புதன், 10 ஆகஸ்ட், 2022

படித்த காலத்தில் பள்ளிக்கு வெளியே விற்ற பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டது உண்டா?

 

கீதா சாம்பசிவம் :

சிலரிடம் கொடுத்த பொருளைத் திருப்பிக் கேட்டால் ஏன் கோவிக்கிறார்கள்? நம்ம பொருளை நாம் திரும்பக் கேட்கக் கூடாதா?

# "நீ இன்னும் திருப்பி தரவில்லையே " என்று நாம் இடித்துக் காட்டுவதாக நினைக்கிறார்கள் அதனால்தான்.

& ஏன் கொடுத்தீர்கள்? 

கொடுத்தலும் வாங்கலும் வேண்டா - அதன்பின் 

படுத்துதல் வருமெனின். 

அக்கம்பக்கம் சாப்பாட்டில் ஏதேனும் பகிர்வதற்குக் கொடுக்கும் நம்ம பாத்திரத்தை அவங்க கொடுக்காமல் நாலைந்து நாட்கள் வைச்சிருந்தப்புறமா நாம் கேட்டால் அவங்களுக்குக் கோபம் வருவது ஏன்? 

# ஒருவேளை மறதி காரணமாக அவர்கள் பாத்திரத்தை திருப்பித் தராமல் இருந்திருக்கலாம் . அதை நாம் குத்திக் காட்டுவதாக அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் . அதனால்தான் நாம் கேட்கும் போது அவர்களுக்கு எரிச்சல் வருகிறது . இது வெறும் ஊகம் தான் . 

இந்த மாதிரி முசுடுகளுக்கு நீங்கள் ஏன் தொடர்ந்து எதையாவது கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றியும் யோசிங்கள் .

அதுக்கப்புறமா நாம் ஏதேனும் கொடுத்தால் உடனே நம் எதிரேயே அவங்க பாத்திரத்தில் கொட்டிக் கொண்டு நம்மிடம் கொடுத்துடறாங்க. நாம நம்ம பாத்திரத்தை நாலைந்து நாட்கள் கழித்துக் கேட்டது தப்பா?

 # கொஞ்ச நாளைக்கு எதுவும் தராமல் இருந்தால் அதுவும் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் .

பாத்திரம் அறிந்து பிச்சை இடு  என்று பிச்சை இடுவதற்கே சொன்னார்கள் . நாமும் யாருக்கு கொடுக்கிறோம் என்று  அவரது தகுதியைப் பார்த்துத்தான் கொடுக்கலாமா வேண்டாமா என்று தீர்மானிக்க வேண்டும் போல் இருக்கிறது.

பள்ளியில் படிக்கும்போது வெளியே விற்கும் சுக்குமிட்டாய், இலந்தைப்பழங்கள், நெல்லிக்காய், களாக்காய், பனங்கிழங்கு நுங்கு போன்றவை வாங்கிச் சாப்பிட்டிருக்கீங்களா?

$ இப்போ கூட!

                              

# இலந்தைப் பழம், பனங்கிழங்கு வாங்கிச் சாப்பிட்டது உண்டு. நுங்கு பள்ளி வாயிலில் விற்றதில்லை.

& அந்த நாளில் ஆசை இருந்தது. ஆனால் கையில் காசு இருந்ததில்லை. என்னுடைய அப்பா ஆடிப்பூர சமயத்தில் மட்டும் ஏதேனும் விளையாட்டுப்பொருள் வாங்கிக்கொள்ள ஒரே ஒரு ரூபாய் மட்டும் கொடுப்பார். அதில் மிச்சம் பிடித்த சில பைசாக்கள் கொண்டு எப்பொழுதாவது 2 பைசாவுக்கு இலந்தவடை வாங்கித் தின்றிருக்கிறேன். 

மேலே குறிப்பிட்டவை எல்லாமே உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்காதவை. ஆனாலும் பெற்றோர் ஏன் தடுத்தார்கள்?

# தெருவோரத் தின் பண்டங்களை அந்த நாட்களில் பெரியவர்கள் அழுக்காகப் பார்த்தார்கள் என்று தோன்றுகிறது.

இப்போதும் பள்ளி வாசல்களில் இம்மாதிரிக் கடைகள் இருக்கின்றனவா?

