திங்கள், 27 ஜூன், 2022

"திங்க"க்கிழமை "  : சேப்பங்கிழங்கு முறுகலும் விதம் விதமான சாம்பாரும் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 சாம்பாரை மராட்டியர் தான் அறிமுகம் செய்தார்னு நினைச்சவங்களை அப்படி இல்லைனு விக்கி விக்கிக் கொண்டே சொல்லுது. சம்பாரம், அல்லது சாம்பரம் என்று அழைக்கப்பட்ட உணவு வகை இந்த சாம்பார்தான் என்பது விக்கியின் கூற்று. 16 ஆம் நூற்றாண்டிலேயே சாம்பாரைக் குறிப்பிட்டு ஒரு கல்வெட்டு இருப்பதாகவும் விக்கி சொல்கிறது. மிளகு, நெய் சேர்த்துப் பண்ணினதாகவும் தெரிய வருகிறது. பின்னர் காலப் போக்கில் இப்போதைய சாம்பார் பழக்கத்துக்கு வந்திருக்கணும்.

எனக்கு சாம்பாரோ, சாம்பார் சாதமோ பிடிக்காது. சாப்பிட மாட்டேன்! அரைக்கரண்டி சாம்பார் விட்டுக் கொண்டால் அதிகம். ஆனால் அதுவே இட்லிக்கு மட்டும் சாம்பார் தான் பிடிக்கும். சட்னி, மி.பொடி எல்லாம் அடுத்த பட்சம் தான். இப்போதெல்லாம் என்னோடு சேர்ந்து தானோ என்னமோ நம்ம ரங்க்ஸுகும் சாம்பாரே பிடிக்கிறதில்லை! :) இட்லி சாம்பார் மட்டும் விதிவிலக்கு. இதிலே வகை, வகையாக சாம்பார்கள் இருக்கின்றன. பயத்தம்பருப்புப் போட்டுத் தக்காளி, வெங்காயம் சேர்த்துப் பண்ணினால் அது ஒரு ருசி. துவரம்பருப்புப் போட்டுப் பண்ணும் சாம்பாருக்கு ஈடு, இணை இல்லை. அதிலே காய்களாக முருங்கை, பூஷணி, பறங்கி, கத்தரிக்காய், முள்ளங்கி, சின்ன வெங்காயம் போன்றவை முக்கியமான காய்கள் என்றாலும் பலர் இப்போதெல்லாம் குடைமிளகாய், தக்காளி, காரட், காலிஃப்ளவர் போன்றவை போட்டும் சாம்பார் செய்கின்றனர். கொண்டைக்கடலை, கொத்தவரை, அவரைக்காய், போன்றவையும் சாம்பாரில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் சாம்பாருக்கென இருக்கும் தனிக்காய்களில் சாம்பார் வைத்தால் அதன் ருசியே தனி. அதிலும் வெண்டைக்காய்ப் பிஞ்சில் சாம்பார் வைத்தால் அதன் மணமே தனி. :)

இது ஶ்ரீராம் சொன்ன சரவணபவன் சாம்பார்! :)


