செவ்வாய், 15 செப்டம்பர், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : எலிக்கு வைத்தது தலையோடு.. - பானுமதி வெங்கடேஸ்வரன்

எலிக்கு வைத்தது தலையோடு.. 
பானுமதி வெங்கடேஸ்வரன் 

எலித்தொல்லையை அனுபவிக்காதவர்கள் இருக்க முடியாது. இதை வைத்து ஒரு படம் கூட வந்து விட்டது. ஆனால் எலியால் ஜானகிக்கு வந்த கஷ்டம் அலாதி. 

சாதாரணமாக எலி என்ன செய்யும்? ஏதாவது திருமணத்திற்கோ, விசேஷத்திற்கோ போகலாம் என்று எடுத்து வைத்திருக்கும் புடவையை கடித்து கந்தரகோலமாக்கி, டென்ஷன் கொடுக்கும். ஜீன்ஸை வேண்டுமானாலும் கிழித்து விட்டுக் கொள்ளலாம். புடவையை அப்படி உடுத்திக் கொண்டால் நன்றாகவா இருக்கும்?

கம்பியூட்டர் அல்லது பிரிண்டர் ஒயரை கடித்து செலவு வைக்கும். நடு இரவில் தூங்க விடாமல் பாத்திரங்களை உருட்டும், செய்து வைத்திருக்கும் (இப்போதெல்லாம் யார் செய்கிறார்கள்!) வாங்கி வைத்திருக்கும் பட்சணங்களை வீட்டில் இருப்பவர்களுக்கு முன்பாக தின்று தீர்த்து விடும். 


இவை எல்லாவற்றையும் தாண்டி ஜானகியை ஹேர் ஸ்டைலையே மாற்றிக் கொள்ள வைத்தது. தன் வீட்டில் எலி இருக்கிறது என்பதை ஜானகியும் ரமேஷும் தெரிந்து கொண்டதும் அதை எப்படியாவது வெளியே துரத்த முடிவு செய்தார்கள். 

எப்படி என்பதுதான் பெரிய விஷயமாக இருந்தது. எலி பாஷாணம் வைக்கலாம், ஆனால் அந்த விஷத்தை சாப்பிட்ட எலி தண்ணீருக்குத் தவிக்குமாம், அது எங்கேயாவது அங்கே இங்கே ஓடி, நாம் பிடித்து வைத்திருக்கும் தண்ணீரை குடித்து, அது தெரியாமல் நாமும் குடித்து... வேண்டவே வேண்டாம். தவிர அந்த கொலையில் கொஞ்சமும் கருணை இல்லை. எல்லோரும் நாடும் எலிப்பொறியை நாடினார்கள். ஆனால் அவர்கள் வீட்டு எலிக்கு எலிப்பொறியில் மாட்டிக் கொள்ளாமல் உள்ளே வைத்திருந்த வடையையோ, தேங்காய் பத்தையையோ சாப்பிடத் தெரிந்திருந்தது. 

ஒரு நாள் சூப்பர் மார்க்கெட்டில் எலியைப் பிடிக்க வந்திருக்கும் ஒரு அட்டை கண்ணில் பட்டது. அதை வாங்கினாள். பசை தடவப் பட்டிருக்கும் அந்த அட்டையில் கால் வைத்ததும் அதனால் நகர முடியாது. அந்த அட்டையோடு அதை வெளியே எறிந்து விடலாம். 

கணவன் அலுவலகம் சென்றதும் 'மிஷன் எலி அட்டையை' செயல்படுத்த முடிவு செய்து அந்த அட்டையில் கொடுக்கப் பட்டிருந்த அட்டையை கவனமாக பிரித்தாள். ஒரு ஸ்டூல் அல்லது நாற்காலியின் மீது ஏறி அதை கிச்சன் கப்போர்டின் மேல் வைத்திருக்கலாம். ஸ்கூல் படித்த காலத்தில் தன் வகுப்பு தோழிகள் த்ரோபால் விளையாடுவதை வேடிக்கைப் பார்த்த தைரியத்தில் அந்த அட்டையை கீழிருந்து மேலே லாவகமாக வீசுவதாக கற்பனை செய்து கொண்டு கீழிருந்து மேல் நோக்கி வீசினாள். அந்த அட்டை இன்னும் ஒரு நாலு இஞ்ச் உயரம் பறந்திருந்தால் கப்போர்டின் மேல் பகுதியை எட்டி இருக்கும், இப்போது கப்போர்டில் மோதி ஜானகி எறிந்த அதே வேகத்தில் திரும்பி வந்து அவளுடைய தலையில் உட்கார்ந்தது. ஜானகி அலட்சியமாக அந்த அட்டையை தட்டினாள். அது நகர்ந்து கொடுக்க வில்லை. கையால் கொஞ்சம் வலிந்து நகர்த்திப் பார்த்தாள், ம்ஹூம்! தண்ணீர் விட்டு அலம்பி பார்க்கலாம் என்று தோன்றியது. கிச்சன் குழாயிலேயே தண்ணீர் பிடித்து அட்டைக்கும், தலை முடிக்கும் இருந்த இடைவெளியில் தண்ணீர் ஊற்றி பார்த்தாள், அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. "என்னடா இது மதுரைக்கு வந்து சோதனை?" என்று திருவிளையாடல் பாலையா போல முழித்துக் கொண்டு நின்ற பொழுது அழைப்பு மணி ஒலித்தது. 

