செவ்வாய், 18 ஜூன், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை : மனசுக்குள்ளே மகிழம்பூ.. - துரை செல்வராஜூ

மனசுக்குள்ளே மகிழம்பூ
துரை செல்வராஜூ 

கண்ணுக்கு எட்டிய வரையிலும்
மரகதக் கம்பளம்  விரித்தாற்போல வயல்வெளி...

அதன் ஊடாக ஒற்றைச் சாலை..
இருமருங்கும் அப்படியும் இப்படியுமாக புதிய தலைமுறையின் நிழல் மரங்கள்...

அந்தப் பக்கம் புகழ் பெற்ற திருத்தலம்...

அங்கிருந்து தெற்கு நோக்கி வந்த அந்தக் கார் மேற்காகத் திரும்பி பிரம்மாண்டமாக விரிந்திருந்த வாகை மரத்தின் நிழலில் நின்றது...

சாலையின் தெற்கில் காவிரி...
அதன் கரையில் நின்றிருந்த வாகை மரத்தின்
பெரிய பெரிய வேர்கள் ஆற்று நீருக்குள் ஊடுருவியிருக்க - 

பசுந்தளிர்க் கிளைகளோ
அந்தச் சாலையில் நிழல் விரித்திருந்தன...

சாலையின் வடபுறம்...  அங்கும்
இலைக் கூடாரமாக நிழல் மரம் ஒன்று...

அந்த நிழல் மரத்தின் கீழாகக் கூரை வேயப்பட்ட கடை...
பழங்கூரைக்கு பச்சைப் பட்டு போர்த்தினாற் போல சுரைக் கொடிகள்...

கிராமத்துத் தேநீர்க் கடை... பின்புறம் வீடு...

கடை வாசலில் சில பெஞ்சுகள்...

அவற்றில் ஒரு சில ஆட்கள்...

தேநீர்க் கடையின் மேடையில்
அந்தக் காலத்து பாய்லர்...

புளி போட்டு விளக்கியதில் பளபளப்பு ஏறி இருந்தது... அதன்  முகப்பில் சந்தனமும் குங்குமப் பொட்டும்... கைப்பிடியில் ஒரு முழம் மல்லிகைச் சரம்...

பாய்லரின் கீழ் தீக்கங்குகள் கனன்று கொண்டிருந்தன..

பாய்லரின் அருகில் சிறிய ஸ்டவ்..
அதன் மீது நடுத்தரமான எவர் சில்வர் டவரா..
அதில் தளதளத்துக் கொண்டிருக்கும் தண்ணீரில் பால் பாத்திரம் ஒன்று...

பால் பாத்திரத்தை நேராக அடுப்பில் வைக்காமல் இப்படி கொதி நீரில் வைத்து சூடாக்குவது தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வழக்கம்...

'' இந்தக் கடையிலயா!...''

'' ஆமாம்!...''

'' அங்கே பார்... அந்தக் கடையும் அதன் அழகும்...
மாட்டுக் கொட்டகை... சாணி.. சகதி!.. ரெண்டு கறுப்பு நாய்!...
உனக்கு இதெல்லாம் ஒத்து வராது!....''

'' இங்க தாங்க..  நல்லா இருக்கும்... ம்ம்.. எறங்குங்க...
டிரைவர் அண்ணா.. நீங்களும் வாங்க...''

காரின் கதவைத் திறந்து கொண்டு கையில் குழந்தையுடன் இறங்கினாள் திவ்யா...

'' உங்கூட பேச முடியாதே?...''

முணுமுணுத்தபடி இறங்கினான் செந்தில்...

டிரைவரும் இறங்கி வந்தார்..

சாலையின் ஓரமாக தஞ்சாவூர் செல்லும் பேருந்து ஒன்று வந்து நிற்க  -
கண்டக்டர் சத்தம் போட்டார்..

'' திங்களூர்... திங்களூர்... கோயிலுக்குப் போறவங்க இங்கே இறங்கிக்குங்க... என்னது?.. மினி பஸ்ஸா?... அதெல்லாம் கிடையாதுங்க... ஆட்டோ நிக்குது பாருங்க... அது கோயில் வாசல் வரைக்கும் போகும்.... ரைட்.. ரைட்!...''

புகையைக் கக்கியபடி பெருஞ்சத்தத்துடன் பேருந்து நகர்ந்தது...

திவ்யாவும் பிரபுவும் டீக்கடையை நோக்கிச் செல்ல -

டீக்கடை  வாசலில் அங்குமிங்குமாக நின்றிருந்தவர்கள் - ஒரு ஓரமாக ஒதுங்கி வழி விட்டார்கள்...

டீ பாய்லரின் அருகில் குங்குமப் பொட்டுடன் நின்றிருந்தவர் -

'' உள்ளே வாம்மா!..''  - என்றார் வாஞ்சையுடன்...

'' சித்ரா.. சித்ரா!... ''

'' என்னப்பா?..'' - உள்ளிருந்து ஓடி வந்த அந்தப் பெண் -

'' உள்ள ஒரு நாற்காலியைப் போடும்மா!....''

