திங்கள், 1 ஆகஸ்ட், 2022

"திங்க"க்கிழமை  : வாழைத்தண்டு அடை - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி 

 வாழைத்தண்டு அடை + மற்றும் பிற போனஸ் அடைகள். . 

வணக்கம் அனைவருக்கும். 

வாழைத்தண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. நார் சக்தி மிகுந்தது. சிலவற்றில் நார் மிகவும் இருக்கும். சிலதில் நார்  நிறைய இருக்காது. அதை கல்தண்டு என்பார்கள் எங்கள் பாட்டி. பொதுவாக  வாழைத்தண்டை நறுக்கும் போதே நார் எடுக்க வேண்டி வரும். இந்த நாரை நன்கு காய வைத்து விளக்குத் திரியாகவும் பயன்படுத்தலாம். அரிவாள்மனையில், வாழைத்தண்டின் தோலை அகற்றியப் பின் அலம்பி  வட்டமாக நறுக்கும் போதே அதன் நாரை ஒரு விரலால் சுற்றி எடுத்து கொண்டு, பின் அதை பொடிதாக துண்டுகளாக்கி எங்கள் பாட்டி அதை அரியும்  லாவகம் எனக்கு மிகவும் பிடிக்கும். "நானும் அப்போது அவ்விதமே நறுக்கித் தருகிறேன் என்றால், வேண்டாம்...! நறுக்கும் போதே கை விரல்கள் கறுத்து விடுமென " கூறி விடுவார்கள். ஆம்.. இதை உடனே நறுக்கிய கொஞ்ச நேரத்தில், ஒரு மாதிரி இளம் கருப்பு கலருக்கு மாறி விடும் என்பதற்காக மோர் சேர்த்த தண்ணீரில் நறுக்கிய துண்டுகளை போட வேண்டும். அப்போது தன் இயற்கையான கலருடனே இருக்க அது பழகி விடும். காலையில் அதை நார் எடுத்து  நறுக்கி சமையல் செய்ய தாமதமாகும் என்பதால் இரவே சுத்தப்படுத்தி இந்த மாதிரி மோர் கலந்த நீரில் போட்டு வைத்துக் கொண்டாலும் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். 

மேலும் அது சிலருக்கு அவ்வளவாக சாப்பிட பிடிக்காது. அதை சீர்படுத்தி சமைப்பதும் சிரமமென சிலர் கருதுவார்கள். நாங்கள் ஒரளவு சிறு வயதிலேயே இந்த காய்கறியை உணவில் சேர்த்து வந்துள்ளோம். "வாய்க்கு ருசி வயிற்றுக்கு கேடு." என்று எங்கள் பாட்டி  பிற உணவுகளுக்கு சொல்லிச் சொல்லி வயிற்றிக்கு நலம் தரும் இந்த காய்கறி உணவை சாப்பிட்டு பழக்கமாகி விட்டது. 

இந்த வாழைத்தண்டில், கறி, பா.ப போட்டு கூட்டு, தனியாக வாழைத்தண்டை மட்டும் சேர்த்து அவியல், என்று நம் எண்ணப்படிச் செய்யலாம். வெறும் வாழைத்தண்டை சாறு எடுத்து அதில் எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு சேர்த்து/சேர்க்காமல் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல்சூடு,  வயிற்றுப்புண் போன்றவைக்கு நல்லதென இது மருந்தாகவும் பயன்படும் சிறப்பை வாய்ந்தது. மேலும் நம் வயிற்றில்  இருக்கும் பித்தப்பையில் , சிறுநீரகத்தில் சிலருக்கு வளரும் சிறு கற்களைக் கூட கரைத்து விடும் மருத்துவ குணம் கொண்டது. 

