சனி, 17 செப்டம்பர், 2022

15 பவுன் நகை, 2 லட்சம் ரொக்கம்..... & நான் படிச்ச கதை (JC)

 இவர் அரசு பேருந்து ஓட்டுனர்..

இவர் பணி திருவண்ணாமலை முதல் சென்னை செல்லும் பேருந்தின் ஓட்டுனர்..

நடத்துநர் இல்லா சொகுசு பேருந்து..

சில தினங்களுக்கு முன் இவர் சென்னை சென்று பயணிகளை இறக்கி விட்டு சிரமபரிகாரம் செய்து விட்டு தடபலகை மாற்றம் செய்கையில் பேருந்தில் ஒரு பை கிடைப்பதை பார்த்து எடுத்து உள்ளே என்ன உள்ளது என்று பார்க்க அதர்ச்சி.‌

பணம், நகை, செல் போன் இருந்துள்ளது .‌..  சரி யாராவது வந்து கேட்க கொடுக்கலாம் என இருந்துள்ளார்..

சிறிது நேரத்தில் ஒரு பெண்மனி அழுது கொண்டு நிற்பதை பார்த்து இவர் நம் பேருந்தில் வந்த பெண் போல் உள்ளதே என்ற சந்தேகத்தின் பேரில் அவரை விசாரிக்கையில் பையை தவறவிட்டதாகவும் வந்த பேருந்து எது என தெரியவில்லை என்று அழுது கொண்டு தெரிவித்துள்ளார்..

அம்மா தாங்கள் வந்த பேருந்து ஓட்டுநர் நான் தான் ..  தங்கள் பை என்னிடம் உள்ளது.. வாங்க.. அதிகாரி முன்னிலையில் ஒப்படைக்கிறேன் என் கண்காணிப்பாளர் இடம் அழைத்து சென்று உள்ளார்..

கண்காணிப்பாளர் அப்பெண்மணியிடம் பையில் இருந்த விபரங்கள் கேட்க

15 பவுன் நகை, 2 லட்சம் ரொக்கம், செல் போன் எண்.. பேசிய விபரம் தெரிவிக்க ஆவணங்களை சரிபார்த்து அப்பெண்மணியிடம் பொருளை ஒப்படைத்துள்ளனர்..

ஏறக்குறைய 10 லட்சம் மதிப்புள்ள பொருள் .. ஓட்டுனர் மட்டுமே அறிந்தவர்.. வேறு யாருக்கும் தெரியாது..  மறைத்து இருக்க முடியும்..  ஆனால் நேர்மையாக உரியவரிடம் பொருளை சேர்த்த இந்த ஓட்டுநரை பாராட்டுவோம்..

வறுமையிலும் செம்மை!!!!

இது போன்று ஒட்டுனர்களை பயிற்றுவிக்கும் அரசு போக்குவரத்து கழகங்களை பாராட்டுவோம்!  இவர் பெயர் சிவகுமார்..  திருவண்ணாமலை, சென்னை யில் உள்ள கோரா நண்பர்கள் நேரில் பார்த்து ஒரு வாழ்த்து சொல்லுங்களேன்..

இது காலை 8.00 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்பட்டு 12.00 மணி அளவில் சென்னை கோயாம் பேடு பேருந்து நிலையம் அடையுமாம்..  நல்லவர்களை பாராட்ட நற்செயல்கள் கூடும்..  (நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.)

===================================================================================================


'வறுமை தரும் பரிதாபத்திலும் ஆண் - பெண் பேதம் உண்டு' என்கிறது ப.நாராயணம்மாளின் வாழ்வனுபவம்!

'டீ வியாபாரத்துக்காக என்னோட செல்போன் நம்பர் கொடுத்திருப்பேன்; ஆனா, நேரம் காலம் பார்க்காம அழைப்பாங்க! 40 ரூபாய் பாக்கி இருக்குறப்போ, 20 ரூபாய் ஏற்கெனவே தந்துட்டதா சொல்லி ஏமாத்துவாங்க. 'இந்த பக்கம் எல்லாம் வராதேம்மா'ன்னு முகத்துல அடிக்கிற மாதிரி டீக்கடைக்காரங்க திட்டுவாங்க. கடந்த ஆறு ஆண்டுகள்ல இதுமாதிரி நிறைய அனுபவங்கள்!'  சைக்கிள் கேரியரில் 10 லிட்டர் டீ கேனை சுமந்தபடி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தின் சாலைகளில் வலம் வரும் இவருக்கு பள்ளி செல்லும் இரு மகள்கள், ஒரு மகன்! 

