வியாழன், 5 மார்ச், 2020

வீடென்று...

வீடென்று எதைச் சொல்வீர்?


அந்த அற்புதமான கவிதையின் வரிகளை சிதைக்காமல் சொல்ல வேண்டும் என்றால் 'எதனைச் சொல்வீர்' என்று இருக்க வேண்டும்!

எண்பதுகளில் மாலன் எழுதிய கவிதை.  அதைக்கூட கூகுள் செய்துதான் நினைவுபடுத்திக் கொண்டேன்.  ஆனால் அந்த முதல் வரி மனதில் பதிந்து விட்ட வரி.   யார் எழுதியது என்பது இனி மறக்காது!  கவிதையின் உள்ளடக்கம் நினைவில் இருந்தாலும், வரிகள் சரியாய் நினைவில் இல்லாத நிலையில் கூகுளிட்டேன்!  வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக அந்த 'வீடென்று' வரி மனதில் வரும்.

இதுபோல பாரதிதாசன் கவிதையின் ஆரம்ப வரி கூட ஒன்று எப்போதுமே தகுந்த சந்தர்ப்பங்களில் மனதில் மோதும்.  "தன்பெண்டு தன்பிள்ளை தன்சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்போன்... "   அப்புறம் தேடவேண்டும்!  ஆனால் பாரதிதாசன் கவிதை வரி பற்றிச் சொல்ல வந்தது மாலன் கவிதை வரி மனதில் நின்றதைச் சொல்லும்போது வந்தது.  இந்தக் கட்டுரைக்கு அது பொருந்தாது!

சமீபத்தில் வீடு மாறினேன். அதுதான் இந்த சிந்தனை.

வெறும் சுவர்களால் ஆனதா வீடு?   உணர்வுகளால் ஆனது.  அனுபவங்களல் ஆனது.  

இருபத்தாறு வருடங்கள் ஒரு அரசுக் குடியிருப்பில்...     அதுவும் ஒரே குடியிருப்பில்!  அரசுக் குடியிருப்புக்கே உரித்தான அத்தனை அம்சங்களும் கொண்டது அது.  சிறிய இடம்.  பின்னாட்களில் ஒழுகத் தொடங்கிய சுவர்கள்..  தண்ணீர்ப் பிரச்னை...   நிறைய அசௌகரியங்களுக்கு நடுவில் ஏகப்பட்ட சௌகர்யங்கள் உண்டு. 

ஒருமுறை ஒரு அனுபவத்தை தளத்தில் எழுதியிருந்தபோது ஹுஸைனம்மா  "உங்கள் வீட்டில் எலியிருக்கிறதா?  இல்லை எலியின் வீட்டில் நீங்கள் குடியிருக்கிறீர்களா?" என்று கேட்டிருந்தார்! சிரிப்பு வந்தது.

அந்த இடத்துக்கு நானே ராஜா.  மாடி வீட்டில் இருந்த எனக்கு அந்த மாடிப்படிகள், மொட்டை மாடி தனிப்பட்ட சொந்தம்!  ஏனெனில் அங்கு முதலில் குடியேறிய மூத்த குடி நான்!  எனவே மெல்ல சேரத் தொடங்கிய அதிகாரங்களும் சலுகைகளும் என்னிடம் நிறைய இருந்தன.  அந்த வீட்டு வாசல் 'முருங்கி' மரமும், மொட்டைமாடியும், தெருவோர வேப்ப மரமும்  ஸ்விஸ் வரை பிரசித்தம்!

என் முதல் மகனுக்கு ஒரு வயதாகும் முன்னரே அங்கு குடியேறினோம். , இரண்டாவது மகன் பிறந்த வீடும் அதுதான்.  சில வீடுகள் ராசி என்பார்கள்.  ராசி என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும், நிறைய நல்லதுகள் நடந்த வீடு.  நன்றல்லன அன்றே மறப்போம்!  அங்கிருக்கும்போது அந்த வீட்டின் மைனஸ்கள் நினைவுக்கு வருமோ, என்னவோ...  இப்போது நெகிழ்வான நினைவுகள் மட்டுமே...

என் அப்பா காலத்திலிருந்தே நாங்கள் அரசுக் குடியிருப்பில் வளர்ந்தவர்கள்.  எனவே எனக்கு(ம்) அது பழகிப்போனதில் வியப்பில்லை. எனவே அதன் நெளிவுசுளிவுகள் எனக்கு அத்துப்படி.  பழகத்தெரியாத சிலர் உடன் குடியிருப்பாளர்களாக வந்து போனதும் உண்டு.

அந்த வீட்டிலிருந்து நகரின் மத்தியை அடைவது வெகு எளிது.  எந்த இடத்துக்குச் செல்வதும் எளிது.   இதுவே நாங்கள் அங்கு குடியிருந்த போது நாங்கள் அங்கு இருந்த குறைகளை நிறையப் பேசினோம்.  இயற்கையான மனித குணம்.   ஒன்றை இழந்த உடன் அல்லது ஒன்றை விட்டு ஒன்று மாறும்போது,  மாறி விட்டதன் மதிப்புகள் பெரிதாகத் தெரிவது இயல்பு.  எங்கள் பலவீனங்களை நியாயப் படுத்திக் கொள்கிறேன்!

அப்பா காலத்திலிருந்து பல வீடுகள் மாறி இருந்தாலும் இந்த வீடு மாறும்போது மனம் கொஞ்சம் கனம் ஆனது அதிகம்.  ஒரு கதை சொல்வார்கள் இல்லையா?  அரசன் ஒரு பராரிக்கு பட்டாடைகளைக் கொடுத்தானாம்.  ஒருநாள் பார்க்கும்போது அந்தப் பட்டாடைகளை அலட்சியமாக கந்தல்போல கையாண்ட அந்தப் பராரி, ஒரு செருப்பை தங்கத்தை விட பத்திரமாக பாதுகாத்து வைத்தானாம்.  வியந்த அரசர், மந்திரியிடம் காரணம் கேட்டாராம். அந்தக்காலத்தில் மந்திரிகள் அரசனின் இதுபோன்ற அல்ப கேள்விகளுக்கு பதில் சொல்லவே  அவர்கூட இருந்திருப்பார்கள் போல!  அரசர்களும் அறிவில்லாதவர்களாகவே இருப்பார்கள் போலும்!  சின்ன வயதில் எனக்குக்கதை சொன்ன பாட்டியிடம் இதைக் கேட்காமல்போனேன்! 

