வியாழன், 22 செப்டம்பர், 2022

கலைஞரா, கர்மவீரரா?

 மீண்டும் ஒரு பட விமர்சனத்தோடு வந்திருக்கிறேன்.  தவிர்க்க முடியாமல். 

இரண்டாவது வாரமும் இப்படி விமரிசனம் ஒன்று எழுதுவது என்பது எனக்குப் பிடித்தமானது அல்ல.  எனினும் இந்தப் படம் என்னை எழுத வைத்திருக்கிறது.


ஒரு கடினமான - மிகக்கடினமான - வேலையை முடிக்க முடியாது என்ற நிலையிலிருந்து எப்படியோ முடித்து விடுகிறீர்கள்.  எப்படி உணர்வீர்கள்?  அதுவும் அது பலபேர் உயிரைக் காப்பாற்றிய வகையில் சம்பந்தப்பட்டதாயிருந்தால் எவ்வளவு பாராட்டு கிடைக்கும்?


ஆனால் அதே சமயம் உங்களுக்கு அதே செயலுக்கு ஆப்பு வந்தால்...?


ஒரு செயல் நடந்து முடியும்போது நாம் பார்க்கும் கோணம் ஒன்றுதான்.  சம்பந்தப்பட்டவர்களுக்கோ, அல்லத பாதிக்கப்பட்டவர்களுக்கோ அதன் மறுபக்கம் அல்லது கோணம் தெரியலாம்.  அது வெளிப்படும் போது ஆச்சர்யமாக இருக்கும்.

மிகத் திறமையாக பின்னப்பட்ட ஒரு கதை.  நாயகனும் எதிர் நாயகனும் (கவனியுங்கள்..  வில்லன் அல்ல) கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் உடையவர்கள்.   வெற்றி தோல்வி யார் பக்கம் என்பது கடைசி வரை நிச்சயமில்லாத விளையாட்டு 

2015 ல் தோஹாவிலிருந்து கொச்சிக்கு வந்த ஒரு பிளைட்டுக்கு ஏற்பட்ட கதி பற்றிய படம்.

விக்ராந்த் கன்னா விமானம் ஓட்டுவதில் பிஸ்தா.  அவரது ரெக்கார்டுகளுக்கு ரசிகர் கூட்டமே உண்டு.   மறுநாள் பிளைட்டை ஓட்டவேண்டிய பைலட் முதல் நாள் இரவு முழுவதும் குடி கூத்து என்று பார்ட்டியில்.  அதில் ஒரு பெண்ணை கரெக்ட் செய்ய முடியுமா என்கிற போட்டி வேறு.

அந்தப் பெண்ணும் பின்னால் சாட்சி சொல்ல வருகிறார்!


மறுநாள் மாலை விமானத்தை ஓட்ட வரும் விக்ராந்த் கலங்கலாக இருக்கிறார்.  (அந்த நடிகர் பார்ப்பதற்கு எப்போதுமே அப்படிதான் இருப்பார் என்பது வேறு விஷயம்)

அவருடன் பயணிக்கும் கோ பைலட் தான்யா அல்பகர்க்கி (விக்ராந்த் அவரை அல்பகர்க் என்று உச்சரித்து அழைக்க அவர் அல்பகர்க்கி என்று திருத்துவது சுவாரஸ்யம்.   அதையே நாராயண் வேதாந்த் திடமும் சொல்வதும் சுவாரஸ்யம்.)  தான்யாவுக்கும் விக்ராந்த் ஆராதிக்கும் ஹீரோதான்.

எல்லாம் சுபமாகத்தான் போகிறது.  இறங்கும் தருணம் பிரச்னை வருகிறது.  கொச்சியில் புயல், மழை.  இறங்க முடியாது.  இருக்கும் எரிபொருளை உபயோகித்து பெங்களூரு சென்று இறங்கி விடலாம் என்பது கோ பைலட் தான்யா அபிப்ராயம்.  திருவனந்தபுரத்தில் இறங்கலாம் என்பது விக்ராந்த் அபிப்ராயம்.  கொச்சியிலேயே இரண்டு மூன்று முறை Force Landing முயற்சிப்பதில் எரிபொருள் குறைகிறது.  கொச்சியில் மோசமான வானிலை என்றால் திருவனந்தபுரத்திலும் அப்படிதான் இருக்கும் என்பது தான்யா அபிப்ராயம்.  அது உண்மையும் கூட.   ஆனால் விக்ராந்தின் பிடிவாதம் வெல்கிறது.

திருவனந்தபுரத்தில் நிலைமை மோசம் என்று அறிவிக்கும் வானிலை அதிகாரிக்கு மன உளைச்சல் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போக, அவரை இருக்கைமாற்றும் தருணம் 'அங்கும் நிலைமை மோசம் இங்கு இறங்க வேண்டாம்' என்கிற தகவல் விக்ராந்த், தான்யாவுக்கு தெரிவிக்கப்பபடாமலே போகிறது.

எரிபொருள் குறைவாகி விட்டதால் அங்கு இறங்கியே ஆகவேண்டிய கட்டாயம்.  விக்ராந்த் 'கண்ணை மூடிக்கொண்டு' விமானத்தை இ(ற)யக்குகிறார்.

திகில் மற்றும் கலவரத்தால் பீடிக்கப்படும் நிலைய அதிகாரிகள் விக்ராந்தை இறங்கச்சொல்லும் ரன்வேயை விடுத்து அவன் 34 ஐ தேர்ந்தெடுக்கிறான்.

ஏகப்பட்ட சிரமங்களுக்குப் பின் விக்ராந்த் வெற்றிகரமாக விமானத்தை தத்தித்தத்தி தரையிறக்கியும் விடுகிறான்.  எல்லோரும் நலம்.  ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் ஒரு மூதாட்டி மட்டும் ஹார்ட் அட்டாக்கில் மரணம்.  வெளியில் வரும் விக்ராந்த், தான்யாவுக்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என அவனைப் போலவே நாமும் எதிர்பார்க்க, 

இருவரும் கைது செய்யப்படுகிறார்கள்.

வருகிறார் எதிர் ஹீரோ நாராயண் வேதாந்த் விசாரணை செய்ய.   அவர் பயங்கர புத்திசாலி.குறுக்கு கேள்விகளில் புலி.  அவரது அணுகுமுறையே வித்தியாசமாக இருக்கும்.


