புதன், 11 ஜூன், 2014

தற்கொலை..... ( எளிதில் கோபம் வருபவர்கள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும்...! )                                                            
                                                                         

"வாங்கிட்டேண்டா.. இந்த சாயந்திரம்தான் எனக்குக் கடைசி.  ராத்திரி குடிச்சுடுவேன்.  உன்னை கடைசியா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்"

கையில் டிக் 20 டப்பாவுடன் சிரித்தான் நண்பன்.

பகீரென்றது.

'மறந்திருப்பான், சரியாகியிருக்கும்' என்று நினைத்தோமே...
ரண்டு நாள் முன்பு...

"வலிக்காம சாகறது எப்படிடா?"

நண்பன் கேட்டபோது கிண்டலாகக் கேட்டேன், "ஏன்? நீ சாகப் போறியா?"

"ஆமாம்... எனக்குத்தான் கேட்கிறேன்"  அவன் குரலின் தீவிரமும், கலங்கிய கண்களும் என்னை பதட்டமடைய வைத்தன. 

"ஏண்டா பாவி?"
                                           
நீளமாக அவன் சோகத்தைச் சொன்னான்.  இப்போது கேட்க வேடிக்கையாக இருக்கும்.  அந்தப் பதின்ம வயதில் அவன் மிகவும்  கஷ்டப்படுதாகவே தோன்றியது, என்றாலும் தற்கொலை என்பது சரியில்லை, அந்த அளவுக்கு ஒன்றும் நடந்து விடவில்லை என்றும் தோன்றியது.  அதை அவனிடமும் சொன்னேன்.

கொஞ்சம் விவாதம் நடந்தது.  பெரும்பாலான நேரங்கள் மௌனம் காத்தான்.  அதுதான் உறுத்தியது.  கிளம்பிச் சென்று விட்டான்.  மறுநாள் காலை அவனைப் பள்ளியில் பார்த்தபோது சாதாரணமாகத்தான் இருந்தான்.

இப்போது இப்படி வந்து நிற்பவனை என்ன செய்ய? 

மீண்டும் கொஞ்ச நேரம் அறிவுரை சொல்லிப் பார்த்தேன்.  அண்டை வீட்டுக்காரர்கள் தாண்டிச் செல்லும் நேரம் மௌனம் காத்தோம்.  விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியர் கவனிக்கும் நேரமும் அமைதி காத்தோம்.

"விளையாடறீங்களா.... விளையாடுங்க... விளையாடுங்க... இதைப் பார்க்க இன்னிக்கி நான் இருக்கேன்.." என்றான் பூடகமான புன்னகையுடன், அந்தக் குழந்தைகளிடம்.

"ஏய்" என்று அதட்டினேன்.  பின்னே?   நாளை இந்தக் குழந்தைகள் சாட்சி சொல்ல மாட்டார்களா?  அப்புறம் என் நிலை?!!

ஒரு சொம்பு தண்ணீர் கொண்டு வர்றியா" 

"சரி... ஆனால் இவங்க கிட்ட ஏதும் உளறாமல் வெய்ட் பண்ணு"

மேலே போய் தண்ணீர் கொண்டு வந்தபோது கழுத்தையும், நெஞ்சையும் தடவிக் கொண்டிருந்தான். 

"எரியுதுடா"  அவன் கையில் பார்த்தேன்.  டப்பா காலியாக இருந்தது. 

"அடப்பாவி!" சுற்றுமுற்றும் பார்த்தேன்.  கீழே எங்காவது கொட்டிவிட்டு சும்மா பயமுறுத்துகிறானோ?  

என் சந்தேகம் புரிந்தது போல அருகில் வந்து வாயை ஊதினான்.  மூட்டைப்பூச்சி மருந்து வாசனை அடித்தது. 

                                                        
தண்ணீரை வாங்கிக் குடித்தான்.  நான் அவன் தூக்கிப்போட்ட டப்பாவைக் கைகளால் தொடப் போனவன், முடிவை மாற்றிக் கொண்டு (கைரேகை பதியக் கூடாதாம்) செருப்புக் காலால் அதை உதைத்துத் தள்ளிக் கொண்டுபோய் தூரத்தில் ரோடுக்கு அந்தப்பக்கம் தள்ளி விட்டேன். 

இப்போது நினைத்துப் பார்த்தாலும் உடனே நான் ஏன் அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகவில்லை என்று புரியவில்லை.