அரசனுக்கு மந்திரி என்ன பதில் சொல்லியிருப்பார் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும்!  அதுபோல என் சம்பாத்தியத்தில் நான் குடியிருந்த வீடு என்பதாலோ என்னவோ! ஆனால் அப்படியும் சொல்லமுடியாது.  திருமணமானபின் அது எனக்கு இரண்டாவது வீடு.   முதல் வீட்டின் நினைவுகள் அவ்வளவு இல்லாததற்கு காரணம் நான் அந்த முதல் வீட்டில் குடியிருந்த காலம் ஒரு வருடம் மட்டுமே என்பதுகூடஇருக்கலாம்!

நானே மாற்றி மாற்றி பேசுகிறேன் இல்லை?!

 தஞ்சையிலிருந்து மதுரை வந்த காலத்தில் தஞ்சையை மறக்க முடியாமல் இருந்தது.  அது பதின்ம வயது.  கொஞ்ச காலத்தில் மனம் மாறியது, பக்குவப்பட்டு, பழக்கப்பட்டது.   அது போலதான் இப்பவும் மாறும்.  இப்போது அந்தக்கால என்னுடைய இடத்தில் என் மகன்களைப் பார்த்தேன்.  இளையவன் அந்த வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும் என்றதும் அதன் சுவர்களைப் பிடித்துக்கொண்டு நின்றான்.  அந்த வீடு அவனுக்கு இன்னொரு தாய்!

என் அலுவலகத்தில் ஒருவர் சொன்னார், "உங்களை மாதிரி வீட்டின்மேல் நேசம் வைத்திருப்பவரை நான் பார்த்ததில்லை..    அதுவும் வாடகை வீட்டின் மேல்..."   ஆம், அவர் பார்த்திருக்க மாட்டார்,  அவ்வளவுதான்.  ஆனால் என்னைப்போல நிறையபேர்  இருப்பார்கள்.  உங்களில் எத்தனைபேர் உங்கள் அனுபவங்களைச் சொல்லப்போகிறீர்களோ...   காத்திருக்கிறேன்.

அந்த வீட்டின் சுவர்கள் எங்களை, எங்கள் முதுகைத் தேடி இருக்குமா?   அங்கு இருந்த அந்த 'வாழும் பல்லி' எங்களைத் தேடி இருக்குமா?   காலி வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்திருக்குமோ?

புதிய வீட்டின் சௌகர்யங்கள் அதிகம்.  அசௌகரியங்கள் குறைவு.  ஆனால் முக்கியமான அசௌகரியம் தூரம்.   அலுவலகம் செல்லும் எங்கள்  மூவருக்குமே தூரம் ஒரு பிரச்னை.  குறைந்த தூரத்தில் இருக்கும் நானே கொஞ்சம் சிரமப்படும்போது இன்னும் அதிக தூரத்திலிருக்கும்  மகன்கள் இன்னும் சிரமப்படுகிறார்கள்.  அதிலும் இளையவன்!  பழகி விடும்! இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து இதே அனுபவங்களும், இந்தக் கட்டுரையும் எனக்கே சிரிப்பாகக் கூட இருக்கும்!

எல்லோரும் பெரிய வீடு வைத்திருந்தபின் சின்னவீடு வைத்துக் கொள்வார்கள்!!!   நான் உல்ட்டா...   சின்ன வீட்டிலிருந்து பெரிய வீடு!  இதை நான் நகைச்சுவையாக சொன்னபோது யாரும் ரசிக்கவில்லை!

'நண்பர்கள் வந்தால் நடுவிலே குந்திக் கொள்வர்; தலை மேலே கொடிகள் ஆடும்' கால்புறம் பாண்டம் முட்டும்' என்று மாலன் எழுதியிருந்த வரிகள் போலதான் அந்த வீடு..   ஆனாலும் அந்த வீட்டில் அலுப்புகளை மீறி நிறைய சந்தோஷம் இருந்தது.

அங்கு கழித்த கடைசி இரவுகளில், இனி இந்த வீட்டில் வேறு யாரோ புழங்குவார்கள் என்கிற எண்ணம் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது!

மொட்டை மாடியில் நான் புத்தகம் படிக்கும் இடத்தில் அமர்ந்து புத்தகம் படித்து, சில நினைவுப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.  மகன்களும் நானும் அந்தக் காலி வீட்டில் சிலபல செல்ஃபிகள் எடுத்துக்கொண்டோம்.

இப்போது வந்திருக்கும் வீடு புதிதாகப் பழகும் கற்சட்டிபோல...    மெல்ல மெல்ல பழக வேண்டும்!  கொஞ்ச நாள் கழித்து இதுவும் மனதில் புகுந்து விடும்.

மாலன் எழுதிய அந்தக் கவிதையைத் தேடி எடுத்துக் கீழே பகிர்கிறேன்...



வீடென்று எதனைச் சொல்வீர்?
அது இல்லை என் வீடு
ஜன்னல் போல் வாசல் உண்டு
எட்டடிச் சதுரம் உள்ளே
பொங்கிட மூலை  ஒன்று
புணர்வது மற்றொன்றில்
நண்பர்கள் வந்தால்
நடுவிலே குந்திக் கொள்வர்
தலை மேலே  கொடிகள் ஆடும்
கால்புறம் பாண்டம் முட்டும்
கவி எழுதி விட்டு செல்ல
கால் சட்டை மடித்து வைக்க
வாய் பிளந்து வயிற்றை எக்கிச்
சுவரோரம் சாய்ந்த பீரோ 

==========================================================================================


பொக்கிஷ வரிசையில் இன்று கணேஷ் பாலா பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த மதன் ஜோக் ஒன்று...!


****************************************************************************


கீழே உள்ள ஜோக்கில் பெரிதாக ஒன்றும் இல்லை - இப்போது பார்க்கும்போது!  ஆனால் படத்தில் பாருங்கள்.  ஒவ்வொருவர் முகத்திலும் எவ்வளவு ஆர்வம்...!  பாவங்களை அழகாகக் காட்டியிருக்கிறார் ஓவியர்.


இது மாதிரி எவ்வளவு ஜோக்ஸ் பார்த்திருப்போம்...   செங்கல் கொடுக்கிறேன்...  அப்படி இப்படி என்று...!



கீழ்க்காணும் படத்துக்கு கதை, கவிதைகள் வரவேற்கப்படுகின்றன!!