வாசலில் மாடி வீட்டு ப்ரீத்தி. "வாட் ஹாப்பண்ட்?" என்ற அவளிடம் நடந்ததை விவரித்ததும், "ஐயையோ! யூ ஹவ் நெய்ல் பாலீஷ் ரிமூவர்?" ஜானகி எடுத்துக் கொடுத்த நெய்ல் பாலீஷ் ரிமூவரை தலை முடியில் போட்டு அட்டையை அசைத்துப் பார்த்தனர். கொரோனா போல அது எதற்கும் மசிந்து கொடுக்க மறுத்தது. மீண்டும் தோல்வி. அதற்குள் ரமேஷ் மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு வந்தான். தூங்கி கொண்டிருந்த குழந்தை ராகுலும் முழித்துக் கொண்டு விட்டான். 

அட்டையை கட் பண்ணி எடுத்து விடலாமா? என்று யோசித்த ரமேஷ் கத்தரிக்கோலை எடுத்து அட்டையை வெட்டினான். ஓரங்கள் மட்டுமே கத்தரிக்க முடிந்தது. " பெட்டர், நாம ஒரு பியூட்டி பார்லருக்கு போய்டலாம்" என்று கார் சாவியை எடுத்துக் கொண்டவன், " ஓ! மை காட்!" என்று அலறினான். 

"என்னாச்சு?"

"என்னாச்சா? உன் தவப்புதல்வன் செஞ்சிருப்பதைப் பார்" 

ரமேஷ் பதட்டத்தில் தன் வாலட், கத்தரிக்கோல் எல்லாவற்றையும் சாப்பாட்டு மேஜையிலேயே வைத்து விட்டு சென்றிருக்கிறான். ராகுல் அப்பாவின் பர்ஸிலிருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து அதில் ஒன்றை துண்டு துண்டாக கட் பண்ணி விட்டான், இன்னொன்றை துண்டுகளாக்கத் தொடங்கியிருந்தான். 

"அடப்பாவி!" என்று ஜானகி அதிர, "சரி சரி விடு. இப்போ இவனை அடிச்சு அழ விட்டு ஆகப்போறது ஒண்ணுமில்லை" என்று அவளைத் தேற்றினாலும் ரமேஷுக்கு குப்பென்று தலைவலி வந்து விட்டது. 

அழகு நிலையத்தில் என்னென்னவோ லோஷன்களை தலையில் கொட்டி, ஷாம்பூ போட்டு என்ன செய்தாலும் கொஞ்சம் முடியை இழக்க வேண்டிதான் இருந்தது. அது தெரியாமல் இருக்க, ஹேர் ஸ்டைலையே மாற்ற வேண்டி வந்தது. 

மகன் வெட்டியதைத் தவிர பியூட்டி பார்லருக்கு கணிசமான தொகையை வெட்டி விட்டு வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் அப்பார்ட்மென்டில் நுழைந்த பொழுது அவர்கள் வீட்டிற்கு கீழ் வீட்டில் இருப்பவர் கையில் எலிப்பொறியில் மாட்டிய எலியோடு எதிரே வந்தார். 

"ஒரு மாசமா ஒரே தொல்லை, இன்னிக்கு மாட்டிக்கிச்சு" என்றார். அது இவர்கள் வீட்டு எலியாக கூட இருக்கலாம். 


