புதன், 21 செப்டம்பர், 2022

ஈவது என்ற குணமும் எல்லோரிடத்திலும் இருப்பதில்லையோ?

 

நெல்லைத்தமிழன் : 

ஒரு பிராண்ட், 65 சதம் வரை டிஸ்கவுண்ட் கொடுக்கிறது என்றால், அவர்கள் அதுவரை 65 சதவிகிதம் பொதுமக்களிடமிருந்து அதிகமாகக் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தமாகிறது?

$ Discount என்பது ஒரு வியாபார யுக்தி.  

Jio phone service ஒரு வருடம் இலவசமாக கொடுத்தார்கள். 

ஆரம்ப காலத்தில், லிப்டன் Brooke Bond Tea  வீட்டிற்கு  வந்து இலவசமாக சூடாகப் போட்டுத் தருவார்கள்.

(+ Stock clearance ஆகவும் இருக்கலாம். )

# நீண்ட நாள் விற்பனை ஆகாமல் தேங்கிக் கிடக்கும் பொருள்கள் உண்மையான தள்ளுபடியில் விற்கப்படுவது உண்டு. 

அதே போல் நூற்றுக்கு 85 விற்றபின் மீதம் இருக்கும் சரக்கு குறைந்த விலைக்கு விற்று விடுவதும் நடக்கும்.ஒருவர் இறந்துவிட்டால், அவர் செய்த பெரும் தவறுகள், குற்றங்கள் மறக்கப்படவேண்டுமா? அவர் புனிதராகிவிடுவாரா?

$ இறந்தவர் புனிதர் ஆவதில்லை. ஆனால் உங்கள் மதிப்பு விழாமல் இருக்கும். 

#  இறந்தவர்களை விமர்சிப்பதால் பயனில்லை.  அது பண்பாடும் இல்லை.  தூற்றாமல் விமர்சிப்பதில் தவறு இல்லை.

அப்பா, அம்மாவுக்கு அவர்களின் பிள்ளைகள் மேல் அதிக அன்பு இருக்குமா இல்லை அவர்களின் பிள்ளைகளின்மேல் அதிக அன்பு இருக்குமா? ஒரு பிரச்சனை என்று வந்தால் அவர்கள் யார் பக்கம் நிற்பார்கள்? உண்மையா யோசித்து உண்மை பதில் சொல்லணும். 

# இந்த மாதிரி பிரச்சினைகள் எல்லாருக்கும் ஏற்படுவதுதான்.  இதில் தொடர்புடைய மக்கள் மனப்பாங்குக்கு ஏற்ப  யார்  யாரை ஆதரிப்பார்கள் என்பது இருக்கும்.  சில வீடுகளில் பிடிவாதம் , வன்மம் காரணமாக பெரியவர்களே கூட முரண் ஆன முடிவுகளோ நிலைப்பாடோ எடுக்கக்கூடும்.  

"உண்மையாகச் சொல்லுங்கள் " என்று  கேட்டிருக்கிறீர்கள். சாதாரணமாக உண்மையான பதில்கள் மட்டுமே தர முயற்சிக்கிறோம்.  நகைச்சுவைக்காக சில சமயம் இதில் பிறழ்வு ஏற்படலாம்.  மற்றபடி எல்லாம் உண்மையே, உண்மையைத் தவிர வேறு எதுவுமில்லை.

& கேள்வியில் ஏதோ குழப்பம் இருப்பது போல தெரிகிறது. ( // அவர்களின் பிள்ளைகள் மேல் அதிக அன்பு இருக்குமா இல்லை அவர்களின் பிள்ளைகளின்மேல் அதிக அன்பு இருக்குமா?// இரண்டாவதாக சொல்லியிருப்பது பிள்ளைகளின் பிள்ளைகள்?? 'விம்' போட்டு விளக்கவும் !) 

ஈவது என்ற குணமும் எல்லோரிடத்திலும் இருப்பதில்லையோ? சிலர் கஞ்சத்தனத்துடனும் சிலரிடம் பிறருக்குக் கொடுக்கும் குணம் இயல்பாக இருப்பதற்கும் காரணம் என்னவாயிருக்கும்?

# ஈகை நல்ல குணம்தான், சந்தேகமில்லை.  ஆனால் இந்தக் காலத்தில் மோசடி செய்து உதவி பெறும்  பழக்கம் அதிகமாகி வருவதால், தர்ம சிந்தை இருப்பவர்கள் கூட தயக்கம் காட்ட வேண்டியதாக இருக்கிறது. 

