திங்கள், 29 டிசம்பர், 2014

'திங்க'க்கிழமை : பிரேக்ஃபாஸ்ட்


 
காலையில் காபி இன்னும் எவ்வளவு பேர்கள் விடாமல் சாப்பிடுகிறீர்கள்? எனக்கு, காலை எழுந்து பல் தேய்த்தவுடனே காஃபி வேண்டும். எதுவும் டிகாக்ஷன் காஃபி!  கெட்ட பழக்கம்தான்! என்ன செய்ய!  இந்தக் காலக் குழந்தைகள் போர்ன்விடா, பூஸ்ட் என்று குடித்தாலும் நானெல்லாம் நினைவு தெரிந்த நாளிலிருந்தே காஃபி குடித்தே வளர்ந்தவன்!
 
     
                                            
நிறைய பேர்கள் இந்தப் பழக்கத்தை விட்டு விட்டார்கள் என்று தெரிகிறது. வெளிநாட்டில் வசிப்பவர்களால் இந்தப் பழக்கத்தைத் தொடர முடிகிறதா?
 
இப்போதெல்லாம் காலை குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்புமுன்னும், பெரியவர்கள் அலுவலகம் கிளம்புமுன்னும் இட்லி, தோசை என்று சிற்றுண்டி சாப்பிட்டுக் கிளம்புவது வழக்கம்தான்.
 
ரிடையராகி வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பாடு வேறு திண்டாட்டம். இந்த பரபரப்புகளுக்கு நடுவே காலை டிஃபன் களேபரத்தில் அவர்கள் தங்களை எந்த நேரத்தில் பொருத்திக் கொள்வது என்று திண்டாடுவதையும் பார்த்திருக்கிறேன்! 
 
                                                  

இதிலும் ஆட்கள் அதிகம் இருக்கும் இடங்களில் இட்லிதான் சிறந்த சிற்றுண்டி. நின்று ஒவ்வொருவருக்காக தோசை வார்க்கப் பொறுமையும் இருக்காது, நேரமும் இருக்காது. அதுவும் இருவரும் வேலைக்குப் போகும் இல்லங்களில், துணைக்குப் பெரியவர்களும் இல்லை என்றால் நேர மேலாண்மை மிகக் கடினம். மனைவி ஹோம் மேக்கராய் இருந்தால் அது ஒரு சௌகர்யம். ஆனால் வருமானம் இடிக்குமே!
 
"மனையாள் பணிசெய்தால் மணவாளன் வாழலாம்... அதிலே வருமானம் ஆனாலும் அவமானம்..இருவர் பணி செய்தால் இந்நாளில் பசி தீரும்..."
 
80 களிலேயே வந்த குடும்பம் ஒரு கதம்பம் படப் பாடல் இது!
 
                                                             

கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிட்டுக் கிளம்பும் குழந்தைகளும் உண்டு. அந்தக் காலம் என்றால் கூட்டுக் குடும்பமோ இல்லையோ, பிள்ளைகள் உள்ளூர்ப் பள்ளிகளில் படிப்பார்கள். பாட்டியும் அம்மாவும் சமையலில் ஈடுபட்டிருக்க, குடும்பத்தலைவர் வேலைக்குக் கிளம்புமுன் குழந்தைகளைக் கிளப்பி விடுவார்கள்.  அவசரமின்றி வேலைகள் நடக்கும். நிதானமாக, சில சமயம் பொறுமையாக தோசை கூட வார்த்துப் போட்டு அனுப்புவார்கள்.  
 
 
இப்போது முடியுமா?
 
  
                                                      
 
திங்கள் முதல் வெள்ளி வரை காலை, மதிய ஆகாரங்கள் ஒரு அவசரக்கோலமாய், கடமையாய் மாறி விட்டன. கிடைக்கும் வாராந்திர விடுமுறை நாட்களில் அந்த வாரம் முழுவதும் வரும்படி மாவு அரைத்து வைத்துக் கொள்கிறார்கள். அப்புறம் மாற்றி மாற்றி இட்லி, தோசை...
 
அப்புறம் இருக்கவே இருக்கிறது ரெடிமேட் சப்பாத்தி.  பத்து சப்பாத்தி 30 ரூபாய்! எடுத்துப் போட்டு எடுக்க வேண்டியதுதான்!  சப்பாத்தி மட்டும்தான் ரெடிமேடில் இருக்கிறதா என்ன?  இடியாப்பம், தோசை, பரோட்டா... 
 