==== 

67 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    பானுமதி வாரமா!! மிக மிக மகிழ்ச்சி.
    எலியை இன்னோரு தடவை பிடித்து ஸாரி
    படித்து விட்டு வருகிறேன்:)))))

    பதிலளிநீக்கு
  2. சிரிப்பு சிறப்பு. அன்பு பானுமா,
    எலித்தொல்லை எல்லோருக்கும் ஏதாவது ஒரு
    காலத்தில் இருந்திருக்கும்.
    இல்லை அது தொடரும் தொல்லையாகக் கூட இருக்கும்.

    உங்கள் பதிவில் மாட்டிக் கொண்டது கதையின் நாயகி.
    சொல்லிச் செல்லும் விதம் மிக அருமை.
    RAT எனப்படும் பெரிய எலி
    எங்கள் பழைய வீட்டில் நடமாடும்போது
    படியேறி மாடிக்குச் செல்லும்போது
    மனித நடமாட்டம் போலவே இருக்கும். ஏனெனில்
    மாடிப்படி மரத்தால் ஆனது.:)

    பதிலளிநீக்கு
  3. வளமான கற்பனை. வர்ணனைகளோடு அருமை.
    ஜானகிக்காவது பார்லர் சென்று திருத்திக் கொள்ள முடிந்தது.
    திண்டுக்கல் வீட்டில்
    தேங்காய் எண்ணெய் வாசம் பிடித்து என் தலைமுடியையே கொறித்துவிட்டது:)
    நெடு நாட்கள் தூங்காமல்
    விழித்திருந்து பிறகு அப்பாவின் மேஜையில்
    படுத்துத் தூங்கினேன்!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தேங்காய் எண்ணெய் வாசம் பிடித்து என் தலைமுடியையே கொறித்துவிட்டது:)// அடப்பாவமே! அப்போது உங்களுக்கும் எலியால் ஹேர் ஸ்டைல் மாறியிருக்கிறதா?? 

      நீக்கு
    2. அம்மா கை வைத்தியத்தால் முடி வளர்ந்து விட்டது.
      அன்பு பானு.

      நீக்கு

  4. "ஒரு மாசமா ஒரே தொல்லை, இன்னிக்கு மாட்டிக்கிச்சு" என்றார். அது இவர்கள் வீட்டு எலியாக கூட இருக்கலாம். "":)))அருமையான மாற்றம். இனிமேலாவது தொல்லை இல்லாமல் இருக்கட்டும்.
    வாழ்த்துகள் மா.
    கீதா படித்தவுடன் பல பல எலிக்கருத்துகள் வரும்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, சுருக்கமாய்ச் சொல்லிட்டேன். அப்புறமா என்னோட பெருமையை மட்டும் பீத்திக்கறாப்போல் ஆகாதோ? :))))))))) பானுமதி "நச்"சென்று கதையை எழுதி இருக்காரே!நான் வளவளனு சொன்னால்? அதான்!

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். வரும்நாட்கள் பிரச்னைகளில் இருந்து விடுபட்டு இனிய நாட்களாக அமையவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. நமக்கெல்லாம் எலிகளோடும், பெருச்சாளி, மூஞ்சுறுகளோடும் குடித்தனம் நடத்தின அனுபவங்களே உண்டு. ஆனால் இப்படி அட்டை எல்லாம் வைக்கலை. எலி மருந்து வைத்திருக்கோம். எலி செத்திருக்கிறது. அதை எடுத்துப் போட முறம் எடுத்துவருவதற்குள் பாடி மிஸ்ஸிங்! இன்றளவும் அது எங்கே என்பது ஓர் சஸ்பென்ஸ். ஏனெனில் இரவே இறந்துவிட்டது. காலையில் பார்த்தோம். அப்படிப் போய் முறம் தனியாக இருப்பதை எடுத்து வருவதற்குள் பாடியைக் காணோம். இது நடந்தது ராஜஸ்தானில்! அங்கே கலர் கலரான ஒரு முயல் குட்டி அளவுக்கான எலிகள் உண்டு. அவற்றோடு குடித்தனம் நடத்தின அனுபவங்களையும், அம்பத்தூர் வீட்டில் எலி குடித்தனம் நடத்தின அனுபவத்தையும், பெருச்சாளி குடியேறிய வைபவத்தையும் பதிவுகளாகப் போட்டிருக்கேன். பெருச்சாளிக் குஞ்சுகள் குட்டிக் குட்டியாக மெத் மெத்தென்று பார்க்கவே அருமையா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.ஹா.ஹா உங்கள் அனுபவம் மிகவும் நகைச்சுவையாக உள்ளது. ? சஸ்பென்ஸை படித்து விட்டு நானும் வாய் விட்டு சிரித்தேன். ஒரு வேளை உயிரை விட்டது போல் நடித்து உங்களை ஏமாற்றி விட்டு உடலோடு ஓடி விட்டதோ?
      அது தேவர் பிலிம்ஸில் நடிப்பு கலை கற்றிருக்கும் என நினைக்கிறேன்:) ஆனாலும் தொல்லை தரும் எலிகளை அதுவும் பெருச்சாளிகளை ரொம்பவே ரசித்திருக்கிறீர்கள். இதற்கு மிகவும் நல்ல மனது வேண்டும். அது உங்களிடம் நிறையவே உள்ளது. நன்றி.