ஓய்வுக்கு நேரம் இருக்குதா?

வயசு கூடுறதனால ஓய்வுக்கு அடிக்கடி உடல் கெஞ்சுது. பத்து நிமிஷம் கண்ணயர்ந்தா, 'நீ இப்படி துாங்கினா பிள்ளைகளோட பசி தணிக்க என்ன பண்ணுவே'ன்னு மனசு சத்தம் போடுது; அடுத்த நிமிஷமே துாக்கத்தை உதறிட்டு சைக்கிள் மிதிக்க ஆரம்பிச்சிடுறேன்!

பிள்ளைகள் என்ன சொல்றாங்க?
'போன தீபாவளிக்கு வாங்கின சட்டையே புதுசாத்தான் இருக்கு; இந்த வருஷம் புதுசு வேண்டாம்மா'ன்னு மகன் சொல்றான்! 'கொடி வரைஞ்சது போக கோலப்பொடி நிறைய இருக்கு; பொங்கலுக்கு தனியா வாங்க வேண்டாம்'னு பொண்ணுங்க சொல்றாங்க! 'போதும்'ங்கிற மனசால அவங்க நிறைவா இருக்குறதா நம்புறேன்!
கடந்த 2017ல் ரயில் மோதி கணவர் பன்னீர்செல்வம் இறந்துவிட, மூன்று பிள்ளைகளுக்கு தந்தையுமாகி நிற்கிறார் அரக்கோணம் கைனுார் கிராமத்தின் 38 வயது நாராயணம்மாள்.

அப்பா இருந்திருந்தால்...?
மூத்த மகள் கலைவாணி: ஸ்கூல்ல 'பேரன்ட்ஸ் மீட்டிங்' நடக்குறப்போ வந்திருப்பார்! எங்க ஸ்கூலுக்கும் டீ கொடுக்குறதால அம்மா வர்றதில்லை!

அம்மா டீ விற்கிறது...
இளைய மகள் ஷாலினி: அவங்க விற்பனை பண்ற இந்த டீ தான் எங்களுக்கு வாழ்வாதாரம்; அவங்களைவிட ஒருபடி மேல இந்த தொழிலை நாங்க நேசிக்கிறோம்!

உங்க விருப்பப்படி ஒருநாள் முழுக்க அமைந்தால்...
எங்களோட ஒருநாள் தேவைங்கிறது ரொம்பவே சின்னது; அதுக்கான பணம் கையில இருக்குதுன்னா, அந்த ஒருநாள் முழுக்க அம்மாவை எங்க பக்கத்துலேயே வைச்சுக்குவோம்!
கலைவாணி சொல்ல ஷாலினியும், உதயாவும் தலையாட்ட, பொங்கி வரும் தன் உணர்வை மறைக்க தலைகுனிந்து கொள்ளும் நாராயணம்மாள், தினமும் 300 டீ விற்கிறார். ஆதரவற்றோர் கேட்டால் இலவசமாகவும் தருகிறார். அதை ஆச்சரியமாகப் பார்த்தால், 'கொடுத்து உதவ பணம் இல்லை... இதை கொடுக்கிறேன்' என்கிறார்.
'நாங்க நல்லா படிச்சு அம்மா படுற கஷ்டத்துக்கு அர்த்தம் கொடுக்கணும்!' - மூன்று பிள்ளைகளின் ஆசை இதுதான்!
==================================================================================================================================

 

நான் படிச்ச கதை பாடம் (JC)

இவ்வாரம் வாத்தியாரின் ஒரு பாடம். செவ்வாய் கிழமை கே வா போ எழுதுபவர்களுக்கு ஒரு உதவி!!

சிறுகதை என்றால் என்ன? – சுஜாதா


சிறுகதை என்பது சிறிதாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை.     A short fictional narrative in prose.  வேறு எந்த வரைமுறைக்குள்ளும் நவீன சிறுகதை அடங்காது. சிறுகதைகளில் ஒரு பொது அம்சம் இருக்கிறது. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய் விட்டால் அது சிறுகதை அல்ல; பஸ் டிக்.கெட் ஒரு வாரம் அல்லது ஒரு வருஷம் கழிந்தோ அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல சிறு கதைகளில் உள்ள பொதுவான அம்சம்

சிறுகதை என்பது தந்தத்தில் பொம்மையைக் கூர்மையாய்ச் செதுக்குவது போன்றது. நல்ல நடையினால் சிறுகதை செதுக்கப்பட வேண்டும். சொல்லுகின்ற செய்தியை, கூர்மையாய்த் தெளிவாய்ச் சொல்ல வேண்டும். இதன் மூலமே சிறுகதையின் கலையம்சத்தைப் பிரகாசிக்கச் செய்ய முடியும்.

