திங்கள், 12 செப்டம்பர், 2022

'திங்க'க்கிழமை  :  கொண்டைக்கடலை வடை   - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 ஊற வைத்த கொண்டைக்கடலை


ஹூஸ்டனில் பையர் எங்கேயோ கொண்டைக்கடலையில் வடை சாப்பிட்டிருக்கார். அதிலிருந்து அதைப் பத்தியே சொல்லிட்டு இருப்பார். எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லைனாலும் ஒரு தரமாவது பண்ணிப் பார்க்கணும்னு நினைச்சுப்பேன். அதுக்கு இன்னிக்கு வேளை வந்தது. போன மாதம் வாங்கிய கொண்டைக்கடலையில் வண்டு வர ஆரம்பிக்க, சரிதான், இனியும் இதைக் காபந்து பண்ண  வேண்டாம், மத்த சாமான்களுக்கும் வண்டு வர ஆரம்பிச்சுடும்னு கொண்டைக்கடலையை நன்கு புடைத்து சுத்தம் செய்து விட்டு நிறைய நீர் விட்டு அலசினேன். பத்து நிமிஷத்துக்கும் மேல் அலசி அதிலே தூசி, தும்பு, வண்டு இருக்க வாய்ப்பில்லைன்னதும் அதிலே தேவையான நீரை விட்டு ஊற வைச்சேன். நேத்திக்கே ஊற வைச்சுட்டேன். ஊற வைக்கையில் வடை பண்ணும் எண்ணமே இல்லை. முளைக்கட்டி எடுத்துக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சப்பாத்திக்குக் கூட்டு அல்லது சுண்டல் என்று பண்ணிக்கலாம்னு தான் எண்ணம்.


இன்னிக்குக் காலம்பர மீண்டும் கழுவி நீரை வடிக்கையில் வடை செய்தால் என்னனு ஒரு எண்ணம்!  அதோடு நேத்திலிருந்து மழை பெய்துட்டு இருக்கா! சூடாகச் சாப்பிட நல்லா இருக்குமேனு ஒரு ஆசை! உடனே ரங்க்ஸிடம் கேட்டேன். அவருக்கு உள்ளுக்குள்ளே தான் சோதனை எலியாகி விட்டது குறித்து பயம் வந்ததோ என்னமோ! தெரியலை! இரண்டே இரண்டு வடை தான் எடுத்துப்பேன், சம்மதம்னா பண்ணு, இல்லைனா வேண்டாம்னு சொல்லிட்டார். எனக்கா வடை பண்ணியே தீரணும்னு. தூக்கமே வராது போல இருந்தது.  ஆகவே கொஞ்சமாகக் கொண்டைக்கடலையை எடுத்து வடைக்குனு தனியா வைச்சேன். மிச்சத்தை முளைக்கட்ட விட்டுட்டேன்.  இப்போக் கொஞ்ச நேரம் முன்னால் அதிலே உப்பு, காரம் சேர்த்து அரைத்து, பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கிப் போட்டுக் கருகப்பிலை, கொ.மல்லி சேர்த்து வெங்காயம் நறுக்கிப் போட்டு வடையாகத் தட்டி விட்டேன்.

செய்முறை:

ஊறிய கொண்டைக்கடலை ஒரு கிண்ணம்

மி.வத்தல், ப.மிளகாய் வகைக்கு இரண்டு

ஒரு சின்னத் துண்டு இஞ்சி

பெருங்காயம், உப்பு தேவைக்கு.

வெங்காயம் பெரிது ஒன்று

இவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். உதிர் உதிராகத் தான் வருது. கொஞ்சம் உளுந்து சேர்த்திருக்கலாமோனு நினைச்சேன். அப்போத் தான் சேர்ந்து வரும். இப்போ ஒண்ணும் பண்ண முடியாது என்பதால் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கொண்டேன்.

சின்னதாய் ஒரு பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி உள்ளே உள்ள விதையை எடுத்துவிட்டுப் பொடிப்பொடியாக நறுக்கிப் போட்டேன். இஞ்சியும் ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிச் சேர்த்தேன். அப்போது தான் வாசனையாக இருக்கும். வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்து, கருகப்பிலை, கொத்துமல்லி போட்டுக் கலந்து கொண்டு வடையாகத் தட்டினேன். எல்லோரும் வேணும்ங்கற வடைகளை எடுத்துக்குங்க!

 வடைக்கு அரைத்த மாவு.

இதில் எல்லாமும் கலந்திருக்கேன்.

எண்ணெயில் வேகும் வடைகள்

சுடச் சுட வடைகள் சாப்பிட ரெடி!