ஆனால், சமைக்கும் போது சுவைகள் சற்று  மாறுபடும்  இதை,  எந்த முறையில் செய்தாலும், அப்போது எங்கள் குழந்தைகளுக்கும் இந்தக் காய் பிடிக்காமல் போகவே நாளடைவில் இதை வாங்குவதே அரிதாகப் போனது. அதன் பின் இந்த மாதிரி அடை, வடை என்பனவற்றில் இதை (சொல்லாமல் கொள்ளாமல்) சேர்த்ததும், அவர்களுக்கும்   பிடித்தமானதாக இருந்தது.  ஒரு பொழுது, எங்களுக்கு கறி, கூட்டு என செய்தும்,  மீதம் இருப்பனவற்றை இப்படிச் செய்தும் அவர்களையும், இந்த உடம்பிற்கு நல்லதான காயை  சாப்பிட வைத்தேன். இப்போது இதன் குணம்  குறித்த விபரம் அறிந்தபின் இந்த காயை அவர்கள் வெறுப்பதில்லை. எந்த வகையில் செய்தாலும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அடுத்து அவர்கள் குழந்தைகளுக்கு இதன் அருமை தெரியும் வரை இப்படி அடைகளாக செய்து தர வேண்டியதுதான்...! வேறு வழி.? 

 அரிசி, பருப்புகளை எப்போதும்  போல் அடைக்கு ஊற வைப்பது போல ஊற வைத்துக் கொள்ளவும். 


அடைக்கு ஊற வைத்த நான்கு ( து. ப, க. ப,பா ப, உ. ப) பருப்புகள். இரண்டு டம்ளர் புழுங்கல் அரிசிக்கு ,  நான்கு பருப்புகளும் ஒரே அளவாக  எடுத்து கொண்டு ஒரு டம்ளர் என  ஊற வைக்கவும். வாழைத்தண்டை அரைத்து இதில் சேர்க்கும் போது அடை நன்றாக மிருதுவாக வரும். 


இது அன்று கொஞ்சம்  கல் தண்டாக அமைந்து விட்டது. நார் அவ்வளவாக இல்லை. 


அடைக்கு ஊற வைத்த அரிசி, பருப்புகளை வழக்கமான முறைகளின்படி காரம், உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து அரைத்தெடுத்த பின்னர் நறுக்கிய  வா. தண்டு துண்டுகளையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். 







வா. தண்டை அரைத்தெடுத்த விழுதையும் அடை மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும். 


கொஞ்ச நேரம் கழித்து தேங்காய் எண்ணை சுற்றிலும் ஊற்றி அடை வார்த்தால் மிகவும்் சுவையாக இருக்கும். கொஞ்சம் புளிப்பு வர வேண்டுமென்றால், ஒரு ஐந்தாறு மணி நேரம் கழித்தும் வார்க்கலாம்.  இல்லை கூடுதல்் புளிப்பு வர கொஞ்சம் பொங்கியிருந்தால் சுவையாக இருக்குமென விருப்பப்படுகிறவர்கள் இரவே அரைத்து வைத்து விட்டு காலையில் வார்க்கலாம். இது அவரவர் விருப்பம்


இதற்கு தே. சட்னி, இல்லை, வெங்காயம்  தக்காளி போன்ற வேறு சட்னிகள் வெல்லம்., இல்லை, எல்லாகாய்கறிகள் போட்டு அவியல் குழம்பு  மி. பொடி, தயிர் இப்படி எது வேண்டுமானாலும், தொட்டுக் கொள்ளலாம். இதுவும் அவரவர் விருப்பம். 

இதைப் போல வாழைப்பூவையும் கள்ளன் ஆய்ந்து சுத்தப்படுத்தியதும், அலம்பிய பின் அரைத்து அடை மாவுடன் கலந்து வாழைப்பூ அடையும் செய்யலாம்.  வடையாகவும்
செய்து சுவைக்கலாம். இதை (வாழைப்பூ வடை) முன்பே எ.பியில் பொங்கல் பதிவில் பகிர்ந்திருந்தேன். 

இப்போது வாழைப்பூ அடைகளின் படங்கள். இந்த படங்கள் ( இது நானும் வருவேன் என அடம் பிடித்ததால், வேறு வழியின்றி போனஸ் என்றொரு பெயர் தந்து இதையும் வெளியிட்டிருக்கிறேன்.) ஒன்றுடன் ஒன்று ஒரு போனஸாக.... என்ற பெயர் பெற்று இங்கு இடம் பெற்று விட்டது. இதுவு‌ம் நன்றாக அமைந்திருந்தது. 





