சனி, 23 ஏப்ரல், 2022

சாண உருண்டையில் தங்கம் Positive - மற்றும் நான் படிச்ச கதை

[ நான் படித்த பள்ளி! - ஸ்ரீராம் ]

தஞ்சாவூர்: வெயிலின் தாக்கத்தில் தண்ணீர் இன்றி, தவிக்கும் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் என பள்ளி மாணவர்களிடம் தன்னார்வ இளைஞர்கள் ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
கோடையில் வெப்பத்தின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டு செல்லும் சூழலில், மனிதர்களால்கூடத் தாங்க முடியவில்லை. இதை போல, வெயிலின் தாக்கத்தால் பறவைகள், வனவிலங்குகள் உயிரிழப்புகள் வரை செல்லுகிறது..

இந்நிலையில், பறவைகளின் உயிரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில், பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பதை தன்னார்வலர்கள் பலரும் பொதுமக்களிடம் ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

இதை போல, தஞ்சாவூரில் அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சேர்ந்த இளைஞர்களான சதீஸ்குமார்,வின்சென்ட்,பாரதி ஆகியோர் பள்ளி மாணவர்களிடம் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக, மண்ணில் செய்யப்பட்ட சட்டியை வழங்கி வருகின்றனர்.  அதன்படி, தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் மாணவர்களுக்கு, மண்சட்டியை வழங்கினார். இந்த நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி அல்போன்ஸ், உதவி தலைமையாசிரியர் ஜோசப், மாவட்ட சாரணர் பயிற்சி ஆணையர் குழந்தைசாமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இது குறித்து அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சதீஸ்குமார் கூறியதாவது; தற்போது கோடையால் பறவைகள் தண்ணீர் இன்றி தவிப்பதை தடுக்க பொது இடங்களிலும், வீடுகளிலும் மண்பானையில் தண்ணீர் வைக்கும் பழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.


மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு மண்சட்டி வழங்கப்படுகிறது. இதுவரை தஞ்சாவூரில், 50 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 500 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, வைக்கும் போது, மாணவர்கள் அதை மொபைலில் படம் எடுத்து வைத்துக்கொள்ள கூறப்பட்டுள்ளது. அதன் மூலம் பறவைகளை பற்றி தெரிந்துக்கொள்ள முடியும். இதற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக புத்தங்கள், சான்றிதழ் பரிசாக வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

===============================================================================================================

சென்னை- --மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்காக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது பன்மைய செயற்கை முழங்காலை, சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம் செய்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.,யும், கதம், சொசைட்டி பார் பயோமெடிக்கல் டெக்னாலஜி, மொபிலிட்டி இந்தியா நிறுவனங்களுடன் இணைந்து, பாலிசென்ட்ரிக் முழங்காலை உருவாக்கியுள்ளன.இயக்குனர் காமகோடி இதன் அறிமுக நிகழ்ச்சி, சென்னை ஐ.ஐ.டி.,யில் நேற்று முன்தினம் நடந்தது. சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், புதிய செயற்கை முழங்கால் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த முழங்காலை பயன்படுத்துவோர், பஸ்கள், ஆட்டோக்களில் ஏறி எளிதாக பயணிக்க முடியும். நடக்கும் போது, 160 டிகிரி காலை மடக்க முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உறுதியான துருப்பிடிக்காத இரும்பு மற்றும் அலுமினியம் அலாய், பாலிமர் சுழல் உருளை ஆகியவற்றால், இந்த செயற்கை முழங்கால் அமைக்கப்பட்டுள்ளதாக, ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.

தமிழக மாற்று திறனாளிகள் துறை கமிஷனர் ஜானி டாம் வர்கீஸ், செயற்கை முழங்கால் குறித்து பேசிய வீடியோ காட்சி, இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது.திருப்பு முனை அதில், 'மாற்றுத் திறனாளிகளை மற்றவர்களுடன் இணைப்பதில், நவீன தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. 
'இந்த வகையில், ஐ.ஐ.டி.,யின் புதிய செயற்கை முழங்கால் கண்டுபிடிப்பு, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் பல்வேறு திருப்பு முனையை ஏற்படுத்தும்' என்றார்.நிகழ்வில் சென்னை ஐ.ஐ.டி.,யின், மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான மையத் தலைவர் சுஜாதா சீனிவாசன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

========================================================================================= 

சின்னமனுார் : தேனி மாவட்டம் சின்னமனுார் மார்க்கையன்கோட்டை பேச்சியம்மன் கோயில் திருவிழாவிற்கு வந்த திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ரெஜினாவின் 39, திருடு போன 12 பவுன் நகைகள் இன்ஸ்பெக்டர் சேகரின் சாதுர்யமான நடவடிக்கையால் மீட்கப்பட்டன.

இங்கு தாயார் வீட்டிற்கு வந்த ரெஜினா 12 பவுன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரத்தை வீட்டில் வைத்து விட்டு திருவிழா காண சென்றார். பின் வீட்டிற்கு திரும்பிய போது நகைகள், பணம் திருடு போயிருந்தன. இதுகுறித்து சின்னமனுார் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சேகர் வீட்டை ஆய்வு செய்தார். வெளிநபர்கள் வந்து திருடி செல்ல வாய்ப்பில்லை என அறிந்த இன்ஸ்பெக்டர் அக் காலனியில் இருந்தவர்களை அழைத்து, நகையை கண்டுபிடிக்க மோப்ப நாய் வரப்போகிறது. அனைவரின் கை ரேகைகள் எடுக்கப்படும்.