'' வாங்க அக்கா!..'' - என்றபடி மடக்கு நாற்காலியை விரித்துப் போட்டாள்...

ஆண்டாண்டு காலமாகப்  பழகிக் களித்த
சொந்தம் ஒன்றைக் கண்ட மகிழ்ச்சி  - அந்தப் பெண்ணின் கண்களில்...

அதற்குள் -
'' என்னங்க!.. திருச்சிக்கு போற வரைக்கும் அருண் பசி தாங்க மாட்டான்...
பால் கொஞ்சம் கிடைக்குமா... கேளுங்களேன்...''

அதைக் காதில் வாங்கிய டீக்கடைக்காரர் -

'' அதுக்கு என்னம்மா!... வாங்கிக்கலாம்... பிளாஸ்க் இருக்குதா?...''

'' இருக்குதுங்க....''

'' சாலாட்சி...''

'' என்னங்க..'' - வீட்டுக்குள்ளிருந்து மனையாளின் குரல்..

'' குழந்தைக்குப் பால் வேணுமாம்... செவலக்கிட்ட ரெண்டு காம்பு பீய்ச்சி லேசாக் காய்ச்சிக் கொடு...''

'' சரிங்க...''

'' பால் பிரச்னை ஓக்கே...
நீங்க என்ன சார் சாப்பிடுறீங்க?....''

'' என்னல்லாம் இருக்கு?...''

டீக்கடையின் பின்புறம் அடுப்படியிலிருந்து
வடையின் வாசம் வந்து கொண்டிருந்தது...

'' அசோகா, மிக்சர், மெதுவடை, வாழைக்காய் பஜ்ஜி... அப்புறம் டீ, காபி...''

'' வடையும் பஜ்ஜியும் கொடுங்க.... பத்து நிமிஷம் கழித்து காஃபி....'' - என்றான் செந்தில்..

அடுத்த சில நிமிடங்களில் சூடாக வடையும் பஜ்ஜியும் - கமகமக்கும் தேங்காய் சட்னியுடன்...

காவிரி நீருடன் விளையாடிய காற்று சில்லென்று கரையேறி கடைக்குள் புகுந்தது...

'' தஞ்சாவூர் டிகிரி காஃபி.. ந்னு சொல்றாங்களே.. கிடைக்குமா?..'' - வினவினான் செந்தில்....

'' டிகிரி காஃபியா!.. அது கறந்த பால்..ல போடறது..
இப்போ மணி பத்தரை.. இந்நேரத்துக்கு சரி வராதே!...
இருந்தாலும் போட்டுத் தாரேன்... குடிச்சுப் பாருங்க....''

'' வாசல்ல கட்டிக் கிடக்குற மாடுகள் உங்களுதா...

'' ஆமாம்.. நான் வெளியில இருந்து பால் வாங்குறது இல்லை..
அப்புறம் உழவு மாடுகள் வேற இருக்கு... பதினைஞ்சு ஆடு வாரத்துக்கு விட்டுருக்கேன்... திருப்பழனத்துல பத்து ஏக்கர் நஞ்சை...''

'' இதெல்லாம் இருந்துமா டீக்கடை!?...'' - செந்திலுக்கு ஆச்சர்யம்...

'' அதுக்காக சும்மா இருக்க முடியுமா?...
வெட்டி அரட்டை விபரீதமாச்சே!...

வயக்காட்டு வேலைக்கு அப்புறம் இதுதாங்க நமக்கு ஜீவன்...

மழையும் தண்ணியும் ஒரு சமயம் கொடுக்கும்... ஒரு சமயம் கெடுக்கும்...
அப்படிப்பட்ட நேரத்துல கை கொடுக்குறது இந்த அடுப்பும் பாய்லரும் தான்...

பதினைஞ்சு பவுன் போட்டு பெரிய மகளை கபிஸ்தலத்துல கட்டிக் கொடுத்திருக்கேன்...

சின்ன மக அடுத்த வருசம் காலேஜ் போகப் போறா...

இதெல்லாம் இந்த அடுப்பு கொடுத்த கொடை...
இந்தக் கொடைய நான் மட்டும் வச்சுக்கலாமா!..
பிறத்தியாருக்கும் கொடுக்க வேணாமா?...

ஏதோ என்னால ஆனது - மத்தவங்களுக்கு ஒத்தாசை....
நல்லதா நாலு வார்த்தை...''

அது வரைக்கும் வாசல் பெஞ்சில் அமைதியாக அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் பேசினார்...

'' வருசா வருசம் சித்ரா பௌர்ணமி கோயில் திருவிழா... ஒரு டீக்கடைக் காரன் என்ன செய்வான்?... பலவிதமா பலகாரம் பண்ணி நாலு காசு சேர்ப்பான்.. அதுதான் நாட்டு நடப்பு.. ஆனா, நம்ம சாமிநாதன் டீக்கடைய இழுத்து மூடிட்டு மூனு நாளைக்கு பொங்கல் புளியோதரை, நீர் மோர், பானகம்.. ன்னு அன்ன தானம் செய்வான்...''

