திங்கள், 18 ஆகஸ்ட், 2014

நாக்கு நாலு முழம் தோசை புராணம் 3[தோசை பதிவே நீள்வதால் சரவணபவன் சாம்பார் ரெஸிப்பி அடுத்த வாரம் வெளிவரும்!]

அடையையும் தோசைக் குடும்பத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் தோசை அளவு சாதுவான உணவல்ல அது. சேர்க்கப்படும் பருப்பு வகைகளால் வயிற்றைச் சங்கடம் செய்யும் திறன் இதற்கு உண்டு.  அடையைக் கூட கடனே என்று வார்க்காமல் (வார்க்காமல் என்று கூட சொல்லக் கூடாது. அடையைத் தட்ட வேண்டும்!) அரையாய், கால் பாகமாய் உடைந்த பருப்புகள் மேலே தெரிய, பச்சை மாவு போன்ற தோற்றத்திலேயே இல்லாமல், நடுவில் கருப்பாக கருக்கியும் விடாமல் பொன் நிறமாக டை தட்டுவதும் ஒரு கலை. எடுத்துத் ட்டில் போட்ட பின்னும் தங்க நிற அடையின் நடுப்பகுதிகள் சீரியல் லைட் மினுக்குவது போல எண்ணெய் மினுக்கும். மினுக்க வேண்டும்! 

அடைக்கு அவியல் காம்பினேஷன் என்று சொல்வார்கள். எனக்கு அது 'ஊ...ஹூம்'தான்! அடையை ஒன்றும் தொட்டுக் கொள்ளாமல் வெறுமனே அப்படியே சாப்பிடலாம்.  வேண்டுமானால் கொஞ்சம் வெல்லம் தொட்டுக் கொள்ளலாம். (முக நூலில் ஸ்ரீ கருடாழ்வார் சாம்பார் தொட்டுக் கொள்வது இதற்குப் பொருத்தம் என்று சொல்லியிருக்கிறார்.
நல்ல சாம்பார் அமைந்தால் அதுவும் திவ்யம்தான்!) வெங்காயம் போட்டு தட்டுவது தனிச்சுவை. தேங்காய் நிறைய போட்டு விட்டால் காரம் தெரியாமல் போகும். காரம் தெரிந்தாலோ மறுநாள் வயிறு நிறைய பேர்களைப் படுத்தி விடும். ஆனாலும் அடைக்கு தனி ரசிகர்கள் குழாமே உண்டு - என்னையும் சேர்த்து! நான் காரக் கட்சி!  

                                                                   

மூன்று அல்லது நான்கு அடைகள் சாப்பிடுவேன்.

கடைகளில் அடை சாப்பிடுவது எனக்கு சம்மதமில்லை. வீட்டில் செய்து சாப்பிடுவதே சிலாக்கியம்! அவர்களுக்கு இவ்வளவு நகாசு வேலைகள் செய்ய நேரமில்லை. வியாபாரம்! சாப்பிட்டால் சாப்பிடு, இல்லை வேறு ஏதாவது ஆர்டர் பண்ணு'


                                                                                                               


சென்ற பதிவின் முந்தைய பதிவில் வெண்ணெய் தோசை என்று ஜி எம் பி ஸார் எழுதி இருந்தார். சீனு, 'முருகன் இட்லி கடை'யை ஞாபகப் படுத்தி இருந்தார். 

                                                                     
இரண்டையும் இணைத்து ஒரு விஷயம்.  சமீபத்தில் முருகன் இட்லி கடை சென்றபோது வெண்ணெய் ஊத்தப்பம் என்று ஒன்று அவர்கள் மெனுவில் சொல்ல, ஆர்டர் செய்தேன். 5 ரூபாய் வித்தியாசம் ஆனியன் ஊத்தப்பத்துக்கும்,  வெண்ணெய் ஊத்தப்பத்துக்கும்.

ஆனியன் ஊத்தப்பத்துக்கு மேலே ஒரு சிறு உருண்டை வெண்ணெய்!

                                                                
    
அப்புறம் பாசிப் பருப்பை மட்டும் அரைத்துச் செய்யப்படும் பெசெரெட்டு. வீட்டில் சமயங்களில் அடை வார்க்கும்போது சரியாக வரவில்லை என்றால் 'இன்னொரு பெசெரெட் தோசை போடு' என்று கிண்டல் செய்து வாங்கிக் கட்டக் கொண்டதுண்டு!

