சனி, 25 ஜூன், 2022

இவர் தான் நிஜ ஹீரோ - மற்றும் 'நான் படிச்ச கதை' - JC

 ஆலப்புழா : கேரளாவில், திடீரென அரிவாளால் வெட்ட வந்த ரவுடியை சாதுர்யமாக மடக்கிப் பிடித்து கைது செய்த எஸ்.ஐ.,யின் வீர செயலை, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

கேரளாவில், ஆலப்புழா மாவட்டத்தின் காயங்குளம் அருகே, 'பாரா ஜங்ஷன்' என்ற இடம் உள்ளது. இப்பகுதியின் போலீஸ் ஸ்டேசனை சேர்ந்த எஸ்.ஐ., அருண்குமார், 12ம் தேதியன்று ஜீப்பில் ரோந்து பணி சென்றார்.

அப்போது இரு சக்கர வாகனத்துடன் சாலை ஓரத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அருண்குமார் ஜீப்பை நிறுத்திவிட்டு அவரிடம் விசாரிக்க இறங்கினார். அந்த நபர் சற்றும் எதிர்பாராத நேரத்தில், இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து அருண்குமாரை வெட்ட வந்தார்.

முதலில் நிலைகுலைந்த அவர் சமயோசிதமாக அந்த நபரை கீழே தள்ளி, அவர் மீது அமர்ந்து பட்டாக்கத்தியை பிடுங்கினார். பின் அந்த ரவுடியை கைது செய்து அழைத்து சென்றார். இந்த காட்சி அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதை ஐ.பி.எஸ்., அதிகாரி ஸ்வாதி லக்ரா என்பவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, 'இவர் தான் நிஜ ஹீரோ' என, எஸ்.ஐ., அருண்குமாரை பாராட்டி உள்ளார்.

இந்த, 'வீடியோ' பல்வேறு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி, பலரது பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்த சம்பவத்தில் அருண்குமாரின் கையில் ஏற்பட்ட வெட்டு காயத்துக்கு எட்டு தையல் போடப்பட்டுள்ளது. 
========================================================================================

தற்போது ஒரு ஆசிரியரும் இதேபோல அரசுப்பள்ளியில் மகனைச் சேர்த்திருக்கிறார்.  இதெல்லாம் ஒரு சாதனையாக, பாசிட்டிவ் நியூஸாக போடவேண்டிய காலம்தான்.  என்ன செய்ய..  ந்த அரசியல்வாதி, வி ஐ பிக்கள் தங்கள் குழந்தைகளை அரச பள்ளியில் படிக்க வைக்கின்றனர், தங்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் அரசு மருத்துவமனையில் வைத்தியம் பார்த்துக் கொள்கின்றனர்?

அவிநாசி :மாவட்ட உரிமையியல் நீதிபதி, தன் மகனை, அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்துள்ளார். அவருக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.  திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிபவர் வடிவேல். இவரின் மனைவி புனிதா, மகள் ரீமா சக்தி, மகன் நிஷாந்த் சக்தி.  தன் மகள் மற்றும் மகனை, முதல் வகுப்பு முதல், அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்.  ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்த ரீமா சக்தி, பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார். இதே பள்ளியில் படித்த நிஷாந்த் சக்தி, எட்டாம் வகுப்பு முடித்துள்ளார்.  இந்நிலையில், சமீபத்தில், ஈரோட்டில் இருந்து அவிநாசிக்கு, நீதிபதி மாறுதலானார். இதையடுத்து, நிஷாந்த் சக்தியை அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் நேற்று சேர்த்தார்.நீதிபதி வடிவேல் கூறியதாவது:நான் அரசுப் பள்ளியில் படித்து, வழக்கறிஞர் பட்டம் பெற்று, அரசு உதவி வழக்கறிஞராக, 2014ம் ஆண்டு மாநிலத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றேன்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வாயிலாக தேர்வு எழுதி நீதிபதியாக பணிபுரிகிறேன்.அரசு பள்ளிகளில் சிறு குறைகள் இருக்கத் தான் செய்யும். அப்படி இருக்கும்போது தான் மாணவர்களிடையே தேடலும், ஆர்வமும் அதிகரிக்கும்.
நாட்டில், அரசு துறைகளில் பணிபுரியும் 60 சதவீதத்தினர் அரசு பள்ளியில் படித்தவர்கள் தான். அரசு துறைகளில் பணிபுரிபவர்கள், அவர்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வர
வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நீதிபதி, தன் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்து, பிற அரசு ஊழியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதை அறிந்து, பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
====================================================================================================