"என் மனைவிக்கு வியாதி, நான் வசதியில்லாதவன் என் பெயருக்கு ஒரு இருநூறு ரூபாய் அனுப்புங்கள் " என்று உருக்கமாக வாட்சப்பில் நூறு பேருக்கு அனுப்பினால் அதில் சில சமயம் ஒரு 20 பேர் பணம் அனுப்பலாம் என்ற எதிர்பார்ப்பில் நிறைய வேண்டுகோள்கள் வருகின்றன.  இதை நம்பி பணம் அனுப்ப மனம் வருவதில்லை.  சமீபத்தில் எனக்கு இந்த வகை செய்தி வந்ததும், " மருத்துவ மனை பில் அனுப்புங்கள் நான் இயன்ற உதவி செய்கிறேன் " என்று பதில் போட்டேன்.  இதுவரை எந்த பதிலும் இல்லை.  இப்போது சொல்லுங்கள், இவர் அசலா, மோசடியா ? மகா பெரியவா சரணம் என்று தொடங்கி மெசேஜ் வந்திருக்கிறது. 

= = = = = =

எங்கள் கேள்விகள் : 

1) இந்த தீபாவளிக்கு என்னவெல்லாம் வாங்கலாம் என்று திட்டம் போட்டிருக்கிறீர்கள்? 

2) நவராத்திரி என்றதும் உங்களுக்கு என்னவெல்லாம் ஞாபகம் வருகின்றன?

3) சமீபத்தில் நீங்கள் எடுத்த 'சிக்கன நடவடிக்கை ' எது? 

= = = = = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்க :

1) 

2) 

3) 


= = = = = 

75 கருத்துகள்:

 1. நெல்லைக் தமிழரின் முதல் கேள்வி சிறப்பு எனக்குள் வெகுகாலமாக இருந்த குழப்பம் இது.

  //ஈகை நல்ல குணம்தான், சந்தேகமில்லை. ஆனால் இந்தக் காலத்தில் மோசடி செய்து உதவி பெறும் பழக்கம் அதிகமாகி வருவதால், தர்ம சிந்தை இருப்பவர்கள் கூட தயக்கம் காட்ட வேண்டியதாக இருக்கிறது. //

  இதுதான் உண்மை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இந்த லைன் ஆஃப் பிசினெஸ் கம்பெனியில் முக்கியப் பொறுப்பில் இருந்திருக்கிறேன். ஐந்து பவுண்டுக்கு பிரிட்டனில் விற்பதை, பனிரெண்டு தினாருக்கு விற்பார்கள். அதாவது அடக்கவிலை ஐந்து தினார்கூட இருக்காது. இதெல்லாம் ரெகுலர் ஐட்டம். சீசனல் ஐட்டம் என்பது 3-6 மாத லைஃப். பிறகு அடுத்த வருடம்தான். ஃபேஷன் மாறுவதால் சீசன் முடிவில் சேல்ஸ் போட்டு விற்பனை செய்வதில் 30 சதம் லாபம் இருக்கும். (இல்லாட்டி சம்பளம் போனசுக்கு எங்க போறது?)

   நீக்கு
 2. காலண்டர் கவர்ந்தது. முக்கிய காரணம் அந்த ஆகஸ்ட் மாதம். சரியாக 27 வருடங்கள் கழித்து தேசத்திற்கு சுதந்திரம் கிடைக்கும் என்றறியாத தருணத்தான அந்த ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக் கிழமை..ஓ..
  காலண்டர் காகிதத்திலேயே மனம் லயித்துப் போனது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக் காலண்டர் பக்கம் காலத்தில் என் அப்பாவுக்கு பதினொன்று வயது !!