# இப்போது பள்ளிகளிலேயே கடை போட்டு சிப்ஸ் பாப்கார்ன் ஜூஸ் விற்கிறார்கள்.

பேனாவுக்குப் பக்கத்தில் உட்காரும் சிநேகிதர்/சிநேகிதியிடமிருந்து இங்க் கடன் வாங்கிப் போட்டிருக்கீங்களா?

# இங்க் இரவல் வாங்கியதோ வழங்கியதோ இல்லை.

* நான்கு சொட்டு வாங்கி கொண்டு, 'இவ்வளவுதான் வாங்கினேன்' என்று பொய் சொல்லி இரண்டு சொட்டு மட்டுமே திருப்பிக் கொடுத்ததால் சண்டையே வந்திருக்கிறது!!

& சொட்டு கணக்கில் பக்கத்துப் பையனுக்கு (அதிக பட்சம் 4 சொட்டுகள்) கடன் / தானம் கொடுத்தது உண்டு. ஆனால் யாரிடமும் நான் இங்க் கடன் வாங்கியது இல்லை. என் பேனாவில் கழுத்துப்  பகுதியில் எப்போதும் எவ்வளவு இங்க் இருக்கிறது என்பதை பார்க்கும் வகையில் பிளாஸ்டிக் ஜன்னல் அமைப்பு இருக்கும். இங்க் தீர்ந்துபோகும் நிலை ஏற்படாமல் இருக்க இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை - டைம் டேபிள் படி புத்தகம் + நோட்டு எடுத்து வைத்துக்கொள்ளும்போதே இங்க் நிரப்பிக்கொண்டுவிடுவேன். 

எந்த வகுப்பு வரை சிலேட்டு? நோட் புத்தகம் எப்போ/எந்த வகுப்பில் ஆரம்பம்?

# 3 வரை சிலேட்டு. 4 படிக்கவில்லை. 5 முதல் பவுண்டன் பேனா.

* மூன்றாம் வகுப்பும் நான்காம் வகுப்பும் சிலேட்டு.  நான்காம் வகுப்பில் நோட்டு பென்சில் ஆரம்பம்.  ஐந்தாம் வகுப்பில் பேனா ஆரம்பம்.

& நான் படித்த காலத்தில், முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை சிலேட்டு & குச்சிதான். பரிட்சை சமயத்தில் மட்டும் நான்காவது & ஐந்தாவது வகுப்பில் பேப்பர் பென்சில். 

நான் படிச்ச சமயம் எல்லாமே மாறிக்கொண்டிருந்த சமயம். 3 ஆம் வகுப்பு வரை அணா/பைசா, படி, சேர், மரக்கால் பின்னும் கஜம், முழம் என்னும் அளவைகள்

அதன் பின்னர் நான்காம் வகுப்பிலிருந்து பைசா. அதிலும் புதிய பைசா என்பதால் நயாபைசா என்றே பல வருடங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். கஜம் என்பதெல்லாம் சென்டிமீட்டர்களாக மாறியது.

இரண்டில் எது எளிமை? எது சுலபம்? பயன்பாட்டில் உங்களுக்குக் கஷ்டம் இருந்ததா?

கணக்குப் போடுவதற்கு எது சுலபமாய் இருந்தது? (எனக்கு என்னமோ இரண்டுமே அப்போதும்/இப்போதும்/எப்போதும் தகராறு தான். :)

$ இப்போதும் 163 cm ஐவிட 5'4" மனதில் சுலபமாக வருகிறது. ஆனால் என்ஜினீயரிங் கணக்குகளில் மீட்டர் kg, seconds தான் சுலபம்..
இப்போது ISO இன்னும்.....

# நிச்சயம் 100 பைசா = ஒரு ரூபாய் மற்றும் மீட்டர்  கிராம் அளவைகள்தான் வசதி. நான் 1954லேயே படிப்பு முடித்துவிட்டதால் தசம அளவைகள் பின்னால்தான் வந்தன. 

இப்போதும் செ.மீ ஐ  அடி, அங்குலமாக மாற்றி பரிமாணங்களைப் புரிந்து கொள்வது உண்டு.

