புதன், 4 ஜூன், 2014

அலுவலக அனுபவங்கள் : நாராயணா... நாராயணா...அலுவலகத்தில் வேலை செய்யும்போது முடிந்தவரை நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த்து,  குனிந்த தலை நிமிராமலேயே வேலை பார்ப்பதற்குக் காரணம் வேலைச்சுமை மட்டுமில்லை! 

                                  


நிமிர்ந்து பார்த்தால் போதும், அதற்காகவே காத்திருந்தது போல எதிர்த் திசையில் மேஜைக்கருகில் ஒரு ஸ்டூலில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் நாராயணன் சட்டென எழுந்து ஓடி வருவான்.

நாராயணன் பியூன். புதிதாக வேலைக்குச் சேர்ந்தவன்.


தண்ணீர் எடுத்து நீட்டுவான். இங்க் பாட்டிலுடன் நிற்பான். 'சிகரெட்டா ஸார்?' என்பான்! 'வேண்டாம், ஒன்றுமில்லை, போ' என்று சைகை காட்டி அவனுடைய இடத்துக்கு அவனை அனுப்புவேன்.

மரியாதை இல்லாமல் சொல்வதற்குக் காரணம் என் வயதும், அவன் வயதும் மட்டும் காரணமில்லாமல் அவன்மேல் எனக்கிருந்த பரிதாபத்தால் எங்களுக்கிடையே இருந்த அன்பு கலந்த புரிந்துணர்வு காரணமாகவும்தான்.


                                          


என் பார்வை திரும்பும் திசை எல்லாம் திரும்பி, கண்ணில் பட்டவற்றை சட் சட்டென எடுத்து பணிவுடன் நீட்டுவான்! காரணம் அவனுக்குக் காது கேட்காது. எனவே பார்வையாலேயே மற்றவர்கள் மீது கவனம் வைத்திருப்பான். யார் என்ன சொல்கிறார்கள் என்பதை அவர்கள் சொல்லுமுன்பு (சொன்னாலும்தான்!) ஊகிக்க முயல்வான்.


'எள் என்பதற்குமுன் எண்ணெயா'க நிற்க முயலும் அவன் செயல்கள் பெரும்பாலும் விபரீதமாகவே முடியும். அவனுக்குப் புரிய வைத்து வேலை வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.

நான் அவனுக்கு சில ரெகுலர் வேலைகளை நேரம் பார்த்துச் செய்யச் சொல்லிக் கொடுத்திருந்தேன். காலை பதினொன்றரை ஆனால் ஃப்ளாஸ்க் எடுத்துக்கொண்டு தேநீர் வாங்கக் கிளம்புவது, எல்லோருக்கும் அவரவர்கள் வந்தவுடன் அவர்கள் இருப்பிடத்துக்கு அட்டெண்டன்ஸ் எடுத்துக் கொடுப்பது, அவ்வப்போது தண்ணீர் கொண்டு வந்து தருவது போன்ற வேலைகள் தானாகச் செய்யச் சொல்லிக் கொடுத்தேன். 


மேனேஜர் அறை வாசலில் மணி அடிப்பதற்கு பதில் விளக்கு எரிய வைத்தேன். 

                                        

நீண்ட நாட்களாகக் காலியாக இருந்த இந்த அலுவலகத்தின் இயக்குனர் பதவிக்கு ஒரு புதிய இயக்குனர் வந்து சேர இருந்தார். எனக்கு அவர் ஏற்கெனவே அறிமுகமானவர்தான். அவரைப்பற்றிக் கொஞ்சம் பயம் கலந்த கதைகள் உண்டு. 

கண்டிப்பானவர்.  கொஞ்சம் தப்பு கண்டுபிடித்தாலும் உடனே சஸ்பென்ஷன், மெமோ என்று தந்து விடுவார் என்ற வதந்திகள் அலுவலகத்தில் அவர் வருவதற்கு முன்னரே வந்து சேர்ந்து விட்டன. இதுமாதிரி மேலதிகாரிகளை எதிர்த்து நின்ற முரட்டு ஆசாமிகளும் எங்கள் அலுவலகத்தில் இருந்தாகள்தான்.  இவர் வந்து என்ன செய்கிறார், என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று காத்திருந்தார்கள் அவர்கள்.  இதே போல
அவரும் இவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பார். இதெல்லாம் அரசு அலுவலகங்களில் எப்பொழுதும் நடப்பதுதான்!

நாராயணனுக்கும் இந்தத் தகவல்களை எப்படியோ புரிய வைத்திருந்தார்கள்.

நாங்கள் இருந்தது முதல் தளம். இயக்குனர் அறை தரைத் தளத்தில்.

