திங்கள், 15 டிசம்பர், 2014

'திங்க'க் கிழமை : கொய்யாப்பழ ஜல்லி



                               
 
தலைப்பைப் பார்த்து நான் ஏதோ ஜல்லியடிக்கிறேன் என்று நினைக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.  இதுவரை எதிலிருந்து எடுத்துப் போட்டேனோ,  அதே புத்தகத்திலிருந்துதான் எடுத்துப் போடுகிறேன்.

கொய்யாப்பழம் எனக்கு ரொம்பப் பிடித்த பழம்.  அதை இப்படியெல்லாம் துன்புறுத்தி, அதைச் சாப்ப்பிடவேண்டுமா என்று தோன்றினாலும், அதிகம் பழம் கிடைக்கும் காலத்துக்கு இப்படிச் செய்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

என் மனைவி, பிள்ளைகள் கொய்யாப் பழத்தைத் துண்டாக்கி அதில் மிளகாய்ப் பொடி  (காரப்பொடி) தூவிச் சாப்பிடுவார்கள். எனக்கு அதில் சம்மதமில்லை! கொ. பழத்தின் ஒரிஜினல் சுவை கெட்டுவிடுகிறது என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

ரொம்பக் கனிந்து இருந்தால் சாப்பிட வசதிதான். ஆனால் அதைவிட, செங்காயாக இருக்கும் அல்லது முக்கால் கனிந்திருக்கும் பழங்களே என் சாய்ஸ்!  அதைச் சிறு துண்டுகளாக்கி, தட்டில் போட்டுக் கொண்டு அவ்வப்போது ஒரு துண்டை வாயிலிடுவது இனிமையான அனுபவம்!
                                                                  
                                                   
 
சிறுவயதில் - நான் மூன்றாம் வகுப்புப் படித்த சமயம் - தங்கையுடன் ஏற்பட்ட சில்லுண்டித் தகராறில், எங்கள் வீட்டுக் கொய்யா மரத்திலில் ஏறி மேல் கிளையில் அமர்ந்து கொண்டு அவளை வம்பிழுத்துக் கொண்டேயிருந்தபோது மேலிருந்து தலை கீழாகக் கீழே விழுந்து அரைநாள் மயக்கமாக இருந்து வீட்டாரை பயமுறுத்தியிருக்கிறேன்.

வத்ராப்பில் வேலைபார்த்த காலத்தில் அங்கு கிடைக்கும் கொய்யாப் பழ சைஸைக் கண்டு மிரண்டு போயிருக்கிறேன். வத்ராப், கிருஷ்ணன் கோவில் கொய்யாப் பழங்கள் சம்திங் ஸ்பெஷல்! தேங்காய் சைஸில் இருக்கும்! சுவையும் அபாரமாக இருக்கும். இந்தவகைக் கொய்யாப் பழங்கள் மதுரையில் பெரியார் நிலையம் அருகேயும் கிடைக்கும். 
 

           
 
ஸி விட்டமின் அதிக அளவில் இருக்கும் கொய்யா நார்ச்சத்து மிகுந்தது. இந்த வாசனை சிலருக்குப் பிடிப்பதில்லை. சிவப்புக் கொய்யாவும் கிடைக்கிறது. அது இன்னும் இனிப்பாக இருக்கும் என்பார்கள். ஆனாலும் எனக்கு வெள்ளைக் கொய்யாதான் இஷ்டம். பார்த்து வாங்காவிட்டால் கொய்யாக்கள் சுவையின்றி தண்ணீர் குடிப்பது போல சுவையற்றும் அமைந்து விடும்.
 
பல் பிரச்னை இருப்பவர்களுக்கு கொய்யா விதைகள் எதிரி! பற்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு அவஸ்தை கொடுக்கும்.


வெட்டிக் கதை போதுமென்று அதை இந்த அளவில் பூர்த்தி செய்துகொண்டு, மேலே தலைப்பில் சொல்லப்பட்டுள ரெசிப்பிக்குச் செல்கிறேன்!



=====================================================================

கொய்யாப்பழ ஜல்லி 
 

                                      
 
கொய்யாப்பழத்தைச் சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பழத்துண்டு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் வடிகட்டவும்.
                              
 
வடிகட்டிய நீரில், கொய்யாப்பழத் துண்டு எவ்வளவு இருந்ததோ, அதில் பாதி சர்க்கரை போட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். அடுப்பைப் பெரியதாக வைத்து ஒருமணி நேரம் கொதிக்க வைத்தால் பொங்கிப் பொங்கி நுரைத்து வரும்.
 
பிறகு அடுப்பைச் சிறியதாக எரிய வைக்கவும். அப்போது ஐந்து நிமிடங்களில் நுரைத்துப் பொங்கும் சமயத்தில் ஐந்து பத்து நிமிடங்களில் இறக்கி வைத்து 2 டீஸ்பூன் சிட்ரிக் ஆசிட்,இரண்டு டீஸ்பூன் பைனாப்பிள் எஸ்சென்ஸ் விட்டு, உடனே ஒரு பாட்டிலில் கொட்டி அசைக்காமல் ஓரிடத்தில் வைக்கவும்.


