செவ்வாய், 17 ஜூன், 2014

தற்கொலை (2)..... ( எளிதில் கோபம் வருபவர்கள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும்....!! )


  முதல் பகுதி.


.......
(தொடர்ச்சி)


அவனைக் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லி விட்டு, மேலே போய் சட்டை மாற்றிக் கொண்டு வந்தேன். வீட்டில் யாரிடமும் இதைப்பற்றி ஒன்றும் மூச்சு விடவில்லை. நான் இவனுடன் பேசுவது தெரிந்தாலே என்னை உரித்து விடுவார்கள்.

இருவரும் பேசிக் கொண்டே இன்னொரு நண்பனிடம் சென்றோம். அவன் எங்கள் இன்னொரு நண்பனுடன் இருந்தான்!  ஏனோ அவர்களுக்குமே இவனை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும், காப்பாற்ற வேண்டும் என்று தோன்றவில்லை. இது அறிவீனமா, பயமா... ஏதோ ஒன்று!

தனியாகச் சாகப் பயமாக இருந்ததாகச் சொன்ன நண்பனுக்கு மிச்ச இருவரும் அவன் சாகும் வரை துணையாய் இருப்பதாய் முடிவு செய்யப்பட்டது!   அவர்களில் ஒருவன் வீட்டு மொட்டை மாடியில் படுப்பதாய் முடிவு செய்தார்கள்.  நான் முடிந்தவரை அவர்களுடன் இருந்து விட்டுத் திரும்பினேன். அதுவரையிலும் ஒன்றும் நேராதது வேறு எங்களுக்குக் கவலையைத் தந்திருந்தது! 
                                                    


"பார்த்துக்கடா... பாவம்! ரொம்பக் கஷ்டப்படாமப் பார்த்துக்க" என்றேன். 

"நீ போடா... நான் பார்த்துக்கறேன். கடைசி வரை நான் அவன் கூட இருப்பேன்" என்றான் அவன்.

இப்போது எழுதும்போது இந்த இடங்கள் எல்லாம் அபத்தமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய!

"நாளை இவன் Body உன் பக்கத்தில் இருந்தால் உனக்குப் பிரச்னை வராதா? என்ன சொல்வே?" என்று கேட்டேன்!

"ஏய்! நான் உன்னை மாதிரி பயந்தவன் இல்லை! என்ன ஆனாலும் சரி" என்றான் அவன். (நண்பேன்டா!)

"நான் உன்கிட்ட ஏதும் சொல்லாமலேயே உன் கூட வந்து படுத்தேன்னு சொல்லிடுவோம்" என்றான் 'சாக'ப்போகிறவன்.
"ஆமாம்... நீ வந்துதான் சொல்லணும்... சொல்ல நீ எங்கடா இருப்பே?" என்றான் இவன். எல்லோரும் 'நகைச்சுவை'யை உணர்ந்து சிரித்தோம்!  (இப்போது அபத்தமாக இருக்கிறது இல்லை? அப்போது ஏதோ அசட்டு த்ரில்தான்!)

வீடு வந்து லேசில் தூக்கம் வரவில்லை. வீட்டில் யாரிடமும் சொல்லமுடியாத குறுகுறுப்பும் படுத்தியது. நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை அடுத்தவரிடம் பகிர முடியாத தருணங்களின் பாக்கு மென்று தண்ணீர் குடித்தது போல் நெஞ்சடைக்கும் தவிப்பு இருக்கிறது பாருங்கள்.... அனுபவித்தால்தான் தெரியும்!

மறுநாள் காலை எழுந்தது முதலே  பரபரப்பை அடக்க முடியவில்லை. அசாதாரணக் காட்சியைக் காண இருக்கும் த்ரில் வேறு படுத்த, வேக வேகமாகக் கிளம்பினேன்.  'நிறைய வேலை இருக்கிறது'
கிளம்பிக் கொண்டே இருக்கும்போதே நண்பன் அழைப்பதாய் என் அண்ணன் சொல்ல, படபடப்புடன் வந்து எட்டிப் பார்த்தேன்.

சாகப் போனவன் கூடப் படுத்த 'அந்த' நண்பன்.
"என்ன ஆச்சுடா? " விளக்கமாகக் கேட்க வாய் வரவில்லை.