   நீக்கு
 3. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். பரவும் காய்ச்சல் மேன்மேலும் பரவித் தொல்லைப்படுத்தாமல் அடியோடு காணாமல் போகப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 4. எத்தனை கருத்துத் தெரியப் போகிறதோ? :))))) இந்தத் தள்ளுபடி விஷயம் முற்றிலும் ஏமாற்றும் வேலையே. ஈரோடு பருத்திச் சேலைகளின் உண்மையான விலையே 300/350 ரூபாய்க்குள் தான். இங்கே திருச்சியின் ஒரு பிரபலமான மிகப் பெரிய கடையில் தள்ளுபடி என்று சொல்லிப் புடைவையின் விலையை 600 ரூ அல்லது 700ரூ என்று போட்டுவிட்டுப் பின்னர் அதைத் தள்ளுபடியில் 300 ரூபாய்க்குக் கொடுப்பதாகச் சொல்லி எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு போய் வாங்கினார்கள். எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்மணியும் வாங்கிப் பெருமையாகக் கட்டிக் கொண்டு வந்தார். அவரிடம் உள்ளூர்க்கடைகளில் இதன் விலையைக் கேட்டுப் பார் எனச் சொன்னேன். கேட்டுப் பார்த்துவிட்டுப் பின்னர் அவர் முகம் சுருங்கி விட்டது.:( ஆட்டோ/பேருந்துக்குச் செலவு செய்து கொண்டு திருச்சி வரை போய் இங்கே விற்கும் விலையில் அங்கே கூட்டத்தில் போய் நெருக்கி அடித்துக்கொண்டு (அந்தக்கடையில் அங்குமிங்கும் சுற்றாமல் எதையும் வாங்க முடியாது. அதுவே பாதி நேரத்தை விழுங்கும்) வாங்கி வந்தது எவ்வளவு முட்டாள் தனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தள்ளுபடி மோகம் யாரை விட்டது. பாவம் மத்யமர்கள்.

   நீக்கு
 5. கொடுக்கும் மனது என்பது எல்லோருக்கும் வராது. எனக்குத் தெரிந்த ஒரு கணவன்/மனைவி ஜோடி (வயதில் பெரியவர்களும் கூட) தோட்டத்தில் போடும் காய்கறிகளின் விதைகளை யாருக்கும் கேட்டால் கூடக் கொடுக்க மாட்டார்கள். பின்னாடி அவங்களுக்கு அந்த விதைகள் விளையாதாம். ஆனால் அவங்க எல்லோரிடமும் விதைகள் கேட்டு வாங்குவாங்க. மல்லிகை, முல்லைச் செடிகள்/கொடிகளின் பதியன் கேட்டு வாங்குவாங்க. இவங்க ஒரு சின்ன இலையைக் கூடக் கொடுக்க மாட்டாங்க. விசித்திரமாய் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! குரோம்பேட்டையில் முன்பு வீட்டுக்கு எதிரே குடியிருந்தவரிடம் மஞ்சள் / வெள்ளை செம்பருத்திக் கிளை கேட்ட பொழுது அவரும் இப்படி சொல்லி கொடுக்க மறுத்துவிட்டார்!

   நீக்கு
  2. அட? அப்படியா? எங்களுக்கும் இதே அனுபவம் மெரூன் பிங்க் செம்பருத்திக்கிளை விஷயத்தில் நடந்தது. இப்போத் தான் அதெல்லாம் இல்லையே! :(

   நீக்கு
  3. இப்போல்லாம் நிறைய கருத்து பதிவு பண்ணி, உடனே வெளிவருவதைப் பார்த்தாலும் அப்புறம் காணாமல் போய்விடுகிறது. என்ன காரணம் என்றே தெரியலை.

   வாழைப்பழம் படம் பார்த்தவுடன், சௌதியில் நடந்த உண்மைச் சம்பவம் நினைவுக்கு வந்தது. அப்போது அது பேப்பரில் எல்லாம் வந்தது. படத்தை ரசிக்கவில்லை.

   நீக்கு
 6. 1. கல்யாணங்கள்/விழாக்கள்/பிறந்த நாள்/மற்ற விசேஷங்களுக்குப் பரிசு கொடுப்பவர்கள் இப்போதெல்லாம் தாராளமாகச் செலவு செய்கிறார்களா?
  2. இன்னமும் 100 ரூ கொடுப்பவர்கள் இருக்காங்களா?
  என் கல்யாணத்தில் 5 ரூபாய்/10 ரூபாயெல்லாம் கொடுத்தாங்க. ஆனால் அப்போ அவற்றின் மதிப்பே வேறே; இப்போ 50/100 ரூபாய்க்கே மதிப்பு இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நீங்க கல்யாணத்தை உடுமலைப்பேட்டைல வப்பீங்க. நாங்க எண்ணூரு கிமீ பிரயாணம் செஞ்சு நாலு பேருக்கு ஆளுக்கு 2000 செலவு செஞ்சு கல்யாணத்துக்கு வந்து, அந்த ஊர்லயே தங்குறதுக்கும் செலவு செஞ்சு, மாங்கு மாங்குன்னு பொட்டியைச் சுமந்து கல்யாணத்துக்கு வந்தால், 150 ரூபாய் சாப்பாட்டை, ஸ்பூனில் போடுபவரை விட்டுப் பரிமாறச் சொல்லிவிட்டு, போட்டோகிராபர் வரும்போது உறவினர்களிடம் நிம்மதியா பேச முடியாம பல்லைக் காண்பித்து போஸ் கொடுத்து, இப்போல்லாம் மாஸ்க்கை வேறு கழட்டணும், வெறும்ன கீழ இறக்கினால் போட்டோல Bhai மாறித் தெரியும், கஷ்டப்பட்டால், எவ்வளவு மொய் தருவோம்னு கணக்கு பார்க்கறாங்களே. பேசாம கல்யாணத்துக்கு வராம ஆயிரம் ரூபாய் கூகுள் பே பண்ணியிருந்தால் எங்களுக்கும் பத்தாயிரம் மிச்சம், அவங்களுக்கும் மிச்சம்.

