புதன், 25 ஏப்ரல், 2012

எட்டெட்டு பகுதி 15:: போலீஸ் ஸ்டேஷனில் கே வி!கே வி: சார், சார்? பால்காரர் .... மிஸ்டர் ராமாமிர்தம்....... ?

ரா மி: வாருங்கள். நீங்கள் யார்? 

கே வி : என் பெயர் கே வி. என்னை மாயா மேடம் அனுப்பினார்கள். நான் மிஸ்டர் அகர்வால் ஆபீசுக்கு ஆடிட் வேலையாக வந்திருக்கின்றேன். 

ரா மி: அட! அப்படியா! அவங்க நேத்து காலையிலே சொல்லும் பொழுது, ஏதோ கிண்டலுக்கு சொல்லுகிறார்கள் என்று நினைத்தேன்! நிஜமாவே ஆடிட்டரை அனுப்பி இருக்கின்றாரே! 

ராமாமிர்தமிடம் தொடர்ந்து பேசியதில், அவர் தெலுங்கு பேசுபவர், தமிழும் புரியும், இந்தியில் சரளமாகப் பேசத் தெரியும் என்பதைத் தெரிந்துகொண்டார், கே வி. 
    
கே வி: உங்களுக்கு, மாயா அகர்வால் தவிர வேறு எந்த மாயாவையாவது தெரியுமா? 

ரா மி: எனக்கு இருக்கின்ற கஸ்டமர்களில், நாலைந்து பேர்களாவது மாயா என்ற பெயர் கொண்டவர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் இருக்கலாம். ஏன் கேட்கின்றீர்கள்? 

கே வி: சும்மா தெரிந்து கொள்வதற்குத்தான். சரி, இந்த மாயா அகர்வால் கணக்கில் என்ன பிரச்னை? 

ரா மி: சார் ஜூலை மாதம் பால் வாங்கிய கணக்கில் என்னுடைய டயரியில் நான் எழுதி வைத்திருக்கும் கணக்கிற்கும், அவர்கள் எழுதி வைத்திருக்கும் கணக்கிற்கும், கொஞ்சம் வித்தியாசம் இருக்கின்றது. இதோ அவர்கள் எழுதிக் கொடுத்திருக்கும் பேப்பர். இதோ என்னுடைய டயரி. 

கே வி: (இரண்டையும் ஏதோ யோசனையில் வாங்கிக் கொண்டவராக) உங்கள் கணக்குப்படி உங்களுக்கு எவ்வளவு ரூபாய் மாயா அகர்வாலிடமிருந்து வரவேண்டியுள்ளது? 

ரா மி: அதிகம் எதுவும் இல்லை சார். நாற்பத்து நான்கு ரூபாய் அவர்கள் கொடுக்கவேண்டியுள்ளது. அவ்வளவுதான். 
    
கே வி : அவ்வளவுதானே. (மாயா அகர்வால் பால் கணக்கு எழுதிக் கொடுத்திருந்த பேப்பரை நன்றாகப் பார்த்து - ஒரு முறை பின்னக் கூட்டல் கணக்குப் போட்டபடி, அந்தப் பேப்பரை திருப்பிப் பார்த்து ..... திடுக்கிட்டவராக) ஓ மை காட்! 
   
ரா மி: என்ன சார்? என்ன ஆச்சு? 

கே வி: (சமாளித்தபடி) ஒன்றும் இல்லை. அவர்கள் கணக்கில்தான் தவறு இருக்கின்றது. இந்தாருங்கள் நூறு ரூபாய். மீதி சில்லறை இல்லை என்றாலும் பரவாயில்லை. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு மாயா அகர்வாலின் வீட்டுக்கு செல்லும் வழியை கூறுங்கள். 
  
ரா மி: அவர்கள் வீடு, பக்கத்துத் தெருவில்தான் இருக்கின்றது. (வழி சொல்கிறார்.) 
***********

கே வி: மேடம், நான் அகர்வால் சார் ஆபீசுக்கு வந்திருக்கும் ஆடிட்டர். உங்கள் பால் கணக்கு சரி பார்த்து, பால்காரருக்கு கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுத்து விட்டேன். இல்லை இல்லை - எனக்கு பணம் எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டியது இல்லை. ஒரே ஒரு உதவி போதும். இதோ இந்தப் பால் கணக்கு எழுதிய பேப்பரை எந்த பாடிலிருந்து கிழித்தீர்களோ அந்த பாட் எனக்கு வேண்டும். நான் மிஸ்டர் அகர்வாலிடம் ஃபோனில் சொல்லி விடுகின்றேன். 

மாயா : (தான் பணம் எதுவும் கொடுக்கவேண்டாம் என்னும் நிம்மதியில், சந்தோஷமடைந்தவராக) இந்தாருங்கள், அந்த ஸ்க்ரிப்ப்ளிங் பாட். 

