புதன், 8 ஜூலை, 2020

ஆசிரியர்களில் காசு சோபனா என்பவர் யார்?


நெல்லைத்தமிழன் : 

ஜோசியம் பார்ப்பதால் என்ன நன்மை? நீங்க ஜோசியம் பார்த்து பலித்த சம்பவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்


# நான் எனக்காக ஜோசியம் பார்த்ததில்லை. என் திருமண சமயத்தின் போதுகூட என் தந்தையார் மேம்போக்காக ஜாதகங்களை பார்த்தது அன்றி ஜோசியரிடம் போனது இல்லை. ஆனால் எங்கள் அலுவலகத்தில் ஒரு பெண்மணி வந்து எல்லாருக்கும் ஜோசியம் சொன்னார்.
அதுகூட அவர் ஜாதகம் ராசி நட்சத்திரம் பார்த்து சொல்லவில்லை எல்லாரையும் ஒரு பூ , ஒரு மரம் , ஒரு கனி என்று சொல்லச் சொல்லி அதன் அடிப்படையில் சில ஜோசியங்கள் சொன்னார் . என் முறை வந்தபோது " வாழைப்பூ சவுக்கை மரம் பலாப்பழம் " என்று சொன்னேன். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு " நீங்க ஒரு ஃப்ரீக்"  என்று சொல்லி விட்டு , எனக்கு ஒரு ஜோசியம்  சொன்னார்.  அதாவது என் பிற்கால நாட்களில் நான் ஒரு லட்சாதிபதி ஆவேன் என்று சொன்னார் . அவர் அப்படிச் சொல்லும்போது இலட்சாதிபதி என்பது எல்லோருக்கும் எட்டாத கனவு. ஆனால் நான் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது லட்ச ரூபாய் என்பது கிட்டத்தட்ட எல்லோருக்கும் எட்டும் கனி ஆகிவிட்டது. ஜோசியம் பலிக்குமா இல்லையா என்பதை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்.

& ஜோசியம் பார்ப்பதால் எந்த நன்மையையும் இல்லை. எது நடக்கவேண்டும் என்று நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ அது நிகழ்ந்தே தீரும். பரிகாரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லாம் பயனில்லாதவை. அவற்றால் கொஞ்சம் மன ஆறுதல் அடையலாம். அவ்வளவுதான்.  
ஜோசியம் பார்ப்பவர்களில் காசுக்காகப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் சரியான பலன்கள் சொல்வது இல்லை. காசு சம்பாதிக்க என்ன சொல்லவேண்டுமோ அதை மட்டும் சொல்லி சம்பாதிப்பார்கள். என்னைப்பொறுத்தவரை நான் இதுவரையிலும் எனக்காக, காசு கொடுத்து எந்த ஜோசியமும் பார்த்ததில்லை. பொதுவாக பத்திரிக்கைகளில் வருகின்ற நாள் பலன், நட்சத்திரப் பலன், ராசி பலன், சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி போன்ற பெயர்ச்சிப் பலன்கள் எல்லாவற்றையும் படிப்பேன். நல்ல பலன் சொல்லியிருந்தால் சந்தோஷப்படுவேன். 
இதுவரையிலும் வாழ்க்கையில் எனக்குத் தெரிந்து, சனிப்பெயர்ச்சி தாக்கம் மட்டும் , நல்லதோ கெட்டதோ - எனக்கு ஓரளவுக்கு சரியாக நடந்து வருகிறது.   


 தினமும் பத்தாயிரம் தப்படி நடக்கணும், ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது, சாதம் சாப்பிடுவது வெறும் கார்ப், பயனில்லை என்று யாரோ நாம் என்ன செய்யணும்னு இயக்குவது போலத் தெரியலையா?

# அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்தான் என்றாலும், இந்த மாதிரி ஆலோசனைகளில் ஓரளவு பயன் உண்டு . அதற்கு ஓர் அடிப்படை உண்டு என்பதும் உண்மைதானே. தெரிந்தோ தெரியாமலோ உடல் பயிற்சி செய்கிறோம், ஓரளவு ஆரோக்கியமான உணவை உண்கிறோம் என்பதால் நல்லது நடப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இருந்துவிட்டுப் போகட்டுமே.

& சொல்பவர்கள் ஆயிரம் சொல்லட்டுமே! 'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் ..... ' 
என்னைப் பொருத்தவரையிலும் உணவு வகைகளில், எது வாய்க்குப் பிடித்திருக்கிறதோ, மனதுக்குப் பிடித்திருக்கிறதோ அதை அளவோடு சாப்பிட்டு அதோடு நிறுத்திக்கொள்வேன். தினமும் குறைந்தது மூன்று கிலோமீட்டர் தூரம் நடப்பேன். அவ்வளவுதான். 

 
ஆசிரியர்களில் காசு சோபனா என்பவர் யார்?

#, $ & *: இது என்னங்க, இவ்வளவுநாள் கழிச்சு உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம்? ஆசிரியர்களில் காசு சோபனா என்பவர் காசு சோபனாதான்! 

நீத்தார் கடன் என்பது தர்ப்பணங்கள், ச்ராத்தம் இவைகளைக் குறிக்கிறதா?

