Wednesday, January 7, 2015

அனுபவம் தந்த பாடம்! செவ்வாய் அணிந்தது என்ன?


பெங்களூரு மாநகரம். 

அது ஒரு செவ்வாய்க்கிழமை. என்னுடைய உடை அட்டவணைப்படி, அன்று நான் அணிய வேண்டிய சட்டை சிவப்பு அல்லது அதன் உடன் உறையும் வண்ணம் கொண்ட சட்டை. என்னுடைய செல்வ மகள் எனக்கு சிவப்பு நிறத்தில், இரண்டு டீ சர்ட்டுகள் வாங்கிக் கொடுத்திருந்தாள். 

அந்த சிவப்புச்சட்டைகளில் ஒன்றை அணிந்துகொண்டேன். பாண்ட் மட்டும் ஒரு வாரத்திற்கு ஒன்றாக அணிவேன். 

அன்று ஏதோ ஒரு பொதுவிடுமுறை நாள். 

மகனும், மருமகளும், பேரனும் ஷாப்பிங் கிளம்பினார்கள். 'வருகிறாயா?' என்று என்னைக் கேட்டார்கள். இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் வாய்த்தால், உடனே கிளம்பிவிடுவேன். கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக்கொண்டால், நிறைய பதிவுகள் எழுத விஷயம் கிடைக்கும்! 

இங்கே அங்கே என்று சுற்றி, பட்டியல்படி ஏதேதோ வாங்கினார்கள். ஃபோரம் முதல் ஃபோர் எம் வரை எத்தெத்தனையோ கடைகள். என்னென்னவோ செலெக்ஷன்கள். காலை நேரம் என்பதால், அதற்குள் வயிறு 'என்னை மறந்ததேன், நண்பனே, நண்பனே , என் நிலை சொல்லவா?' என்றது. 

உடன் வந்தவர்கள் எல்லோருக்குமே சிற்றுண்டிப் பசி வந்துவிட்டது. என் பையன் என்னிடம், "அடையார் ஆனந்தபவன் போகலாமா?" என்று கேட்டான். 

"அதுவரை வயிறு தாங்காதுடா!" என்றேன். 

"ஏன்?"

"இங்கேயிருந்து அடையார் 367.7 கிலோமீட்டரில் அல்லவா இருக்கிறது?" 

தலையில் அடித்துக்கொண்ட பையன், " அப்பா! எப்பவுமே நீ இப்படித்தான்! இதோ எதுத்தாப்புல இருக்கு பாரு A2B அதுதான் அ ஆ பவன்." என்றான், 

"ஓஹோ! அப்போ B2C போகவேண்டாமா?" 

"அப்படீன்னா?"

"பெங்களூர் டு சென்னை போகவேண்டாம் - இல்லையா!" 

"அ ப் பா !
"சரி, சரி! இதோ வந்துட்டேன்!" 

A2B யில் மெனுவை நோட்டமிட்டேன். 

சர்வர் வந்தார். 

"என்ன வேண்டும்?" 

"A2B" 

"What?"

" One Adai and 2 Bonda!" 

"In the same order?" 

"No 2 bonda first, Adai next" 

ஆஹா இன்றைய பொழுதிற்கு நிறைய விளையாட்டு வேடிக்கை நிகழ்த்தியாகிவிட்டது என்று நினைத்துக்கொண்டேன். 

சாப்பிட்டு, பில் பணம், டிப்ஸ் எல்லாம் கொடுத்துக் கிளம்பினோம். 
பிறகு எல்லோரும் ரிலையன்ஸ் பல் பொருள் அங்காடி ஒன்றிற்குச் சென்றோம். 

'ஓய்வு வேண்டும் என்று கால்களும், வயிறும் கெஞ்சியதால், கடையின் ஈசான்ய மூலையில் ஓர் ஓரமாக நின்றுகொண்டு, மற்றவர்களை ஷாப்பிங் முடித்து வரும்பொழுது, என்னையும் கலெக்ட் செய்து போகச் சொன்னேன். 

வருவோர், போவோர், வாங்கிச் செல்பவர்கள், வாங்காமல் செல்பவர்கள் என்று எல்லோரையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். 
  
ஒரு சின்னப்பையன் என்னிடம் வந்து, ஒரு விரலை உயர்த்திக் காட்டினான். நானும் சிரித்தபடி ஒரு விரலை உயர்த்திக் காட்டினேன். அவன் கலவரமாக என்னைப் பார்த்தபடி வாபஸ் ஆனான். பிறகு அவனே , ஜேசுதாசுக்குப் பிடிக்காத உடை அணிந்த ஒரு யுவதியுடன் வந்தான். அந்த யுவதி என்னருகே வந்து, சற்று முறைப்பாக, "where are the toilets?" என்று கேட்டாள். 

அவள் கேட்டதைப் பார்த்தால், நான் ஏதோ அங்கு இருந்த டாய்லெட்டை எடுத்து, யாருக்கோ விற்றுவிட்டதை, விசாரணை செய்யவந்த போலீஸ் அதிகாரி கேட்பதைப்போல இருந்தது.  

நிலைமை விபரீதம் ஆகிவிடும்போல இருந்ததால், நான் அவசரமாக,  "ஒந்தும் கொத்தில்லா! ஞான் அறிந்தபாடில்லா! நாகு தெலீது! ஐயோ ஐ டோண்ட் நோ !" என்றேன். 