அவன் வீட்டுப் பெரியவர்களிடம் சொல்ல மாட்டேன்.  அது நிச்சயம்!  முன் அனுபவம் இருக்கிறது.  வேறு எதாவதுதான் செய்ய வேண்டும். 

அவன் அப்பா நீதித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.  இந்த என் நண்பன் இதற்குமுன் ஆறேழு முறை வீட்டை விட்டு ஓடியிருக்கிறான்!  முதல்முறை ஓடும்போதுதான் எங்களுக்கு அது அதிர்ச்சி.  அப்புறமப்புறம் அது சாதாரண செய்தியாகி விட்டிருந்தது.

முதல்முறை அவன் வீட்டை விட்டு ஓடிய மறுநாள் என்னைத்தான் சந்தித்தான்.  உறவினரை பஸ்ஸ்டாண்டில் பஸ் ஏற்றிவிட்டுத் திரும்பியபோது திருவள்ளுவர் தியேட்டரிலிருந்து வெளிவந்த கும்பலில் இவனும் இருந்தான். என்னைப் பார்த்து விட்டு சைக்கிளுடன் வேகமாக மறைய முயன்றவனை நானும் சைக்கிளில் வந்திருந்ததால் பின்னாலேயே விரட்டி மேம்பாலம் அருகில் மடக்கிப் பிடித்தேன்.  ஏதோ காரணம் சொன்னான். அந்த நேரம் பார்த்து என் அண்ணனின் நண்பர் ஒருவர் எதிர்ப்பட, அவருடன் கலந்து பேசி அவனைச் சமாதானப்படுத்தி, அவனைக் கொண்டுபோய் அவன் வீட்டில் விட்டோம்.                                                             
                                                 

இரண்டாவது முறை அவன் ஓடிய காலையில் அவன் அப்பா என் வீடு தேடி வந்து விட்டார்.  "இதோ பார்! நீதான் அவன் க்ளோஸ் ஃபிரெண்ட். என்ன செய்வியோ எது செய்வியோ தெரியாது...  இன்று மாலைக்குள் அவனை எங்கிருந்தாவது தேடிக் கண்டுபிடித்து வீட்டில் ஒப்படைக்காவிட்டால் உன்னைப் பிடித்து உள்ளே போட்டு விடுவேன்" என்று அவர் பயமுறுத்தியதில், நான் பீதி + பேதியாகி பள்ளி செல்லாமல் அவனைத் தேடியலைந்தேன்.

அவன் எங்கெங்கு செல்வான் என்று தெரியும்.  ஒவ்வொரு இடமாகத் தேடினேன்.  அவனின் தனிப்பட்ட நண்பர்களை விசாரித்தேன்.  முக்கால் நாள் செலவழிந்திருந்தபோது அகப்பட்டு விட்டான்.  அவனே வீடு திரும்பும் எண்ணத்தில் இருந்ததால்,  அவனைக் கொண்டு விட்டு வந்து விட்டேன்! 

"இனிமேல் ஏதாவது ஆச்சுன்னா (அதாவது இவன் மறுபடி ஓடினான்னா என்று அர்த்தம்!) நான் பொறுப்பில்லை.  எனக்குத் தெரியாது.  உங்கள் பையனை அவன் எதிர்பார்க்கும்படி வைத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு"  என்று சொல்லி விட்டுத்தான் வந்தேன்.  அப்புறம் கொஞ்ச நாள் எதிரில் அவன் தெரு முனையில் கண்ணில் பட்டால் நான் உடனே பக்கத்து சந்தில் மறைந்து விடுவேன். 

நானும் அவனும் இப்போதெல்லாம் சந்தித்துக் கொள்வதில்லை என்பதை அவன் சகோதர, சகோதரிகள் உணரும்படி செய்தும் விட்டேன்!

அவன் அடுத்த சில நாட்களிலேயே மறுபடி ஓடிப் போனான்.  இந்த முறை எங்கள் இன்னொரு நண்பன் மிரட்டப் பட்டு,  தேடிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாய் அப்புறம் தெரிந்து கொண்டேன்! 

அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் அவனை வளைக்கும் கலையை நாங்கள் கற்றிருந்தோம்.  இடையில் ஓடிய ஒரு சந்தர்ப்பத்தில் அவன் தனது சைக்கிளை கிடைத்த விலைக்கு விற்று விட்டு சாப்பாட்டுச் செலவுக்கு வழி செய்துகொண்டு மூன்று நாட்களுக்கும் மேலாக எல்லோருக்கும் 'தண்ணி' காட்டினான்!