   நீக்கு
  2. எங்க வீட்டுக்கல்யாணங்கள் எல்லாம் உடுமலைப்பேட்டையிலே வைச்சால் யாரு வருவாங்க? போவாங்க? எங்களுக்கே கஷ்டம். சென்னையில் தான் வைச்சோம். வைக்கிறோம். :)

   நீக்கு
 7. 3. ஈகை என்பது இங்கே என்ன அர்த்தத்தில் சொல்லப்படுகிறது? சாதாரணமாக அனைவருக்கும் கொடுப்பதா? அல்லது தேவைப்பட்டவர்களுக்குத் தேவைப்பட்ட நேரத்தில் கொடுப்பதா?
  4. முழுக்க முழுக்க நம் உதவியைப் பெற்றுக்கொண்டு வாழ்பவர்கள்/வாழ்ந்தவர்கள் பின்னால் நம்மையே தூற்றுவதின் காரணம் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய். அர்த்தம் நோசித்துப் பாருங்கள்.

   நீக்கு
 8. என்னைப் பொறுத்தவரை எம்.ஆர்.பியை விடக் குறைந்த விலையில் கொடுப்பது தான் உண்மையான தள்ளுபடி. எலக்ட்ரானிக் பொருட்கள் அப்படிக் கிடைக்கும். நல்ல ப்ரான்ட் தானா என்று பார்த்துவிட்டு வாங்கலாம். இப்போ என்னோட தோஷிபா மடிக்கணினிக்கு பாட்டரி வாங்கும்போது எம் ஆர் பியை விடக் குறையாக 500 ரூ தள்ளிக் கொடுத்தார்கள். ஆனால் அதை வாங்கி வந்த மெகானிக்குக்குக் கமிஷன் கிடைச்சிருக்கும். அப்போ அதன் விலை இன்னமும் குறைவு தானே எனத் தோன்றியது! :))))) மனித மனம்! எளிதில் திருப்தி காணாது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமேசானில் எல்லாமே எம் ஆர் பி விலையை விடக் குறைவு. ( பதஞ்சலி பிராண்ட் பொருட்கள் தவிர)

   நீக்கு
  2. MRP ஏ ஃப்ராடு என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை. கிளிமூக்கு மாம்பழம் ஒன்றுக்கு MRP 500ரூ என்று கேட்டாலும் கிடைத்துவிடும். அப்புறம் என்ன... 90சதம் டிஸ்கவுண்டில வாங்கினதுன்னு பெருமைப்பட்டுக்க வேண்டியதுதான்.

   நீக்கு
  3. எம் ஆர் பி பற்றித் திரு ஜோதிஜி அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருந்த நினைவு.

   நீக்கு
  4. அமேசானில் இன்றுவரை எந்தப் பொருளும் வாங்கினதே இல்லை. தரம் மற்றும் ஏமாற்று வேலைகள் இருக்கும் என்பதாலும் தான். எதையும் நேரில் பார்த்துக் கைகளில் எடுத்துப் பார்த்து வாங்குவதே பிடித்தமானது. பிரச்னை என்றால் கடைக்குப் போய்த் தீர்க்கலாம். அமேசானில் வாங்கினால் இதெல்லாம் கஷ்டம்.

   நீக்கு
 9. பொதுவாகத் தாத்தா/பாட்டிகள் பேரக்குழந்தைகளுக்குக் காட்டும் சலுகைகளைத் தங்கள் குழந்தைகளுக்குக் காட்டி இருக்க மாட்டாங்க. பேரக்குழந்தைகள் என்றால் தாத்தா/பாட்டிகளுக்குத் தனியான அன்பு இருக்கத் தான் செய்யும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். பேரன் / பேத்தி எதிர்காலம் தாத்தா பாட்டியின் பொறுப்பு இல்லை என்பதால் கூட அப்படி இருக்கலாம்.