      நீக்கு
    2. ஹாஹ்ஹா soooo ஸ்வீஈட் கீதாக்கா :) நானா பெருச்சாளி குட்டிகளை பார்த்ததேயில்லை 

      நீக்கு
    3. ஏஞ்சல், என்ன வந்தீங்க? உடனே போறீங்க? என்ன ஆச்சு உங்க தோழிக்கு? இருவருக்கும் வேலை மும்முரமா? உடல் நலம் தானே?

      நீக்கு
    4. நாங்க ரெண்டுபேருமே நல்லா இருக்கோம்க்கா வேலைதான் எங்கேயும் போக விடாம தடுக்குது .இங்கே நிறைய பேர் சிக் லீவில் இருக்கிறதால அதையும் கவர் பண்ண வேண்டி பிஸியாவே இருக்கு இன்னிக்கு afternoon ஷிஃப்ட் அதனால் எட்டி பார்த்தேன் 

      நீக்கு
    5. //பெருச்சாளிக் குஞ்சுகள் குட்டிக் குட்டியாக மெத் மெத்தென்று பார்க்கவே அருமையா இருக்கும்.// ஆஹா! என்னவொரு ரசனை!

      நீக்கு
    6. ஆமாம், சின்னச் சின்னக் கால்கள், சிவந்த நிறமாக இருக்கும். அடி வயிறு அப்படியே மெத்! குஞ்சா இருக்கிறச்சே ரசிக்கலாம். பெரிசாச்சுன்னா கடிச்சுக் குதறிடுமே! :))))

      நீக்கு
  7. சிறிய விஷயத்தை நகைச்சுவையுடன் எழுதியருக்கிறார். எலித் தொல்லையைவிட இந்த பியூட்டி பார்லரின் தொல்லை அதிகமாகத் தெரிகிறதே

    பதிலளிநீக்கு
  8. சென்னையில் கொசுக்காக பால்கனியில் போட்டிருந்த வலையில் இருந்த ஓட்டையைப் பார்த்து எலி வீட்டுக்குள் வருகிறது என மனைவி சொன்னதால் அதன் அருகில் இந்த மாதிரி ஒரு அட்டையை அவள் சொன்னதன்பேரில் நம்பிக்கை இல்லாமல் வைத்தேன். மறுநாள் எலி அதில் காலை வைத்து மாட்டிக்கொண்டது. அந்த அட்டையை எடுத்து தெருமுனை குப்பைத் தொட்டியில் வீசினேன். சில மாதங்கள் கழித்து இதுபோல இன்னொரு அட்டை வைக்க வேண்டிவந்தது. முந்தின தடவை நடு அட்டையில் மாட்டிக்கொண்டது. இந்தத்தடவை அரையும் கொறையுமாக காலைவைத்து மாட்டிக்கொண்டது. இதனை குப்பைக் கூடையில் தூக்கி எறியமுடியாதபடி குப்பைக்கூடை நிரம்பி வழிந்தது. எடுத்துச் சென்றிருந்த பிளாஸ்டிக் பையுடனே தூக்கி எறிந்துவிட்டேன். ஆனால் மனதை ரொம்பவே பாதித்தது. உயிரோடு பிற பறவைகள் கொத்தும்படியான சூழலில் மாட்டிவிடுகிறோமே என்று. கொசு மூட்டைப் பூச்சியைக் கொல்வதில் வராத சோகம் இந்த எலி தந்துவிட்டது.

    அட்டையை வைத்து எலியைப் பிடிப்பது ரொம்பவே பரிதாபம்.