இந்தமுறை அவன் 'கண்டுபிடிக்கப்பட்ட'தும்,  அவன் அப்பா அவனுக்கு அவன் விற்ற நபரிடமிருந்தே அந்த சைக்கிளை மிரட்டியே திரும்ப வாங்கிக் கொடுத்து விட்டார்.
அப்புறம் நீண்ட நாட்கள் அவன் வீட்டை விட்டு ஓட முடியாதபடி அவனுக்கு அவன் வீட்டாரிடமிருந்து காவல் பலமாயிருந்தது.  அதுவே அவனை இன்னும் விரக்தியடைய வைத்திருந்தது.  போதாக்குறைக்கு அவன் 'கண்' வைத்திருந்த அவன் தூரத்து உறவுப் பெண்ணொருத்தி வீட்டுக்கு வந்திருந்தபோது அவளெதிரில் இவன் பெல்ட்டால் விளாரப்பட்டது இவன் மனதை திப்பிலி ஆயிரமாய்....  அதாங்க சுக்கு நூறாய் உடைத்திருந்தது!


இதெல்லாம்தான் அவன் இந்த முடிவை எடுத்ததற்குக் காரணம்.
                                                                                                                                        [ தொடரும் ]
இதன் தொடர்ச்சி இங்கே! 

30 கருத்துகள்:

 1. ஹையோ, கதையை நல்ல சஸ்பென்ஸில் நிறுத்திட்டீங்களே! :))))

  பதிலளிநீக்கு
 2. எனக்கெல்லாம் இப்படி அனுபவம் கிடையாது. நம்ம ரங்க்ஸுக்கு ஒரு நண்பர் இருக்கார். அவரும் இப்படித் தான் தற்கொலைக்குச் சில முறை முயன்றிருக்கிறார். ஆனால் ஒண்ணு ஒவ்வொரு முறையும் தற்கொலை பண்ணிக்கப் போறச்சே எல்லாம் ஏற்பாடா ரங்க்ஸ் கிட்டே சொல்லி அவரையும் துணைக்கு அழைத்துக் கொண்டே செல்வார். ஒவ்வொரு முறையும் பூச்சி மருந்து அல்லது ஃபாலிடால் அல்லது வேறு ஏதோ விஷம், (எங்கிருந்து சேகரிப்பாரோ) இரண்டு பேருக்கும் சேர்த்தே கலந்திருக்கிறார். சினிமாவில் நடக்கிறாப்போல் முதல்முறை கடைசி நிமிஷத்தில் காப்பாற்றப்பட்டனர். அதுக்கப்புறமா ரங்க்ஸ் முன்னெச்சரிக்கையா அவங்க வீட்டிலே முதலிலேயே இடம், நேரம், விஷம் குடிக்கப் போகும் முகூர்த்த வேளை எல்லாமும் தெரிந்து கோண்டு எச்சரிக்கை மணி அடித்திருப்பார். :))))

  பதிலளிநீக்கு
 3. அதுக்கப்புறமும் அந்த நண்பர் ரங்க்ஸோடயே வேலை பார்த்து சொந்தத்தில் கல்யாணமும் செய்து கொண்டு பெண்ணுக்குக் கல்யாணமும் ஆகி 2 வருஷங்கள் ஆகின்றன. :))))

  பதிலளிநீக்கு

 4. எனக்குத் தெரிந்தவரை தற்கொலை என்பது தீவிரபரிசீலனைக்கு உட்பட்டதல்ல.momentary decision-அவ்வளவுதான் .

  பதிலளிநீக்கு
 5. அதிர்ச்சியுடன் படிக்கத் துவங்கி
  ஆர்வத்துடன் அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறோம்

  பதிலளிநீக்கு
 6. சீரியஸான கதைதான்.. ஆனா உங்க ரைட்டிங்கில் படிச்சறச்ச காமெடியா போறது...

  பதிலளிநீக்கு
 7. ( எளிதில் கோபம் வருபவர்கள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும்...! )//கொஞ்சம் கஷடப்பட்டுத்தான் எனக்கு கோபம் வரும்.எளிதில் வராது.ஆனாலும் இத்தனை சஸ்பென்ஸுடன் ராஜேஷ்குமார் பாணியில் தொடரும் போட்டதில் எனக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது.கோபம் தீருவதற்கு முன் இறுதிப்பகுதியைப்போட்டு விடுங்க சார்.:)

  பதிலளிநீக்கு
 8. அற்புதமான writing capacity. அருமையான ஃப்ளோ. கையைக் கொடுங்கள், கங்கிராட்ஸ்!

