வெள்ளி, 6 செப்டம்பர், 2019

வெள்ளி வீடியோ : சிட்டு முகம் கொண்ட பொட்டுக் குலமகள்



சென்ற வாரம் ஒரு ரவிச்சந்திரன் பாடல் பகிர்ந்திருந்தேன்.   அப்போது அவர் மகன் பற்றிய பேச்சு வந்ததால் இன்று அவர் (ஷீலாவுக்குப் பிறந்த)  மகன் அறிமுகமான படத்தின் பாடலைப் பகிர நினைத்தேன்.  இந்தப் பாடலும் அதே SPB தான்.  

சென்ற வாரம் புதிர் என்று சொன்னதை யாரும் பார்க்கவில்லை போல.  ஆனால் விஷயம் வெளியாகிவிட்டாலும் அதை யாரும் கனெக்ட் செய்து சொல்லவில்லை.  அடுத்த இரண்டு நாட்களில் பிறக்க இருக்கும் செப்டம்பர் மாதத்துக்காக பகிர்ந்த பாடல் அது.   கேஜி ஜி ஐடியா.

சரி, இதை வார பாடல்களுக்கு வருவோம்!



விஷ்ணு ஜார்ஜ்.  ரவிச்சந்திரன் மகன் அறிமுகம் ஆன படம்.  1997 இல் ஆரம்பிக்கப்பட்டாலும் இயக்குனருக்கும் (கேயார்) தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட தகராறால் 2000 ஆம் வருடத்தில் வெளியான படம்.  

விஷ்ணு வெறெந்தப் படத்திலும் நடித்ததாக தகவல் இல்லை.  நான் தேடியும் பார்க்கவில்லை.  ஆனால் வேறொரு சுவாரஸ்யமானதகவல் உண்டு.

இந்தப் படத்தில் கதாநாயாகி பூஜா குமார்.  அவரும் இந்தப் படத்தில்தான் அறிமுகம்.  அமெரிக்காவில் 1995 இல் மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவராம்.  இந்தப் படம் தயாரிக்கப்படும்போதே இவருக்கு வி ஐ பி , சின்ன ராஜா போன்ற படங்களில் வாய்ப்பு வந்தாலும் ஏனோ அப்புறம் நீக்கப்பட்டிருக்கிறார், அல்லது இடம்பெறவில்லை.



இதில் என்ன சுவாரஸ்யம் என்கிறீர்களா?  இவர்தான் கமலின் விஸ்வரூபம் படத்தின் நாயகி!  கமலின் உத்தம வில்லனிலும் நடித்திருக்கிறாராம்.



காதல் ரோஜாவே படம் ஹிந்தி தில் ஹை யே மான்த்தா நஹி படத்தின் தமிழ் வடிவம். வந்த வேகத்தில்காணாமல் போன படமாம்.

சரணங்களில் சட்சட்டென திரும்பும் டியூன். எஸ் பி பி குரலில் காட்டும் சோக உணர்வு...



இந்தப் படத்தின் இந்தப்பாடல் அப்போது கேட்டு ரசித்திருக்கிறேன்.  இளையராஜா இசையில் வாலியோ எம் ஜி வல்லவனோ எழுதிய பாடல்!

இளவேனில் இது வைகாசி மாதம் 
விழியோரம் மழை ஏன் வந்தது 
புரியாதோ இளம் பூவே உன் மோகம் 
நெருப்பாக கண்ணில் நீர் வந்தது 
பனிமூட்டம் வந்ததால் மலர்த்தோட்டம் நீங்கியே 
திசை மாறிப்போகுமோ தென்றலே 
காதல் ரோஜாவே பாதை மாறாதே நெஞ்சம் தாங்காது ஓ..