                                                                          
 
அந்தக் காலத்தில் நான் பள்ளிக்குக் கிளம்பும் நேரம் சாதமும் பருப்பும் மட்டும் தயாராயிருக்கும். பருப்பு சாதம் கலந்துகொண்டு, 'உனக்குக் கொதிகுழம்பு பிடிக்குமே' என்று (அப்படிச் சொன்னால்தானே நாம் போட்டுக் கொள்வோம்? நானும் பலமுறை நாம் எப்போது அப்படிச் சொன்னோம் என்று யோசித்ததுண்டு!)  தட்டின் ஓரத்தில் பாதி கொதித்த குழம்பைப் போட்டு,  சாப்பிட வைத்து அனுப்புவார்கள்.

சமையலறை மேடை மேல் அவரவர்கள் டிபன்பாக்ஸ் ரெடியாக இருக்கும். 99 சதவிகிதம் தயிர் சாதம்தான். ட்ரெஸ் செய்து கிளம்பி அதை எடுத்துக் கொண்டு ஓட வேண்டியதுதான்.
அதுவும் பெயர்தான் தயிர் சாதம். உண்மையில் அது மோர்சாதம்தான்! மாவடுவோ, காய்ந்த நாரத்தையோ அதில் திணிக்கப் பட்டிருக்கும்! மதியம் பள்ளிகளில் மிகச்சிலர் மட்டும் வெவ்வேறு வகை உணவு கொண்டு வருவார்கள். சிலருக்கு மதியம்தான் சைக்கிளிலோ, வண்டியிலோ மொத்தமாக ஒரு நபர் கூடையில் சுடச்சுடக் கொண்டு வருவார்.
 
 
 
 
 
 
 
 
படங்கள் : நன்றி இணையம்.
 

26 கருத்துகள்:

 1. காலை காஃபி விட்டு பலவருடம் ஆகி விட்டது. முன்பு காலை 5மணிக்கு கணவருக்கும் கொடுத்து நானும் குடிப்பேன்.
  வெளிநாட்டிலும் நல்ல காப்பி பொடி கிடைக்கிறது மருமகள் நல்ல காப்பி தன் மாமாவிற்கு போட்டுத் தருவாள்.

  இடலி உடலுக்கு பாதிப்பு இல்லை, அனைவருக்கும் செய்ய எளிதானது.
  நிறைய பேர் இருந்தால் ஆளுக்கு கொஞ்சம் வேலையை பங்கு போட்டுக் கொண்டால் வித விதமாய் செய்யலாம்.

  நான் ரேடிமேட் சப்பாத்தி வாங்குவது இல்லை.
  இடியாப்பம் கோவையில் வீட்டில் செய்வது போலவே கிடைக்கிறது. வாங்கி சூடு செய்து தேங்காய், சீனி போட்டு இனிப்பு, எலுமிச்சை, புளிகாய்ச்சல் போட்டு காரம் செய்யலாம், நம் வீட்டில் செய்யும் சேவை போலவே!
  டாகடர் இடியாப்பம் சாப்பிட சொல்லி சொல்வதால் எல்லா கடைகளிலும் புதிதாக இடியாப்பம் கிடைக்கும்.
  என் கணவருக்கும் கொதிகுழம்பு (கொதி குழம்பு கொதி சோறு)மிகவும் பிடிக்கும்.குக்கரை இறக்கி சூடான சாதம், அப்போது தான் இறக்கிய குழம்பு பிடிக்கும். மழை காலத்தில் என்று இல்லை எப்போதும் அப்படி வேண்டும்.


  பதிலளிநீக்கு
 2. இட்லி தோசை மாவு எப்போதும் ஸ்டாக் இருக்கணும். ரெடிமேட் சப்பாத்தி வாங்கியதேயில்லை.

  பதிலளிநீக்கு
 3. காலை 5.30க்கு எழுந்திருக்கிறேன்;பல் தேத்தவுடன் காபிதான்;ஆனால் ஃபில்டர் காபி அதிர்ஷ்டம் இல்லை எனக்கு..நெஸ்கஃபே இன்ஸ்டண்ட்,கலக்கிக் குடிக்க வேண்டியதுதான்!
  இன்றைய காலையை அழகாகச் சொன்னீர்கள்

  பதிலளிநீக்கு
 4. காலை எழுந்தவுடன் காப்பி
  பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பதிவு
  மாலை முழுவதும் இணையம்
  என்று வழக்கப்படுத்திக்கொள் கிழவா

  காலை 3 மணிக்கு நானே கலக்கிக் குடிக்கும் ப்ரூ இன்ஸ்டன்ட். காலை 6 மணிக்கு மனையாள் கொடுக்கும் பில்டர் காப்பி. 9 மணிக்கு டிபன். இப்படி என் காலைப் பொழுது ஓடுகிறது.