# ஆம் . மற்றபடி ஒருவர் இறந்த உடனே அவருக்குச் செய்யப்படும்  காரியங்களை அபரக் கிரியை அல்லது நீத்தார் கடன் என்று குறிப்பிடுகிறோம்.

எபி வாசகர்கள் ஆசிரியர்கள் சந்திக்க எப்போது வாய்ப்பு உண்டு? எந்த சந்தர்ப்பம்?

# தொற்று தொடரா நன்னாள் வரக் காத்திருப்போம். 

மதம் வளர வளர, சனாதன தர்மத்தில் தெய்வங்கள் அதிகமாகினவா இல்லை அவரவர் தங்கள் மனதிற்கேற்ப தெய்வங்களை உருவகப்படுத்தினரா?

 # தனிமனிதர் ஒருவர் "தெய்வம்"  ஒன்றை உருவகித்து "வளர"   விடுவது அசாத்தியமாகவே படுகிறது.  எனினும் விஷ்ணு, துர்க்கை என தெய்வ வடிவங்கள் எப்படி முதலில் உருவகிக்கப்பட்டன என்பது சிந்தனையைத் தூண்டும் வினா. வேதத்தில் குறிப்பிடப் படவில்லை என்று சொல்லக் கேள்வி.  இதை ஆராய்ச்சி செய்ய சாத்தியக்கூறுகள் உண்டா என்று தெரியவில்லை.

& கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர். ஐம்புலன்களால் உணரப்படும் பொருட்கள் எல்லாவற்றுக்கும் ஒரு பெயரும், வடிவமும் கொடுத்துவிடுவது,  அவற்றை மனதில் இருத்திக்கொள்வதற்கு  எளிமையான வழி. அதே வகையில் படைப்பாளிகள் சிலர், ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட சக்திக்கும் பெயர், வடிவம் என்று உருவகப்படுத்தினர். கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான், கேள்வியே பதிலாக கண்ணன் வந்தான் - கண்ணன் வந்தான் 'மாய'க்கண்ணன் வந்தான்! (இன்னும் விளக்கமாக எழுதலாம். படிப்பவர்கள் ஓடிவிடுவார்கள்!)

அதிகாலை நடைப்பயிற்சிக்கு போகும்போது அனேகமா யாரும் இருக்க மாட்டாங்க அல்லது 20 அடிக்கு மேல் தள்ளி இருப்பாங்க. அப்போ மாஸ்க் போடணுமா? சுத்தமான காற்றை சுவாசிப்பது முக்கியம் இல்லையா?

ஜாகிங், நடைப்பயிற்சி செய்யும்போது மாஸ்க் போடக்கூடாது என்றுதான் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.  ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செல்லும்போது ஒருவர் பின் ஒருவராகச் செல்லாமல் அருகருகே இடைவெளி விட்டுச் செல்லவேண்டுமாம்.  இல்லாவிட்டால் முன்னால் போகிறவர் மூச்சுக்காற்று பின்தங்கி பின்னால் வருபவரை பாதிக்குமாம்.

#  மாஸ்க் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. எனவே வெளியில் கால் வைத்தால் மாஸ்க். 
(இது போன்ற கேள்விகளுக்கு நம்பகமான பதிலளிக்க நம் போன்றவர்களுக்குத் தகுதி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.) மாஸ்க் மூச்சுக் காற்றை மாசு படுத்தாது.

 ( *ஆனால் கார்பன் டை ஆக்ஸைடு சுழற்சியை அதிகரிக்கும்.  யாரும் அருகில் இல்லாவிடில் கொஞ்சநேரம் மாஸ்க்கை விலக்கி வெளிக்காற்றை சுவாசியுங்கள்.  இல்லாவிட்டால் தலை கிறுகிறுப்பு, லேசான தள்ளல் போன்ற மயக்கங்கள் வரலாம்) 

& எனக்கு சாதாரண 'washable type' முககவசம் அணிந்து நடைப்பயிற்சி செய்வது வழக்கமாகிவிட்டது. சமூக இடைவெளியும் கடைபிடிக்கிறேன். இந்த வகை முககவசத்தால்  கொ தொ வை விலக்க இயலாது என்று நன்றாகத் தெரியும். ஆனால் அதை அணிவது எதற்குப் பயன்படுகிறது என்று சொல்கிறேன். முகத்தை அடிக்கடி தொடும் பழக்கம் என்னிடம் எப்போதும் உண்டு. மாஸ்க் அணிந்திருக்கும் நேரங்களில் முகத்திற்கு அருகே கை தன்னிச்சையாக கூட செல்லாது. மேலும் கையால் எதையும் தொடாமல் இருப்பதற்கு ஒரு ஜாக்கிரதை உணர்வு, மாஸ்க் அணிந்திருக்கையில் வருகின்றது. ஆகவே, நடைப்பயிற்சி நேரத்தில், முககவசம் அணிவது, என்னைப் பொறுத்தவரை மிகவும் நல்லது.
  =================

நிலா மேடை 

மின்நிலா 007 சுட்டி 

'எங்கள் ப்ளாக்'ல இல்லாத சில பகுதிகள், மின்நிலாவில் சென்ற வாரம் முதல் வெளியாகின்றன :








மேலும், பதிவுகளுக்கு இடையே kayjee எடுத்த படங்கள்.


