செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

சிறுகதை : செல்லமே செம்பகமே - கீதா ரெங்கன்

 

(எபி ஸ்ரீராமிற்கு மிக்க நன்றி. அவர் வீட்டு வாசலில் கடைசி தருணங்களைக் கழித்த செம்பகம் பற்றி, அவர் காசிக்குச் சென்று வந்த பின் ஓரிரு மாதங்களில் நடந்த நிகழ்வு. அவர் பதிவும் போட்டிருந்தார். அப்போது உருவான கதையை இப்போது முடித்து அனுப்ப, அவர் எனக்கு அப்போது அனுப்பியிருந்த படங்களைத் தேடினால் அவை கேடான ஹார்ட் டிஸ்கில் மீட்கப்படாமல் இருக்க...எங்கள் ப்ளாகிலும் பதிவைத் தேடினேன் டக்கென்று கிடைக்கவில்லை. ஸ்ரீராமிடம் சொல்ல அவரே படங்களை அனுப்பிட ...ஸ்.....பாஆஆஅ ஒரு வழியா கதையை முடித்து அனுப்பினேன். மீதி விவரங்கள் கருத்தில்!)


செல்லமே.. செம்பகமே 

 

வீட்டின் வாசல் கதவைத் திறந்த எனக்கு வியப்புடன் கலந்த அதிர்ச்சி. எங்கள் வளாகத்தில் சில நாட்களாகவே சுற்றிக் கொண்டிருக்கும் அழகி! இவள் எதற்காக என் வீட்டு வாசலுக்கு வந்திருக்கிறாள்? என்னைத் தேடித்தான் வந்திருக்கிறாளோ? எதையோ எதிர்பார்த்து வந்திருப்பது போலத் தோன்றியது. பல கேள்விகள் மண்டையில் குடைந்தன. இப்போது என்ன செய்வது? மனம் பரபரத்தது.

அழகி என்றதும் உங்களுக்கு என்னென்னவோ கற்பனைகள் ரெக்கை கட்டி விரிந்து பறந்திருக்கலாம்! அப்படி என்றால் அவளேதான்! ரெக்கை விரித்து பறக்கும் அழகி! இவளைப் பற்றிக் கொஞ்சம் சொல்லி விடுகிறேன் 

என் அலுவலகம் இருந்த வளாகத்திற்குள்ளேயேதான் குடியிருப்பும். இந்த அழகு தேவதை எங்கள் வளாகத்திலேயே சுற்றி வந்து கொண்டிருந்த போது கவனித்தவை. கறுப்பும், செம்பு வண்ணமுமாகக் கலந்து காக்கையைப் போலவும், குயிலைப் போலவும் இருந்தாள். கலப்பினமோ? அதனால் என்ன? அழகி! அவ்வளவுதான். நான் அவளையே கவனித்த என் ஆர்வம் அலுவலகத்தில் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

அவள் காக்கை போல இருந்தாலும், குடும்பம் குக்குலிடேகுயில் குடும்பமாம். க்ரேட்டர் கோக்கல்-க்ரோ ஃபெசன்ட் என்று பெயர்களாம், என்னென்னவோ சொன்னார் என் நண்பர், பறவைகள் பற்றித் தெரிந்தவர். என்னவாக என்ன இனமாக இருந்தால் என்ன? காக்கை குருவி எங்கள் சாதி என்றுதானே சொன்னான் எட்டையபுரத்து மீசைக் கவிஞன்!  

அவள் கண்களும் செம்பு வண்ணத்தில் மின்னியது இன்னும் கவர்ச்சி! அதை விவரித்த போது, “காப்டன் கண்ணு போல இருக்குஎன்று சொல்லிச் சிரித்தார் அருகில் அலுவலகக் கணக்கு எழுதிக் கொண்டிருந்த பெண்.

கேப்டனின் கண்கள் போல இருக்குன்னு சொல்லி வர்ணித்தால் எனக்குக் கெட்ட கோபம் வரும். கேப்டன் ஒப்பீடு அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்!” என்று நானும் சிரித்தேன். அறையே சிரித்தது.

தமிழில் செம்பகமாம். என்னுள் ஒரு சிலிர்ப்பு. என் அம்மாவின் பெயர் செம்பகம். செம்போத்து என்றும் சொன்னார்கள். எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குச் செம்பகம்.

நான் செம்பகம்னு பெயர் வைச்சுட்டேன். நல்லாருக்கா பேரு?”

செண்பகமேசெண்பகமேஎன்று பாடி கமுக்கமாகச் சிரித்தார், மற்றொருவர்.

அவர்களுக்கு டைம் பாஸ்!