    பா.வெ கதை இதையெல்லாம் யோசனை செய்ய வைத்துவிட்டது. சிறிய மிஸ்டேக் எத்தனை பெரிய சிக்கலில் மாட்டி விடுகிறது என்று நல்லா எழுதியிருக்கார். வித்தியாசமான நிகழ்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்காகவே நாங்க இந்த அட்டை வாங்கலை. குழந்தைகள் வேறே இருந்ததால் எங்கேயானும் அவங்க மிதிச்சுட்டா என்னும் எண்ணமும் கூட! அதோடு நாமே அஜாக்கிரதையாகச் சமைக்கும்போதோ வேறே வேலைகள் செய்யும்போதே மாட்டிக்கொண்டு விடுவோம் என்னும் எண்ணமும் இருந்தது. எலி மருந்து அல்லது பொறி! இவற்றின் மூலம் தான் பிடிப்போம்.

      நீக்கு
    2. நன்றி நெல்லை தமிழன். (நெல்லையிடமிருந்து பாராட்டு வாங்கி விட்டால் நீட் தேர்வில் பாசானதைப் போல் மகிழ்ச்சி!) 

      நீக்கு
    3. // (நெல்லையிடமிருந்து பாராட்டு வாங்கி விட்டால் நீட் தேர்வில் பாசானதைப் போல் மகிழ்ச்சி!) // :))

      நீக்கு
  9. எலித்தொல்லையை எதிர்கொள்ளும் உத்தி மற்றவர்களுக்குப் பயன்தரும்.

    பதிலளிநீக்கு
  10. என் தோட்டதில் க எலி பிடிக்க வைத்த அட்டை பற்றி எழுதி இருந்தேன்அதில் பின்னுட்டமாக திருமதி பானு இந்த சம்பவம்குறித்து எழுதி இருந்தது நினைவுக்கு வந்த்து

    பதிலளிநீக்கு
  11. க்தை நன்று. நகைச்சுவைக் கதைக்கு அட்டகாசமான கன்செப்ட். இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் அட்ட காசமான சிரி கதை கிடைத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. எலிப்பொறியே சிறந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா...?

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள் எழுதிய இன்றைய கதை நல்ல சுருக்கமாக அதே சமயத்தில் மிகுந்த நகைச்சுவையாகவும் உள்ளது.பொதுவாக எலித் தொல்லையில் அனைவரும் மாட்டியிருக்கிறோம். அதை இப்படி ஒரு கோணத்தில் சிந்தித்து நகைச்சுவை பின்னலுடன் எழுதிய சகோதரிக்கு பாராட்டுகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. எலியினால் ஜானகிக்கு விளைந்த இன்னல்கள் புன்னகைக்க வைத்தன...

    இருந்தாலும்,
    பிறர் துன்பம் கண்டு புன்னகைக்கலாமோ!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறருக்கு துன்பம் நேரும் சமயத்தில் புன்னகைப்பது சரியல்ல, ஆனால் நடந்து முடிந்து விட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு நினைத்துப் பார்த்து புன்னகைப்பதில் தவறில்லை. நன்றி. 

      நீக்கு
  16. எங்கள் ப்ளாக் என்றாலே பூனைதான் என்பது எப்படியோ மாறி இன்று...

    பதிலளிநீக்கு
  17. //ஜீன்ஸை வேண்டுமானாலும் கிழித்து விட்டுக் கொள்ளலாம்//

    அப்படியானால் கடையில் விற்கும் ஜீன்ஸ் எல்லாம் எலி கடித்ததா ?

    புலியோடு போர் செய்ததுபோல பில்டப் கொடுத்து எழுதி விட்டீர்களே...

    கடைசியில் எலியோடு நடத்திய அக்கப்போரா ?

    பதிவை மிகவும் ரசித்தேன். தங்களிடமிருந்து மாறுபட்ட பதிவு. வாழ்த்துகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  18. இங்கே ஸ்டோரிலும் Glue அட்டை வைப்பார்கள்... சாதாரண கரப்பான் பூச்சிகள் மாட்டிக் கொண்டு உயிர் துறக்க வேதனைப் படும்...

    எலியென்றால் கேட்கவே வேண்டாம்... சில நாட்கள் வரை துடித்துக் கொண்டிருக்கும்.. காணச் சகிக்காது..

    பசங்களை விட்டு அட்டையைத் தூக்கிப் போட்டு விடச் சொல்வேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதன் வாழ்நாள் முழுதும் விடாது செய்யும் உயிர்க்கொலைகள் - சில தவிர்க்கமுடியாதவை, பல விரும்பி அல்லது அலட்சியமாகச் செய்பவை..
      இத்தனைக் கொடூரமான மனிதன் தனக்காக, ’சாமி என்னக் காப்பாத்து.. என் புள்ள குட்டிகளைக் காப்பாத்து.. நீண்ட ஆயுளக் கொடு’ என்றெல்லாம் சொல்லிக் கும்பிட்டால், அந்த சாமி என்ன செய்யும்? அதனால்தான் ஒன்றும் செய்யாமல் அது அப்படியே விட்டுவிடுகிறது இவனது பிரார்த்தனைகளை.