   நீக்கு
  2. கௌதமன் சார் சொல்வதுதான் நிதர்சனம். நமக்கு விளையாட்டு பொம்மை, பாசம், நம் குல ஜீன் அவ்வப்போது தெரிந்து சந்தோஷம்... ஆனார் நமக்குப் பொறுப்பு கிடையாது. என் பெண்ணிடம் சொல்வேன். Let us go back by fifteen twenty years. இன்னும் நல்லா, சலுகைகளோட எல்லாம் வாங்கித்தர்றேன் என்பேன். அவளோ, வாங்கிட்டாலும்... நீங்க இப்படித்தான் இருப்பீங்க என்பாள் சிரித்துக்கொண்டே

   நீக்கு
  3. என்னமோ! நாங்க எங்க பேரக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கோம். கவலையும் இருக்கு! :(

   நீக்கு
  4. கேள்வ் அது இல்லை கீதா சாம்பசிவம் மேடம். உங்க பையர், 'பையனா' இருக்கும்போது அடம் பிடிச்சாக்க, பளார்னு நீங்களோ இல்லை மாமாவோ போட்டிருப்பாரா இல்லையா? ராத்திரி 8 மணிக்கு ஏதேனும் வாங்கித்தரச் சொன்னாலோ இல்லை பொருட்காட்சிக்குப் போயிருக்கும்போது ஐஸ்கீம் வேணும்னு அடம் பிடிச்சா, இதெல்லாம் சாப்பிட்டா இவனுக்கு ஒத்துக்காது, யார் அப்புறம் டாக்டர்ட அலையறது, எக்ஸாம் வேற வருது என்றெல்லாம் யோசித்து, அம்மா அடி வைக்கறதுக்குள்ள வாயை மூடுன்னு சொல்லியிருப்பீங்க. பேரனோ பேத்தியோ அதே டிமாண்ட் வச்சா, சின்னக் குழந்தைதானே.. ஒரு ஸ்பூன் கொடுத்தா ஒண்ணும் ஆகாது, ஏதோ பசி போலிருக்குடா.. அதுதான் அடம் பிடிக்கிறான்னு சொல்வீங்களா மாட்டீங்களா? அதுதான் வித்தியாசம். மத்தபடி உங்க பேரக்குழந்தைகளின் எதிர்காலம் நல்லாவே இருக்கும், கவலை வேண்டாம்

   நீக்கு
  5. உண்மையைச் சொன்னால் நம்புவீங்களா மாட்டீங்களா நெல்லை? ஐஸ்க்ரீம் எல்லாம் நான் வீட்டிலேயே பண்ணிடுவேன். கடைகளில் ப்ரான்ட் ஐஸ்க்ரீம் அவங்க பதினைந்து வயது வரை வாங்கியே கொடுத்தது இல்லை. இன்னும் சொல்லப் போனால் பிட்சா பேஸ் வாங்கி வீட்டிலேயே அவனில் வைத்துச் செய்து கொடுத்திருக்கேன். எதுவும் வாங்கிக் கொடுத்துப் பழக்கவில்லை. இப்போ நான் மட்டுமே வீட்டில் சாப்பிடுவதை விரும்புகிறேன். அவங்கல்லாம் மாறி எத்தனையோ வருஷங்கள் ஆச்சு. அதோடு பேரக்குழந்தைகளிடம் பிரியம் மட்டுமே காட்டுவதோடு சரி. மற்றபடி அவங்க உணவு விவகாரத்திலோ, உடை விவகாரத்திலோ, படிப்பு சம்பந்தமாகவோ தலையிடுவதே இல்லை என்பதை ஓர் "கொல்"கையாவே இரண்டு பேரும் வைச்சிருக்கோம். :))))))) பண்ணிக் கொடுக்கச் சொல்லுவதைப் பண்ணிக் கொடுப்பதோடு சரி. குட்டிக்குஞ்சுலுவுக்குத் தலை பின்னிப் பூ வைச்சுக்கப் பிடிக்கும் என்பதால் தினமும் அதைப் பண்ணிடுவேன். பெரிய பேத்திங்க இருவரும் பின்னிக்கிறதை வழக்கமா வைச்சுக்கலை. :))))

   நீக்கு
  6. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 10. பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை...
  மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலரைப் பார்த்திருக்கிறேன் (என் மாமனார் போல). பணம் என்ன இருந்தாலும் பிறருக்கு அதைக்கொண்டு உதவி செய்வார். கல்வி என்று நிறையபேருக்கு உதவியிருக்கிறார். நான் பேரம் பேசுவதைப் பார்த்து, ஆட்டோக்காரனோ கடைக்காரனோ, நாம் மிச்சம் பண்ணும் அந்த 20 ரூபாயை வைத்து வீடு கட்ட முடியுமா? என்பார். அவர் ஆட்டோவில் ஏறும்போது, சார் மீட்டருக்கு என்று ஆரம்பித்தாலே.... நீ என்னை அந்த இடத்துக்குக் கொண்டுபோப்பா என்று சொல்லுவார். யாரும் கேட்காமலேயே ரூபாய் அதிகமாகக் கொடுப்பார். அப்படிப் பட்டவர்களை நான் நிறையமுறை சந்தித்திருக்கிறேன்.