115 கருத்துகள்:

  1. //வெறும் சுவர்களால் ஆனதா வீடு? உணர்வுகளால் ஆனது. அனுபவங்களல் ஆனது. //


    இது மனிதருக்கு மட்டுமில்லை அனைத்து உயிர்களுக்குமான உணர்வு !! இனியாவது மனிதன் பிற உயிர்களின் இருப்பிடங்களை அழிக்காதிருப்பானாக .ஸ்ஸ்ஸ் ரூட் மாறிட்டேனோ :) இல்லை எதோ மனதில் தோணுச்சு எழுதிட்டேன் 

    பதிலளிநீக்கு
  2. வீடு பற்றிய நினைவுகள் எனக்கும் இருக்கு .கொய்யா மாமரம் மற்றும் மல்பெரி வாழை அல்மண்டாஸ் சீதா சப்போட்டா இப்படி பழத்தோட்டம் எல்லாம் விட்டு குளிர் பிரதேசம் வந்தப்போ நானும் அழுதேன் .பிறகு ஜெர்மனி வீட்டை விட்டு வரும்போதும் அழுதேன் இங்கே இந்த வீட்டை வாங்கினப்போ சந்தோஷம் .சிலர் உறவு நட்பு சொல்வாங்க சின்ன வீடாயிருக்கேன்னு ஆனாலும் எனக்கு இது அரண்மனை :) என்னைத்தேடி வரும் ஜீவராசிகள் இப்படி அதிக சந்தோஷத்தை தருமிடம் என் வீடு

    பதிலளிநீக்கு
  3. புது வீடு எல்லா சந்தோஷத்தையும் தரட்டும் உங்கள் குடும்பத்தாருக்கு 

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் ஶ்ரீராம். புதிய வீடும் பழகிவிடும். பழைய வீடு பாவம் உங்களைத் தேடத்தான் செய்யும். உங்கள் வாழ்ககையையே பார்ததிருக்கிறது இல்லையா. வாடகை வீடு, சொந்த வீடு என்றேல்லாம் மனதுக்குத தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வல்லிம்மா... அதுதான் நானும் சொல்லி இருக்கிறேன். கொஞ்சகாலம் போனால் இது எனக்கே சிரிப்பாய் இருக்கும்.

      நீக்கு
  5. அந்த பல்லி மட்டுமில்லை :) உங்களோடு மொட்டை மாடியில் மிக்ஸர் சாப்பிட்ட காகங்களும் உங்களை மிஸ் செய்யக்கூடும் :) வேறொரு புது நட்பு கிடைக்கட்டும் அவர்களுக்கு 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... ஆமாம் ஏஞ்சல். அவைகளை மறந்து விட்டேன் பாருங்க...

      நீக்கு
  6. மகன் இருக்கும் வீடும் வாடகை வீடுதான். நம் பொருட்கள் நிரம்பும் போது அது நம் வூடுதான்.

    பதிலளிநீக்கு
  7. கடைசி இரண்டு ஜோக்கும் ரசித்தேன் .குறிப்பா விதவிதமான பாவங்களை :))

    பதிலளிநீக்கு
  8. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  9. மதன் ஜோக்ஸ் சூப்பர். ஏணிப்படி ஐடியா ஹாஹா.

    பதிலளிநீக்கு
  10. நகைச்சுவைத் துணுக்குகள் அருமை...

    பதிலளிநீக்கு
  11. மாலன் சார் எழுத்து எப்பொழுதுமே அருமை. வீடு! வயிறு எக்கிச் சாயந்த பீரோ. சோக சுகம் இரண்டுமே அதுதான்.

    பதிலளிநீக்கு
  12. ஓவியம் சொல்ல வருவது என்ன!
    உடனே வந்து விடு
    ஓடிவிடலாம்?

    பதிலளிநீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    ஆம்.. உண்மைதான்.. வீடு அனைவருக்குமே பழைய தாயினும், புதியதாயினும் ஒரு கனவுலகம். அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.
    கவிதை நன்றாக உள்ளது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. // அதுவும் வாடகை வீட்டின் மேல்... //

    பூமியில் வாழ்வதே வாடகை தானே...? (!)

    என்னதான் நீங்கள் சமாளித்தாலும், 26 வருடங்கள் வசித்த வீட்டை மறக்க முடியாது...

    பதிலளிநீக்கு
  16. // படத்துக்கு கதை, கவிதைகள் வரவேற்கப்படுகின்றன //

    ம்ஹிம்... குறளை எனது தளத்தில் சொல்வேன்... இப்போது பாடல் வரிகள் :

    நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்..?
    - நெருப்பாய் எரிகிறது...
    இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம்..?
    - முள்ளாய் மாறியது...
    கனிமொழி என் மேல் என்னடி கோபம்..?
    - கனலாய் காய்கிறது...
    உந்தன் கண்களுக்கு என் மேல் என்னடி கோபம்..?
    - கணையாய் பாய்கிறது...

    (குறிப்பு : கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டு ஓய்ந்து இருக்கும் வேளையில், அங்கு இந்த பாடலை ஒலிக்க விட்டால் அமைதி நிலவும்...!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நல்ல ரசனை. சாந்தி நிலவ வேண்டும் என்று பாடலாம்.

      நீக்கு
  17. //வெறும் சுவர்களால் ஆனதா வீடு? உணர்வுகளால் ஆனது. அனுபவங்களல் ஆனது.//

    உண்மை, உண்மை.

    பிறந்தது முதல் எத்தனை வீடுகள்! ஒவ்வொரு வீட்டிலும் எத்த்னை அனுபவங்கள் !
    அவை கொடுத்த இன்ப, துன்ப நினைவுகள் நிறைய இருக்கிறது.

    //அப்பா காலத்திலிருந்து பல வீடுகள் மாறி இருந்தாலும் இந்த வீடு மாறும்போது மனம் கொஞ்சம் கனம் ஆனது //


    அப்பாவுடன் இருந்த காலங்களில் ஊர் ஊராக போன வீடுகளின் நினைவுகள், திருமணம் ஆனபின் மாறிய ஊர்கள், மாறிய வீடுகளின் நினைவு வருகிறது எனக்கும்.

    மாயவரத்தை விட்டு வந்தது மனம் கனத்துதான் போனது.


    //இப்போது வந்திருக்கும் வீடு புதிதாகப் பழகும் கற்சட்டிபோல... மெல்ல மெல்ல பழக வேண்டும்! கொஞ்ச நாள் கழித்து இதுவும் மனதில் புகுந்து விடும்.//

    ஆமாம், உண்மை.

    உங்கள் நினைவுகள் அருமை. இப்போது வந்து இருக்கும் வீடு பழகி விட்டபின் பழையவீட்டின் நினைவுகள் நீங்காது மனதில் தங்கிவிடும்.
    மாலன் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை கோமதி அக்கா. அதே சமயம், தஞ்சை மருத்துவக் கல்லூரிக் குடியிருப்பு நினைவுகள் இன்னமும் மனதில் இருக்கின்றடதான். ஐந்தாம் வகுப்புவரை அங்கிருந்தேன்.