என் மேனி நீ மீட்டும் பொன்வீணை என்று 
அந்நாளில் நீதான் சொன்னது 
கையேந்தி நான் வாங்கும் பொன்வீணை இன்று 
கைமாறி ஏனோ சென்றது 
என்போன்ற ஏழை முள்ளில் விழும் வாழை 
உண்டான காயம் ஆறக்கூடுமா 
காதல் ரோஜாவே கனலை மூட்டாதே 
நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன் 

கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி
கல்யாண தீபம் ஏற்றினேன் 
என் தீபம் உன் கோவில் சேராது என்று 
தண்ணீரை நானே ஊற்றினேன் 
உன்னோடு வாழ இல்லை ஒரு யோகம் 
நான் செய்த பாவம் யாரைச் சொல்வது 
காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க 
நீ சூடும் பூமாலை வான்போல் வாழ்கவே 

இளவேனில் இளராகங்கள் பாடும் 
இளங்காற்றே எங்கே போகிறாய் 
பூஞ்சோலை இது உன்னோடு வாழும் 
இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய் 
பனிமூட்டம் வந்ததால் மலர்த்தோட்டம் நீங்கியே 
திசை மாறிப்போகுமோ தென்றலே 
காதல் ரோஜாவே உன்னைக் கூடாமல் கண்கள் மூடாதய்யா 



முதலில் பகிர்ந்திருந்தாலும் அதை இரண்டாவதாகக் கொள்ளுங்கள்.

இதே SPB, ரவிச்சந்திரனுக்கு அந்தக் காலத்தில் குரல் கொடுத்த பாடல் அடுத்து.  

இளமையான SPBகுரல்.



இதை முதலாவதாகக் கொள்ளுங்கள்.  இந்தப் பாடல்தான் (அனேகமாக) நான் கேட்ட முதல் SPB குரல்.  அப்புறம் ரங்கராட்டினம் பாடல்கள். இந்தப் பாடலில் SPB கொஞ்சம் பொய்க்குரலில் பாடுவார் என்று சொல்வார்கள்.  ஆனால் எனக்கு மிகவும் பிடிக்கும்.  இதை ரசிக்காதவர்கள் அநேகமாக யாரும் இருக்க முடியாது!

சபதம் படம். 1971இல் வெளிவந்தது.  பி.  மாதவன் இயக்கத்தில் ரவிச்சந்திரன்- கே ஆர் விஜயா நடித்தது.  பேபி ஸ்ரீதேவி மகாபாரதம் நாடகம் நடப்பதாக வரும் ஒரு காட்சியில் கிருஷ்ணனாக தலைகாட்டுவாராம்.



தொடங்கும்போது ஆரம்பிக்கும் சிதார்(??) இசை..  எஸ் பி பியின் குழைவான குரல்.  அந்த ஹம்மிங்...சரணத்தில் மூன்றாவது வரிகளில் காட்டும் கமகம்.. தேன் கலந்தாளோ எனும்போது குரலில் குழைக்கும் தேன்...!



இளையராஜாவின் ஆரம்ப கால பாடல்களில் ஜி கே வியின் சாயலைநிறைய பார்க்கலாம்.



கண்ணதாசன் பாடலுக்கு இசை ஜி கே வெங்கடேஷ்.  2 நிமிடம் 35 வினாடிகள் தாண்டி ஒரு சிறு பாஸ் விழும்.  பாடல் முடிந்து விட்டது என்றுநினைத்துவிட வேண்டாம்.மூன்று நான்கு இரண்டாவது சரணம் தொடங்கும்!

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ 
பனியில் வந்த துளிகளோ கனிகளோ 
உடலெங்கும் குளிராவதென்ன - என் 
மனமெங்கும் நெருப்பாவதென்ன 

தேரிலேறி தேவதை வந்து -இங்கு 
நீரிலாடும் என்னுடன் நின்று 
தேரிலேறி தேவதை வந்து -இங்கு 
நீரிலாடும் என்னுடன் நின்று 
உடல் தேய்த்து விட்டாளோ முகம் பார்த்து விட்டாளோ 
உடல் தேய்த்து விட்டாளோ முகம் பார்த்து விட்டாளோ  
இன்று சித்திர முத்தங்கள் சிந்திய ரத்தினம் யாரோ 
அவள் யாரோ... ம்ம்ம்ம்ம்ம்...ஆ...

