திங்கள், 3 செப்டம்பர், 2012

பெருமாள் கல்யாணமும், பிறந்த நாள் வாழ்த்தும், பி. சுசீலா பாடலும் வருண பகவானும் - வெட்டி அரட்டை.

                       
அப்பவே சொல்லியிருக்கலாம்....!      

பிறந்தநாள் வாழ்த்து உறவினர்களிடமிருந்தும் நட்புகளிடமிருந்தும் வந்து கொண்டிருந்தது. நாள் முழுதும் வெவ்வேறு நேரங்களில் யாராவது வாழ்த்திக் கொண்டே இருந்தார்கள். மாலை ஏழு மணி இருக்கும். மனைவி வழி உறவிடமிருந்து வாழ்த்து! வாழ்த்து சொல்லி முடித்து விட்டு, தொடர்ந்து மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.    
 
"காலைல உன் அம்மா எப்போ எழுந்திரிப்பாங்க.."


"அஞ்சரைக்கெல்லாம் எழுந்துடுவாங்க.." - மனைவி. 
"உடனே காபி குடிச்சுடுவாங்களா.."
"இல்லை... பல் தேச்சுட்டுத்தான்..."
"அட, அதில்லைம்மா... உடனே காபி குடிச்சுடுவாங்களான்னு கேட்டேன்..."
"அதான ஆமாம்னு சொன்னேனே....ஓ... யாரு சித்தி...?"
"இப்போ வேணாம்... பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு.."
"பரவாயில்லை... அவர் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டார்..."
"வேணாம்மா... நியாயமில்ல அது... உடனே சொல்ல வேண்டிய அளவு நெருக்கமும் இல்ல.... காலைல சொல்றேன். ஒரு சொம்பு தலைக்கு ஊத்திட்டு காபி சாப்பிடச் சொல்லு  அம்மாவை..."    ஃபோனை வைத்து விட்டார்கள்.
அப்புறம் காலை வரை நடந்ததுதான் விஷயம்! யார் யாருக்கு உடம்பு சரியில்லை, யார் யார் மிக வயதானவர்கள், ரொம்பக் கிட்டிய சொந்தத்தில் யார், அடுத்த வட்டத்தில் யார், அதற்கடுத்த வட்டத்தில் யார்.. பேச்சில் பல பேர் வரிசையில் நின்று 'பெட்'டில் படுத்து எழுந்தார்கள்.    
யாரென்று பேசாமல் அப்போதே சொல்லியிருக்கலாம்!       
-----------------------------------------------------

கேட்டுச் சொல்லுங்க....
    
திருப்பதி பெருமாள் மேல் ஒருவர் கேஸ் போட்டிருக்கிறாராம். வெங்கடேசப் பெருமாள் தன் கல்யாணத்துக்கு குபேரனிடம் நிறையக் கடன் வாங்கியிருக்கிறார் என்று புராணம் சொல்கிறது. திருப்பதி உண்டியலிலும் பெருமாள் தன் கடனை அடைக்க உதவி செய்யுங்கள் என்ற அர்த்தத்தில் வாசகங்கள் எழுதி இருக்குமாம். அந்த ஊர்க்காரர் ஒருவர், "பெருமாள் குபேரனிடம் எவ்வளவு கடன் வாங்கினார்? இன்னும் எவ்வளவு நிலுவையில் இருக்கிறது?" என்று கோர்ட்டில் கேஸ் போட்டிருப்பதாக சமீபத்தில் செய்தித் தாளில் படித்தேன்

   
இதே போல குஜராத்தில் இன்னொருவர் வருண பகவான் மீது பருவமழை பொய்த்துப் போனதன் காரணம் கேட்டு தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருக்கிறாராம். வேறு வழியில்லாத அதிகாரி, 'வருணபகவானைத் தொடர்பு கொள்ள முடியவில்லை' என்று பதிலளித்திருக்கிராராம்.   

------------------------------

கனவின் பலன்!
                