எனவே நகையை எடுத்தவர்கள் மாட்டு சாண உருண்டையில் வைத்து திருடு போன வீடு முன் வைக்கப்படும் அண்டாவில் போட்டு விடலாம். கைது நடவடிக்கையில் இருந்தும் தப்பலாம்,'' என அறிவித்தார். இதன்படி வைக்கப்பட்ட அண்டாவில் 20 பேர் சாண உருண்டையை போட்டனர். பின் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சாண உருண்டைகளை சோதித்ததில் திருடு போன நகைகள் இருந்தன. அவை மீட்கப்பட்ட நிலையில் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடரும் என இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

==============================================================================================================================================

மதுரை:வீணாகும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து குடிநீரை நிரப்பி, மரத்தில் தொங்கவிட்டு பறவைகளின் தாகம் தீர்க்கும் சேவையில் ஈடுபட்டுள்ளார் மதுரை சமூக ஆர்வலர்அசோக்.


அவர் கூறியதாவது: கொளுத்தும் வெயிலில் குடிநீரை தேடும் பறவைகளின் மீதான பாசத்தாலும், தெருவில் குவியும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுபயன்பாட்டிற்கு கொண்டு வந்து சுற்றுப்புறத்தை சுத்தமாக்கும் நோக்கத்தாலும் இச்சேவையை துவங்கினேன்.அந்த வகையில் மயில்கள், பறவைகள் அதிகம் உலவும் மேலுார் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மரங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களில் நீர் நிரப்பி தொங்கவிட்டுள்ளேன்.
இதேபோல் எங்கெல்லாம் பாட்டில்களை தொங்க விட்டுள்ளேனோஅங்கெல்லாம் தினமும் சென்று குடிநீரை நிரப்பி வருகிறேன்.என்னோடு சமூக ஆர்வலர் ராமன், அழகு அறக்கட்டளை நிறுவனர் பாரதி, கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின்நிறுவனர் செந்தில் ஆகியோர் களப்பணி செய்கின்றனர்.. இச்சேவையால் பிளாஸ்டிக் பாட்டில்களை இயற்கையின் நண்பனாக்கியதில் மகிழ்ச்சி, என்றார்.- இவரை வாழ்த்த 91718 70007

=========================================================================================================================


============================================================================================

கோபன்ஹேகன்: டென்மார்க் நீச்சல் போட்டியில் இந்தியாவின் வேதாந்த் (800 மீ., 'பிரீஸ்டைல்') தங்கம் வென்றார்.

டென்மார்க்கில், சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் ஆண்களுக்கான 800 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு போட்டியில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் 16, பங்கேற்றார். பந்தய துாரத்தை 8 நிமிடம், 17.28 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த வேதாந்த், தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, இத்தொடரில் இவரது 2வது பதக்கம். ஏற்கனவே 1500 மீ., 'பிரீஸ்டைல்' போட்டியில் வெள்ளி வென்றிருந்தார். தவிர இவர், 200 மீ., 'பிரீஸ்டைல்' போட்டியில் 12வது இடம் பிடித்திருந்தார்.

ஆண்களுக்கான 100 மீ., 'பட்டர்பிளை', 'ஏ' பிரிவு பைனலில் இலக்கை 54.24 வினாடியில் கடந்த இந்தியாவின் சஜன் பிரகாஷ், 5வது இடம் பிடித்தார். இவர், இத்தொடரின் 200 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் தங்கம் வென்றிருந்தார். மற்றொரு இந்திய வீரர் தனிஷ் ஜார்ஜ் மாத்யூ, 'சி' பிரிவு பைனலில் பந்தய துாரத்தை 56.44 வினாடியில் கடந்து, முதலிடம் பிடித்தார்.


பெண்களுக்கான 200 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் இலக்கை 2 நிமிடம், 14.27 வினாடியில் கடந்த இந்தியாவின் ஷக்தி பாலகிருஷ்ணன், 34வது இடத்தை கைப்பற்றினார்.இத்தொடரில் இந்தியாவுக்கு இதுவரை 2 தங்கம், ஒரு வெள்ளி என மூன்று பதக்கம் கிடைத்துள்ளன.

====================================================================================================================



==================================================================================================================================================

நான் படிச்ச கதை

ஜெயகுமார் சந்திரசேகர்

*************** 

நிலை நிறுத்தல் - கி ராஜநாராயணன் 

 


கி ராஜநாராயணன் அவர்களைப் பற்றி அறிமுகம் அதிகம் தேவை இல்லை. இன்றைய இலக்கியப் படைப்பாளர்களுக்கு இடையில் கதை சொல்லியாக இடையில் புகுந்து நாட்டுப்புறக் கதைகளும் ஒரு பாமர இலக்கியம் என்று நிலை நிறுத்தியவர். இப்போது நாம் காணப்போகும் கதையும் அவ்வாறே. 

இடைச்செவல் கிராமத்தில் 1922இல் பிறந்தவர். முழுப் பெயர் ராயன்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். “நான் மழைக்காகத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக் கொண்டு இருந்து விட்டேன்.“ என்பவர்  பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசியராகப் பணியாற்றிய பெருமை அடைந்தவர். சாஹித்திய அகாதமி உட்பட பல விருதுகளைப் பெற்றவர். 

கதவு என்கிற இவரது சிறுகதை மிகவும் பிரசித்தம். 

நிலை நிறுத்தல் என்பது ஒரு சொலவடை. தேரை நிலைக்கு நிறுத்தியாயிற்று என்று சொன்னால் தேர் அதன் இடத்தில் இருக்கிறது என்று பொருள் அல்லவா? அது போலத்தான் மனிதர்களும். அவர் அவர் தகுதிக்கேற்ப அவர் அவர் நிலையில் நிறுத்தப் படுகிறார்கள். 

சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்தும் அடைபவர்கள் நால்வர். சொத்து, தனத்தால் பெரிய பணக்காரர்கள், அறிவின் சிறப்பால் அறிஞர்கள், அதிகாரம், ஆட்சி செய்பவர்கள் என்பதால் அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள், சமயவழி காட்டுதலால் சமயத் தலைவர்கள் ஆகியோர். 

படிப்பறிவில்லாதவர்கள் பணம் இல்லாதவர்கள், அரசியல் அதிகாரம் இல்லாதவர்கள் சமுக அந்தஸ்த்தைப் பெற முடியுமா? விடை இந்தக் கதையில். 

மாசாணம் 13 வயதுப் பாலகனாக அந்தக் கிராமத்துக்கு வருகிறான். நல்ல உழைப்பாளி. பெரிய முதலாளி அவனைக் கொத்தடிமையாய் சேர்த்துக்கொள்கிறார். அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு படிப்படியாய் அதே பெரிய முதலாளி மாலையிட்டு வணங்கும் நிலைக்கு உயர்கிறான். இதுவே கதை. 

இந்தக்கதை சிறுகதை இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டது. பாமரர்க்கு, பாமரன் கதையை, பாமர பாஷையில், இலக்கண சுத்தம், அசுத்தம் பாராமல் நேரடியாகப் பேசுவது போன்று அமைந்த கதை. இவரது கதைகளின் சிறப்பம்சம் விவரணங்கள், மற்றும் சொலவடைகள் தான். அவற்றை நீக்கிவிட்டால் ருசி போய்விடும். நான் அவற்றை நீக்கித்தான்  இங்கு தருகிறேன்.

மூதேய் மூதேய் வெறுவாக்கலங்கெட்ட மூதேய்…

யாராவது இப்படி ஒரு வசவுடன் கதையைத் துவங்குவார்களா? இந்தக் கதையில் இதுதான் முதல் வரி. இப்படிப்பட்ட  கரிசல்காட்டுக்கே உரித்தான  பல வாக்கியங்களைக் காணலாம். பதிவின் நீளம் கருதி அவை இங்கே தரப்படவில்லை. 

இனி கதையை மேலோட்டமாகப் பார்ப்போம். 

மாசாணமும் அவன் குடும்பத்தாரும் இந்த ஊருக்குப் பஞ்சம் பிழைக்க வந்த சமயத்தில், ஊர் மடத்துக்குப் பின்னுள்ள புளிய மரத்தடியில்தான் தங்கி இருந்தார்கள். வெளிக்குப் போக கம்மாக்கரைப் பக்கம் வந்த முதலாளி கண்ணுலெ தட்டுப்பட்டது மாசாணம்தான்…… 

"வாடேய், வா. நம்ம வீட்டுக்கு வந்து ஒருவாய் கஞ்சி சாப்டுட்டுப் போவெ" 

அன்றிலிருந்து பெரியமுதலாளியின் குடும்பத்தில் ஒருவனாக' மாசாணம் ஆனான். வாரத்துக்கு ஒரு தலைமுழுக்கு உண்டு. வருசத் துக்கு ஒரு ஜோடி வேட்டி சாப்பாடு போக மாசம் மூணு ரூபாய் சம்பளம். 

அவன் வந்தது ஐப்பசி வருகிற சித்திரையிலிருந்துதான் கணக்கு. அடுத்த சித்திரை வரையிலும் இருந்தால்தான்; பாதியிலேயே அரைகுறையாக போனால் போனதுதான். சம்பளம் கிடையாது. 

மாசாணத்தின் குடும்பத்தாரிடம், அவர்களுடைய பூர்வீகம், தொழில், சொந்தவீடு இருக்கா முதலிய எல்லாம் விசாரித்ததில் பூர்வீக வீடு மட்டும் உண்டு என்றும், அது ஒத்தியில் இருக்கிறது என்றும், பரம்பரையாக நல்ல பாட்டாளிகள் என்றும்…தெரிந்தது. 

வேலை தான் மிகவும் கூடுதல். போதாக்குறைக்கு முதலாளியின் வசவுகள் எப்போதும்.  

வேலையின் சுமை யாவது தாங்கிக்கிடலாம், வசவுகளையும் சமயத்தில் விழும் அடிகளையும் எப்படித் தாங்கிக்கிடறது என்று திகைத்தான். 

பல சமயம் அங்கிருந்து ஒடிப் போய்விடுவோமா என்ற நினைப்பு வரும். ‘சித்திரையை விட்டுறப்படாது' என்று பல்லைக் கடித்துக் கொண்டிருப்பான். 

வேலைக்குச் சேர்ந்த வருசத்தில் நடந்த ஊர் சாத்திரைப் பொங்கல் விழாவின்போது பகலில் வேலை செய்துவிட்டு ராத்திரியில் நடக்கும் மந்தை நாடகங்களை முன்னால் போய் உட்கார்ந்துகொண்டு பார்த்தான். இப்படி ஏழாம் நாள் நாடகம் முடிந்து தலைக்கோழி கூப்பிட அவன் நடந்து வீட்டுக்கு வரும்போது தன்னுசார் இல்லை! எந்த இடத்தில் போய் விழுந்தால் நிம்மதியாகத் தூங்கலாம் என்று தள்ளாடிக்கொண்டே வந்து, ரெண்டு தானியப் பட்டரைகளுக்கு இடையில் சுவரை ஒட்டியுள்ள தூசி படர்ந்த இடத்தில் துண்டை விரித்ததுதான் அவனுக்குத் தெரியும். 