"உடனே கிளம்புடா... கைல எவ்வளவு காசு திரட்ட முடியுமோ, எடுத்துகிட்டு உடனே வா..."
"என்னடா ஆச்சு? காசு எதுக்கு?"
"அட, வாடா வேகமான்னா கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு...வாடா..."  கிட்டத்தட்ட அதட்டலாய்க் கூப்பிட்டான்.

கையில் கிடைத்த காசை எடுத்துக் கொண்டு சைக்கிளை எடுத்தேன். பின்னால் அமர்ந்தவனிடம் "எங்கேடா?" என்றேன் சைக்கிளை அவன் வீட்டுப் பக்கம் திருப்ப முயன்றபடி.
                                                          

"திருப்பாதே... நேரா விடு"  என்றான். "மேனகா காபி பார் போ"

ரயிலடிக்கு அருகில் இருந்தது 'மேனகா காபி பார்'.  நாங்கள் அடிக்கடி கூடும் இடம். அங்கு போன போது கடை வாசலிலிருந்த பெஞ்ச்சில் படுத்திருந்தான் சாகப்போன நண்பன். மிக, மிகச் சோர்வாய்த் தெரிந்தான்.

சைக்கிளை ஸ்டான்ட் போட்டு விட்டுத் திரும்புவதற்குள் வேகமாக எழுந்து கடை ஓரம் சுவரை ஒட்டி நின்று ஒக்காளத்துடன் வாந்தி எடுத்தான்! இல்லை, இல்லை எடுக்க முயற்சி செய்தான்.  திரும்பி பலவீனமாகவும், பரிதாபமாகவும் என்னைப் பார்த்தான்.
                                                      
"என்னடா...." என்று ஏதோ தொடங்கப் போன என்னை, என் கையை அழுத்தி சைகை செய்தான் இங்கு அழைத்து வந்த நண்பன்.
"ஃபுட் பாய்சன்'னு சொல்லி வச்சிருக்கேன். ஏதாவது பேசிக் கெடுத்துடாதே"  என்றான்.
நாங்கள் வழக்கமாகக் கூடும் கடை.

கடைக்காரர் என்னவென்று தெரியாமல் இஞ்சி, சுக்கு கஷாயம் என்று ஏதோ வைத்தியம் சொல்லிக் கொண்டிருந்தார்.

சோர்ந்திருந்த நண்பனைக் கிளப்பிக் கொண்டு ரயிலடிக்கு வந்தோம். கொஞ்சம் காத்திருந்தபிறகு இன்னும் இரண்டு நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள்.
இடைப்பட்ட நேரத்தில் கூடப் படுத்திருந்த நண்பன் இரவு நடந்த கதையைச் சொன்னான். 
                                                          


"பனிரண்டு ஒரு மணி வரை ஒண்ணுமே நடக்கலைடா... கொஞ்சம் பேசிக்கிட்டு இருந்தோம். அப்புறம் கண்ணசந்துட்டோம்.  திடீர்னு சத்தம் கேட்டு எழுந்து பார்த்தா இவன் துடிச்சிகிட்டு இருக்கான். அழுவறான். வயிறு வலிக்குதுங்கறான். வாந்தி எடுக்கறான். கக்கூஸ் போகணும் மாதிரி இருக்குங்கறான்...வெளியில அழைச்சுட்டுப் போய் ரோட்டோரமா போக விட்டுத் தண்ணீர் கொடுத்தேன். ஒரே அழுகை. காலைல நாலு மணிக்கெல்லாம் இங்கே வந்துட்டோம். இவர்தான் ஏதேதோ கொடுத்து அவன் வாந்தியை நிறுத்தி, குடிக்கவும் கொடுத்தார். எல்லாம் கடன்தான்..."

அப்புறம் எல்லோரும் கைக்காசைத் திரட்டிப்போட்டு கடைக்காரர் கடனை அடைத்து, அப்புறம் அவனுக்கு, அருகிலிருந்த ஊரில் வசித்துவந்த அவன் பாட்டி ஊருக்கு ரயிலில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து, அவன் கையிலும் கொஞ்சம் பணம் கொடுத்தோம். யாராவது கூடப் போக வேண்டாமா என்ற கேள்வி வந்தபோது அவனே வேண்டாம் என்று மறுத்து விட்டான்.