மேலுார் : மதுரை மாவட்டம் மேலுார் அரசு கல்லுாரி மாணவி திவ்யதர்ஷினி சீமைக் கருவேல மரங்களை எளிதாக அகற்றும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். 
மேலுாரை சேர்ந்த செந்தில் மகளான திவ்யதர்ஷினி, பி.எஸ்சி., தாவரவியல் முதலாம் ஆண்டு படிக்கிறார். சிறு வயது முதல் பள்ளி அறிவியல் கண்காட்சிகளில் பல கண்டுபிடிப்புகள் செய்து காண்பித்து பரிசுகளை வென்றுள்ளார்.தற்போது சீமை கருவேல மரங்களை டிராக்டரில் ைஹட்ராலிக் கருவியை கொண்டு இலகுவான முறையில் அகற்றும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.
மாணவி கூறுகையில், ''இந்த இயந்திரம் மூலம் ஒரு ஏக்கரில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அரைமணி நேரத்தில் ரூ.2 ஆயிரம் செலவில் அகற்றலாம். சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு தமிழக அரசு, விவசாயிகள் கேட்டுக் கொண்டால் செயல்படுத்த தயாராக உள்ளேன். அடுத்து காஸ் சிலிண்டருடன் ஆக்சிஜனை இணைத்து எரிவாயு அடுப்பை கண்டுபிடிக்க உள்ளேன்'' என்றார்

இவரைப் பாராட்ட 99444 37098ல் தொடர்பு கொள்ளலாம்.
=================================================================================================

80 வயது ராமனின் சுறுசுறுப்பைப் பற்றி, உழைப்பைப் பற்றி ஒரு காணொளி.  இங்கு சுட்டுங்கள்.  காணலாம்.  நன்றி ஜெயக்குமார் ஸார்.


==========================================================================================

100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற ராம் பாய் !


ஹரியானா மாநிலம், Charkhi Dadri யைச் சேர்ந்த ராம் பாய் - 105 வயது. 
சமீபத்தில் குஜராத் - வடோதராவில் நடைபெற்ற தேசிய அளவிலான முதியோருக்கான ஓட்டப் பந்தயத்தில் நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 45.4 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்! 

அதற்குப் பின் நடைபெற்ற 200 மீட்டர் பந்தயத்திலும் அவர் பங்கேற்று அதில் 112.17 வினாடிகளில் முதல் ஆளாக வந்து அதற்கும் தங்கப் பதக்கம் வென்றார்! 

அவர் கடந்த நவம்பர் மாதம் 21 தொடங்கி பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதுவரை நான்கு தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். 

அவர் தினமும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கும் பழக்கம் உள்ளவராம். தினமும் காலையில் 4 கிலோ மீட்டர் தூரம் ஓடும் பழக்கமும் உண்டாம். 
அவர், தினசரி உணவில் பால், தயிர், நிறைய நெய் மற்றும் சுர்மா (கோதுமை மாவில் நெய், வெல்லம் சேர்த்து செய்யப்படும் உணவு வகை) உண்டாம்! 

அவர் மட்டும் அல்ல, அவருடைய 62 வயது மகள் சந்தரா தேவி (Santra Devi ) கூட relay race ஓடி தங்கப் பதக்கம் பெற்றார். ராம் பாயின் இரண்டு மகன்கள் கூட (
Mukhtar Singh and Vadhu Bhateri) 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்! 


 ============================================================================================================================


நான் படிச்ச கதை

ஜெயக்குமார் சந்திரசேகரன்
***********

சரஸ்வதி பூஜை


(1940ல் வெளியான சிறுகதை)

“சரஸ்வதி பூஜை-செப்டம்பர் மாதம் இருபத்தாறாம் தேதி செவ்வாய்க்கிழமை!” என்று ஹாலில் உட்கார்ந்திருந்த தாத்தா, பஞ்சாங்கத்திலிருந்து இரைந்து படித்தார்.