ஏன் பொண்ணு பெயர்? ஆம்பிளை பெயர் வைக்கக் கூடாதா? ஆண் பறவையாகவும் இருக்கலாமே. தொல்காப்பியர் காலத்துக்கு முன்னமேயே ஆண் பறவைகளை போத்துன்னுதான் சொல்லுவாங்களாம்

அலுவலகத்து தமிழ்ப் பற்றுடைய நண்பரின் தகவல்.

எனக்கும் அப்போதுதான் சந்தேகம் வந்தது. ஒரு வேளை ஆணாக இருக்குமோ? பரவாயில்லை. எனக்குச் செம்பகமாகவே இருக்கட்டும்.

அது என்னவோ தெரியலை. தெரியாத ஜீவராசிய, ஏன் நதியைக் கூடப் பெண் பெயர் வைச்சுதானே குறிப்பிடறோம். ஒரு கவர்ச்சி இருக்குல்லியா”  சமாளித்து வழிந்தேன்.

பெண், சக்தி வாய்ந்தவள்! பிரபஞ்சமே சக்திதான். இவளும் ஆகாயத்தில்தானே பறக்கிறாள்! அந்த சக்தியின் மூச்சை சுவாசித்து’……..  என் மனம் திசை மாறிய பறவை போல பறந்தது. ஆனால் செம்பகம் திசை மாறி வரவில்லை என்று உள் மனம் சொல்லியது.

அதிக உயரம் பறக்காது. அதிக தூரமும் பறக்காது. காலைல தனிச்சோ, ஜோடியாவோ சிறகை விரிச்சு சூரிய குளியல் போடும் பாருங்க……”. பறவை ஆர்வல நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார்.

அலுவலக வேலையை இயந்திரகதியில் செய்ய, மனமோ செம்பகத்தின் நினைவில். அவள் என்ன செய்கிறாள் என்று ஜன்னல் வழி எட்டிப் பார்த்தேன். பறக்கவில்லை. தரையில்தான் தத்தி தத்தி தளர்ந்து நடை போட்டுக் கொண்டிருந்தாள்! அம்மாவும் இப்படித்தான் மூட்டு வலியால் காலை ஒரு பக்கமாகத் தூக்கி அடி வைத்துத்தானே நடந்தாள். 

ஏன் இங்கியே சுத்திக்கிட்டிருக்கோ?”  

உள் மனதின் ஓட்டத்திற்கு முரணான கேள்வி. ‘உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்குஎன்று என் மனம் விரும்பும் பதிலை சொல்லமாட்டார்களா என்ற ஓர் எதிர்பார்ப்பு.

நீங்கதானே மாடில பறவைக்குத் தண்ணி வைப்பீங்க, பூனை, நாய்ன்னு காப்பாத்துவீங்க, இதுவும் நீங்க வைக்கிற தண்ணிய குடிச்சிருக்கும். அதான் இங்கயே சுத்திக்கிட்டிருக்குஎன்று சொல்லிச் சிரித்தார் நண்பர்.

இப்படித்தான் அதுங்க தரைல நடந்து பூச்சி, புழு எல்லாம் திங்கும்

ஆனா நடை சரியா இல்லையே. அடிபட்டிருக்குமோ? அல்லது உடம்பு முடியலையோ? பாவம்

நண்பரும் ஜன்னல் வழி எட்டிப் பார்த்தார். “ஆமாம், ஏதோ அடிபட்டிருக்குமா இருக்கும் …”

பெரும்பான்மையான ஆர்வலர்கள் பேசுவதோடு சரி.  பிடிக்கும் என்பதற்கும் ஈடுபாட்டுடனான அர்ப்பணிப்பிற்கும்  உள்ள வித்தியாசம்….

பெரும்பாலும் நோய் இல்லைனா ஏதாவது காயத்தால பாதிக்கப்படறப்ப, பறவைங்க பாதுகாப்பா ஒதுங்கி மறைவா இருக்கற இடங்கள்ல போய் தன்னை மறைச்சுக்கும். அதோட கூட்டத்துக்குத் தெரியக் கூடாதுன்னும் அதோட எதிரிங்க, வேட்டையாடுறவங்க கண்ணுல படக் கூடாதுன்னும். நம்மகிட்ட ஒட்டிக்கிட்டு வளர் நாய் கூட அந்திம காலத்துல தன்னை தனிமைப்படுத்திக்குமே.”  

இந்தத் தகவல் எதற்கு? அப்படி என்றால் இவளுக்கு இது அந்திமக் காலமோ. அதான் அவள் சத்தம் கூட ஏதோ தீனமாக இருக்கே, அல்லது எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதோபறக்க முடியாத அவள் சிறகுகள் என் மனதில் சிறகடித்தது.