வாழைத்தண்டு அடை மற்றும் வாழைப்பூ அடை குறித்த  இந்தப் பதிவை  படித்தவர்களுக்கும், கருத்திடுபவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 🙏. 

பின் குறிப்பு:-  அடைக்கு ஊற வைத்த அரிசி படத்தை காணவில்லையே நீங்கள் யாரும்  தேட வேண்டாம். "என்னை முதலில் அறிமுகப்படுத்தி விட்டு இந்த அம்மா (சந்தேகமில்லாமல் நான்தான்)  ஒவ்வொரு படமாக விவரித்து, ஒவ்வொன்றாக விளக்கி, என் பொறுமையை சோதித்து விட்டமையால், நான் வெறுத்துப் போய் வெளியேறுகிறேன். என்னைத் தேட வேண்டாம்.." என அதுவே ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்று விட்டது... :) 

இரண்டாவதாக, நிறைய அடைகள் இருந்த வாழைத்தண்டு படமும் காணாமல் போய் விட்டது. அதை நான் உணவு மேஜையில் வைத்து விட்டு சிறிது மறதியாக கைப்பேசிக்குள் சிறையெடுக்க தவறியபடியால், அது ஏதும் கடிதம் எழுதுவதற்கு கூட அதற்கு சந்தர்ப்பம் தராமல், அது அவசரமாக பாகம் பிரிக்கப்பட்டு அனைவருக்கான  பங்கீடாக போனது...:))) ஆகவே படமாக வந்த ஒரே அடையை அடையாளமாக வைத்துக் கொண்டு அனைவரும் இதை தங்கள் கைபாகமாக செய்து சாப்பிட வேண்டுமென கூறிக் கொள்கிறேன். ஆனால், அதன் பின்பு ஒருநாள்  செய்த வாழைப்பூ அடைகளை கவனமாக (ஆனாலும் இதிலும்  ஆரம்பம் முதலான பல படங்கள் மிஸ்ஸிங்...) சிறையெடுத்து  வைத்து விட்டமையால், அனைவரின் பார்வைக்கும் விருந்தாக (சும்மா இதுவாவது என் கைப்பேசிச் சிறையில் கிடந்து அகப்(அல்லல்)பட்டாலும், பதிவில் வலம் வந்து புகைப்படத்தில் இடம் பெற்ற தற்பெருமையுடன்  சந்தோஷமாக இருக்கட்டுமே. ..:))))  வந்துள்ளது.) பார்த்து படித்து ரசித்து  சுவைத்த (கற்பனையில்) அனைவருக்கும் நன்றி. 🙏. 

37 கருத்துகள்:

  1. செய்முறையோடு அதன் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல்கள் சிறப்பு.

