட்டுக்கு வந்தீங்களா?"
  
"இல்லேப்பா...அது ஆச்சு ஐம்பது வருஷம்... நாங்க அந்தக் காலத்துலேயே தூக்குப் போட்டுகிட்டவங்க...!" சிரித்தார்கள்.
   
இளைஞனும் சிரித்தான்."ஜாதியை ஒழிக்கிறதா பேசிக்கிறாங்களே... நம்ம ஜாதியை அவங்களால என்ன பண்ண முடியும்?"
  
பின்னுரை:  
    
1)  அது சரி... புதுமைப் பித்தன் மட்டும்தான் பயமுறுத்துவாரா?
   
2) இந்தக் கதைக்கு பொருத்தமான ஒரு தலைப்பு சொல்லுங்கள்... தேர்வாகும் தலைப்புக்கு புத்தகப் பரிசு உண்டு!  
                      
                       

11 கருத்துகள்:

 1. செத்தோம் பிழைத்தோம்!

  பதிலளிநீக்கு
 2. குரோம்பேட்டை குறும்பன்24 ஏப்ரல், 2012 அன்று PM 6:22

  தலைப்பு: ஒன்று எங்கள் ஆவியே; உண்டு எங்கள் ஜாதியே!

  பதிலளிநீக்கு
 3. ஆவி உலகுக்கும் பூட்டு சாவி, ஜலமா? ம்,...
  இக்கரைக்கு அக்கரை பச்சை- ன்னு தலைப்பு எப்படி?!

  பதிலளிநீக்கு
 4. 1)இது நம்ம ஏரியா !

  2)பூட்டில்லா உலகம் !

  பதிலளிநீக்கு
 5. குரோம்பேட்டை குறும்பன்29 ஏப்ரல், 2012 அன்று PM 8:59

  இதுவரை வாசகர்கள் கூறிய தலைப்பு எதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லையா?

  பதிலளிநீக்கு
 6. நானும் ஆவி, நீயும் ஆவி, நினைச்சுப் பார்த்தா எல்லாம் ஆவி!

  ஆவிகள் உலகத்தில் சாதிபேதமில்லை!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!