நண்பர் சொல்லுவது போல் என்னைத் தேடித்தான் எங்கள் வளாகத்துள் வந்திருப்பாளோ?’ என் எண்ணம் வலுக்கத் தொடங்கியது. ‘என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாள்?’ அனாவசியமான கற்பனை! ஆனால் மனம் அதைத்தான் விரும்பியது.

இந்தப் பறவைய வைச்சு நிறைய மூட நம்பிக்கைகள், இதோட ஆழ்ந்த சத்தத்தை, ஆவி, சகுனத்தோட தொடர்பு படுத்துவாங்க

நண்பர் என் மனதைப் படித்துவிட்டார் என்று தோன்றியது.  

சரிதானே? எனக்கு அவளைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அனிச்சையாக, அவளுக்கும் எனக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போலவேதானே என் மனம் எண்ணுகிறது!’

இப்படிச் சென்ற அன்றைய தினத்தின் மறுநாள் காலைதான் ஆரம்ப வரிகள். என் வீட்டு வாசலில்

நான் கவனித்தது அவளுக்குத் தெரிந்திருக்கும் போலும். அதனால்தான் என்னிடம் மருத்துவம் நாடி வீட்டு வாசலிற்கே வந்திருக்கிறாளோ? நான் ஏதேனும் உதவுவேன் என்று?

இவளைச் சார்ந்த நம்பிக்கைகள் என்று நண்பர் சொன்னவை மனதில் ஓடியது. என்னுடன் ஏதேனும் பந்தம் இருக்குமோ? மனம் முடிச்சுப் போட்டுப் பார்த்தது. அதுவும் இப்படித் திடீரென்று என் வீட்டு வாயிலின் முன் நலிந்து வந்து கிடப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் அந்த எண்ணம் இன்னும் வலுப்பெற்றது.

நான் என்னவோ ஒரு ஆபத்பாந்தவன் போன்ற எண்ணம் எனக்குள் ஓடி மனம் பரபரத்தது. வீட்டு வாசல்படி வரை வந்துவிட்டவளை விட்டுவிட முடியுமா? ஆனால்,  அவளுக்கான மருத்துவமனை அருகில் இல்லை.

அரிசி, சாதம், தண்ணீரும் வைத்தோம். அதனை அவள் அண்டவே இல்லை. என்னைப் பார்த்துவிட்டு கண்ணை மூடிக் கொண்டாள். அருகில் சென்றால் எங்களை நெருங்கவிடாமல், அவளால் பறக்கவும் முடியாமல் தாவித் தாவி விலகினாள். மூலையில் சென்று ஒதுங்கிக் கொண்டாள்.

எத்தனை அழகாக ஃப்ரில் வைத்த பாவாடை போன்ற, வால் பகுதிச் சிறகை விரித்து வைத்திருந்தாள்! புடவை விளம்பரத்தில், விளம்பர நங்கை சேலையின் தலைப்பை விரித்துக் காட்டுவது போல! அந்த அழகின் அவஸ்தை…. வேதனையாக இருந்தது.

ஏனோ என் அம்மாவின் இறுதி நாட்கள் மனதில் நிழலாடியது. சாப்பாடு கொடுத்தால் சலிப்புடன் தலையைத் திருப்பிக் கொள்வாள்.

புடவை கட்டிக் கொள்ள முடியவில்லை என்று அவளுக்கு மிகவும் பிடித்த அழகான ஃப்ரில் வைத்த நைட்டிகளைத்தான் உடுத்திக் கொள்வாள். இதோ இந்த செம்பகத்தின் ஃப்ரில் போல!

வன இலாகா துறையைத் தொடர்பு கொண்டேன். அவசரசிகிச்சை தேவை என்று தெரிந்ததால், கால்நடை மருத்துவரையும் தொடர்புகொள்ள முயன்றேன். வாயில்லா ஜீவன்கள் ஆர்வலர்களையும் தொடர்பு கொண்டேன்.

மனிதனா? அவசரசிகிச்சை என்றதும் ஆம்புலன்ஸ் வருவதற்கு?!  மனிதனுக்கே வருவதில்லை...அப்புறம் இல்லையா வாயில்லா ஜீவனுக்கு! எந்தவிதப் பயனும் இல்லாமல், என் மனம் தவிக்க, சில மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிர் நீத்தாள். இந்த சில மணி நேரத் தொடர்பே ஏதோ அவளுடன் ஒரு பிணைப்பு என்பது போல் வேதனை கவ்வியது.