சிறுகதையின் இலக்கணம் இப்படி இருக்கலாம்:

1) சிறுகதை என்றால் அளவில் சிறியதாய்  முழுமை பெற்று இருக்க வேண்டும்

2) தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு பிரதிபலிக்க வேண்டும்.

3) சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் தான் தலைதூக்கியிருக்க வேண்டும்.

4) அளவுக்கு அதிகமான கதைமாந்தர்களுக்கு அங்கு இடமில்லை.

5) விரிவான வருணனைக்கும், சூழ்நிலைக்கும் சிறுகதை இடம்தரல் கூடாது.

6) குறைவான, ஏற்ற சொற்களால் இவை சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

7) பாத்திரங்களின் உரையாடல்களில் சொற்செட்டு அவசியம்.

8 ) சிறுகதை நம்பக் கூடிய உண்மைத் தன்மையினைக் கொண்டு விளங்குதல் வேண்டும்.

9) நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் விரிவாகக் கூடிய கதைக்கருவைக் கொண்டிருத்தல் வேண்டும்.

ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு சுவைமிக்க மாம்பழத்தை இறுதிவரை விரும்பிச் சுவைப்பது போன்றதாகும். அவ்வாறு இன்றி, மாம்பழத்தை முதல் கடியிலேயே வீசியெறிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறுகதை ஏற்படுத்தினால், அச்சிறுகதையினால் பயன் ஒன்றும் இல்லை.

ஒரு சிறுகதைக்குப் பின்னே உள்ள படைப்பாளரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாகக் கூறும் செய்திஇவையனைத்தும் இலக்கண வரம்புகளை விட முக்கியமானவை.

மற்றவர்கள் சொல்லுவது:

வசன நடையில் உள்ள மிகச் சிறிய கற்பனைப் பொறி தான் சிறுகதை. அது 10000 வார்த்தைகளுக்குள் அரைமணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்கலாம்  என்கிறார். எச் ஜி வெல்ஸ்.

ஒரு குறிப்பிட்ட ஒரே சம்பவத்தைச் சொல்லும் கற்பனை சிறுகதை என்கிறார். சாமர்ஸெட் மாம்.  அது துடிப்போடு மின்னலைப் போல் மனதோடு இணையவேண்டும். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை சீராக  கோடு போட்டது போல்  செல்ல வேண்டும் என்கிறார்.

ஒரு சிறு செய்தியை அல்லது சிறு அனுபவத்தைக் கருவாகக் கொண்டு உரைநடையில் எழுதப்படுவது சிறுகதையாகும்.

தி.ஜானகிராமன் சிறுகதை எழுதுவது பற்றி இப்படிக் கூறுகிறார்:

ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக் கொண்ட விஷயம் உணர்வோ சிரிப்போ புன்சிரிப்போ நகையாடலோ முறுக்கேறிய துடிப்பான ஒரு கட்டத்தில் தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும் ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ளவேண்டும். தெறித்து விழுவது பட்டுக் கயிராக இருக்கலாம் அல்லது  எஃகு   வடமாகவோ பஞ்சின் தெறிப்பாகவோ குண்டு மருந்தின் வெடிப்பாகவோ இருக்கலாம். .

தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சிக்கு மிக அதிகமாகத் துணை நின்றவை, தமிழில் வெளிவரும் வார, மாத இதழ்களே ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்தப் படைப்பிலக்கியம் இன்று மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

சுட்டி :  சிறுகதை என்றால் என்ன? – சுஜாதா

39 கருத்துகள்:

 1. நாராயணம்மாள் டீ விற்று குடும்பத்தைக் காப்பாற்றுவது நெகிழ வைக்கும் விஷயம் ஒரு புறம் அதைவிடக் குழந்தைகள் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கைச் சூழலையும் அம்மாவையும் புரிந்து கொண்டு தங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு பொறுப்பாக ஆதரவாக இருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அக்குடும்பம் நல்லபடியாக முன்னுக்கு வர வேண்டும். வாழ்த்துவோம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 2. ஓட்டுநர் சிவகுமார் அவர்களுக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 3. சுஜாதா அவர்களின் இந்தக் கட்டுரையை வாசித்திருக்கிறேன். பயனுள்ள ஒன்று.

