ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: திருவட்டாறு 01 :: நெல்லைத்தமிழன்

 

நான் தரிசனம் செய்த கோவில்கள்

(002) திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் – பகுதி 1

வைணவக் கோவில்களில், ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலங்களை திவ்யதேசம் என்று கூறுவர். ஒவ்வொரு வைணவனும் முடிந்தால் இந்தக் கோவில்களுக்கெல்லாம் யாத்திரை செல்லவேண்டும்...  சைவர்கள் பாடல் பெற்ற தலங்களுக்கு யாத்திரை செல்லவேண்டும். இது நம் முன்னேற்றத்துக்கும், கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் பயனளிக்கும்.  பாரத தேசத்தில் 106 திவ்யதேசங்கள் உள்ளன. இதைத் தவிர, அபிமானத் தலங்கள் என்று பலப்பல உண்டு. சில இடங்களில், அப்போது பாடல் பெற்ற தலம் இருந்த இடம் வேறு, இப்போது இருப்பது வேறு என்பதும் உண்டு. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. காஞ்சீபுரத்தில் பத்துக்கும் மேற்பட்ட திவ்யதேசங்கள் உண்டு. அதில் ஒரு கோவிலில், 4 சன்னிதிகள் உள்ளன, அவற்றை நான்கு திவ்யதேசங்களாக் கொள்வர். அதற்குக் காரணம் பழைய கோவில் அழிந்துபட்டிருக்கலாம் அல்லது உலுக்கர்கள் படையெடுப்பில் அழிக்கப்பட்டிருக்கலாம்.

நான் ஒரு சில திவ்யதேசங்கள் தவிர மற்றவற்றைத் தரிசித்திருக்கிறேன். அதில் மலைநாடு திவ்யதேசங்கள் எனப்படும், கேரள திவ்யதேசங்களுள் ஒன்றான திருவட்டாறு இந்த வாரத்தில் இடம்பெறுகிறது. தற்போது தமிழகத்தில் இருந்தாலும், மலையாள திவ்யதேசங்கள், நம்பூதிரிகளால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் 8ம் நூற்றாண்டுப் பெயர் வாட்டாறு.

முற்றிலும் ஆறுகளால் சூழப்பட்ட திருவட்டார் என்னும் ஊரின் நடுப்பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் முதன்முதலாகக் கட்டப்பட்ட மிகப் பழமை வாய்ந்த வைணவத்திருத்தலம் இது.  கோவிலைச் சுற்றி மூன்று பக்கங்களிலும், கோதை ஆறு, தாமிரவருணி மற்றும் பஹ்றளி ஆறு ஓடுகின்றன. மூலவர் மேற்கு பார்த்து ஆதிசேஷனில் சயன திருக்கோலம். மூலவர் 22 அடி நீளம், 16008 சாளக்கிராமங்களை உள்ளடக்கிய கடுசக்கரையால் செய்த திருப்படிமம். கோயிலின் கர்ப்பக்ரஹத்தில் மூன்று நிலை வாயில்கள் மூலமாக (திருவனந்தபுரம்  போலவே) பெருமாளின் திருப்பாதம், திருக்கரம் மற்றும் திருமுகத்தினை தரிசிக்கலாம்.

 கர்பக்ரஹத்தின் திருச்சுற்றில், மரத்தால் ஆன நவக்ரஹ மண்டபம் இருக்கிறது. அதில் இருக்கின்ற மர வேலைப்பாடுகள் சேர நாட்டின் சிற்பத் திறமையைப் பறைசாற்றும். உள் பிரகாரத்தில் மிக அழகான கற் சிற்பங்களும், அதற்கு வெளியே நுழைவாயில் கதவிலும், அதற்கு முன்பும் இருக்கும் கற் சிற்பங்களும் மிக மிக அழகாக இருக்கிறது. நான் சென்றிருந்த இரண்டு சமயங்களிலும் (கடந்த 2 வருடங்களில்) கோவில் மகாகும்பாபிஷேகம் செய்வதற்கான பராமரிப்பு வேலைகளில் இருந்த தால் மூலவரை பகல் வெளிச்சத்தில்தான் தரிசித்தோம் (விளக்குகள் மற்றும் அலங்காரங்கள் இல்லை). 