அட்டைப்படத்தில் ஊட்டி 2020 மலர்க்கன்காட்சியில் எடுக்கப்பட்ட படங்கள் : 


இவை மட்டும் அல்ல, புத்தகத்தின் பொருளடக்கம் பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு தலைப்பை சுட்டினால், நேரே உங்களை அந்தப் பகுதிக்கு இட்டுச்சென்று அதை நீங்கள் படிக்க ஒரு வசதி. 

படித்த பின், அந்தப் பகுதியின் இறுதியில் வருகின்ற 'பொருளடக்கம்' என்பதை சுட்டினால், மீண்டும் பொருளடக்கம் பகுதிக்கு திரும்ப வரலாம். 

எல்லா முன்னேற்றங்களும், வாசகர்களின் வசதிக்காக செய்துள்ளோம். 

இந்த இலவச வார இதழை நீங்களும் படிக்கலாம், பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பலாம். 

இதுவரையிலும் வெளியான நிலா இதழ்கள் எல்லாவற்றையும் ஆன்லைனில் நீங்கள் நம்ம ஏரியா வலைப்பூவில் படிக்கலாம். 
லிங்க் :    engal6@blogspot.com   

================
மீண்டும் சந்திப்போம் !
================







91 கருத்துகள்:

  1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் அன்பு ஶ்ரீராம்,அன்பு துரை மற்றும் வரப்போகும் சக வாசகர்களுக்கும் எப்பொழுதும் ஆரோக்கியம் மன அமைதி கிடைக்க பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. கேள்விகள்,பதில்கள் அருமை. நல்ல கேள் விகள் கேட்ட நெல்லைத். தமிழனக்கு வாழ்த்துகள்.. எனக்கும் காசுசோபனா என்ற கேள்வி இருந்தது:) இப்போது இது அதன் பதில் என்றால் நாசூக்காக. விலகி விட வேண்டியதுதான்.!

    பதிலளிநீக்கு
  5. ஜோசப் பலிச்சவங்க நிறையபேர் இருப்பாங்ஐ. எனக்கும் நாள் கணக்கில் சொல்லி பலித்திருக்கிறது. மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோசியம்னு தட்டச்சினா அது ஜோசப்புனு வந்திருக்கு போலிருக்கு. நமக்கென்ன வந்தது. தலையைப் பிச்சிக்கறவங்க, இதைப் படிப்பவர்கள்தானே

      நீக்கு
    2. ' ஜோசியம் சப்ஜெக்ட் ' என்பதை சுருக்கி, ஜோசப் என்று சொல்கிறீர்கள் என்று நினைத்தேன்!

      நீக்கு
    3. எனக்கும் இப்படித்தான் சிலசமயங்களில் நேர்கின்றது...

      நீக்கு
    4. எனக்கு பலசமயம்!   கேள்விப்படுகிறேன் என்று டைப்பினால் அது கோபப்படுகிறேன் என்று சொல்லும்.  படிக்கத் என்று டைப்பினால் படிக்காத என்று வரும்.  கவனிக்கவில்லை என்றால் அவ்வளவுதான்!

      நீக்கு
    5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  6. மாஸ்க் பொறுத்தவரைல நடைப்பயிற்சி தனியா செய்தா போடவேணாம்னு சொல்றாங்க.கொரோனா கேரியர் இருமி அது காற்றில் இருந்தால் நமக்குத் தொற்றிக்கொள்ளும்னும் சொல்றாங்க. நான் வெகு சீக்கிரம் நடக்கச் செல்வதே புத்தம் புதிய காற்றை சுவாசிக்கத்தான். மாஸ்க் அணிந்தால் நம் கார்பன்டைஆக்சைடு திரும்பவும் நாமே சுவாசிப்போமே. ஆனால் எல்லோர் சொல்வதைக் கேட்டால் குழப்பம் மிஞ்சுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது புதிய தகவல் காற்றிலும் வைரஸ் பரவுகிறது என்கிறார்கள்.  இதுவரை அபப்டி இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.   நேற்றைய செய்தி.

      நீக்கு
    2. அட. ராமா...(உங்களைச் சொல்லவில்லை.. ) இது வேறேயா? ஏற்கனவே இருப்பது போதாதென்று இன்னமும் பீதியை கிளப்புகிறதே !! இங்கு அருகருகில் நிறைய பேருக்கு தொற்று பரவி வருகிறது என அச்சம் கொண்டு இருக்கிறோம். என்னவோ..! நடப்பது நடந்துதானே தீரும்.

      நீக்கு
    3. காற்றிலும் பரவும், இரண்டு வீடுகள் தள்ளி ஒருவர் இருமி, நாலு மணி நேரம் கழித்து நம்ம வீட்டு சன்னலைத் திறந்தா நம்மைத் தொத்திக்கும்னா என்னதான் பண்ணறது?

      நீக்கு
    4. என்னுடைய கவலை..   வீட்டை விட்டு வெளியேயே போகாதவருக்குக் கூட தொற்று வந்திருக்கிறது.   அது எப்படி என்பதுதான் தலையைப் பிச்சுக்க வைக்கும் விஷயம்.

      நீக்கு
    5. கொரோனா வைரஸ் காற்றில் பரவும், ஆனால் அதிக தூரம் பரவாது, அதனால்தான் சமூக இடைவெளியை கடைபிடிக்கச் சொல்கிறார்கள். 