'' அப்பூதி அந்தணர்... ந்னு அடியார் ஒருத்தர் அன்னதான சத்திரமும் தண்ணீர் பந்தலும் வைச்சு வாழ்ந்த ஊர் இது....  அவரோட வீட்டுல அப்பர் சாமி சாப்பிட வந்த நேரத்தில பாம்பு கடிச்ச பையனைக் காப்பாத்திக் கொடுத்ததா வரலாறு...

அப்படிப்பட்ட மண்ணோட வாசம் மனச விட்டுப் போகுமா!...''

பெரியவர் மண்ணின் பெருமையைப் பேசினார்...

சாமிநாதன் தொடர்ந்தார்...

'' நம்ம தர்மத்தை நாம தான் காப்பாத்த வேணும்.. ன்னு,
எங்கப்பா சொல்லிக்கிட்டு இருப்பாரு....''

'' நம்ம வீட்டு உலை நம்ம உழைப்பால கொதிக்கணும்....

அப்படி இல்லாம ... ஊர அடிச்சு உலையில போட்டா 
கோர்ட்டு வாசல்.... லயும் ஆஸ்பத்திரி வாசல்... லயும் தான்
பொழுதைக் கழிக்கணும்...''

என்றபடி,  டிகிரி காஃபியை முன்னால் வைத்தார்...

காஃபியை மெல்ல உறிஞ்சியபோது செந்திலின் கண்கள் கலங்கின...

மெல்ல கைக்கடிகாரத்தை நோக்கினான்...

'' சரி... நாங்க புறப்படுறோம்...'' - என்றபடி ஐம்பது ரூபாயை நீட்டினான்....

'' என்ன இது?..''

'' நாங்க சாப்பிட்டதுக்கு....''

'' கொஞ்சம் இருங்க....'' - என்றபடி சாமிநாதன் வீட்டுக்குள் சென்றார்..

திரும்பி வந்தபோது அவர் கையில் பிளாஸ்டிக் டப்பா ஒன்று இருந்தது...

'' இது தஞ்சாவூர் அசோகா....  வீட்டு நெய்யில செஞ்சது....''

'' திருவையாறு அசோகா...ன்னு தானே பேரு... நீங்க தஞ்சாவூரு... ன்னு சொல்றீங்களே...''

'' தம்பி... இது தஞ்சாவூர் பாரம்பர்யம் தான்... திருவையாத்துக்காரங்க செஞ்சு விளம்பரம் ஆனதால திருவையாறு அசோகா....
எனக்கு வாய்ப்பும் வசதியும் இருந்தா இது திங்களூர் அசோகா!..''

மனம் விட்டுச் சிரித்தார் சாமிநாதன்...

கையிலிருந்த ஐம்பதை மாற்றி நூறு ரூபாயை நீட்டினான் செந்தில்....

'' என்ன இது?...'' - மறுபடியும் கேட்டார் சாமிநாதன் ...

'' நாங்க சாப்பிட்டது... இந்த அசோகா எல்லாத்துக்கும்!...''

மெல்லச் சிரித்தார் சாமிநாதன்....

'' கையில குழந்தையோட இந்தப் பொண்ணு நடந்து வந்தப்ப
கபிஸ்தலத்துல இருக்கிற எம் மக  வர்ற மாதிரியே இருந்துச்சு...
அப்படி இருக்க.. உங்க கிட்ட காசு வாங்குவேனா!...''

செந்திலுக்கு வியப்பு மேலிட்டது...

'' ஒரு தொழில் நடத்துறவங்க எல்லார்கிட்டயும் இப்படி இருக்க முடியுமா?...''

'' முடியாது தான்... ஆனா மனசுக்குள்ள மகிழம்பூ எப்போதாவது தானே பூக்குது!...''

'' சந்தோஷமா புறப்படுங்க....
போற வழியில யாராவது ஒரு ஏழைக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்க!....''

'' போய்ட்டு வர்றோம் அப்பா!...''

கையில் குழந்தையுடன் திவ்யா கைகூப்பிய போது -
சாமிநாதனின் கண்களில் நீர் திரண்டிருந்தது..

76 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம்..
  கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் இனி வரவிருக்கும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
  2. அனைவருக்கும் வணக்கம், வரவேற்ற துரை, இனி வரவேற்கப் போகும் அனைவருக்கும் நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

   நீக்கு
 2. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்

  ஆஹா துரை அண்ணாவின் கதை. தலைப்பே கவித்துவமாகத்தான் இருக்கும்

  மகிழம்பூவின் மணத்தை நுகர வருகிறேன். அண்ணாவின் கதை பாசிட்டிவாகத்தான் இருக்கும்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> மகிழம்பூவின் மணத்தை நுகர வருகிறேன்...<<<

   சீக்கிரமாக வரவும்...
   அசோகா, மிக்சர், மெதுவடை, வாழைக்காய் பஜ்ஜி, தேங்காய்ச் சட்னி.. அப்புறம் டீ, காபி.. எல்லாமும் உண்டு...