& நான் படித்த காலமும் பிரிட்டிஷ் அளவு முறைகளும் , இந்திய பழங்கால அளவுகளும், பிற்காலத்தில் மெட்ரிக் அளவுமுறைகளும் எல்லாமே இருந்தன. 
பழைய அளவு முறைகள் ஞாபகம் வைத்துக்கொள்வது மிகவும் கடினம். தோலா, பலம், சேர், வீசை கணக்காக இருந்தாலும் சரி, (ஒருவன் ஒரு மணங்கு காபிக் கொட்டையை வீசை 12 அணா வீதம் வாங்கி - வறுத்து பிறகு அதை 3 சேர் கால் ரூபாய் என்று விற்றால் அவனுக்கு லாபமா அல்லது நஷ்டமா - எவ்வளவு லாபம் அல்லது நஷ்டம் ?   - இந்தக் கணக்கை ஐந்தாம் வகுப்புத் தேர்வில் எதிர்கொண்ட நாளிலிருந்து எனக்கு காபி பிடிக்காமல் போய்விட்டது!) ரூபாய் அணா தம்பிடி கணக்கு, அங்குலம்,அடி, கஜம் - எல்லாவற்றிலும் சரியான அளவு முறைகள் ஞாபகம் இல்லை என்றால் ஜாண் ஏறி முழம் சறுக்கி 'அடி' வாங்க வேண்டியதிருக்கும்! 
மெட்ரிக் அளவு முறைகள் முன்பே வந்திருந்தால் பரீட்சை வாழ்க்கை எவ்வளவோ சுலபமாக இருந்திருக்கும்.  

நெல்லைத்தமிழன் : 

1. கௌரவ டாக்டர் பட்டம்னா என்ன?  மத்த டாக்டர் பட்டங்களெல்லாம் அகௌரவமானவையா?   

# கற்ற கல்வியின் அடிப்படையில் அன்றி வேறு வகையில் புகழ் பெற்று சமூக அந்தஸ்தில்  முன்னிலையில் இருப்போருக்கு அளிக்கப்படுவது கௌரவ டாக்டர் பட்டம்.

சில கல்வி நிறுவனங்கள், மாணவர் மனதில் இடம்பிடித்துள்ள பிரபலஸ்தர்களை "கௌரவித்து" விளம்பரம் தேடிக் கொள்கின்றன.

யார் கண்டது? கௌரவ டாக்டர் பட்டங்களும் ."  விற்கப்" படலாம்.

2. சுரேஷ் ரானாலாம் என்ன கிழிச்சார்னு அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கறாங்க?  முமைத்கான், மலாய்கா, டிஸ்கோ சாந்திக்கெல்லாம் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க ஏன் தயங்கறாங்க?

$ உழைக்காமல் என்பதை விட படிக்காது பரீக்ஷை எழுதாமல்,அவரது சேவை பாராட்டி வழங்கப்படும் பட்டம் 

மாநில முதல்வர் பட்டமளிக்க வேண்டும் என்றால் மெத்தப் படித்தவராக இல்லாவிட்டால் embarrassment avoided. 

& மு, ம, டி சா மட்டும்தானா - மும்தாஜ், ஜெயமாலினி, ஜெய்குமாரி, சில்க் என்று ஒரு பட்டாளமே இருக்கே நெல்லை. ஆனால் இவர்கள் எல்லோருக்கும் அகௌரவ டாக்டர் பட்டம்தான் கொடுக்க முடியும்!  (படம் போடலாம் என்று தேடினால் கௌரவமான படம் ஒன்று கூட கிடைக்கவில்லை! )

கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையா இருந்து பலப்படுத்தணும்னு சொல்றாங்களே. ஏன் தேர்தலில் போட்டியிடாம, தான் விரும்பும் கொள்கைக் கட்சிக்கு ஆதரவு மாத்திரம் தெரிவிக்கக்கூடாது? எதற்கு தேர்தலில் போட்டியிடணும்?

# கட்சிகளின் லட்சியம் ஒன்று தான்  ஆட்சியைப் பிடிப்பது அல்லது முக்கிய எதிரி ஆட்சியைப் பிடிக்க விடாமல் செய்வது இவைதானே தவிர கொள்கைப் பிடிப்பு அல்ல.

= = = = =

படம் பார்க்க + கருத்து எழுத .. 

1) விக்கலை நிறுத்த சுலபமான ஆசனம் : 

2) விஷமம் செய்யும் குழந்தைகளை விஷமம் செய்யாமல் தடுக்க சுலபமான வழி : (நமக்கும் ஓய்வு கிடைக்கும் !) 


3)  தீராத தலைவலியைக் கூட தீர்த்து வைக்கும் வைத்தியர் - தொடர்பு கொள்ள அலைபேசி எண் : 90000 00000 

= = = = =

64 கருத்துகள்:

  1. கேள்வி பதில் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
  2. அளவைகள் என்று சொல்லும்போது, என் அப்பா ஃபர்லாங்க், கஜம் போன்றவற்றையே எப்போதும் சொல்லுவார். நான் வீசை, மாகாணிலாம் படித்ததில்லை.