அவர் விசாரணைக்கு ஏற்ற வகையில் பதில் சொல்கிறார் விக்ராந்த்.  தப்பித்து விட்டார் விக்ராந்த் என்று நினைக்கும்போது வேதாந்த் தான்யாவிடம் விசாரணைக்கு வருகிறார்.  நிலைமை மாறுகிறது.  குற்றவாளியாகிறார் ஹீரோ விக்ராந்த்.

விசாரணையின் விளைவாக விக்ராந்த் வெளிநாட்டில் வேறு ஒரு பெண்ணுடன் கூத்தடித்த விவரம் அவன் மனைவிக்கும் தெரிகிறது.  இறந்த மூதாட்டியின் நினைவு விக்ராந்தை கொல்கிறது.

முதல் பாதி ஆங்கிலப்படங்கள் போல ஆபத்தில் விமானம் தரை இறங்கும் காட்சி என்றால், இரண்டாவது பாதியில் அமிதாப்பின் குறுக்கு விசாரணையும் அஜய் தேவ்கனின் டிஃபன்சும்.  ஒருநாள் மேட்ச் போல யார் ஜெயிப்பார்கள் என்று மாறி மாறி வரும் நிலைமை கடைசியில் என்ன ஆகிறது என்று கதை.

அமேசான் பிரைமில் இருக்கிறது. நம்பிப் பார்க்கலாம்.

================================================================================================================

காமராஜரைவிட சிறந்தவர் கலைஞர் 

பெருந்தலைவர் காமராசருக்கு அடுத்தபடியாக பின்னணி (சாதி செல்வம் குடும்ப பரம்பரை, அல்லது வழி மரபு முதலிய) பலம் ஏதுமில்லா நிலையில் இயற்கை நுண் அறிவுத் திறத்தாலும் ஓயாத உழைப்பாலும் மக்களின் - இனத் தெய்வமாய் உருவானவர் டாக்டர் கலைஞர்.  இவ்வாறு ஒருவர் உருவாவது அவர் கையிலும் இல்லை.  இயற்கையின் கையிலே -உறவுடைய பலர் கையிலேயே -  உள்ளது எனலாம்.


 பெருந்தலைவர் காமராசருக்கும் அருந்தலைவர் கலைஞருக்கும் உள்ள இரு பெரும் வேறுபாடுகள் நூல் அறிவும் நாவன்மையும் (நாவமைக்குக் கருத்தாற்றலும் கற்பனை ஆற்றலும் கட்டாயம்).  இந்த இரண்டும் டாக்டர் கலைஞருக்கு தமிழ் மக்கள் செய்த தவத்தால் வாய்ந்தமையால் தலைவர் கலைஞர் மணமுடைய பொன்மலராய் விளங்குகிறார்.  மணம் வீசுகிறார்  ஆட்சி செயலாற்றலில் அட்மினிஸ்ட்ரேட் எபிலிட்டி ஸ்கில் தொண்டார் தொண்டில் - இருவரும் ஒருவரே. 

 நுண்ணறிவும் நூல் அறிவும் இன்டெலிஜென்ஸ் காமன்சன்ஸ் இருவரும் ஒருவரே.

 திருவள்ளுவர் இரு கண்களென போற்றிய நுண்ணறிவும் நூல் அறிவும் செயலாற்றலும் கண்டிப்பம் கருணையும் அடக்கமும் அறிவாயவும் ஒருங்கே படைத்தவர் தலைவர் கலைஞர்.  இப்பண்புகள் இன்றைக்கும் அவரிடம் வளர்பிறையாய் வளர்ந்து வருவது தமிழினம் - ஏன், பாரதம் செய்த பெரும்பேறு.  இதை உணராதவர்உலராதவர்!  ஈரம்!


எதிரொலி கலைஞர் பொதுவாழ்வு பொன்விழா மலரில் வெளிவந்த கட்டுரை - 1988

===========================================================================================================

திரு ஆர். கந்தசாமி பேஸ்புக்கில் பகிர்ந்திருப்பது...  நிறைய சுவாரஸ்யமான இலக்கிய, சினிமா துணுக்குகள் எக்கச்சக்கமாய் தினந்தோறும் பகிர்கிறார் இவர்.

இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் வேண்டுகோளின் பேரில் நான் ஒரு விளம்பர சுற்றுப்பயணத்தில் சிங்கப்பூர் செல்ல வேண்டியிருந்தது. எம்.எஸ்.வி யின் குடும்பம் எங்களுடன் வந்தது. நான் பல படங்களில் நடித்திருந்தாலும், அடிப்படையில் நான் ஒரு கூச்ச சுபாவமுள்ளவள். நான் மக்களுடன் உரையாற்ற வேண்டியிருக்கும் போது நான் பதற்றமடைகிறேன். நான் நிறைய பேருக்கு முன் நடனமாட வேண்டுமானால் எனக்கு மேடையில் ஏற பயம் உருவாகிறது.  ’நான் நடனமாடக் கேட்க மாட்டேன்’ என்ற நிபந்தனையின் பேரில் மட்டுமே எம்.எஸ்.வி அவர்களின் அமைப்புடன் வர ஒப்புக்கொண்டேன். சிங்கப்பூரில் நடந்த ஒரு விழாவில், பார்வையாளர்களுக்கு என்னை அறிமுகப்படுத்திய பொழுது, நான் ’நமஸ்காரம்’ என்று கூறிவிட்டு மேடையை விட்டு வெளியேறினேன், ஆனால் மக்கள் என்னை ஆட வேண்டும் என்று கூச்சலிட ஆரம்பித்தனர். அன்று என்னை காவல்துறையினர் பாதுகாப்பாக அறைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் எம்.எஸ்.வி, என் அறைக்கு வந்து என்னிடம் சொன்னார், நான் அவர்களுக்கு முன் நடனமாடாவிட்டால் எனது ரசிகர்கள் நிகழ்ச்சியை தொடர விடமாட்டார்கள். அவர் என்னிடம் நடனமாடும்படிக் கேட்டார். நான் மறுத்துவிட்டேன். அடுத்த நாள், என்னிடம் கூட சொல்லாமல் தனியாக விட்டுவிட்டு எம்.எஸ்.வி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவுக்குப் புறப்பட்டனர், எம்.எஸ்.வி போன்ற ஒரு மூத்த, மரியாதைக்குரிய நபரின் செயலில் இது மிகவும் பொறுப்பற்ற நடத்தை என்று நான் நினைக்கிறேன். ஒரு பெண்ணை தனியாக ஒரு புதிய நாட்டில் விட்டு விட்டார்கள். எப்படியாவது எனது பாஸ்போர்ட்டைத் திருப்பித் தருமாறு பயணத்தின் அமைப்பாளர்களை வற்புறுத்தினேன், நானும் மெட்ராஸுக்கு பறந்தேன்.

