திங்கள், 19 செப்டம்பர், 2022

"திங்க"க்கிழமை : பருப்புருண்டைக் குழம்பு - மனோ சாமிநாதன் ரெஸிபி

 பருப்பு உருண்டைக்குழம்பு

மிகப் பழமையான குழம்பு இது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள்.  கிராமத்துக்குழம்பு என்று சொல்லலாம். சுடச்சுட சாதத்துக்கு ஊற்றி சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் மிகச் சுவையான பக்கத்துணை. இதைச் செய்த அன்றே சாப்பிடுவதைக்காட்டிலும் மறு நாள் காலை பழைய சோற்றில் தண்ணீரை வடித்து உப்பும் கட்டித்தயிரும் போட்டுப்பிசைந்து
இந்த உருண்டைகளையும் குழம்பையும் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது அத்தனை ருசி! கொதிக்கும் குழம்பில் உருண்டைகளைப்போட்டு வேக வைப்பது ஒரு கலை. ரொம்ப பேர் முதலில் ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொன்டு பிறகு குழம்பு கொதிக்கும்போது போடுவார்கள். அது
அத்தனை சுவையாக இருக்காது. என் மாமியார், அம்மா இருவருமே தேங்காய்த்துருவலை உருண்டையில் சேர்ப்பார்கள். சமயத்தில் கெட்டுப்போக வாய்ப்பு என்பதால் நான் சேர்ப்பதில்லை. குழம்புக்கு உபயோகித்த உருண்டைகள் போக, மீதமுள்ள உருண்டைகளை வடைகளாகத்தட்டி எண்ணெயில் போட்டெடுப்பது வழக்கம். தொட்டுக்கொள்ள இந்த
வடைகளும் பொரித்த அப்பளங்களும் மட்டும் தான்!. என் மாமியார் வீட்டில் இந்த வடைகளையும் குழம்பில் போடுவார்க‌ள். இனி சமையலுக்குச் செல்லலாம்!

பருப்பு உருண்டைக்குழம்பு

தேவையான பொருள்கள்:

உருண்டைக்கு:

துவரம்பருப்பு 2 கப்

கடலைப்பருப்பு 2 கைப்பிடி

சோம்பு 11/2 ஸ்பூன்

மெல்லியதாக அரிந்த வெங்காயம் 2

சிறு துண்டுகளாக நறுக்கிய பூண்டிதழ்கள் 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை,

அரிந்த கொத்தமல்லி 2 மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் அரை ஸ்பூன்

தேவையான உப்பு

குழம்பிற்கு:

புளி 2 பெரிய எலுமிச்சம்பழம் அளவு

மிளகாய்த்தூள் 2 மேசைக்கரண்டி குவியலாக‌

கொத்தமல்லித்தூள் 3 மேசைக்கரண்டி குவியலாக‌

மஞ்சள் தூள் அரை ஸ்பூன்

தேவையான உப்பும் நல்லெண்ணையும்

வெந்தயப்பொடி 2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் 2 கைப்பிடி

மசித்த தக்காளி 1 க‌ப்

கறிவேப்பிலை 2 ஆர்க்

முருங்கைக்காய் 2

பெருங்காயத்தூள் அரை ஸ்பூன்

செய்முறை:

முதலில் உருண்டைக்கு வரலாம். இரண்டு பருப்பு வகைக‌ளையும் போதுமான நீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.பின் நீரை வடித்து உப்பு, சோம்பு சேர்த்து வடைக்கு அரைப்பது போல கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதில் ஒரு கைப்பிடி மட்டும் ஒன்று பாதியாக அரைக்கவும். மாவு முழுவதையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தூள்கள், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, மல்லி சேர்த்து நன்கு பிசைந்து பெரிய எலுமிச்சம்பழ அளவு உருண்டைகள் உருட்டி வைக்கவும்.


வடைகளாக பொரித்து எடுப்பதற்கு சில உருண்டைகளை எடுத்து வைத்துக்கொள்ளவும்.


புளியை போதுமான சுடுநீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.ஒரு அகன்ற வாணலியில் நல்லெண்ணையை சற்று தாராளமாக ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயங்களைப்போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்கு குழைந்து மேலே எண்ணெய் தெளியும் வரை வதக்கவும்.  வெந்தயப்பொடியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். புளி நீர், தூள்கள் உப்பு சேர்த்து
தேவையான நீர் சேர்த்துக் கலக்கவும். குழம்பு சற்று தண்ணீராகவே இருப்பது நல்லது.

உருண்டைகள் போடப் போட குழம்பு கெட்டியாகிக்கொண்டே வரும். இப்போது
குழம்புக்கரைசலில் முருங்கைக்காய்த்துண்டுகளைப்போட்டு கொதிக்க விடவும். இரண்டு கொதி கொதித்ததும் நான்கு உருண்டைகளைப்போடவும்.