முன்பெல்லாம் யானை துரத்துகிற மாதிரி ஒரு கனவு வந்து எழுப்பி விட்டுக் கொண்டே இருக்கும். இரைக்க இரைக்க ஓடுவேன். முட்டுச் சந்தில் மறித்து அது தாக்க வரும் சமயம் திடீரென மலை முகட்டில் ஓடிக் கொண்டிருப்பேன். ஏதோ ஒரு கட்டத்தில் விழிப்பு வந்து விடும். வியர்த்திருக்கும்! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு லொகேஷனில் துரத்தும். நல்ல வேளை, இப்போதெல்லாம் அபபடி கனவு வருவதில்லை. ஆனால் 
காலை மூன்றரை மணிக்கு எழுப்பி  விட்டது கனவு.   

               
பி.சுசீலா பாடல் ஒன்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். உடன் என் மூத்த சகோதரர் இருக்கிறார். அப்பா "என்ன ராகம் இந்தப் பாடல்?" என்று கேட்கிறார்! அண்ணன், "என்ன ராகம்னு சொல்லத் தெரியவில்லை. ஆனால் இதே ராகத்தில் இன்னொரு பி.சுசீலா பாடல் இருக்கிறது.." என்கிறார். அப்பா,"என்ன பாடல் அது?" என்று கேட்க, இவர் "நவராத்திரி... சுபராத்திரி.." என்று பாடிக் காண்பிக்கிறார். நானும் பாடிப் பார்க்கிறேன். ஆமாம்... ஒரே மாதிரிதான் இருக்கிறது!    
               
விழித்துக் கொண்டேன். அப்புறம் தூக்கம் வரவில்லை. நவராத்திரி பாடல் நினைவு இருக்கிறது.... முதலில் பாடிக் கேட்ட, நவராத்திரிப் பாடலைப் போலவே இருக்கும், அந்த இன்னொரு பாடல் என்ன? மறந்து விட்டது. நினைவுக்கு வரவே இல்லை. இன்னமும் விழித்துக் கொண்டிருக்கிறேன்... அபபடி நிஜமாகவே இருந்ததா என் கனவுப் பிரமையா என்றும் தெரியவில்லை! தலைவலிதான் மிச்சம்!!    

=====================   
   
பாட்டியும், பேத்தியும். 
        
பாட்டி: "மாலுக்கண்ணு ...."
பேத்தி: "என்ன பாட்டி?"
பாட்டி: "இன்னிக்கு வரலக்ஷ்மி விரதம். குளிச்சிட்டு வந்து, அம்மா கூட சேர்ந்து, அம்பாளுக்கு பூஜை பண்ணு."  
பேத்தி: "அப்புறம்?"
பாட்டி: "நல்ல புருஷனா வரணும்னு அம்பாள் கிட்டே வேண்டிக்கோ."
பேத்தி: "சின்ன வயசுல நீ அப்பிடி வேண்டிகிட்டியா?"
பாட்டி: (கொஞ்ச நேரம் யோசனை செய்து) "ஆமாம்"
பேத்தி: :"உனக்கு நல்ல புருஷனா வந்தானா?"
அம்மா: "மாலு - பாட்டி சொன்னா கேட்டுக்க, சும்மா எதிர் கேள்வி கேட்காதே."
பேத்தி: "அம்மா நீ சின்ன வயசுல நல்ல புருஷன் வரணும்னு வேண்டிகிட்டியா?"
அம்மா: "நான் வேண்டிக்கலை. என்னுடைய பாட்டி என்னை வேண்டிக்க சொல்லலை."
பேத்தி: " ஆனா என்னுடைய அப்பா நல்ல அப்பா... தாத்தா நல்லவரா பாட்டி?"
பாட்டி: "தாத்தா எல்லோருக்கும் நல்லவர்தான். ... ஆனால்.... "
பேத்தி: "உனக்கு மட்டும் நல்லவரா இல்லை. அடிக்கடி சொல்லியிருக்கியே பாட்டி !"
எந்தப் பாட்டியாவது தன்  கணவனை நல்லவர் என்று யோசனை செய்யாமல் ஒப்புக் கொண்டது உண்டோ? 
                    

23 கருத்துகள்:

  1. வருண பகவான் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறாரா?.. இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு :-)))

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. நவரசமும் கொடுத்திருக்கக் கூடாதோ!

    பதிலளிநீக்கு
  3. எனக்குத் தூக்கமே ஆழ்ந்து வராது. இதிலே எங்கே கனவுக்குப் போறது?