அவள் என்னை விசித்திரமாகப் பார்த்தபடி, அந்த சின்னப்பையனை அழைத்துச் சென்றுவிட்டாள். 

அப்புறம் ஒரு முதிய தம்பதியினர் வந்தனர். அவர்களுக்கும் அதே விசாரம் போலிருக்கு. 

முதியவர் என்னிடம் வந்து, "பாத் ரூம் எல்லி?" என்று கேட்டார். 

அவர் வீட்டு பாத் ரூமில் எலி இருந்தால் அதை ஏன் இவர் என்னிடம் வந்து சொல்கிறார்? நான் ராட் பாய்சன் இருந்த பகுதிப் பக்கம் கையைக் காட்டி, அங்கே போங்க ராட் டிரைவர் ஈஸ் தேர்! என்றேன். 

அந்த முதிய பெண்மணி, தன் கணவரிடம், "நாந்தான் சொன்னேனே! இந்த ஊர்ல ஒருத்தனுக்கும் ஒண்ணும் தெரியாது; அவனவன் கடை யூனிஃபார்ம்  போட்டிருப்பான். ஆனா இந்தி தவிர வேற எந்த பாஷையும் பேசமாட்டான்னு!" என்று சுத்தத் தமிழில், சுந்தரமாகச் சொல்லிக்கொண்டே சென்றார்! 

'யூனிஃபார்மா!' 
    
    
 அட! அப்போதான் என்னுடைய உடையலங்காரத்தை கவனித்தேன். டார்க் கலர் பாண்ட், சிவப்புச் சட்டை! கடையில் இருந்த எல்லா ரிலையன்ஸ் ஊழியர்களும் அதே கலர் யூனிஃபாரம் அணிந்திருந்தனர்! 
           
   
இனிமேல், செவ்வாய்க்கிழமைகளில், ரிலையன்ஸ் கடைப் பக்கம்  போகவே கூடாது என்று உறுதி பூண்டுவிட்டேன்! 
        

14 comments:

Chokkan Subramanian said...

நகைச்சுவையா ஒரு பதிவு. சூப்பர். நீங்க நல்லா நகைச்சுவையோடு எழுதுறீங்க பாஸ். இன்னும் இந்த மாதிரி நிறைய எழுதுங்க. நல்லா இருக்கு.

Thulasidharan V Thillaiakathu said...

அஹஹஹஹ்ஹ் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது நண்பரே! செம ஹ்யூமர் சென்ஸ் உங்களுக்கு! ஏடுபி-அருமை...அதையும் ஆர்டர் செய்த டிஷ்ஷோடு,,ஹஹஹஹ்ஹ...அப்பா என்று டெசிபல் கூடியதை அழகாக ஃபான்ட் கூட்டிச் சொல்லியிருக்கீங்க பாருங்க ...பின்னிட்டீங்க....அந்த இடம்...நீங்கள் ஒரு சுவையான, அருமையான எழுத்தாளர் என்பதை நிரூபிக்கின்றது தங்களது எழுத்து நடை....

அப்போ ஒவ்வொரு தினமும் ஒரு கலரா...அந்த தினத்தில் அந்தக் கலரை மட்டும்தான் அணிவீர்களா...இப்படியும் ஒரு பழக்கமா.....பார்த்துங்க..அப்புறம் ஒரு நாளும் எந்தக் கடையும் போக முடியாதபடி ஆகிடும்.....

னிறைய எழுதுங்க இந்த மாதிரி....ஹுயூமர் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்....

திண்டுக்கல் தனபாலன் said...

அனுபவம் புதுமை... ஆனால், ஒரு பாடம்... ஹிஹி...

Umesh Srinivasan said...

A2B - அட அட பலே

G.M Balasubramaniam said...

நல்ல காலம் .அதே சிவப்புச் சட்டையுடன் ரயில் நிலையம் போகவில்லை.சென்றிருந்தால் போர்ட்டர் என்று நினைத்துக் கூப்பிட்டிருப்பார்கள் சரியா.?

kg gouthaman said...

அதானே !

kg gouthaman said...

நன்றி நன்றி

kg gouthaman said...

நன்றி . எழுதறேன் .

‘தளிர்’ சுரேஷ் said...

உடைக்குழப்பத்தில் எங்களுக்கு நல்லதொரு நகைச்சுவை விருந்து கிடைத்துவிட்டது! ஹாஹாஹா!

Ranjani Narayanan said...

டி வி எஸ் கம்பெனியின் என் கணவருக்கு கொடுக்கப்பட்ட யூனிபாரம் நினைவுக்கு வருகிறது. 'தப்பித்தவறி பெட்ரோல் பங்குல இறங்கிவிடக்கூடாது. நம்மிடம் வந்து பெட்ரோல் போடுப்பா என்பார்கள்' என்பார் என் கணவர்.
A2B., B2C எல்லாம் அட்டகாசம்!

கரந்தை ஜெயக்குமார் said...

சட்டையன் கலரால் இப்படியும் ஒரு பிரச்சினையா
ஆகா

சென்னை பித்தன் said...

வாய் விட்டுச் சிரித்தேன்!சூப்ப

nagai ranganathan said...

soooper

Geetha Sambasivam said...

ஹிஹிஹிஹி, ஜாலியா இருந்தது, :)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!