இன்னிக்கு வடைனு முடிவு பண்ணினதுமே படம் எடுக்கணும்னு நினைவா எடுத்துட்டோமாக்கும்!  அதுவும் சுடச் சுட!  என்னங்கறீங்க நம்மளை! :))))

47 கருத்துகள்:

 1. எல்லோருக்கும் இனியகாலை வணக்கம்.

  ஆஹா கொண்டைக்கடலை வடை!! கீதாக்கா அருமையாக வந்திருக்கிறது. நம் வீட்டில் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். சுவையும் நன்றாக இருக்கும்.
  அடையிலும் போடுவதுண்டே!

  வெள்ளையிலும் செய்யலாம் தான் ஆனால் ப்ரௌன் தனி தான்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இதெல்லாம் அம்பேரிக்கா போனதில் தான் கற்றுக் கொண்டு செய்கிறேன். எங்க மருமகள் எல்லாப் பருப்பு வகைகளையும் போட்டு நவதானிய அடை எனப் பண்ணுவாள்.

   நீக்கு
 2. படங்கள் நல்லா வந்திருக்கு கீதாக்கா....க்ரிஸ்பியா நன்றாக வந்திருப்பது தெரிகிறது.

  பெரியவர்கள் இருந்த போது வெங்காயம் இல்லாமல்....அவர்களுக்குத் தனியாகவும் நமக்கெல்லாம் வெங்காயம் போட்டும், கொஞ்சம் சின்ன வெங்காயம் போட்டும் செய்வதுண்டு.

  நேற்று நான் இந்தக் கடலை ஊற வைத்த போது ஒரு நப்பாசை வந்தது. கடலைக்கறிக்கு (புட்டு இன்று) எடுத்துக் கொண்டு விட்டு மீதியை வடை செய்யலாமா என்று. ஆனால் பல்லுப் பிரச்சனை உள்ளவர் இப்ப வேண்டாம் என்றிட ஹூம் வடை போச்சு!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்கெல்லாம் கொஞ்சமானும் சி.வெ. சேர்த்தால் தான் நன்றாக இருக்கு. இல்லைனால் சுமார் ரகம் தான்.

   நீக்கு
 3. இன்னிக்கு வடைனு முடிவு பண்ணினதுமே படம் எடுக்கணும்னு நினைவா எடுத்துட்டோமாக்கும்! அதுவும் சுடச் சுட! என்னங்கறீங்க நம்மளை! :))))//

  ஹாஹாஹாஹா....அதானே!! நெல்லையிடமிருந்து தப்பியாச்சு!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லையிடமிருந்து எப்போதுமே தப்பித்துவிட்டீர்கள்.

   நாங்கள் வடைக்கெல்லாம் வெங்காயம் போடுவதில்லை. வெங் பஜ்ஜிகூட எனக்கு மட்டும், அதுவும் பையனுக்கு பஜ்ஜிலாம் செய்தபின் நானே செய்துகொள்வேன். அவனுக்கு வெங்காயம் பிடிப்பதில்லை (அது வாய் ஸ்மெல்லை ஏற்படுத்திவிடும் என்பது அவன் நம்பிக்கை. எனக்கோ அழகிய சிறுவெங்காயப் பைகளைப் பார்த்தால் வாங்கணும்னு தோணும்..வாங்கிடுவேன். 3/4கிலோ இருப்பது 20-30 ரூபாய்க்குக் கிடைக்கும். பதினைந்து உரித்து, எனக்கு வெங் சாம்பார், உ கி ரோஸ்ட். வெங் இல்ஙாமல், அலுத்துக்கொண்டு பசங்க சாப்பிடுவாங்க)

   நீக்கு
  2. மசால் வடை பண்ணும்போது சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்ப்போம். உளுந்து வடைக்கும் சில/பல சமயங்கள் போடுவது உண்டு. பஜ்ஜிக்குப் பெரிய வெங்காயம் தான். அதோடு எல்லா நாட்களிலும் நோ வெங்காயம். இப்போ மஹாலயம் என்பதால் வெங்காயம், பூண்டு, உ.கி. கீரை, கத்திரிக்காய்., பீன்ஸ், வெள்ளரிக்காய் போன்ற சில காய்கள் சேர்ப்பதில்லை. அவருக்குத் தைராய்ட் இருப்பதால் மு.கோ.காஃப்ளவர், முள்ளங்கி போன்ற காய்களை வாங்கியே3/4 வருஷங்கள் ஆகிவிட்டன. குழந்தைகள் வந்தால் வாங்கி அவங்களுக்குப் பண்ணுவேன்.