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றி. முதலாவதாக வந்து தங்களின் நல்லதொரு கருத்தை தந்து பாராட்டியமைக்கு தங்களுக்கு என் மகிழ்வுடன் கூடிய நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். தொற்றில்லா ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கை அனைவருக்கும் அமையப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. நாங்க மிக்சியில் போட்டுக் காய்களை அரைக்காமல் பொடியாக நறுக்கிச் சேர்த்துடுவோம். அதோடு அடை எங்க வீட்டில் கரகரனு இருக்கணும் என்பாங்க. மிருதுவாக இருந்தால் இது என்ன அடையா? தோசையா என்னும் கேள்வி வரும். அடை தோசைனு ஒண்ணு என் அம்மா வீட்டில் பண்ணுவாங்க. அதுக்கு எல்லாப் பருப்புக்களும் போட்டு நைசாக அரைத்து மெலிதாக வார்த்து எடுப்பாங்க. இங்கேயும் சில சமயங்கள் அது பண்ணுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      ஆமாம்.. முன்பெல்லாம் இப்படித்தான் பொடியாக அரிந்துதான் மாவோடுசேர்த்து விடுவதுண்டு. இப்போது குழந்தைகள் அதைப்பார்த்ததும் இது வேண்டாமென ஒதுக்கி விடுவதாலும், நமக்கும் கடித்து சாப்பிடும் (பற்களால்) போது சில பிரச்சனைகள் (பற்களுக்கு) உண்டாவதாலும் இந்த வழிமுறை. அடை தோசை இரண்டு பெயர்களோடும் சேர்த்து பண்ணும் தோசையும் நன்றாக இருக்குமென தோன்றுகிறது. தங்கள் கருத்துக்கும், தாங்கள் தந்த தகவலுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்று என் ரெசிபியை பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு இன்று வந்து கருத்துக்கள் தரப்போகும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வாழைப்பூ அடை, பறங்கிக் கொட்டை அடை, பச்சைப் பறங்கி அடை, கீரை அடை, முருங்கைக்கீரை அடை, வெந்தயக்கீரை அடை, சின்ன வெங்காய அடைனு எங்க வீட்டில் எல்லாக் காய்களுமே நறுக்கிச் சேர்ப்போம். போன வாரம் தான் பறங்கிக்கொட்டை அடை பண்ணினேன். இங்கே இப்போ நிறையப் பறங்கிக் கொட்டை கிடைக்குது. சின்ன வயசில் அதில் பால்க் கூட்டுப் பண்ணிப் போடுவா அம்மா. இதுவும் பலாக்காய்ப் பொடியும் அடிக்கடி சமையலில் இடம் பெறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம். இந்த அடையோடு எது வேண்டுமானாலும் சேர்ந்து ருசி தரும். நீங்கள் சொல்வது போன்ற காய்களை நானும் சேர்த்திருக்கிறேன். பாலக் கீரையையும் பொடிதாக அரிந்து இதில் சேர்த்து வார்க்கலாம். எல்லாம் நம் விருப்பந்தானே...

      இன்றைக்கு நாக சதுர்த்தி வேலைகளில் உங்களுக்கெல்லாம் பதில் தர தாமதமாகி விட்டது. இப்போதுதான் வருகிறேன். தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  7. மங்களகரமான ஆடிப்பூர நல்வாழ்த்துகளுடன்..

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்களுக்கும், மற்ற சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஆடிப்பூர, மற்றும் நாக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  8. இங்கே வாழைப் பூவிற்குக் குறைவில்லை.. நேற்று முன் தினம் கூட வாழைப் பூ வடை தான்.. சமயத்தில் அடையும் உண்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      ஆகா.. வாழைப்பூ பொரியல், கூட்டு, பிட்லை, உசிலியுடன் நீங்கள் சொன்ன ஐட்டங்களும் கண்டிப்பாக ருசியை தருபவைதான். எப்படியோ காய்கறிகள் நம் உணவுடன் இணைந்தால் சரிதான். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  9. வாழைப் பூ சமையல் குறிப்பு மனம் கவர்கின்றது.. தங்களது கை வண்ணம் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்தமைக்கும், பதிவை குறித்த தங்களது பாராட்டுச் சொற்களுக்கும் என மனமார்ந்த நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  10. வாழைத்தண்டு அடை செய்முறை நன்றாக வந்துள்ளது.

    சமீபத்தில் கிராமத்திலிருந்து, அரை அடிக்குமேல் விட்டம் இருந்த, அடித்தண்டு கிடைத்தது. அடை தவிர மற்றவற்றைச் செய்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வாழைத்தண்டு அடை நன்றாக வந்திருப்பதாக நீங்கள் சொன்னது மகிழ்வை தருகிறது. கிராமங்களில் இருந்து நேரடியாக வரும் காய்கறிகள் ருசியாக இருக்கும். இங்கு இப்போதுதான் கடைகளுக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருகிறோம். கடந்த ஒரு வருடமாக தொற்றுக்கு பயந்து ஆன்லைன் வர்த்தகம். அது வரும் விதங்கள் நம் நேரப்படி நன்றாக அமைந்தால் உண்டு. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  11. அந்த ஊரில் வாழைப்பூ கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பார்கள். ஆனால் அதனை ஆய்வது நச்சுப்பிடித்த வேலை. வாழைப்பூ வடையும் நன்றாகத்தான் இருக்கும். கடைகளில் செய்வதுபோல் வருவதில்லையே... ஏன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம்.. வாழைப்பூவை ஆய்வது கொஞ்சம் கடினந்தான். அதுவும் கைகள் பிசுபிசுவென ஒட்டிக் கொண்டு கறுத்து விடுமென, பொடி உப்பை விரல்களில் தொட்டுக் கொண்டு கள்ளனை ஆய்வோம். மிளகாய் பொடியைப்போல, உப்பும் கண்களில் பட்டால் கண்கள் காந்துமில்லையா? அதனால் கள்ளன் உடனே மண்டியிட்டு பிடிபட்டு விடுவான்.:)))