தற்செயலாக நாட்குறிப்பு கண்ணில் பட்டது.  தேதி 12. சென்ற மாதம் இதே தேதியில்தானே எனது காசிப் பயணத்தின் கடைசி நாள்! என் பெற்றோருக்கும், மூதாதையருக்கும் வழிபாடுகள் செய்த தினம்.

நண்பர் சொன்னது போல ஆவி, சகுனம்அப்படியும் இருக்குமோ? அப்படி என்றால், என் பெற்றோரின்? அம்மாவின் செய்தி ஏதேனும் சொல்ல வந்திருப்பாளோ? நான் அம்மாவின் செல்லப் பிள்ளை! என்ன சொல்ல நினைத்திருப்பாள்?  

அந்திமக் காலத்தில் இயற்கையாகவே தன்னைத் தனிமைப்படுத்திக்கும் என்று செம்பகம் பற்றி நண்பர் சொன்னவையும் நினைவுக்கு வந்ததுதான். நாம்தான் பல விஷயங்களையும் நாமாகவே ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்று முடிச்சுப் போட்டுப் பார்க்கிறோமோ

வளாகத்தில் பாதுகாப்பான இடம் தேடித்தான், பறக்க முடியாத அந்த நிலையில் தத்தி தத்தி, சுற்றித் தேடி அலைந்திருக்கிறாள் போலும். நான் இருந்த வீட்டின் வெளிப்புறம் உள்ளடங்கிய பாதுகாப்பான இடம். அதை எப்படியோ உணர்ந்து என் வீட்டு வாயிலில் வந்திருக்கிறாள் என்று என் அறிவு சுட்டிக் காட்டினாலும், மனமோ….

இத்தனை வீடுகள் இருக்க என் வீட்டின் முன் ஏன்? அடைக்கலம் தேடி வந்து என் கண் முன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு இறுதி மூச்சின் கடைசி தருணங்களைக் கழித்ததேனோ?

சிறு வயது முதலே நம்மைச் சுற்றிப் பேசப்படும் நம்பிக்கைகள் மூளையின் ஏதோ ஒரு இடுக்கில் பதுக்கப்படும் போலும். இப்படியான தற்செயல் நிகழ்வுகளின் போது  அந்த நம்பிக்கைகளை மனம் தட்டி எடுத்து  ஏதோ ஒரு சகுனம், பந்தம் பிணைப்பு என்றே முடிச்சிடுகிறது. தற்செயலாக நடப்பதற்கும், நம்பிக்கைகளுக்கும் இடையில் மாறி மாறிப்  பறக்கிறது மனம்! இப்படித்தான் மனம் ஒரு விதப் பிரமையில் சிக்கிக் கொள்கிறது போலும்!'

இப்படி நானாக ஏதேதோ நினைத்துக் கொண்டதில் ஏதோ ஒரு வகை திருப்தி. மகிழ்ச்சி.  தற்செயலான நிகழ்வு என்று அறிவு சொன்னாலும் மனம் கேள்விகள் எழுப்பி, எப்படி எல்லாமோ நம்பிக்கைகளுடன் பொருத்திப் பார்க்க விரும்புகிறது.   மகிழ்ச்சியடைகிறது.

எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.

என் கூடவே இருந்த என் அம்மாவின் கடைசி சில மணி நேரங்கள். என் பணியின் காரணம் அருகில் இருக்க முடியாமல் ஆனதே. அந்த நேரம் பார்த்தா என் அம்மாவை மரணம் தழுவ வேண்டும்? என்னைத் தேடியிருந்திருக்கிறாள். என்ன சொல்ல நினைத்திருந்திருப்பாள்? கண்ணை மூடும் முன் என்னைப் பார்க்க நினைத்திருப்பாளோ

மனம் விக்கித்து தொண்டை அடைத்தது.

என் வீட்டு வாசலில் செம்பகத்தின் இறுதி மூச்சு. ஏதோ செய்தி சொல்லுவது போல், என்னைப் பார்ப்பதற்காகவே வந்ததாக மனம் எண்ணியது.

நமக்கும் அதுக்கும் ஏதோ ஒரு முந்தைய சொந்த பந்தம் இருக்கும் போல அதான் நம்ம வீட்டு வாசல்ல வந்து உசுர விட்டிருக்கு.”

சட்டென்று எனகுள் இனம் புரியாத ஓர் உணர்வு. ஓர் அதிர்வு. மனைவியின் மனதிலும் அதே எண்ணம்

செம்பகத்தை வளாகத்தில் ஓர் ஓரத்தில் குழி தோண்டிப் புதைத்தேன். அவள் ஆன்மாவிற்காகப் பிரார்த்தித்தேன். ‘அந்த ஆன்மா என்னைப் பார்த்ததையும், நான் அவளைக் காப்பாற்றத் தவித்ததையும் என் பெற்றோரிடம், அம்மாவிடம் சொல்லுமோ’! மனம் மேலே மேலே விண்ணில் சிறகடித்தது.