புதிய இயக்குனர் வந்து வேலையில் சேர்ந்தார். அவர் அறை நாற்காலியில் அமர்ந்து பார்த்தால் வெளியில் மேடான பாதையும், சற்று தூரத்தில் சாலையும், விரையும் போக்குவரத்தும் கண்ணில் படும். சற்றே தனிமையான ஹாலில் தனிமையான அறை.

உட்கார்ந்து வேலைபார்த்துக் கொண்டிருந்தவர் ஏதோ நிழலாட நிமிர்ந்து பார்த்திருக்கிறார். தலையில் மங்கிக் குல்லாய் போட்டு, ஓவர்கோட் போட்ட ஒரு உயரமான கரிய உருவம் நிதானமாக தீட்சண்யமாக இவரைப் பார்த்தபடியே வலமிருந்து இடம் கடந்ததைப் பார்த்ததும் மனதுக்குள் கேள்விக்குறி வந்திருக்கிறது.  மீண்டும் வருகிறானா என்று பார்த்து விட்டு வேலையில் கவனம் செலுத்தக் குனியும் சமயம் அதே உருவம் இப்போது இடமிருந்து வலமாக இவரைப் பார்த்தபடியே மெதுவாகக் கடக்க,  லேசாக நிம்மதி இழந்திருக்கிறார்.

                                               


இன்னும் இரண்டு மூன்று முறை இதேபோல நடக்கவும், இவருக்கு நெஞ்சு தடதடத்து விட்டது.  ஏதேதோ தோன்ற, தொலைபேசியை எடுத்து என்னை அழைத்தார். "உடனே, உடனே  என் ரூமுக்கு வாங்க" என்றார்.

அவர் குரலில் தெரிந்த பதட்டம் கவனித்த நான், ஒன்றும் புரியாமல் உடனே அவர் அறைக்குச் சென்றேன். 

"என்ன ஸார்?"

"யாரோ ஒருத்தன் ஒருமாதிரி விரோதமா பார்த்தபடியே இந்தப் பக்கத்திலேருந்து அந்தப் பக்கமும், அந்தப் பக்கத்திலேருந்து இந்தப் பக்கமும் நிதானமா மெல்ல நடந்து, நடந்து தாண்டறான். ஹால்ல நம்ம ஆளுங்க வேற யார் நடமாட்டமும் இல்லையே... அவன் பார்வையே சரியில்ல... ஒரு மாதிரி இருக்கு....  யார்னு பாருங்க" என்றார். 

புதிராக இருந்தது.

அவர் அருகிலேயே அமர்ந்து காத்திருந்தேன். அவர் வேலை பார்ப்பதுபோல மேஜை மீது பார்ப்பதும், வாசல் பக்கம் பார்ப்பதுமாக இருந்தார். நானும் வாசல்பக்கம் கவனித்தபடியே இருந்தேன்.

நிழலாடியது. நெர்வஸாக என்னைப் பார்த்தவர், வாசல்பக்கம் பார்த்தார்.

அந்த உருவம் மறுபடி அதேபோலப் பார்த்தபடித் தாண்டியது. 

நாராயணன்!


எனக்குச் சிரிப்பு வந்து விட்டது என்றாலும் அடக்கிக் கொண்டு அவருக்கு நிலைமையை விளக்கினேன். 

அவனுக்குக் காது கேட்காத பிரச்னையையும், புதிய இயக்குனர் மீது அவனுக்கு இருந்த பயம் கலந்த தயக்கத்தால், அவர் அழைத்தால் உள்ளே செல்லலாம் என்று அவரையே பார்த்தபடி தாண்டித் தாண்டி நடந்ததையும் புரிந்து கொண்டு அவரிடமும் சொன்னேன். மணியடித்தால் அவனுக்குக் கேட்காது என்பதையும் சொன்னேன்.

இறுக்கம் கலைந்து சிரித்தவர், என்னை அந்த அறையில் பார்த்ததும் மெல்ல உள்ளே வர முயன்று வெளியே தயங்கி நின்றிருந்த நாராயணனை உள்ளே அழைத்தார். பெரிய ஸலாமுடன் உள்ளே விரைந்து வந்த நாராயணனைச் சிரிப்புடன் நாங்கள் இருவரும் ஏன் அப்படிப் பார்க்கிறோம் என்று அவனுக்கு அப்போது புரியவில்லை!