      நீக்கு
  18. பொக்கிஷபகிர்வு அருமை.

    //ஒவ்வொருவர் முகத்திலும் எவ்வளவு ஆர்வம்...! பாவங்களை அழகாகக் காட்டியிருக்கிறார் ஓவியர்.//

    ஆமாம், எத்த்னை பாவங்கள் முகத்தில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டிக் குட்டி முகங்களில் ஒவ்வொன்றிலும் சிறு சிறு வித்தியாசங்கள் காட்டி... வாணி இல்லையா?

      நீக்கு
  19. படத்தில் தலைவன் திரைகடல் ஓடி திரவியம் தேட போகிறார் போலும், பிரிவு துன்பத்தை தாங்கமுடியாத சோகம் தலைவியின் கண்ணில்
    தெரிகிறது. அவர் நிறைய காரணங்கள் சொல்லி சாந்த படுத்த பார்க்கிறார்.

    பதிலளிநீக்கு
  20. சிலருக்கு வீடு கோவில் எனக்கும் அப்படித்தான் நான் முதன் முதலில் வாங்கிய பழைய வீடு எனக்கு கோவிலே...

    பதிலளிநீக்கு
  21. ஆம் அனுபவித்து வாழ்ந்தவர்களுக்குத் தான் அது வீடு...ஏனையோருக்கு அது தடுப்புச்சுவர் மட்டுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ரமணி ஸார்.. நமக்கேற்படும் அனுபவங்கள்தான்..

      நீக்கு
  22. இப்படித்தான் எனது தந்தையும். 1964 இல் அரசு குடியிருப்பில் குடியேறி 24 வருடங்கள் கழித்து ஒய்வு பெற்றவுடன் வேறு ஒரு வீடு (வாடகைக்கு தான்) மாறினார். நான் அந்த வீட்டில் நிரந்தரமாக வசித்தது 4 வருடங்கள் மட்டும். படிப்பு மற்றும் வேலை, பின் குடும்பம் என்று அந்த வீட்டைப் பிரிந்தே வாழ்ந்தேன். தற்போது 30 வருடங்களாக சொந்த வீட்டில் திருவனந்தபுரத்தில் வசிக்கிறேன். இங்கும் திருவனந்தபுரத்தில் முதல் 20 வருடங்கள் வாடகை வீட்டில் தான் குடியிருந்தேன். Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... நீங்கள் பெரும்பாலும் வெளியேயே வசித்திருக்கிறீர்கள் ஜெயக்குமார் ஸார்.

      நீக்கு
  23. மாலன், பாலகுமாரன், சுப்பிரமணிய ராஜு என்ற மும்மூர்த்திகளின் புதுக்கவிதைகள் தனி ரகம். மாலனின் கவிதையை தேடி வெளியிட்டது போல பாரதிதாசனின் கவிதையையும் தேடி  இருக்கலாமோ? 
    கிணறு ஜோக் சூப்பர்! இன்று கிணறு இருந்தால் பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் சாரி, எல்லா அபார்ட்மெண்டுகளிலும் இந்த கதிதான். 
    இது ஹோம் தியேட்டர் காலமாயிற்றே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடி இருக்கலாம் பாரதிதாசன் கவிதையையும்! நன்றி பானு அக்கா.

      நீக்கு
  24. எங்கள் உறவுக்கார பெண்ணொருத்தி தன் மகனுக்கு செல்போன் வாங்கி கொடுத்திருந்தாள், "சின்ன குழந்தைக்கு எதற்கு போன்?" என்று கேட்டதற்கு, "இத்தனை பெரிய காலனியில் அவன் எந்த வீட்டில் விளையாடுகிறான் என்பதை கண்டு பிடிப்பது கஷ்டம், அதற்காகத்தான் செல்போன்" என்றாள். மதனின், வீடு தெரியாமல் முழிக்கும் குழந்தை ஜோக்கை பார்த்ததும் இது நினைவுக்கு வந்தது. 

    பதிலளிநீக்கு
  25. வீடு என்பது வாடகை வீடு சொந்த வீடு என்ற பேதமில்லை. அது கொடுக்கும் நினைவுகள்தாம் அதனை மகிழ்வுள்ளதாக்குகிறது.

    நம் குழந்தைகள் தளர் நடையிலிருந்து வளர்ந்தது, தான் வளர்ந்தது, என்று பலப்பல நிகழ்வுகள்தாம் நம் மனதில் பதிந்து வீட்டை ஒரு உஇருள்ள பொருளாக்குகிறது.

    என் பசங்களின் சிறிய வயது துணிகளைத் தொடும்போது அவர்களைத் தொடுவதாகவே உணர முடியும். வீடு மட்டும் விதிவிலக்கா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை நெல்லை. அங்கு நமக்கு ஏற்படும் அனுபவங்கள்தான்...

      நீக்கு
  26. வீட்டை வித்து பலவருடங்களாகியும், அம்பத்தூரில் எங்க வீடு, வேப்பமரம், சுப்புக்குட்டீன்னு ஒருத்தர் சொல்லிக்கிட்டே இருப்பதை எத்தனைமுறை படித்திருக்கிறோம் (நல்லவேளை வீட்டை வாங்கினவர் இணையம் வருவதில்லை போலிருக்கு. இல்லைனா அம்பேரிக்கா போயே சம்மன் கொடுத்திருப்பார் ஹா ஹா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா.. அக்கா வந்து பதில் கொடுப்பார்!

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வீட்டை விற்றது 2018 ஆம் ஆண்டில் கடைசியில் 2019 ஆம் ஆண்டில் தான் பத்திரப் பதிவே முடிந்தது. இப்போ அங்கே குடியிருப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அடுத்த மாசம் முடியும் போலே! ஆனால் விற்ற பின்னர் நாங்க போயே பார்க்கலை. இடிச்சுட்டாங்கனு தெரிஞ்சதும் ஒரு முறை போனோம். வேப்பமரம் இல்லாத தெரு வெறிச்! :( தெருக்காரங்களே அதை வெட்ட வேண்டாம்னு சொன்னாங்களாம். ஆனால் பில்டர் கேட்கவில்லை! :(

      நீக்கு
  27. நான் மூன்று வருடங்கள் துபாயில் வாழ்ந்த ஸ்டூடியோ ஃப்ளாட்டை (அங்குதான் திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கை தொடங்கிது) 15 வருடங்களுக்குப் பின் பசங்களோட துபாய் போனபோது தேடிக் கண்டுபிடித்து, வீட்டின் உள் சென்று காண்பித்தேன்.