      நீக்கு
    2. அன்பின் ஏகாந்தன் அவர்களது கருத்து ஏற்புடையது... இது குறித்து நிறைய எழுதலாம்... பணியிடை நேரம்..

      இன்றைய பொழுதுக்குள் வேறு சில எண்ணங்களையும் தருகிறேன்...

      நீக்கு
  19. எலியினால் ஏற்படும் சேதங்கள் கவலைக்குரியதே... ஆனாலும் பிள்ளை குட்டிகளுடன் அங்கும் இங்கும் அலையும் பொது கழிவிரக்கம் தான் தோன்றுகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை அண்ணா ..நானா அதுங்களை ஒன்னும் செய்றதில்லை வீட்டுக்கு வெளியே தான் அதுங்க இருக்கு 

      நீக்கு
    2. @துரை செல்வராஜூ சார் உண்மைதான். ஒரு முறை பாத்ரூம் கழுவிடும் பொழுது தறியி ஊற்றியிருந்த ஆசிட்டில் ஒரு சிலந்தி விழுந்து உயிரை விட்டு விட்டது. அன்று முழுவதும் மனசு மிகவும் கஷ்டமாக இருந்தது. 

      நீக்கு
  20. ஹாஆஅஹா :) பானுக்கா எலியால் ஹேர் ஸ்டைல் மாறியது பற்றி நகைச்சுவையா எழுதியிருக்கீங்க :) அந்த ஹேர்ஸ்டைலையும் சேர்த்திருக்கலாம் :))))
    நான் கடைக்கு போனா இந்த கொல்லிஸ் பக்கம் போகறதில்லை ..எலி எப்படி நகர்ப்புறம் வந்ததுன்னு ஒரு ஆராய்ச்சி நடத்தணும் .எங்க தோட்டத்தில் கிச்சனுக்கு வெளியே elly kelly னு ரெண்டு பேர் விசிட் பண்ராங்க :) அம்மாவும் பொண்ணுமா ..எப்படி பொண்ணுன்னு சொல்றீங்கண்னு கேட்கப்படாது :) :) எங்க ஜெசி மல்ட்டியால் அதுங்களை பிடிக்க முடிலா வீட்டுக்குள் வராதுங்க அதனால் நானே அவங்களுக்கு சாம்பார் சாதம் தயிர் சாதம்லாம் கொடுத்து அதுவும் நெய் சேர்த்து தரேன் :) 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதனால் நானே அவங்களுக்கு சாம்பார் சாதம் தயிர் சாதம்லாம் கொடுத்து அதுவும் நெய் சேர்த்து தரேன் :) //வாவ்! சூப்பர்! வள்ளலாரின் வாரிசு நீங்கள்தான்! இரண்டு நாட்களாக என்னாச்சு இந்த தேம்ஸ் நதி தீரத்தவர்களுக்கு?" என்று மண்டைக்குள் ஒரு குடைச்சல்.. இன்று உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 

      நீக்கு
  21. எத்தனை நாள் வருஷமானாலும் ஸ்ரீராம் அண்ட் அந்த குட்டி எலி விஷயத்தை மறக்கமாட்டேன்னு யாராச்சும் அவர்கிட்ட சொல்லிடுங்க ..
    கொஞ்சம் டைம் கிடைச்சது அனைவரையும் இங்கே சந்தித்ததில் மகிழ்ச்சி .மற்றொரு பதிவில் சந்திக்கின்றேன் இங்கே 

    பதிலளிநீக்கு
  22. எலி நல்ல கிலியை ஏற்படுத்தி விட்டு போய் விட்டது. எலி பிடிக்கும் அட்டையால் பட்ட துன்ப அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

    சாது மிரண்டால் படத்தில் எலி பொறியில் பிடித்த எலியை வெகு தூரம் கொண்டு விட்டுவருவார் டி.ஆர். ராமசந்திரன் . எங்கள் அத்தை வீட்டிலும் அப்படித்தான் வெகு தூரம் கொண்டு போய் விட்டு வருவார்கள்.