26 கருத்துகள்:

 1. உண்மையில் வெகு சுவாரஸ்யம்
  வித்தியாசமான நிகழ்வும் அருமையாகச்
  சொல்லிச் செல்லும் திறனும்
  இணைந்தால் படைப்பு எத்தனை சிறப்பாய் இருக்கும்
  என்பதற்கு இந்தப் பதிவே அத்தாட்சி
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. /மணி அடிப்பதற்கு பதில் விளக்கு எரிய வைத்தேன்/ நல்ல ஏற்பாடு.

  ரமணி அவர்கள் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன். சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 3. /மணி அடிப்பதற்கு பதில் விளக்கு எரிய வைத்தேன்/ நல்ல ஏற்பாடு.

  ரமணி அவர்கள் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன். சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. .// 'சிகரெட்டா ஸார்?' என்பான்! '//

  அட??? இதெல்லாம் கூட உண்டா? :)

  நல்ல த்ரில்லிங்கான பதிவு.

  பதிலளிநீக்கு
 5. ஒவ்வொரு தரமும் இயக்குநர் கூப்பிடறச்சே மேலே இருந்து கீழே வரதும், திரும்ப மேலே போறதுமா இருக்குமே! இயக்குநரையும் மேலே உட்காரச் சொல்லக் கூடாதோ? :)))

  பதிலளிநீக்கு
 6. ஹஹஹா.. சுவாரஸ்யமாக இருந்தது படிக்க..

  பதிலளிநீக்கு
 7. //அட??? இதெல்லாம் கூட உண்டா? //

  அடடே.. பல உண்மைகள் சபைக்கு வந்திடுச்சே!! ;-)

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  ஐயா.

  படிப்பதற்கு மிகசுவாரஸ்யமாக இருக்கிறது.. சில உண்மைகளை வெளிக்காட்டியுள்ளீர்கள்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 9. இயக்குனர் அறைக்கு வெளியிலும் ஒரு விளக்கை பொருத்தியிருக்க லாமோ என்ற எண்ணம் வந்தாலும் சில அதிகாரிகள் இந்த மாதிரியான ஏற்பாடுகளுக்கு இணக்கமாய் போகாமல் எரிச்சல் அடைவதும் உண்டு.

  பதிலளிநீக்கு
 10. ஏதோ பேய் கதை என்று பயந்தபடி படித்தேன்.
  சுவாரஸ்யமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 11. ரசிக்கத்தக்க பதிவு இளம் நண்பரே! (இராய செல்லப்பா -சான் டியாகோ விலிருந்து.)

  பதிலளிநீக்கு
 12. ரசிக்கத்தக்க பதிவு இளம் நண்பரே! (இராய செல்லப்பா -சான் டியாகோ விலிருந்து.)

  பதிலளிநீக்கு
 13. ரசிக்கத்தக்க பதிவு இளம் நண்பரே! (இராய செல்லப்பா -சான் டியாகோ விலிருந்து.)

  பதிலளிநீக்கு
 14. உண்மைய சொல்லுங்க நாராயணன் அப்படி பயமுறுத்த நீங்க தான் காரணம் :-) சொல்லுங்கள் சார் சொல்லுங்கள்... சொல்லுங்கள் சார் சொல்லுங்கள்... :-)

  பதிலளிநீக்கு
 15. பாவம் நாராயணன் !
  நல்ல சுவாரஸ்யமான பதிவு.

  பதிலளிநீக்கு

 16. நன்றி கே பி ஜனா

  ஆச்சர்ய வருகைக்கு நன்றி வைகோ ஸார்!

  நன்றி ரமணி ஸார்.

  நன்றி ராமலக்ஷ்மி

  நன்றி கீதா மேடம். சில அலுவலகங்களில் இப்படி அலைச்சல்கள் உண்டு. என்ன செய்ய. கட்டிட அமைப்பு அப்படி!

  நன்றி கோவை ஆவி.

  நன்றி 'தளிர்' சுரேஷ்.

  நன்றி ரூபன்.

  நன்றி middleclassmadhavi.

  நன்றி வெங்கட்.

  நன்றி DD.

  நன்றி ஜீவி ஸார்.

  நன்றி அப்பாதுரை.

  நன்றி அருணா செல்வம்.

  நன்றி செல்லப்பா ஸார்.

  நன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம்.

  நன்றி சீனு..

  நன்றி ராஜலக்ஷ்மி மேடம்.

  பதிலளிநீக்கு
 17. தனக்குச் செவி கேளாத குறையிருந்தும் கூட துடிப்பாக மற்றவர்கள் கேட்கும் முன் செய்யணும் என்று நினைக்கும் நாராயணனின் கேரக்டர் எனக்குப் பிடிச்சிருந்தது. அதனாலயே ஏற்பட்ட கலாட்டாவோ வெகு சுவாரஸ்ய்ம்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!