மாசாணத்துக்கு முழிப்புத்தட்டி எழுந்திருக்கும்போது தொழுக் கரையின் உச்சியிலிருந்த தலைக்கோழி கூப்பிட்டது. 

வெளியே வந்த பெரியமுதலாளி கவனித்துவிட்டார் இது யார் என்று, கோவமான கோவம் அவருக்கு. திண்ணையில்க் கிடந்த சாட்டைக் கம்பை எடுத்து சுளிரென்று ஒரு சுளுப்புச் சுளுப்பினார். "எங்கெலே போயிருந்தெ ஒரு வாரமா" 'என்னது, ஒரு வாரமாவா!' 

"நா எங்கேயும் போகலையே முதலாளி: இங்கென தான் பட்டரைகளுக்கு இடுக்கிலெ படுத்துக்கிடந்தேன்" 

"சிறுக்கி பிள்ளெ பொய்யி; பொய்யா சொல்லுதெ-" என்று பேவாங்கு வாங்கினார். 

துடித்துப்போனான் மாசாணம். அந்தக் குளிர்ந்த வேளையில் அவனுடைய அலறல் எல்லோரையும் எழுப்பிக் கூட்டம் கூடிவிட்டது. சாட்டையின் வெடிப்பு நாலு தரத்துக்குத்தான் வலிக்கிறமாதிரி இருந்தது. 

அடி வாங்கியதுக்குப் பிறகு ரொம்பநேரம் அழுதுகொண்டிருக்கும் மாசாணம் அழாமல் அன்று கனத்த மெளனமாய் வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது பெரிய முதலாளிக்குப் புதிய விஷயம். 

இது முதல் படி. சூடு, சுரணை, கோபம், எல்லாம் இல்லாமல் இருக்கும் நிலை. ஆம். சாமிகொண்டாடி வம்சத்தில் வந்த அவன் உடம்பு  வலிகளைத் தாங்கும் மன தைரியம் கிடைக்கப் பெற்றான். 

சித்திரையை முடித்த மாசாணம் விடுப்புக் கேட்டான் ஊருக்குப் போக முப்பத்தி ஆறு வெள்ளி ரூபாய்களை எண்ணி அவன் முன் வைத்தார் பெரிய முதலாளி. அவனைப் பார்த்து அவர் ஒரு பாராட்டுச் சிரிப்புச் சிரித்தார். பிறகு, "இண்ணைக்கு விசாளக்கிழமை. நாளைக்கு ஒரு நா தைப்பாறிக்கொ; நாளண்ணைக்கி சனிக்கிளமை எண்ணை தேச்சித் தலைமுளுகி கோழியடிச்சி சாப்ட்டுட்டுப் போ" என்றார். 

நாலாவது வருசம் வந்த மாசாணம் நெலைச்சட்டமாக ஒரு வீட்டில் நிற்காமல் ஒவ்வொரு சித்திரைக்கும் ஒரு வீட்டில் நின்றான்.

என்றாலும் கிராமத்தில் அவன்பேரில் சுத்தமான ஆளு' என்ற பெயர் நிலைத்தது. 

சனிக்கிழமைதோறும் ஊர் பஜனை மடத்தில் நடக்கும் பஜனைக்கு மாசாணம் தவறாமல் போய் உட்காருவான். 

ஒரு நாள், ஸ்ருதிப்பெட்டி போடும் ஆள் வராததாலோ என்னமோ மாசாணத்தைப் போடும்படி சொன்னார்கள். அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டான்…… அது அவனுக்கு ஒரு உயர்வாகத் தெரிந்தது. அனைவரோடும் தான் சமதையாகத் தோன்றியது. அங்கே தன்னை இளப்பமாகப் பார்ப்பவர்களோ கேலி செய்பவர்களோ இல்லை. 

இது இரண்டாம்படி. எல்லோரும் சமம். பக்தியில் எல்லோரும் ஒன்றே. கடவுள் முன் யாவரும் சமம்.  

மாசாணத்துக்கும் கலியாணம் வந்தது. ஊருக்குப் போனான். கொஞ்சநாட்களுக்கெல்லாம் ஒரு பெண்ணோடு வந்தான். 

மாசாணம் பெண்டாட்டியின் பெயரும் மாசாணம்தான்! இதைக் கேட்டதும் ஊர்க்காரர்களுக்கு ரெட்டைச் சந்தோஷம். கால் கை சுளுக்கிக்கொண்டால் எண்ணெய் இட்டுத் தேய்த்துவிட இனிமேல் ஒரே பெயருடைய தம்பதியர் வீட்டைத்தேடி விசாரிக்கவேண்டாம். தேடிப்போகும் மூலிகை வந்து காலில் சிக்கிக்கொண்டதே. 

குடும்பஸ்தனாகிவிட்டதால் இனிமேல் எந்த சம்சாரி வீட்டிலும் சம்பளத்துக்கு நிற்கமுடியாது. அத்தக்கொத்து வேலைக்குப் போய் தினமும் மூணுபடி கம்மம்புல் தானியம் கொண்டுவந்தான். 

இது மூன்றாம் படி. நான் அடிமை இல்லை. பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உண்டு என்பதைக் கற்றுக்கொண்டது. 

பிடிப்புகளுக்குத் தடவிவிட, திருஷ்டி கோளாறுகளுக்குப் பச்சிலை பூக பார்வை பார்க்க, தண்ணிர் தெளிக்க, விபூதி போட என்று ஆட்கள் ஆட்களைக் கூட்டிக்கொண்டு மாசாணத்தின் வீட்டைத் தேடிவர ஆரம்பித்தார்கள். 

மாசாணத்துக்கு இதெல்லாம் பெருமையாக இருந்தாலும் மாசாணத்திக்கு ஆரம்பத்தில்தான் பெருமையாக இருந்தது. 