  பதிலளிநீக்கு
 5. # வாராந்திர விடுமுறை நாட்களில் அந்த வாரம் முழுவதும் வரும்படி மாவு அரைத்து வைத்துக் கொள்கிறார்கள்#
  என் வீட்டில் இது கூட ரெடிமேட் தான்!'இருந்தும் இல்லாமல் இருப்பது' கிரைண்டருக்குதான் பொருந்தும் !

  பதிலளிநீக்கு
 6. எனக்கும் விடிகாலை காபி பழக்கம் உண்டு. பின்னர் டிபன் சாப்பிட்ட பின்னரும் காபி உண்டு! பிரெக்பாஸ்ட் பழஞ்சாதத்தில் இருந்து டிபனுக்கு முன்னேறி இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 7. //வெளிநாட்டில் வசிப்பவர்களால் இந்தப் பழக்கத்தைத் தொடர முடிகிறதா?//
  என்ன இப்படி கேட்டுடிங்க...காபி இல்லாவிட்டால் இங்கே உள்ளவர்களில் பாதி பேர் செத்துவிடுவாங்க அமெரிக்காவை அழிக்க ஆயுதம் வேண்டாம் ஒரு வார காலத்திற்கு காபி பொடிமட்டும் கிடைக்காமல் செய்துவிட்டால் பாதி பேர் செத்துவிடுவாங்க ..

  நான் தண்ணீர் குடிப்பது என்பது மாத்திரை ஏதாவது சாப்பிடும் நேரம் மட்டுமே அல்லது காபி கிடைக்காத பட்சத்தில் அதாவது யாரு வீட்டிற்காவது விருந்துக்கு போகும் சமயத்தில் மட்டுமே.

  காலை 6.30 மணிக்கு எழுந்திருக்கும் எனக்கு முதலில் காபி குடித்தால்மட்டுமே மற்ற வேலைகளை செய்ய இயலும் அதன் பின் எப்போதுமே என் கையில் காபி இருந்து கொண்டேதான் இருக்கும். நான் படுக்க செல்வது இரவு 1 மணி அல்லது 2 மணி அப்படி படுக்க செல்லும் எனக்கு காபிகுடித்தால் மட்டுமே உடனே தூக்கம் வரும்.

  எங்கள் வீட்டில் காலை உணவு இட்லி தோசை வித் சட்னி தான் அல்லது பிரெட் வித் ஜீஸ்

  இரவு நேரங்களில் சாதம் சாப்பாத்தி அல்லது பாஸ்தா. இரவு நேரத்தில் மிஞ்சியது மதிய உணவாகிவிடும்

  பதிலளிநீக்கு
 8. அதிகாலை காபி இல்லை...
  இட்லி தோசை இரவில் உண்டு...

  பதிலளிநீக்கு
 9. வார நாட்களில் அலுவலகத்துக்கு சென்றவுடன்,முதல் வேலையாக ஒரு டீயைப் போட்டு குடிப்பது. இதுவே வார இறுதி நாட்களில் காலையில் எழுந்தவுடன் நம்மூர் நரசுஸ் காப்பி ஸ்டாக் இருந்தால் காபி,இல்லையென்றால் இஞ்சி டீ குடிப்பது வழக்கம். இங்கு நல்ல காப்பி பொடி கிடைக்கிறது,ஆனால் எனக்குத்தான் அது பிடிப்பதில்லை. அதனால் இந்தியா போயிட்டு வரும்போது கண்டிப்பாக நரசுஸ் காபி பொடியும் எங்களுடன் வரும்.

  அப்புறம் இட்லி,தோசை எல்லாம் இரவில் தான்.