    பதிலளிநீக்கு
  4. முதல் கதைக்கு (சம்பவத்திற்கு??) தலையைப் பிச்சுகிட்டேன்!! திருப்பித்திருப்பித்திருப்பித்திருப்பி வாசிச்சதில் ஏதோ புரிஞ்சிருக்கு!!

    ஆனா ஒரு விஷயம் மட்டும் இன்னும் புரியலை: பிறந்தநாள் வாழ்த்து சொன்னது கணவருக்கு. ஆனால், தலைக்கு ஊத்திக்கச் சொல்வது மனைவியின் அம்மாவை. ஏன்??

    தகவலறியும் உரிமை சட்டத்திற்குச் சில கட்டுப்பாடுகள் கொண்டு வந்தபோது கோவமா வந்துச்சு. சிலர் கண்டிச்சு பதிவெல்லாம்கூட எழுதினாங்க. இப்படிப் படுத்தினா, சட்டமே கான்ஸலானாலும் ஆச்சர்யமில்லை!!

    //எந்தப் பாட்டியாவது தன் கணவனை நல்லவர் என்று //
    இது, “எந்தப் பெண்ணாவது தன் கணவனை...” என்று வந்திருக்கணுமோ??!! :-)))))))

    பதிலளிநீக்கு
  5. ஆனா ஒரு விஷயம் மட்டும் இன்னும் புரியலை: பிறந்தநாள் வாழ்த்து சொன்னது கணவருக்கு. ஆனால், தலைக்கு ஊத்திக்கச் சொல்வது மனைவியின் அம்மாவை. ஏன்?? //

    ஹுசைனம்மா, தெரிஞ்சவங்க யாரோ இறந்திருக்காங்க. அதைச் சொல்லாமல் சொல்லி இருக்காங்க. அம்புடுதேன்.

    பதிலளிநீக்கு
  6. வல்லமையில் பரிசு பெற்றதுக்கு இப்போ உங்களை வாழ்த்தணும் ஹூசைனம்மா. என்னோட பிரச்னைகளில் மறந்து மறந்து போயிடறேன்.

    சிறப்புப் பரிசு பெற்றதுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. கீதா மேடம், //தெரிஞ்சவங்க யாரோ இறந்திருக்காங்க// - இது புரியுது. ஆனா அம்மாவை மட்டும் குளிக்கச் சொல்வது ஏன்? வீட்டில் மற்றவர்களுக்கு அது பொருந்தாதா?

    பதிலளிநீக்கு
  8. மனைவியோட அம்மாங்கறதாலே அவங்க பக்கத்துச் சொந்தமாய் இருக்கலாம். அவங்களுக்கு மட்டும் நேரிடையாக சாவுத்தீட்டு இருக்கலாம். யார்னே சொல்லலையே? எல்லாம் ஒரு ஊகம் தான். மனைவியின் உறவினர்கள் எல்லாருடைய இறப்புக்கும் கணவன் வீட்டில் தீட்டு வராது. தெரிஞ்சவங்க என்ற முறையில் துக்கம் விசாரிக்க வேண்டுமானால் போவாங்க. அவ்வளவே.

    பதிலளிநீக்கு
  9. ///வருணபகவானைத் தொடர்பு கொள்ள முடியவில்லை/// ஹா... ஹா...

    இப்படியெல்லாம் கனவு வருதா...?

    பதிலளிநீக்கு
  10. @கீதா மேடம்!

    ஓகே, இப்பப் புரியுது. நன்றிங்க.

    வல்லமை - வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி மேடம். ஞாபகமா சொன்னது மகிழ்ச்சியா இருக்கு.

    பதிலளிநீக்கு
  11. பகுதிப் பதிவாசிரியர்.3 செப்டம்பர், 2012 அன்று PM 7:05

    'எந்தப் பாட்டியாவது ...' என்பதில்தான் உள்ளது கேட்ச். எந்தப் பெண்ணாவது .... என்று கேட்டிருந்தால், நிச்சயம் ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் தன கணவனை நல்லவர் என்று (தயவு தாட்சண்யமின்றி!) ஒப்புக் கொண்டிருப்பார்கள். ஆனால் பேரன் பேத்திகள் எடுத்த பாட்டி என்பவளுக்கு, வாழ்க்கையில் எவ்வளவோ அனுபவங்கள், அடிபடல்கள். இவ்வளவையும் மீறி, அவர்களுக்கு, கட்டுப்பட்டிருந்தது போதும் என்கிற ஸ்வதந்திர சிந்தனை ஒன்றும் படிந்திருக்கும். அந்த சிந்தனைகளை, எண்ணங்களை, அவர்கள் பேரன் பேத்திகளிடம் திறந்த மனத்துடன் பகிர்ந்துகொள்வதை, கேட்டதுண்டு. அந்த வெளிப்பாடுதான் இது.