இங்கே

நான் புளி போட்டுப் பருப்பில்லாமல் சாம்பார் வைப்பேன். இப்போ ஶ்ரீராம் பதிவு போட்டபின்னர் பருப்புப் போட்டுப் புளி இல்லாமல் சாம்பார் வைக்கிறேன். புளி இல்லை என்பதாலோ என்னமோ அதிகம் இது தான் பிடிக்கிறது.  இதற்கு மி.பொடி, தனியாப் பொடினு சேர்க்கச் சொல்லி இருந்தாலும் நான் சாம்பார்ப் பொடி தான் சேர்க்கிறேன். பொதுவாகவே சாம்பார் பண்ண சாம்பார் பொடி என ஒன்று தயார் செய்து குறைந்தது 3 மாதங்களுக்காவது வரும்படி வைத்துக்கொள்வார்கள். ஆனால் முன்னெல்லாம் அன்றன்று வறுத்து அதை இயந்திரத்தில் அரைத்தே சாம்பார்ப் பொடி தயார் செய்திருக்கின்றனர். இதிலே வெறும் வறுத்த பொடி மட்டும் போட்டுப் பருப்பு, புளி, காய்கள் சேர்த்துப் பண்ணும் சாம்பார் ஒரு ருசி. அதிலேயே தேங்காய் சேர்த்துப் பொடி செய்து போடுவது ஒரு வகை. எல்லாமாக வறுத்து அரைத்துச் செய்வது ஒரு வகை. கொஞ்சம் பொடி போட்டு, கொஞ்சம் வறுத்து அரைத்தும் சிலர் செய்வார்கள். என்னைப் பொறுத்த வரையில் சாம்பார் என்றால் முழுக்க முழுக்க வறுத்து அரைத்தால் தான் அது சாம்பார். :) சில சமயம் அடியில்தாளித்துக் கொஞ்சமாகப் பருப்புப் போட்டு வத்தப்பருப்புக் குழம்பு மாதிரி செய்வதும் உண்டு. பொடி போட்டு சாம்பார் செய்தால் அதற்கு மேல் சாமான் வறுத்து அரைக்காமல் வெறும் கொத்துமல்லி விதையும் தேங்காய் துருவலும் மட்டும் போட்டு வறுக்காமல் பச்சையாக அரைத்து விடலாம். இது ஒரு ருசி. ஆக விதம் விதமாய் சாம்பார் பண்ணினாலும் எனக்கு என்னமோ மொத்தமாய் ஒரு கரண்டி சாம்பாருக்கு மேல் தேவைப்படறதில்லை. :)

அடுத்து சேப்பங்கிழங்கு முறுகல். கவனிக்கவும், முறுகல் தான். நோ கறு(ரு)கல். >))) சில நாட்கள்/மாதங்கள் (?) முன்னர் தம்பி வா.தி. சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பத்தி சந்தேகம் எழுப்பி இருந்தார். அதிலே பதில் சொன்னவங்க எல்லாருமே கடலைமாவு, மி.பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து அதிலே தான் சேப்பங்கிழங்கைப் புரட்டிக் கொள்ளச் சொன்னார்கள். அல்லது முறுகும் சமயம் கடலைமாவைத் தூவச் சொல்லி இருந்தார்கள் சிலர்/ இரண்டுமே சரியாக வராது என்பது என்னோட தாழ்மையான கருத்து. என்னோட மாமியார் கடலைமாவை பஜ்ஜி மாவு மாதிரிக் கரைச்சு எடுத்துக் கொண்டு அதிலே சேப்பங்கிழங்கை முக்கிப் போட்டுப் பொரித்து எடுப்பார்கள். அது பரவாயில்லை மேலே சொன்னதை எல்லாம் பார்க்கும்போது.  ஏனெனில் மாவைத் தூவும் போது மாவு மட்டும் அந்தக் காரப் பொடியோடு சேர்த்து கொண்டு தனியாகத் தூளாக நிற்கும்.  சேப்பங்கிழங்கில் காரம் சேர்ந்து இருக்காது. எல்லாமும் கடலைமாவோடு சேர்ந்து கொண்டு சட்டியில் தூளாக நிற்கும்.