மாடியிலிருந்து அந்தச் சமயத்தில் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த சரஸ்வதியின் காதில் அது நன்றாக விழுந்தது.

“தாத்தா! சரஸ்வதி பூஜை செவ்வாய்க் கிழமையில்லையாம்; ஞாயிற்றுக்கிழமை தானாம். அதனால் சர்க்கார் ஆபீஸ்களுக்கு லீவு கிடையாதாம். நேற்று அப்பா சொல்லிக் கொண்டிருந்தாரே, நீ கேட்க வில்லையா?” என்று கேட்டாள் அவள் கீழே இறங்கி வந்து.

தாத்தா மூக்குக் கண்ணாடியைக் கழற்றி உரையில் வைத்துவிட்டு, “ஞாயிற்றுக் கிழமையாவது! எந்தப் பஞ்சாங்கத்திலும் அந்த மாதிரி இல்லையே? ஒரு நாள் முன்னே பின்னே இருக்குமே ஒழிய ஒரேயடியா நாலைந்து நாளா வித்தியாசப்படும்? அதெல்லாம் இருக்காது” என்றார் தம் பேத்தியைப் பார்த்து.

“அதென்னமோ, கவர்ன்மெண்டுக்கு மட்டும் சரஸ்வதி பூஜை இந்த வருஷம் ஞாயிற்றுக்கிழமைதானாம். மத்திய சர்க்காருக்கு இந்த விஷயங்களில் ஆலோசனை சொல்லுவதற்காக மாதம் மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் சீமையிலிருந்து வந்திருக்கும் சாஸ்திரிகள் அப்படித்தான் சொல்லிவிட்டாராம், தெரிகிறதா?” என்று கேட்டுவிட்டு, சரஸ்வதி சமையலறைப் பக்கம் போய் விட்டாள்.

“சாஸ்திரிகளாவது, சீமையிலிருந்து வருகிறதாவது! எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சிண்டிருக்குகள், போக்கிரிப் பசங்கள்!” என்று முணு முணுத்துக் கொண்டார் தாத்தா.

சரஸ்வதி சமையல் அறைக்குள் நுழைந்த போது, அங்கு இன்னும் காப்பிக் கடை தான் நடந்து கொண்டிருந்தது. அவள் சகோதரர்கள் அப்பொழுது தான் எழுந்து பல் தேய்த்துவிட்டு வந்து உரத்த சத்தத்துடன் பேசிக்கொண்டே காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

“என்ன இரைச்சல், கொத்தவால் சாவடி மாதிரி!” என்று கேட்டுக் கொண்டே வந்த சரஸ்வதி, தன் தாயாரைப் பார்த்து, “அம்மா! சரஸ்வதி பூஜை செவ்வாய்க்கிழமை என்று சொல்லிக் கொண்டிருந்தாயே, தாத்தாவைப் போய்க் கேளு. ஞாயிற்றுக்கிழமைதானாம், (ஆசிரியருக்கே குழப்பம். “சரஸ்வதி பூஜை-செப்டம்பர் மாதம் இருபத்தாறாம் தேதி செவ்வாய்க்கிழமை!” என்று தாத்தா சொன்னதை மறந்து விட்டார். ) சொல்லி விட்டார்!” என்றாள்.

“என்னடி இது” என்று கேட்டுவிட்டு ஹாலை நோக்கி விடுவிடென்று நடந்தாள் அவள் தாயார். சரஸ்வதி உடனே வாயைக் கையினால் பொத்திக் கொண்டு சிரிப்பை அடக்க முயன்றதும், அவள் சகோதரர்களும் சிரித்துக் கொண்டே எழுந்திருந்து, ஹாலில் நடக்கும் வேடிக்கையைப் பார்ப்பதற்காகத் தங்கள் தாயாரைப் பின் தொடர்ந்தார்கள்.