    பதிலளிநீக்கு
  3. அடுத்த வீட்டிற்கு பாத்திரங்களில் கொடுப்பது, அவர்கள் பாத்திரத்தைத் திரும்பத் தரும்போது, வெறும்ன தராமல் ஏதேனும் போட்டுத் தரவேண்டும் என்று சாஸ்திரம் சொல்லுவதாலா?

    பதிலளிநீக்கு
  4. விக்கலை நிறுத்த, அந்த ஆசனம் செய்பவரின் படத்தைப் பார்த்தாலே போதும் என்று தோன்றுகிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கூட நல்ல யோசனைதான்! அதிர்ச்சி விக்கலை நிறுத்த ஒரு வழி!

      நீக்கு
    2. அல்லது காபி தினமும் வேண்டும் என்று சொல்பவர்கள், இந்த ஆசனத்தில் அமர்ந்தால், காஃபி கொடுக்கப்படும் என்று சொன்னால், காபிப் பழக்கம் போய்விடுமோ?

      நீக்கு
  5. பள்ளிக் காலத்தில், வெளியில் விற்கும் தின்பண்டங்களை வாங்கிச் சுவைப்பதில் உள்ள ருசியே தனிதான். இப்பொழுது நினைத்தாலும் மனதெல்லாம் இனிக்கிறது

    பதிலளிநீக்கு
  6. சிறு வயது இனிய நினைவுகள் வலம் வந்தன... அருமை...

    பதிலளிநீக்கு
  7. அழகான காலைப் பொழுது..

    அன்பின் வணக்கங்களுடன்

    வாழ்க நலம்.
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  8. நல்ல கேள்விகளும்
    நல்ல பதில்களும்..

    இனிய பதிவு..

    பதிலளிநீக்கு
  9. ஆடிப் பெருக்கு மங்கலங்களை அருகில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொண்டோம்.. பாத்திரம் கால் லிட்டர் பாலுடன் திரும்பி வந்தது.. எங்களுக்கு வழக்கமாக பால் கொடுக்கும் வீட்டினர் அவர்கள்..

    இன்னும் கலாச்சாரத்தில்
    கிராமத்து மக்கள்!..

    பதிலளிநீக்கு
  10. நடுநிலைப் பள்ளி வரைக்கும் கிராமத்தில் தான்.. எனவே வெளியில் வாங்கித் தின்னும் பழக்கம் இருந்ததில்லை.. ஆனாலும் வடு, மிளகாய்த் தூள் உப்புடன் மாம்பிஞ்சு, நாவல் பழம், சோளக்கதிர் இதெல்லாம் பசங்களின் புண்ணியத்தில் தாராளமாகக் கிடைக்கும்..

    உயர்நிலைப் பள்ளியில் வேறு மாதிரி.. குச்சி ஐஸ் குதூகலம்..

    பதிலளிநீக்கு
  11. நல்ல கேள்வி பதில்கள். சிறுவயது இனிய காலங்கள். எங்கள் வீட்டில் வெளியில் வாங்கி சாப்பிட தடா.

    படங்கள் மிகுந்த சுவாரஸ்யம் சிரிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  12. //கொடுத்தலும் வாங்கலும் வேண்டா - அதன்பின் படுத்துதல் வருமெனின். //
    அருமை 

    பதிலளிநீக்கு
  13. & ஏன் கொடுத்தீர்கள்?

    கொடுத்தலும் வாங்கலும் வேண்டா - அதன்பின்

    படுத்துதல் வருமெனின். //

    சூப்ப!! ரொம்பவே ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. பள்ளியில் படிக்கும்போது வெளியே விற்கும் சுக்குமிட்டாய், இலந்தைப்பழங்கள், நெல்லிக்காய், களாக்காய், பனங்கிழங்கு நுங்கு போன்றவை வாங்கிச் சாப்பிட்டிருக்கீங்களா?//

    ஆஹா சாப்பிட்டதுண்டு ஆனால் திருட்டுத்தனமாக. வீட்டில எல்லாம் காசே தரமாட்டாங்களே! அதனால பஸ்ஸுக்குத் தர காசுல ஊரிலிருந்து ஏறாமல் முக்கால் மைல் நடந்து வந்து பஸ் ஏறி மிச்சம் பிடிக்கும் காசை சேர்த்து வைச்சு!!!