36 கருத்துகள்:

  1. கதையெழுதப் பிடிக்கும் என்பதற்கும் அதை எழுதுவதில் ஈடுபாடுடனான அக்கறைக் காட்டுவதற்குமான வித்தியாசத்தைக் காட்டும் எழுத்து. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜீவி அண்ணா உங்கள் வாழ்த்திற்கும், ஊக்கமான கருத்திற்கும்

      கீதா

      நீக்கு
  2. அம்மாவின் நினைவில் கதையின் நகர்தல் நீண்டதை ஒன்றி வாசிக்க முடிந்தது. அம்மாவின் நிழலாகவாகவேனும்
    செம்பகம் அந்த வீட்டில் கூடச் சுற்றி சிறகடிக்க உயிர் தரித்திருக்கலாமோ என்றும் தோன்றியது. ஆக வலிந்து திணித்த கதை முடிவோ?....
    இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று கதாசிரியர் தீர்மானித்த பிறகு நாம் என்ன செய்ய
    முடியும்?.. சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜீவி அண்ணா கதையைப் பற்றிய உங்கள் கருத்திற்கு.

      ஆனால் வலிந்து திணித்ததல்ல. உண்மைச் சம்பவத்தின் அடிப்படியில் எழுதியது என்பதால் மாற்றவில்லை. அப்படியே தான் கொடுத்திருக்கிறேன். சின்ன சம்பவம். அதனால் விளைந்த எண்ணங்கள் அவ்வளவே. அதை மாற்றியிருந்தால் இடையில் கதை வேறு போக்கில் பயணித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்குமே.

      மிக்க நன்றி ஜீவி அண்ணா.

      கீதா

      நீக்கு
    2. 2019 ல் ஸ்ரீராம் காசிப் பயணம் முடித்து வந்த இரு மாதங்களுக்குள் என்று நினைவு....எனக்கு வாட்சப்பில் செம்போத்தின் படங்களை அனுப்பி இதற்கு உதவ கால்நடை மருத்துவர் யாரேனும் உங்களுக்குத் தெரிந்தவர் இருந்தால் சொல்லுங்கள் என்றார். என் மகனும் கால்நடை மருத்துவர் என்பதால் ஆனால் அவன் இங்கு இல்லை. எனவே அப்போது வண்டலூர் ஜூவில் பணிபுரிந்து கொண்டிருந்த அவன் நண்பரைத் தொடர்பு கொண்டேன். அவர் அங்கு எடுத்து வரச் சொன்னார். அது நடக்காத காரியம். வனலாகா துறையையும் தொடர்பு கொண்டு எந்தப் பயனும் இல்லை, சில மணி நேரங்களில் ஸ்ரீராம் அது கோலத்தின் மீது இறந்துகிடந்த படத்தை அனுப்பினார் அவர் மனம் ரொம்பவே தவித்தது அன்று.
      அதன் பின் அவர் பதிவாகவும் எழுதினார். அதுவும் நினைவு இருந்தது, அந்தப் பதிவில் நான் மற்றும் கீதாக்கா கொடுத்த கருத்தின் அடிப்படையில் பிறந்த கதைதான் இது,

      கீதா

      நீக்கு
    3. இதனுடனான மேலும் சில கருத்துகளை என் எண்ணங்களை என் பதிவில் சில்லுச் சில்லாயில் சொல்கிறேன். இங்கு கருத்து மிகவும் பெரிதாகிவிடும் என்பதால்.

      கீதா

      நீக்கு
  3. வியாழன் கதம்பத்தில் வரவேண்டியது செவ்வாய் சிறுகதை ஆகி விட்டது. ஒரு சிறு சம்பவத்தை விரிவாக்கி படிக்கத் தக்க ரீதியில் சிறுகதையாக எழுதியதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். அதற்கும் மேல் ஜீவி சார் என்ற ஜாம்பவான் முதல் கருத்தை வெளியிட்டிருப்பது ஆச்சர்யம். 