  ஒரே ஒரு இடம்.

  முடிவை மாற்றிக் கொண்டு (கைரேகை பதியக் கூடாதாம்)


  பதிலளிநீக்கு
 9. எனக்கு கோபம் வரும் ...ஆனா வராது.
  நண்பன் என்ன ஆனான்? விறுவிறுப்பான கட்டத்தில் தொடரும் போட்டு விட்டீர்களே!

  பதிலளிநீக்கு
 10. அற்புதமான writing capacity. அருமையான ஃப்ளோ. கையைக் கொடுங்கள்.. கங்கிராட்ஸ்!

  ஒரே ஒரு இடம்.

  //முடிவை மாற்றிக் கொண்டு (கைரேகை பதியக் கூடாதாம்) செருப்புக் காலால் //

  முடிவை மாற்றிக் கொண்டு (கை ரேகை பதியக்கூடாதல்லவா) செருப்புக் காலால்...

  எழுதுவது 'நான்' இல்லையா? அதுக்காக.

  லேசில் கதையை முடித்துவிடாதீர்கள். எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்கிறீர்கள் என்பதைக் காண ஆசை. தாக்கு பிடிக்க பிடிக்க கைவண்ணம் கூடும். அதுக்காகத் தான்.

  அது கடைசியில் தான் தெரியும் என்றாலும் எளிதில் கோபப்படுபவர்களுக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு

 11. சீரியஸான அனுபவத்தை
  காமெடியாகவும் , வேடிக்கையாக்வாகவும்
  விறுவிறுப்பாக்கி
  சஸ்பென்ஸும் கலந்துவிட்டீர்களே..!

  பதிலளிநீக்கு
 12. டிக் டிக் டிக் டிக் டிக்
  டிக் டிக் டிக் டிக் டிக்
  டிக் டிக் டிக் டிக் டிக்
  டிக் டிக் டிக் டிக் டிக்

  (டிக் 20)

  பதிலளிநீக்கு
 13. சஸ்பென்ஸ் தாங்கவில்லை ஸ்ரீராம் சார். அடுத்தப் பகுதி எப்போது?

  பதிலளிநீக்கு
 14. Death is not such a bad thing when you consider living a "lifeless, tasteless" life like the one our hero is living. Unfortunately our society wont let anybody live happily or die happily either.

  Are you going to kill him Mr. Sriram?

  See, you are the "God" here. It is up to you to let him live or die. Having said this, you can't kill him now as we all know you are a kind-hearted person who would not harm anybody. :)

  The author is in trouble now as he does not know whether to kill him or let him live. Someone help him please.:)

  பதிலளிநீக்கு
 15. இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு க்ஷண நேரம். பிறகு மனசு மாறிவிடும். சரளமான நடை. சரியாக மாட்டிக் கொண்டீர்கள்.நல்லவராய் இருந்தால் எவ்வளவு தொந்தரவு. என்ன ஆச்சோ சீக்கிரம் அடுத்த பதிவு ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 16. அடிக்கடி வீட்டை விட்டு ஓடிப்போய் விடும் வழக்கம் எனில் வீட்டில் ஏதோ தப்பு இருந்திருக்கணும். அதும் அவன் வித்த சைக்கிளை அவன் அப்பா மிரட்டியே திரும்ப வாங்கிக் கொடுத்தாருன்னா.... ஹும்... என்ன சொல்ல... டிக் 20 குடித்த அவன் பிழைத்தானா இல்லையா- என்ற கேள்வியின் விடைக்காய் வெய்ட் பண்ண வெச்சுட்டீங்களே இப்புடி....

  பதிலளிநீக்கு
 17. கோவம் வர்ரவங்க படிக்காதீங்கன்னு போட்டிருந்ததைப் பார்த்து இது ஏதோ கிண்டலான கதையாய் இருக்கும்னு தற்கொலை குறித்த செய்திகளை எங்க கிண்டல் வரப் போகுதுங்கற எண்ணத்திலேயே படிச்சிட்டு வந்தால் தொடரும் தான் என்னைக் கிண்டலடித்தது....