   தி.த சொல்லுவதைப் பார்த்தால், மனம் இருக்கும் மனிதரிடம், பணம் வந்துவிட்டால், அவரும் கொடுக்கமாட்டார் போலிருக்கு

   நீக்கு
 11. புத்தம் புதிய புதன்..

  அன்பின்
  வணக்கங்களுடன்

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 12. //ஈகை என்பது இங்கே என்ன அர்த்தத்தில் சொல்லப்படுகிறது?..//

  வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை..

  வறியவர் என்றால் எதில்?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கேள்வி. ஏழாம் வகுப்பில் என் ஆசிரியர் இந்தக் குறளுக்கு விளக்கம் கொடுத்தபோது, ஈகை என்பது நாம் ஏதுமில்லாத ஏழைகளுக்கு ' அவர்கள் விரும்புகின்ற' பொருளைத் தந்து உதவுவது என்று கூறினார்.

   நீக்கு
  2. // வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை..
   வறியவர் என்றால் எதில்? //

   குறள் எண் 221 :
   வறியவர் = இல்லாதார்க்கு... அது என்ன இல்லை...? சரி அந்த ஒன்று என்ன...?
   செல்வமா...? ஏதேனும் வறியார்க்கு தேவையான ஒன்றா...? அல்லது உணவா...?

   சில அதிகாரங்களில் 1 - 5 குறள்களில் உள்ள கேள்விகள் / ஐயம் / குழப்பம் போன்றதெல்லாம் அதற்கடுத்த 5 குறள்களில் (6-10) விடைகள் இருக்கும்... அதில் இரண்டு குறள்கள் :-

   ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
   மாற்றுவார் ஆற்றலின் பின் - 225
   அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
   பெற்றான் பொருள்வைப் புழி - 226

   அதனால் பசி தீர்த்தல் மட்டுமே + "போதும் போதும்" எனும் பதிலும் வரும்...!

   இன்னும் கொஞ்சம் பின்னாடி போனால்...

   கடவுளை தொழுது விடுவோம் - 1033-ல்...!
   அவர் என்ன சொல்கிறார்...?

   இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
   கைசெய்தூண் மாலை யவர் 1035

   நீக்கு
 13. இந்த B0007 ஐட்டம், அந்த Beautyஐக் குறிக்குதா இல்லை Bagஆ என்பதில் க்ளாரிட்டி இல்லையே

  பதிலளிநீக்கு
 14. v1) இந்த தீபாவளிக்கு என்னவெல்லாம் வாங்கலாம் என்று திட்டம் போட்டிருக்கிறீர்கள்? 


  ஒன்றும் இல்லை. அலமாரி நிறைந்து விட்டது. நாங்கள் வெளியில் போவது வாரத்தில் ஒரு  முறை மட்டுமே பேங்க், போஸ்ட் ஆபீஸ், டாக்டர் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே. 

  2) நவராத்திரி என்றதும் உங்களுக்கு என்னவெல்லாம் ஞாபகம் வருகின்றன?

  50 வருடங்களுக்கும் மேலாக திருவனந்தபுரத்தில் இருக்கிறேன். தமிழர்கள் வாழும் பகுதிகளான கோட்டை, மணக்காடு, சாலை, கரமனை போன்ற பகுதிகள் தவிர ஏனைய பகுதிகளில் நவராத்திரி கொண்டாடுவது அபூர்வம். இங்கு திருவனந்தபுரந்து முக்கிய நிகழ்ச்சிகள் குமார கோயில் முருகன், சரஸ்வதி விக்கிரங்கள் கொலுவுக்கு திருவனந்தபுரம் வருதல், மற்றும் நவராத்திரி மண்டபத்தில் பத்து நாள் சங்கீத கச்சேரி. தசமி வித்யாரம்பம் (வித்யாரம்பம் ஜாதி மத பேதமின்றி எல்லோரும் தங்கள் குழந்தைகளுக்கு விரும்பி செய்வது) பெரிய ஆசிரியர்களும் வித்யாரம்பம் செய்து வைப்பர். 