காமதேனு பால் கறந்தாளோ - அதில் 
கன்னி மங்கை தேன் கலந்தாளோ 
காமதேனு பால் கறந்தாளோ - அதில் 
கன்னி மங்கை தேன் கலந்தாளோ 
அதை நடக்க விட்டாளோ எனை மிதக்க விட்டாளோ 
அதை நடக்க விட்டாளோ எனை மிதக்க விட்டாளோ
இளம் சிட்டு முகம் கொண்ட பொட்டுக் குலமகள்  யாரோ 
அவள் யாரோ ... 


52 கருத்துகள்:

  1. ஆஹா... இன்னிக்கு மீ தான் ஃபர்ஸ்ட்டு..... :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..   ஹா.. ஹா..

      ஆமாம் வெங்கட்.  நன்றி..(தட் நீங்களாச்சும் வந்தீங்களே... மொமெண்ட்!)

      நீக்கு
  2. //ஆனால் விடம் வெளியாகிவிட்டாலும்//

    //அடுத்த ரிலாண்டு நாட்களில் பிறக்க //

    இன்னிக்கு என்ன ஒரேடியா டங்கு ரோலிங்க் ஆகுதே.... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ...   அவசரமாக தயார் செய்தது...   அதனால் ஸ்லிப் ஆகியிருக்கிறது.  நீங்கள் சொன்ன இரண்டு விஷயங்களையும் சரி செய்துவிட்டேன்!  வேறெதாவது இருக்கிறதா தெரியவில்லை!

      நீக்கு
  3. பாடல்களையும் இப்போது தான் கேட்டு ரசித்தேன். ஓகே.... முன்னர் கேட்ட நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பாடல்களையும் கேட்டதில்லையா?  இளவேனில் பாடலாவது கேட்டிருக்க மாட்டீர்கள்.  சபதம் பாடல் கேட்டிருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்!

      நீக்கு
  4. அடடா... இன்னிக்கு என்ன ஆச்சு? எல்லாரும் ரொம்பவே பிசி ஆகிட்டாங்க போல! முதல் ஐந்து கருத்தும் என்னுடையதாக இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவா வெங்கட்...

      துரை செல்வராஜூ ஸார் இணையம் படுத்தல்..

      கீதா ரெங்கன் உடம்பு சரியில்லை!
      கீதா அக்கா அமெரிக்க பயண ஆயத்தங்கள்.

      பானு அக்கா பாவம்.

      நெல்லைத்தமிழன் வடநாட்டு யாத்திரை!

      கோமதி அக்கா வரும் நேரம் இனிமேல்தான்!

      அதுதான்!

      நீக்கு
    2. வெங்கட் நான் வந்துட்டேன். உங்கள் இருவருக்கும் இனிய காலை வணக்கம்.
      வல்லிம்மா வருவாங்கன்னு சொல்ல முடியலியே. ஹூம்.
      இளவேனில் பாடல் வெகு இனிமை. கேட்டதில்லை.
      விஷ்ணுவுக்கு அம்மா ஜாடை.
      பூஜா குமார் நல்ல தோழியாச்சே இப்போது உலக நாயகனுக்கு.

      சபதம் படம் ஆஹா . படமும் அலுக்காது பாடலும் அலுக்காது.
      என்ன மாயமோ பாலு சார் குரலில்.

      கேட்டுக் கேட்டு ரசித்தேன். மிக நன்றி ஸ்ரீராம்.
      வரப்போகிறவர்களுக்கு வணக்கம் வாழ்த்துகளும்.

      நீக்கு
    3. அச்சச்சோ....  உங்களை எப்படி மறந்தேன் நான்?  மன்னிச்சுக்கோங்கம்மா!
      பூஜா குமாரை அப்போது உலக நாயகன் லட்சியம் செய்திருக்க மாட்டார்!  இப்போது அவர்தான் கதி போல!
      இரண்டு பாடல்களுமே ரசிக்க வைக்கும் பாடல்மா.