அதன் ஒரு வாயில் வழியாக நீர் நிலையை அடையலாம் (குளம், ஆறு போன்று). கோவில் மதிளை ஒட்டி இருக்கும். திருவட்டாறில் இரண்டு பக்கமும் நீர்நிலை.  ஒரு பயணத்தில் அங்கு குளித்தேன். தமிழகம் தவிர, மற்ற இடங்களில், நீர் நிலைகளில் சோப் உபயோகிக்க முடியாது.  

ஆற்றுக்குச் செல்லும் வழியில் (கோவில் நுழைவாயிலிலிருந்து 100 மீட்டர் இருக்கலாம்), இரப்பர் மரங்களின் தோட்டத்தைப் பார்த்தேன். நாகர்கோவில், கேரளாவின் பகுதிகளில் ரப்பர் மரங்கள் நிறைய உண்டு. ஒவ்வொரு மரத்திலும் சரட்டை (தேங்காய் ஓடு) கட்டிவைத்திருப்பார்கள். (மரத்தின் வெட்டுப் பகுதிக்குக் கீழே). அதில் ரப்பர் பால் சேகரமாகும். நாளின் இறுதியில் அதனைச் சேகரம் செய்துகொள்வார்கள். (அப்புறம் என்ன செய்கிறார்கள் என்பதை தில்லையகத்து துளசிதரன் சார்தான் வந்து சொல்லணும். சைக்கிள் பின்புறம் ரப்பர் ஷீட்டை அடுக்கிவைத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறேன்).இனிமேல்தான் நாம் உட்பிராகாரத்துக்குள் செல்லவேண்டும். அடுத்த வாரம் பார்ப்போமா? 

(தொடரும்) 

60 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  இன்றைய ஞாயறில் அழகிய படங்களுடன் மலர்ந்த , திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளின் கோவில் படங்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. 106 வைணவ திவ்ய தேச தரிசனங்களில் இக்கோயிலைப் பற்றிய விபரமும் படிக்க நன்றாக உள்ளது.

  கோவிலின் அமைப்பு, முகப்புத் தோற்றம் கதவின் மரசிற்பங்கள் படங்கள் அனைத்தும் மனதை கவர்கிறது. ரப்பர் மரங்களின் படங்களும் நன்றாக உள்ளது. இந்தக் கோவிலுக்கு செல்லும் அருளை நாங்கள் இன்னமும் பெறவில்லை. ஆதிகேசவ பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பை இப்படங்களின் மூலமாக இங்கு தந்திருக்கும் இறைவனுக்கும், சகோதரர் நெல்லைத் தமிழருக்கும் என் மனமார்ந்த நன்றி. அடுத்தப் பகுதியையும் ஆவலுடன் எதிர்பார்த்து தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாய்ப்பு கிடைக்கட்டும் கமலா ஹரிஹரன் மேடம். சமீபத்தில்தான் குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது. அருகிலும் பார்க்க நிறைய இடங்கள் உண்டு. அவற்றைப் பற்றி வேறு தலைப்பில் எழுதுவேன்.

   நீக்கு
 3. இப்ப எடுப்பான தலைப்பு,
  ஒன்றன்கீழ் ஒன்றான பளிச் படங்கள் என்று நன்றாக வெளியிட்டிருக்கிறீர்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொரு வைணவனும் முடிந்தால்?... முடிந்தால் என்ன செய்ய வேண்டும்,?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வைணவ திவ்ய தேசங்கள் மற்றும் அபிமானத் தலங்களுக்குச் செல்லவேண்டும். சைவர்கள் பாடல் பெற்ற தலங்களுக்கு யாத்திரை செல்லவேண்டும். இது நம் முன்னேற்றத்துக்கும், கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் பயனளிக்கும்.

   நீக்கு
 5. //ஒவ்வொரு வைணவனும் முடிந்தால் பாரத தேசத்தில் 106 திவ்யதேசங்கள் உள்ளன.//  வாக்கியம் பிழையாக முற்று பெறாமல் உள்ளது. சரிப் படுத்தலாம்.
  கொலாஜ் முறையில் அல்லாமல் புகைப்படங்களை தனித்தனியாக வெளியிட்டால் பெரிது படுத்தி பார்க்க ஏதுவாக அமையும். 