      நீக்கு
  7. ஜோஸ்யம் ஒரு நல்ல சாஸ்திரம். நல்ல படியாகச் சொன்னவர்களும். உண்டு. எங்கள் திருமணத்தின் போது நெல்லூர் என்பவர் இருந்தார் .அவர் சோழிகள் பார்த்து சொல்பவர். எங்களுக்கு பொருத்தம் சொன்னவர் அவரே. மதுரையின் ஜோஸ்யரும் அதையே சொன்னார். பிறகு நடந்தது எல்லாம் தெரியும். சனிதிசையில். நம்பிக்கை உண்டு. எல்லாவற்றுக்கும் மேலே இறை நம்பிக்கையை விடாமல். இருந்தால் நிம்மதி உண்டு.

    பதிலளிநீக்கு
  8. காசு சோபனா கேள்வி ஶ்ரீராமுக்குமா இதுவரை வரவில்லை?

    பதிலளிநீக்கு
  9. மின் நிலாவின் புதிய அம்சங்கள் அருமை. படங்களும் தான். பானு வெங்கடேஸ்வரன் அறிமுகம் நல்ல ஜோர்.மின் நிலா அப்டேட் தினம் கொடுக்கலாமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்நிலா அப்டேட் தினமும் கொடுப்பதா! அது வாராந்தர பத்திரிகை ! வாரம் ஒருமுறை கொடுத்தால் போதாதா!

      நீக்கு
    2. பானு வெங்கடேஸ்வரன் அறிமுகம் நல்ல ஜோர். நன்றி வல்லி அக்கா.

      நீக்கு
    3. True. I miss out some portions. Thats why I asked for an update ji.:)

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனாவில் இருந்து அனைவரும் விரைவில் விடுபடப் பிரார்த்திப்போம். சென்னையில் கொஞ்சம் குறைந்திருப்பதாகச் சொல்கின்றனர். விரைவில் சென்னை கொரோனாவில் இருந்து விடுபடவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. அது சரி... இன்னைக்கென்ன பிரார்த்தனைகள் சொல்ல லேட் ஆகியது?

      நீக்கு
    3. ஒரு குறிப்பிட்ட முகூர்த்தத்தில் பண்ணினால்தான் பிரார்த்தனை பலிக்குமாம்.  அதுதான்.

      நீக்கு
    4. லேட்டெல்லாம் இல்லை. கணினியில் உட்கார்ந்ததும் சில நாட்கள் சொந்த வேலைகளை முடிக்க வேண்டி வரும். அப்போப்பதிவுகளுக்கு வர தாமதம் ஆகும். :))))))

      நீக்கு
  12. இந்தக் காசு சோபனா யாருனு நானும் ஸ்ரீராமைக் கெஞ்சி, அதட்டி, உருட்டி, மிரட்டிப் பார்த்துட்டேன். ம்ஹூம்! அதென்னமோ அவரைப் பற்றிய விபரங்கள் ரகசியமாவே இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்தக் கேள்விக்கு # $ & * எல்லோரும் சேர்ந்தே ஒரே குரலிசை இசைத்திருக்கின்றனர். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஸ்ரீராமைக் கெஞ்சி, அதட்டி, உருட்டி, மிரட்டிப் பார்த்துட்டேன். // ஹா ஹா ஹா ! பாவம் ஸ்ரீராம்!

      நீக்கு
    2. எதுக்குமே மசியவில்லை என்றால் என்னதான் செய்வது?..

      நீக்கு
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆ"சிரி"யக் குழு மொத்தமுமே காசு சோபனா அவங்களோட வலைப்பக்கமென்கின்றனர். இதென்ன அநியாயம், அராஜகம், அக்கிரமம்! அதோட கௌதமன் இத்தனை வலைப்பக்கம் வைச்சிருக்கிறதும் இப்போத் தான் கண்டு பிடிச்சேன். கேஜி/தான் தான் காசு சோபனா என்கிறார். ராமன்/தான் தான் என்கிறார். கௌதமன்/தானும் காசு சோபனா என்றால் ஸ்ரீராமோ/அது நான் மட்டுமே என்கிறார். :))))))

      நீக்கு
    4. ஒரு வகையில் நீங்களும் காசு சோபனாதான்!

      நீக்கு
  13. இம்முறை * ஸ்ரீராமும் ஒரு சில கேள்விகளின் பதிலைச் சொல்லி இருக்கார். மாஸ்க் அணிவது பற்றி ஸ்ரீராம் சொல்லி இருப்பது தான் என் கருத்தும். அவர் சொல்வது போல் இப்போது காற்றில் கொரோனா பரவும் என்றும் சொல்கின்றனர். நேற்றைய செய்திகளில் நாங்களும் பார்த்தோம்.

    பதிலளிநீக்கு
  14. ஜோசியம் பற்றிச் சொல்ல நிறைய இருந்தாலும் அது ஓர் பதிவாகிடும் என்பதால் நிறுத்திக்கிறேன். உண்மையான ஜோசியர்கள் சொல்வது பலிக்கிறது/பலித்திருக்கிறது/பலிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையான ஜோசியர்களைக் கண்டுபிடிக்க யாரிடம் ஜோசியம் பார்க்கணும் என்பதையும் எங்க கீசா மேடம் சொல்லியிருக்கலாம்.