      இப்போது இதை சுலபமாக நறுக்க யூடியூப்பில், பல விதங்களில் சொல்லி வருகிறார்கள். அந்த விதங்களில் இன்னமும் முயற்சிக்கவில்லை.

      கடைகளில் வாழைப்பூ வடை இதுவரை சாப்பிட்டதில்லை. ஒரு வேளை அதில் சேர்க்கும் மசாலா பொருட்களின் வித்தியாசத்தில் அதில் சுவை அதிகமோ? நான் வெறும் வெங்காயம் மட்டுந்தான் எப்போதாவது சில சமயம் வாழைப்பூ வடையுடன் சேர்ப்பேன். வெங்காயம் போன்ற ஏதுமின்றி வாழைப்பூவை மட்டும் வடை மாவுடன் சேர்த்து வடை செய்தால் அதன் ருசி தனித்துவமாக நன்றாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  12. பெங்களூர் வந்தபிறகுதான், குறுக்கே நார் இல்லாமல் நெடுக்காக நார் இருக்கும்படியான வாழைத்தண்டு அமைந்து படுத்தியெடுத்துவிடுகிறது. வாங்குவதற்கு முன் அதனைச் சோதிக்கவேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      அளிக்கும் பதில்களுக்கு நடுவில் ஒரு இடைவெளியாக போய் விட்டது. ....

      ஆம். இங்கு நம்மூரைப்போல சில சமயம் வாழைப்பூவும், சரி, தண்டும் சரி அமைவதில்லை. சில சமயம் நன்றாக உள்ளது. அதை எப்படி சோதிப்பது? பார்ப்பதற்கு நன்றாக இருந்த பின் சமைத்தவுடன் சமயத்தில் ஒரு ருசியும் இல்லாமல் போகிறது. ஆன்லைனில் சிலசமயம் வெட்டி துண்டுகளாக தரும் வாழைத்தண்டு கூட சமயத்தில் நன்றாக ருசியாக உள்ளது. தங்கள் கருத்துக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  13. வீட்டில் பையனுக்குப் பிடிக்கும் என்று அடைக்கு வழுமூன அரைப்பேன். 2க்கு இரண்டு என்ற அளவில் அரிசி பருப்பு சேர்ப்பேன். அரிசியில் பாதிக்குப் பாதி பச்சை புழுங்கல் சேர்ப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அளவு முறைகளும் சரிதான். இட்லி அரிசியுடன் பாதி பச்சரிசி சேர்க்கும் போது, பருப்புக்கள் கணிசமாக போட வேண்டும். நானும் வெறும் அடைக்கு பச்சரிசி பாதி அளவு சேர்ப்பேன். இல்லாவிட்டால் கல்லிலிருந்து வர மறுக்கும். தங்கள் பாணிப்படி நைசாக அரைத்தால் உடம்புக்கும் நல்லது. எப்படியும் ருசியும் மாறுபடாது.

      இந்தப் பதிவுக்கு வந்து தாங்கள் தந்த அனைத்து கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  14. நல்லதொரு குறிப்பை தந்ததற்கு அன்பு நன்றி!
    2 தம்ளர் புழுங்கல் அரிசிக்கும் நான்கு பருப்புகளும் சேர்ந்த ஒரு தம்ளர் பருப்புக்கும் வாழைத்தண்டும் மிளகாய் வற்றலும் எந்த அளவு சேர்க்க வேண்டுமென்று சொல்லவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து தாங்கள் அன்புடன் தந்த நல்லதொரு கருத்துக்கும் என் அன்பான நன்றி சகோதரி.