  "நான் அங்கெ போயிருக்கேன்" என்று வரவேண்டியவர் (கீதா மாமி) இது வரையிலும் எட்டிப் பார்க்கவில்லை. 

  துவக்கம் நன்று. படித்தபோது பாஸ்கர தொண்டைமான் நினைவுக்கு வந்தார். கோயில் சுற்றுலா சிறப்பாக எழுதியவர்.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்தால் இந்தக் கோவில்களுக்கெல்லாம் யாத்திரை செல்லவேண்டும்... என்றிருக்கவேண்டும். கோயில் யாத்திரையில் பல கோவில்களில் சிற்பங்களோ சொல்லிக்கொள்ளும்படியான பெரும் கோபுர மாடங்களோ கிடையாது. அவற்றை எப்படி ஞாயிறு பகுதியில் சேர்ப்பது? புராணக் கதைகளை எழுதும் எண்ணமும் இல்லை. யோசிக்கிறேன்.

   நீக்கு
  2. புகைப்படங்களைத் தனித்தனியாக வெளியிட்டால் பதிவு ரொம்ப நீளமாகிவிடும் என்ற அச்சம்தான். ஒரு கோவிலைப் பற்றி எத்தனை வாரங்கள் எழுதுவது?

   நீக்கு
  3. எனக்கும் படங்களை முழுமையாக ரசிக்க முடியாத வருத்தம் உண்டு!

   நீக்கு
  4. //"நான் அங்கெ போயிருக்கேன்" என்று வரவேண்டியவர் (கீதா மாமி) இது வரையிலும் எட்டிப் பார்க்கவில்லை. // போயிட்டு வந்து எழுதியும் ஆச்சு. கோமதி அரசு பதிவில் கும்பாபிஷேஹம் சமயம் சுட்டி கூடக் கொடுத்திருந்தேன். இன்னிக்கு மஹாலய அமாவாசை/கொலு வேலைகளை விட்டு விட்டு இங்கே எப்படிக் காலையில் வர முடியும்? இப்போ வந்ததே பெரிய விஷயம்.

   நீக்கு
 6. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
  பகவன் முதற்றே உலகு 


  ஆலயம் சென்ற உலா எழுத ஆதி 
  கேசவன் முதற்றே எழுது. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆலயம் சென்ற உலாவெல்லாம் ஆதி - என வந்திருந்தால் சிறப்பு

   நீக்கு
 7. பாடல் பெற்ற தலங்களை திவ்ய தேசம் என்பார்கள். ரொம்ப சரி.
  அப்படிப் பாடல் பெற்ற ஒரு தலத்தில் இருக்கும் ஒரு கோயிலில் 4 சன்னதிகள் இருந்தால் அவற்றை 4 திவ்ய தேசமாகக் கொள்ளணுமா? புரிலே.
  தலத்திற்குத் தானே திவ்ய தேசம் என்று பெயர் என்பதினால் இந்த சந்தேகம்.

  மன்னிக்கவும். படித்தோம், போனோம் என்றில்லை: படிப்பதைப் புரிந்து படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்தக் கேள்வி என்று கொள்ள வேண்டுகிறேன், நெல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான்கு வெவ்வேறு கோயில்கள், உலுக்கர் படையெடுப்பினாலோ (அனேகமா அப்படித்தான்) அல்லது காலத்தினாலோ அழிந்துபட்டிருந்தால் அதன் மூர்த்தங்களை தனித் தனிச் சன்னிதிகளில் பிரதிட்டை செய்து வைப்பார்கள். காஞ்சியில் உள்ள உலகளந்தபெருமாள் கோவிலில் தனித் தினிச் சன்னிதிகளில் பாடல் பெற்ற மூர்த்தங்கள் அப்படித்தான் வந்திருக்கவேண்டும். காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் கள்வர் பெருமான் இருக்கிறார். பாடல் பெற்ற திவ்யதேசம்.

   நீக்கு
  2. திருவல்லிக்கேணி, ஒரே ஒரு திவ்யதேசம். அங்கு ஐந்து தனித் தனிச் சன்னதிகள் உண்டு. அவற்றிலும், தெள்ளியசிங்கர் எனப்படும் நரசிம்மப்பெருமாளுக்கு தனிக் கொடிமரம், கருடர், கோபுரம் உண்டு. எல்லாரையுமே திருமங்கையாழ்வார் தன் பத்துப் பாசுரங்களில் பாடியிருக்கிறார். இருந்தாலும் அது ஒரு திவ்யதேசமாக்க் கொள்ளப்படுகிறது. இதில் உள்ள செய்தி, ஆழ்வார் காலத்துக்கு முன்பே அப்படி இருந்திருக்கிறது என்பதுதான்.