விமான நிலையத்தில், (customs )சுங்கத்துறை அதிகாரிகளால் நான் சோதனைக்கு உள்ளானேன். எனக்காக நான் கொண்டு வந்த சில பொருட்களுக்கு நான் ஒரு சிறிய தொகையை செலுத்த வேண்டியிருந்தது. பின்னர் தான் சில மேல் அதிகாரிகள் என்னைச் சோதனையிட வருகிறார்கள். அவர்களில் ஆறு பேர் சிபிஐயிலிருந்து வந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் எனது உடைமைகள் எல்லாவற்றையும் தேடி, பின்னர் மன்னிப்பு கேட்டு வெளியேறினர். நான் எதையாவது கடத்துகிறேன் என்ற தகவல் தங்களுக்கு கிடைத்ததாக அவர்கள் கூறினர். இதுபோன்ற தகவல்களை யார் கொடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்குப் பிறகு அந்த வழக்கு என்ன ஆனது என்பதும் எனக்குத் தெரியவில்லை.

- சில்க் ஸ்மிதா நேர்காணலில் சொன்னது 

பேசாமொழி.காம்

========================================================================================================

சாப்பிடும் முறை....

'வேளா வேளைக்குச் சாப்பிடாமல், பசி எடுக்கும் போது மட்டும் உணவு அருந்தி வந்தால், ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்,'' என்கிறார், இயற்கை மருத்துவர் திவ்யா பிரியதர்ஷினி.

அவர் கூறியதாவது:உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சினைப்பை நீர்க்கட்டி போன்ற வாழ்க்கை முறைகளால் வரும் நோய்களுடன் வருவோரிடம், அவர்களின் உணவு, பழக்கவழக்கம், வேலை போன்ற தினசரி நடவடிக்கைகளை கேட்டறிந்து, அதற்கேற்றாற்போல, உணவு முறைகளை பின்பற்ற அறிவுறுத்துகிறோம்.உடற்பருமன் பிரச்னைக்கு, அதற்கு மட்டுமன்றி, முழு உடலுக்குமே சிகிச்சை அளிக்கப்படும்.

இதனால், உடற்பருமன் சார்ந்த பல்வேறு நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும்.அலோபதி மருந்து சாப்பிடுவோர், அந்த மாத்திரைகளைத் தவிர்த்துவிட்டு, இயற்கை மருத்துவத்தைப் பின்பற்ற தயங்குவர். அவர்களை, அலோபதி மருந்து உட்கொண்டபடியே, இயற்கை மருத்துவத்தை பின்பற்ற ஆலோசனை வழங்குவோம். காலப்போக்கில், இயற்கை மருத்துவத்தின் மீது நம்பிக்கை அதிகரித்து, ஆங்கில மாத்திரைகளை தவிர்த்து விடுவர். நேச்சுரோபதியின் தத்துவமே, உடல்மொழியைக் கேளுங்கள் என்பதுதான்.உதாரணமாக, நேரத்துக்கு சாப்பிடாதீர்கள் என்கிறோம்.

உணவு இடைவேளை என்பதற்காக உண்ணக்கூடாது. பசித்தால் மட்டுமே உண்ண வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு சாப்பிட்டுப் பழகிவிட்டு, அதே நேரத்துக்கு பசித்தால், அது உளவியல் சார்ந்த பசி. அதைத்தவிர்த்து, ஏற்கெனவே உண்ட உணவு செரித்து, உடலியல் ரீதியான பசி எடுக்கும்போதுதான், உண்ண வேண்டும்.துாக்கம், பசி, தாகம், ஓய்வு என்ற உடலின் நான்கு மொழிகளை கவனித்துப் புரிந்து, தேவையானதைக் கொடுத்து வந்தால், உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.மனச்சிக்கல் இன்றி உறங்கி, மலச்சிக்கல் இன்றி விடிந்தால், ஆரோக்கியத்துக்கு ஒருபோதும் குறையிருக்காது.

தண்ணீரை அமர்ந்து, நிதானமாக அருந்த வேண்டும்; அவசரமாக அருந்தக் கூடாது. இயற்கை மருத்துவம் என்பது, வாழ்வியல் நடைமுறை, உணவு மாற்றம், யோகா என, பக்கவிளைவுகளற்ற வகையில் சிகிச்சை அளிப்பதுதான். இதை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலின் மொழியைக் கேட்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

=================================================================================================================================

ராஜாஜியைப் பற்றி இந்த வாரமும் ஒரு (குட்டிச்) செய்தி...


===========================================================================================================

'கோரா'விலிருந்து ரசித்த படம் ஒன்று..


===================================================================================================




ஒரு காக்கையோ குருவியோ
குரல் கொடுத்து இந்த
மௌனத்தைக்
கலைக்காதா என்ன?
ஒரு மேகம் திரண்டு
மழை பொழிந்து விடாதா என்ன? 
 Sep 12, 2014

===============================================================================================================

பொக்கிஷம் பக்கம் போகலாமா...


முகத்தை வைத்தான் மூக்கை வைத்தான் நாக்கை வைத்தான் தாடியால் அனைத்தையும் மறைத்தான்!

இரு வாரங்களுக்கு முன் கச்சேரியில் பாடகர் செய்யும் சேஷ்டை பற்றி கேள்வி வந்தததாய் நினைவு!

தலை வைத்தான்.. முடியை வளர்த்தான்.. ஸ்டைலை வைத்தான்.. அந்தஸ்தை வைத்தான்!


மீண்டும் அடுத்த வியாழன் தொடர்வோமே.....


110 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.
    பின்னூட்டங்களைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.
    அந்த எதிர்பார்ப்பு பொய்க்குமா பொய்க்காதா என்று தெரிந்து கொண்டு வருவதே உசிதம் என்பதால்
    பிறகு (எங்களுக்கு நா,லை)
    வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி ஸார். வாங்க.. எப்படி எதிர்பார்ப்பு என்று குண்ட்ஸா ஒரு ஐடியா இருக்கு.. பார்ப்போம்!

      நீக்கு
  2. சர்வம் வெள்ளித்திரை மயம். 