போனமாதம் திருக்கடையூருக்கு என் தம்பி சஷ்டிஅப்தபூர்த்திக்குப் போனப்போ அங்கே சமையல்காரர்கள் போட்ட வெண்டைக்காய்க் கறியிலும் இப்படித் தான் வெண்டைக்காய் தனியாகவும், கடலைமாவுக் கலவை தனியாகவும் இருந்தது. இம்மாதிரி வறுக்கும் காய்களுக்குக் கடலைமாவே போடாதீங்க. அது சேப்பங்கிழங்காக இருந்தாலும் சரி, சின்ன உருளைக்கிழங்காக இருந்தாலும் சரி, வெண்டைக்காயாக இருந்தாலும் சரி. ஒண்ணு பஜ்ஜி மாதிரி மாவைக் கரைத்துக் கொண்டு முக்கிப் போட்டுப் பொரிச்சு எடுங்க. இல்லைனா எண்ணெயிலே வதக்குங்க. இன்னிக்கு சேப்பங்கிழங்குக் கறி பண்ணும்போது நினைவா (ஹிஹிஹி, அதிசயமா இருக்கில்ல?) படம் எடுத்தேன். அதைப் பார்க்கவும். முக்கியமாக இரும்புச் சட்டி அல்லது சீனாச் சட்டி தேவை. சீனாச்சட்டினா ரொம்ப நல்லது. எண்ணெய் அதிகம் செலவாகாது. என்னிடம் சீனாச்சட்டி இருந்தாலும் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பப் பெரிசா இருக்கிறதாலே கால் கிலோ சேப்பங்கிழங்குக்கு அதி அதிகம் என்பதால் அதிலே செய்யாமல் இரும்புச் சட்டியில் செய்தேன். கீழே படங்கள்.

முதலில் சேப்பங்கிழங்கை நன்கு ஊற வைத்து மண்போகக் கழுவிக் கொண்டு நீரை வடிகட்டி விட்டுக் குக்கரில் வேக வைக்கவும். கவனிக்கவும்;குக்கரில் வேக வைக்கும்போது குக்கரில் விசில் சப்தம் வரும்படி அதற்கு குண்டு போடக் கூடாது. குக்கரில் நன்கு ஆவி வெளி வரும்வரை வைத்துவிட்டு குண்டைப் போட்டு உடனே அடுப்பை அணைக்கவும். பத்து நிமிஷம் கழிச்சுக் குக்கரைத் திறந்து சேப்பங்கிழங்கை வெளியே எடுத்து வடிகட்டிவிட்டுப் பார்த்தால் தோல் நன்கு உரிந்து வரும். சேப்பங்கிழங்கு அமுக்கினால் அமுங்கும் அளவு வெந்திருக்கும். அது போதும். ரொம்பக் குழைந்து விட்டால் கறி சேர்ந்து கொண்டு துவையல் மாதிரி ஆயிடும். சேப்பங்கிழங்கைத் தோல் உரித்துப் பெரிதாக இருந்தால் ஒரே மாதிரியாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

நான் பண்ணும் செய்முறையில் ஒரு அகல பேசினில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அதிலேயே மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பெருங்காய்த் தூள், உப்புப் போட்டு எண்ணெயில் நன்கு கலக்கி விடுவேன். பின்னர் வெட்டி வைத்த சேப்பங்கிழங்குத் துண்டங்களைப் போட்டு நன்கு கலந்து விடுவேன். ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிஷம் அப்படியே வைத்திருக்கணும். இடைவெளியில் அடுப்பில் குழம்பு, ரசம் கொதிக்க வைத்து, சாதம் வைத்து இறக்கிக் கொள்ளலாம். பின்னர் இரும்புச் சட்டியை எடுத்துக் கொண்டு அதிலே ஒரே ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய வைக்கவும். கடுகு போட்டுத் தாளிக்கவும். கடுகு பொரியும் அளவுக்கு எண்ணெய் இருந்தால் போதும்.

கடுகு பொரிந்ததும் எண்ணெயில் ஊறிக்கொண்டிருக்கும் சேப்பங்கிழங்கை அதிலிருக்கும் எண்ணெயோடு அப்படியே இரும்புச் சட்டியில் போடவும். ஒரு அகப்பையால் நன்கு கலக்கவும். அடுப்பைத் தணித்து வைத்து நன்கு வறுபட விடவும். எங்களுக்குக் காரம் அதிகம் வேண்டாம் என்பதால் நான் கால் டீஸ்பூன் தனி மி.பொடியோடு கால் டீஸ்பூன் சாம்பார் பொடியும் சேர்த்துப் போட்டிருக்கேன். அரை டீஸ்பூன் உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள். அவ்வப்போது நன்கு திருப்பி விடவும். சேப்பங்கிழங்கு எண்ணெய் முழுதையும் உள்வாங்கிக் கொண்டு தனித்தனியாக வரும்போது அடுப்பை அணைக்கவும்.