   நீக்கு
  2. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

   நீக்கு
  3. துரை அண்ணா உங்க கதைய வாசிக்க கூடவே நொறுக்குத் தீனியும் டிஃபனுமாஆஹா வந்துட்டேன் பின்ன திங்க ந்றத பார்த்ததுமே வந்துடுவோம்ல!!! ஹ ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  4. துரை அண்ணா மத்தியானமா வரவங்களுக்கு (அதான் தேம்ஸ் காரங்களுக்கு அவங்க வந்தா அதுவும் பூஸாருக்கு பத்திய சாப்பாடு போட்டுருவோம் உடம்பு வேற சரியில்லைனாங்க..) சாப்பாடுதானே!! நோ ஸ்னாக்ஸ்!!

   அது சரி சாப்பாடுனா உங்க ஊர்ல தண்ணிக்குக் கஷ்டம் இல்லைதானே...

   சென்னைல எல்லாம் ஏதோ மதிய சாப்பாடு எல்லாம் கட் ஆமே உணவகங்களில் ஸ்ரீராம் அம்மாவின் தளத்தில் சொல்லியிருந்ததை பார்த்தேன்

   கீதா

   நீக்கு
  5. வெற்றுக் குடங்களுடன் வீதியில் நடப்பதெல்லாம் முக்கியமாக சென்னை மற்றும் சில பகுதிகளில் தான்....

   எங்கள் தஞ்சாவூர் பக்கம் எல்லாம் நிலத்தடிநீர் சரிவு தானே தவிர முழு வறட்சி எல்லாம் இல்லை...

   கூடிய விரைவில் தமிழகம் முழுவதையும் ஒரே சீராக ஆக்கி வைக்காமல் ஓயமாட்டார்கள் - அரசு அலுவலர்களும் அரசியல் வாதிகளும்...

   நீக்கு
 3. பால் பாத்திரத்தை நேராக அடுப்பில் வைக்காமல் இப்படி கொதி நீரில் வைத்து சூடாக்குவது தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வழக்கம்...//

  இந்த வரிகள் வரை அப்படியே ஒரு சீன் ப்ளஸ் அந்தக் குறிப்பிட்ட ஷாட்டுக்கு என்ன தேவை என்பதான விளக்கமான குறிப்புகள் போல விவரணம் ஆஹா என்று போட வைத்து கண் முன்னே எனக்கு ஒரு படம் விரிவது போல இருந்தது. பெரும்பாலும் குறும்படத்தில் ப்ராப்பார்ட்டிஸ் பார்ப்பது என் வேலை நான் அதில் கொஞ்சம் நுணுக்கமாகக் கவனம் செலுத்துபவள் உடை முதல்...

  அப்படித் தோன்றியது அண்ணாவின் விவரணம்...சூப்பர்...ரசித்தேன்...மீண்டும் வருகிறேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா..
   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி .. நன்றி..

   நீக்கு
  2. புனிதம் என்று இல்லை. ஒருமுறை பால் சாதாரணமாகி காய்ச்சியானபின் அடுத்த முறை காய்ச்சினால் ஒரு வாசனை வரும் அல்லது வேறு காரணங்களால் இப்படி ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து அதில் பால் பாத்திரம் வைத்து சூடு செய்வோம்! இரண்டாம் டோஸ் காஃபி, மூன்றாம் டோஸ் காஃபி இதெல்லாம் இப்படிதான் செய்வோம் முன்பு.​

   நீக்கு
 4. எளிய ஜனங்களை அறிமுகப்படுத்துவது, அவர்களுக்குள் நடக்கும் இயல்பான உரையாடல், அன்பு த்தும்பும் கிராம்ம்.... படிக்க மிகவும் திருப்தி தரும் கதை.

  நல்லா எழுதியிருக்கீங்க துரை செல்வராஜு சார்... பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை ... தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி...

   பழக்க வழக்கங்களும் மக்களின் மனோபாவமும் வெகுவாக மாறிப் போயின.. ஆனாலும் சுவாமிநாதனைப் போன்ற சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர்...

   மகிழ்ச்சி.. நன்றி....

   நீக்கு
 5. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  மகிழம்பூ வாசம் போல மென்மையான தஞ்சைக் கதை.
  இது போல ஒரு மனமா.

  அனைவரின் கருணை வெள்ளமும் சேர்ந்து அற்புதங்கள் நடந்த
  ஊரின் ஈரத்தில் பிறந்த சாமினாதன் அவர்களின் மேன்மையை எத்தனை
  பாராட்டினாலும் தகும்.

  அன்பினால் அனைவரையும் பேணும் பண்பு
  இன்னும் பல உயிர்களை ஓம்பும். கண்முன் காட்சி வளர்கிறது. இதை யாராவது சித்திரமாக்க மாட்டார்களா என்று ஆசை பிறக்கிறது.