    வரிகள் வைரமுத்து. படம் மொழி

     மௌனமே உன்னிடம்
    அந்த மௌனம் தானே அழகு

    இங்கு கேரளத்தில் தினமும் நாய்க்கடி பட்டவர்கள் எண்ணிக்கை கொரோனா  ஸ்கோர் போன்று வெளியிடும்போது நாய் சிற்பம் ஈர்க்கவில்லை. தெரு நாய் தொல்லை தீராத சள்ளை. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    கவிதை அருமை.. வானத்தில் திரண்டு இருக்கும் மேகத்தின் அழகை குலைக்க அதற்கும் (காக்கைக்கும், குருவிக்கும்) மனம் வரவில்லையோ என்னவோ..எங்காவது ஒரு மூலையில் தள்ளி அமர்ந்து கொண்டு ரசித்து வேடிக்கைப் பார்க்கிறதோ...? நானும் அந்த கவிதையோடு, இயற்கையை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன்

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை/மதியம் வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள்/பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. படத்தின் விமரிசனம் பார்க்கத்தூண்டுகிறது. ஆனால் உட்காரத்தான் முடியறதில்லை. நேரம் என்னவோ இறக்கை கட்டிக் கொண்டு பறந்து விடுகிறது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் என்பது நாம் அமைத்துக் கொள்வது தானே!

      நீக்கு

      நீக்கு
    2. அது ஒரு காலம் ஶ்ரீராம். சொன்னால் சொன்னபடி எல்லாம் செய்துடுவேன். இப்போக் கடந்த ஓரிரு வருடங்களாக முடியறதில்லை. அதிலும் இப்போ ஆறு மாதங்களாகச் சுணக்கம் அதிகம். உட்கார முடியலை என்பது உடல்நிலையைக் குறித்துச் சொல்லுவது. உட்கார நேரம் இல்லை என்பதைக் குறித்தல்ல! :(

      நீக்கு
    3. புரிகிறது கீதா அக்கா.  சீக்கிரம் நிலைமை சரியாகட்டும்.

      நீக்கு
  8. கலைஞர் பற்றிய விமரிசனக்கட்டுரை முன்னாடியும் எப்போவோ படிச்சிருக்கேன். அவர் தன்னிடம் பரிதாபத்தை வரவழைத்துக் கொள்வார் என்று எனக்குத் தோன்றும் ஆனாலும் மனித மனங்களைக் குறிப்பாகப் பலவீனங்களைப் புரிந்து வைத்துக் கொண்டிருப்பதில் அவர் வல்லவரே! மறுக்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. அவரது இறமைகள் வேறு வகையைச் சேர்ந்தவை. கர்மவீரரால் கைக்கொள்ளப்பட முடியாதவை...

      நீக்கு
    2. அரசியலிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி, கருணாநிதி முழுமையாக வெற்றி அடைந்தார் எனச் சொல்லலாம். அதே போல் ஊழல்களையும் திறம்படச் செய்வதில் வெற்றியே கண்டார். மத்தவங்களைப் போல் மாட்டிக் கொண்டதில்லை. நீதிமன்றங்களே பாராட்டியுள்ளனவே அவருடைய ஊழல்களை! விஞ்ஞான பூர்வமான ஊழல்கள் என! இந்த விஷயத்தில் காமராஜர் இவருடன் போட்டியிடவே முடியாது.

      நீக்கு
    3. அதைத்தான் சொல்லி இருக்கிறேன்!!

      நீக்கு
  9. நகைச்சுவைத்துணுக்குகள் எல்லாம் ஆனந்த விகடன் இல்லையா? மேகங்கள் திரள்வதைப் பார்ப்பதே ஓர் அழகு. கவிதை நன்கு ரசித்து எழுதி இருக்கீங்க.
    நாய்ச் சிற்பம் கருத்தைக் கவரவில்லை.
    கடைசியில் இருக்கும் டார்ஜான்(?) அடுத்த வாரமும் வருவாரா என்ன?

    பதிலளிநீக்கு
  10. எம்.ஆர்.ராதா பற்றிய இந்தத் தொகுப்பு எப்போவோ தினமலரில் வந்த நினைவு. சில்க் ஸ்மிதா பற்றிய தகவல்கள் புதிது. எம்.எஸ்.வி இப்படிக் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டிருப்பாரா?
    திவ்யா ப்ரியதர்ஷிணி சொல்லுவது அடிக்கடி ஏதானும் ஒரு பத்திரிகை/தினசரிகளில் வந்து கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. Geetha Sambasivam "கலைஞரா, கர்மவீரரா?” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    நகைச்சுவைத்துணுக்குகள் எல்லாம் ஆனந்த விகடன் இல்லையா? மேகங்கள் திரள்வதைப் பார்ப்பதே ஓர் அழகு. கவிதை நன்கு ரசித்து எழுதி இருக்கீங்க.
    நாய்ச் சிற்பம் கருத்தைக் கவரவில்லை.
    கடைசியில் இருக்கும் டார்ஜான்(?) அடுத்த வாரமும் வருவாரா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1. விகடன்தான். 1941.
      2. நன்றி.
      3. அது கொடுக்கும் இந்த போஸ் காரணமாகவா?!!
      4. வரணுமா?

      நீக்கு
  12. Geetha Sambasivam "கலைஞரா, கர்மவீரரா?” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    எம்.ஆர்.ராதா பற்றிய இந்தத் தொகுப்பு எப்போவோ தினமலரில் வந்த நினைவு. சில்க் ஸ்மிதா பற்றிய தகவல்கள் புதிது. எம்.எஸ்.வி இப்படிக் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டிருப்பாரா?
    திவ்யா ப்ரியதர்ஷிணி சொல்லுவது அடிக்கடி ஏதானும் ஒரு பத்திரிகை/தினசரிகளில் வந்து கொண்டிருக்கிறது.
    // இதையும் மேலே உள்ள கருத்தையும் மெயில் பாக்சில் இருந்து இழுத்துக் கொண்டு வந்திருக்கேன். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியும் ஸ்பாமிலிருந்து ணங்களே வெளியில் எடுத்து விட்டு விடுவோம்!  கவலை வேண்டாம்!

      MSV பற்றிய அந்தச் செய்தி எனக்கும் ஆச்சர்யமே...

      நீக்கு
  13. படத்தை பார்க்கத் தூண்டும் விமர்சனம்...

    கவிதை அழகு...