      நீக்கு
    4. மறந்து விட்டொம் மறந்துவிட்டோம்.
      டொடைங்க்,என்று இருதயம் துடிப்பது போல ஆரம்பிக்கும் அந்த
      இடம் மிகப் பிடித்தமானது ஸ்ரீராம்.அது சிதாரோ,கிடாரோ.
      ஆனால் மாய இசை.இந்த நடிகைகள் மட்டும் பருமனாகமல் இங்கிருக்கும் 80 வயது ஜேன் ஃபோண்டா மாதிரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். விஜயாவின் முகபாவங்களும் நடிப்பும்
      அழகு.ரவிச்சந்திரன் இதில் ஆட்டம் போடாமல் நடித்திருப்பார்.
      மகன்,தந்தை என்று வந்தது போல அன்னை,மகள் என்று படங்கள் குறைவுதான்.

      மேனகா ,கீர்த்தி சுரேஷ் தவிர்த்து. மீண்டும் நன்றி மா.

      நீக்கு
  5. ரசிக்ககூடிய பாடல்களே ஜி ஸூப்பர்

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம்...


    தொடுவதென்ன தென்றலோ மலர்களோ!...

    மிகவும் ரசிக்கும் பாடல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...
      வாங்க...   தொடுவதென்ன பாடலை ராசிக்காதார் உண்டோ?!!
      இளவேனில் இது வைகாசி மாதம் பாடல் கேட்டீர்களோ...

      நீக்கு
  7. ஆமாம்!...
    கமலின் உத்தம வில்லன் படம் ஏன் ஓடவில்லை?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓடவில்லையா? படத்தில் ரசிக்க நகைச்சுவை கூட இல்லாதிருந்திருக்கும்!

      நீக்கு
  8. >>> துரை செல்வராஜூ ஸார் இணையம் படுத்தல்.. <<<

    எனது இணையம் எப்போதும் போலத்தான் இருக்கிறது.. அதில் புதிதாகப் பிரச்னை ஏதும் இல்லை..

    கையிலிருந்து கேலக்ஸியை மகனிடம் கொடுத்து விட்டு இங்கு வந்தேன்...

    இங்கு அலுவலகத்திலுள்ள மடையர்கள் - ஆகஸ்ட் மாத சம்பளத்தை இன்னும் வங்கியில் போடாமல் இருக்கிறார்கள்...

    ஆதங்கத்துடன் கேட்டால் நரித்தனமாக சிரிக்கிறார்கள்... (உண்மையான நரிகள் மன்னிப்பதாக!..)

    கையில் கேலக்ஸி இல்லாதது தான் விடியற்காலையில் வர இயலாததற்குக் காரணம்...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  அப்படியா?  சீக்கிரம் சம்பளம் கைக்கு வரட்டும்....

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  10. முதல் பாட்டு கேட்ட நினைவு இல்லை.

    யாருக்கும் புரியாது என்று சந்தோஷமான விழாவில் சோகமான பாடல் பாடுவார்களோ!

    //தொடங்கும்போது ஆரம்பிக்கும் சிதார்(??) இசை.. எஸ் பி பியின் குழைவான குரல். அந்த ஹம்மிங்...சரணத்தில் மூன்றாவது வரிகளில் காட்டும் கமகம்.. தேன் கலந்தாளோ எனும்போது குரலில் குழைக்கும் தேன்...!//

    நல்ல ரசிப்பு.


    இந்த பாடல் அடிக்கடி கேட்ட பாடல். பிடித்த பாடல்.

    அப்பா, மகன் பாட்டு வைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாடல் அதிகமாய் கேட்டிருக்க வாய்ப்பில்லை.  ஆனால் நன்றாயிருக்கும்.
      ரசனையை ரசித்ததற்கு நன்றி.  அந்த இடங்களில் அந்தக் குழைவை கவனித்தீர்களா?

      நீக்கு
  11. //அடுத்த இரண்டு நாட்களில் பிறக்க இருக்கும் செப்டம்பர் மாதத்துக்காக பகிர்ந்த பாடல் அது. கேஜி ஜி ஐடியா.//
    ஓ! அதற்காக போட்ட பாடலா?

    வந்தால் என்னோடு பாடல் கம் செப்டம்பர் பாடலை காப்பி செய்து பாடிய பாடல் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..   வரவிருக்கும் செப்டம்பரை "கம் செப்டம்பர்" என்று வரவேற்கும் முகத்தான் போடப்பட்ட பாடல் அது...