  நேர்மறை எண்ணங்கள் பூரிக்க துரை செல்வராஜு கொடுத்திருக்கும்
  இந்தக் கதையை கதை
  என்று நினைக்க முடியவில்லை.
  காவிரி அருள் எங்கும் நிறையட்டும்.
  மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> அன்பினால் அனைவரையும் பேணும் பண்பு...<<<

   இன்னும் பலரிடம் இந்தப் பண்பு இருக்கின்றது
   அதனால் தான் அம்மா - இந்தப் பூமி உயிர்ப்புடன் இருக்கின்றது..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. என்றும் வாழ்க வளமுடன்.அன்பின் துரை.

   நீக்கு
 6. கதையைப் படிக்கும்போதே படம் பார்ப்பது போன்ற உணர்வு...

  திருவிழா அன்னதானம் என்றவுடன், சமீபத்தில் காஞ்சீபுரத்தில் கருடசேவையின்போது மினி லாரி வைத்துக்கொண்டு ஒருவர் (சிலர்?) புளியோதரைப் பொட்டலம், லட்டு பொட்டலம் போன்றவற்றை விநியோகம் செய்ததைப்்பார்த்தது ஞாபகத்தில் வருது. 100 அடி தூரத்தில் கருடசேவைக்குள்ள கூட்டத்தில் கால் பங்கு, வழியில் லட்டு பாக்கெட், புளியோதரை சிதறிக் கிடந்தது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை...

   சிறுகதைக்கான கருத்துரை கண்டு மகிழ்ச்சி..

   >>> 100 அடி தூரத்தில் கருடசேவைக்குள்ள கூட்டத்தில் கால் பங்கு, வழியில் லட்டு பாக்கெட், புளியோதரை சிதறிக் கிடந்தது..<<<

   தாங்கள் சொல்வது மிகவும் சரி...

   திருமலையில் பெருமாளைத் தரிசனம் செய்து விட்டு வரும் அன்பர்களுக்கு சந்நிதியின் வடக்குப் பக்கத்தில் புளியோதரை பொங்கல் என - அன்ன பிரசாதம் வழங்குகின்றார்கள்...

   அந்த இடத்திலேயே ப்ரசாதத்தைச் சிதறியடித்திருப்பார்கள்...

   வடக்கத்தியருக்கு புளியோதரை பிடிக்காதோ?...

   அந்தப் பிரகாரத்தைப் பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்...

   நீக்கு
  2. அந்தப் பிரசாதங்களை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அங்குள்ள குழாய்களில் கை அலம்பிக்கொண்டு கோவில் வெளியே வரும் வரையில் தரை வழுக்கிடக்கூடாதே, எண்ணெய்ப் பசையில் என்று ஜாக்கிரதை உணர்வு வரும். இத்தனைக்கும் தொன்னைநைப் போட ஏகப்பட்ட கூடைகள் வைத்திருப்பார்கள். 50,000 பேர்கள் ஒரு நாளையில்.. இவ்வளவு கட்டுப்படுத்தி நீட்டாக வைத்துக்கொள்வதே பெரிய வேலை எனத் தோன்றும்.

   நாளை மறுநாள் தரிசனம் முடித்து ஞாயிறு எழுதுகிறேன். விசாளன், வெள்ளி தளத்துக்கு வர முடியாது. சனி தாமதமாய். நாளை... தெரியலை. பார்த்தசாரதி கூப்பிட்டால் நேரமாகும்.

   நீக்கு
  3. ஓ... நீங்களும் வரமாட்டீர்களா? வெயில்.... வேலை... பயணங்கள்... எபி கொஞ்ச நாட்களாய் லேஸாய் டல்லடிக்கிறது இல்லை?

   நீக்கு
 7. அனைவருக்கும் காலை வணக்கம். ஆஹா! துரை சாரின் கதையா? வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 8. பால் பாத்திரத்தை நேராக அடுப்பில் வைக்காமல் இப்படி கொதி நீரில் வைத்து சூடாக்குவது தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வழக்கம்...//இது போல தான் மாமியார் பாலைக் காய்ச்சுவார். பாலின்
  புனிதம் கெடாமல் இருக்கும் என்பார்.
  நேராக அக்னி மீது பசுவின் பாலை வைப்பது பாவம் என்னும் சொல்லும்போது மனம் குழைந்து விடும். நன்றி துரை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> இது போல தான் மாமியார் பாலைக் காய்ச்சுவார். பாலின்
   புனிதம் கெடாமல் இருக்கும் என்பார்... <<<

   தன்யனானேன்... மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. துரையின் மனதைப் போலவே அருமையான மனிதர்களை மட்டுமே காட்டும் கதை! அருமையாக இருக்கிறது. நல்லவை மட்டுமே அவர் கண்களில் படுகின்றன. அன்னம் போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கா..
   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. //பால் பாத்திரத்தை நேராக அடுப்பில் வைக்காமல் இப்படி கொதி நீரில் வைத்து சூடாக்குவது தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வழக்கம்..// என் அம்மாவும் இப்படித் தான் பாலைக் காய்ச்சுவார். நேரடியாக அடுப்பில் வைத்துக் காய்ச்சுவதில் பாலின் குணங்கள் மாறுபடும் எனச் சொல்லுவார்கள். (நாங்க மதுரை! ) அதுவும் சிறு குழந்தைகளுக்கு என்றால் குமுட்டி அடுப்பில் தணலைப் போட்டுப் பெரிய பாத்திரத்தில் நீரை வைத்துப் பாலை அதில் வைத்திருப்பார்கள். காலையில் கறந்த பால் அன்று பகல் பதினோரு மணிக்குள்ளும், மாலை கறந்த பால் இரவு பதினோரு மணிக்குள்ளும் குழந்தைக்குக் கொடுக்கவேண்டும் என்றால் எடுத்துக் கொள்வார்கள். மிகுந்த பாலை உறை ஊற்றுவது உண்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> குமுட்டி அடுப்பில் தணலைப் போட்டுப் பெரிய பாத்திரத்தில் நீரை வைத்துப் பாலை அதில் வைத்திருப்பார்கள்.. <<<