   நீக்கு
  3. வெங்காய பகோடா முன்பெல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். தஞ்சைப்பபகுதிகளில் சற்றே எண்ணெய்ப்பசையுடன் - அதாவது சொதசொதவென்று கிடைக்கும். இப்போதோ காய்ந்துபோய் வரட்டி போல கிடைக்கிறது. சாப்பிடவே பிடிப்பதில்லை.

   நீக்கு
 4. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு/வாழ்த்துகள்/பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 5. நேத்திக்குக் குட்டிக்குஞ்சுலுவின் பிறந்த நாள். அது கேக் வெட்டுவதை வீடியோ கால் மூலம் பார்த்தோம். பின்னர் இரவில் அதுக்குக் கொடுத்த பரிசுப் பொருட்களை எல்லாம் பிரிச்சுக் காட்டியது. அதில் ஒன்று பல் மருத்துவர்களின் உபயோகத்திற்கான கிட்/குழந்தைகளுக்கெனப் பரிசுக்காகத் தயாரிக்கப்பட்டது. அதை வைத்து எல்லோருக்கும் மருத்துவம் பார்ப்பேன் எனப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தது. :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குட்டிக் குஞ்சுலுவுக்குத் பிறந்தநாள் வாழ்த்துகள் கீதாக்கா. God Bless!

   கீதா

   நீக்கு
  2. அதில் ஒன்று பல் மருத்துவர்களின் உபயோகத்திற்கான கிட்/குழந்தைகளுக்கெனப் பரிசுக்காகத் தயாரிக்கப்பட்டது. அதை வைத்து எல்லோருக்கும் மருத்துவம் பார்ப்பேன் எனப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தது. :)))))//

   புன்சிரித்தேன். குழந்தைகளின் இப்படியான செய்கைகள் எல்லாமே ரசனையானவை!

   கீதா

   நீக்கு
  3. துர்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள், ஆசிகள், வாழ்க வளமுடன்

   நீக்கு
  4. உங்கள் பேத்திக்கு - டாக்டர் துர்க்கவுக்கு - இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

   நீக்கு
 6. இன்னிக்கும் நானே நானாவா? எப்படியோ போணி ஆனால் சரி! மத்தவங்க எல்லாம் சாப்பிடறதை நிறுத்திட்டாங்களா என்ன? யாருமே அனுப்பறதில்லை! இப்போவும் கொ.க. ஊற வைச்சு முளை கட்டிக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சிருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எழுதி அனுப்பணும்னு நினைத்திருக்கேன். மகள் நிறைய புதுவித உணவுகள் (நம்ம வெரைட்டி கிடையாது) செய்வாள். ஆரம்பப் படங்கள் எடுப்பதில்லை. முழுமையடைந்ததை எடுப்பாள். சமீபத்தில் அவள் செய்த தேங்காய் பன் ரொம்ப நல்லா இருந்தது. கே வா செய்முறை எழுதி அனுப்பலாம். என்னவோ அனுப்பலை

   நீக்கு
  2. பன், தேங்காய் பன் எல்லாம் நான் பஜாஜ் அவனில் இட்லித்தட்டை வைத்துப் பண்ணி இருக்கேன். அது ஒரு காலம். :( இப்போ சமீபத்தில் வெங்கட்டின் மனைவி ஆதியும் போட்டிருந்தாங்க. அவர் குக்கரிலேயே உப்புப் போட்டுப் பண்ணின நினைவு.

   நீக்கு
 7. கொண்டைக்கடலை வடை செய்முறை, அதைவிட அழகிய படங்கள்... நன்றாக வந்திருக்கிறது.

  காபூலி சென்னா உபயோகித்து வடை செய்து, அதனை, கபூஸில் (லுலு மார்க்கெட்டில் கிடைக்கும்) வைத்து, அதற்கு இலை இன்னபிற அலங்காரங்கள் செய்து என் பெண் ரோல் பண்ணுவாள். எனக்கு மிகவும் பிடித்தமானது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பெண் செய்வது தான் ஃபலாஃபல் என்பதோ? கொ.க. அல்லது மொச்சையில் செய்வார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கேன். ஒரு சிலர் அவரை விதைகள் என்றும் சொல்கின்றனர். நம்ம வீட்டில் வெள்ளை கொ.க. குழந்தைகள் வந்தால் எப்போவானும் வாங்குவோம். நம்மவருக்குக் கறுப்புக் கொ/க/ அதிலும் சின்னது தான் ரொம்பப் பிடிக்கும். அதான் எப்போவும்.