சிறிது நேரத்தில் அவை வெந்து மேலே வந்து மிதக்கும். அப்போது மறுபடியும் நான்கு உருண்டைகளைப்போடவும். இப்படியாக உருண்டைகள் முழுவதும் போட்டு அவை வெந்து வருவதற்குள் முருங்கைக்காய் துண்டுகளும் வெந்து குழம்பும் பதமாக எடுத்து ஊற்றும் தன்மைக்கு வந்திருக்கும்.

அடுப்பை சிம்மில் வைத்து 1 கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி ஐந்து நிமிடம் வைத்திருக்கவும்.  சுவையான பருப்பு உருண்டைக்குழம்பு தயார்!


இப்போது வடைகளுக்கான உருண்டைகளை வடைகளாககத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.



34 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைய வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. எனக்கு மிகவும் பிடித்தமான குழம்பு இது. நீங்கள் சொல்வது போல் மறுதினம் இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு மிகவும் பிடித்தமான குழம்பு உங்களுக்கும் பிடித்தமானதாக இருப்பது மகிழ்ச்சியைத்தருகிறது கில்லர்ஜி! இனிய பின்னோட்டத்திற்கு அன்பு நன்றி!

      நீக்கு
  3. இன்னுமொரு இனிய பொழுது..

    நாளும் பொழுதும் வாழ்க..
    நலமும் வளமும்
    வாழ்க...

    பதிலளிநீக்கு
  4. பாரம்பரிய தஞ்சாவூர் கைப்பக்குவம்..

    என் அம்மா இப்படிப் பொரித்து எடுக்காமல் இட்லி தட்டில் வைத்து அவித்து குழம்பில் இடுவார்கள்..

    இளந்தேங்காயாக இல்லாமல் அரைத் தேங்காயாகக் கிடைக்கும் போது கால் மூடியைத் துருவி அரைத்து ஊற்றிச் செய்வதும் உண்டு...

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரி தான்! பெரும்பாலும் தஞ்சாவூர் பக்கம் குழம்புகளில் தேங்காய் அரைத்து சேர்ப்பார்கள். நான் சேர்ப்பதில்லை.
      இனிய பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவாக பருப்பு உருண்டை குழம்பை அழகான படங்களுடன் அருமையான செய்முறை விளக்கங்களுடன் இங்கு பகிர்ந்து கொண்ட சகோதரி மனோ சுவாமிநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    நானும் இப்படித்தான் உருண்டைகளை நேரடியாகவே குழம்பில் சேர்ப்பேன். அதனோடு வெந்து வரும் போது புளி, உப்பு காரமென எல்லாம் சமமாக உருண்டைகளில் சேர்ந்து சுவையாக இருக்கும். சாம்பார் சாதத்திற்கு அன்று தொட்டுக் கொள்ள அந்த உருண்டைகளே போதுமானதாக எண்ணம் வரும்.

    இதில் பூண்டு, வெங்காயம் மட்டும் நான் இதுவரை சேர்த்ததில்லை. அவைகள் பருப்பின் இயல்பான சுவையை மாறுபடுத்தி காண்பிக்குமோ என்ற ஐயம் எனக்குண்டு. இனி இப்போது ஒருமுறை இவ்விதமும் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  7. இன்றைக்கு என்னுடைய சமையல் குறிப்பை இங்கே வெளியிட்டிருப்பதற்கு சகோதரர் ஸ்ரீராமிற்கு என் அன்பு நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன். இப்போது இங்கே காலை நேரம் 5.45. வேலைகளை முடித்து விட்டு பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. வாருங்கள் கமலா ஹரிஹரன்! உங்கள் விரிவான கருத்துரை மகிழ்வை அளிக்கிறது.
    குழம்பில் பருப்பு நிறைய இருப்பதால் பூண்டு வாயுவை அகற்றுமென்ற காரணத்தால் இந்தக்குழம்பில் பூண்டு சேர்ப்பது வழக்கம். அது சுவையையும் கூட்டும்.
    வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. இந்தக் குழம்பு எனக்கு மிகவும் பிடித்தமானது.

    அன்று தயிர் சாத்த்துக்கு உருண்டைகளைத் தொட்டுக்கொள்வேன்.

    செய்யும் வித்த்தில், சோம்பு, வெங், பூண்டு, முருங்கை சேர்ப்பதில்லை. அரைத்ததைச் சிறிது வாணலியில் கடுகு தாளித்துக் கிளறிவிட்டு, சிறிது ஆறவைத்து உருண்டைகள் பிடிப்பேன்.