 காசு பெறாத இந்த நட்டணை வேலைகள் அவளுக்கு பிடிக்காததோடு புருஷனையும் பிடிக்காமல் போய்விட்டது. இவன் தனக்கு சமதை இல்லை என்ற நினைப்பு அவளுக்கு உள்மனசுக்குள்; 

சாய்ந்திரம் பெரியமுதலாளியின் வீட்டம்மா மாசாணத்தைத் தேடி வீட்டுக்குப் போனாள் "ஏ மாசாணத்தி, மாசாணம் வந்ததும் வீட்டுக்கு வரச்சொல்லு சின்ன மொதலாளிக்கு திருநீறு போடணும்" என்று சொல்லிவிட்டு போனாள். 

காட்டிலிருந்து மாசாணம் வந்தவுடனே முதலாளியம்மா வந்த தகவலையும் சொன்னாள். 

.பெரிய முதலாளியின் வீட்டுக்குள் மாசாணம் மெளனமாக நுழைந்ததும் ஒரு சின்ன பரபரப்பு; ஒரு சின்ன மரியாதை. 

சூடத்தைக் கொளுத்தினான். அது எரிவதையே அவன் கண்கள் உக்கிரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன. 

தாம்பாளத்தை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அந்த வெது வெதுப்பான திருநீற்றை சமன்படுத்தி அதில் விரலால் ஏதோ எழுதினான். கொஞ்சம் தலைதுாக்கி பெரிய முதலாளி அதைக் கவனித்தார். ஒன்றும் விளங்கவில்லை. மாசாணத்துக்கோ எழுதப் படிக்கத் தெரியாது. 

மொதலாளியம்மா, சின்ன மொதலாளி எங்கையோ பயந்திருக்காக, வேற ஒண்னுமில்லெ இந்தத் திருநீறை காலையிலும் ஒரு தபா பூசுங்க. ராத்திரியே காய்ச்சல் இறங்கி சரியாபோயிரும்" என்று சொல்லி அந்தச் சிறுவனுக்கு நெற்றியில் இட்டு புஜங்கள் இரண்டிலும் தடவிக்கொண்டே போய் ஒரு சொடக்குடன் முடித்தான். 

"சின்ன முதலாளி"யின் காய்ச்சல் இறங்கி மறுநாளே சரியாகி விட்டது. 

இது நான்காம் படி. யாரும் பகைவரல்லர் என்று உணர்ந்து எல்லோருக்கும் உதவுதல். ஊரார் மதிப்பு கொஞ்சம் கூடுதல். 

அந்த வருடம் மழை பொய்த்து பஞ்சம் தலை தூக்கியது. ஐப்பசி வந்தும் மழை பெய்யவில்லை. மாசாணத்தின் வீட்டிலும் தானியம் இல்லை. இரண்டு நாளாகப் பட்டினி. 

மாசாணம் நேரே பார்வதி அம்மன் கோவில்முன் வந்து நின்றான். முன்னால் வந்து நின்று மேல் வேட்டியை எடுத்து இறுக்கிக்கொண்டு தரையில் விழுந்து அம்மனை வணங்கினான். நீட்டி கூப்பிய அதே நிலையில் ஒன்றிரண்டு நிமிடங்கள் கிடந்தான். 

எழுந்திருந்த மாசாணம் தரையைக் கிள்ளி நெற்றியில் இட்டு சபதம் போல் உரத்துச் சொன்னான், மழை பெய்கிறவரை இங்கேயே அம்மனுக்கு முன்னால் உட்கார்ந்து வயணம் காக்கப்போவதாகவும் மழை பெய்யாமல் போனால் பட்டினி இருந்து இங்கேயே உயிரை விடப் போவதாகவும் சொல்லி அந்த மைதானத்தில் கிழக்காமல் பாாத்து சப்பனம் போட்டு உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டான். 

உடம்பெல்லாம் வேர்த்து வடிய அதேநிலையில் மாசாணம் அசையாமல் உட்கார்ந்திருந்தான். 

மூணாம்நாள் காலையில் மஞ்சள் வெயில் அடித்தது. அலசி விட்டதைப்போல் வானம் சுத்த நீலமாய் இருந்தது. 

துடைத்ததுபோலிருந்த வானத்தில் நேரம் ஆக ஆக மேக கோபுரங்கள் எழுந்து வந்தவண்ணமாக இருந்தன. திடீரென்று காலநிலையில் சொல்ல இயலாத மாறுதல் - பார்த்துக்கொண்டிருக்கும்போதே - நிகழ்ந்துகொண்டிருந்தது. 

வெள்ளை மேகங்கள் மதியத்துக்கு மேல் நிறைசூல்கொண்ட யானை மந்தைகளைப்போல் நகரமுடியாமல் அப்படியே நின்றுவிட்டது. 

திடீரென்று தட்டாங்கற்களை வாரி இறைப்பதுபோல ஆலங் கட்டிகள் தரைமேல் கொட்டியது. 

மாசாணம் கண்ணைத் திறந்து பார்த்தான் "ஈஸ்வரீ," என்று சொல்லிக்கொண்டே தனக்குப் பக்கத்தில் உருண்டு வந்த ஒரு ஆலங்கட்டியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான். 

வானத்தையும் அவர்களையும் அவன் பெருமிதத்தோடு நிமிர்ந்து பார்த்தான். - 

ஆனந்தமாக எல்லோரும் நனைந்துகொண்டே கைத்தாங்கலாக நடத்திக்கொண்டு ஊர்வலம்போல் அவன் வீட்டுக்குப் போனார்கள். 