    பதிலளிநீக்கு
  23. // @ அன்பின் ஏகாந்தன் அவர்களது கருத்துரைக்கு..//

    கொல்லாமையை வள்ளுவர் வலியுறுத்துகின்றார்..

    அதேசமயம் கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பற்றியும் சொல்கின்றார்..

    எல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலாம் என்றால் முள் மரத்தை இளஞ் செடியாக இருக்கும்போதே அழிக்கச் சொல்கிறார்...

    முயலைத் துளைத்த அம்பினை விட
    களிறினைக் காயப்படுத்திய வேல் இனிது என்கிறார்...

    இதெல்லாம் அவரவர்க்கு வாய்த்த வாழ்வு முறையின்படி அல்லவா!...

    கள்வனைக் கோறல் கொடுங்கோல் அன்று எனில்

    கண்ணனே கொலை செய்கின்றான்!...

    ஏன்?..

    விடை அதற்குள்ளேயே இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மேலே சொன்னதைத் தயைசெய்து கவனியுங்கள் மீண்டும்:
      //விடாது செய்யும் உயிர்க்கொலைகள் - சில தவிர்க்கமுடியாதவை, பல விரும்பி அல்லது அலட்சியமாகச் செய்பவை..//
      சில தவிர்க்க முடியாதவை: போர்வீரன் எதிரியைக் கொல்வான். அது அவன் கடமை. போர் என்று வந்தால் கொலைகள் விழும். உயிர்கள் போகும். அங்கே கொல்லத்தான் வேண்டும். கொல்லாவிட்டால் கொல்லப்படுவான். நாட்டுக்குத் தீங்கு. தீவிரவாதியை அழிக்கத்தான் வேண்டும். சகமனிதனாயிற்றே என்று விட்டுவிட்டால், அழிவே விளைவாகும். அங்கே கொலை, அழிவு பெரும் சமூகநோக்கு, தேசநலன் என வருகையில், அத்தியாவசியமானது, நியாயமானதுதான். இப்படியே வள்ளுவன் சொன்ன உதாரணம். முள் செடியைக் காலிசெய்! களையைப் பிடுங்கு.. சரிதான். எதை அழிக்கவேண்டுமோ, பிடுங்கி எறியவேண்டுமோ அதனை அழிக்கவேண்டியதுதான். வேண்டாம் என யார் சொன்னது இப்போது!

      //பல உயிர்க்கொலைகள் விரும்பி அல்லது அலட்சியமாகச் செய்பவை..: உயிர்க்கொலைகள் பல தவிர்க்கப்படக்கூடியவை. தன் விருப்பத்திற்காக (அத்தியாவசியம் என்பதற்காக அல்ல), அல்லது மற்ற ஜீவனைப்பற்றிய லட்சியம் ஏதுமின்றி அலட்சியமாக..விளையாட்டாய் மனிதனால் உலகெங்கும் செய்யப்படும் கொலைகள் கொஞ்ச நஞ்சமில்லை. ஜப்பான், டென்மார்க், பெரு போன்ற நாடுகளில் டால்ஃபின், சிறியவகை திமிங்கிலம் என ஆயிரக்கணக்கில் கொல்கிறார்கள் ஒவ்வொரு வருடமும். ஜப்பானில் இது ஒரு வருடாந்திரத் திருவிழா! Seal எனும் அப்பாவி மிருகத்தை அடித்துக்கொள்வது நார்வேபோன்ற ஸ்காண்டினேவிய நாடுகளில் வழக்கம், தொழில் அல்லது பொழுதுபோக்கு. இப்படிப் பல. கேட்டால் ஆயிரம் காரணம் வரிசையாக வரும். நாமும் சகமனிதன் ஒருவனைப் போட்டுத்தள்ளிவிட்டு கேட்டால் சொல்வதற்கு, காரணம் தயாராக வைத்திருக்கலாம். அழகாக எடுத்துவிடலாம். மனிதனுக்கு வாயில் வார்த்தையில்லையா என்ன!

      இப்படி இஷ்டப்படி, இயற்கை வளம்பற்றியெல்லாம் அக்கறையோ பொறுப்போ இன்றி பலவீனமான உயிர்களைக் கொன்றுகொண்டிருந்தால் என்ன செய்யமுடியும்? இதுவா மனிதனின் வாழும் கலை?