   நீக்கு
  3. திவ்ய தேசம் என்பது ஊரை (அந்த தலத்தை) குறிப்பதல்ல. ஆழ்வார் பாடல் பெற்ற அந்தக் கோயிலை என்று கொண்டால் சரியாக வருமோ?

   நீக்கு
  4. திவ்யதேசக் கோவில். அந்தக் கோவில் அமைந்திருக்கும் ஊர் திவ்யதேசம்

   நீக்கு
 8. கோயில், தெய்வ தரிசனம் என்ற நினைப்பாகவே நாங்களும் இருக்கையில் இடையே இரப்பர் மரங்கள் பக்கம் கண் போவானேன்?.
  இரப்பர் மரங்கள் என்ன ஓடியாப் போகப் போகிறது? தரிசனம் முடிந்து வெளியே வருகையில் இ.மர
  விவரிப்புகளை சாவகாசமாக வைத்துக் கொண்டிருக்காமில்லையா?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவிலுக்குள் செல்வதற்கு முன்னால், வாட்டாற்றில் கால் நனைக்கச் சென்றபோது பார்த்தவை. ஒரு முறை, கிரஹணத்தின்போது காலை ஒன்பது மணிக்குச் சென்றோம். கோவில் மாலையில்தான் திறப்பார்கள், கிஹண நடையடைப்பு என்பதால். நாங்கள் அந்த ஆற்றில் குளித்து, கிரஹண தர்ப்பணம் பண்ணி, நாலு மணி வரை காத்திருந்தோம். ரப்பர் மரங்கள், பாலெடுக்கும் விதம், சற்றுத் தள்ளி இருந்த கடையில் ஏத்தம்பழம், பிறகு பிரகாரங்களில் மற்றவர்கள் ஓய்வெடுக்க, நான் படங்கள் எடுத்தது என நேரம் போனது. அதனால் படத்தை இங்கு பகிர்ந்தேன்.

   நீக்கு
 9. ஆலயம் சென்ற உலா எல்லாம் ஆதி 
  கேசவன் முதற்றே எழுது. 

  பதிலளிநீக்கு
 10. https://www.youtube.com/watch?v=5iTz9yN4v4k

  processing of latex to get rubber sheets

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரப்பர் தோட்டத்தை வைத்து கோடீஸ்வரர்கள் ஆனவர் அனேகர் என்று படித்திருக்கிறேன். காணொளி நன்றாக இருந்தது. கூகுள், யூடியூபில் இல்லாததே கிடையாது போலிருக்கு

   நீக்கு
 11. படங்களை அழகாக வரிசை படுத்தி இருக்கிறீர்கள்.
  விபரங்கள் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கில்லர்ஜி... மதுரைக்குச் சென்றுகொண்டிருக்கிறீர்களே.. அங்கிருக்கும் முக்கியமான கோவில்களைத் தரிசனம் செய்ய நேரம் ஒதுக்குகிறீர்களா?

   நீக்கு
  2. ஆறு மாதமாக நான் கோயிலுக்கு செல்லக்கூடாது டிசம்பர் வரையில்...

   நீக்கு
  3. சிலர், கொடிமரம் உள்ள கோயில்களுக்கு என்பார்கள். சிலர் மலையில் இருக்கும் கோயில்களுக்கு என்பார்கள். கெடு முடிந்தவுடன் நிச்சயம் கோயில் தரிசனம் செய்யுங்கள்

   நீக்கு
 12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 13. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் படங்கள், விவரங்கள் அருமை.

  //ஒவ்வொரு வைணவனும் முடிந்தால் இந்தக் கோவில்களுக்கெல்லாம் யாத்திரை செல்லவேண்டும்... சைவர்கள் பாடல் பெற்ற தலங்களுக்கு யாத்திரை செல்லவேண்டும். //

  நீங்கள் சொல்வது போல நாங்களும் பாடல்பெற்ற வைணவ கோவில்களை, பாடல் பெற்ற சிவன் கோயில்களை தரிசனம் செய்தோம். என் கணவர் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களையும் இறை அருளால் நிறைவு செய்து விட்டார்கள்.
  எனக்கு இன்னும் கொஞ்சம் இருக்கிறது.

  ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் பெரும்பாலும் பார்த்து விட்டார்கள். காஞ்சீபுரத்தில் மூன்று நாள் ஓட்டலில் தங்கி அங்குள்ள திவ்யதேசங்களை பார்த்தோம்.

  நீங்கள் பகிர்ந்த படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  நான் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலை பார்க்கவில்லை உங்கள் பதிவின் மூலம் தரிசனம் செய்து கொண்டேன்.

  சிறு வயதில் ரப்பர் தயாரிப்பு படித்த போது, நாமும் செய்யலாம் ரப்பர் என்று பென்சில் சீவிய மரத்தூள்களை சிரட்டையில் போட்டு பால் ஊற்றி, மரத்தில் கட்டி விளையாடியது நினைவுகளில் வந்து போகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஞ்சீபுரத்தில் மூன்று நாட்கள் தங்கி - மிக நல்லது. இந்தமாதிரி வாய்ப்பெல்லாம் சட்னு கிடைத்துவிடாது.

   பாடல் பெற்ற தலங்களை அரசு சார் நிறைவு செய்தமை, மனதுக்கு நிறைவாக உள்ளது. எப்படி நீங்களும் அவர்கூடச் சென்று நிறைவு செய்யவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.

   கண்டிப்பாக திருவட்டாறு கோவிலை தரிசனம் செய்யுங்கள் கோமதி அரசு மேடம்.

   நீக்கு
  2. சின்ன வயது நினைப்புகளெல்லாம் இப்போ நினைத்தால் சிரிப்பாத்தான் வரும். நானும் பென்சிலைச் சீவி அதனை ஊறவைத்துக் கொதிக்கவைத்தால் ரப்பர் வந்துவிடும் என்று நம்பியிருக்கிறேன். சிகரெட் பாக்கெட்டில் வரும் அலுமினிய ஃபாயில்களைச் சேகரித்து நிறைய சேர்ந்தால் கிலோவிற்கு விற்கலாம் என்று நினைத்திருக்கிறேன். ரயில்வே தண்டவாளத்தில் கிடைக்கும் நிலக்கரியை வீட்டில் சூடாக்கி, அதில் உலோகத்தை வைத்தால் உருகும் என்று நம்பிக்கைகள் விதவிதம்.

   நீக்கு
  3. அவர்கள் கல்லூரி நாளிலிருந்தே பயணத்தில் இருந்தார்கள். குழந்தைகள் பிறப்புக்கு ஊருக்கு போய் இருந்த போது அவர்கள் தனியாக நிறைய கோவில்கள் போனார்கள் நான் போக முடியவில்லை. குழந்தைகளை தூக்கி கொண்டும் நிறைய கோவில் அழைத்து போய் இருக்கிறார்கள்.
   தான் போய் வந்த கோவில் எழுதி வைத்த குறிப்பில் நான் பார்க்காத கோவில்களையும் குறித்து வைத்து இருப்பார்கள்.
   அதை வாய்ப்பு வரும் போது பார்க்கலாம் என்பார்கள்.

   கிடைத்த வரை இறைவன் திருவுள்ளம் என்று நினைத்து கொள்கிறேன். எந்த ஊருக்கு போனாலும் அருகில் இருக்கும் கோவில் போய் விடுவோம்.

   சில கோவில்களுக்கு முன்பு பஸ் வசதி கிடையாது, அதனால் அவர்கள் மட்டும் போய் வருவார்கள். கார் வாங்கிய பின் நிறைய கோவில் பார்த்தோம். சைக்கிளில் பயணம் செய்து இருக்கிறோம் இருவரும். டிவி எஸ் 50 ல் பயணம் செய்து இருக்கிறோம் கோவில்களுக்கு.