    பதிலளிநீக்கு
  12. //பகுதிப் பதிவாசிரியர்// - !!!! :-))))

    //இவ்வளவையும் மீறி, அவர்களுக்கு, கட்டுப்பட்டிருந்தது போதும் என்கிற ஸ்வதந்திர சிந்தனை ஒன்றும் படிந்திருக்கும்//
    சூப்பர்!! (நான் இன்னும் பாட்டியாகலைல்ல, அதான் இதெல்லாம் தெரியலை) :-))))

    ஒரு விஷயம் நோட் பண்ணிருக்கேன்: அப்பாவாக இருக்கும்போது வாங்கியதைவிட, தாத்தாவாக ஆனபின்புதான் அதிக இடிகள் கிடைக்கும்!! பிற்பகல் விளைச்சல்!! :-))))

    பதிலளிநீக்கு
  13. எனக்கும் கனவி வரும்''அம்மா வந்து கேட்பார். வெளில போகும்போது தலையை வாரிக்கக் கூடாதான்னு:)

    ஆமாம் பாட்டிகள் தாத்தாக்கள் விஷயத்தில் கடுப்பு கொள்ளுவது உண்மைதான்.
    ஸ்ரீராம்க்கா பிறந்தநாள். வாழ்த்துகள். யாரோட அம்மா.மனைவியோட அம்மாவா மனைவியோட மாமியாரா. ஏன்னென்றால் பிறந்த வீட்டு சமாசாரம் நேர அவங்க வீட்டுக்கே ஃபோன் போயிருக்குமே:)

    பதிலளிநீக்கு
  14. நல்ல கலவை . ஹாஸ்யரசம் கொஞ்சமாத்தூவி இருக்கோ:)

    பதிலளிநீக்கு
  15. தகவல் உரிமைச் சட்டம் - வருணபகவானிடம் கேள்வி... எதுக்கெல்லாம் உபயோகப்படுது பாருங்க! நேரம்..

    பதிலளிநீக்கு
  16. பகுதிப் பதிவாசிரியர் கருத்து - very sad.

    பதிலளிநீக்கு
  17. ரொம்ப ஹெவியா இருக்கு

    ஹுசைனம்மா: என்னா பரிசு .. நான் இன்னும் பாக்கலை. இதெல்லாம் உடனே ஒரு பதிவு போட்டு சொல்ல வேணாமா? :))

    பதிலளிநீக்கு
  18. பிறந்தநாள் யாருக்கு என்பதுதான் புரியவில்லை.

    கனவே ஒருவிதத்தில் பிரமைதான். கனவு வந்ததே பிரமையா?


    @ மோகன் குமார்,

    ஹூஸைனம்மா இதற்கு முன்பு அமீரகத் தமிழ்மன்ற கட்டுரைப்போட்டியில் வாங்கிய பரிசையே இன்னும் அறிவிக்கவில்லை. என்னன்னு கேளுங்க:)!

    பதிலளிநீக்கு
  19. கனவின் பலன்...இப்படி எனக்கும் நட்ப்பதுண்டு.கவிதைகளை எழுதித் தொலைத்திருக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  20. ஹுசைனம்மா பதிவு போடுங்கள். என்னப்பா இப்படி. சொல்லாம இருந்தா எப்படித் தெரியும்.
    என்னை பாருங்கள். எவ்வளவு சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளுகிறேன்:)

    பதிலளிநீக்கு
  21. அந்த சுசீலா பாட்டு என்னன்னு ஞாபகம் வந்தா கொஞ்சம் சொல்லிடுங்க. நானும் கொஞ்சம் யோசிச்சு பாத்ததுல எனக்கு லேசா தலையை வலிக்கறா மாதிரி இருக்கு. :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!