      நீக்கு
    2. உண்மையான ஜோசியர்கள் பிசினஸ் மாதிரி செய்து காசு வாங்க மாட்டார்கள்.  சிலசமயங்களில் தட்சிணை மாதிரி பெற்றுக்கொள்வார்கள்!

      ஜோசியர்களுக்கு வாக்கு காலம் என்று ஒன்று இருக்கிறதாம்.  அந்த காலம் இருக்கும் வரை பலிக்கும்.  எந்த ஜோசியராய் இருந்தாலும் ஒன்று கவனித்துப் பாருங்கள்.  நமக்கே தெரிந்த கடந்த காலம் பற்றி எல்லாம் சரியாகச் சொல்வார்கள்.  எதிர்காலம் பற்றி அவர்கள் சொல்வது பெரும்பாலும்...

      நீக்கு
    3. ஏற்கெனவே சொல்லி இருக்கேன். எங்க அப்பா பார்த்த ஜோசியர் பற்றி. அதைத் தவிரவும் என்னோட நண்பர் ஒருத்தர் சிவானு கையும் பார்ப்பார், ஜோசியமும் பார்ப்பார். எனக்குப் பதினேழு வயசில் சொன்னவை எல்லாம் நடந்தது. அப்புறமாய் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உடன் வேலை பார்த்த லக்ஷ்மி என்னும் பெண்மணி சொன்னதும் நடந்தது. அப்போ எங்க பெண் வயிற்றில்! வெளியில் யாருக்கும் நாங்க சொல்லவில்லை. 45, 50 நாட்களுக்குள் தான். ஆனால் லக்ஷ்மி என்னிடம் நீ கர்ப்பமாக இருக்கே! பெண் குழந்தை தான் பிறக்கும். அப்புறமா வேலையை விட்டு விடுவாய் என்று சொன்னாள். குடும்பச் சூழ்நிலை வேலையை விடுவது போல் எல்லாம் இல்லை. அதனால் நான் அதை நம்பாமல் சிரித்தேன். நான் வேலை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கே என்றேன். நீ சென்னையிலேயே இருக்க மாட்டாய்! அப்புறம் எப்படி இங்கே வேலை பார்க்க முடியும். இந்த வேலைக்கு வெளி மாநிலம் போக முடியாது என்றாள். ஒன்றரை வருஷத்தில் அவள் சொன்னது அப்படியே நடந்தது. ஆனால் அதுக்கப்புறம் நான் யாரிடமும் ஜோசியமோ, கையைக் காட்டியோ, நாடியோ பார்த்ததில்லை. நம்மவர் தான் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை, குஜராத் முதல் வங்காளம், அசாம் வரை உள்ள ஜோதிடர்களை எல்லாம் பார்த்திருக்கார்.

      நீக்கு
    4. அந்தக் கதையெல்லாம் இருக்கட்டும் கீசா மேடம்... நீங்க சொல்றவங்களுக்கு பேரன்லாம் இப்போ ஐம்பது வயசு ஆகியிருக்கும்போலிருக்கு. இப்போ இருக்கறவங்கள்ல யார் நல்ல ஜோசியர், கரெக்டா சொல்லுவாங்க? இதைச் சொல்லுங்க. (அதுக்காக இப்போ என்னை அசாம், குஜராத்லாம் போகச் சொல்லாதீங்க. போகமுடியாது, போனால் திரும்பவும் முடியாது)

      நீக்கு
  15. கேள்வி பதில் அருமை.
    நடக்க வேண்டியது நடந்தே தீரும் இறைவன் நியதிப்படி.... இது சோசியருக்கும்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. தல்லதோ, கெட்டதோ ஜோதிடம் சில சமயம் பலித்துதான் விடுகிறது. (இதில் சகோதரி கீதா சாம்பசிவம் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.) எதையும் நாம் வாங்கி வந்த வரமென்று நினைத்து பொறுமையாக இருக்க மனம் முயற்சித்தாலும், சிலசமயம் நமக்கு மட்டும் ஏன் இப்படி என்ற ரீதியில் கேள்விகள் கேட்டு (யாரிடம் கேட்பது? நமக்குள் நாமேதான்..) வெதும்புகிறது.

    நான் இப்போது வெளியில் எங்கும் செல்வதேயில்லை. (இல்லாவிட்டாலும். ரொம்பத்தான்...! என நான் இதுவரை போடாத மாஸ்க் நொடித்துக் கொள்வது என் கற்பனையில் தெரிகிறது. ஹா.ஹா.ஹா) மாஸகின் நன்மை தீமைகளை பற்றி பதில்களில் அறிந்து கொண்டேன். என்னவோ..! இந்த வைரஸ் மக்கள் எல்லோரையும் முகமூடி கொள்ளையர்கள் போலாக்கி சந்தோஷப்பட்டு வருகிறது. அதன் சந்தோஷமும் இவ்வளவு நாட்கள் என்ற விதி இருக்குமல்லவா? அது நாமறிய முடியாத படைத்தவனால் கணிக்கப்பட்ட ஜோதிடம்.. அனைவரும் விரைவில் அதன் (வைரஸ்) பிடியகன்று நலம் பெற வேண்டுமென பிரார்த்தனைகள் ஒன்றே நம்மால் செய்ய முடிவது.பிரார்த்திப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அனைவரும் விரைவில் அதன் (வைரஸ்) பிடியகன்று நலம் பெற வேண்டுமென பிரார்த்தனைகள் ஒன்றே நம்மால் செய்ய முடிவது.பிரார்த்திப்போம்.// ஆம்.