                                                                 
   
மதுரை கோரிப்பாளையத்தில் ஒரு பாட்டி கல்தோசை வார்த்துத் தருவார். பல வருடங்களுக்கு முன்பான கதை இது! ரோடோரமாக தரைக்கடை.  பக்கத்தில் ஒரு ஸ்டூலில் அமர்ந்து,  கையில் தட்டைப் பிடித்தபடி சாப்பிடலாம். இட்லி சுடச்சுட இட்லிப் பானையிலிருந்து  எடுத்து தட்டில் கொட்டும் வேகத்திலேயே மக்கள் தட்டுகளோடு அலை மோதுவார்கள். உடனுக்குடன் காலியாகி விடும்.

  

கல் தோசை என்று தோசைக்கல்லில் சற்றே குண்டாக, ஆனால் ஊத்தப்பம் போல இல்லாமல் சிறிய வட்டங்களாக தோசை வார்த்துப் போடுவார். தொட்டுக்கொள்ள மிளகாய்ப்பொடி, தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி, தேங்காய்ச் சட்னி, சாம்பார், புதினா அல்லது கொத்துமல்லிச் சட்னி.. மெயின் டிஷை விட சைட் டிஷ் அதிகம் இருக்கும்! அது ஒரு (பொற்)காலம்!

தோசைக்கு மிளகாய்ப் பொடி சிலாக்கியம் என்பதை விட சௌகர்யம்! எதுவும் கைக்குக் கிடைக்காதபோது உடனே கிடைக்கும் ரெடிமேட் சைட் டிஷ்! ஆனால் இதற்கு நல்லெண்ணெய் அமைய வேண்டும். முன்னால் எல்லாம் செக்கு எண்ணெய் என்று வாங்கிக் கொண்டிருந்தோம். தனிச்சுவை, வாசனை உடையது. (செக்கு எண்ணெய் தயாரிப்பு பற்றி நிறைய துணைக்கதைகள் உண்டு. அதைக் கேட்டால் இதைச் சாப்பிடத் தோன்றாது!)

இதயம், இமயம், இந்திரா என்றெல்லாம் நிறைய நல்லெண்ணெய் வகைகள் கிடைக்கின்றன. ஆனாலும் வாசனையாக எண்ணெய் அமைந்தால்தான் மி.பொ. சுவைக்கும்.                     
கீழே படத்தில் இருப்பது நாரத கான சபா காண்டீன் தோசை! கச்சேரி கேட்பதோடு, கலை நயமிக்க இந்த தோசையையும் டிசம்பர் சீசனில் கண்டு, (கச்சேரி)கேட்டு, உண்டு மகிழலாம்!  இப்போது நிறைய ஹோட்டல்களில் இந்த வடிவத்தில் தோசை 'செர்வ்' செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.தோசை வார்க்கும்போது மாவை கல்லில் ஊற்றி நிரவும்போது எங்கும் மாவு மொத்தையாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நடுவில்!  சில சமயம் மாவை நடுவில் ஊற்றி நிரவாமல், ரவா தோசைக்கு ஊற்றுவதுபோல வெளி வட்டத்திலிருந்து ஊற்றி நிரவுவதும் உண்டு! மாவு ஓரிடத்தில் சேர்ந்து மொத்தையாகக் கூடாது... அஷ்டே!   

இதை எழுதும்போதே அடுத்த தோசைக் குடும்பத்து உறுப்பினர் நினைவுக்கு வந்து விட்டார்!   

ஆப்பம்!


ஆப்பத்துக்கு என்று தனியாக கடையே வந்து விட்டது!  நளாஸ்! இன்னும் போய்ப் பார்க்கவில்லை. ஆப்பத்துக்கு தேங்காய்ப்பால், குருமா இரண்டும் தந்தாலும் என் சாய்ஸ் தேங்காய்ப்பால்தான்.  இதற்கான குருமா காரப்பொடி போடாமல் பச்சை மிளகாய்க் காரத்தை வைத்துச் செய்திருப்பார்கள்.  அவியலில் மசாலா போட்டது போல இருப்பதால் எனக்கு அது இரண்டாம் பட்சம்! 