   மழைக் காலத்தில் விறகுக் கட்டைகள் எல்லாம் ஈர வாடையுடன் இருக்கும் போது இந்த கும்முட்டி அடுப்புகள் தான் பெருந்துணை...

   கும்முட்டி அடுப்புகள் தந்த சந்தோஷத்தை மைக்ரோ ஒவனில் ஆகும் சமையல் கூடத் தருவதில்லை...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. துரை அண்ணா ஆஹா! சூப்பர். செந்திலும் திவ்யாவும் இறங்கியதும்.....சித்ரா பெண் நாற்காலியைப் போடவும்...//ஆண்டாண்டு காலமாகப் பழகிக் களித்த
  சொந்தம் ஒன்றைக் கண்ட மகிழ்ச்சி - அந்தப் பெண்ணின் கண்களில்...// இந்த வரியையும் வாசித்ததும் என் மனம் வேறு கணக்கு போட்டது. ஏதோ பிரிந்த சொந்தம், வருகை இப்போது மீண்டும் அந்த உறவு பலப்படுவது என்றெல்லாம் அதுவும் தலைப்பு வேறு மனசுக்குள்ளே மகிழம்பூ என்றதும் என் மனம் அப்படிப் போயிற்று.

  ஆனால் எந்த வித உறவும் இல்லாமல் கடைக்கு வந்திருப்பவர்களையே கூட உறவாகக் கருதி உணவு கொடுப்பதுதானே நம் எளிய மக்களின் மனம் என்பதைத்தான் அண்ணா சொல்றீங்க என்று இறுதியில் தெரிந்து கொள்ள முடிந்தது. எனக்கு என் கிராமத்து நினைவுகள் வந்தது அண்ணா..அங்கு இருந்தவரை ஊருக்கே ஒரு சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா,அக்கா, மாமா, அண்ணா அண்ணி, அம்மா, அப்பா என்றுதான் உறவு போல சொல்லிக் கூப்பிட்டுப் பழகிய எனக்கு, ஊரைவிட்டு வந்ததும் பொது இடங்களைத் தவிர, வீட்டருகே சார், மேடம் என்பதெல்லாம் ரொம்பக் கடினமாக இருந்தது பல வருடங்கள்.

  கதையை வாசித்ததும் புரிந்தது இது. இப்படியானதெல்லாம் இப்போது விட்டுப் போச்சே! மகிழம்பூ அருமையாக மணக்கிறது சாமிநாதனின் மனதில் மட்டுமல்ல. இதோ இங்கு வரை மணக்கிறது!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா,அக்கா, மாமா, அண்ணா அண்ணி, அம்மா, அப்பா என்றுதான் உறவு போல சொல்லிக் கூப்பிட்டுப் பழகிய.. <<<

   அப்படியான பாச பந்த உறவுகள் இப்போதெல்லாமல் போயிற்று..

   >>> மகிழம்பூ அருமையாக மணக்கிறது சாமிநாதனின் மனதில் மட்டுமல்ல. இதோ இங்கு வரை மணக்கிறது!..<<<

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 12. கதையில் சைக்கிள் கேப்பில் மண்ணின் பெருமையையும் ஊரைப் பற்றியும் சொல்லியது சூப்பர் அண்ணா.

  சாமிநாதனின் மனதையும்....

  எங்க வீட்டுல கூட நான் முதல் முறை மட்டுமே பாலை அடுப்பில் வைத்து நேரடியாகக் காய்ச்சுவேன். அப்புறம் காஃபி டீ என்றால் தேவையான பாலை கொதிநீரில் வைத்துத்தான் சூடு செய்வேன். நேரடியாக அடுப்பில் வைக்கும் பழக்கம் இல்லை அண்ணா.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 13. இதுவரைக்குமாக அனைவரது விமர்சனங்களையும் கண்டு மனம் நெகிழ்ந்து விட்டேன்...

  வேலைக்கு நேரம் ( விடியல் 4.30) ஆகிவிட்டது..

  சற்றுப் பொறுத்து வருகிறேன்....