      நீக்கு
  12. 'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ' எனக்கும் பிடித்த பாடல் தான். பாடலுக்கான இசை தான் அப்படி பிடிக்க வைக்கிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது..

    //அதை நடக்க விட்டாளோ எனை மிதக்க விட்டாளோ.. //

    அதைன்னா எதை?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேன் கலந்த பாலாய் இனிக்கும் அந்த தேவதையை...!  ஆனால் அந்த இடத்தில் கே ஆர் விஜயாவைதான் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை!!!!  திட்டாதீர்கள்...  என் ரசனையைச் சொன்னேன்!

      நீக்கு
    2. அதை நடக்க விட்டாளோ என்று எதையோ அந்த தேவதை செய்த மாதிரி அல்லவா பாடல் வரி வருகிறது! அப்பட்யிருக்க 'அதை' எப்படி தேவதையைக் குறிக்கும், ஸ்ரீராம்?

      நீக்கு
    3. ஜீவி சார்,
      அந்த காமதேனு பால் கறக்க ,அதில் மங்கை தேன் கலந்து

      மிதக்க விட்டாள்.
      அந்தப் பாலும் தேனும் ஆறாக ஓட நம்ம ரவிச்சந்திரன் நடந்து மிதக்கிறார்.
      அது அவர்களின் காதல் நதியாக இருக்கலாம்.

      நீக்கு
    4. ஸ்ரீராம் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்

      நீக்கு
    5. வல்லிம்மாவை வழிமொழிகிறேன்!

      நீக்கு
    6. அப்படியென்றால் அதில் நடக்கவிட்டாளோ என்று தானே சொல்லியிருக்க வேண்டும்?..

      அதற்கு அர்த்தம் வேறே. நான் தொலைபேசியில் சொல்கிறேன், ஸ்ரீராம்.

      நீக்கு
    7. அந்தக் காலத்தில் பசும்பால் நல்ல அடர்த்தியாக இருக்குமாம்..
      அதிலும் காமதேனுவின் பால் கள்ளிச் சொட்டாக இருந்திருக்கும்..

      அதே போல நல்லதேன் நீரில் கரையாது.. அதை அடர்த்தியான பாலில் விட்டால்!?..
      அமிழ்ந்து போகாமல் மிதந்திருக்கின்றது!..

      நீக்கு
  13. சூதாட்டம், சபதம் இரண்டும் ஒரே சமயத்தில் 1971 என்று நினைக்கிறேன்.
    அடுத்து அடுத்து பார்த்த நினைவு இருக்கிறது. அப்பாவிற்கு சினிமா பாஸ் வரும். ஊரிலிருந்து உறவினர் வந்த சமயம் மாட்டு வண்டியில் போய் பார்த்த படம். அப்போது தேனியில் இருந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த விவரம் எனக்கு தெரியவில்லை.  சூதாட்டம் படத்தில் எதுவும் எஸ் பி பி பாடல் இல்லை என்று நினைக்கிறேன்!  இருந்திருந்தால் படம் பற்றி அறிந்திருப்பேன்!

      நீக்கு
  14. ///முதலில் பகிர்ந்திருந்தாலும் அதை இரண்டாவதாகக் கொள்ளுங்கள்.
    //
    நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ இதுதான் ஃபேவரிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் பாட்டூஊஊஊஊ.. என் பூஸ் ரேடியோவில் அடிக்கு அடி:)) போடுவார்கள்.. கேட்டு நெஞ்சுருகிப்போவேன்ன்ன்..

    2ம் பாட்ட்டு நான் கேட்டதாக நினைவில்லை... அதுவும் நல்லாத்தான் இருகு ஆனாலும் என்னிடம் அவருக்கு 2ம் இடமே:)).. நீங்க போட்ட ஓடர் கரீட்டூ:)) ஆனா கீழே இருந்து மேலே வரிசைப்படுத்திட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளவேனில் நல்ல பாடல்தான்.  ஆனால் அதற்கு என்னால் முதலிடம் கொடுக்க முடியாது அதிரா!  இரண்டாம் இடம்தான்!  நீங்கள் இன்னும் தொடுவதென்ன பாடலை சரியாகக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன்!