    நிஜக்கதை ஆனதால் புகைப்படங்கள் பொருந்துகின்றன. ஆசிரியரின் கண்ணழகி கதை கொஞ்சம் ஊடே எட்டிப் பார்க்கிறது. விவரணம் கொஞ்சம் கூடுதல் என்றாலும் கதையை ஒட்டிய கற்பனை என்பதால் திகட்டவில்லை. ஆனாலும் சிறந்த சிறுகதை என்ற ஒரு பரிசு கொடுக்க முடியவில்லை. கதை எழுதும் முயற்சியில் வெற்றி பெற்ற ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெசி அண்ணா, வியாழன் கதம்பத்திலா அல்லது ஞாயிறு படங்களின் தொகுப்பில் ஸ்ரீராம் சொல்லியிருந்ததா என்று தெரியவில்லை. ஏற்கனவே வந்த பதிவுதான். ஸ்ரீராம் பதிவில் சொல்லியிருந்ததன் அடிப்படையில் எழுதிய கதைதான்.

      கதையைப் பற்றிய உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா.

      ஆனாலும் சிறந்த சிறுகதை என்ற ஒரு பரிசு கொடுக்க முடியவில்லை.//

      ஹாஹாஹா அண்ணா நான் பெரிய எழுத்தாளினி அல்லவே! ஏதோ எழுதுகிறேன் அவ்வளவே.

      கதை எழுதும் முயற்சி இது முதலல்ல. இதற்கு முன்னும் இங்கும் நிறைய வந்திருக்கின்றன. ஆனால் நான் எழுத்தாளினி எல்லாம் அல்ல.!!!!!!!

      கதை எழுதும் முயற்சியில் வெற்றி பெற்ற ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். //

      மிக்க நன்றி அண்ணா.

      கீதா

      நீக்கு
  4. கொஞ்சம் பாலகுமாரனின் எழுத்து சாயல் தென்படுகிறது. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலகுமாரன் அவர்களின் கதைகளை நான் வாசித்தது என்றால் ஒன்றே ஒன்று அதுவும் முழுமையாக அல்ல. எப்போதோ அவரது நாவலை அதுவும் முழுமையாக இல்லை, தாயுமானவனா? அல்லது இரும்புக் குதிரைகளா என்று டக்கென்று நினைவில்லை. அதில் அந்தக் கதாபாத்திரம் தனக்குள் இருக்கும் படைப்பாளியை வெளிக் கொணரமுடியாமல் அவன் சூழலே தடையாக இருப்பதின் உணர்வுகள் அது மட்டும் நினைவிருக்கிறது. ஏனென்றால் எனக்கும், எனக்குமட்டுமல்ல இங்கு பலருக்கும் அதே நிலைதான். என்பதாலோ என்னவோ...

      மற்றபடி அதிகம் வாசித்ததில்லை, ஜெசி அண்ணா.

      ஆனால் உங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது

      மிக்க நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
  5. காலையிலேயே இங்கு வந்து விட்டேன்..

    கோலத்தில்
    கோலமாய்
    கோகிலத்தின்
    கோலம் கண்டு...

    ஒன்றும் புரிய வில்லை.. ஒன்றும் சொல்வதற்கில்லை...

    அந்தப் பறவையின் ஆன்மா சாந்தியடையட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ பறவை கோலத்தின் மீது கிடக்கும் கோலத்தைக் கண்டு எதுவும் புரியாத நிலையாக இருந்ததோ? இதுவே, கதை பற்றிய உங்கள் எண்ணத்தைக் கொஞ்சம் சொல்லிவிடுகிறது!

      மிக்க நன்றி துரை அண்ணா!

      கீதா

      நீக்கு
  6. எனது வீட்டுக்கு அடிக்கடி ஒரு மாடு வந்து நிற்கும். முன்பு அம்மா கழனி தண்ணீர் வைப்பார்கள்.

    அப்போது முடிந்தவுடன் போ... என்று விரட்டினாலும் என்னிடம் உரசிக் கொண்டே நிற்கும் எனக்கும் இதேபோல் நமது முன்னோர்களோ என்ற எண்ணம் வரும்.

    அப்பறவையின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி!! சூப்பர். இதைத்தான் இந்த எண்ணங்களின் பிரதிபலிப்பைத்தான் கதையில் சொல்ல விழைந்தேன். சாராம்சம்!!!

      மிக்க நன்றி கில்லர்ஜி!!

      கீதா

      நீக்கு
  7. விட்ட குறை தொட்ட குறை என்பது இதுதானோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மில் பெரும்பாலோரின் இப்படியான எண்ணங்களைத் தான் இக்கதை வழியாகச் சொல்ல நினைத்தேன், செல்லப்பா சார் கதையின் போக்கைப் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி சார்.