***

இந்த சரஸ்வதிக்கு வயது பதினைந்தோ அல்லது பதினாறோ இருக்கும் என்று நினைக்க வேண்டாம். வருகிற ஐப்பசி மாதத்துக்கு அவளுக்கு இருபத்து மூன்று வயது நிறையப் போகிறது! ஆனால் பார்ப்பதற்குப் பதினெட்டு வயசு மாதிரிதான் இருப்பாள். ரொம்ப ரொம்ப அழகு என்று சொல்ல முடியாது; அழகில்லை என்றும் சொல்வதற்கில்லை, குறும்புத்தனமான சிரிப்பு ஒன்று எப்பொழுதும் அவள் முகத்தில் குடி கொண்டிருக்கும். அவள் பேச்சிலும்கூட சதா குறும்பும் பரிகாசமும் தான்.

அவள் கல்யாண விஷயந்தான் அவள் பெற்றோருக்கும் தாத்தாவுக்கும் கூட, பெரிய கவலையை உண்டு பண்ணுவதாயிருந்தது. சென்னை ராஜதானியில் மட்டும் இல்லாமல் பம்பாய், கல்கத்தா டில்லி முதலிய இடங்களுக்கெல்லாம் உத்தியோகத்துக்காகப் போயிருக்கும் பிரும்மச்சாரிகளை வரனுக்காகச் சல்லடை போட்டு அரித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். தகுந்த வரன் தான் இன்னும் கிடைத்த பாடில்லை.

“ஏ, பெண்ணோ இங்கே வா!” என்று கூப்பிடுவார் தாத்தா. சரஸ்வதி சிரித்துக் கொண்டே எதிரில் வந்து நிற்பாள்.

“இந்த வருஷமாவது கல்யாணம் பண்ணிக் கொள்கிறதாய் உனக்கு உத்தேசம் உண்டா, இல்லையா?”

“எந்த வினாடியும் தயாராக இருக்கிறேன்” என்பாள் சரஸ்வதி குறும்புச் சிரிப்புடன்.

“நீ தயார் தான்! வேளை தானே வரவில்லை!” என்று முணுமுணுப்பார் தாத்தா.

பாவம், சரஸ்வதிக்கும் மனசிலே குறை தான், தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என்று. அவளுடைய குறும்புத் தனமான பேச்சும் சிரிப்பும் இந்தக் குறை வெளியே தோன்றாதபடி செய்து வந்தன.

ஒரு நாள் மாலை ஏழு மணி இருக்கும். வீட்டில் விளக்கேற்றின பின் சரஸ்வதி, பாடங்களைப் படிப்பதற்காக மாடியில் இருந்த தன் அறைக்குச் சென்று புஸ்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள். அப்பொழுது, “சரஸு!” என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தார் அவள் தாத்தா.

சரஸ்வதி திரும்பிப் பார்த்தபொழுது அவர் வாசற்படியருகிலேயே நின்று, “சரஸு! மதுரையில் ஒரு வரன் இருக்கிறது என்று சொன்னேனே, அந்தப் பையனைப் பற்றி விசாரித்து எழுதும்படி கல்யாணராமனுக்கு எழுதியிருந்தேன். அவனிடமிருந்து பதில் வந்திருக்கிறது. பார்!” என்று கூறி, ஒரு கடிதத்தை அவளிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றார்.

கடிதத்தைக் கையில் வாங்கிய பொழுது சரஸ்வதியின் முகம் வெட்கத்தினாலும் கோபத்தினாலும் சிவந்தது. கல்யாணராமன் என்பவன் அவர்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் வெகு காலமாக வசித்த ஸப்ரிஜிஸ்ட்ராரின் பிள்ளை. மூன்று வருஷங்களுக்கு முன்பு அவன் லா காலேஜில் படித்துக் கொண்டிருந்தான். சரஸ்வதியின் குடும்பத்துக்கும் அவன் குடும்பத்துக்கும் மிக நெருங்கிய பரிச்சயம் உண்டு. சரஸ்வதியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவன் மனசில் இருந்தது. சரஸ்வதிக்கும் இந்த விருப்பம் இல்லாமற்  போகவில்லை. கல்யாணப் பேச்சுகளும் நடந்தன. சரஸ்வதி அப்பொழுது தான் இண்டர்மீடியட் பரீக்ஷையில் தேறி இருந்தாள். மேலே பி.ஏ. படிக்க அவள் உத்தேசித்திருந்தபடியால் – இரண்டு வருஷங்கள் கழித்துக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போவதாக அவள் கூறிவிட்டாள். கல்யாணராமன் தனக்காக இரண்டு வருஷம் காத்திருக்க மாட்டானா என்று தான் எதிர்பார்த்தாள் அவள். அது கல்யாணராமன் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமாக இருர்தால், இரண்டு வருஷம் மட்டும் அல்ல, ஐந்து வருஷமானாலும் காத்துக்கொண்டிருக்க அவன் தயார்தான். ஆனால் அவன் பெற்றோர்கள் அதற்குத் தயாராக இருந்ததாகத் தெரியவில்லை. வேறு இடத்தில் பெண் பார்க்க அவர்கள் முனைந்து விட்டார்கள். அந்தச் சமயம் கல்யாணராமன் பரீக்ஷையில் தேறின படியால் வக்கீல் தொழில் நடத்துவதற்காக அவர்கள் குடும்பத்துடன் மதுரைக்குப் போக வேண்டியதாயிற்று.

