திங்கள், 14 மார்ச், 2016

'திங்க'க்கிழமை 160314 :: வெல்லக் காரடை.

   
இன்று காரடையான் நோன்பு அல்லவா?

அதற்கான சிறப்புப் பதிவு இது.

நன்றி: செந்தில்வயல். ("உங்களுக்காக" வலைத்தளம்)

தானியங்களுக்கே உரித்தான உயர்ந்தரக புரதச்சத்து, குறைந்த கொழுப்பு, உயர்ந்த நார்ச்சத்து, நிறைந்த பொட்டாசியம், குறைந்த சோடியம் என சத்துக்களின் பெட்டகமாக விளங்குவது காராமணி. மிகமிக சுலபமாக வேகக்கூடிய தன்மை வாய்ந்தது.

தொடுபதத்தில் மிகமிக மென்மையானதும், மணத்தில் மிகமிக சிறந்ததுமான காராமணி, சைவ உணவு உட்கொள்வோருக்கு உயர்ந்த ரக புரதச் சத்தையும், நார்ச்சத்தையும் வாரி வழங்க வல்லது.




காராமணியின் சுவையோ சுவை
வெறும் வாணலியில் மிதமான தீயில் கை பொறுக்கும் சூட்டில் காராமணியை வறுப்பதானது அதன் மணத்தை அதிகரிக்கும். காராமணியை தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து விட்டு, வெறும் வாணலியில் வறுத்து, பிரஷர் குக்கரில் நேரிடையாக சிறிது தண்ணீருடன், ஒரு விசில் விட்டு குழையாமல் வேக வைத்து உபயோகிக்கலாம், அல்லது தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து, வறுத்து, குக்கரில் தண்ணீருடன் 2 அல்லது 3 விசில் விடும் வரையும் வேக வைக்கலாம்.
இயற்கை இனிப்பும், இரும்புச்சத்தும் நிறைந்த வெல்லம், மணத்தையும், செரிமானத்தையும் அதிகரிக்கும். ஏலக்காய்த்தூள், பதப்படுத்தப்பட்ட பச்சரிசி மாவு, மிதமான கொழுப்புச் சத்து நிறைந்த சில தேங்காயத் துண்டுகள் மற்றும் நெய் உபயோகித்து இம்முறை வெல்லக் காராமணி காரடை செய்வோமா?

இனிப்புக்காராமணி காரடை

தேவையான பொருட்கள்
வெள்ளைக்காராமணி – 1/2 கப்
பச்சரிசி மாவு – 1 கப்
வெல்லம் – 11/4 கப்
பொடியாய் அரிந்த தேங்காய் துண்டுகள் – 12
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
நெய் – 6 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
செய்முறை
* தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்த காராமணியை நீர் வடித்து வெறும் வாணலியில் மிதமான தீயில் வாசனை வர வறுத்து, பிரஷர் குக்கரில் ஒரு விசில் விட்டு குழையாமல் வேக வைக்கவும்.
* வெல்லத்தை அரை கப் தண்ணீரில் கொதிக்க வைத்து பின்னர் தூசு போக வடிகட்டவும்.
* அடிகனமான ஒரு வாணலியில் பதப்படுத்தப்பட்ட அரிசி மாவை சிறு தீயில் இளஞ்சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* வாணலியில் நெய் ஊற்றி வேக வைத்த காராமணி, தேங்காய்த் துண்டுகள் இவற்றை சற்றே வறுக்கவும். பிறகு 2 கப் தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* நீர் கொதிக்கையில் வறுத்த பச்சரிசி மாவை தூவினாற்போல் சேர்த்து கட்டி தட்டாமல் நன்கு கிளறவும்.
* பச்சரிசி மாவு முக்கால் பதம் வெந்ததும், வடிகட்டி வைத்துள்ள வெல்ல நீர் சேர்த்து, விடாமல் நன்கு கிளறி இறக்கி வைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து ஆற வைக்கவும்.
* ஆறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வடை போன்று தட்டி நடுவில் ஓட்டை போடவும்.
* இட்லித் தட்டில் காரடைகளை அடுக்கி, 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து பரிமாறவும்.
உபயோகமான குறிப்பு
* பதப்படுத்தப்பட்ட பச்சரிசி மாவு தயாரிக்க பச்சரியை நன்கு களைந்து 5 அல்லது 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்தெடுத்து நிழலில் ஒரு சுத்தமான துணியில் உலர்த்தி, காய்ந்ததும் மிக்சியில் பொடித்து சலித்து உபயோகிக்கவும்.
சுவைக்கான குறிப்பு
* வெல்லக் காரடையின் மேல் உருகாத வெண்ணை சிறிதளவு போட்டு உண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
* இயற்கை இனிப்பு சுவையுடன், சக்தியும் சத்தும் மிகுந்த வெல்லக் காராமணி காரடை ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமும் மிகுந்தது!
கீதா பாலகிருஷ்ணன். 
நன்றி: senthilvayal.com  
     

20 கருத்துகள்:

  1. நாங்க சிவப்புக்காராமணி தான்போடுவோம். அல்லது முழுத் துவரை. என் அம்மா வைக்கோலில் வேக வைப்பார். இப்போல்லாம் வைக்கோல் மாடுகளுக்கே கிடைக்கிறதில்லை. அதிலும் அறுவடைக்கு மிஷின் வந்தப்புறமா வைக்கோல் துண்டு துண்டாகி விடுகிறது. ஹிஹிஹி, எங்கேயோ போயிட்டேனோ! என்னோட செய்முறை அப்புறமா. இப்போ எல்லாம் செய்து முடிச்சுட்டு ராகு காலம் போறதுக்காக உட்கார்ந்திருக்கேன். :)

    பதிலளிநீக்கு
  2. இந்த கீதா பாலகிருஷ்ணன் மங்கையர் மலரில் மற்றும் தொலைக்காட்சிகளில் வரவங்க தானே! அவங்களோட முறை எப்போவுமே கொஞ்சம் மாறுபடும். சாந்தி பலராமன் கிட்டத்தட்ட நாங்க செய்யறாப்போலத்தான் சொல்வார். :)

    பதிலளிநீக்கு
  3. இன்றைய தினத்துக்கு ஏற்ற நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா அருமையான செய்முறை விளக்கம் ...

    பதிலளிநீக்கு
  5. ரெசிப்பியில், வெங்காயத்தூள்???!!!! பெருங்காயத்தூள் என்பது இப்படித் தட்டச்சாகிவிட்டதோ? அப்படியே இருந்தாலும் வெல்ல அடைக்குப் பெருங்காயத்தூள்??!!! இடிக்குதே ஸ்ரீராம்..

    இங்கு வெல்ல அடை, கார அடை செய்து சாப்டாச்சு.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அதானே, நானும் இந்த வெங்காயத் தூள் பத்திக் கேட்க நினைச்சு மறந்துட்டேன். :) விரத தினத்தன்று வெங்காயத் தூளெல்லாம் சேர்க்கமாட்டாங்க! அது உப்பு அடையாகவே இருந்தாலும்! வெல்ல அடையில் வெங்காயத் தூள்! சகிக்காது! :))))

    பதிலளிநீக்கு
  7. அந்த பிளாகில், வெங்காயத் தூள் என்று தவறாக அச்சாகி இருந்தது. கொஞ்சம் கவனித்து செய்முறை விளக்கத்தைப் படித்துப் பார்த்தேன். அது ஏலக்காய்த் தூள் என்று தெரிந்துகொண்டேன். திருத்தி விட்டேன். தவறைச் சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ஸாரி ஸ்ரீராம், கேஜிஜி சார்....எங்கள் பதிலில் ஸ்ரீராம் நு சொல்லிட்டோம்...

    அதானே பார்த்தேன்...ஏலக்காய் தூள்..ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  9. எங்கள் பக்கத்தில் இதை இலை அடை என்பார்கள் நோன்புக்கு மட்டுமல்ல தோன்றும் போதெல்லாம் செய்வோம்

    பதிலளிநீக்கு
  10. இதை அடை என்றும் சொல்லலாம்தானே.... எனது பதிவு 7 ½ காண வாருங்கள் நண்பரே..

    பதிலளிநீக்கு
  11. அருமையான காரடை செய்ய வைக்கும் பதமான பதிவு. நன்றி ஸ்ரீராம். உப்பு அடை செய்தால் இன்னும் சுவை.

    பதிலளிநீக்கு
  12. 'திங்க'கிழமையில் கெஸ்ட் பதிவா? என்னைப்போலவே இவரும் அரிசி மாவில் செய்திருக்கிறார்.
    @கீதா //வைக்கோலில் வேகவைப்பது// என்றால் என்ன?
    @வல்லி, இனிப்பு அடைக்குத் தொட்டுக்கொள்ள கார அடை! அப்படித்தானே?

    பதிலளிநீக்கு
  13. இட்லித் தட்டில் வைக்கோலைப் பரவலாகப் போட்டு அதில் காரடைகளை வேக வைப்பது உண்டு. எனக்குத் தெரிந்து என் அம்மா எழுபதுகளின் கடைசி வரை இப்படித் தான்செய்திருக்கிறார். அதே போல் கடைகளில் வாங்கும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட அரிசிமாவை இம்மாதிரியான முக்கிய விசேஷங்களில் எங்க வீடுகளில் பயன்படுத்துவது இல்லை. கோகுலாஷ்டமிக்கு பக்ஷணம் செய்தாலே முதல்நாள் மிஷினில் திரித்த மாவில் செய்தால் மறுநாள் பண்டிகை அன்று கொஞ்சம் போல் அரிசியை ஊற வைத்து மாவாக்கி நிவேதனத்திற்கெனத் தனியாகவே பக்ஷணங்கள் செய்வோம். இன்று வரை அப்படித் தான் செய்து வருகிறேன். :)))) மாற்றிக்க முடியலை; மாறத் தோன்றவும் இல்லை! :)))))

    பதிலளிநீக்கு
  14. நல்ல குறிப்பு. திங்களன்று செய்து பார்க்க நினைத்தேன்.. நேரமில்லை! :)

    விடுமுறை நாளில் செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!