    பதிலளிநீக்கு
  10. பூண்டிற்கு மாற்றாக பெருங்காயம் சேர்ப்போம்.

    பதிலளிநீக்கு
  11. பருப்பு உருண்டைக் குழம்பில் முருங்கைக்காய் சேர்ப்பது சும்மா ஒரு இதுக்குத் தான்..

    தஞ்சை மாவட்டத்தில் முருங்கைக்காய்க்கு பஞ்சமில்லை என்பதால் மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது குழம்பிற்கு வந்து விடும்..

    இப்போதெல்லாம் இங்கே வீட்டில் பருப்பு அரைத்த விழுதுடன் முருங்கைக் கீரையை உருவிப் போட்டு உருண்டைகளாக்கி குழம்பு வைக்கப்படுகின்றது..

    முருங்கைக் கீரை மட்டுமின்றி வேறு கீரைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.. நீர்ச் சத்து அதிகம் உள்ளவை எனில் கவனமாக இருக்க வேண்டும்..

    உருண்டை இளகி குழம்பில் கரைந்து விடும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் போல் அரிசி மாவு சேர்த்துக்கொண்டால் உருண்டைஉடையாது.

      நீக்கு
  12. இந்தக் குழம்பு எனக்கு மிகவும் பிடித்தமானது. இந்த குழம்பு செய்யும் போது தொட்டுக் கொள்ள சைடிசாக எந்தக் காயும் செய்ய வேண்டியதில்லை.. நான் சுட்ட அப்பளத்துடன் இந்த குழம்பை சாததுடன் நன்றாக பிசைந்து ச்சாப்பிடுவேன்

    பதிலளிநீக்கு
  13. வாருங்கள் நெல்லைத்தமிழன்!
    வெங்காயம், பூண்டு சேர்க்காதவர்கள் நீங்கள் சொல்கிற படி தான் செய்வது வழக்கம். சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதைக்காட்டிலும் என்னுடைய ஓட்டு எப்போதும் தயிர் சாதத்துக்குத்தான்! அதுவும் மறு நாள் தண்ணீர் ஊற்றிய சாதத்தில் தயிர், உப்பு போட்டு பிசைந்து இந்த உருண்டைகள் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது மிகவும் ருசியாக இருக்கும்!
    கருத்துரைக்கு அன்பு நன்றி!

    பதிலளிநீக்கு
  14. சகோதரர் துரை செல்வராஜ் சொல்வது போல தஞ்சாவூரில் முருங்கைக்காய்களுக்கு எப்போதும் பஞ்சமில்லை! முருங்கைக்காய் சேர்ப்பது அதிக சுவைக்காகவும் கமகமவென்ற மணத்துக்காகவும் தான்!

    பதிலளிநீக்கு
  15. பருப்பு உருண்டைக்குழம்பு பார்க்கவே அருமையாக இருக்கிறது.
    முருங்கைக்காய் போட்டு செய்தது இல்லை. வடையும் நன்றாக இருக்கிறது.
    படங்களும், செய்முறை குறிப்பும் அருமை.

    பதிலளிநீக்கு
  16. பருப்பு உருண்டைக்குழம்பு பண்ணினாலும் சரி, மோர்க்குழம்பில் உருண்டைகளைப் போட்டாலும் சரி. நேரடியாகவே போட்டுத்தான் பழக்கம். ஆவியில் வேக வைப்பதில்லை. அதே போல் குழம்பில் வெங்காயம், பூண்டு, சோம்பு, தக்காளி, முருங்கைக்காய் சேர்ப்பதில்லை. பருப்புக்களை அரைக்கையில் கூட மி.வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைச்சுப்பேன். குழம்பில் பொடிகளைத் தனித்தனியாகப் போடாமல் குழம்புப் பொடி போட்டுப் பண்ணிடுவேன். நீர்க்கத் தான் பண்ணணும் இந்தக் குழம்பை.

    பதிலளிநீக்கு
  17. மோர்க்குழம்பில் போட்டாலும் மோரை நீர்க்கக் கரைத்துக் கொண்டு முதலில் அதில் உருண்டைகளைப் போட்டு வெந்ததும் அரைத்துக் கரைத்து வைத்திருக்கும் மோர்க்கலவையைச் சேர்த்து ஒரு கொதி விடுவோம். இதிலேயும் சோம்பு இன்ன பிற பொருட்கள் இல்லை.