  3) சமீபத்தில் நீங்கள் எடுத்த 'சிக்கன நடவடிக்கை ' எது?

   வெளியில் செல்லாமல் இருப்பது. ஸ்டாண்ட் சென்று பஸ் ஏற முடியவில்லை. ஆட்டோ அல்லது டாக்ஸி வேண்டும். அது  குறைந்தது 100 முதல் 500 வரை ஆகும். 


  படக்கருத்துகள். 

  நாய் பெற்ற தெங்கம்பழம் கேட்டிருக்கேன். இது நாய் பெற்ற வாழைப்பழம்??
  Jayakumar

  பதிலளிநீக்கு
 15. நாய்..வாழைப்பழம் தொடர்பான சௌதியில் நடந்த விஷயத்தை இங்கு எழுத முடியாது.

  பதிலளிநீக்கு
 16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 17. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

  கடைசி படத்தில் உள்ளவைகளுக்கு பிடித்த வாழை பழத்தை பிடிக்காத வளர்ப்புக்கு கொடுக்கிறார்களே!

  பதிலளிநீக்கு
 18. இப்போ வாழைப்பழம் சாப்பிடும்போது தான் அந்தப் படம் நினைப்பே வந்தது. ஹிஹீஹி, குரங்கார் சாப்பிடுவார் எதுவானாலும். எங்க வீட்டுக் கணினி அறையின் ஜன்னலில் சில நாட்கள் இரவு படுக்க வருவார். அலைபேசி சரியில்லை என்பதால் படம் எடுக்கலை. :(

  பதிலளிநீக்கு
 19. தீபாவளிக்குனு எதுவும் வாங்கறதில்லை. பழைய பொருட்கள் பயன்பாட்டில் இருப்பவை வீணாகிவிட்டால் மாற்றுவது உண்டு. தேவையைப் பொறுத்து.
  நவராத்திரி நினைவுகள் பல உண்டு. மதுரை நினைவுகளை "மதுரைமாநகரம்" பதிவுப்பக்கத்திலும் "ஜாம்நகர்/ராஜஸ்தான்" நினைவுகளை என்னோட "எண்ணங்கள் பதிவுப்பக்கங்களிலும் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னேயே எழுதிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க எழுதாதது நாளைக்கு என்ன சாப்பிடப் போகிறோம் என்பதைப் பற்றி மட்டும்தான். நிறையவே எழுதியிருக்கீங்க, அதற்கான ஆர்வமும் உழைப்பும் இருந்தது. என்ன ஒண்ணு.... நம்பெருமாள்தான் இன்னும் பாதியிலேயே இருக்கார். அவர் என்னைக்கு யதாஸ்தானத்துக்கு வரப்போகிறாரோ..

   நீக்கு
  2. 3 வருஷங்கள் ஆகின்றன நெல்லை. ஶ்ரீரங்கம் கோயிலுக்குப் போய். அந்தப் படிகள் பயமுறுத்துகின்றன. :( அவர் மட்டும் போன வருஷம் ஒரே ஒரு நாள் போயிட்டு வந்தார். நம்பெருமாள் இங்கே பக்கத்து மண்டகப்படிக்கு வந்தால் பார்ப்பது தான். :(

   நீக்கு
 20. நான் எப்போவுமே சிக்கனம் தான். அநாவசியமாகக் கடைகளுக்குச் செல்வது இல்லை. சென்றாலும் எது வாங்கப் போனோமோ அது மட்டும் தான் வாங்கி வருவேன். விளம்பரங்களைப் பார்த்தோக் கடையில் வைத்திருக்கும் பொருட்களைப் பார்த்தோ மனசு ஈர்க்காது. பிள்ளை/பெண் இவர்களோடு போனால் ஒரு நாற்காலியைக் கேட்டு வாங்கிக் கொண்டு பில் கவுன்டர் அருகே நிம்மதியா உட்கார்ந்துடுவேன். எப்படியும் பில் போட அங்கே தானே அவங்க வரணும்! :)

  பதிலளிநீக்கு
 21. இப்போ எல்லோருமே செல்லை மாற்று என்கிறார்கள். நான் இன்னமும் யோசித்து முடியலை. பார்ப்போம்! :(

  பதிலளிநீக்கு
 22. தீபாவளிக்கு எனக்கு திட்டம் எதுவுமில்லை. பேரக் குழந்தைகளுக்கு உடை வாங்கி கொடுப்பதை தவிர.