தனித்தனியாக வந்திருக்கும் சேப்பங்கிழங்கு ரோஸ்ட்!


72 கருத்துகள்:

 1. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற்
  பொருட்டு..

  குறள் நெறி வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம்..

  வாழ்க வையகம்
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 3. விக்கி சொல்வதெல்லாம் உண்மையில்லை ..ன்னு விக்கிக்கே தெரியும்.. சம்பாரமோ அம்பாரமோ -
  இன்றைய சாம்பாருக்கு
  தஞ்சாவூர் அரண்மனை தான்!..

  இட்லிக்கு எது தாயகம்.. ன்னு கேட்டுப் பாருங்களேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இட்லிக்கு எது தாயகம்.//.ஆமா இல்ல! அதை வேறே ஒரு நாள் எழுதணும்னு நினைச்சுட்டு இருக்கேன். :)))))

   நீக்கு
 4. சாம்பாருக்கு ஆத்தா வூடு அரேபியப் பாலைவனம் ன்னு அடிச்சு விட்டாலும் யாரு கேக்கப் போறாங்க!..

  விக்கி பாடு கொண்டாட்டம் தான்..

  பதிலளிநீக்கு
 5. வெகு நாளைக்கு அப்புறம் நல்லதொரு சமையல் குறிப்பு..

  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. இன்னிக்கு நம்ம நளபாகமா? ஹிஹிஹி ஆங்காங்கே எ.பிக்கள் இருக்கின்றன. ஶ்ரீராம் நான் அனுப்பினதுமே ஷெட்யூல் பண்ணிட்டார் போல! :))))) எடிட் செய்யலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன பிழை கண்டீர்?  சொற்சுவையிலா?  இல்லை பொருட்சுவையிலா?  சாம்பார் சுவையிலா?  இல்லை கறிச்சுவையிலா?!!

   நீக்கு
  2. எழுத்துப் பிழைகள் கண்களில் பட்டன. :))))

   நீக்கு
  3. உண்மையில் "நள பாகம்" என்பது அடுப்பில் வைக்காமல் சமைப்பது மட்டும்.

   நீக்கு
  4. க்ர்ர்ர்ர்ர்ர்ர், எழுத்துப் பிழைகள் என 3 தரம் சொல்லி இருந்தும் அந்தக் கருத்து வரவே இல்லை. :(

   நீக்கு
 8. அனைவருக்கும் காலை.மதியம்/மாலை வணக்கம் நல்வரவு, வாழ்த்துகள். தொற்றுப்பரவாமல் நம்மை நாமே காப்பாற்றிக்கொள்வோம். இறை அருள் வேண்டுவோம்.

  பதிலளிநீக்கு
 9. சேப்பங்கிழங்கு வாங்கியே இப்போப் பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்தப் பதிவு 2015 இல் எழுதி இருக்கணும். அப்போத்தான் வரிசையாக என்னோட தம்பிகள் பலருக்கும் சஷ்டி அப்தபூர்த்தி வந்தது. சொந்தத் தம்பி சஷ்டி அப்த பூர்த்தியில் தான் மேலே சொன்ன வெ.கறி சாப்பிட்டோம். சகிக்கலை. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான்...  சாம்பார் இன்னும் கெட்டுப்போகாமல் இருக்கே, அடுக்காய்ச் சொல்லுங்க...

   நீக்கு
  2. ஹிஹிஹிஹி. சாம்பாரின் ருசியும் தரமும் அப்படி!