    # தெருவோரத் தின் பண்டங்களை அந்த நாட்களில் பெரியவர்கள் அழுக்காகப் பார்த்தார்கள் என்று தோன்றுகிறது.//

    ஆம் அதேதான். அப்பல்லாம் வெளில வாங்கிச் சாப்பிடக் கூடாதுன்னு வீட்டில் சொல்லக் காரணம், பழங்கள் ஈ மொய்க்கும், திறந்து வைச்சிருப்பாங்க, நாம் கழுவிச் சாப்பிட முடியாது, சுத்தம் சுகாதாரம் பார்த்து ..

    இப்ப நாமே வெளில சாப்பிட யோசிக்கிறோமே....

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அருமையான கேள்வி பதில்கள்.
    பள்ளிக் காலத்தை நினைக்க வைத்தன.
    வீட்டில் சாப்பிட வேண்டாம் என்று தான் சொல்வார்கள்.
    ஆனாலும் தோழிகளுடன் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன்.
    காய்ச்சல் வந்தால் பள்ளி வாசலில் விற்பதை வாங்கி சாப்பிட்டாயா என்ற கேள்விதான் முதலில் வரும்.

    பதிலளிநீக்கு
  16. இப்போதும் பள்ளி வாசல்களில் இம்மாதிரிக் கடைகள் இருக்கின்றனவா?//

    ஓ அதெல்லாம் சொட்டுக் கணக்கில் கொடுத்தல் வாங்கல் எல்லாம் கனஜோராக நடந்ததுண்டு. அப்படி வாங்கினால், அதற்கு சில டீல்களும் உண்டு. ஹோம்வொர்க் விடைகள் சொல்லிக் கொடுக்க வேண்டும். வீட்டிலும்தான் எங்கள் குட்டிஸ்களுக்குள். இதில் பாட்டியிடம் போட்டுக் கொடுத்தல் அதனால் டீல்கள் முறிதல் காய் விடுதல், மூஞ்சியைத் திருப்பிக் கொள்ளல் எல்லாம்..!!!!!!..

    கீதா

    பதிலளிநீக்கு
  17. கௌரவ டாக்டர் பட்டங்களும் ." விற்கப்" படலாம்.//

    அதுதானே நடக்கிறது!!!!!!!

    படித்துப் பெறும் டாக்டர் - முனைவர் பட்டமே காசாகிப் போயிருக்கும் நிலையில்.....

    மருத்துவப் படிப்பு டாக்டரே காசாகிப் போயிருக்கும் நிலையில்

    கௌரவப்பட்டம் காசிருந்தால் பெற முடியாதா என்ன?

    கீதா

    பதிலளிநீக்கு
  18. இப்போதும் சில பள்ளி வாசலில் விற்கிறார்கள் பள்ளி வாசலில் விற்க கூடாது என்று தடை என்றாலும் சிலர் சுத்தமாக பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள். அப்படி அரசு பள்ளி வாசலில் விற்கும் ஒரு அம்மாவிடம் பேசி அவர்களை படம் எடுத்து பதிவில் போட்டு இருக்கிறேன்.
    அவர்கள் பேரனும் பேத்தியும் அந்த பள்ளியில் படிப்பதாக சொன்னார்கள். மாலை போகும் போது அழைத்து போய் விடுவேன் என்றார்கள்.

    பதிலளிநீக்கு
  19. 1) விக்கலை நிறுத்த சுலபமான ஆசனம் : //

    இதுக்கு நான் விக்கினாலும் பரவால்ல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. விஷமம் செய்யும் குழந்தைகளை விஷமம் செய்யாமல் தடுக்க சுலபமான வழி : (நமக்கும் ஓய்வு கிடைக்கும் !) //

    ஹாஹாஹா வேலைக்காகாத டிப்ஸ்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. 3 வது படம் செம சிரித்துவிட்டேன்....ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  22. விக்கலை நிறுத்த சுலபமான ஆசனம் -
    அடுத்த வாரம் இந்த ஆசனத்தால் வரும் சுளுக்கு போக என்ன ஆசனம் செய்யண்ம் என்று படம் போடுங்க!

    வைஷ்ணவி

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.