    எத்தனை வருடங்கள் வாழ்ந்தால் என்ன.. அந்த வீடு அங்கு நடந்த நிகழ்வு இவையே வீட்டுன் நினைவை நம்மைச் சுமக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. நானும் என் பழைய வீட்டை மகன்களுக்குக் காண்பித்திருக்கிறேன். (திருமணத்துக்கு முன்னர் நான் இருந்த வீடு). உள்ளே செல்ல முயற்சிக்கவில்லை.

      நீக்கு
  28. எனது வாழ்கையிலும் எத்தனையோ வீடுகள் வந்து போயின.பிறந்தது முதல் திருமணமாகும் வரை ஒரே வீடு அதன் பின் பத்து வீடுகள் மாறி இப்பொழுது மூன்று வீட்டில் வாழ்கை காலில் சில்லுப் பூட்டியபடி ஓடுகிறது எப்பொழுது எங்கே என்று தெரியாது:)) (அதுதான் அடிக்கடி வலைப்பக்கம் காணாமல் போய்விடுகிறேன்)
    பழையனவும் இன்றும் இனிய நினைவுகள்தான்.
    ஜோக்ஸ் ரசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி மாதேவி. முதல்முறையாக ஒரு நீளமான பதில் உங்களிடமிருந்து.

      நீக்கு
  29. மாலனின் கவிதை நன்றாக இருக்கிறது. புதுவீடும் உங்களோடு எளிதாகப் பழகிட வாழ்த்துகள்.
    வழிதவறி வந்த பிள்ளையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது!
    காலங்களைத் தாண்டியும் வினுவின் மங்கைகள் ஏதோ சொல்ல நினைக்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
  30. வினுவின் படத்திற்கு என் கற்பனை.
    விரைந்து எவரோ வரும் ஓசை கேட்கின்றது 
    விரசாக  உன் வளையல்களை கழற்றித் தா 
    விற்று விட்டு வியாபாரம் தொடங்க வேண்டும் 
    இதில் தளை தட்டுகிறதா? அணி இடிக்கிறதா என்று நெ.த.தான் சொல்ல வேண்டும். 
     

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தளை மரபுக்கவிதைக்கு வரும். சந்தம் இசையைப் பொருத்து வார்த்தை அதில் உட்காரணும் (சில பல டி ஆர் பாடல்களில் பாடல் சந்தத்தை மீறி அடைத்திருப்பார்)

      அது கிடக்கட்டும். இந்தக் காதலன் பயங்கரத் திருட்டுப் பயலாக உங்கள் கற்பனையில் உதித்தது ஆச்சர்யம். விரைவாக என்பது கலோக்கியலா வெரசா என்று மாறியிருக்கு. ஒரே கவிதையில் விரைவாக மற்றும் வெரசா வர முடியாது (ஒருவர் பாடுவதில்)

      அது சரி.. அந்தப் பெண்ணின் வலது கை முழுமையா இருக்கா?

      நீக்கு
    2. நெல்லை தராசை சரியாய்ப் பிடித்திருக்கிறார் பானு அக்கா...!

      நீக்கு
    3. //விரைவாக என்பது கலோக்கியலா வெரசா என்று மாறியிருக்கு. ஒரே கவிதையில் விரைவாக மற்றும் வெரசா வர முடியாது (ஒருவர் பாடுவதில்)// தெரியும், அதற்குப் பதிலாக வேறு வார்த்தை யோசித்தேன், சிக்கவில்லை. யோசித்து எழுதுவது கவிதையாகாது. கவிதை தன்னைத்தானே பிறப்பித்துக் கொள்ள வேண்டும். அவன் திருட்டுப் பயல் என்று ஏன் நினைக்கிறீர்கள்? கோவலனாக இருக்க கூடாதா?

      நீக்கு
  31. சொந்த வீடா வாழ்த்துகள் வீடு என்றதும் நினைவுகள் றெக்கை கட்டிப்பற்க்கின்றன பின்னூட்டட்தில் அடக்க முடியாது விரைவில்வீடுபற்றிஒருபதிவு என்னிடம் இருந்து வரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி எம் பி ஸார்... உங்களுக்கு பதிவெழுத ஒரு சப்ஜெக்ட் கிடைத்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  32. //வீடு என்பது வாடகை வீடு சொந்த வீடு என்ற பேதமில்லை. அது கொடுக்கும் நினைவுகள்தாம் அதனை மகிழ்வுள்ளதாக்குகிறது// மிக அழகாக சொன்னீர்கள் நெல்லைத் தமிழன் சார். என் சிறிய பெண் பூனாவில் சட்டக் கல்லூரியில் படித்து வருகின்றாள். அவளுக்கு திடீரென்று உடம்பு முடியாமல் போனதால், அங்கு செல்ல விமான டிக்கெட் வாங்குவதில் மும்முரமாக இருந்து விட்டேன். நாளை செல்கின்றேன். எனவே தாமதம்.
    ஸ்ரீராம் நண்பரே, நீங்கள் கூறியது போல், ஒரு வாரம் முன்னர்தான் நான் என் பெற்றோருடன் வாழ்ந்த ஆதம்பாக்கம் வாடகை வீட்டை போய் பார்க்க நேரிட்டது. 2 - 3 புகைப்படங்கள் எடுத்து வந்தேன். என்ன நனைவுகள். என்ன பசுமையான நினைவுகள். விரைவில் எழுதுவேன் என் அனுபவத்தைப் பற்றி. உங்கள் அனுபவம் போலவே என் மனதிற்கு மிகவும் பிடித்த அனுபவங்கள் அவை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மகள் விரைவில் குணம் அடையப் பிரார்த்திக்கிறேன் ரஸ்ரீ மேடம். உங்கள் எழுத்தைப் படிக்கக் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  33. வணக்கம் சகோதரரே

    வாழ்ந்த வீட்டின் நினைவுகள் பற்றி அழகாக ரசித்து எழுதியுள்ளீர்கள். புது வீடுகள் மாறும் போது பழைய வீட்டின் ஒவ்வொரு நிகழ்வையும் நாங்கள் பேசி மகிழ்ந்திருந்த காலங்கள் நினைவுக்கு வந்தது.நாங்களும், ஒவ்வொரு ஊராக,ஒவ்வொரு வீடாக ஏழு வீடுகள் மாறி வந்தாயிற்று.