இன்று மறுபடி அந்தக் கல்யாணராமனிடமிருந்து தாத்தாவுக்குக் கடிதம் வந்திருக்கிறது என்று தெரிந்ததும், சாஸ்வதிக்கு உண்டான கோபத்துக்கு அளவில்லை. “இரண்டு வருஷம் ஒரு பெண்ணுக்காகக் காத்திருக்க முடியாத ஆண் பிள்ளை ஒரு மனுஷனா!” என்று நினைத்துக் கொண்டு, அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பாராமலே கிழித்துத் தன் மேஜை அடியில் இருந்த குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டாள்!

***

சரஸ்வதி பூஜை வந்து விட்டது.

ஆமாம்; தாத்தா பஞ்சாங்கத்தைப் பார்த்து ஜோஸியம் சொன்னபடியே, அது செப்டம்பர் மாதம் இருபத்தாறாம் தேதி செவ்வாய்க் கிழமையன்று தவறாமல் வந்து விட்டது.

சரஸ்வதியின் வீட்டைப் பொறுத்தவரையில் சரஸ்வதி பூஜை தனியாக வரவில்லை மதுரையில் இருந்த கல்யாணராமனையும் அது தன்னுடனே அழைத்துக் கொண்டு ‘ஜாம் ஜாம்’ என்று வந்தது.

பொழுது விடிந்ததும், சரஸ்வதி படுக்கையை விட்டு எழுந்து மாடியிலிருந்து இழே இறங்கி வரத் தொடங்கினாள். அப்பொழுது ஹாவின் நடுவில் இருந்த பெட்டியும் படுக்கையும் அவள் கண்ணில் பட்டதும் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அடுத்த நிமிஷம் கல்யாணராமனே அவள் எதிரில் நின்றான்! மரியாதைக்காக அவனிடம், “எப்போது வந்தீர்கள்?” என்று கேட்டுவிட்டு விழுந்தடித்துக் கொண்டு கொல்லைப் பக்கம் சென்றாள் சரஸ்வதி.

தனக்காக இரண்டு வருஷம் காத்திருக்க முடியாதவனுடன் அதற்கு மேல் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

என்ன காரணத்தினாலோ அன்று ஒரே ஆனந்தத்தில் மூழ்கியிருந்தார் தாத்தா. தம் பேத்தியின் போக்கு அவருக்கு அர்த்தமாகவில்லை. “அதிகம் படித்து விட்டாலே இந்தப் பெண்கள் அசடுகளாகி விடுகிறதுகள்! காலையில் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு மாடிக்குப் போனவள், அப்புறம் கீழே வந்து ‘என்ன?’ என்று கூட கேட்கவில்லையே, வந்தவனை?” என்று நினைத்துக் கொண்டார் அவர்.

மத்தியானம் மூன்று மணி இருக்கும். கல்யாணராமனும் சரஸ்வதியும் மாடியில் சந்தித்தார்கள்.

என் பேரில் உனக்கு என்னவோ கோபம் போலிருக்கிறது. இல்லாவிட்டால் இப்படி நாலு வார்த்தைகள் கூடப் பேசாமல் இருப்பாயா நீ?” என்றான் கல்யாணராமன்.