      காரம் அவரவர்களுக்கு விருப்பப்படி போட்டுக் கொள்ளலாம் என்பதால் சொல்லவில்லை. ஒரு கை நீளம் உள்ள இரண்டு வாழைத்தண்டு துண்டுகளை அந்த அரிசி, பருப்பு கலவைக்கு நான் உபயோகப் படுத்தினேன். நிறைய வாழைத்தண்டை போட்டால் மாவு மிருதுவாகி விட்டால் பின் மேற்கொண்டு அரிசி மாவு கலவைகளை சேர்க்க வேண்டும். அப்படி கலவை அதிகமாகி விட்டால் தொடர்ந்து ஒரிரு நாட்களாக தினமும் இந்த அடைகளையே செய்து தர வேண்டியதாகி விடும். மிஞ்சும் மாவை குளிர் சாதன பெட்டியில் வைத்தாலும், கரண்ட் போய் வரும் போது அனைத்துப் பருப்புகளின் கலவை தன்மையால் அது புளித்து விடும். உப்பு காரம் அதிகமாக இருந்தால் புளிக்காமல் நன்றாகத்தான் இருக்கும். இங்கு குழந்தைகள் கொஞ்சம் காரமானாலும் வேண்டாமென மறுத்து விடுகின்றனர். அதனால் காரம் கம்மி.

      தங்களது அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. ஒரு சாண் என்பதை ஒரு கை என்று எழுதியிருக்கிறீர்கள். 8 விரற்கடை நீளம். யாருக்குமே மறுநாள் அதே டிபன்னா காத தூரம் ஓடிடறாங்க. இட்லி மாவையே மறுநாள் தோசை, அத்தோட சரின்னு நிறுத்திக்கவேண்டியிருக்கு

      நீக்கு
  15. கமலாக்கா வாழைத்தண்டு அடை சூப்பர். அழகான விளக்கங்கள். அதை எப்படி எல்லாம் பயன்படுத்துவது, ம்ருத்துவ குணங்கள் உட்பட எல்லாமே அருமை. படங்கள் உட்பட.

    நம் வீட்டில் வாழைத்தண்டை அரைத்து சேர்த்ததில்லை. சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அப்படியே சேர்த்துச் செய்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி


      தங்களின் அன்பான வருகையும் கருத்தும் கண்டு என் மனம் மகிழ்ச்சி அடைந்தேன்.

      ஆமாம்... முன்பு அப்படித்தான் எல்லாவற்றையும் நறுக்கிச் சேர்த்தேன். ஆனால் அந்த உரு கூட தெரியாமல் செய்து தந்தால்தான் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதனால்தான் இப்படி அரைத்து அதனுடன் சேர்க்கிறேன்.

      பதிவை படித்து தந்த தங்களது அன்பான கருத்துக்கும், பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  16. வாழைத்தண்டு பயன்படுத்தி பல வகை செய்முறைக்குறிப்புகள் நீங்கள் சொல்லியிருப்பதோடு ...வாழைத்தண்டு + கொண்டைக்கடலை போட்டு புளிப்புக் கூட்டும் செய்வதுண்டு கமலாக்கா..அதுவும் நன்றாக இருக்கும். வாழைத்தண்டு சலாட், தயிர்ப்பச்சடி....வாழைத்தண்டு மோர்க்கூட்டு....என்று செய்யலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க வீட்டில், மோர்க்கூட்டு மற்றும் பச்சடிதான் போணியாகும். தண்டுத் தான் (பருப்புக் குழம்பில்) எனக்குப் பிடிக்கும்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். வாழைத்தண்டுடன் பா. ப சேர்த்து செய்யும் கூட்டு சுவை நன்றாக இருக்குமென்றால் வாழைத்தண்டு + கொண்டைக்கடலை சேர்த்து புளி விட்டு கூட்டும் அற்புதமாக இருக்கும். நானும் செய்துள்ளேன். அது போல் வாழைத்தண்டில் உசிலியும் சுவையாக இருக்கும். நீங்கள் வா. தண்டு மோர் கூட்டு என்பதைதான் நான் அவியல் என குறிப்பிட்டுள்ளேன். நம் விருப்பபடி எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். இப்படி வேக வைப்பதை விட பச்சை வாழைத்தண்டு சாறில் அதிக பலன் இருக்கிறது என்கிறார்கள். எப்படியோ காய்கறிகள் உணவில் சேர்ந்தால் நல்லதுதானே..