    நாம் அதனுடன் வாழும் போது, நம்மிடையே எத்தனையோ இதர ஜீவராசிகள் வாழ்ந்து நம்மை துன்புறுத்தினாலும், நம்மை தாங்கி, நம்மை மதித்து, நம்முடன் அன்பாக இருந்த அந்த செங்கலும் சுண்ணாம்புமான வீடுகளை மறக்க இயலாது.

    தங்களுடைய புது வீட்டுக்கும். அதனுடன் இணைந்து இணை பிரியா நட்பாக போகும் தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    மாலன் அவர்களின் கவிதையும் அருமை.

    பொக்கிஷ ஜோக்கில் மதன் ஜோக் எல்லாமும் நன்றாக உள்ளது. கிணற்றை விட உயரமான தாம்பு கயிறை பார்க்கும் போது ஹனுமான் தன் வாலினால் கோட்டை கட்டி அமர்ந்த நினைவு வருகிறது.

    இவ்வளவு ஆழமான கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்குள்.. தண்ணீர் சிக்கனம் தானேவே கை வந்த கலையாக வந்து விடும்.

    ஏணிப்படி ஜோக் சிறப்பு. இங்கும் கொடியேற்று விழாவாகத்தான் தினமும் துணிகளை காய விடுகிறோம்.

    பெற்றோரை தவித்து தேடும் குழந்தையிடம் விசாரணை ஜோக்கும் நன்றாக உள்ளது.

    அந்த பிரமுகர் ஆரஞ்சு பழ தோலாவது இலவசமாக தருவாரா? இல்லை அதற்கும் வேறு ஏதாவது கெடுபிடிகள் உண்டா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஹா. ஹா. ஹா.

    வினுவின் படம் மிக அழகு. உயிரோவியம்..
    அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களையும் சொல்லி இருப்பது சிறப்பு கமலா அக்கா. அனைத்தையும் ரசித்திருப்பதற்கு நன்றி.

      நீக்கு
  34. சின்ன வயசில் விபரம் தெரியாத போது மதுரை காக்காத்தோப்புத் தெரு, லக்‌ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம்னு இருந்ததாக அம்மா சொல்லுவார். என்னோட நினைவுகள் கழுதை அக்ரஹாரத்தில் ஆரம்பிக்கின்றன. அதன் பின்னர் வடுகக் காவல் கூடத்தெரு, மேலாவணி மூலவீதி, வடக்குக் கிருஷ்ணன் கோயில் தெருனு இருந்தோம். நான் கல்யாணம் ஆனதும் அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் மேலமாசி வீதி, தலைவிரிச்சான் சந்தில் இருந்தாங்க. அங்கே தான் என் பெண், பிள்ளை இருவருமே பிறந்தனர். அதுக்கப்புறமா அவங்க ஆழ்வார்ப்பேட்டை ராமசாமி நாயக்கன் தெரு, பின்னர் அம்பத்தூர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... காக்காத் தோப்புத் தெருவில் நாங்களும் இருந்திருக்கிறோம்!

      நீக்கு
  35. நாங்க கல்யாணம் ஆன புதுசில் முதலில் வில்லிவாக்கத்தில் இருந்ததும், பின்னர் அம்பத்தூர் போனதும் எழுதி இருந்தேன். அதன் பின்னர் ராஜஸ்தான் அரசு ராணுவக் குடியிருப்பு வாசம், பின்னர் செகிந்திராபாதில் இரண்டு வீடுகள், பின்னர் மீண்டும் அம்பத்தூர், சொந்த வீடு, மீண்டும் ராஜஸ்தான், குஜராத் அரசுக் குடியிருப்புகள், சொந்த வீடு, வாடகைக்கு இருந்த நாத்தனாரின் ஓர்ப்படி வீடு, இப்போது ஸ்ரீரங்கம் வீடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் ஒரே வீட்டில் அத்தனை வருடங்கள் குடியிருந்தது பற்றி ஸ்பெஷலாகச் சொல்லி இருக்கிறேன் கீதா அக்கா...

      நீக்கு
    2. தெரியும், ஆனால் ஒவ்வொரு வீட்டுக்கும் எங்களுக்கும் ஒரு சில நினைவுகள், பந்தங்கள், பாசங்கள். கடைசியாகச் சில வருடங்கள் தொடர்ந்து இருந்தது அம்பத்தூர் வீட்டிலே தான். பனிரண்டு வருடங்கள்!அதிலும் 2000 ஆம் வருடத்திலிருந்து 3 வருடங்கள் அரவங்காடு.

      நீக்கு
  36. மதனின் இந்த நகைச்சுவைத் துணுக்குகளைப் படித்த நினைவே இல்லை!!!!!!!!!!! வினுவின் படம்/ஓவியம் அழகு! ஏதோ கடுமையான வாக்குவாதமோ? மாலனின் இந்தக் கவிதை படிச்ச நினைவு இருக்கு. வீடு என்பது நினைவு அல்ல. நம் உணர்வுகள். உயிர் போன்ற இடம். ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு கதையைச் சொல்லும். எனக்கு நாங்க இருந்த வீடுகளைக் குறித்த நினைவுகள் வரும்போதெல்லாம் அங்கே நிகழ்ந்த சம்பவங்கள் திரைப்படம் போலஓடும். இந்த வீட்டில் இப்படி நடந்ததே என்னும் எண்ணம் வரும்.உங்களைப்போல் எங்களுக்கும் குடி இருந்த வீடுகளில் சில ரொம்பப் பிடித்தமான வீடுகள். அதில் ராஜஸ்தானில் நசிராபாதில் இருந்தஒரு ராணுவக்குடியிருப்பும், செகிந்தராபாதில் குடி இருந்த வீடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடு என்பதே நினைவுகளால் ஆனதுதானே... வெறும் செங்கல் சுண்ணாம்புக்கு உணர்வுகளை ஏற்றுவது அனுபவ நிகழ்வுகள்தானே..

      நீக்கு
  37. உண்மைதான் ஸ்ரீராம், உங்களுக்கு வரும் பீலிங்ஸ்தான் எனக்கும் எப்பவும் வரும்.. இதில் இனி ஆர் வந்து இருப்பார்கள்.. இதை எப்படிப் பாவிப்பார்கள் என்றெல்லாம் நினைப்பேன்... ஆனா எனக்கு[எங்களுக்கு] பொதுவாக இலங்கையில் ஏற்பட்ட வீட்டு மாற்றம் என்பது, திரும்பி வந்திடலாம் என வெளிக்கிட்டுப் பின்னர் அப்படியே போக முடியாமல் போன வீடுகளே.. அதனால உங்களைப்போல கவலைப்பட்டு எழும்பி போகவில்லை வீட்டைவிட்டு.. வீட்டை விட்டுப் போன பின்பே அதை நினைச்சு கவலைப்படும் நிலை:))..