  பதிலளிநீக்கு
 14. //ஊர அடிச்சு உலையில போட்டா
  கோர்ட்டு வாசல்.... லயும் ஆஸ்பத்திரி வாசல்... லயும் தான் பொழுதைக் கழிக்கணும்...//

  நிதர்சனமான உண்மை ஜி

  சாமிநாதனைப்போன்ற மாமனிதர்கள் இன்னும் சில இடங்களில் வாழத்தான் செய்கின்றார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 15. இன்னும் கொஞ்சம் தளங்கள் பார்த்துவிட்டு (பெண்டிங்க் ஹிஹிஹிஹி) பணிக்குப்போய் வந்தால் அப்புறம் மாலை வீட்டு வேலைகள் நாளை காலை பயணம். இனி அடுத்த செவ்வாய்தான் தளம் வர இயலும். எனவே இப்போதைக்கு டாட்டா பைபை.

  கீதா

  பதிலளிநீக்கு
 16. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 17. கதை ஆரம்பிக்கும் போது டீக்கடை காட்சிகள் அப்படியே கண்களில் காட்சியாக விரிந்து விட்டது.
  கதை நடந்த இடத்திற்கே நம்மை அழைத்து சென்று விட்டார்.
  உரையாடல் எல்லாம் அப்படியே காதில் ஒலிக்கிறது.

  ' போய்ட்டு வர்றோம் அப்பா!...
  கையில் குழந்தையுடன் திவ்யா கைகூப்பிய போது -
  சாமிநாதனின் கண்களில் நீர் திரண்டிருந்தது..

  என் கண்ணிலும் தான்.

  மிக அருமையான கதை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும்
   கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 18. நான் யார் பின்னூட்டங்களையும் பார்க்காமல் எழுதி அனுப்பி விட்டு அப்புறம் தான் மற்றவர்கள் பின்னூட்டங்களை படித்தேன். அவர்களும் என் கருத்து போலவே போட்டு இருக்கிறார்கள்.ஒத்த கருத்து கொண்ட அன்பர்கள் கூடும் இடம் அல்லவா!
  அன்பு அன்பு இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கிறது அதை அழகாய் தன் எழுத்துக்களால் எழுதி விடுகிறார் சகோ.
  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> ஒத்த கருத்து கொண்ட அன்பர்கள் கூடும் இடம் அல்லவா!.. அன்பு இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கிறது அதை அழகாய் தன் எழுத்துக்களால் எழுதி விடுகிறார் சகோ..<<<

   தங்கள் அன்பின் வருகையும் பாராட்டுரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 19. //'' அப்பூதி அந்தணர்... ந்னு அடியார் ஒருத்தர் அன்னதான சத்திரமும் தண்ணீர் பந்தலும் வைச்சு வாழ்ந்த ஊர் இது.... அவரோட வீட்டுல அப்பர் சாமி சாப்பிட வந்த நேரத்தில பாம்பு கடிச்ச பையனைக் காப்பாத்திக் கொடுத்ததா வரலாறு...

  அப்படிப்பட்ட மண்ணோட வாசம் மனச விட்டுப் போகுமா!...''

  பெரியவர் மண்ணின் பெருமையைப் பேசினார்...//

  அருமை அருமை. மண்ணின் பெருமை தலவரலாறு எல்லாம் வந்து விட்டது.
  திங்களூர் கோவிலும் அங்கு இருக்கும் ஆலமரமும் அந்த மரத்தில் திருநாவுக்கரசு என்று எழுதி இருப்பது எல்லாம் என் மன கண்ணில் வந்து போகுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> மண்ணோட வாசம் மனச விட்டுப் போகுமா!..<<<

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 20. என் மகள் போல இருந்தது...போய்ட்டு வரேன் அப்பா...நெகிழவைத்துவிட்டார் கதாசிரியர்.அவருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் பாராட்டுரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 21. அருமையான நடையில் நெகிழ்வான கதை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 22. பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 23. தஞ்சை அருகில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு சென்று வந்த உணர்வு. டீக்கடை வர்ணனை மட்டுமல்ல உரையாடல்களும் யதார்த்தம். படித்து முடித்ததும் மனம் குழைந்து விட்டது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் பாராட்டுகளும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 24. கொஞ்சம் கிராமம்.. கொஞ்சம் பாரம்பர்யம்.. கொஞ்சம் மனசு.. நல்லாருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஏகாந்தன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 25. துரை செல்வராஜூ சாருக்கென்று ஒரு எழுத்து ஸ்டைல் இருக்கு. மாத்தி மாத்தி போட்டு வேறுபாடு காட்ட நினைச்சு அவர் எழுத முயற்சித்தாலும் அந்த ஸ்டைல் உள்ளேயே பதுங்கி இருந்து என்னை எங்கேயும் துறத்த முடியாது என்று இவரைப் பார்த்து சிரிக்கும்.

  இந்தக் கதையில் சின்ன விஷயம் மாதிரி தோற்றம் கொடுக்கிற பெரிய விஷயத்தைத் தொட்டுச் சென்றிருக்கிறார். அதற்காக முக்கால் கதைப் பகுதிக்கு ஏகப்பட்ட முஸ்தீபுகள் போட்டு சொல்ல வேண்டியதை சட்டென்று சொல்லி தன் வேலை முடிந்து விட்ட மாதிரி சட்டென்று விலகி விட்டார். கதையின் நேர்த்தி நொடியில் சொல்லி நொடியில் விலகியது தான் எனக்குத் தோன்றுகிறது.