   நீக்கு
  2. //Geetha Sambasivam "'திங்க'க்கிழமை : கொண்டைக்கடலை வடை - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

   உங்கள் பெண் செய்வது தான் ஃபலாஃபல் என்பதோ? கொ.க. அல்லது மொச்சையில் செய்வார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கேன். ஒரு சிலர் அவரை விதைகள் என்றும் சொல்கின்றனர். நம்ம வீட்டில் வெள்ளை கொ.க. குழந்தைகள் வந்தால் எப்போவானும் வாங்குவோம். நம்மவருக்குக் கறுப்புக் கொ/க/ அதிலும் சின்னது தான் ரொம்பப் பிடிக்கும். அதான் எப்போவும்.//// இந்தக் கருத்து ஓடியே போய்விட்டது. பிடித்து இழுத்துக் கொண்டு வந்து சேர்த்திருக்கேன்.

   நீக்கு
  3. நெல்லை ஃபலாஃபல் ரொம்பப் பிடிக்கும். செய்ததுண்டு பிட்டா ப்ரெட்டிற்குள்ளும் கூட வைத்து அலங்கரித்து...
   செய்த போது இது நம்ம வடா பாவ் போல இது ஒரு தினுசு என்று தோன்றியது.

   கீதா

   நீக்கு
  4. பல் பிரச்னையில் எனக்கு இந்த மாதிரி வடைகளெல்லாம் சாப்பிட தயக்கமாக இருக்கிறது. சூடாக மெதுவடை இருந்தால் இரண்டு வகை சட்னியுடன் சுவைக்கலாம்! ஆனால் அதற்கு இன்னும் 13 நாட்கள் போகவேண்டும்!

   நீக்கு
 8. வடை முறு முறுவென வந்திருப்பது படத்தில் பளிச் என்று தெரிகிறது. எனக்கு மோர்்சாத்த்திற்குப் பிடிக்கும். இங்கெல்லாம் ப்ராமின்ஸ் பேக்கரி, மற்ற கான்டிமென்ட்ஸ் கடைகள்ல சிறிய மசால் வடை வெங் பூண்டு இல்லாமல்தான் விக்கறாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மாதிரி மொறு மொறு வடைகளை ரசவடையாக்கிச் சாப்பிட்டுப் பாருங்க நெல்லை. ரசம் ஜீரகம், மிளகு அரைச்சு விட்ட ரசம்னால் இன்னும் ருசி கூடும்.

   நீக்கு
  2. ஹைஃபைவ் கீதாக்கா....என் ஓட்டும்..

   கீதா

   நீக்கு
 9. ஆகா..
  சுடச் சுட பதிவு..

  ஆனாலும் பயனில்லை.. கடைவாய்ப் பற்கள் சில கழன்று விட்டன..

  அதுவுமில்லாமல் நவீன எண்ணெய்யில் செய்யப்பட்டவைகளை ஒதுக்கி வைக்கும்படி ஆகி விட்டது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் வடை பஜ்ஜி, போண்டா போன்ற பதார்த்தங்களுக்குச் சுத்தமான கடலை எண்ணெய் தான் (சுத்திகரிக்கப்படாதது) பயன்படுத்துவேன். ரிஃபைன்ட் ஆயில் என்பதெல்லாம் ஒத்துக்கறதே இல்லை. மற்ற முறுக்கு, தேன்குழல், தட்டை போன்றவற்றிற்குத் தேங்காய் எண்ணெய். கடலை எண்ணெய்/தேங்காய் எண்ணெய் இரண்டும் ஒரே விலை தான். ஆகவே பக்ஷணங்கள் தேங்காய் எண்ணெயில் செய்தால் நாள்பட நிற்கும் என்பதால் அதில் தான் பண்ணுகிறேன். சமையலுக்கு நல்லெண்ணெய் தவிர்த்து வேறே பயன்படுத்துவது இல்லை..

   நீக்கு
 10. // காபூலி சென்னா உபயோகித்து வடை செய்து, அதனை, கபூஸில் (லுலு மார்க்கெட்டில் கிடைக்கும்) வைத்து..//

  இதுதான் ஃபிலாபில் எனும் அரபு வடை..

  அங்கிருந்த வரைக்கும் வாரத்தில் நாலு நாட்களாவது ஃபிலாபில் தின்று விடுவேன்..

  தமிழகத்து ஷவர்மாக்களை போல் அல்லாமல் முறையான கண்காணிப்பில் உருவாகி வருபவை..