“கோபமாவது, ஒண்ணாவது! உங்களுடன் எனக்கு என்ன பேச்சு வைத்திருக்கிறது என்று தான் சும்மா இருக்கிறேன்”

“நான் எழுதிய கடிதத்தைப் பார்த்தாயா?- தாத்தா உனக்கு அதைக் காண்பித்ததாகச் சொன்னாரே!”

“கண்ட கடிதாசியைப் படித்துப் பொழுது போக்க நான் என்ன வேலையில்லாமல் ஒழிந்து இருக்கிறேனா? மதுரையில் இருக்கும் வரன் எதையோ பற்றி எழுதியிருப்பீர்கள்! அது இருக்கட்டும். உங்கள் மனைவி சௌக்கியந்தானே? குழந்தைகள் ஏதாவது...” என்று இழுத்தாள் சரஸ்வதி.

கல்யாணராமன் பெரிதாகச் சிரித்தான்.

“உன்னைப் போல அசடை நான் பார்த்ததில்லை! மனைவியாவது குழந்தைகளாவது? எனக்கு இன்னும் கல்யாணமே ஆக வில்லையே! உனக்காக இரண்டு வருஷம் காத்திருந்து உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளத்தானே இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்? அந்தக் கடிதத்திலும் இதையெல்லாம் எழுதியிருந்தேனே” என்றான் கல்யாணராமன்.

சரஸ்வதி பதில் ஒன்றும் பேசவில்லை. கீழே குனிந்து, மேஜை அடியில் கிடந்த குப்பைக் கூடையில், தான் கிழித்துப் போட்ட கடிதத் துண்டுகளை எடுத்து ஒன்று சேர்த்துப் படிப்பதில் முனைந்தாள்!

கதையின் சுட்டி இங்கே

என்னுரை.

கடந்த வாரமும் இந்த வாரமும் இலகு வாசிப்பு தான். அதுவும் சிம்பிள் காதல் கதைகள் தாம். காதல் கதைகளிலும் சிம்பிளான “மிஸ்ஸியம்மா” ஜெமினி சாவித்திரி காதல் கதைகள் தான். விமரிசனம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆராய்ச்சியும் இல்லை. “காதல்” என்றுமே கதை எழுத ஒரு சுலபமான கருப்பொருள். அந்த வகையில் இதுவும் ஒன்று.  “காதலுக்கு க(டன்)ண்  உண்டோ” என்றது கடந்த வாரம். இந்த வாரம் “காதலுக்கு expiry date உண்டோ என்பது தான். (“உண்டு, கல்யாண நாள் தான்” என்கிறது மைண்ட் வாய்ஸ் அதற்கப்புறம் அடிமை வாழ்வு தான்.)

சாதாரணமாக “இன்று நல்ல பூஜை கிடைக்கப் போகிறது” என்றால் திட்டோ, வசவோ, அடியோ கிடைக்கப் போகிறது என்று தான் அர்த்தம் கொள்வோம். ஆனால் இக்கதையில் சரஸ்வதியை பூஜிக்க கல்யாணராமன் வருவது என்பது ஒரு திருப்பம் அல்லது எதிர் பாராதது. அதை வைத்து கதையை புனைந்து விட்டார் ஆசிரியர். 

இந்தக் கதையை எழுதியவர் யாரென்று ஊகிக்க முடிகிறதா?

 ஆசிரியர் பற்றிய குறிப்பு.

 ஆசிரியர் : சரோஜா ராமமூர்த்தி (1921-1991)

 இவரை பற்றிய விவரங்கள் அதிகம் கிடைக்கவில்லை. இவர் எழுதிய சில படைப்புகள்: இருளும் ஒளியும், நவராத்திரி பரிசு, பனித்துளி, விழித்திருந்தாள், முத்துச்சிப்பி.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச்  சேர்ந்தவர். அந்தக் காலத்திலேயே புரட்சிகரமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டவர்.

 

37 கருத்துகள்:

  1. இன்று நன்மையாளர்களின் பட்டியல் அருமை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் திறமைசாலியே...