    ஆனா இப்போ நம் பிள்ளைகளில் உள்ள ஒரு பழக்கம், இப்படியான ஃபீலிங்ஸ்களுக்கு அடிமையாவதே இல்லை.. அனைத்தையும் ஈசியாக எடுக்கப் பழகி இருக்கிறார்கள்... இவர்களின் பிறைமறி ஸ்கூல் பார்த்து நாம் பீல் பண்ணுகிறோம், குட்டியாக கையைப் பிடிச்சுக் கொண்டு போய் விட்ட ஸ்கூல் என, ஆனா பிள்ளைகளைக் கேட்டால்.. மிஸ் பண்ணவில்லை.. என்கின்றனர்... ஒருவேளை அதை விட பின்னர் போகுமிடங்கள் நன்றாக இருப்ப்பதாலோ தெரியவில்லை...

    நீங்க சொன்னதைப்போல, இன்னும் கொஞ்சக் காலம் போனதும் இந்த வீடு நன்கு பிடிச்சு விடும்.

    நான் கார் மாற்றும்போது இப்படி எல்லாம் கவலைப்பட்டிருக்கிறேன், புதுக்கார் கொஞ்சக்காலம் ஒரு மாதிரி இருக்கும் பின்பு அதுவே சூப்பராக மாறி விடும்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் என்னைப் போலவே நினைப்பது மகிழ்ச்சி அதிரா. உங்கள் இலங்கை நினைவுகள் இன்னும் நெகிழ்ச்சியாக இருக்கும்.

      நீக்கு
  38. வீட்டுக் கவிதை அழகு... அனைத்தும் நம் மனதில் தான் இருக்கிறது.. கல் என்றால் கல்தான், சிலை என்றால் அது சிலைதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலனின் அந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்.

      நீக்கு
  39. ஜோக்ஸ் அனைத்தும் ஓகே... மதன் ஜோக் நன்று.

    //கீழ்க்காணும் படத்துக்கு கதை, கவிதைகள் வரவேற்கப்படுகின்றன!!//

    ஆஹா அருமை... அழகு... துரை அண்ணன் இப்போ எழுதத் தொடங்கியிருப்பார்ர்.. இனி கதை எழுதுவதைக் குறைசு எல்லோரையும் கவிதை எழுதச் சொல்லோணும் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணன் கதைகளில் கலக்கி வருகிறார். கவிதை ஒன்று முன்னர் எழுதி வைத்திருப்பதாய்ச் சொன்னார். இன்னமும் அனுப்பவில்லை!

      நீக்கு
    2. இதெல்லாம் சரிதான்...

      ஆனால் -
      செவ்வாய்ச் சிறுகதை மட்டும் மறந்து விடும்!..

      அப்புறமாக வந்து வாசிப்பீர்கள் என்று இரண்டு நாட்களாகக் காத்திருக்கிறேன்..

      நீக்கு
    3. அதிராவைத்தானே சொல்கிறீர்கள்?!!

      நீக்கு
    4. //
      ஸ்ரீராம்.5 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 7:59
      துரை அண்ணன் கதைகளில் கலக்கி வருகிறார். கவிதை ஒன்று முன்னர் எழுதி வைத்திருப்பதாய்ச் சொன்னார். இன்னமும் அனுப்பவில்லை!//
      நானும் அதை இன்று நினைத்தேன் ஸ்ரீராம், பல வியாழனில் துரை அண்ணனின் கவிதை வந்திருக்கோ எனத் தேடி ஏமாந்திருக்கிறேன் எனச் சொன்னால் நம்பவா போறீங்க...

      நீக்கு
    5. //துரை செல்வராஜூ5 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 9:00
      இதெல்லாம் சரிதான்...

      ஆனால் -
      செவ்வாய்ச் சிறுகதை மட்டும் மறந்து விடும்!..

      அப்புறமாக வந்து வாசிப்பீர்கள் என்று இரண்டு நாட்களாகக் காத்திருக்கிறேன்..//

      துரை அண்ணன், சத்தியமாக நானும் நினைத்திருந்தேன் இம்முறை துரை அண்ணன் கதைதான் வரும், எப்படியாவது படிச்சுக் கொமெண்ட்ஸ் போடோணும் என, ஆனா நம்ப மாட்டீங்கள்.. திங்கள் ஆரம்பித்த தலையிடி, புதன் வரை தொடர்ந்துது.. ஒரு கண்ணைத்திறக்க முடியாமல் குத்தத் தொடங்கிவிட்டது.. காலையில் ஓகேயாக இருக்கும்.. மத்தியானத்துக்கு மேல் அதிகரிச்சிடும்...
      அது முக்கியமாக, ஸ்கிரீன் பார்க்க முடியாது... அப்படியிருந்தாலும் நான் இதை எல்லாம் வெளியே சொல்வதில்லை, இப்படி நேரத்திலும், ஒரு கண்ணை மூடியபடிகூட போஸ்ட்டுகளுக்குக் கொமெண்ட்ஸ் போட்டதுண்டு..

      ஆனா இது கதை என்பதாலதான் பிரச்சனையே.. படிச்சுத்தானே போட வேண்டும் என்பதால, ஆறிவிட்டது என விட்டு விட்டேன்.. என் கொமெண்ட்ஸ்க்காகக் காத்திருக்கிறேன் எனச் சொல்லி எனை நெகிழ வச்சிட்டீங்க.. இதோ போகிறேன் படிக்க..

      சொல்ல மறந்திட்டேன், இதுகூட என் செக்:)) சொல்லித்தான் பார்க்கிறேன், நோட்டிபிகேசன் வைக்கவில்லை இன்று, அதனால தெரியவில்லை எனக்கு...

      நீக்கு
    6. //ஸ்ரீராம்.5 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 9:23
      அதிராவைத்தானே சொல்கிறீர்கள்?!!///

      தன்னைச் சொல்கிறாரோ.. எனும் சந்தேகத்தைக் கேட்டுத் தெளிவாகிறாராமாம்ம்ம்ம் ஸ்ரீராம் ஹா ஹா ஹா:))

      நீக்கு
  40. பதிவு பீலிங்ஸ்க்குள் கொண்டு போகப் பார்கிறது இன்று.... புது வீட்டில் மன நிம்மதி மகிழ்ச்சி.. பொங்கட்டும் ஸ்ரீராம் உங்கள் எல்லோருக்கும்... இனித்தானே நிறைய நல்ல விஷயங்கள் நடக்க இருக்கின்றன.. விரைவில் நடக்கட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீலிங்ஸுக்குள் கொண்டு போனால் தப்பா அதிரா?!!! இனிமையான நினைவுகள்தானே?