   நீக்கு
  3. மிளகாயையும் தனியாவையும் வறுத்து மரஉரலில் இடித்துச் மஞ்சளும்சலித்து,மிளகு,பருப்புகள்,வெந்தயம் முதலியவைகளை வறுத்து ஏந்திரத்தில் அரைத்துக்கலந்து மிளகாய்ப்பொடி அதான் குழம்புப்பொடி செய்வார்கள்.அப்போது ஸாம்பார் என்ற பெயர் கிடையாது. அரைத்துச் சேர்க்கும் பொருளுக்குச் சம்பாரம் என்று சொல்வார்கள். வாஸனை ஊரையே தூக்கும். கச்சட்டியில் இந்த ஸாம்பார் கெட்டே போகாது.கறிவேப்பிலை விட்டுப் போச்சா?இதெல்லாம் எழுத மறந்து விட்டீர்களா? நல்ல வியாஸமே எழுதிவிட்டீர்கள். சேம்புவறுவலும் கரகர நல்லநல்ல பதிவு.அன்புடன்

   நீக்கு
  4. வாங்க அம்மா. நமஸ்காரங்கள். கருகப்பிலையை எங்க வீட்டில் பொடியில் சேர்க்க மாட்டாங்க. தனியாக சாம்பார் கொதிக்கையில் தான் அந்தக் காம்போடு இரண்டாகக்கிள்ளிப் போடுவாங்க. :)))) என் மாமியார் வீட்டில் சாம்பார், ரசத்துக்கெல்லாம் கருகப்பிலையே கிடையாது. கொத்துமல்லித் தழை மட்டும் தான். ரசத்தில் கருகப்பிலை போட்டால் ஜீரக ரசமா என்பார்கள். சாம்பாரில் போட்டாலோ ஒரு சிரிப்புத் தான்! :))))))

   நீக்கு
 10. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

  இன்றைய திங்கள் பதிவாக தங்களின் சாம்பார், மற்றும் சேப்பங்கிழங்கு ரோஸ்ட் அனைத்தும் அருமை. படங்கள் காலையிலேயே பசியை தூண்டுகிறது. சாம்பாரை பற்றிய விபரங்கள் அனைத்தும் நன்றாக சொல்லியுள்ளீர்கள். சேம்பு ரோஸ்ட் நானும் இப்படித்தான் தனித்தனியாக வரும்படி பண்ணுவேன். உங்கள் செய்முறையாக படத்தில் மிகவும் அழகாக உள்ளது. இது சில சமயம் கொஞ்சம் வாயுவையும் சேர்த்துக் கொண்டு நம்மை பிடிக்க வைக்கும் என்பதினால் அடிக்கடிச் செய்வதில்லை. ஆனால் ருசி அருமையாக இருக்கும். முன்பெல்லாம் இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது செய்திருக்கிறேன். எங்கள் வீட்டில் அனைவருக்கும் இதைப் பிடிக்கும். இதற்கும் நம்மை பிடித்து விட்டால்தான் கஸ்டம். அழகான பகிர்வு. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கமலா. நாங்களும் இப்போச் சேப்பங்கிழங்கு வாங்கியே பல மாதங்கள் ஆகிவிட்டன.

   நீக்கு
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கமலா, உங்களுக்கு நான் சொல்லி இருந்த பதிலைக்காணவே காணோமே! :( என்ன சொன்னேன் என்பது நினைவில் வரலை. மெயில் பாக்ஸில் பார்க்கிறேன்.

   நீக்கு
  3. காணாமல் போன பதில்களைக் கொண்டு வந்து விட்டேன்!

   நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

   /காணாமல் போன பதில்களைக் கொண்டு வந்து விட்டேன்!/

   அதைக் குறித்து படித்து விட்டு என் பதிவுக்குள் பதிலுரைக்கப் போனவள் மறுபடியும் பதில்கள் தாமாகவே வந்து விட்டனவா எனத் தேடித்தான் வந்தேன்.

   இப்போது காணமல் போன பதில்களை தாங்கள் தேடி கொண்டு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.மிக்க நன்றியும் கூட.

   காலையிலிந்தே உங்களையும் காணவில்லையே என தேடிக் கொண்டிருக்கிறேன்.. :) தாங்களும் வந்து விட்டீர்கள். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  5. இரண்டு தபால்கள் வந்துள்ளன.  பதில் விரைவில்!!

   நீக்கு
  6. தகவலுக்கு நன்றி சகோதரரே.