வாசலில் வந்து நின்று பார்த்த மாசாணத்தி தனது புருஷனை ஊர்ப் பெரியாட்கள் அம்பலகாரர். பெரிய முதலாளி முதலானோர் மாலைபோட்டுக் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு வருவது பார்க்க அவளுக்கும் பெருமையாகவே இருந்தது. 

எப்படி அங்கே பூமாலை வந்தது, மாசாணத்துக்கு உடைமாற்றிக் கொள்ள எப்படிப் புதுவேட்டி வந்தது என்று கேட்கவில்லை. 

சூடான பசும்பாலை சில்வர் டம்ளரில் விட்டு "இந்தா, மாசாணம்; குடி" என்று பிரியத்தோடு நீட்டினார் பெரிய முதலாளி, அதை வாங்கிக்கொண்டான். வாங்கிக்கொண்டு, எல்லோருடைய முகத்தையும் பார்த்தான். மாசாணத்தியின் முகத்தையும்தான். 

பிறகு, அண்ணாந்தே இதுவரை குடித்து வந்த மாசாணம் அன்று அந்த டம்ளரில் சப்பிக் குடித்தான். 

இது கடைசிப் படி. கூழானாலும் கலயத்தில் இருந்து அண்ணாந்து குடித்த மாசாணம் தற்போது சில்வர் டம்பளரில் சூடான பசும் பாலைச் சப்பிக் குடிக்கிறான். போதும் என்று இது வரை கூறத் தெரியாதவன் தற்போது போதும் என்று கூறுகிறான். 

புது வேஷ்டி, மாலை வேறு காரணத்திற்காக (மாசாணத்தின் மரணம்) வாங்கி வைத்திருந்தது தற்போது மாசாணத்தை கவுரவிக்கும் மரியாதைகள் ஆகிவிட்டன. மாசாணம் மதிப்பிற்குரிய “மஹாஜனம்”ஆகிவிட்டார். 

அழியாச்சுடர்களில் படிக்க 

https://azhiyasudargal.blogspot.com/2017/03/blog-post_19.html 

அழியாசுடரில் எ பி வாசகர் இட்ட பின்னூட்டம்.

கோமதி அரசு

கோமதி அரசு on March 20, 2017 at 8:24 AM said...

அருமையான கதை

சிறுகதைகள்.காமில் படிக்க 

https://www.sirukathaigal.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/#more-32739

இக்கதை 1981 இல் கணையாழியில் வந்தது.

 

37 கருத்துகள்:

  1. கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. மண்சட்டி, சாணி உருண்டை,
    மாசாணம்..

    இன்று எல்லாமே அலுப்பாகத் தெரிகின்றன..

    ஏன்?..

    பதிலளிநீக்கு
  4. " மண்ணில் செய்யப்பட்ட சட்டி. "

    -இந்தத் தமிழ் யாருடையது?.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. அனைத்து நல்ல செயல்கள்.
    நகைகள் கிடைத்த பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது நம்பிக்கையை இழக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. @ கில்லர் ஜி..

    // நகைகள் கிடைத்த பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது நம்பிக்கையை இழக்க வைக்கிறது... //

    ஏற்புடைய கருத்து..

    பதிலளிநீக்கு
  8. நேற்று இந்த நாட்டின் வடக்கே ஒரு தீர்ப்பு வந்திருக்கின்றது..

    குற்றவாளியின் மனைவிக்கு கர்ப்பம் தரித்துக் கொள்வதற்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன.. ஆகையால் குற்றவாளிக்கு 15 நாள் பரோல்!..

    தஞ்சை வட்டாரத்தில் சொல் வழக்கு ஒன்று உண்டு..

    திருடனுக்குப் போடுடா
    தேங்காய்ப் பால் சோறு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //..திருடனுக்குப் போடுடா
      தேங்காய்ப் பால் சோறு!//

      நம் நாட்டில் அரசியல்வாதிகளும், கட்சிகளும், நீதி அரசர்(!)களும் குற்றவாளியைத் தப்பிக்கவைப்பதிலேயே முனைகிறார்கள். குற்றமிழைக்கப்பட்டவள்/ன் நாசமாப்போகட்டும். அவள் குடும்பம் அழியட்டும். ஆனால் குற்றவாளி ..பாவம், மனுசன்தானே அவனும்.. அவனுக்கு வாழ்வு வேண்டும், வசதி வேண்டும், அரசு செலவில் பாதுகாப்பு கொடுத்தாலும் தப்பில்லை எனச் செயல்படுகிறது சட்ட/நீதித்துறைகள்.. கேடுகெட்ட அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்தால்.

      நீக்கு
    2. அன்பின் ஏகாந்தன் அவர்களது கருத்து நியாயமானது..

      நீக்கு
  9. திரு. கி ராஜநாராயணன் அவர்களது கதைகள் எல்லாமே தனி ரகமானவை!..

    பதிலளிநீக்கு
  10. // நான் படித்த பள்ளி!.. - ஸ்ரீராம்.. //

    தலைப்பின் கீழ் ஒன்றையும் காணோமே!...

    இனி வரும் வாரங்களில் வரக் கூடுமோ!..

    பதிலளிநீக்கு
  11. // நான் படித்த பள்ளி! - ஸ்ரீராம்..//

    இந்தத் தலைப்பின் கீழ் ஒன்றையும் காணோமே!..

    இனி வரும் வாரங்களில் வரக் கூடுமோ!..

    அழகான இத் தலைப்பினைக் கொடுத்தால் அனைவரும் எழுதுவார்கள்!..

    பதிலளிநீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. // நான் படித்த பள்ளி - ஸ்ரீராம்.. //

    இந்தத் தலைப்பின் கீழ் ஒன்றையும் காணோமே!..