  கையில குழந்தையோட 'இந்தப் பொண்ணு நடந்து வந்தப்ப கபிஸ்தலத்துல இருக்கிற எம் மக வர்ற மாதிரியே இருந்துச்சு'... இது படிக்கறதுக்கு நினைப்பைச் சொல்ற சின்ன விஷயம் மாதிரி தோன்றினாலும் அதில் அனுபவப்பட்டு அனுபவித்துச் சொல்வதற்கு எவ்வளவு பெரிய மனசு வேண்டும் என்று பிரமிக்கத் தான் வேண்டியிருக்கிறது.

  நல்ல ஆத்மாக்கள். வெள்ளை வெளேர் என்று மனசை வைத்துக் கொண்ட இறை உருக்கள். இவர்களால் தான் அந்த காவிரியின் ஓட்டமும் பச்சைப் பசேல் ரம்மிய சூழலும் உருக்கொண்டிருப்பது சத்தியம்.

  இந்தத் தடவை ".." குறியெல்லாம் போட்டு பேச்சை பிரித்துக் காட்ட முயற்சித்து ஜமாய்த்திருக்கிறார். அதனால் கதைக்கு அழகு கூடியிருப்பது இன்னொரு நிஜம்.

  மகிழம்பூ வாசம் கதை பூராவும் மணக்கிறது. நன்றி, துரை செல்வராஜூ சார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா...

   இந்தக் கதையை அரை மணி நேரத்தில் எழுதினேன்..
   தாங்கள் சொல்லும் நுணுக்கங்களை அறிந்தவன் இல்லை...

   தும்பைப் பூ போன்ற மனசுக்காரர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்..
   அவர்களால் வையகமும் இன்தமிழும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன...

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
  2. ஆம்... எவ்வளவு வேகமாக எழுதினாலும் நம் இயல்பான பாணி வந்துவிடும். உணர்வு மனதில் இருக்கும்போது அது வரிகளில் வருவது வியப்பில்லை.

   நீக்கு
 26. சாலை ஓரத்து டீக்கடைக்குப் பின்னால் மனிதமும் இருக்கிறது என்பதுபோல் ஒரு சிறு கதை மிகவும்ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 27. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

  அருமையான கதை. கிராமிய மணம் வீசும், ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு வார்த்தையும், மனதில் மகிழம்பூ வாசத்தை அள்ளி இறைக்கின்றன. பாசம் மிகுந்த மண்ணுக்கு ஒரு உதாரணம், நேசம் சொல்லிய மனிதருக்கு ஒரு உதாரணம் என கதையில் இடையில் வரும் வரிகள் கண்களை குளமாக்குகின்றன. நாங்களும் கற்பனை விரிந்த காட்சிகளுடன் கதை முழுக்கப் பயணித்தோம். அலுக்கவில்லை.. சலிக்கவில்லை.. அழகான வயல்வெளியுடன் மனதுக்கு இதமாய் ரசனை மிகுந்த காட்சிகள் இழையோட தொடர்ந்து, சாலைப் பயணத்துடன் ஆரம்பித்த கதை, வணக்கம் கூறி "போய் விட்டு வருகிறோம் அப்பா" என அன்பினால் இணைந்த உறவுடன் விடைபெறும் போது மனது கனத்து இறுதியில் விழிகளில் நீரை வரவழைத்தே விட்டது. அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   நீக்கு
  2. உன்னதம்./////////இதெல்லாம் இந்த அடுப்பு கொடுத்த கொடை...
   இந்தக் கொடைய நான் மட்டும் வச்சுக்கலாமா!..
   பிறத்தியாருக்கும் கொடுக்க வேணாமா?...///////

   நீக்கு
 28. >>> நாங்களும் கற்பனை விரிந்த காட்சிகளுடன் கதை முழுக்கப் பயணித்தோம்..<<<

  தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

  பதிலளிநீக்கு
 29. மகிழம்பூ காயக்காய வாசம் தரும். இந்த கதையும் நவில்தொறும் நூல்நயம் போலே மனம் அசை போடப் போட சுவை மணக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> நவில்தொறும் நூல்நயம் போலே ... <<<
   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. ​மிகிமா... வாங்க... வாங்க... உங்களைக் காண்பதே காட்சியாய் இருக்கிறது. நீங்களும் கதை எழுதி நாளாச்சே... அட இப்படி பயமுறுத்தினால் எப்படி வருவேன் என்கிறீர்களா? கதை கூட எழுதவேண்டாம்.. அடிக்கடி வாருங்கள்.

   நீக்கு
 30. மனம் தொட்ட கதை.,. இப்படியான மனிதர்கள் நிறைய தேவை..,.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்...
   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 31. மகிழம்பூ வாசம் என் மனதிலும் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி....

   நீக்கு
 32. பல நாட்களாக வலைப்பக்கம் வர இயலா நிலை
  இனி தொடர்வேன் நண்பரே

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!