      கீதா

      நீக்கு
  8. சமீபத்தில் இத்தனை கனமான எழுத்துகளை வாசித்ததில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சியாக இருக்கிறது துரை அண்ணா. மிக்க நன்றி உங்களின் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம் வீட்டுக்கு வந்த பறவையின் கதை .
    கதை மனதை நெகிழ வைத்து விட்டது கீதா.
    ஸ்ரீராம் பறவையை பற்றி போட்ட பதிவின் சுட்டி கொடுத்து இருக்கலாம். அதில் நான் என்ன சொன்னேன் என்று படிக்க ஆவல்.

    பறவையை பற்றிய செய்திகள், அலுவலக நண்பர்கள் உரையாடல்,என்று கதையை அழகாய் நகர்த்தி சென்று உள்ளீர்கள் கீதா.

    குயில் குடும்ப வகை என்றாலும் கூடு கட்டும் பறவை இது. குயில் கூடு கட்டாது.

    //எத்தனை அழகாக ஃப்ரில் வைத்த பாவாடை போன்ற, வால் பகுதிச் சிறகை விரித்து வைத்திருந்தாள்! புடவை விளம்பரத்தில், விளம்பர நங்கை சேலையின் தலைப்பை விரித்துக் காட்டுவது போல! அந்த அழகின் அவஸ்தை…. வேதனையாக இருந்தது.//


    அதன் கடைசி நிமிட தவிப்பை கூட அழகாய் சொன்னீர்கள்.

    கோலத்தில் அது கிடப்பதை பார்த்தவுடன் மனது கனத்து விட்டது.
    பறவைகள் பறப்பதை பார்ப்பது ஆனந்தம், இப்படி கிடப்பது மனதுக்கு வேதனை.


    இந்த பறவைகள் கொஞ்ச தூரம் தான் பறக்கும் நடந்தே தான் போகும் நடப்பது மெதுவாக நடக்கும், ரோட்டை கடக்கும் போது வண்டியில் அடிபட்டு இருக்கும்.

    எல்லாம் நம்மிடம் இவ்வளவு நாள் இருக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் போலும் என்று
    "சின்னப்புறா ஒன்று " பதிவில் பின்னூட்டத்தில் போட்டு இருந்தேன்.

    நம் வீட்டில் வந்து அதற்கு உயிர் பிரிய வேண்டும் என்று இருக்கிறது.
    நம் கையால் உணவும், நீரும் கொடுக்க முடிந்ததே!

    //“நமக்கும் அதுக்கும் ஏதோ ஒரு முந்தைய சொந்த பந்தம் இருக்கும் போல அதான் நம்ம வீட்டு வாசல்ல வந்து உசுர விட்டிருக்கு.”//

    அதுதான் செல்லப்பா சார் சொன்னது போல "விட்டகுறை தொட்டகுறை" போல

    நாங்கள் மாயவரத்தில் இருக்கும் போது குருவி குஞ்சு ஒன்று என் வீட்டு வாசலில் கிடந்தது. அதை எடுத்து வந்து இரண்டு மூன்று நாள் பார்த்து கொண்டேன். இங்க் பில்லர் வைத்து அதற்கு பால், நீர், தேன் கொடுத்தேன்.

    அப்போது எல்லாம் அலை பேசி வசதி வரவில்லை. அதன் வளர்க்கும் முறை எல்லாம் படித்து வளர்க்க. மூன்று நாள் இருந்து இறந்து விட்டது. பக்கத்து வீட்டு மாமா அதை மண் தோண்டி புதைக்க சொன்னார்.
    மறு நாள் பால் ஊற்றச் சொன்னார்.

    அடிபட்ட கிளி, கூட்டிலிருந்து விழுந்த தேன் சிட்டு , அணில் பிள்ளை எல்லாம் வளர்ந்து வீட்டை விட்டு மகிழ்ச்சியாக போய் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் பறவையை பற்றி போட்ட பதிவின் சுட்டி கொடுத்து இருக்கலாம்.//

      நானும் தேடி பார்த்தேன் டக்கென்று கிடைக்கவில்லை. தலைப்பு என்னவாக இருந்திருக்கும் என்று நினைவில்லை. ஆனால் வியாழனில் வரவில்லை. தேடிப் பார்த்தேன். ஸ்‌ரீராம் ஞாயிறில் கூட வந்திருக்கலாம் என்றார். அது கொஞ்சம் தான் தேடினேன்...இல்லை எனக்குக் கிடைக்கவில்லையோ தெரியவில்லை

      பார்க்கிறேன் மீண்டும் தேடிப் பார்க்கிறேன்.

      //கோலத்தில் அது கிடப்பதை பார்த்தவுடன் மனது கனத்து விட்டது.
      பறவைகள் பறப்பதை பார்ப்பது ஆனந்தம், இப்படி கிடப்பது மனதுக்கு வேதனை.