      நீக்கு
  41. 'வீடென்று' நல்ல wrote-up. நினைவுகள் முட்டி மோதி வந்து வார்த்தைகளாக தங்களை சமைத்துக் கொண்டது நன்றாகத் தெரிகிறது.
    'உங்களில் எத்தனை பேர் உங்கள் அனுபவங்களைச் சொல்லப் போகிறீர்களோ' என்று கேட்டிருக்கக் கூடாது, நீங்கள். இந்த மாதிரியான சுய அனுபவங்கள் உங்களுக்கேச் சொந்தனமான அளவுக்கு உங்களில் ஒன்றிக் கலந்தவை. அதை இன்னொருவரின் அனுபவத்தோடு -- அது எப்படிப்பட்ட மேன்மை உடையதாய் இருக்கட்டுமே -- சரிக்கு சமமாக நிறுத்தி வைத்து ஒத்திப் பார்க்கக் கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்... இது மாதிரி அனுபவங்களைப் படிக்கும் யாருக்குமே தங.கள் அனுபவத்தை ஒப்பிட்டுப் பார்க்கவும், சொல்லவும் தோன்றும். அதுதான் குறிப்பிட்டுள்ளேன். ஜி எம் பி ஸார் தனியாய் ஒரு பதிவே எழுதப் போகிறார்...

      நன்றி ஜீவி ஸார்.

      நீக்கு
  42. மதன் வழக்கம் போல என்றால் வினு அந்தப் பெண்ணின் கண்களில் என்னவொரு பாவத்தைக் கொண்டு வந்திருக்கிறார் என்று மலைத்துப் போனேன். 'வேறு யாரேனும் பார்த்து விடுவார்களோ?' என்று ஓரக்கண்ணை அதற்காகவே ஒதுக்கி... பொதுவாகவே இந்த மாதிரி வாய்ப்பு கிடைத்த சமயங்களில் ஆண் மட்டும் சூழ்நிலையே நினைவில் இல்லாமல் மொத்த மனமும் பறி போயிருக்க, பெண் மனம் மட்டும் சுற்றுப்புற பிரக்ஞையை மறக்காது இருப்பது -- இந்த மாதிரி உணர்வுகளுக்கெல்லாம் பொழிப்புரை எழுதினால் அந்த மேலான உணர்வுகளை கொச்சை படுத்தி விடுவோமோ என்று தயங்கத் தான் வேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வினு வரையும் ஓவியங்களில் கண்கள் ஸ்பெஷல்தான் ஜீவி ஸார்

      நீக்கு
    2. காலையில் இருந்து இதே நினைவுதான்...

      இலக்கியமான அந்த ஓவியத்திற்கு எதையாவது எழுதப் போய் -

      அதில் அந்த நளினம் பிரதிபலிக்காவிட்டால் என்ன செய்வது என்று...

      நானும் வினுவின் சித்திரங்களுக்கு ரசிகன்..

      நீக்கு
    3. முயற்சிப்பதில் தவறில்லையே...

      நீக்கு
  43. புதிய வீடு - வாழ்த்துகள் ஸ்ரீராம். பழகிய வீட்டை விட்டு வருவது கொஞ்சம் கடினமான விஷயம் தான். தில்லியில் இப்படி சில வீடுகள் - நான் கூட சமீபத்தில் தான் வீடு மாற்றினேன் - அதே குடியிருப்பில் வேறு எண்ணிற்கு மாற்றம்!

    வீடென்று - பாலகுமாரன் தனது கதை ஒன்றில் இந்தக் கவிதையை எடுத்தாண்டு இருப்பார். அவர் எழுதியது என்றே தான் இதுவரை நினைத்திருந்தேன்.

    தொடரட்டும் சிறப்பான பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட். பாலகுமாரன் மாலன் இந்துமதி எல்லாம் ரொம்ப ப்ரெண்ட்ஸ் என்று படித்திருக்கிறேன். சுப்ரமணியராஜுவும் இந்தக் குழுவில் உண்டு.

      நீக்கு
  44. அருமை. 25+ வருட சொந்தம் (வாடகை வீடாக இருந்தாலும்) பிரிவு mixed emotional ஆக தான் இருக்கும்.

    அதில் சில வருட நினைவுகள் எனக்கும் இருப்பது + இந்த புதிய upgradeயில் மகிழ்ச்சியே

    பதிலளிநீக்கு
  45. என்னது புது வீடு வாங்கி இருக்கீங்களா? வாழ்த்துக்கள்....ஆமாம் ட்ரீட் எப்போ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மதுரை. வாழ்த்துகளுக்கு நன்றி. வீட்டுக்கு வாங்க... பழைய சோறும் பச்சை வெங்காயமும் கொடுத்திடுவோம்... ஹா.... ஹா..் ஹா...

      நீக்கு
  46. அவன் ஏதோ காரணத்தினால் தவறு இழைத்துவிட்டானோ? அல்லது அவளைப் பிரிந்து செல்லப் போகிறானோ? அவள் முகம் கோபம்,வருத்தம் கலந்து ஒரு பக்கமாக முகத்தைத் திருப்பிவிட்டாளே!

    பதிலளிநீக்கு
  47. வீட்டு நினைவுகள் எனக்கும் மேலோங்கி எழுந்துள்ளன. எழுதலாமோனு நினைச்சால் ஏற்கெனவே வல்லியும், ஏஞ்சலும் தொடங்கி இருக்காங்க போல!

    பதிலளிநீக்கு
  48. வெறும் சுவர்களால் ஆனதா வீடு? உணர்வுகளால் ஆனது. அனுபவங்களல் ஆனது.

    உண்மை
    உண்மை

    பதிலளிநீக்கு
  49. வீடு குறித்த பகிர்வு நெகிழ்வு. மொட்டை மாடியில் வாசிப்பு, காகங்களுக்கு உணவு கொடுப்பது போன்ற உங்கள் முந்தைய பகிர்வுகளும் நினைவுக்கு வந்தன. வீடு நிச்சயமாக உணர்வு கொண்டது. வீட்டுக்கும் நமக்குமான பந்தம் மனதின் ஒரு ஓரத்தில் என்றும் வாழும். புது இல்லத்திலும் எல்லாம் சிறப்பாகவே நடக்கும். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!