                                                                            
 
சூடாக இருக்கும்போது பாட்டிலை மூடாமல் வைக்கவும்.  ஆறியவுடன் மூடிவைக்கவும்.  மறுநாள் கெட்டியாக ஆகியிருக்கும்.  அப்படி கெட்டியாக ஆகவில்லை என்றால் மறுபடியும் 10 -15 நிமிடங்கள் கொதிக்கவைத்து பாட்டிலில் கொட்டவும். 

=====================================================================
 
 
                                    

இதுவரை குறிப்பு கொடுத்திருக்கும் மாமி, அதை என்ன செய்ய வேண்டும் ன்று சொல்லவில்லை. அப்படியே சாப்பிடவேண்டுமா, தண்ணீரில் விட்டு ஜூஸ் போலச் சாப்பிட வேண்டுமா என்று சொல்லவில்லை! 

                    

இரண்டாவதாகச் சொல்லி இருப்பதற்குத்தான் சாத்தியக்கூறு அதிகம். ஏனென்றால், 'பான வகைகள்' என்ற தலைப்பின் கீழ்தான் இது வருகிறது!







படங்கள் : எப்படி, எப்படிச் சாப்பிடலாம் என்றும் கற்றுக் கொடுத்திருக்கும் இணையத்துக்கு நன்றி!

28 கருத்துகள்:

  1. கொய்யாப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்வதிலேயே தெரிகிறது உங்கள் ரசனை.
    ஆஹா அந்த மாமி சரியான இடத்துல தான் ஸ்டாப் பண்ணியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  2. கொய்யாப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்வதிலேயே தெரிகிறது உங்கள் ரசனை.
    ஆஹா அந்த மாமி சரியான இடத்துல தான் ஸ்டாப் பண்ணியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா... கொய்யாப்பழ ஜெல்லி சூப்பராகத்தான் இருக்கு. ஏராளமாய்க் காய்த்துக் குலுங்கும்போது செய்ய ஏதுவானது.

    எங்கள் மாமி(யார்) எனக்கு சொல்லித்தந்தது தக்காளி மற்றும் மாம்பழ ஜெல்லி. இரண்டுமே காரக்குழம்புக்கு நல்ல காம்பினேஷன்.

    அப்புறம் துளசி டீச்சர் தயவால் பச்சை ஆப்பிளை வேகவைத்து ஆம்சூர் பவுடர் சேர்த்து மாங்காய்ப்பச்சடி போல் செய்யவும் கற்றுக்கொண்டேன்.

    இப்போது உங்கள் தயவால் கொய்யாப்பழ பச்சடி. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. கொய்யா பழம் எனக்கும் மிகவும் பிடிக்கும்! அப்படியே சாப்பிடத்தான் எனக்கும் பிடிக்கும்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. கொய்யாப்பழம் சர்க்கரை நோய்க்காரர்கள் சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று. சிவப்புக் கொய்யா மதுரைப் பக்கம் தான் கிடைக்கும். இங்கெல்லாம் கிடைப்பதில்லை. ஆனாலும் வெள்ளைக் கொய்யாவில் இனிப்பானதைத் தேர்வு செய்வதற்கு சாமர்த்தியம் வேண்டும். கொய்யாப்பழம் தேங்காய் அளவுக்குப் பெரிதாக வட மாநிலங்களில் பார்க்கலாம். குறிப்பாக ஜாம்நகர்(குஜராத்), ஷிர்டி(மஹாராஷ்ட்ரா) சிகந்திராபாத் போன்ற ஊர்களில் கொய்யாவின் ருசியே தனி. ஜல்லியெல்லாம் அடிச்சதில்லை. ஆனால் நீங்க சொன்னமாதிரி செய்து ஜூஸில் மிக்ஸட் ஃப்ரூட் ஜூசில் மேலே போட்டுக் கொடுப்பார்கள். சாப்பிட்ட அனுபவம் உண்டு.

    பதிலளிநீக்கு
  6. பச்சை ஆப்பிளைத் தோல் சீவித் துருவிக் கொண்டு மாங்காய்த் தொக்கு மாதிரி செய்யலாம். தோலோடு துண்டங்களாக்கி ஆவக்காய் மாதிரியும் போடலாம். சர்க்கரை சேர்த்து ஜாமும் செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா...கொய்யாபழம் எப்படி ரசனையாக சாப்பிடுவது...மற்றும் பக்குவப் படுத்தல் சூப்பர். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  8. பச்சை ஆப்பிளை பச்சை மாங்காய் ஊறுகாய் மாதிரி செய்து சாப்பிடலாம். நன்றாக இருக்கும். அடிக்கடி செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
  9. கொய்யா ஜெல்லி செய்வதுண்டு. ஜாமும். கல்லூரியில் படித்த காலத்தில் கானிங்க் அண்ட் ஃபுட் ப்ரிசர்வேஷன் என்று ஒருவாரக் கோர்ஸ் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலிருந்து நடத்தினார்கள். அப்போது அதில் கற்றுக் கொண்டது. பழத்தை வேகவைத்துக் கூழாக்கி ஜாம் செய்யலாம். நன்றாகவே இருக்கும்.