  நவராத்திரி அம்மாவீட்டில் சுவாமி அறையை அலங்கரிப்பதும் அனைவரும் தேவாரம் பாடுவதும் பிரசாதங்கள் பகிர்ந்து உண்பதும் என மகிழ்ச்சியான காலங்கள். இப்பொழுது தனியளவில் நவராத்திரி பூசை.

  சிக்கனம் என்றால் அத்தியாவசியமான பொருளைத் தவிர வேறு வாங்குவதில்லை.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்விகள் பதில்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.

  படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. கடைசி படத்தில் குரங்கு குழந்தைகள் அழகாக உள்ளன. காலண்டரை பொக்கிஷமாக இத்தனை வருடமாக பாதுகாத்து வைத்த உங்கள் பொறுப்புணர்சச்சியை பாராட்டுகிறேன்.

  எந்த பண்டிகைக்கும் இதுதான் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. இப்போதெல்லாம் வீட்டில் அவரவர் இஸ்டப்பட்ட நேரத்திற்கு துணிகள் வாங்கிக் கொள்வதால், தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே துணிகள் வாங்க வேண்டுமென்ற ஆவல் கூட இல்லாமல் போய் விட்டது.

  நவராத்திரி என்றால் கொலு நினைவுதான் வருகிறது. கொலு பொம்மைகள் வைத்து அந்த பொம்மைகள் நம்முடன் வாழும் அந்த பத்து நாட்கள் சிறு வயதிலிருந்தே மனதுக்கு மகிழ்வாக இருக்கும்.

  என்றுமே நான் கொஞ்சம் சிக்கனந்தான் என வீட்டில் எனக்கு எதிர்ப்புதான் . என்னசெய்வது..? அப்படியே பழகி விட்டது.

  இரண்டு நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை. இன்றும் அதிகமான தாமதந்தான். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலண்டர் இணையத்தில் சுட்டது. கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 24. ஒருவர் இறந்துவிட்டால், அவர் செய்த பெரும் தவறுகள், குற்றங்கள் மறக்கப்படவேண்டுமா? அவர் புனிதராகிவிடுவாரா?

  அவரையே மறந்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். பிறந்தாலே புனிதர் கிடையாது என்று ஒரு சிந்தனை இருக்கிறது இந்து மதத்திலே.

  - மந

  பதிலளிநீக்கு
 25. அப்பா, அம்மாவுக்கு அவர்களின் பிள்ளைகள் மேல் அதிக அன்பு இருக்குமா இல்லை அவர்களின் பிள்ளைகளின்மேல் அதிக அன்பு இருக்குமா? ஒரு பிரச்சனை என்று வந்தால் அவர்கள் யார் பக்கம் நிற்பார்கள்? உண்மையா யோசித்து உண்மை பதில் சொல்லணும்.

  உண்மையா யோசிச்சு உண்மையா சொல்லிடறேன். நீங்களும் உண்மையா கேட்டுக்கிடணும். அப்பா அம்மாவுக்கு பிள்ளைகளின் பிள்ளைகள் மேல் தான் அதிக அன்பு இருக்கும். தன் பிள்ளைகள் மேல் காட்டும் அன்பு கடமை தொட்டது, சற்றேனும் எதிர்பார்ப்புடன் காட்டப்படுவது. பி பி மேல் காட்டும் அன்பு பிரதியாக எதையும் எதிர்பாராதது.

  - மந

  பதிலளிநீக்கு
 26. இந்த தீபாவளிக்கு என்னவெல்லாம் வாங்கலாம் என்று திட்டம் போட்டிருக்கிறீர்கள்? //

  ப்ல வருடங்களாகவே எதுவும் வாங்குவதில்லை. எனவே இந்த வருடத்திலும் இல்லை. இருப்பது போதுமே...

  கீதா

  பதிலளிநீக்கு
 27. நவராத்திரி - ஊர் நினைவுகள் வரும். ரொம்பப் பிடிக்கும் பண்டிகை. முன்பெல்லாம் நவராத்திரி ரொம்பப் பிடித்தது கிரியேட்டிவிட்டி அதுதான் இதன் சிறப்பு...இப்போது யாரேனும் கூப்பிட்டால் கூட போவது சிரமமாக இருப்பதால் ஆர்வம் குறைந்துவிட்டது.

  கீதா

  பதிலளிநீக்கு
 28. 3. சிக்கன நடவடிக்கை - ஹூம் நாம சொல்றதெல்லாம் வீட்டில் செல்லுபடியாகாதாக்கும்...ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!