    பதிலளிநீக்கு
  14. ..காமராஜரைவிட சிறந்தவர் கலைஞர் //

    ’காமராஜரைவிட சிறந்தவர் தளபதி ’ - அடுத்த வியாழனுக்குக் கட்டுரை ரெடிதானே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூ.... இது என்ன பிரமாதம்! இதுபோல கட்டுரை ரெடி பண்ணுவதா சிரமம்? கக்கனை விட சிறந்தவர் தளபதி என்று கூட எழுதலாம்!

      நீக்கு
  15. ..எம்.எஸ்.வி இப்படிக் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டிருப்பாரா?//

    சில பெரீய்ய மனிதர்களிடம் சின்னத்தனம் காணப்படுவதுண்டு.
    மேலும், சில்க் ஸ்மிதா பொய் சொல்பவரல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில்க் ஸ்மிதா பொய் சொல்ல மாட்டார்! சிவப்பா இருக்குறவங்க பொய் சொல்ல மாட்டாங்க! அந்த வார்த்தையோட ஒத்துப் போவுதில்லை? ஆனாலும் எனக்கும் அதே போல தோன்றியதால் தான் பகிர்ந்தேன்.

      நீக்கு
  16. The savior படம் ஆங்கிலப் படத்தின் காப்பி அல்லது பெரிய தழுவல். நான் இந்த மாதிரிப் படத்தைப் பார்த்திருக்கிறேன். பைலட், போதை அதிகம், விமானம் ஓட்டுகிறான், மோசமான காலநிலை, அவன் திறமையால், நிதானமின்றி இருந்தாலும் விமானத்தை இறக்குகிறான், ஆக்சிடன்ட், பிறகு விமானத்துறை, வொர்க்கர் அசோசியேஷன் விசாரணை, பைலட் அசோசியேஷன் அவனைத் தப்பிக்கவைக்கப் பார்க்கிறது, கடைசியில் மனசாட்சி சொல்வதைக் கேட்க முடிவு செய்த பைலட் உண்மையைச் சொல்லிவிடுகிறான். தண்டனை பெறுகிறான். அது மிக நல்ல படம். படம் பெயர் பிறகு பகிர்கிறேன். எல்லாப் பயல்களும் காப்பி மன்னனாக இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படத்தில் அவன் உண்மையைச் சொல்வது வேறு வகை! உண்மையை வேறுவிதமாக உரைக்கிறான்! காப்பியாக இருந்தால் என்ன? நான் அந்த ஆங்கில படத்தை பார்த்ததில்லை. இதை பார்த்து ரசித்தேன். மேலும் எனக்கு பிடித்த அமிதாப் வேற படத்திலிருக்கிறார்.

      நீக்கு
    2. ஆங்கிலப் படத்தில் பட்டவர்த்தனமாக்க் காண்பிக்க முடியும். இந்தியப் படத்தில் பூசிமெழுகியிருப்பார்கள். மேற்கத்தைய நடைமுறைகளும் நம்மிடம் இல்லை.

      நீக்கு
    3. இல்லை. ரசிக்கும்படி சமாளித்திருக்கிறார்கள். தவறையும் சுட்டிக்காட்டுகிறார்கள். ரொம்ப சொன்னால் படம் பார்க்கும்போது சுவை கெட்டு விடும்!

      நீக்கு
  17. கருணாநிதியைப்பற்றி கட்டுரை தயார் செய்தவருக்கு அதற்கான பலன் கிடைத்ததா? அவர் வாழ்நாளில் (கருணாநிதி) தன் ஆட்சி அமைப்பேன் என்று பிரச்சாரம் செய்ததாக நினைவு இல்லை. எல்லோரும் காமராசர் ஆட்சி உருவாகப் பாடுபடுவேன் என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் உண்மையிலேயே கருணாநிதியின் ரசிகர். ந. சஞ்சீவி என்று பெயர் .இதை தொகுத்தவர். அவர் பலனை எதிர்பார்த்து செய்ததாக தோன்றவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல காமராஜர் ஆட்சி அமைக்க பாடுபடுவேன் என்று சொல்பவர்கள் கருணாநிதி போல் ஆட்சி அமைக்க பாடுபடுவேன் என்று சொல்வதில்லை!!

      நீக்கு
  18. சாப்பிடும் முறை ... சரிதான். நான் வேளையைக் கணக்குப் போட்டுச் சாப்பிடுவதாலும் இனிபை அதிகமாக எடுத்துக்கொள்வதாலும் எடை குறையவில்லை.

    பதிலளிநீக்கு
  19. எல்லாமே சுவாரஸ்யமான விடயங்கள் ஜி.

    கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  20. சில்க் ஸ்மிதா போன்ற நடிகைகள் பொய் சொல்ல மாட்டார்கள். அதற்கான அவசியமும் இல்லை.

    லெஜென்ட எம் எஸ் வி, இத்தனை படங்களுக்கு இசையமைத்தும் பணத்தேவை உடையவராக இருந்தார் என்பது ஆச்சர்யம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணத்தின் மீது பற்று வைத்திருந்திருக்கிறார்.

      நீக்கு
    2. இன்றைக்கு மாதிரி அன்றைக்கு என்ன கோடிகளா புரண்டு
      கொண்டிருந்தன?..

      நீக்கு
    3. எல்லோருக்கும் தேவை உண்டு.  அந்தக் காலத்துக்கேற்ற பணம் வாங்கி இருப்பார்.

      நீக்கு
  21. பொக்கிஷம் பகுதியை ரசித்தேன். கவிதை நன்று.

    பதிலளிநீக்கு
  22. ..எனக்கு பிடித்த அமிதாப் வேற படத்திலிருக்கிறார்.//

    Cheeni Kum பார்த்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். இளையராஜா இசை. பா, ஷமிதாப், பிதா ஷாகா தேரா பாப், சூர்யவம்சம், காக்கீ, பாக்பான், பிளாக், ஏக் அஜ்நபி....

      நீக்கு
  23. அந்தப் பெண் பொய் சொல்பவள் இல்லை தான்..

    அவரும் தனது மரியாதைக்குரிய இசைக்கலைஞ்ர் ஒருவரது கடைசிக் காலத்தில் தன்னுடன் வைத்து இறுதி வரை கவனித்துக் கொண்டவர் தான்..

    ஆடத் தெரியாது என்று உணர்ந்த அந்தப்பென் அரங்கிற்குச் சென்றிருக்கக் கூடாது..