      இந்த பறவைகள் கொஞ்ச தூரம் தான் பறக்கும் நடந்தே தான் போகும் நடப்பது மெதுவாக நடக்கும், ரோட்டை கடக்கும் போது வண்டியில் அடிபட்டு இருக்கும்.//

      ஆமாம் அக்கா அதேதான். இது அதிகம் பறக்காது. டக்கென்று அடிபடும். உயரமாகப் பறக்காததால். ஆனால் இங்கு பார்த்தவை அனைத்தும் மரங்களில்தான் மாறி மாறிப் பறந்து உட்கார்ந்துகொண்டன. ஒன்று கூடத் தரையில் பார்க்கவே இல்லை கோமதிக்கா. ஆச்சரியமாக இருந்தது.

      சின்னப் புறா - பதிவில் உங்கள் கருத்து நினைவு இருக்கிறது.

      கதையைப் பற்றிய உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. நீங்கள் குருவிக் குஞ்சு மற்றும் //அடிபட்ட கிளி, கூட்டிலிருந்து விழுந்த தேன் சிட்டு , அணில் பிள்ளை எல்லாம் வளர்ந்து வீட்டை விட்டு மகிழ்ச்சியாக போய் இருக்கிறார்கள்.//

      இவற்றை எல்லாம் காப்பாற்றி அவை மகிழ்வாக வெளியேறிய நிகழ்வுகள் மகிழ்வான விஷயங்கள், கோமதிக்கா.

      நம் வீட்டிலும் இப்படி நடந்ததுண்டு சென்னையில். இங்கு இதுவரை அப்படி எதுவும் நிகழ்வைல்லை. ஆனால் இப்போது இரு பூசார்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். உணவு கொடுக்கிறோம். பறவைகள் வருகின்றன, தானியங்கள், கறிவேப்பிலை பழங்களைக் கொத்திச் சாப்பிட்டன. குறிப்பாகக் குயில். அப்புறம் தண்ணீர் வைக்கிறோம். குடித்துவிட்டு சிறகையும் நனைத்து உதறிக் கொண்டு பறக்கும்.

      கீதா

      நீக்கு
  11. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்!

    அருமையான கதை கீதாக்கா...சில சமயங்களில் நம் உள்ளுணர்வு சொல்வது சரியாகவே இருக்கும்...பறவையை பார்த்து மனது வலித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் உள்ளுணர்வு சில சமயங்களில் நிகழ்வுடன் ஒன்றிப் போகும்.

      மிக்க நன்றி காயத்ரி உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  12. நிஜப் படத்தை வைத்து ஒரு மனதை நெகிழவைக்கும் கதை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. மனது மிகவும் நெகிழ்ந்து விட்டது ஏதோ சம்பந்தங்கள் இல்லாவிட்டால் இப்படி நிகழ்வது இல்லை அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியான எண்ணங்கள் நம்மில் இருப்பதைத்தான் சொல்ல எண்ணினேன் காமாட்சி அம்மா.

      மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  14. ஸ்ரீராமின் அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து, கீதாஜியின் இந்தக் கட்டுரை! என்ன ? நேற்று செவ்வாயா? ஸோ.. கதை!

    தன்னைச் சுற்றி உலவும் பறவைகளையும், (வீட்டு) விலங்குகளையும் மனிதன் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு கவனித்தால் நல்லது எனத் தோன்றுகிறது. பொதுவாக வாழ்க்கை என்பதைப்பற்றிய அவதானிப்பு - அப்படி ஒன்று அவனில் தீவிரம் பெற்றிருந்தால் - அது ஆழமடையும். அவனது ஆன்மாவுக்கு நல்லது.

    ஆனால், இப்படியெல்லாம் மேற்கொண்டு சொல்லிப்போனால் ஒருமாதிரியாகப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள் சிலர். காலம் அப்படி..

    பதிலளிநீக்கு
  15. //தன்னைச் சுற்றி உலவும் பறவைகளையும், (வீட்டு) விலங்குகளையும் மனிதன் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு கவனித்தால் நல்லது எனத் தோன்றுகிறது. பொதுவாக வாழ்க்கை என்பதைப்பற்றிய அவதானிப்பு - அப்படி ஒன்று அவனில் தீவிரம் பெற்றிருந்தால் - அது ஆழமடையும். அவனது ஆன்மாவுக்கு நல்லது.//

    ஏகாந்தன் அண்ணா சூப்பர்!! ரொம்ப ரொம்ப ரசித்தேன் இந்த வரிகளை!!

    மிக்க நன்றி அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!