    குடும்பமே ஓட்டப்பந்தையம் இப்படி எல்லோரும் குடும்பத்தோடு ஓடவேண்டும் (கடன் வாங்கி கொண்டு)

    அரசு பள்ளிகளில் சேர்க்க அரசியல்வாதிகள் முன் வரவேண்டும் நிச்சயமாக தரம் உயர்த்தப்படும்.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய பாசிடிவ் செய்திகள் நன்று. நாளை, இவர் மினரல் வாட்டர் குடிப்பதில்லை, கிணற்று ஆற்றுத் தண்ணீரை மட்டுமே குடிக்கிறார் என்பதையும் பாசிடிவ் செய்தியில் போடாமலிருந்தால் சரிதான்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். தொற்று அதிகரித்து வந்தாலும் கட்டுப்பாடுகள் தேவை இல்லை என அரசு எடுத்திருக்கும் முடிவில் இருந்து மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்திப்போம். வாங்க கீதா அக்கா.. வணக்கம்.

      நீக்கு
  4. அனைத்துச் செய்திகளுக்கும் பாராட்டுகள். சாதனையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். மாணவியின் கண்டு பிடிப்பு உதவி ஆய்வாளரின் தைரியம், ஹரியானா குடும்பத்தினரின் ஓட்டத்திறமை அனைத்திற்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. இப்போக் கொஞ்ச நாட்களாக சரோஜா ராமமூர்த்தியின் கதைகள் வாட்சப்பில் வலம் வருகின்றன. "யார் அசடு" என்னும் கதை நேற்று எனக்குக் குடும்ப வாட்சப் மூலம் வந்திருக்கு. இன்னமும் படிக்கவில்லை. இவர் நாக்பூரில் வசித்ததாகக் கேள்விப் பட்டிருக்கேன். என் பெரிய நாத்தனாரின் சிநேகிதிக்கு நாத்தனார் இவர். அனைவருமே நாக்பூரில் இருந்திருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  6. இவரும் வசுமதி ராமசுவாமியும் ஓரிரு நாவல்களே எழுதி இருந்தாலும் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாராட்டுகளைப் பெற்றவை. வசுமதி ராமசாமியின் "காப்டன் கல்யாணம்" அந்தக் காலத்து விகடனில் வந்தது. சரோஜா ராமமூர்த்தியின் பனித்துளியும், முத்துச்சிப்பியும் கூட விகடனில் தான் வந்ததாக நினைவு. இரண்டும் படிச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வசுமதி ராமசாமி பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன்.

      நீக்கு
  7. ஆனால் முத்துச்சிப்பி என்னும் பெயரில் "அனுத்தமா" கூட ஓர் நாவல் எழுதி இருப்பதாக நினைவு.

    பதிலளிநீக்கு
  8. என்னது அடிமை வாழ்வா...?!!! சார்ந்தோர்க்கு ஆழ்ந்த...

    ...

    வாழ்த்துகள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனைவி பாஸ் ஆனால் கணவன் ??

      நீக்கு
    2. புரியலையே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    3. “காதலுக்கு expiry date உண்டோ என்பது தான். (“உண்டு, கல்யாண நாள் தான்” என்கிறது மைண்ட் வாய்ஸ் அதற்கப்புறம் அடிமை வாழ்வு தான்.)

      நீக்கு
    4. இத்தனை வருஷங்கள் வாழ்ந்த நாமே அடிமை வாழ்வு என்று நினைத்தால் இப்போதைய தலைமுறையினர் அவ்வாறு நினைப்பதிலும் நடப்பதிலும் தப்பே இல்லை. இப்போ யாருக்கெல்லாம் திருமண பந்தத்தின் உண்மையான அர்த்தம் புரிகிறது?

      நீக்கு
    5. அடிமை வாழ்வு என்று நினைக்கும் லிஸ்ட்டில் நான் இல்லை!

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. பாசிடிவ் செய்திகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    80 வயது ஸ்ரீராம் அவர்களுக்கு வணக்கங்கள்,வாழ்த்துக்கள்.
    105 வயது முதுமையிலும் ஓடலாம் தன்னம்பிக்கை தரும் செய்தி.
    தங்கம் வென்ற ராம்பாய் அம்மாவுக்கு வணக்கம், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. கதை எளிமையாக நன்றாக இருக்கிறது. இவர் கதைகள் படித்து இருக்கிறேன்.
    சார் அவர்கள் என்னுரை நன்றாக இருக்கிறது.