      வள்ளுவனும், கண்ணனும், மனிதனுக்கு கொல்வதற்கு freehand கொடுத்துவிட்டுப்போனதாகப் பொருளாகுமா? ஜீவகாருண்யம் என்று வள்ளலார் அடிக்கடிச் சொன்னாரே, அழுத்திச் சொன்னாரே.. உலக வாழ்க்கைபற்றி, நடப்புபற்றி விபரம் புரியாமல், அசட்டுத்தனமாக எதையோ சொல்லிவிட்டுப் போனதாக எடுத்துக்கொள்வோமா !

      நீக்கு
    2. விடை அதற்குள்ளேயே இருக்கின்றது என்று தங்களை ஆதரித்துத் தான் சொல்லியிருக்கின்றேன்...

      நீக்கு
    3. பதிலுக்கு நன்றி.

      நான் இந்த உரையாடலை ஆதரவு, எதிர்ப்பு என்கிற நிலையில் பார்க்கவில்லை; அணுகவில்லை. இந்த உலகில் மனிதன் என்கிற ஜீவனின் தான்தோன்றித்தனம், அளவுக்கு மீறிய சுயநலம், அடாவடித்தனம், அவ்வப்போது காட்டிவரும் கொலைபாதக சிந்தனை, செயல்பாடு என இவன் போக்கு சரியில்லையே என்கிற ஆதங்கத்தில் எழுத முற்பட்டதே என்னுடைய முதல் பின்னூட்டம்.

      நீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. பாவெ. ஆரம்பம் அட்டகாசம். முடிவு வரிகள் பிரமாதம்.

    இடையில் கொஞ்சமே கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டிருக்கலாமோ என்று தோன்றியது. நடுக்கதையில் ஒரு முடிச்சு போட்டிருக்க வேண்டிருக்க வேண்டும். அந்த முடிச்சை கடைசி வரிகளுக்கு முன் அவிழ்த்திருக்க வேண்டும். கதை பிரமாதமாக அமைந்து விட வாய்ப்புக் கூடியிருக்குமே?.. நகைச்சுவையாக கொண்டு போக நினைத்திருந்தாலும் தலைமுடி சமாச்சாரத்தைத் தாண்டி கொஞ்சம் கூடுதல் முயற்சிகள் செய்திருக்கலாம் இல்லையா? என்ன நினைக்கிறீர்கள்?..

    கதையை ஆரம்பித்து நடுப்பகுதிக்கு வரும் பொழுதே அதை சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்ற உந்துதல் வருவதைப் புறக்கணித்து இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கொஞ்சம் கொஞ்சமாக முடிவு நோக்கி நிதானமாக முன்னேறும் நீட்டும் முயற்சியை அடுத்த கதையில் எதிர்பார்க்கிறேன், சகோ.

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துகளுக்கும், ஆலோசனைக்கும் மிக்க நன்றி. இது நிஜமாகவே நடந்த ஒரு நிகழ்ச்சி. அதை கதையாக்கலாம் என்று நினைத்ததால், மிகக் கொஞ்சமாக கற்பனையை கலந்தேன். நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களை நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன். மிக்க நன்றி. 

      நீக்கு
  26. எலிக்கதை என்றாலே எனக்கு அமரர் அசோகமித்திரன் அவர்களின் 'எலி' கதை தான் நினைவுக்கு வரும். மறக்கவே முடியாத அழகிய படைப்பு. அ.மி.யின் கதை சொல்லும் நேர்த்தி கொடி கட்டிப் பறக்கும் கதை அது.

    உங்கள் வாசிப்பு அனுபவத்திற்கு அந்தக் கதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

    https://azhiyasudargal.wordpress.com/2010/12/14/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசோகமித்திரன் எழுதிய இந்த எலிக்கதை நானும் படித்திருக்கிறேன். மீண்டும் படிக்கச் செய்ததற்கு நன்றி. இந்துமதி கூட ஒரு எலிக்கதை எழுதியிருக்கிறார். 

      நீக்கு
    2. நானும் கூட ஓர் பெருச்சாளிக் கதை எழுதினேன். குட்டியாக! எ.பியில் கூட வந்த நினைவு. எப்போவோ! "அப்பா" என்னும் தலைப்பில்! http://sivamgss.blogspot.com/2012/09/blog-post_10.html

      நீக்கு
    3. எலி, மனிதனின் ப்ரக்ஞையை ஆட்கொண்டிருப்பது தெரிகிறது..

      நீக்கு
  27. எலிக்கான பிசுபிசுப்பு அட்டை - கொஞ்சம் கொடூரமான விஷயம்! அதில் எது பிடித்துக் கொண்டாலும் விடுவிடுப்பது கடினம் தான்.

    கதை நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!