    இனி வரும் வாரங்களில் வரக் கூடுமோ!..

    அழகான இந்தத் தலைப்பினைக் கொடுத்தால் எல்லாரும் எழுதுவார்கள்..

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    பறவைகளின் தாகம் தீர்க்கும் நல்ல செயல்களை செய்து வரும் தஞ்சை தூய அந்தோணியர் மேல்நிலை பள்ளிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அது சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் படித்த பள்ளி எனும் போது மிகவும் மகிழ்வாக உள்ளது. நல்ல பண்புகளை உடைய பள்ளியில் படித்த சகோதரருக்கும் பாராட்டுக்கள்.

    அதுபோல் மதுரை சமூக ஆர்வலர் அசோக் அவர்களின் செயலும் பறவைகளுக்கு இந்த கோடையில் நன்மை பயக்கும். மனித நேயத்துடன் செயல்படும் இவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை சொல்வோம்.

    பிற செய்திகளும் அருமை. அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. ஆர்.கே. நாராயணன் எழுதிய The Guide என்ற நாவல் தேவ் ஆனந்த் நடித்து வெற்றிகரமான திரைப் படமாக வந்தது. அதிலும் ராஜு என்கிற ஒரு fraud ஆசாமி சந்தர்ப்ப வசத்தால் மழைக்காக உண்ணாவிரதம் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி மழை வரும் தருணம் உயிரை விடுகிறான் என்பது மையக்கருத்து.

    பதிலளிநீக்கு
  16. The film itself, I think, had a "happy ending" if I remember right, for box office reasons.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய நான் படித்த கதை பகுதியில் இடம் பெற்றிருக்கும் கதையில் எழுத்தாளர் கி.ராஜ நாராயணன் அவர்கள் எழுதிய கதை மிகவும் அருமையாக இருந்தது.

    எழுத்தாளர் குறித்த அறிமுகத்திலிருந்து அவர் எழுதிய கதையை சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் விவரித்திருந்த முறை அற்புதமாக இருந்தது. திறமையான எழுத்தை திறமையானவர்களால்தான் விமர்சிக்க இயலும் என்பதற்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் விமர்சன எழுத்து ஒரு சான்று. மனமார்ந்த பாராட்டுக்கள். சகோதரர் தந்த விமர்சனம் படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கவே சகோதரர் தந்த சுட்டிக்கும் சென்று முழுக் கதையையும் படித்து வந்தேன்.

    கி. ராஜ நாராயணன் அவர்கள் எழுதிய கதைகளை படித்திருக்கிறேன். ஆனால், இந்தக்கதையை இதுவரை படித்ததில்லை. இப்போது படிக்க உதவிய சகோதரர் ஜெயகுமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுதல்களுக்கு நன்றி அம்மா. சிறுகதைகளிலும் கவிதைகளைப் போன்று ஒரு அரிய கருத்து பொதிந்திருக்கும். அதைக் கண்டுபிடித்து வெளிக்கொணர்வதே என் நோக்கம்.
       
      Jayakumar

      நீக்கு
  18. கி.ரா. ஒரு அபூர்வமான படைப்பாளி. ரசனையோடு வாசிக்கப்படவேண்டியவர்.

    பதிலளிநீக்கு
  19. இன்றைய பலவும் நற்செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. நல்லா எழுதியிருக்கீஙக்க, ஜெஸி சார். இந்தத் தடவை நல்லா வந்திருக்கு.

    பல நேரங்களில் எதைப் பற்றி எமுதுகிறோம் என்பது முக்கியமில்லாது
    போய் எதை எழுதினாலும் வாசிக்க வைக்கிற சாகசத் திறமை (உதாரணம்: சுஜாதா) கைவரப் பெறுவது தான் எழுத்தின் வெற்றி.

    தொடர்ந்து எழுதுங்கள். அடுத்த சனிக்கிழமை அடுத்து வருவதில் சந்திக்கலாம்.

    பதிலளிநீக்கு
  21. கி.ரா.வும் கு. அழகிரிசாமியும் இரட்டையர் போலவான நண்பர்கள். ஒரே ஊர்க்காரர்கள்.

    எனக்கு அழகிரிசாமியின் படைப்புகள் நல்ல அறிமுகம். ஒரு தகவலுக்காக.

    ராஜ நாராயணன் என்று பெயரைப் பார்த்ததுமே சகோதரி ரேவதி நரசிம்மனின் நினைவு தான் எனக்கு வந்தது. அவருக்கு கி.ரா.வின் எழுத்துக்கள் நல்ல அறிமுகம். அவர் இந்தப் பதிவைப் பார்த்தால் கி.ரா.வைப் பற்றி நிறையச் சொல்வார்.