      நீக்கு
    2. கமலா அக்கா...   உங்கள் வீட்டுக்கு வெளியாட்கள் வந்தால், அதாவது உறவினர் மட்டுமல்ல, எலெக்ட்ரிஷியன் வந்தாலோ,  சிலிண்டர் கொடுப்பவர் வந்தாலோ கூட நீங்கள் மாஸ்க்குடன் இருபிப்பதே நல்லது..

      நீக்கு
  17. இனிய காலை வணக்கம்.

    இன்றைய கேள்வி பதில்கள் நன்று.

    மின் நிலா - வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. இந்த மாதம் முழுவதும், ஞாயிற்று கிழமைகளில் நடைப்பயிற்சி சென்றால், காவல்துறைக்கு தட்சிணையாக 100 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று ஜோசியம் சொல்கிறது...!

    * குறியீடு மூலம் அவர்களும் பதில் சொல்லி விட்டார்களே...!

    பதிலளிநீக்கு
  19. உண்மைச் சம்பவம் ஒன்றை வைத்து நேற்று இரவு கதை ஒன்று எழுதி முடித்தேன்...

    எபியில் என்னவாகுமோ என்று நினைத்த வேளையில்

    என்னுள் எழுந்த கருத்து அப்படியே
    இன்று நெல்லை அவர்களின் கேள்விக்கான பதில்களாக அமைந்திருக்கின்றன...

    எல்லாவற்றுக்கும் கொடுப்பினை வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை எங்களுக்கு அனுப்பிட்டீங்களா?

      நீக்கு
    2. இன்னும் இல்லை...

      இன்னும் கொஞ்சம் செதுக்க வேண்டியுள்ளது..

      நீக்கு
    3. என் மெயில் பெட்டியில் மெயில் எதுவும் பாக்கி இல்லை என்பதை நேற்றே உங்களுக்கு சொல்லி இருந்தேன் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    4. நீங்கள் சொல்லி இருந்தீர்கள்..
      ஆனால் இது வேறு!...

      நீக்கு
  20. // தனி மனிதர் ஒருவர் தெய்வம் ஒன்றை உருவகித்து..//

    20 ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் உருவாகியது விநாயகர் பாதியாகவும் ஆஞ்சநேயர் பாதியாகவும் உள்ள வடிவம்...

    பாக்கியராஜ் படம் ஒன்றில் கூட அந்த வழிபாடு வந்தது...

    யாரோ ஒரு ஓவியர் ஹரி பரந்தாமனின் பர்ரு அவதாரங்களையும் ஒரே சித்திரத்தில் தீட்டி வைக்க அது இப்போது சிலையாகி விட்டது...

    இப்படித்தான் லக்ஷ்மிகுபேரர் எனப்படுவதும்...

    பதிலளிநீக்கு
  21. அவனன்றி ஒரு அணுவும் அசையாது .. என்று நம்பும்போது இப்படியான புதிய வடிவங்களுக்கும் அவன் அசைந்தான்.. இசைந்தான்.. என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்...

    பதிலளிநீக்கு
  22. மின் நிலா மெருகேறி வருகிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  24. இங்கே தஞ்சையில் ஒரு இஸ்லாமியர் பல வருடங்களாக ஜோதிடம் சொல்லி வருகிறார். தலைமுறை தலைமுறையாக அவர் குடும்பத்தினர் ஜோதிடம் சொல்லி வருகிறார்கள். ஆச்சரியப்படுத்தும் விஷயம், இவர் ஜோதிடம் பார்ப்பதற்கான இடத்தை அருகிலிருந்த பள்ளிவாசலே பல வருடங்களுக்கு கொடுத்திருந்தது. அவர் சொல்வது நடக்கும் என்ற நம்பிக்கையில் எப்போதுமே அவருடைய வாசலில் கூட்டம் மிகுந்திருக்கும். அவர் சொல்வதும் அப்படியே நடந்து வருகிறது!
    இதைப்பற்றிய பதிவொன்றை விரிவாக முன்பேயே என் வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.. நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்..

      நீக்கு
    2. ஆச்சரியமாக இருக்கின்றது.

      நீக்கு
    3. தஞ்சை - வல்லம் நெடுஞ்சாலையில் மருத்துவக்கல்லூரி இருக்குமிடம் அருகே உள்ள பள்ளிவாசலா?  (அருகில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் கூட இருக்கும்)

      நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  25. தஞ்சை மருத்துவக் கல்லூரி அருகில் ஆஞ்சநேயர் கோயிலுடன் பிள்ளையார் கோயிலும் இரட்டைக் கோயிலாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
  26. யதார்த்தமான பாசாங்கற்ற எழுத்து...பதில்கள்..வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  27. ஆசிரியர்களில் காசு சோபனா என்பவர் யார்? யார்?.. யார்?..