      நீக்கு
    2. விடுங்கோ விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போயிடுறேன்ன்ன்ன்ன்:)

      நீக்கு
  15. இந்த பூஜாவுக்கும் அஜித்துக்கும் இடையில் தானே ஆரம்பம் காதல் மலர்ந்து பின்னர் அது திசைமாறியது????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒன்றும் நான் கதை கேள்விப்பட்டதில்லை!

      நீக்கு
    2. அந்தப் பெண் ஹீரா அதிரடி, (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்போ சரித்திர நாயகி?:P) ஹீரா தான் அஜித்தை மூர்க்கமாய்க் காதலித்தார் என்பார்கள். ஆனால் அஜித் ஷாலினியைப் பார்த்ததுமே அவர் வாழ்க்கையின் திசையும் குறிக்கோளும் மாறி விட்டன. இந்த ஹீரா பின்னர் சரத்குமாரைக் கல்யாணம் செய்துக்கப் போவதாய்க் கூட ஒரு பேச்சு இருந்தது. ஆனால் அது நக்மா என மாறிப் பின்னர் ராதிகாவில் முடிந்தது.

      நீக்கு
    3. கிர்ர்ர்ர்.....

      கிசுகிசுல்லாம் விடுங்க...   பாட்டு?  அல்லது பாட்டுகள்?

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    நல்ல பாடல்கள் பகிர்வு. அப்பா, மகனின் இருவரின் பாட்டும் சேர்ந்து இனிமையான வெள்ளி.. ரவிச்சந்திரனின் அழகு அவர் மகனிடம் கம்மி தான். ஒரு வேளை சோகத்தினால் இருக்குமோ? படங்கள் பற்றிய விபரங்கள் தெரித்து கொண்டேன்.

    "தொடுவதென்ன" பாடல் எத்தனை வாட்டி கேட்டாலும், மனதை தொடாமல் போகாது.அந்தளவிற்கு எஸ்.பி. பியின் காந்த குரல் கட்டிப் போட்டு விடும். அப்போதும் கேட்டு ரசித்துள்ளேன். இப்போதும் கேட்டு ரசித்தேன். முதல் பாடல் அவ்வளவாக கேட்டதில்லை. இருப்பினும் இப்போது அதையும் கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா.. நேற்று காணமல் பூக்களுக்குள் ஒளிந்து கொண்ட சிட்டு இன்று கே. ஆர் விஜயாவிடம்தான் உள்ளதா? ஹா. ஹா. ஹா. முதல் பாடல் வரிகளும், இரண்டாவது பாடல் வரிகளும் தந்து பகிர்ந்தமைக்கு நன்றி.

      நீக்கு
    2. வாங்க கமலா அக்கா...
      ரவிச்சந்திரனின் அழகு அவர் மகனிடம் கம்மியா?  ம்ம்ம்...  அதனால்தான் அவருக்கு மார்க்கெட் வரவில்லை போல!

      //ஆகா.. நேற்று காணமல் பூக்களுக்குள் ஒளிந்து கொண்ட சிட்டு இன்று கே. ஆர் விஜயாவிடம்தான் உள்ளதா? ஹா. ஹா. ஹா. //

      அடடே...   அசத்திட்டீங்க கமலா அக்கா.

      நீக்கு
  17. தொடுவதென்ன.. அந்தக்காலத்தில் கேட்டு மயங்கிய பாடல். எஸ்பிபி அழகாகப் பாட, ஜிகே வெங்கடேஷ் இதமாக இசையமைத்திருக்கிறார். உங்கள் புண்ணியத்தில் வெகுகாலத்துக்குப்பின், இந்த மாலையில் இதைக் கேட்டேன்!

    பதிலளிநீக்கு
  18. பாடல்கள் இனிமை. கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. விஷ்ணு ஜார்ஜ் கேட்டபெயர் பலபடங்களில் பார்த்தநினைவு ஏனோ நிலைக்க வில்லை

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!