  எனது உடல் நலனை கெடுத்தவற்றுள்
  நவீன எண்ணெய்க்கும்
  மைதாவில் செய்யப்பட்ட குபூஸ் ரொட்டிக்கும் நிறையவே பங்குண்டு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மைதாவை ஒதுக்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்போவேனும் எதற்கானும் தேவைப்பட்டால் அரைக் கிலோ வாங்கிப்பேன். ஆனால் அவ்வளவாய்த் தேவைப்படவில்லை.

   நீக்கு
 11. மொத்தமே ஐந்து வடை இதில் எனக்கு நான்கு போனால் ஒரு வடையை வைத்து என்ன செய்வீங்க ?

  பதிலளிநீக்கு
 12. நல்லதொரு செய்முறை, அழகான படங்கள் என்று கொண்டக்கடலை வடை நன்றாக வந்திருக்கிறது. இது தான் அரேபியாவின் ஃபலாஃபல். ஆனால் நீங்கள் நினைத்த மாதிரி உளுந்து சேர்த்து செய்தால் மெது வடை போல மிருதுவாக வந்திருக்குமென்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மனோ! பைன்டிங்கிற்கு உளுந்து சேர்த்திருக்கலாமோ என நினைத்தேன். பாராட்டுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை (காலை முடிந்து விட்டதாகையால் முற்பகல்) வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைய வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோதரி

  இன்று காலை முழிப்பு வந்ததே தாமதம். குழந்தையைக் பள்ளிக்கு தயார் செய்து அனுப்ப வேண்டும். அதனால் உடனே வர இயலவில்லை.

  தங்கள் பேத்திக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  முழு கொண்டைக்கடலை வடை செய்முறை படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். நல்ல சத்துள்ள ஆகாரம். தங்கள் பக்குவத்தில் நல்ல முறுமுறுவென்று பார்க்கவே நன்றாக இருக்கிறது. ஆனால், என் பற்களால் இதை கடித்து சாப்பிட முடியுமா என்பது ஒரு கேள்வி குறி வருகிறது. நீங்கள் சொல்வது போல் ரசத்தில் ஊற வைத்து சாப்பிடலாம் என நினைக்கிறேன். கண்டிப்பாக இப்படி ஒரு நாள் செய்து பார்க்கிறேன்.

  கொஞ்சம் மிருதுவாக அமைவதற்காக மேலும் இதனுடன் பருப்பு வகைகளை சேர்த்தால் பருப்பு வடையாகி விடுமே.... அதனால் இதை மட்டுமே வைத்து ஒருநாள் செய்து விட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. செய்கிறேன். நல்லதொரு வடை அறிமுகத்திற்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்லுவது சரிதான் கமலா. எல்லாப் பருப்புக்களையும் சேர்த்தால் ருசி மாறுவதோடு கொண்டைக்கடலை வடைனு சொல்லவும் முடியாதல்லவா? இந்த வடைக்கு நான் நாமெல்லாம் வடைக்கு அரைப்பது போல் அரைத்துக் காரம், உப்புச் சேர்த்திருக்கேன். ஆனால் இதில் கொண்டைக்கடலையை உப்புச் சேர்த்து அரைத்துக் கொண்டு மி.பொ.ம.பொ, த.பொ. கரம் மசாலா பொடி, கூடவே வெங்காயம் இஞ்சி, பச்சைமிளகாயை ஒன்றிரண்டாகத் தட்டிச் சேர்த்துத் தான் பண்ணணும் என எங்க மருமகள் சொல்லுவாள்.

   நீக்கு
 15. கொண்டைக்கடலை வடை நன்றாக இருக்கிறது.
  செய்முறையும், படங்களும் நன்றாக வந்து இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதி. வடை நன்றாகவே இருக்கும். இப்போ ஊற வைச்சிருப்பதையும் இப்படிப் பண்ணிடலாமானு யோசிச்சிங்க்! :)

   நீக்கு
 16. இந்த ரெசிபி செய்து பார்த்தாள் மருமகள் மிகவும் நன்றாக வந்தது நானும் முதலில் செய்வேன் இப்பொழுது மறந்தே விட்டது ஞாபகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி நல்ல அருமையான குறிப்புகள் தொடர்ந்து கொடுக்கிறீர்கள் மிக்க நன்றி அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப நன்றி அம்மா. இப்போவும் கொ.க. நனைச்சு ஊற வைச்சு முளைக் கட்டி வைச்சிருக்கேன். பார்ப்போம். :)))) நமஸ்காரங்கள்.

   நீக்கு
 17. வடை நன்றாக இருக்கிறது . மொறு மொறுப்பாக இருக்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!