    பதிலளிநீக்கு
  22. இந்தப் பகுதிக்கு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறவர்களின் எண்ணிக்கை இன்னும் கூடினால் நன்றாக இருக்கும். போகப் போக பார்க்கலாம். தொடர்ந்து எழுதுங்கள். அதுவே மற்றவர்கள் இந்தப் பகுதிக்கு எழுதவும் ஒரு உந்துதலாக இருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. ஜீவி அய்யா அவர்களின் பாராட்டுதலுக்கு நன்றி. முதலில் "இந்தக் கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது" என்று கண்டபோது கொஞ்சம் ஏமாந்து போனேன். தற்போதுதான் கருத்துக்களைக் கண்டபின் மகிழ்வுற்றேன். மிக்க நன்றி. செவ்வாய் அன்று காணலாம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  24. ஶ்ரீராம் படித்த பள்ளியில் இப்போது படிக்கும் மாணவர்களுக்கு அதிலும் குறிப்பாகச் சாரணர்களுக்குப் பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பதற்காக மண்சட்டிகளைக் கொடுத்து உதவியர்களுக்குப் பாராட்டுகள். எங்க வீட்டில் நாங்களும் மண் சட்டி தான் வைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இந்தப் பறவைங்க ஒண்ணுக்கொண்ணு சண்டை போட்டுக்கறதில், அதிலும் இந்த மைனாக்கள் கத்தும் கத்தலில் அந்தச் சட்டிகளையெல்லாம் உருட்டிக் கீழே தள்ளிக் கொண்டிருந்தன. கீழே தோட்டத்தில் யாரானும் வேலை செய்தால் அவங்க தலையில் விழுந்துடுமோனு பயமா வேறே இருக்கு. ஆகவே இப்போப் ப்ளாஸ்டிக்கில் அகன்ற பாத்திரமாக வாங்கித் துளை போட்டு ஜன்னலில் கட்டி வைச்சிருக்கோம். பார்ப்போம் எத்தனை நாட்கள் வருதுனு!

    பதிலளிநீக்கு
  25. வேதாந்தம் தங்கப் பதக்கம் பெற்ற செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்துட்டுப் பெயர் எங்கேயோ கேள்விப் பட்டிருக்கோமேனு யோசிச்சேன். கடைசியில் (ஆரம்பத்தில் இருந்தே) மாதவனோட பிள்ளையா? எனக்கு தேவனின் "மிஸ்டர் வேதாந்தம்" நினைவில் வந்தது.

    பதிலளிநீக்கு
  26. அனைத்து செய்திகளும் அருமை.
    பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் மாணவர்களும் . மரத்தில் நீர் நிரம்பிய பிளாஸ்டிக் பாட்டில்களை தொங்க விடுவது மகிழ்ச்சியான நல்ல செய்தி.

    பதிலளிநீக்கு
  27. //ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் படித்த கதை பகிர்வு அருமை.
    மாசாணம் 13 வயதுப் பாலகனாக அந்தக் கிராமத்துக்கு வருகிறான். நல்ல உழைப்பாளி. பெரிய முதலாளி அவனைக் கொத்தடிமையாய் சேர்த்துக்கொள்கிறார். அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு படிப்படியாய் அதே பெரிய முதலாளி மாலையிட்டு வணங்கும் நிலைக்கு உயர்கிறான். இதுவே கதை. //



    சுருக்கமாக மிக அருமையாக முன்னுறை கொடுத்து கதையை சொன்னது அருமை.
    பகிர்வில் என் பின்னூட்டமும் இடம் பெற்றதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. இந்த வாரத்தின் செய்திகள் அனைத்தும் சிறப்பு. கி.ரா. அவர்களின் கதை படித்த கதை.

    பதிலளிநீக்கு
  29. சாண உருண்டையில் தங்கம்! தங்கநகை திருடியவர்களைப் பிடிக்க வித்தியாசமான வழி.

    எல்லாச் செய்திகளும் நன்று.

    படித்த கதையைப் பற்றி ஜெ கே சார் நன்றாகச் சொல்லியிருக்கிறார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  30. ஜெகே அண்ணா சொல்லியிருக்கும் அந்த நான்கு நிலை - நல்ல விளக்கம் அதைக் கதையிலும் பொருத்திச் சொல்லியிருப்பது சூப்பர். அதிலேயே கதைச் சுருக்கமாகத் தெரிந்துவிடுகிறது.

    கீதா


    பதிலளிநீக்கு
  31. ஆஹா ஸ்ரீராம் படித்த பள்ளியில் இப்போது பறவைகளுக்குத் த்ண்ணீர் வைக்கச் சொல்லி சொல்லுவதும் மண்சட்டிகள் கொடுத்து உதவுவதும் வரவேற்கக் கூடிய, பாராட்டக்கூடிய விஷயம்.

    மேடியின் மகன் வேதாந்த் பரிசு பெற்ற செய்தி கூகுளில் வந்து வாசித்தது. பாராட்டுகள். குற்றாலீஸ்வரன் நினைவுக்கு வருகிறார்!

    மரத்தில் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் தொங்க விடுவது நல்ல ஐடியா ஆனால் தண்ணீர் அடியில் போகும் போது பறவைகளுக்குத் தண்ணீர் எட்டுமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  32. அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றி.
    ராச நாராயணன் ஐயாவைச் சொல்லும்போது என்னையும் ஜீவி சார்
    சொன்னது மிக மகிழ்ச்சி.
    உண்மைதான்.
    அவருடன் நம் வீட்டுக்கு கணவதி அம்மா வந்தது
    மறக்க முடியாத நிகழ்வு,.

    அவருடன் ஒரு படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை.
    மிகச் சோகம். !!!!~

    அவ்வளவு நேரம் வீட்டை சுற்றிப் பார்த்து
    எங்கள் மீனையும் , செடி கொடிகளையும் அப்படிக்
    கொண்டாடினார். புத்தகங்களில் கையொப்பம் இட்டுக் கொடுத்தார்.
    2006 இல் நிகழ்ந்தது,.
    கிளம்பும்போது பசிக்கப் போகிறதே என்று இருவருக்கும் நிறைய இட்லி
    சட்டினி ,குழம்பு என்று கொடுத்துவிட்டேன்.
    அடுத்த நாள் பாத்திரங்கள் ,ஒரு பாசமான் கடிதத்துடன்
    வந்து விட்டது.
    என்ன ஒரு பண்பாளர்!! மிக நன்றி ஜீவி சார்.
    உடல் நலம் இல்லாததால் எபி பக்கம் வரவில்லை.


    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!