   நீக்கு
 11. ரேவதி சென்னை வந்துட்டாரா? இரண்டு நாட்களாகக் காணோமே!

  பதிலளிநீக்கு
 12. ரொம்ப விபரமாக எழுதிய தி பதிவு. சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்முறை நன்றாக எழுதியிருக்கீங்க.

  கிலோ 60ரூபாய்க்கு 1 1/2 கிலோ இரு வாரங்களுக்கு முன்பு வாங்கி, சேப்பங்கிழங்கு லோஸ்ட், மோர்க்கூட்டு என்றெல்லாம் சாப்பிட்டுப் போரடித்தரநிலையில் இந்தப் பதிவு வந்திருக்கு. மோர்க்குழம்பு, சாம்பார் போன்றவற்றிர்க்குவநல்ல காம்பினேஷன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே வாங்கவே இல்லை. கூட்டெல்லாம் சேப்பங்கிழங்கில் பண்ணினால் நான் தான் சாப்பிடணும். :))))

   நீக்கு
 13. என் மாமி, தளிகை பண்ணின சேப்பங்கிழல்கை எண்ணெயில் பொரித்து அதன் மீது மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி ம பொடி தூவிப் பண்ணுவார். அது ரொம்ப நல்லா இருக்கும். நான் இன்னும் செய்துபார்த்ததில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுவும் மாமியார் பண்ணுவார். ஆனால் சேப்பங்கிழங்குகள் சின்னச் சின்னத் துண்டங்களாக இருக்கும்.

   நீக்கு
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மேலே உள்ள இரண்டு கருத்துரைகளுக்கும் நான் போட்ட பதிலைக் காணோம்/ :( படுத்தல் தாங்கலையே!

   நீக்கு
  3. சேப்பங்கிழங்கு ஒழுங்காய் அமைவது ரொம்ப ரொம்ப அபூர்வம்.  

   நீக்கு
  4. ஆமாம் சில சமயம் சேனை கிழங்கு மாதிரி காறலுடன் கழுத்தை அரிக்கும். (கழுத்தறுக்கும்... அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.:) )

   நீக்கு
  5. அதைச் சொல்லவில்லை.  எவ்வளவு வேக வைத்தாலும் கெட்டியாக கழுத்தறுக்கும்.  சரியில்லாத கிழங்கு.  ஒரு மாதிரி வாசனை அடிக்கும்.

   நீக்கு
 14. எனக்கு சேப்பங்கிழங்கு தான் போட்ட ப.குழம்பும் பிடிக்கும். பசங்க அவியலுக்கே போடாதீங்க, கொசகொசன்னு இருக்கு என்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப.குழம்பு? என்னனு புரியலை. பச்சைக்குழம்பா? இஃகி,இஃகி,இஃகி! அவியலில் நானும் சேப்பங்கிழங்கு சேர்க்க மாட்டேன். திருவாதிரைக் குழம்பிலும் போட மாட்டேன். :)))))

   நீக்கு
  2. கொழகொழப்பு ஒரு மைனஸ்!  ஆனாலும் மோர்க்குழம்பில் போடலாம்.

   நீக்கு
  3. மோர்க்குழம்பில் போடுவோம். அதிலும் ஸ்ராத்த மோர்க்குழம்பில் சே.கி. தான். இந்தச் சே.கிழங்கை நன்கு வேகவிட்டுக் கொண்டு மி.வத்தல்.தேங்கய்/ஜீரகம் எல்லாம் வைத்து அரைத்துக் கொண்டு உப்புச் சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கடைசியில் கொஞ்சம் மோர் அல்லது தயிர் விடுவார்கள். இதைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். இஞ்சிப் பச்சடி அல்லது புளிவிட்ட வாழைக்காய்கறி இதன் துணை.

   நீக்கு
 15. ஶ்ரீராம், செவ்வாய்க்கு ஒரு சிறுகதையும், திங்களுக்கு உணவுப் பதிவும் கேட்டதைத் தவறாகப் புரிந்துகொண்டு இரண்டையும் கம்பைன் பண்ணி மி பதிவை நாவலாக எழுதியிருக்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இஃகி,இஃகி,இஃகி/ போயிட்டு அப்புறமா வரேன்.