    பதிலளிநீக்கு
  18. பருப்பு உசிலிக்கே வெங்காயம் போட்டு வதக்குவது உண்டு. முருங்கைக்கீரை அல்லது மற்றக் கீரைகளில் உசிலி பண்ணினால் பருப்பு அரைத்த கலவையோடு கீரையைக் கலந்து இட்லித்தட்டில் ஒரு வேக்காடு கொடுத்துப் பின்னரே உதிர்த்துக் கிளறினால் நன்றாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதே காய்களில் பண்ணினால் காயை மட்டும் தனியாக உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேகவைத்து வடிகட்டிக் கொண்டு அரைத்த பருப்புக்கலவையை எண்ணெய் விட்டுத் தாளித்துக் கொண்டு அதிலேயே போட்டு உசிலித்த பின்னர் நன்றாக உதிர் உதிராக ஆனதும் காய்களைச் சேர்த்து அதிகம் கிளறாமல் கலந்து விட்டு எடுத்துடலாம்.

    பதிலளிநீக்கு
  19. நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்னொரு சிநேகிதியின் பெயரில் திங்கட்கிழமைப் பதிவைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. வாருங்கள் கீதா! நீங்கள் தெரிவித்திருக்கும் விஷயங்கள் எல்லாம் எப்போதும் போல சுவாரஸ்யமாக இருந்தது. மோர்க்குழம்பு செய்யும்போது உங்களைப்போலத்தான் சோம்பு, வெங்காயம், பூண்டு சேர்க்காமல் செய்வேன். இந்த பருப்பு உருண்டைக்குழம்பு என் அம்மா, மாமியாரின் பாணி. அவர்கள் தேங்காய் அரைத்து ஊற்றுவார்கள் குழம்பில். நான் சேர்ப்பதில்லை. சகோதரர் துரை. செல்வராஜ் சொல்வது போல, உருண்டையில் முருங்கைக்கீரையை சேர்த்து செய்வதும் நன்றாகத்தானிருக்கிறது! அது போல ஒரு முறை செய்து பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உருண்டையில் முருங்கைக்கீரையை சேர்த்து செய்வதும் நன்றாகத்தானிருக்கிறது! அது போல ஒரு முறை செய்து பார்க்க வேண்டும்!..//

      என்ன கொஞ்சம் வேலை அதிகம்.. ரெண்டு ஆளாக இருந்து செய்தால் கைக்கு வசதியாக இருக்கும்..

      முருங்கைக் கீரை இரும்புச் சத்து நிறைந்தது.. அதற்காகத் தான்..

      நீக்கு
    2. நான் பெரும்பாலும் முதல் நாளே கீரை, கொத்தவரை, பீன்ஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு வகையறாக்களைத் தயார் செய்து கொள்வேன். இப்போது பெரும்பாலும் நாங்க இருவர் தானே. அதனால் சில சமயங்கள் காலையிலேயும் நறுக்கிப்பேன். சீக்கிரம் ஆகிவிடும்.

      நீக்கு
  21. மனோ அக்கா உங்கள் ரெசிப்பி அருமை. படங்களும் நன்றாக வந்திருக்கின்றன.

    பெரும்பாலும் நம் வீடுகளில் பருப்புருண்டைக் குழம்பில் வெங்காயம் பூண்டு சோம்பு சேர்த்து செய்ததில்லை ஆனால் நம் வீட்டில் நீங்கள் செய்திருப்பது போல் செய்வதுண்டு. ஒரு தோழியிடம் தெரிந்துகொண்டதுதான். முருங்கைக்காய் சேர்த்ததில்லை. உருண்டையில் கீரைகள் குறிப்பாக வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை சேர்த்ததுண்டு. உங்கள் அளவுகளையும் குறித்துக் கொண்டிருக்கிறேன் மனோ அக்கா.

    நேற்று கூட இங்கு பருப்பு உருண்டைக் குழம்புதான் ஆனால் வெங்காயம் பூண்டு சோம்பு இல்லாமல்.

    மிக்க நன்றி மனோ அக்கா உங்கள் குறிப்பை இங்கு பார்த்தற்கு.

    இண்டஸ்லேடீசில் அப்போது உங்கள் குறிப்புகளைப் பார்த்ததுண்டு கருத்து எல்லாம் பகிர்ந்து கொண்டு 2010-2011?

    கீதா

    பதிலளிநீக்கு
  22. பருப்பு உருண்டை குழம்பு பார்க்கவே நன்றாக இருக்கிறது படங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  23. சுவையான குழம்பு ....நாங்களும் இந்த முறையில் தான் செய்வது ...சில நேரம் தேங்காய் அரைத்தும் சேர்ப்பது உண்டு ...

    பார்க்கவே மீண்டும் செய்யும் ஆவல் வருகிறது

    பதிலளிநீக்கு
  24. பூண்டு வெங்காயம் சேர்ப்பதில்லை.இதுவும் அருமைதான். நல்ல பதிவு. படங்களும் ஸூப்பர். ருசி. அன்புடன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!