    அந்தப் பெண் பற்று இல்லாமலா பணத்தை வாங்கிக் கொண்டு அவ்வளவு தூரம் சென்றார்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம் எஸ் வி மேல் இருக்கும் மரியாதை இந்த வாதத்தை முன் வைத்தாலும் அவர் அப்படி கைவிட்டிருக்கக் கூடாது.

      நீக்கு
    2. அப்படி இல்லை. அந்தக் காலத்தில், சில்க் கடித்த ஆப்பிளை ஏலம் போட்டு எடுக்க ஆள் இருந்தது. அதனால் அவரை வற்புறுத்தி சும்மா மூஞ்சைக் காண்பித்தால் போதும் என்று கூட்டிக்கொண்டு சென்றிருப்பார்கள். (அவர் பெயர் இருந்ததால் ஆயிரக்கணக்கில் ஆட்கள் வந்திருப்பார்கள்). நியாயப்படி சில்க் ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கலாம் (ரசிகர்களைப் பற்றித் தெரிந்திருக்கவேண்டும்).

      எப்போதுமே ஒரு இடத்துக்கு அழைக்கும் ஒருவர், அந்த இடத்துக்கு வரும் வரை எல்லாச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வார். புறப்படும்போது கண்டுகொள்ள மாட்டார். இது சாதாரண நடைமுறைதான்.

      நீக்கு
    3. சிலுக்கு இல்லாமல் படம் ஓடாது என்ற நிலை இருந்தது..இப்போது அந்த நிலை மாறிவிட்டது அல்லவா? இதை மறுக்க முடியுமா?

      சிலுக்கு இல்லாமல் படம் ஓடாதுன்னு நான் சொன்னேனா? யார் யாரோ அவங்க இஷ்டத்துக்கு துதி பாடிகிட்டிருந்தாங்க..என்னைத் தேடி வாய்ந்த வாய்ப்பை எல்லாம் மறுக்காம ஒப்புக்கிட்டு நடிச்சேன். ஒரு சீன், ரெண்டு சீ ன், ஒரு நாள் கால்ஷீட், ரெண்டு நாள் கால்ஷீட் னு எல்லாம் கேட்டாங்க. மறுக்காம நடிச்சு கொடுத்தேன். அவங்க படம் ஓடுறதுக்கும் ஓடாததுக்கும் நானா பொறுப்பு? எத்தனை பெரிய நடிகர் நடிகை நடிச்சிருந்தாலும், பெரிய டைரக்டர் இருந்தாலும், கதையில வெய்ட் இல்லனா படம் ஓடாது. எனக்கு படங்கள் ஓரளவு குறைஞ்சதுக்கு காரணம்- நானே குறைச்சுக்கிட்டதுதான். பேசுறவங்களுக்கு வேற வேலையே கிடையாது.

      சினிமா எக்ஸ்பிரஸ் 15.02.84
      நன்றி: தினமணி

      அதே ஆர் கந்தசாமி முகநூலில் நேற்று பகிர்ந்திருப்பபது!

      நீக்கு
  24. கதம்பம் நன்றாக இருக்கிறது.

    படவிமர்சனம் பார்க்க வைக்கும்.

    கவிதை நன்றாக இருக்கிறது. அந்த இடத்தின் தனிமை , நிசப்தம் இந்த கவிதையை எழுத வைத்து இருக்கும் போல ! (அந்த மலை நினைக்கிறதோ இப்படி?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா. அந்தப் பாதையில் நாம் தனியாளாக அடைந்து சென்றால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில்..

      நீக்கு
  25. பொக்கிஷ பகிர்வு அருமை. சாப்பிடும் முறையும் நன்றாக இருக்கிறது.
    திருவள்ளுவரும் "முன்பு உண்ட உணவு செரித்தபின் அடுத்த வேளை உணவை உண்டால் அவன் உடலுக்கு மருந்து வேண்டியது இல்லை என்று சொல்கிறார்."
    மருந்து அதிகாரத்தில் பசித்த பிறகே உண்ண வேண்டும் என்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செரித்த பின் பசித்துப் புசி... நல்ல அட்வைஸ்.. நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  26. திரைப்படம் பற்றிய விமர்சனம் மிக அருமை! உங்கள் விமர்சனத்துக்காகவே ஒரு முறை பார்க்கலாம்!
    காமராசர்-கலைஞர்- இரு பெரும் துருவங்களுக்கிடையே ஒப்பீடு என்பது சரியானதில்லை. இருவரும் வெவ்வேறு களங்களில் தங்களின் அறிவால் மிகவும் புகழடைந்தவர்கள்!!
    எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி இது போல எப்போதோ படித்திருக்கிறேன். சில சமயங்களில் ஒவ்வொருத்தருடைய இன்னொரு முகம் வெளிப்பட்டு நம்மை திகைக்க வைக்கிறது ! இதுவும் அது போலத்தான்!
    ' பொக்கிஷத்தில்" தகப்பனாரும் அந்தப்பையனுமான ஓவியம் எத்தனை அழகாயிருக்கிறது! மிகவும் ரசித்தேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ஓவியராக அந்த ஓவியத்தை நுணுக்கமாக ரசித்திருப்பீர்கள்.  எம் எஸ் வி பற்றியும், கலைஞர் காமராஜ் பற்றியும் சரியாக சொன்னீர்கள்.  நன்றி மனோ அக்கா.

      நீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    படவிமர்சனம் நன்றாக உள்ளது. தங்கள் விமர்சனத்தில் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.

    கலைஞர் தமிழார்வம் மிக்கவர்.
    இருவரையும் பற்றிய ஒப்பீடை ரசித்தேன்.

    நடிகையின் மனக்குமுறல் படிக்கும் போது கஷ்டமாகத்தான் உள்ளது. இது மனிதர்களின் மன வேறுபாட்டை காண்பிப்பது.

    சாப்பிடும் முறை விளக்கம் நன்றாக உள்ளது. பசித்துப்புசி என்பதுதானே முன்னோர்களின் அறிவுரை. ஆயுர்வேத மருத்துவத்தில் உணவே மருந்து என்ற வாசகந்தான் மருந்துக்கும் முதலிடம்.

    பொக்கிஷ பகிர்வு அனைத்தும் நன்றாக உள்ளது. வக்கில் மகன் சரியான பாயிண்டாகத்தான் யோசிக்கிறார்.:)) டாக்டர், தாடி பேஷண்ட் ஜோக் சிரிக்க வைத்தது.