    சாப்பிடுவது குறித்து நீங்கள் சொல்லி இருக்கும் படமும் சரியே....-கீதா

    பதிலளிநீக்கு
  10. கனியிருப்ப காய் கவர்வதேன்?.. இந்த மாதிரி டைப் பதிவுகளை விட்டு வெளியே வாருங்கள்.

    உங்கள் வாசிப்பு அனுபவதிற்கு நீங்கள் எழுத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. 'ஜல்லி'யே அதற்கு அத்தாட்சி.

    பதிலளிநீக்கு
  11. எப்படி சாப்பிட்டாலும் கொய்யா சுவைதான் !

    பதிலளிநீக்கு
  12. கொய்யாப் பழத்துண்டுகளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.வேக வைத்த நீரைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்.
    கொய்யாவை அப்படியே சாப்பிடுவது தான் என் சாய்ஸ்

    பதிலளிநீக்கு
  13. கொய்யா பற்றிய ரசனையான வாசகங்களுக்கு நன்றி! எல்லோரும் சொன்னதும் எனக்கும் மதுரைப்பக்கம் கிடைக்கும் கொய்யாப்பழங்களை வாங்கி ருசிக்க வேண்டும்போல இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
  14. //கொய்யாப் பழத்துண்டுகளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.வேக வைத்த நீரைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்.//
    அது மறைபொருள் ராஜலக்ஷ்மி மேடம். நாமே புரிஞ்சுக்கணும். நானும் எழுதலாமானு யோசிச்சுட்டு நேத்திக்கு வம்பு வளர்க்கிற மனநிலை இல்லைனு விட்டுட்டேன். :))))

    பதிலளிநீக்கு
  15. கொய்யா பழத்தை கொதிக்க வைப்பதா...? ம்ஹூம்... அப்படியே சாப்பிடுவதுதான் ருசி....

    பதிலளிநீக்கு
  16. எங்களூரிலும் இந்த மாதிரி சிவப்பு கொய்யா கிடைக்கும். மிகவும் ருசியாக இருக்கும். அது ஜெல்லி என்று நினைக்கிறேன். ஜல்லி அல்ல.
    வெறுமனேயே சாப்பிட நன்றாக இருக்கும் ஒரு விஷயத்தை இப்படி நேரத்தை வீணடித்துக் கொண்டு செய்வானேன்?

    பதிலளிநீக்கு
  17. ஜெல்லி நல்லாத்தான் இருக்கு... செய்முறை எல்லாம் சொல்லி எப்படிச் சாப்பிடணுமின்னு சொல்லாம விட்டுட்டீங்களே... அண்ணா நியாயமா...?

    பதிலளிநீக்கு
  18. நல்லா இருக்கு கொய்யாப்பழ ஜெல்லி.
    படங்கள்,செய்முறை விளக்கம் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  19. பாதிக்கு பாதி சர்க்கரை, ரெண்டு ஸ்பூன் acidஆ? இது சாப்பாட்டு ரெசிபி தானே?

    பதிலளிநீக்கு
  20. நல்ல இடுகை. ஆனா சீனிக்கொய்யாப்பழத்தை எதுவும் போடாமல் சாப்பிடுவதுதான் டேஸ்ட். ட்ரெயின்களில் கிடைக்கிறது. ஆனால் காரைக்குடியில் எங்கள் வீட்டுத் தோட்டத்து சீனிக்கொய்யாவுக்கு ஈடுஇணை எதுவுமில்லை. :)

    பதிலளிநீக்கு
  21. பதிவு ருசித்தது. பள்ளி நாள்களில் கொய்யாக்காய்களை அடித்து கூட்டு வைத்த நினைவு வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  22. ஜல்லி என்றால் அர்த்தமே மாறிப் போகிறதே:).

    நல்ல குறிப்பு.

    கொய்யா மரத்திலிருந்து விழுந்தீர்களா?
    சிறு வயதில் எங்கள் தோட்டத்துக் கொய்யா மரத்தில் ஏறி ஆளுக்கொரு கிளையில் அமர்ந்து காயாகவே சாப்பிட்ட அனுபவங்கள் உண்டு.

    வெள்ளைக் கொய்யா பிடித்தமானது.

    பதிலளிநீக்கு
  23. கொய்யாப் பழத்தைக் கொய்து அதை ஜல்லி அடிப்பதை விட்டுவிட்டு,வெறுமனயே சாப்பிடலாம். பல்லிருக்கும் வரை கவலை இல்லை.இதெல்லாம் 39,40 வயதில் செய்து எல்லாரையும் அறுத்தாச்சு. இனிமேல் ஸ்ட்ரைட்டாப் பழமே போதும்., விதையில்லாமல் இருந்தால் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  24. தேனம்மா,காரைக்குடி அழகப்ப்பாநகர் போஸ்ட் ஆஃப்பீஸ் பழம் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா. ஆஹா. அது ருசி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!