  பதிலளிநீக்கு
 18. அருமையான நடை. அடுத்த பாகத்துக்குக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. சாவுறதுல என்ன சஸ்பென்சு... தொடரும்.. சீக்கிரம் சாவுகப்பா .. பார்த்துட்டு அடுத்த பதிவுக்கு போவனும் இல்ல..

  பதிலளிநீக்கு

 20. நன்றி கீதா மேடம்... நீங்கள் சொல்லியிருக்கும் அனுபவங்களை நீங்கள் எழுதியிருப்பதன் லிங்க் கொடுத்தால் படிக்கலாமே...

  நன்றி ஜி எம் பி ஸார்... அப்படியும் சில பிடிவாதத் தற்கொலைக் கேஸ் எல்லாம் உண்டு!

  'தளிர்' சுரேஷ்... சொல்றேன்.. சொல்றேன்!

  ரமணி ஸார்.. ஆர்வத்துக்கு நன்றி. தொடர்கிறேன்.

  கோவை ஆவி.. ரசித்ததற்கு நன்றி...

  ஸாதிகா.. கோபப் படாதீர்கள்... சீக்கிரமே சொல்லி விடுகிறேன்... வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் எல்லாம் வழக்கமான தொடர் பதிவுகள் தினமாச்சே...!

  நன்றி T.N. முரளிதரன்... தொடர்கிறேன்.

  நன்றி ஜீவி ஸார்... உங்கள பாராட்டு ஊக்கமளிக்கிறது. எப்படி இழுக்க... அவ்வளவு சரக்கு இல்லையே...! :))))

  கே ஜி ஜி ... ஹிஹிஹிஹி...

  நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்... தொடர்கள் தாண்டியவுடன் தொடர்கிறேன்! ::)))

  நன்றி வருண்... //Having said this, you can't kill him now as we all know you are a kind-hearted person who would not harm anybody. :)// ஹிஹிஹி... நன்றிகள்.
  //The author is in trouble now as he does not know whether to kill him or let him live. Someone help him please.:)// நோ வொரீஸ். ஏற்கெனவே எழுதி தயாராய் உள்ளது! :))))

  நன்றி வல்லிம்மா... எல்லோரும் என்னை நல்லவன், நல்லவன்னு சொல்லும்போது கூச்சமாக இருக்கிறது! இந்த நிலையிலும் ஒரு நண்பனை ஆஸ்பத்திரிக்குக் கூட கொண்டு போகாமல் இருந்த நான்... :)))

  நன்றி அருணா...

  நன்றி கணேஷ்.. நீங்கள் சொல்வது போல் இல்லை. தப்பு நம்ம ஹீரோ கிட்டத்தான்! :)))

  ஸ்பை... அதான் குடிச்சிட்டானே... சரியாப் படிச்சுப் பாருங்க பாஸ்.. :)))

  நன்றி எழில்.... கிண்டல் எல்லாம் இல்லை. பதிவு நீளமாகி விட்டது... அதான்!

  நன்றி ராமலக்ஷ்மி.

  நன்றி கரந்தை ஜெயகுமார் ஸார்...

  நன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் ஸார்.

  நன்றி DD.

  நன்றி வினோத்... சாகறதுல என்ன சஸ்பென்ஸ்? பதிவு நீளமாகி விட்டதால்தான்... பொறுமையாகப் படிக்கத் தோன்றாது பாருங்கள்... அதான் பாஸ்... பொறுத்துக்குங்க!

  பதிலளிநீக்கு
 21. அருமையாக கதை சொல்கிறீர்கள்.
  நல்ல இடத்தில் நிறுத்தி எதிர்பார்பை அதிகப்படுத்திவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 22. அச்சச்சோ எனக்கு காண்ட்ஸும் ஓடல்ல லெக்ஸ் உம் ஆடல்ல... ஒரே பதட்டமா இருக்கு, ஆனா ஸ்ரீராம் கூலா நகைச்சுவையா எழுதியிருக்கிறார்... நண்பனுக்கு எதுவும் ஆகியிருக்கக்கூடாது என வேண்டிக்கொண்டே பகுதி 2இல் நுழைகிறேன்... ஒரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ரென்சனா இருக்கெனக்கூஊஊஊஊஊ:))..

  கெள அண்ணனுக்கு 20 டிக் டிக்:) எனக்கு 80 டிக் டிக்:))

  பதிலளிநீக்கு
 23. நம் எல்லோர் வாழ்க்கையையும் தோண்டிப்பார்த்தால் இது போல் ஒரு நினைவு வருவது நிச்சயம் , நன்றி ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!