  ஆனால் கதை எழுதும் போது இதெல்லாம் மனதில் வருவதில்லையே!! ஹிஹிஹி....பஸ்டிக்கெட் தான்!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 4. நல்ல கதைகள் எழுதப்பட்டாலும் கூட, எழுதியவர் கொஞ்சமேனும் அறியப்படுபவராக இருக்க வேண்டும். இல்லை என்றால் பேசப்படுவதில்லை. அறியப்படுபவர் எழுதும் கதைகள் சுமாராக இருந்தாலும் கொண்டாடப்படுவதும் நடக்கத்தான் செய்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோரும் ஒரு புள்ளியில் தொடங்கியவர்கள்தாம். திறமையினால்தான் புகழ் பெறுகிறார்கள். பெயர் பெற்றபின் சுமாரைக்கூட குறை சொல்வதில்லை பொதுஜனங்கள்... தற்போதுள்ள சரவணபவன் போல. திறமையாளர்களைப் பிறர் அறிய வைக்க, இருட்டறையில் இருக்கும் மணிவிளக்கை, ஹாலில் பிறர் பார்க்கும்படியாக வைத்து விளக்கின் அழகை மற்றவர்கள் உணரச் செய்ய வைப்பதுபோல் சிலரின் உதவி தேவையாயிருக்கும்.

   நீக்கு
  2. பெயர் பெற்றபின் சுமாரைக்கூட குறை சொல்வதில்லை பொதுஜனங்கள்//

   ஆமாம் நெல்லை...அதேதான்.

   சரவணபவன் மட்டுமில்லை....இங்கு எம் டி ஆரும்தான். விலை அதிகமோ அதிகம் ஆனால் என்னவோ தரம் அவ்வளவு நல்லால்ல ஆனா அதுக்கும் கூட்டம் மொய்க்குதுபாருங்க....

   //ஹாலில் பிறர் பார்க்கும்படியாக வைத்து விளக்கின் அழகை மற்றவர்கள் உணரச் செய்ய வைப்பதுபோல் சிலரின் உதவி தேவையாயிருக்கும்.//

   அதுவும் தான்,,,

   கீதா

   நீக்கு
  3. சரவண பவன் என்பதைப் பார்த்ததும்....இங்கு பொருத்தமில்லாத ஒன்னு நினைவுக்கு வருது, பங்களூரில் பெரும்பான்மையான வீடுகளில் அடுக்களை என்பதே ஒரு சும்மா பான்ட்ரி ரூம் போலத்தான்....கேட்டா சொல்றாங்க இங்க பெரும்பான்மையானவங்க வீடுகளா கட்டி வாடகைக்கு விடுவதுதான் தொழில்னு அப்ப எதுக்கு கிச்சன பெரிசா ஷெல்ஃபோடு கட்டணும்...அதுவும் பெரும்பான்மையா வரவங்களும் வெளிலதான் சாப்பிடறவங்க. சமையல்ன்றதே இங்கு இல்லை....அதான் பாத்தீங்கனாவே தெரியுமே எத்தனை சாப்பாட்டுக் கடைகள்னு ஒரே தெருவிலயே 10 கடை, சாட் கடை, ஜூஸ் கடை அப்புறம் என்ன? அதனால இப்படித்தான் இருக்கும்னு

   வீடு பார்த்து பார்த்து நொந்து போய்ட்டேன், நமக்கோ வீட்டுல அடுக்களை ரொம்ப முக்கியம்!!!!

   கீதா

   நீக்கு
  4. ஓ...நீங்க வீடு மாறுவதை மறந்துபோயிட்டேன். நிச்சயம் சரியான வீடு அமையும். நானும், அப்போவே முன் யோசனையா 4 சிறிய வீடுகள் சேர்ந்தார்ப்போல் இருக்கும்படியாக ஒரு இடத்தை வாங்கியிருக்கணும். மாமனாரிடம் சொல்லியிருந்தால் நடந்திருக்கும். எனக்கு முன் யோசனை இல்லை.

   நீக்கு
 5. நீதியின் சனிக்கிழமை..

  அன்பின்
  வணக்கங்களுடன்

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 6. திருவண்ணாமலை திரு சிவகுமார் அவர்கள் பல்லாண்டு வாழ்க..