      தங்களின் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  17. அருமை...

    // வாய்க்கு ருசி வயிற்றுக்கு கேடு //

    சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம்.. வாய்க்கு ருசியாக இருக்கும் உணவு சிலசமயம் வயிற்றிக்கும் கெடுதல் விளைவித்து விடும். வீட்டின் அந்தக்கால பெரியவர்கள் சொல்வதை நாம் கேட்டோம்.

      தாங்கள் பதிவை ரசித்து தந்த அன்பான கருத்துக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  18. அருமையான அடை குறிப்பு. படங்கள் நன்றாக இருக்கிறது.

    //என்னை முதலில் அறிமுகப்படுத்தி விட்டு இந்த அம்மா (சந்தேகமில்லாமல் நான்தான்) ஒவ்வொரு படமாக விவரித்து, ஒவ்வொன்றாக விளக்கி, என் பொறுமையை சோதித்து விட்டமையால், நான் வெறுத்துப் போய் வெளியேறுகிறேன். என்னைத் தேட வேண்டாம்.." என அதுவே ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்று விட்டது... :) //

    ரசித்தேன்.

    வாழைப்பூ அடை பார்க்கவே அழகு.
    தண்டு அடை குழந்தைகளை சாப்பிட வைத்தது நல்லது.
    நீங்கள் சொல்வது போல தான் வட்டமாக தண்டை வெட்டி விரலால் சுற்றி நார் எடுத்து மோரில் போட்டு வெள்ளை நிறமாக சமைப்போம்.
    மாயவரத்தில் நார் இல்லாத பிஞ்சு தண்டு கிடைக்கும். இங்கு பெரிதாக தடிமனாக கிடைக்கிறது. குட்டியாக கிடைக்கும் போது வாங்கி செய்கிறேன். தண்டு அடை.

    வாழைத்தண்டு திரி நானும் தயார் செய்து இருக்கிறேன்.
    அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      தாங்கள் பதிவை ரசித்துப், படித்து தந்த கருத்துரை கண்டு என் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் சகோதரி.

      அப்போதெல்லாம் சில சமயங்களில் வாங்கும் இந்த காய்கறிகளை என் குழந்தைகளுக்கும் இப்படித்தான் மாற்றிச் செய்து அவர்களை சாப்பிட வைத்தேன். இப்போது அவர்கள் குழந்தைகளுக்கும். ஆனால் சில சமயம் அவர்கள் பிடிவாதமாக மறுக்கிறார்கள். இவைகளை சேர்த்த வடை என்றால் ஒரளவு சாப்பிட்டு விடுவார்கள். எப்படியோ இந்த காய்களும் அவர்கள் உணவில் சேர்ந்தால் நல்லதுதானே..

      சமயங்களில் இங்கும் நல்லதாக கிடைக்கிறது.
      நீங்களும் வாழைத்தண்டில் திரி செய்வதறிந்து ரொம்ப மகிழ்ச்சி சகோதரி. எங்கள் பாட்டியும் இந்த காய்கறி பயன்படுத்தும் போது இந்த திரி செய்து விளக்கில் போடுவார்கள். நல்ல பிரகாசமாக நின்று எரியும். அதை நினைவில் வைத்துதான் அதை குறிப்பிட்டேன். அதற்கு நிறைய நார் உள்ள வாழைத்தண்டாக அமைய வேண்டும். நார் சக்தியும் நமக்கு நிறைய கிடைக்கும். விளக்கிற்கு நல்ல திரியும் கிடைக்கும்.

      தங்களது அன்பான கருத்திற்கும், மனமுவந்து தந்த பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  19. உடல் நலத்துக்கு உகந்த நல்ல உணவுப் குறிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து படித்து நல்லதொரு கருத்து தெரிவித்திருப்பதற்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!