    
   
இப்போது ஆப்பத்திலும் பொடி தூவித் தருகிறார்களாம்! அக்காவின் மாப்பிளை சொன்னார்.  அவருக்கு ஆப்பம் - குருமா காம்பினேஷன்தான் பிடிக்குமாம். ஹோட்டல் வர்ஷாவில் இந்தக் குருமா நன்றாயிருக்கும் என்றார்.

              

ஆப்பத்துக்கு என்றே இருக்கும் தனிக் கடாயில் ஒரு கரண்டி மாவை இட்டு கடாயை கையில் எடுத்து ஒரு சுற்று சுற்ற வேண்டும்!  நடுவில் தீம் என்றும் ஓரம் எல்லாம் மெலிதாகவும் ஆப்பம் ரெடி! ஆனால் எனக்கென்னவோ ஆப்பத்தில் பெரிதாக சிலாகிக்க ஒன்றுமில்லை.

ஒருவழியாய் தோசைப் பதிவை மனசேயில்லாமல் இங்கு,  இந்த அளவில் பூர்த்தி செய்கிறேன்.

தோசைக் குடும்பத்தில் எல்லோரையும் இழுத்திருந்தாலும் தோசைதான் கதாநாயகன்.  தோசையிலும் என் முதல் சாய்ஸ் ரவா தோசை, அதிலும் குறிப்பாக ஆனியன் ரவாதான்!  

பதிவு நன்றாகவே நீண்டு விட்டது. அதனாலேயே பெசெரெட் உள்ளிட்ட சில இடங்களில் சுருக்கமாகவே எழுதி இருக்கிறேன்!

இந்தப் பதிவுக்கு அமோக ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி, பொறுமையாய்க் கூட வந்ததற்கும்...
 

30 கருத்துகள்:

 1. ஆப்பத்தில் கேரளா ஆப்பம் என்றும் தமிழ்நாட்டு ஆப்பம் என்று உண்டு. தேங்காய் பால் தான் பெஸ்ட் காம்பினேஷன்

  அடை வித் வெல்லம் + வெண்ணை ....அவியல் ஹூம்....

  வெண்ணை தோசை எல்லாம் ஹோட்டலில் சாப்பிடக் கூடாது சார். வீட்டில்தான்....வெண்ணை தோசை அவல் அரிசி கலந்து செய்யப்படும்....சாஃப்டாக,சிறிது ஊத்தப்பம் போல் பங்களூர்/மைசூர் ஸ்பெஷல்....

  தோசை புராணம் வாயில் நீர் ஊற வைத்துவிட்டது சார்...சூப்பர்...

  பதிலளிநீக்கு
 2. 'அடையோடு வெல்லம்' என்பது ஒரு வைத்ய சமாசாரம்.

  //கல் தோசை என்று தோசைக்கல்லில் சற்றே குண்டாக, ஆனால் ஊத்தப்பம் போல இல்லாமல் சிறிய வட்டங்களாக தோசை வார்த்துப் போடுவார். //

  காலமாகிவிட்ட என் பெரியம்மா நினைவு வந்தது. அவர் இந்த கல் தோசையில் எக்ஸ்பர்ட். இந்த தோசை வீட்டில் வார்த்தாலே அவர் நினைவு வந்து விடும். அவரை 'அக்கா' என்றே எல்லோரும் அழைப்போம் ஆதலால் 'அக்கா தோசை' என்றே எங்கள் வீட்டில் இதற்குப் பெயர்.

  மற்றபடி தோசை புராணத்திற்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறீர்கள்.
  எதையும் நிறைவாய் செய்ய வேண்டும் என்கிற உங்கள் ஆசையும் அக்கறையும் புரிகிறது.

  பதிலளிநீக்கு
 3. உங்கள் நீண்ட பதி'வால்' தோசைத் திருவிழாவே தோற்று விட்டது !

  பதிலளிநீக்கு
 4. என்ன சார்.. அதுக்குள்ள முடிச்சிட்டீங்க. சரி சொல்லுங்க சொல்லுங்க அடுத்தது என்ன புராணம்...? இட்லியா..? பொங்கலா...? பரோட்டாவா...? சப்பாத்தியா..? ருசியா சாப்பிட நாங்க ரெடி.