    //இந்த வாரம் “காதலுக்கு expiry date உண்டோ என்பது தான். (“உண்டு, கல்யாண நாள் தான்” என்கிறது மைண்ட் வாய்ஸ் அதற்கப்புறம் அடிமை வாழ்வு தான்.)//

    அன்புக்கு அடிமை என்று சொல்லுங்கள். காதலிக்கும் போது தலைவன், தலைவி, திருமணத்திற்கு பின் குடும்பத்தலைவன், குடும்பத்தலைவி இல்லையா? அன்பில் யார் உயர்ந்தவர், தாழ்ந்தவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்து. யாருக்கும் யாரும் அடிமை இல்லை.

      நீக்கு
  12. //80 வயது ஸ்ரீராம் அவர்களுக்கு வணக்கங்கள்,வாழ்த்துக்கள்.// ஐயோ ஸ்ரீ ராமுக்கு 80 வயதாகிவிட்டதா!செய்தியில் உள்ள ஒற்றைக்கை மனிதர் பெயர் ராமன். ஸ்ரீ ராம் அவரை ஸ்ரீராமன் ஆக்கிவிட்டார். நீங்கள் அவரை ஸ்ரீ ராம் ஆக்கிவிட்டீர்கள். எ பி மூத்த ஆசிரியரும் ராமன் தான். அவருக்கு 80 வயதாகலாம். ராமன் எத்தனை ராமன்!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியில் கோவையை சேர்ந்த ஸ்ரீராமன் என்று போட்டு இருக்கிறது. அவரும் தன் பெயர் ஸ்ரீராமன் என்று சொல்கிறார்.
      நான் ஸ்ரீராம் என்று சொல்லி விட்டேன். மன்னிக்கவும். ஸ்ரீராமன் தான் அவர் பெயர்.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. அறிய தந்த நல்லவர்களையும், வல்லவர்களையும் போற்றுவோம்.

    இன்றைய கதை பகிர்வும் நன்றாக உள்ளது. இந்த கதாசிரியரின் கதைகளை படித்ததாக நினைவு உள்ளது. ஆனால். இப்போது குறிப்பிட்டுச் சொல்ல நினைவில்லை. இன்றைய கதையும் அருமை. அந்த காலத்தில் இப்படி எழுத்து முறையில் கடிதங்களில் தங்கள் மனதை தெரிவித்துக் கொள்வதுதானே இயல்பு. சிறிய கதை என்றாலும் சுவாரஸ்யமாக இருந்தது. எழுத்தாளர் பற்றிய தகவல்களையும், இன்றைய கதைப்பகிர்வையும் தந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அவர் தந்த சுட்டிக்குச் சென்று அங்கு இந்த எழுத்தாளர் எழுதிய மேலும் சில கதைகளை ஆர்வத்தோடு படித்து வந்தேன். சுட்டிக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. பாசிட்டிவ் செய்திகள் எல்லாமே சூப்பர். எல்லோரையும் வாழ்த்துவோம்...ஹப்பா பாட்டி இந்த வயதிலும் ஓடுகிறாரே!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. சரோஜா ராமமூர்த்தி புதிய அறிமுகம். கதை மிக எளிமையான கதை. ஜெ கே அண்ணா, கதையின் முடிவை ஊகிக்க முடிகிறதே. திருப்பம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. சரோஜா ராமமூர்த்தி பழம்பெரும் எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய சமகால எழுத்தாளர்கள் வசுமதி ராமசாமி, லக்ஷ்மி, அநுத்தமா, ஆர்.சூடாமணி, பிரேமா நந்தகுமார், இவர் மாமியார், பெயர் நினைவில் இல்லை குமுதினினு நினைக்கிறேன். ராஜம் கிருஷ்ணனும் எழுத ஆரம்பிச்சிருந்தார். கலைமகள் நாராயணசாமி ஐயர் பரிசுப் போட்டியிலும், பின்னர் விகடன் வெள்ளிவிழா நாவல் போட்டியிலும் ராஜம் கிருஷ்ணன் பரிசு பெற்றிருந்தார். ஆர்.சூடாமணியும், அனுத்தமா ஆகியோரும் கலைமகளில் பரிசு பெற்றவர்களே.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!