    கொஞ்சம் சிரமப்பட்டால் கண்டுபிடிப்புக்கு பக்கத்திலேயாவது நெருங்கலாம்.

    https://kasusobhana.blogspot.com/

    இவர் தான் காசு சோபனா.

    ஆசிரியக் குழு அறிவிப்பில்--

    kg -யைக் கிளிக்கினாலும் காசு சோபனா பிரச்சனமாவார் என்பது கூடுதல் தகவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ ! என்னைக் கிள்ளாதீங்க! ஓ சாரி! கிளிக்காதீங்க!

      நீக்கு
  28. நீங்கள் சொல்வது சரி தான் சகோ ஸ்ரீராம்! நீங்கள் சொன்ன இடத்திலுள்ள பள்ளிவாசலின் அடுத்த காம்பவுண்ட் அருகே தான் அவர் ஜோதிடம் சொல்லி வந்தார். இப்போது மருத்துவக்கல்லூரி முதல் கேட் எதிரே உள்ள சந்தில் உள்ள ஒரு வீட்டில் ஜோதிடம் சொல்லி வருகிறார். அதற்கடுத்த தெருக்களில் ஒன்றில் தான் சகோதரர் கரந்தை ஜெயக்குமார் இல்லம் இருக்கிறது.மருத்துக்கல்லூரி மூன்று வாசலும் கடந்த பிறகு வரும் ரஹ்மான் நகரில் தான் எங்கள் இல்லம் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் அங்கு மருத்துவக் கல்லூரிக் குடியிருப்பில் இருந்தோம். கரந்தையாரின் இப்போதைய வீட்டின் பின்புறம் அப்போது ராஜேந்தரா டெண்ட்டுக் கொட்டாய் இருந்தது!

      நீக்கு
  29. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
    ஜோசியர் அல்லாதவர்கள் முகம் பார்த்து சொல்வார்களாம்.
    அப்படி பல வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த நிகழ்வு:-

    பைரவர் வழிபாடு செய்யும் ஒரு அன்பர் ஒரு நாள் என் தங்கையின் வீட்டுக்கு வந்து இருந்தார். என் தங்கை வீட்டில் ஒரு ஜோசியர் குடி இருந்தார், அவரைப் பார்க்க பைரவரை வழிபாடு செய்பவர் வந்து இருந்தார். அவர் விருது நகரில் இருக்கிறார்.
    அவர் சாமியார் இல்லை ஆசாமி மாதிரி வெள்ளை வேஷ்டி, நீலகலர் சட்டை போட்டு இருந்தார்.

    அவரிடம் அருள்வாக்கு மாதிரி எல்லோரும் கேட்பார்களாம். தங்கை வீட்டில் எல்லோரும் மற்றும் அக்கம் பக்கம் எல்லாம் கேட்டார்கள். நான் அப்போது தங்கை வீட்டில் இருந்தேன்.

    நான் போகவில்லை அவரிடம். அவர் என்னைப் பார்த்து நீங்கள் நேற்று "உங்கள் தோழியோடு ரயில் ரயில் என்று பேசி கொண்டு போனீர்களா?" தோழி பேரு செல்விதானே !என்றார்.

    எனக்கு ஆச்சிரியம் ஏற்பட்டது ஆமாம் என்றேன். மாயவரத்தில் என் தோழி செல்வியோடு "ரயில் கல்யாணமண்டபத்தில்" நடந்த ஒரு திருமணவரவேற்புக்கு போனோம். ரயில் நிலையம் அருகில் ரயில் கல்யாணமண்டபம் ரயில்வே துறையை சேர்ந்தவர்கள் வீட்டு விஷேங்கள் நடக்க குறைந்த வாடகைக்கு கிடைக்கும்.

    என் தோழியிடம் அதைப்பற்றி பேசி கொண்டு போனோம். எனக்கோ வியப்பு ஆமாம் என்றேன் சிரித்து கொண்டார்.
    என்னை நம்ப வைக்க அதை சொன்னார். அப்புறமும் நான் எதுவும் கேட்கவில்லை. அவரே நீங்கள் தினம் "சிவானந்த லஹரி "படியுங்கள் என்றார். வேறு ஒன்றும் சொல்லவில்லை.

    நான் உடனே மதுரை மீனாட்சி கோவிலில் வன்னி மரத்து பிள்ளையார் கோவிலுக்கு எதிரில் உள்ள புத்தக கடையில் வாங்கினேன் ஸ்ரீ ராமகிருஷ்ணமடம் வெளியீடு. படித்து வருகிறேன்.

    எனக்கு அவர் பேர் தெரியாது .