  பதிலளிநீக்கு
 5. ஆப்பச்சட்டினே மதுரை கோயில் கடையில் விப்பாங்க. என் கிட்டேயும் இருக்கு. இப்போல்லாம் ஆப்பத்துக்குச் சட்டியை எழுத்துச் சுழற்ற முடியறதில்லை. :)))) வயசெல்லாம் ஆகலை! :))) உடம்பில் தெம்பில்லை. :)))) ஆகையால் ஆப்பத்துக்கு அரைச்சுட்டு தோசைக்கல்லிலேயே ஊற்றி விடுகிறேன். இதுக்கு என்னைப் பொறுத்தவரையில் நல்ல துணையாக வரக் கூடியது வற்றல் மிளகாயை நன்கு ஊற வைச்சு, தேங்காய், பொட்டுக்கடலையோடு அரைச்ச சிவப்புச் சட்னியும், வெங்காயச் சட்னியும் தான். மத்ததெல்லாம் ஜுஜுபி தான்! :))))

  பதிலளிநீக்கு
 6. நீங்க சொல்றாப்போல் அடையை ஓட்டலில் வாங்கிச் சாப்பிடக் கூடாது தான். இங்கே திருச்சி, ஶ்ரீரங்கம் ஓட்டல்களில் இட்லி மாவில் கடலைமாவையும், மிளகாய்ப் பொடியையும் சேர்த்துவிட்டு அடைனு பெயரில் கொடுக்கிறாங்க. வயித்தெரிச்சல். :(

  பதிலளிநீக்கு
 7. எனக்கென்னமோ ரவாதோசை அவ்வளவாப் பிடிக்கிறதில்லை. என்னதான் முறுகலா இருந்தாலும் அரிசி, உளுந்து போட்டு அரைச்ச தோசையைப் போல் ருசி இல்லைனு தோணும். :)))) ஆனியன் ரவா வேறு வழியில்லைனால் ஓகே!

  பதிலளிநீக்கு
 8. பெசரட் தோசை செய்முறை என்னோட சாப்பிடலாம் வாங்க பதிவில் பார்க்கலாம். :)))))

  பதிலளிநீக்கு
 9. புளிக்காத கல் தோசைக்குச் சரியான துணை தக்காளிச் சட்னி தான். லேசான புளிப்புடன் காரசாரமான தக்காளிச் சட்னியோடு சாப்பிடணும். :)))

  பதிலளிநீக்கு
 10. உங்க பதிவு எனக்கு அப்டேட்டே ஆகலை. அதோடு நேத்திக்குப் பனிரண்டு மணி நேர மின் தடை வேறே. :)))))

  பதிலளிநீக்கு
 11. தோசைக்கு மிளகாய்ப் பொடியோடு நல்லெண்ணெய் (நல்ல அக்மார்க் எண்ணெய்னு கேட்டு வாங்குங்க. இதயம், மந்திராவெல்லாம் கலப்படம்) விட்டுக் கொண்டு சாப்பிடுவதும் ஒரு ருசி தான். ஆனால் மிளகாய்ப் பொடியை தோசையின் மத்திய பாகத்தில் போட்டுக் கொண்டு, அந்த முறுகலான பாகம் கடைசி வாய்க்கு வைத்துக்கொண்டு மற்ற பாகங்களைச் சாப்பிட்டுவிட்டு, அந்தக் கடைசிவாய் முறுகலான தோசையை மிச்சம் எண்ணெய், மி.பொடியோடு சாப்பிட்டு விட்டு, உடனேயே நல்ல காஃபியும் குடித்தால் சொர்க்கம் கையில்! :)))))

  பதிலளிநீக்கு
 12. தோசை புராணத்தில் சுவை அதிகம் நண்பரே
  நன்றி

  பதிலளிநீக்கு
 13. இதயம், இமயம், இந்திராவைத் தவிர வேறு என்ன நல்லெண்ணை இருக்கிறது....?
  விதவிதமாய் தோசை குடும்பப் படங்களைப் போட்டு ஏங்க வைத்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 14. பசிய கிளப்பி விட்டுட்டீங்க.. மறுபடியும் போய் சாப்பிடணும்..! ;)