   கடமைகள் முடிந்து இருவரும் சேர்ந்து போனது நிறையதான். திவ்ய தேசங்களை முடித்து வைப்பு தளங்கள் என்று சொல்லப்பட்டதை பார்க்க வேண்டும்(நேரில் போகாமல் வேறு கோயில்களில் இருந்து இந்த கோயில் இறைவனை பாடி இருப்பார்கள் நால்வர்கள் ) அதிலும் நிறைய அவர்கள் பார்த்து விட்டார்கள் எனக்காக மறுபடியும் போக ஆசை பட்டார்கள்.

   நீக்கு
  4. சின்ன வயது நினைவுகள் இப்போது நினைத்தால் சிரிப்பு வரும் தான். மயில் இறகு குட்டி போடும் என்று புத்தகத்தில் வைத்தது,
   மழை நாளில் அதிகம் காணப்படும் சிவப்பு கலரில் வெல்வெட் போல இருக்கும் பட்டுப்பூச்சி தீப்பெட்டி பெட்டியில் வைத்து வளர்க்கலாம். என்று தோட்டத்தில் தேடி தேடி சேகரித்தது எல்லாம் மகிழ்வான தருணங்கள்.

   நீக்கு
  5. நான் 6வது படித்தபோது ஜாமெண்ட்ரி பாக்ஸ் முழுவதும் இந்த வெல்வெட் நிற பட்டுப்பூச்சியை அடைத்தது நினைவுக்கு வருகிறது. சின்ன வயதில் என்ன என்னவோ கனவுகள்

   நீக்கு
  6. சேர்ந்து நிறைய கோவில்கள் போயிருக்கீங்களே.... எப்போதுமே வீட்டுத் துணைக்கு வேலைகள் அதிகம். நான் மலைநாடு பாண்டியநாடு திவ்யதேசங்கள், பஞ்சத்வாரகா யாத்திரை போன்றவை, மனைவி இல்லாமலும் ஒரு தடவை சென்றிருக்கிறேன். இப்போகூட மார்ச்சில் திரும்பவும் நான் மட்டும் முக்திநாத் யாத்திரை மேற்கொள்ளலாம் என்று அவள் அனுமதி பெற்றிருக்கிறேன். பார்க்கலாம்...

   நீக்கு
 14. ஆதிகேசவ பெருமாள் தரிசனம் பெற்றோம் படங்கள் விபரணங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 15. அபிஷேகம் கிடையாது:
  பெருமாள் மேனி கடுசர்க்கரைப் பூச்சால் செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு அபிஷேகம் செய்ப்படுவது கிடையாது. அவருக்கு பதிலாக உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
  சுற்றியோடும் ஆற்றின் நடுவே உள்ள இக்கோயிலில் பூசை செய்பவர்கள் பிராமணர்கள் இல்லை.
  போத்திமார்.

  இக்கோயிலின் இன்னொரு தனித்துவம் இங்கு இறைவனுக்குப் பூசனைகள் செய்யும் போத்திமார் ஆவர். அதே போல் திருச்செந்தூர்க் கோயிலிலும் போத்திமார்களே! மூலவருக்கு போத்திமார்கள் கேரள முறைப்படியும், வைதீக தாந்திரீக முறைப்படியும், ஷண்முகருக்கு குமாரதந்திர விதிப்படியும் பூஜை செய்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மலையாள திவ்யதேசக் கோவில்கள், திருவண்பரிசாரம் முதலாக, போத்திமார்கள்தாம் பூசை செய்பவர்கள்.

   நீக்கு
 16. அபிஷேகம் கிடையாது:
  பெருமாள் மேனி கடுசர்க்கரைப் பூச்சால் செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு அபிஷேகம் செய்ப்படுவது கிடையாது. அவருக்கு பதிலாக உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
  சுற்றியோடும் ஆற்றின் நடுவே உள்ள இக்கோயிலில் பூசை செய்பவர்கள் பிராமணர்கள் இல்லை.
  போத்திமார்.