    அடுத்த வாரம் தொடரும் என்ற விதத்தில் போட்ட பகுதி( படம்) ரசிக்க வைக்கிறது. எப்படியிருந்தாலும் அடுத்த வியாழனை (வியாழன்தோறும்) நாங்கள் அவரைப் போலவே தங்கள் பதிவை எதிர்பார்த்துதான் காத்திருப்போம் . பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்தையும் இணைத்து ரசித்திருப்பப்பதற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  28. படம் ச்ம விறு விறு போல இருக்கு ஸ்ரீராம் உங்கள் விமர்சனம்....நல்லாருக்கு ...
    ஆனால் அமேசானிலா? ஹிந்தி படமா? அது ப்ரவால்ல...எப்படியோ புரிந்து கொள்ளலாம்...

    குறித்துக் கொண்டு விட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடாமல் ரசிக்க முடிந்தது கீதா. ஒருநாள் நீங்கள் சனி பதிவு சம்பந்தமாக பேசியபோது அதுதான் பார்த்துக் கொண்டிருந்தேன்!

      நீக்கு
    2. ஓஹோ...ஆமா அன்னிக்கு படம் பார்ப்பது சொன்னீங்க இந்தப் படமா...

      இப்போதைக்கு பார்க்க நேரமில்லை....அப்புறம் தான்

      கீதா

      நீக்கு
  29. @ஸ்ரீராம்! நேற்று நீங்க கேட்டதுக்கான சுட்டி. நேற்றே எடுத்தாலும் மொபைல் மூலம் அனுப்ப முடியலை. சரினு யோசிச்சு இங்கேயே கொடுக்கிறேன். குறித்துக் கொண்டதும் இந்தக் கருத்த டெலீட் செய்துடுங்க. :) http://geetha-sambasivam.blogspot.com/2019/06/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  30. என்னதான் கலைஞர், தலைவரை விட நுண்ணறிவு கொண்டவராக நூலறிவு கொண்டவராக இருந்தாலும், மக்களுக்குத் தேவை இந்த அறிவுகள் இல்லையே....அவர்களுக்குத் தேவை நல்ல ஆட்சி. நம்மை ஆளும் தலைவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றுதானே எதிர்பார்க்கிறோம். அதனால்தானே இப்போதும் கக்கனையும் காமராஜரையும் அவ்வப்போதேனும் நினைவு கொண்டு இப்படித் தலைவர்கள் வர மாட்டார்களா என்று எண்ணுகிறோம். மறைந்த பிறகும் ஆத்மார்த்தமாக நினைக்கப்படும் தலைவர்கள் ..

    கீதா

    பதிலளிநீக்கு
  31. எம் எஸ் வி ப்பற்றி இப்படியா...ம்ம்ம்ம் என்னவோ போங்க...அவங்க பொதுவெளியில் இருப்பதால இப்படி எதிர்மறை வரும் போது பேசப்படுகிறது....அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தான் எல்லோரிடமும் ப்ளஸ் மைனஸ் இருப்பது போலத்தானே....நல்லதை மட்டும் பார்ப்போம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  குணம் நாடி குற்றமும் நாடி மிகைநாடி மிக்க கொள்வோம்!

      நீக்கு
  32. உணவு விஷயத்தில் நான் சர்க்கரை நோய்க்குச் சொல்லப்படும் இந்த டைம் கணக்கு எதுவும் பின்பற்றுவதில்லை. பசித்துப் புசி....

    நம் உடம்பை நாமே கொஞ்சம்கூர்ந்து பார்த்து (அதுக்கு நேரமும் மனமும் வேண்டுமே!!!) அதில் சொல்லியிருப்பது போல் செய்தால் நல்லாதான் இருக்கும்...ஆனால் எப்போதும் செய்ய முடிவதில்லையெ!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைச் சொல்லுங்க... என்னால் முடியாது. எனக்கு நாக்கு நாலு முழம்!

      நீக்கு
    2. ஹாஹாஹா ஸ்ரீராம் எனக்கும் நாக்கு நீளமோ நீளம்தான் ஆனா வேறு வழியில்லாமத்தான் கட்டுப்பாடு எல்லாம்..!!

      கீதா

      நீக்கு
  33. ராஜாஜியைப் பற்றிய குட்டிச் செய்தி எம் ஆர் ராதா வைப் பற்றிய பெரிய செய்தி!!! பாராட்டியதில் குட்டிச் செய்தி பெரிதாகிறது...பெரிய செய்தி இன்னும் பெரிதாகிறது பின்னாளில்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  34. கோராபடம் - ஹாஹா டிப்பிக்கல் கேரக்டர்...

    கவிதையை ரசித்தேன் ஸ்ரீராம். கற்பனை வழக்கம் போல விரிந்தது...ஆனால் நேரம் துரத்துகிறது.

    வழக்கம் போல எடுத்துக் கொண்டென்.

    கீதா

    பதிலளிநீக்கு
  35. பொக்கிஷம் - முதல் ஜோக் சிரித்துவிட்டேன். கூடவே ஸ்ரீராமின் ஃப்ரோக்ரஸ் கார்டு விஷயமும் நினைவுக்கு வந்துவிட்டதே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  36. தாடி ஜோக்கும் ஹாஹா ரகம்...அதை விட உங்கள் வரி இன்னும் செம...

    ஆமாம் கச்சேரி பத்தி கேள்வி வந்ததே நம்ம நெல்லைதானே கேட்டிருந்தார்....
    (நல்ல காலம் நாம ஃபேமஸ் இல்லை...இல்லைனா நெல்லை புதன் கேள்வி கேட்டிருப்பார்...இந்த கீதா ரெங்கன்கா ஒவ்வொரு வார்த்தைக்கும் ராகம்னு ஏதோ சொல்றாங்களே அதைப் பத்தி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இனி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ராகம் சொல்வாரோ?)!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுநாளே இந்தப் படத்தை வெளியிட நினைத்தேன்.  புத்தகத்தைத் தொலைத்து விட்டேன்!  இப்போதுதான் கிடைத்தது!

      நீக்கு
  37. தலை முடி ஸ்டைல் அப்பவே இப்படி போட்டவங்க இப்ப எப்படி போடுவாங்கன்னு யோசிக்கேன்..

    அது சரி....அடுத்த வாரம்னு கைல கத்தியோடு போட்டிருக்கீங்க மர்மப் பகுதி, கதை ஏதேனும் இருக்குமா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைமுடி ஸ்டைல் இப்போ கன்றாவியா இருக்கு!  டார்சான் சும்மா பிலிம் காட்டறார்!