  பதிலளிநீக்கு
 15. பெருமாள் கோவில் அடைப்பிரசாதம் சாப்பிட்டிருக்கிறீர்களா? எனக்கு அது மிகவும் கஷ்டம். அடைக்கு வெண்ணை சர்க்கரை எனக்குப் பிடிக்கும். சிறுவயதில் அப்பாவின் அம்மா அரை அடை தருவார்கள். அதற்குமேல் சாப்பிட்டால் வயிற்றுக்கு ஆகாது என்பார்கள்.தோசை அடை ஆப்பம் என்று பதிவு நீண்டுகொண்டே போகிறது. இப்படியே போனால் அனைத்து உணவுப் பொருட்களும் என்னை, என்னை என்று சேர்க்கச் சொல்லும்....!

  பதிலளிநீக்கு
 16. என் பாட்டி செய்து கொடுக்கும் கார அடை எனக்கு ரொம்ப பிடிக்கும்! இப்போதெல்லாம் அடை என்று தோசை மாதிரி ஊற்றுகிறார்கள் அது வேஸ்ட்! வெங்காயம் போட்டு கெட்டியான மாவை வாணலியில் அல்லது தோசைக் கல்லில் கைகளால் தட்டி எடுப்பார்கள்! அது பெஸ்ட்! தொட்டுக் கொள்ள எதுவும் தேவைப்படாது! அப்படி தேவைப்பட்டால் சாம்பார்தான் எனது சாய்ஸ்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 17. தோசை அம்மா தோசை, எங்க அம்மா சுட்ட தோசை என்று பாடலாம் போல இருக்கு.

  அம்மா மெஸ்ஸில தோசை இருக்கா?

  பதிலளிநீக்கு
 18. வணக்கம்
  ஐயா.
  பார்த்தவுடன் சாப்பிட சொல்லுகிறது.... சுவையான உணவின் தொகுப்பு. பகிர்வுக்குநன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 19. மிளகாய்பொடி-தயிர் காம்போ எனக்குப் பிடிக்கும். வெறும் மிபொ சீபோ தான்.

  தோசையை வைத்துக்கொண்டு இத்தனை எழுத முடியுமா?.அசந்து போனேன்.

  பெருங்களத்தூர் அருகே ஒரு ஓட்டலில் அடை சாப்பிட்டேன். ஆஹா அற்புதம். அடுத்த முறை உறவினருடன் போன போது கடை பெயரைப் பார்த்துவிட்டு "என்னடா இது, ....... கடைல அடை சாப்பிடறதாவது" என்று மறுத்துவிட்டார். பார்சல் வாங்கிக்கொண்டு தொடர்ந்தேன். அதுக்காக நாவை அடக்க நான் என்ன வள்ளுவரா? அடைகளின் நடுவே ஒரு தினந்த்தந்தி பேப்பரை வைத்துக் கொடுத்தது கஷ்டமாக இருந்தது. சட்னி அவியலை ஒரு பிளாஸ்டிக் பையில் தந்தது இன்னும் கஷ்டமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 20. Boss, I think you should have taken some of my article too on the dosa.
  May be if you allow me I can write a post on the delicious dosa in your blog as I have tasted amazing dosas:-)

  பதிலளிநீக்கு
 21. ஊடனே ஒரு ஆனியன் ரவா ஆர்டர் கொடுக்கலாமா என்று நினைக்க வைத்துவிட்டீர்கள். எப்போழுது சரவணபவன் போனாலும் அவருக்கு இட்லி எனக்கு ரவா தோசைதான். அடை எங்கள் வீட்டிலும் தட்டி தான் செய்யணும்.முறுமுறு வென்று படு ருசியாக இருக்கும். நோ வெங்காயம்.வெங்காயம் போட்டால் வேற டேஸ்ட். பெருங்காயம் போட்டால் அது அடை. சுவையான தோசைப் புராணங்கள் ருசித்துப் படித்தேன். அம்மா கை தோசை போல இதுவரை சாப்பிட்டதில்லை.உரலில் அரைத்து மூன்று நாட்களுக்குக் காணும்படி செய்துவைப்பாள். அளந்து தான் சாப்பிடணும். ஆளுக்கு மூன்று.நான் தோசையை மிளகாய்ப்பொடியில் பிரட்டி நல்ல எண்ணெய் ஊற்றிச் சாப்பிடுவேன்.கடைசி தோசைக்குத் தயிர்.