  இக்கோயிலின் இன்னொரு தனித்துவம் இங்கு இறைவனுக்குப் பூசனைகள் செய்யும் போத்திமார் ஆவர். அதே போல் திருச்செந்தூர்க் கோயிலிலும் போத்திமார்களே! மூலவருக்கு போத்திமார்கள் கேரள முறைப்படியும், வைதீக தாந்திரீக முறைப்படியும், ஷண்முகருக்கு குமாரதந்திர விதிப்படியும் பூஜை செய்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறையக் கருத்துச் சொல்லி இருந்ததோடு திருவட்டாறு பதிவுகளின் சுட்டிகளையும் கொடுத்திருந்தேன் அதெல்லாம் காணோம். நேற்று இணைய இணைப்பு விளையாட்டுத் தாங்கலை. அதனாலோ இல்லாட்டி எப்போவும் ப்ளாகர் பண்ணும் அடமோ தெரியலை. :(

   நீக்கு
 17. சைவக்கோயில்கள், வைணவக் கோயில்கள் என்பதெல்லாம் ஒரு அடையாளத்திற்காகவே தவிர வெகுஜன மக்கள் மனதில் எந்த பாகுபாடும் இதில் இருந்தது இல்லை. நான் காஞ்சிபுரத்தில் 20 வருடங்களுக்கு மேலாக வசித்த பேறு பெற்றவன்.
  ஒரு பக்கம் வரதராஜ பெருமாள் கோயில் என்றால் இன்னொரு பக்கம் ஏகாம்பரேஸ்வரர் கோயில். அப்பனுக்கு அருகிலேயே குமரனுக்கும் அன்னை காமாட்சி அம்மனுக்கும் திருக்கோயில்கள். பக்கத்திலேயே சங்கர மடம்.தெருவுக்குத் தெரு சின்னச் சின்ன கோயில்கள். வருடம் பூராவும் ஏதாவது ஓரு கோயில் உற்சவம் இருந்து கொண்டே இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி அல்ல ஜீவி சார். பொதுஜனங்களைப் பற்றி இங்க சொல்லவில்லை. காஞ்சீபுரத்தில் ஜைன காஞ்சி, விஷ்ணு காஞ்சி, சிவ காஞ்சி என்று பல்வேறு பிரிவாக இருந்தன. இன்றைக்கும் தீவிர வைணவர்கள் (என் பார்வை இதில் வேறானது), காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் இருக்கும் திவ்யதேசப் பெருமாளான கள்வரைச் சேவிக்க கோவில் பின்பக்கமாக வருவார்கள், ஒரு கண்ணாடி மூலம் சேவிப்பார்கள்.

   நீக்கு
  2. ஆனால் ஆலயம் என்பது நம் பக்தி உணர்வை எழுப்புவதற்குத்தான் என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை.

   நீக்கு
  3. நான் நாஸூக்காக சொல்லியிருக்கிறேன். இதை விரிவுபடுத்தி சொல்ல வேண்டாமே என்று தான். உங்களுக்குப் புரியும்.

   நீக்கு
  4. ஜீவி சார்... கோயில்பாநகரில் இருபது வருடங்கள் வசித்தீர்களா? கொடுத்துவைத்தவர்.

   நீக்கு
  5. நல்லவேளை நாரீஷு ரம்பா ன்னு சொல்லலையே

   நீக்கு
 18. இப்பொழுதெல்லாம் எல்லாக் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோயிலுக்கு வெளியே வரிசை வரிசையாக டூரிஸ்ட் பஸ்கள். வெள்ளிக்கிழமைகளில் காமாட்சி அம்மன் கோயிலில் கூட்டம் அம்மும்.

  ஞாயிற்று கிழமைகளில் கேட்கவே வேண்டாம். ஜேஜே என்று கூட்டம்.12 மணி வாக்கில் நடை சாத்தி அப்புறம் 4 மணிக்கு மேல் தான் தரிசனம் என்பதால் மதிய உணவு, சிற்றுண்டி என்று உணவகங்கள் உட்கார இடமில்லாமல் நிரம்பி வழிகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது மட்டுமல்ல...கோவில்களிலேயே தனிச்சிறப்பு வாய்ந்த பிரசாத ஸ்டால்கள். சாம்பார் சட்னி மாத்திரம்தான் கொடுப்பதில்லை.

   நீக்கு
 19. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளின் தரிசனம் ...மிக அருமை ..

  அருள்பெறுவார் அடியார் தம்* அடியனேற்கு* ஆழியான்-
  அருள்தருவான் அமைகின்றான்* அதுநமது விதிவகையே*
  இருள்தருமா ஞாலத்துள்* இனிப்பிறவி யான்வேண்டேன்*
  மருள்ஒழி நீமடநெஞ்சே!* வாட்டாற்றான் அடிவணங்கே. (2)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!