   நீக்கு
  2. எல்லாக் கருத்துக்களுமே காணாமல் போய்விட்டன. :( என்ன செய்யறது இதுக்கு?

   நீக்கு
  3. எல்லாத்தையும் கட்டி இழுத்துக் கொண்டு வந்து விட்டேன் பாருங்க...

   நீக்கு
  4. ஹாஹாஹா, நன்றி ஶ்ரீராம். கமலாவின் பதிவில் கொடுத்த கருத்தும் தேடிப் பிடிச்சுக் கொண்டு வந்தேன். இருக்கோ என்னமோ தெரியலை.

   நீக்கு
  5. இப்போதுதான் பார்த்தேன். இரண்டு கருத்துகள் வந்துள்ளது. அதற்கும் மேலேயே கொடுத்தீர்களா என்று தெரியவில்லை. நானும் சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்களின் பதிவில் இன்று மதியம் ஒரு கருத்து தந்து ஆற அமர நின்று அது வந்தமர்ந்ததை பார்த்து விட்டுத்தான் வந்தேன். இப்போது காணவில்லை. போட்ட கருத்தெல்லாம் ஏன் இப்படி ஓடி ஒளிகிறது.

   நீக்கு
 16. சாம்பார் அவர்களின் பாடல்களைப் போலவே, வறுத்து - அரைத்து - செய்த சாம்பார் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும், தனி ருசி தான்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வறுத்து அரைத்த சாம்பாரிலேயே வகைகள் இருக்கு!

   நீக்கு
 17. சாம்பாருக்கு புளி போடலாமா ? தெரிந்து கொள்ள வேண்டிய நிலைப்பாடு.

  அரபு நாட்டில் இருபது வருடங்களாக இருந்தும் சமைக்கத் தெரியாதவன் நான் ஒருவனாகத்தான் இருக்கும்.

  தெரிந்தது சாம்பார் ஒன்றுதான் ஒருநாள் வைத்தால் இரண்டு நாளுக்கு செல்கிறது.

  அம்மா கையில் விதவிதமான கீழக்கரை ருசிகளை சுவைத்தவன்.

  இன்று சுவை என்பதே மறந்து போகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புளி வைத்தும் செய்யலாம், வைக்காமலும் செய்யலாம்.

   நீக்கு
  2. புளி வைக்கலைனால் தக்காளி கூடப் போட்டுப் பண்ணணும். எங்க அம்மா கிள்ளு மிளகாய் சாம்பார் என்னும் ஒன்று பண்ணுவார். அதிலே சாம்பார்ப் பொடியோ/புளியோ இருக்காது. தக்காளியும், வேகவைத்தக் குழைந்த துவரம்பருப்பும், சின்னச் சின்னதான நாட்டுப் பச்சை மிளகாய் என்னும் மிளகாய்களும் தான். இட்லிக்குச் சுவையாக இருக்கும் இந்த சாம்பார்.

   நீக்கு
 18. என்னது சாம்பார் பிடிக்காதா ஒரு வேளை ஜெமினிகணேஷனை நினைத்து சொல்லி இருப்பார்களோ என்னவோ? ஹீஹீ


  எனக்கு சாம்பார் சாதம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கண்டிப்பாக சாப்பீட்டு ஆகனும் இல்லையென்றால் சாப்பிட்ட மாதிரியே இருக்காது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது என்னமோ தெரியலை. சின்ன வயசில் இருந்தே அதிகம் ரசம் சாதம் தான். அடிக்கடி உடம்பு படுத்திக் கொண்டிருந்ததாலோ என்னமோ! சாம்பாரை சாதத்தில் விட்டுப் பிசைந்து கொண்டு நான் சாப்பிட்டதாக எனக்கு நினைவிலேயே இல்லை.

   நீக்கு
 19. சாம்பார் பற்றிய அலசல்கள் மிக அருமை!