"தனியாப் போய்க்கறேண்டா... அப்பத்தான் நான் மனசில் நினைச்சுருக்கற கதையை பாட்டி கிட்ட சொல்ல முடியும்" என்றான்.

'இனி தற்கொலை என்ற முடிவை இந்த ஜென்மத்தில் நினைக்க மாட்டேன்' என்றான் வேதனையுடன். 

                                     
டிரெய்ன் கிளம்பும்வரை கூட இருந்துவிட்டு வந்தோம்.


வன் மறுபடி எங்களூர் திரும்ப பத்துப் பதினைந்து நாளாகியது. எதுவுமே நடக்காதது போல மறுபடியும் சிவாஜி படம் பார்க்கக் கிளம்பி விட்டோம்!

19 கருத்துகள்:

 1. சிவாஜி படம் பார்க்கக் கிளம்பினீங்க பாருங்க, அங்கே தான் நீங்க நிக்கறீங்க. உண்மையாவே இத்தகைய அழுத்தங்களுக்கு வடிகால் சிவாஜி படம் தான். நல்லாச் சிரிக்கலாம். :)))))))

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா

  தனியே ஒருவன் எடுக்கும் சிந்தனைக்கும் எல்லோரும் கூடி எடுக்கும் சிந்தனைக்கும் வித்தியாசம் உண்டு...சே்சு வழக்கில் நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

 3. பதின்ம வயது அபத்தங்கள்.சரிதான்வலி தெரியாமல் சாகத் தெரியலியே.கற்பனை ஊற்றுப்பெருக்கு. ?

  பதிலளிநீக்கு
 4. அதுசரி.

  இந்த மாதிரி நண்பர்கள் கிடைத்தால் எப்படி சாவு வரும்?

  என்னமா யோசிக்கிறீங்கப்பா...!!

  பதிலளிநீக்கு
 5. பரபரப்பான நிமிடங்களா பதட்டமாகவும் இருந்திருக்கும் அன்றைய நிலைமை! எப்படியோ நண்பர் பிழைத்ததில் மகிழ்ச்சிதான்!

  பதிலளிநீக்கு
 6. எப்படியோ எண்ணம் மாறியதில் சந்தோசம்...

  கீதா அம்மா : // சிவாஜி படம் - சிரிக்கலாம்...! // ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 7. இந்த நேரத்தில் சிரிப்பாக இருந்தாலும் அந்த நேரத்தில் மிகவும் பதட்டமாக இருந்திருப்பீர்கள்......

  சிவாஜி படம் பார்க்கப் போனீங்களா! :)))))

  பதிலளிநீக்கு
 8. அட நீங்க யாருங்க பதிவை படிக்கக் கூடாதுனு சொல்றது? என்ன நினைச்சுட்டிருக்கீங்க?

  பதிலளிநீக்கு
 9. தோழமை தற்கொலைக்கு ஊறென்பது இக்கதையின் வழி தெள்ளென அறியற்பாலது.

  சில சிவாஜி படம் பாக்குறதை தற்கொலைக்கு சமம்னும் சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
 10. திகிலான தருணங்கள். எப்படியோ தெளிந்து விட்டார் நண்பர்:)!

  பதிலளிநீக்கு
 11. கோபமே வரவில்லை. புதுமையாக இருந்தது ஸ்ரீராம். இது போல என் தோழி ஒருத்தியும் சின்னம்மா படுத்தினாங்கன்னு அரளி விதை சாப்பிட்டு வீட்டுத்திண்ணையில் படுத்துவிட்டாள்.14 வயது ரோசம். எங்கள் செட்டின் நால்வரும் அன்று பள்ளிக்கே அவளை அழைத்துபோய் விட்டோம். ஸிஸ்டரிடம் சொல்லிப் பெரிய களையபரம் ஆகி உப்புத்தண்ணிர் குடிக்கவைத்து பள்ளி மருத்துவமனையில் கொஞ்சநேரம் இருக்கவைத்துப் பிறகு வீட்டில் கொண்டுவிட்டோம். அடுத்தவருடம் அவளுக்குத் திருமணம்.முத்துலக்ஷ்மி எங்க இருக்கியோ. உங்கள் கதை இன்னும் பரபரப்பு. இனிமை.நன்றி எபி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 12. தற்கொலை (1)--க்கும் தலைப்பிலேயே சுட்டி கொடுத்திருக்கலாம்.