  பதிலளிநீக்கு
 22. அருமையான தோசைப் பதிவுகள். ஆப்பம் பற்றி சில வரிகள். கேரள ஆப்பம் நன்கு பஞ்சு போல மெது மெதுப்பாகவும் வெண்மையாகவும் இருக்கும். அதற்குக் காரணம் அதில் அவர்கள் ஊற்றும் தென்னங்கள். அதற்குப் பதிலாக தேங்காய்த் தண்ணீர் கலந்து செய்தாலும் அதே போல வரும். மாவு அரைக்கும் போதும் தேங்கை கலந்து அரைக்க வேண்டும். அதற்கு கடலைக் கறி என்று மூக்கு சுண்டல் (சென்னா அல்ல) போட்டு வைத்த காரக் குழம்பு கொடுப்பார்கள். அருமையான காம்பினேஷன். இன்னும் தக்காளி தோசை போன்ற சில ஐட்டங்கள் உள்ளன.

  பதிலளிநீக்கு
 23. கோவா வில் எங்க அம்மாவின் சித்தி இளநீர் உள்ளே இருக்குமே அந்த வழுக்கை தேங்காய் அதை அரிசியுடன் அரைச்சு செய்வாங்க ..
  அது ரொம்ப soft ஆக பட்டு போலிருக்கும் ..
  வெள்ளரி தோசா ஒன்றிருக்கு பச்சரிசியோட வெள்ளரிக்கா சேர்த்து அரைச்சா ..டிஷ்யூ சாரி இருக்கே அது மாறி வரும் மெலிசா :)
  தோசா புராணம் ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பா சூப்பர்

  பதிலளிநீக்கு
 24. ஆற அமர ருசித்தேன் இதையும். அடையை தட்டிச் செய்வதில்லை. மொறுமொறுப்பாக இருக்கணும். அவியல் காம்பினேஷன் பிடிக்காது. வெல்லம் ஓகே. சட்னியும் வேண்டும். ஆப்பத்துக்கு தேங்காய்ப்பால் மட்டுமே என்றால் திகட்டி விடும். இதற்கும் கூடவே சட்னி இருக்கணும்.

  இன்னும் பல பாகங்கள் வந்தாலும் ருசிக்கத் தயார்:). பரிசீலிக்கவும்.

  பதிலளிநீக்கு
 25. தோசை அம்மா தோசை! அம்மா சுட்ட தோசை! பாட்டு நினைவிற்கு வருகிறது!

  பதிலளிநீக்கு
 26. படிச்சு முடிச்சதும் முடிவு பண்ணிட்டேன். இன்னிக்கு எங்க வீட்டில தோசை தான்!

  பதிலளிநீக்கு
 27. சமீபத்தில் சூர்யாஸில் பொடி தோசை சாப்பிட்டோம். வித்தியாசமாகத் தான் இருந்தது.

  சிறுவயதில் அடைக்கு வெண்ணை கட்டாயமாக வேண்டும். நான் செய்வதை விட என் மாமியாரின் அடை எனக்கு மிகவும் பிடிக்கும். அது போல் என் மாமா செய்யும் அடையும்.

  தில்லியில் கன்னாட்பிளேசில் சரவணபவன் துவங்கிய புதிதில் அடை அவியல் ஆர்டர் செய்து சாப்பிட்ட நினைவு. இட்லியை விட கொஞ்சம் பெரிதாக இருந்தது.

  ஆப்பம் எனக்கு பிடிக்காத ஐட்டம். ஓரிருமுறை தேங்காய்ப்பாலுடன் சாப்பிட்டிருக்கிறேன்.

  தோசை புராணம் சுவையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 28. //சரவணபவன் துவங்கிய புதிதில் அடை அவியல் ஆர்டர் செய்து சாப்பிட்ட நினைவு. இட்லியை விட கொஞ்சம் பெரிதாக இருந்தது.//

  சரவணபவன் இட்லியே ஸ்டிக்கர் பொட்டு சைசுக்குத் தான் இருக்கும். இட்லி அதைவிடக் கொஞ்சம் தான் பெரிசுன்னா காலணா அளவுக்கு இருக்குமோ? :))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!