  பதிலளிநீக்கு
 20. சாம்பார், சேப்பங் கிழங்கு வறுவல் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 21. சேப்பங்கிழங்கு செய்முறை சூப்பர்.

  பதிலளிநீக்கு
 22. கீதாக்கா, சாம்பார் வரலாறு சுவை! சேம்பூ வதக்கம் செமையா இருக்கு.

  சேப்பங்கிழங்கு அதே அதே நானும் எண்ணையில் காரம், உப்பு பெருங்காயம் எல்லாம் கலந்து பிரட்டி வைத்துவிட்டு அதன் பின்னர்தான் முறு முறுப்பாக வதக்கல். கடலை மாவு சேர்த்ததும் இல்லை சேர்ப்பதுமில்லை. எந்த வதக்கலுக்கும்.

  சாம்பார் பொடி சேர்த்ததில்லை கறிவேப்பிலை பொடி அல்லது (இட்லி) மிளகாய்ப் பொடி சேர்த்ததுண்டு.

  வேக வைத்த (குழையாமல்) சேம்பை எண்ணையில் பொரித்து எடுத்துவிட்டு அதில் காரப்பொடி, உப்பு, பெருங்காயம் போட்டு ஒரு பிரட்டி எடுத்துச் செய்வதும் உண்டு. (எப்போதேனும்)

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தி/கீதா. கடலை மாவு சேர்த்தால் அதைக் கரைத்துக் கொண்டு அதில் காய்களைப் போட்டுப் புரட்டி விட்டுப் பின்னர் எண்ணெயில் பொரித்தாலே நன்றாக இருக்கும். முன்னெல்லாம் கல்யாணங்களில் மதியச் சாப்பாட்டில் "கத்திரிக்காய் குஞ்சா" என ஒரு வகை சாம்பார் போடுவார்கள். சின்னச் சின்னதான முழுக்கத்திரிக்காயை நான்காகக் கீறிக்கொண்டு அதனுள் மி.வ.கொ.ம.வி.க.ப.உ.ப.தேங்காய் வறுத்துப் பொடித்து ஸ்டஃப் செய்துவிட்டு அதை அப்படியே முழுசாகக் காம்போடு பஜ்ஜிக்குப் போல் கரைத்த கடலைமாவில் முக்கிப் பொரித்து எடுப்பார்கள். சாம்பாரை நீர்க்கப் பண்ணி வைத்துக்கொண்டு பரிமாறும்போது இந்தப் பொரித்த கத்திரிக்காய்களை அதில் சேர்த்துப் பரிமாறுவார்கள். ஒரு பக்கம் சாம்பார் கொதிக்கும். இன்னொரு பக்கம் கிலோ கிலோவாகக் கத்திரிக்காய்கள் பொரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும். அறுபதுகளில் என் கடைசி மாமாவின் கல்யாணம் திருவலஞ்சுழியில் நடந்தப்போ இதான் கல்யாணத்தின் சிறப்பு உணவாக இருந்தது.

   நீக்கு
  2. இந்த உணவின் செய்முறை ருசியாக இருக்குமென தோன்றுகிறது. கத்திரிக்காயில் எப்படிச் செய்தாலும் ருசிதான். நன்றி.

   நீக்கு
 23. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு

 24. சாம்பார் வித விதமான செய்முறைகள், சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்முறை படங்கள் எல்லாம் அருமை.
  சாம்பார், சேப்பங்கிழங்கு ரோஸ்ட் இரண்டும் நன்றாக இருக்கும்.எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். சேப்பங்கிழங்கை கொஞ்சமாக வேகவைத்து எண்ணையில் வறுத்து மிளகாய் பொடி உப்புத்தூள் தூவி செய்வதும் உண்டு.

  பதிலளிநீக்கு
 25. சாம்பார் குறித்த தகவல்கள் மற்றும் சேப்பங்கிழங்கு முறுகல் குறிப்புகள் அனைத்தும் நன்று. ரசித்தேன். நிறைய பதிவுகள் படிக்க முடியாத சூழல். விரைவில் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!