************

கே வி : (ஆபீசில், அகர்வாலிடம் ) சார். உங்கள் பால் கணக்கு செட்டில் செய்துவிட்டேன். எனக்கு உங்கள் உதவி தேவை. 

அகர்: அப்படியா நன்றி. என்ன உதவி தேவை? 

கே வி: நீங்கள் இந்த ஸ்க்ரிப்ளிங் பாட் சமீபத்தில், நம் அலுவலக கம்பியூட்டர் பிரிண்ட் பேப்பரில் நீங்களாகவே தயாரித்திருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். சரியா? 

அகர்:  ஆமாம் சார். அது குப்பைக்குப் போகின்ற பேப்பர்தானே - உபயோகித்துக் கொள்ளலாம் என்றுதான்.... அது தவறா? அலுவலக பேப்பரை அந்த வகையில் உபயோகித்துக் கொள்ளக்கூடாதா? 

கே வி: தவறே இல்லை. இன்னும் பார்க்கப் போனால் இதனால் மாபெரும் உதவி நம் அலுவலகத்திற்குக் கிடைத்திருக்கின்றது. நீங்கள் இந்தப் பேப்பர்களை எங்கே எடுத்தீர்கள்? 

அகர்: (சற்று யோசித்து) சார், இந்தப் பேப்பர்களை சென்ற வாரம், அலுவலக சீஃப் மிஸ்டர் தாஸினுடைய பி ஏ இருக்கின்றாரே மிஸ்டர் பாட்யா அவருடைய அறையிலிருந்து, அவர் இல்லாத நேரத்தில் எடுத்தேன். 

கே வி: பாட்யா இன்று வந்திருக்கின்றாரா? அவருடைய ரூம் எது? இன்று காலை நம்முடைய மீட்டிங் அறைக்கு வந்திருந்தாரா? 

அகர்: சார் தாஸினுடைய அறைக்குப் பக்கத்து அறைதான், பாட்யாவின் அறை. அவர் காலையில், நம்முடைய மீட்டிங்குக்கு வரவில்லை. காலையில் தாமதமாக வந்தார். இப்பொழுது, டிபன் சாப்பிட, பக்கத்து ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். 

கே வி: நான் தாஸைப் பார்த்துக் கொஞ்சம் பேச வேண்டியுள்ளது. நீங்கள், பாட்யா வந்தவுடன், அவரை, ஆடிட் அறைக்கு வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்கள். 

அகர்: சரி சார். இன்னும் கால் மணி நேரத்தில் அவர் வருவார். வந்தவுடன் உங்கள் ஆடிட் அறைக்கு அவரை அனுப்பி வைக்கின்றேன். 

கே வி: அகர்வால் சார். அவரை ஆடிட் ரூமுக்கு அனுப்பிய பிறகு, நீங்க இந்த அலுவலகத்தின் ரிக்கார்ட் ரூமுக்குச் சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். பாட்யா வந்து உங்களை, நான் அழைப்பதாகக் கூறி அழைத்தால், பதினைந்து நிமிட நேரம் அவருடன் பேசி, தாமதப் படுத்தி, பிறகு அவருடன் சேர்ந்து ஆடிட் அறைக்கு வாருங்கள். 

அகர்: சரி சார். 

************** 

தாஸுடன் கே வி நடத்திய பத்து நிமிட உரையாடலில், பாட்யாவின் தில்லு முல்லுகளுக்கும், தாஸுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதைத் தெரிந்துகொண்டார். பாட்யா கைது செய்யப் படலாம் என்னும் எச்சரிக்கையையும், தாஸிடம் ஜாடையாகத் தெரிவித்துவிட்டு, ஆடிட் ரூமுக்குத் திரும்பினார், கே வி.   
**************

பாட்யா ஆடிட் ரூமுக்கு வந்த பொழுது, அவரிடம் கே வி, ஹெட் ஆபீசுக்கு ஒரு கடிதம் டிக்டேட் செய்து, அதை டைப் செய்து, தனக்கு பிரிண்ட் எடுத்துத் தரும்படி வேண்டினார். பாட்யா கொண்டு வந்த பிரிண்டைப் பார்த்து, உதட்டைப் பிதுக்கியபடி, 'இன்னும் கொஞ்சம் மாற்றங்கள் செய்யவேண்டி உள்ளது. வாருங்கள் உங்கள் ரூமுக்குச் செல்வோம். உங்கள் கம்பியூட்டரிலேயே கடித மாற்றங்கள் செய்து, அங்கிருந்து ஹெட் ஆஃபீசுக்கு மெயில் செய்துவிடுகின்றேன்.' என்றார். 

பாட்யாவின் அறைக்கு வந்தவுடன், அந்தக் கடிதத்தில் செய்யவேண்டிய மாற்றங்களை செய்து, பிரிண்ட் எடுத்தார் கே வி. 