  முதலுக்கும் இரண்டாவதுக்கும் ஏதோ வித்தியாசம் தெரியவே, முதலாவதை தேடும்படி ஆயிற்று.

  கடைசி வரை 'எளிதில் கோபம் வருபவர்கள் படிக்க வேண்டாம்' என்பதற்கு காரணம் காட்டாதது திரில் கலந்த சஸ்பென்ஸ் தான்! கடைசியில் அதுவும் சும்மாக்காச்சுக்கும் ஒரு உதார் தான் என்பது தெரிந்ததும் தான் சிரமப்பட்டு கோபம் மாதிரி.. இல்லே இது வேறே மாதிரி.. ஆனா கோபம் வர்லேங்கறது உண்மை.

  ப்பூ.. (பூப்பூவாய் பூத்திருக்கும் அந்த ப்பூ இல்லே) இவ்வளவு தானா என்கிற உணர்வு; அதுக்குப் பேர் கோபம் இல்லே.. சரி தானே!

  பதிலளிநீக்கு
 13. அப்பாதுரை சார் எழுதின பெத்தாபுர மலர் பதிவில் “/////தற்கொலைக்கானத் தீவிர முயற்சி. மூட்டைப்பூச்சி மருந்து குடித்து, அதற்கு மேல் தீக்குளிக்க முயன்றிருக்கிறான். அதற்கும் மேலாக ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து நீரில் விழுந்து மூழ்கவோ கட்டாந்தரையில் விழுந்து நொறுங்கவோ முயலாததால் சாகவில்லை //// என்று எழுதியிருந்ததை படித்தது ஞாபகம் வருகிறது.உங்களது நண்பருக்கு ஆயுள் கெட்டி

  பதிலளிநீக்கு
 14. பரிசோதனைக்காக. பின்னூட்டம் பதிவாகிறதா என்கிற பரிசோதனைக்காக.

  பதிலளிநீக்கு
 15. நல்லவேளை உங்கள் நண்பர் சாகவில்லை. அவர் அப்பா வந்து உங்களை எல்லாம் உண்டு இல்லை என்று ஆக்கி இருப்பார் உங்கள் நண்பர் இறந்து இருந்தால்.
  இப்போது நடந்ததை நினைத்தால் சிரிப்பாக இருக்கும் சம்பவம் அப்போது எவ்வளவு மனசங்கடங்களை அளித்து இருக்கும்.
  பாட்டி வீட்டுக்கு போன நண்பர் இப்போது எப்படி இருக்கிறார் குடும்பம், குழந்தைகள் என்று இருக்கிறதா? பொறுப்புடன் இருக்கிறாரா?

  பதிலளிநீக்கு
 16. ///அதுவரையிலும் ஒன்றும் நேராதது வேறு எங்களுக்குக் கவலையைத் தந்திருந்தது! ///
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எல்லோரையும் தேம்ஸ்ல தள்ளோணும்:) என்னா நினைப்பு இது..

  ////நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை அடுத்தவரிடம் பகிர முடியாத தருணங்களின் பாக்கு மென்று தண்ணீர் குடித்தது போல் நெஞ்சடைக்கும் தவிப்பு இருக்கிறது பாருங்கள்.... அனுபவித்தால்தான் தெரியும்! //

  ஹா ஹா ஹா கர்ர்:) இது லவ்வூ ஸ்டோரியை விட மோசமா இருக்கும்போல இருக்கே:) கர்:)

  பதிலளிநீக்கு
 17. கடவுளே எதுவும் ஆகவில்லை எனும்போது மகிழ்ச்சியே, ஆனா இது உண்மையில் உண்மைச் சம்பவமோ?:) என்னால நம்பவே முடியவில்லை.. அதெப்படி நண்பன் மருந்து குடித்து விட்டார் எனத் தெரிந்தும் பேசாமல் இருந்தீங்க..:).. தொல்லை வேண்டாம் போய்த் துலையட்டும் என நினைச்சீங்களோ?:)...

  ஒருவேளை அன்று ஏதாவது நடந்திருப்பின், வாழ்நாள் முழுக்க துன்பமாகவே உங்கள் வாழ்க்கை நகர்ந்திருக்குமே:)).. எல்லாம் கும்பிடும் பலன் தான் காப்பாற்றியது எல்லோரையும்.. ஹா ஹா ஹா.. சுபம்!!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!