    பள்ளியில் வெளியில் விற்கும் எதையும் வாங்கி சாப்பிட வீட்டில் தடா என கூறி விடுவேன். கையில் சுதந்திரமாக பைசாவும் நடமாட்டம் இருக்காது. தீபாவளி, பொங்கலுக்கு, நெல்லையப்பர் தேர் திருவிழாவுக்கு என அப்பா கொடுக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் (அது அப்போது விலை மதிப்பானது.) சேர்த்து வைத்து வீட்டில் பணப்புழக்கம் கொஞ்சம் தட்டுப்பாடாக இருக்கும் போது அப்பா, அம்மாவிடமே தந்து விடுவேன். (அவ்வளவு நல்ல குழந்தையாக்கும் நான். ஹா ஹா)

    /இங்க் நான்கு சொட்டு என கடன் தந்து விட்டு/ என்ற சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் பதில் சிரிக்க வைத்தது. என்னிடம் அவ்வளவு சொட்டு கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. தோழிகள் பாதி அளவுக்கு அவர்கள் பேனாவில் நிரப்பி விட்டு நாளை தருகிறேன் என்பார்கள்.மறுநாள் நினைவாக கேட்க நானும் தயக்கமாகி விட்டு விடுவேன். எப்போதாவது அவர்கள் நினைவாக தந்தால் உண்டு. வீட்டில் அதற்கு மண்டகப்படி யும் நடக்கும்.

    மூன்று படங்களும் அருமை. ஆசனம் நிஜமாகவே எதிராளிக்கு விக்கலை வரவழைத்து விடும்.

    குழந்தையை நம்பி தூங்கினால் விஷமம் அதிகமாக செய்யும் எண்ணம் கீழிருப்பவர்களைப்போல குழந்தைக்கும் வந்து விடாதோ?

    பதிவு அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  24. சிறு வயதில் பள்ளி செல்லும் நாட்களில் பள்ளி முன்பு சீனிப் பாட்டி என்பவரிடம் சின்ன துண்டு அல்வா, 5 பைசாவுக்கு வாங்கித் தின்றதுண்டு. பிறகு ஜவ்வு மிட்டாய், ஐஸ் பால் ஐஸ் எல்லாம்.

    என் சிறு வயது ராசிங்கபுரத்து நினைவுகளை எழுப்பியது, சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் கேள்வி. இன்னும் சொல்வதற்கு இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  25. விக்கலை நிறுத்தும் யோகாசனம் பயமுறுத்துகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  26. இதைப் படிச்சேன். ஆனால் கருத்துச் சொல்ல முடியவில்லை. அந்தப் பழைய மடிக்கணினி மறுபடியும் அதே தகராறு. அதனால் நேத்து ஒரு மணி நேரம் வீணானது தான் மிச்சம்.

    பதிலளிநீக்கு
  27. விக்கலை நிறுத்தும் ஆசனத்தைப் பார்த்தால் பயம்மா இருக்கு!

    பதிலளிநீக்கு
  28. இந்த மணங்கு, சேர் வீசைக் கணக்கு மட்டும் அல்ல கணக்கே எனக்குத் தகராறு தான். என் மாமியார் இந்த சேர் கணக்கில் மனக்கணக்காவே போடுவாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் கணித மேதை சகுந்தலா தேவியோ!

      நீக்கு
    2. ஆகி இருப்பாங்க படிக்க வைச்சிருந்தால். கடைசி வரை எல்லாவற்றையும் நன்றாக நினைவில் வைத்திருந்தார். 92 வயசுக்கு தில்லியில் மார்கழி மாதக் கோலம் காலம்பர ஆறரை மணிக்குப் போடுவார் எனக்குக் குளிர் நடுக்கும். :(

      நீக்கு
  29. நாம் வருஷக்கணக்காக நட்பில் இருப்பவங்களோடு இன்னொரு சிநேகிதி/சிநேகிதர் நட்பு வைச்சுக்கப் பிரியப்படுகிறார் என்பதால் நம் இனிய சிநேகிதத்தோடு அவங்களை அறிமுகம் செய்து வைத்தால் நம் பழைய சிநேகிதியை மெல்ல மெல்ல நம்முடன் தொடர்பு இல்லாமல் சிலர் செய்துடறாங்களே! அது எப்படி? எனக்கு இன்னிவரைக்கும் இது ஆச்சரியமா இருக்கும். வருஷக்கணக்காப் பேசி நாம் சிநேகிதம் செய்து கொண்டிருப்போம். புதுசாக வரும் நபர் நம்முடைய வருஷக்கணக்கான நட்பை உடைப்பது எப்படி?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!