  பதிலளிநீக்கு
 10. குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

  வாழ்க வளமுடன்!
  திகழ்க நலமுடன்  நன்றியுடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 11. மாவும் ப்ரிட்ஜும் இருப்பதால் தினந்தோறும் இட்லி தோசைதான்

  பதிலளிநீக்கு
 12. கண்டிப்பாக "காலை எழுந்தவுடன் நல்ல காப்பி (டிகாக்ஷன்)...பின்பும் கனிவு கொடுக்கும் நல்ல காபிதான்.....மாலையிலும் நல்ல காபி....என்று வழக்கப்படுத்திக் கொண்டுவிட்டேன்..ஹஹஹ் -கீதா

  இருவர் வீட்டிலுமே காலை டிபன் கேரளா,தமிழ்நாடு டைப் டிபன் அதாவது நோ ஃரை...நோ மேலைநாட்டு, வட இந்திய உணவுகள்....ஆவியில் வேகும் டிபந்தான்....

  வழக்கம்போல் திங்கட்கிழமை அருமையான பதிவு...

  பதிலளிநீக்கு
 13. ரெடிமேட் உணவுகள் வாங்குவதில்லை. எல்லாமே வீட்டில் செய்வதுதான்...எங்கள் இரு வீடுகளிலும்

  பதிலளிநீக்கு
 14. நான் இப்போ ஹைதையில் இருக்கேன். இருந்தாலும் காரைக்குடி போகும்போதெல்லாம் ஒரு கிலோ நரசுஸ் காஃபி பொடி வாங்காம வர்றதில்லை. அப்புறம் தினம் காலை இட்லி, இரவும் இட்லி இல்லைன்னா தோசை.

  இதெல்லாம் கிடைக்காட்டா நான் அந்த ஊர்லயே இருக்கமாட்டேன் ஆமா. சொல்லிட்டேன் ஹாஹாஹா ( இட்லி அரிசி என்ன விலை வித்தாலும் சரி வாங்கிடுறது. )

  பதிலளிநீக்கு
 15. திங்கட்கிழமை உணவை ரசித்தேன். தாமதமாக வந்தபோதிலும் ருசியோடு இருந்ததை அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
 16. அய்யா வணக்கம்.
  சிறு வயதில் இருந்தே நான் காப்பியின் அடிமைதான்!
  சாப்பாடு இல்லாவிட்டாலும் காப்பி இருக்க வேண்டும் எனக்கு!
  இட்லியும் தோசையும் அன்றாட உணவில் ஒரு பங்கு!
  எப்படியே மீண்டும் காப்பியை நினைவு படுத்தி விட்டீர்கள்,
  இதோ வருகிறேன்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 17. எங்கள் வீட்டிலும் இட்லி, தோசை தான். கரைத்த தோசை, அரைத்த தோசை, அரைத்த இட்லி, ரவை இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்று பலவகைகள் செய்வேன்!! ரெடிமேட் சப்பாத்தி வாங்குவதில்லை. பூரி விட்டுவிட்டீர்களே!

  காலையில், மாலையில் காப்பி தான். பிள்ளையுடன் டீ குடிப்பதும் உண்டு. காலையில் முதலில் காப்பி சாப்பிட்டப் பிறகு!

  பதிலளிநீக்கு
 18. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 19. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
  துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

  வலைப் பூ நண்பரே / சகோதரியே!

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
 20. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...

  பதிலளிநீக்கு
 21. Brewed black coffee and a Breakfast bar when traveling. Filter coffee and bread or cereal at Chennai. Proper tiffin on holidays... :-) nice write up. Feeling hungry now.

  பதிலளிநீக்கு
 22. சமையல் ஆகிச் சாப்பிட்டுட்டுத் தான் பள்ளிக்குச் செல்லவேண்டும் எனக் கட்டாயப்படுத்தும் வீடுகளில் எங்க வீடும் ஒன்று. பள்ளியில் ஆசிரியர்கள் சாப்பாட்டு ராமி என்பார்கள். சுடச் சுட சாதத்தைப் போட்டு அதைவிடச் சூடான குழம்பை விட்டுப் பிசைந்து சாப்பிடச் சொல்வார்கள். கையெல்லாம் சூட்டில் தத்தளிக்கும். :)

  பதிலளிநீக்கு
 23. ரெடிமேட் சப்பாத்தியெல்லாம் கிடைக்கிறதா? ஆனால் வீட்டில் பண்ணும் சப்பாத்திக்கு ஈடு இணை ஏது? இடியாப்பம், சேவை எல்லாமும் கூட வீட்டில் பண்ணுவது தான் பிடிக்கும். :) அதிலும் நிச்சயமாய் பரோட்டா வீட்டில் தான். கடையில் விற்கும் புரோட்டா! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதைச் சாப்பிட்டால் வியாதி தான் வரும். :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!