கே வி: பாட்யா சார் - ஒரு உதவி செய்ய முடியுமா? அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் அகர்வால் சீட்டில் இல்லை போலிருக்கிறது. அவர் எங்கே இருந்தாலும், தேடிக் கண்டுபிடித்து, அவரை கடந்த ஆறு மாதங்களுக்குண்டான கணக்குப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு என்னுடைய ஆடிட் அறைக்கு வரச் சொல்லுங்கள். அதற்குப் பிறகு, அவர் எங்கே எல்லாம் செல்கிறார், என்ன செய்கிறார் என்பதைப் பார்த்து, அவருடன் நீங்களும் வந்து, அவரின் நடவடிக்கைகள் பற்றி தகவல் கொடுங்கள். 

பாட்யா: (சந்தோஷமாக) சரி சார். எனக்கும் கூட அவர் கணக்கு வழக்குகளில் ஏதோ தில்லு முல்லு செய்கிறார் என்ற சந்தேகம் உண்டு. 

பாட்யா அகர்வாலைத் தேடிச் சென்றவுடன், கே வி தன்னுடைய சட்டைப் பையில் வைத்திருந்த பென் டிரைவ் ஒன்றை எடுத்து, பாட்யாவின் கம்பியூட்டரில் இருந்த சில கோப்புகளை காப்பி செய்துகொண்டார். பாட்யாவின் கம்பியூட்டரில் ஒரு பகுதியில் இருந்த எல்லா கோப்புகளையும் காப்பி செய்து கொண்டு, பிறகு ஆடிட் அறைக்குத் திரும்பி வந்தார். 

சற்று நேரம் கழித்து, ஆடிட் அறைக்கு வந்த பாட்யா, அகர்வால் இருவரையும் வரவேற்று, அகர்வாலிடம் கணக்குப் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு, அவரை அனுப்பிவிட்டு, பிறகு அகர்வால் எப்படி எல்லாம் நேரம் கடத்தினார் என்று பாட்யா கூறியவற்றைக் கேட்டுக் கொண்டு, பாட்யாவிடம் நன்றி கூறி, அவருடைய இருப்பிடம், செல் நம்பர் எல்லாம் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தார். 

********* 
பாட்யாவின் கம்பியூட்டரிடமிருந்து பெற்றத் தகவல்கள், அவர் எப்படி போட்டிக் கம்பெனியிடமிருந்து பணம் வாங்கி இருக்கின்றார், இந்தக் கம்பெனி தயாரிப்பு பேரிங்குகளை வாரண்டி (ஃப்ரீ) ரிப்ளேஸ்மெண்ட் என்ற பெயரில் கொடுத்து, அதில் லாபம் பார்த்திருக்கின்றார். சில பேரிங்குகள் ஸ்க்ராப் என டிக்ளேர் செய்து - அதை அடிமாட்டு விலைக்கு விற்று, அவரே வேறு ஸ்க்ராப் வாங்கும் கம்பெனிப் பெயரில் அதை வாங்கி, வெளி மார்க்கெட்டில் விற்று, சம்பாதித்திருக்கின்றார் என்ற விவரமும், மேலும் பேரிங்குகளின் அட்டைப் பெட்டிகள் மழையால் பாழடைந்ததாகக் கணக்குக் காட்டி, புதிய அட்டைப் பெட்டிகளை நூற்றுக் கணக்கில் வாங்கி, அதைப் போட்டிக் கம்பெனிக்கு எக்கச் சக்க விலைக்கு விற்று இந்த வகையில் ஏராளமாக ஊழல் செய்துள்ளார் என்ற விவரங்கள் தெரியவந்தன. ஹெட் ஆபீசுக்கு ஒரு ஃபோன் செய்து விவரங்களை சுருக்கமாகக் கூறினார், கே வி. 

ஹெட் ஆபீசிலிருந்து, அவர்கள் கே வி யிடம் கூறிய தகவல்: "உடனே லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, அங்கு ஒரு எஃப் ஐ ஆர் - பதிவு செய்து, பாட்யாவைக் கைது செய்யச் சொல்லுங்கள். பணம் கையாடல் செய்து விட்டார், நம் பேரிங் கம்பெனிக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் ஆகிய குற்றங்களை அவர் மீது சுமத்தப் போகின்றோம். நம் பேரிங் கம்பெனி ஆடிட்டர் என்ற வகையில், நீங்கள் கை எழுத்திட்டு, அவர்களிடம் புகார் கொடுங்கள்." 

கே வி போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற பொழுது, அங்கே அந்த ஹோட்டல் பெரியவர் (முதல் நாள், கே வி க்கு தங்குவதற்கு, தன அறையைக் கொடுத்த பெரியவர்) இருந்தார். 