      நீக்கு
  38. பொக்கிஷம் முதல், கடைசி படம் செம...நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  39. தலை முடி ஸ்டைல் போட்டவங்க அடுத்த வாரம் தாடி ஸ்டைல்/ வகைகள் போடுவாங்களோ?
    வைஷ்ணவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாடியில் என்ன பெரிய ஸ்டைல் இருக்கு...  இரண்டு மூன்று வகைதான் (நன்றாக) இருக்கும்!

      நீக்கு
  40. காமராஜர் எந்த நேரத்திலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டவர் அல்லர். தன்னால் தான் இதெல்லாம் நடந்தது என்பது அவர் நினைப்பில் கூட இருந்ததில்லை.
    அவரது அமைச்சரவை சகாக்கள் இன்னார் என்றும் அவர்களின் செயல்பாட்டுத் திறமை மக்களுக்குத் தெரிந்திருக்கும் அளவுக்கு தன்னைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டவர் அவர். அதனாலேயே பிற்காலத்தில் சி.சுப்பிரமணியம், வெங்கட்ராமன், பக்தவத்சலம் போன்றவர்கள் தேசம் பூராவும் தெரிந்தவர்களானர்கள்.
    சி.எஸ். தேசத்தின் நிதியமைச்சரானார். ஆர். வெங்கட்ராமனோ நாட்டின் குடியரசு தலைவராகும் அளவுக்கு பெருமை பெற்றார். காமராஜரைப் பொறுத்த வரை அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லோரின் கூட்டு ஒத்துழைப்பில் மக்களுக்கு பணியாற்றுவோம் என்பதே. இந்த மேலான குணம் இன்று கூட காணக்கிடைக்காதது.
    தனிப் பெரும் தலைவராக தன்னை மட்டும் பிரகடனப்படுத்திக் கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளிடமிருந்தும் வித்தியாசப்பட்டவராக அவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
    அதனாலேயே தேசத்திற்குக் கிடைத்த மக்கள் தலைவர்
    அவர் என்று மனசார நினைக்க முடிகிறது. K. Plan நினைவுக்க் வருகிறதல்லவா? அதனாலேயே வாய்த்த பதவிகளிடமிருந்தும் விடுபட எளிதாக அவருக்கு முடிந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்திராவுக்குத் தேவை, புத்திசாலிகள் அல்லர். ஜால்ராக்கள் மற்றும் மக்கள் மத்தியில் செல்வாக்கில்லாதவர்கள். ஆர்.வி. அதற்குப் பொருத்தமாக இருந்தார். காமராஜரின் சீடர் என்று சொல்லிக்கொண்டாலும், யோக்கியமானவரா ஆர்வி?

      நீக்கு
    2. தலைவரைப்போலவே இருக்கும் அடுத்த கட்ட தலைவர்கள் மிகக்குறைவே.  ஆர் வி எல்லாம் பின்னாளில் தலையாட்டி பொம்மை ஆனார் இல்லையா?  நாவலரின் சகோதரர் ஒருவர் காங்கிரசில் இருந்தார் இல்லையா?  நாவலருக்கு நேர்மாறானவர்.  காமராஜர், கக்கன் போன்றோரெல்லாம் அவதாரங்கள்.

      நீக்கு
  41. காமராஜர் காலத்து தமிழகத்து நீர்ப்பாசனத் திட்டங்கள் எக்கச்சக்கம். அடுத்து நெய்வேலி நிலக்கரி சுரங்கம். இவையெல்லாம் இன்றளவும் பயன்பட்டுக் கொண்டிருக்கிற பொதுப்பயன்கள்.
    இதையெல்லாம் மறந்து விட்டு காமராஜர் என்றால் அவரது மதிய உணவு திட்டம் பற்றி மட்டுமே
    பொதுவாக பலரும் குறிப்பிடுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனென்றால் உதவிகளிலேயே பெரிய உதவி, பசித்த வயிற்றுக்குச் சோறிடுதல்.

      நீக்கு
    2. விளம்பரம் செய்ய மீடியாக்கள் இல்லாதது, அல்லது முன்வராததும் ஒரு காரணமாயிருக்கலாம்.  பெருந்தலைவரும் அதை விரும்பியிருக்க மாட்டார்.

      நீக்கு
  42. பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது பட விமர்சனம். ‘சாப்பிடும் முறை’ கவனத்தில் கொள்ள வேண்டியவை. சில்க் ஸ்மிதா நேர்காணல் மனிதர்களின் மறுபக்கத்தைக் காட்டுகிறது. குறுங்கவிதை நன்று.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  43. ஸ்ரீராம்ஜி நீங்கள் விமர்சித்திருக்கும் படம் பற்றி நானும் இணையத்தில் பார்த்தேன். படத்தை அல்ல படம் பற்றிய சில தகவல்கள். சப்டைட்டிலோடு வரும் என்று நினைக்கிறேன். அமேசானில் இல்லை. வேறு வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன். படங்கள் பார்க்கும் ஆர்வம் உண்டு என்பதால்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரளவுக்கு புரியும் மொழியில்தான் எடுத்திருக்கிறார்கள்.  தாராளமாகப் பார்க்கலாம் துளஸிஜி.

      நீக்கு
  44. என்னதான் கலைஞரின் தமிழ் அறிவை நான் ரசிப்பதுண்டு என்றாலும் தலைவர் என்றால் காமாரஜர்தான் நினைவுக்கு வருவார். கக்கன் அவர்களைப் பற்றி ஏனோ அவ்வளவு பேசப்படுவதில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  45. எம் எஸ் வி பற்றிய செய்தி வாசித்த போது எனக்குத் தோன்றியது இதுதான். இச்செய்தி குறித்து அல்ல. பொதுவாகச் சொல்கிறேன். மீடியாக்களில் வரும் செய்திகள் எது உண்மை, எது பொய் என்று பிரித்தறிய முடியாத நிலைதான். எம் எஸ் வி யின் இசையை ரசிப்போம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  ஆனாலும் சில செய்திகளை ..  

      இல்லை...

      விவாதம் வேண்டாம்!!

      நீக்கு
  46. உங்கள் கவிதை மிக அருமை, ஸ்ரீராம்ஜி. மிகவும் ரசித்தேன்.

    பொக்கிஷத் துணுக்குகளையும் ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!