    பதிலளிநீக்கு
  30. //நீங்கள் ஜோசியம் பார்த்து பலித்த அனுபவம்..// சொல்கிறேன் நாங்கள் மஸ்கட்டில் இருந்த பொழுது ஓமானியரான  என் கணவரின் மேலதிகாரி எங்களை விருந்துக்கு அழைத்திருந்தார். அங்கு என் கணவர் சும்மா இருக்காமல், என் மனைவிக்கு கை ரேகை பார்க்கத்  தெரியும் என்று கூற, உடனே அவருடைய மேலாதிகாரி தன் கையை என் முன் நீட்டி விட்டார். அரசு வேலையிலிருந்த அவர் அப்பொழுதுதான் ஒரு தனியார் நிறுவனத்திற்கு மாறியிருந்தார். நான் அவரிடம், "உங்கள் கரீயரில் நீங்கள் மூன்று நிறுவனங்களில் வேலை பார்ப்பீர்கள்" என்றேன். அவரோ, "நோ நோ நான் மினிஸ்ட்ரியிலிருந்து இப்போதுதான் மாறியிருக்கிறேன். இதை விட்டு மாற மாட்டேன்" என்றார். ஆனால் வெகு விரைவில் அந்த கம்பெனியிலிருந்து மாறி பெப்சியில் சேர்ந்தார். அதில்தான் கடைசி வரை வேலை பார்த்தார். 
    சென்னை அண்ணா நகரில் என் சகோதரியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த ஒரு பெண்மணி, நான் அக்கா வீட்டிற்கு சென்றிருந்த பொழுது, "என் கையை பார்த்து சொல்லுங்களேன்"  என்று கையை காட்டினார். நான் அவரிடம்," உங்களுக்கு ஒரு பெரிய வீடு உண்டு" என்றேன் அவர் உடனே," இப்போ சிறிய வீடுதான் இருக்கிறது" என்றார். "பின்னால் வாங்குவீர்களாக இருக்கும் " என்றேன். நான் சொல்லி இரண்டு மாதங்களில் அவர்கள் வசித்து வந்த குடியிருப்புகளை விரிவு படுத்திக்கொள்ள அரசாங்கம் அனுமதி அளித்தது. 550 சதுர ஆதி இருந்த அவர் வீட்டை விரிவு படுத்தி 1200 சதுர அடி வீடாகி விட்டது. அவருக்கு பரம சந்தோஷம். என் அக்கா, அம்மா எல்லோரிடமும், "உங்காத்து பானு  எனக்கு பெரிய வீடு உண்டு என்று சொன்னாள், அது போலவே நடந்து விட்டது" என்று சொல்லி சொல்லி மகிழ்ந்து  போனார். மஸ்கட்டில் மிகவும் லேட்டாக திருமணம் செய்து கொண்ட ஒரு நண்பரின் மனைவி தனக்கு குழந்தை பிறக்குமா என்று கேட்டார், பிறக்கும் என்றேன். அது போலவே, அவருக்கு அழகான, புத்திசாலியான பெண் குழந்தை பிறந்தது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்நேரத்திற்கு உங்களுக்கு பல கை படங்கள் வாசகர்கள் அனுப்பியிருப்பார்கள். பார்த்து ஒவ்வொருவருக்கும் பலன் எழுதி, அவர்களுக்கு அனுப்புங்கள்!

      நீக்கு
    2. எனக்கு கை ரேகை ஜோசியம்
      மிகவும் பிடிக்கும். பானுமா
      இதைப் பற்றி எழுதுங்கள் .இல்லைன்னால்
      காணொளியாகப் பதிவிடுங்கள்.ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

      நீக்கு
    3. என் கஸின், அவன் எம்.எஸ்.ஸி படித்தபோது நான் பத்தாம் வகுப்புன்னு நினைவு. அவன் கைரேகை ஜோசியம் கொஞ்சம் கத்துக்கிட்டேன். யூனில இல்லை எந்த திருமணவிழாவிலும் ஜோசியம் தெரியும்னு தெரிஞ்சா, பொண்ணுக கை நீட்டுவாங்க என்றான். (அப்புறம் லக் அடித்து, அவன் வாழ்க்கைல எங்கயோ போயிட்டான்)

      நான் 9ம் வகுப்பு படித்தபோது, கிராமத்துக் கோவிலில் ஒருவர் என்னுடைய கையைப் பார்த்துவிட்டு, யார்ட்டயும் காண்பிக்காதீங்க, இது அபூர்வ கை (200ல ஒருத்தருக்குத்தான் இருக்கும் என்பதுபோல என்னவோ சொன்னார்). என்னத்த அபூர்வ கையோ என்று இப்போ நினைத்துக்கொள்கிறேன் (இருந்தாலும் எங்கேயோ பிறந்து எங்கேயோ வாழ்க்கை ஓடியது என்பதையும் நினைவில் கொள்கிறேன்)

      நீக்கு
    4. கை ரேகையை என்னால் நம்புவது கடினமாக இருக்கிறது. ஒரு புத்தகத்தில் இதைப் பற்றி விரிவாகப் படித்திருக்கிறேன். கைரேகையைப் பார்த்து ஆள் இறந்துவிட்டான், இந்த குற்றத்திற்காக சிறையில் இருப்பான் என்றெல்லாம் சொல்லிவிடுவார்களாம். ஆச்சர்யம்தான். ஒரு நண்பர், தான் பழம் பெரும் ஜோதிட நூல்களைப் படித்திருப்பதாகவும், என் கைரேகை பிரகாரம் மூன்று முறை விபத்து நேரிடும் எனவும், முதல் விபத்து இந்த வயதில் நடந்திருக்கணும் என்றும் சொன்னார். அவர் சொன்னதிலிருந்து இந்திய லைசன்ஸ் வாங்கவே பயமாக இருக்கு.

      நீக்கு
    5. எனக்குத் தெரிந்து கைரேகை ஜோஸ்யங்கள் பலருக்கு பலித்துள்ளது.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!