பெரியவர் கே வி யைக் கண்டதும், மிகவும் மகிழ்ச்சியுடன், "வாங்க வரதராஜன். தெய்வம்தான் உங்களை இங்கே அனுப்பி இருக்கின்றது. என்னைக் காப்பாற்ற உங்கள் உதவி தேவை" என்றார். 
      
(தொடரும்) 
    

15 கருத்துகள்:

 1. ஓஓ .... மாயா கதையில் ஒரு புதிய திருப்பமா?...
  நன்றாக போகிறது ...
  நன்றி...

  பதிலளிநீக்கு
 2. எங்கள் ப்ளாக்26 ஏப்ரல், 2012 அன்று PM 2:26

  கதையைப் படிச்சவங்க எல்லோரும் ஏதானும் கமெண்ட் எழுதுங்க! நாலஞ்சு கமெண்ட் பாத்தாதான் பதிவாசிரியர் தொடர்ந்து எழுதுவாராம். இல்லையேல் இமாலயாஸ் போய்விடுவாராம்!

  பதிலளிநீக்கு
 3. திருப்பங்களுடன் எதிபார்க்க வைத்து நல்லா எழுதறாங்க. தயவு செய்து கதையைத் தொடர்ந்து gaga aaa எழுதச் சொல்லுங்க. நானே வேணா பத்து கமென்ட் போடறேன்.

  பதிலளிநீக்கு
 4. பதிவாசிரியர்26 ஏப்ரல், 2012 அன்று PM 7:01

  ஹலோ ஐ ஆர் சி டி சி? இமாலயாசுக்கு ஒரு டிக்கெட் ப்ளீஸ்!

  பதிலளிநீக்கு
 5. I tried to use the google transliteration to write the comment. Gaga aaa is just a typing error. Sorry .geetha santhanam

  பதிலளிநீக்கு
 6. குரோம்பேட்டை குறும்பன்26 ஏப்ரல், 2012 அன்று PM 7:17

  காக ஆஅ !!! ஹி ஹி gaga aaa என்று டைப் பண்ணிப் பார்த்தேன். கூகிள் கொடுத்த தமிழ் மொழி பெயர்ப்பு இதுதான்!! எனக்கு என்னவோ gaga aaa என்பது கீதா சந்தானம் அவர்கள் இருக்கின்ற ஊரில் ஏதோ கடுமையான திட்டும் வார்த்தைகள் என்று தோன்றுகிறது!!

  பதிலளிநீக்கு
 7. குரோம்பேட்டை குறும்பன்26 ஏப்ரல், 2012 அன்று PM 7:22

  ஓய் பதிவாசிரியரே! அதுதான் ஆறு கமெண்ட் ஆயிடுச்சே! இனிமே என்ன தடை? ஊம் ... ஆ'ரம்பம்' ஆகட்டும் தொடர் இழுவை!

  பதிலளிநீக்கு
 8. ஹலோ, இதோ நானும் வந்துட்டேன். கீதா மேடம் சொன்னது அப்படியே ரீப்பீட்டு.
  டிக்கெட் கான்செல்! தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
 9. சுவாரஸ்யம்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. போங்க நீங்க.. இமாலயாஸ் போவாருனு.. சும்மா ஏமாத்தறீங்க..

  பதிலளிநீக்கு
 11. பதிவாசிரியர்27 ஏப்ரல், 2012 அன்று AM 7:48

  அப்பாதுரை கிண்டல் பண்ணுறாரு! ஐ கோயிங் இமாலயாஸ்!! ஐ நோ கம். ஆல் ரீடர்ஸ் டேக் நோட்!! :)))

  பதிலளிநீக்கு
 12. கடவுளே! :)))
  ஐயா பதிவாசிரியரே! எடுத்ததுக்கெல்லாம் இப்படி கதையை தொடரமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சா எப்படி! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க. உங்க அப்பாதுரை சார்தானே சொன்னாரு. பரவாயில்லை விடுங்க! யூ நாட் கோயிங்! ப்ளீஸ் கண்டின்யூ தி கதை. :)

  பதிலளிநீக்கு
 13. எங்கள் ப்ளாக்27 ஏப்ரல், 2012 அன்று AM 10:03

  மீனாக்ஷி மேடம் கவலைப்படாதீங்க. பதிவாசிரியர் இந்தக் கதைக்கு எழுதி வைத்திருந்த ஒரு வரி அத்தியாயங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அவர் இமாலயாஸ் போனால் கூட நாங்க அவர் எழுத நினைத்திருந்த கதையை எங்கள் பாணியில் எழுதிவிடுவோம்.

  பதிலளிநீக்கு
 14. ஹஹஹா! அப்படி போடுங்க அரிவாளை!

  பதிலளிநீக்கு
 15. எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க இப்படி?? :)))))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!