  பதிலளிநீக்கு
 7. // 40 ரூபாய் பாக்கி இருக்குறப்போ, 20 ரூபாய் ஏற்கெனவே தந்துட்டதா சொல்லி ஏமாத்துவாங்க... //

  அவர்களை காலம் கவனித்துக் கொள்ளும்..

  ரயில்வே ஸ்டேசன்களில் விற்பது போல் இல்லாமல்
  தேநீர் தயாரிப்பில் நீதியும் நியாயமும் இருந்தால் நிச்சயம் தெய்வம் கை கொடுக்கும்..

  பதிலளிநீக்கு
 8. இங்கே உள்ளதன்படி முன்னூறு டீ விற்கப்படுகின்றது.. கூட்டிக் கழித்துப் பார்த்தால ஆதாயம் தான்..

  கடை வாடகை, கரண்டு பில்லு என்று ஏதும் இல்லை..

  கடும் உழைப்பு.. வருமானத்திற்கு அது அவசியம்..

  சிக்கனத்தைக் கைக்கொண்டால சிறப்பு தான்..

  பதிலளிநீக்கு
 9. // இவ்வாரம் 
  வாத்தியாரின் 
  ஒரு பாடம். செவ்வாய் கிழமை கே வா போ க எழுதுபவர்களுக்கு ஒரு 
  உதவி!..

  சிறுகதை என்றால் என்ன? – சுஜாதா.. //

  குதிரை இப்படித்தான் ஓட வேண்டும் என்றிருந்தால் ஓட்டக் (வண்டி) குதிரையாகத் தான் இருக்கும்..

  இப்படித்தான் குதிக்க வேண்டும் என்றிருந்தால் தெருவில் ஆட்டக குதிரை தான்..

  நல்லவேளை.. இந்தப் பாடங்கள் எதுவும் எனது நினைவுக்கு வருவதேயில்லை..

  பதிலளிநீக்கு
 10. கிராமத்துக் கதை ஒன்று.. அது பொது வெளிக்கு ஆகாது.. ஆனாலும் அது தான் உண்மை..

  கற்பனை காட்டருவி என்றால் சிற்றோடை சிறுகதை..

  புல்லுக்கும் ஓடிப் பொசியும் தண்ணீரை சிமெண்ட் குழாய்க்குள் செலுத்தும்
  நவீனத்துவம் போலத் தான்..

  பதிலளிநீக்கு
 11. @ கீதா..

  // அறியப்படுபவராக இருக்க வேண்டும். இல்லை என்றால் பேசப்படுவதில்லை.. //

  நிதர்சனமான கருத்து..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது எனக்கு அடிக்கடித் தோன்றும் ஒன்று துரை அண்ணா. அதுவும் இப்போது எழுதுபவர்கள் அதிகம்....

   நமக்கிருக்கும் பல கஷ்டங்களில், சூழல்களில், தினப்படியையே கழிப்பதில் சிரமம் இருக்கும் போது இடையே எதை நினைவில் வைத்திருப்பது என்ற சிரமம் வேறு. கற்பனையோ காட்டாறு போல...ஆனால் அதை எழுதி வைக்க முடியாத அளவு வேலைகள், மனதில் எத்தனையோ சிந்தனைகள்....மனம் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டே இருக்கு. எதற்குனு மண்டையை உடைத்துக் கொள்வது?

   ஆனால் இதற்கிடையிலும் எழுதுபவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். என்னால் முடியவில்லை. அந்த வருத்தம் நிறையவே உண்டு எனக்கு என் அடி மனதில் அவ்வப்பொது எழும். அதைக் கடந்து மனதை மகிழ்வாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடந்து செல்லுதலும் கூடவே.

   கீதா

   நீக்கு
 12. திருவண்ணாமலை சிவகுமார் அவர்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 13. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

  பதிலளிநீக்கு
 14. திரு.சிவகுமாரின் நேர்மைக்கும் நல்ல மனதுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!
  நாராயணம்மாளின் வாழ்க்கை இன்றைய பல பெண்களின் வாழ்க்கை! தன் குழந்தைகளுக்காக ரத்தம் சிந்தி உழைக்கும் இந்தப்பெண்மணியின் வாழ்க்கை மேன்மேலும் உயரம் சென்றடைய வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 15. சுஜாதாவின் கதைகளப் படிக்கலாம்.. போய்க் கொண்டே இருக்கலாம்..

  பதிலளிநீக்கு
 16. நாரணம்மாளின் வாழ்க்கை, அவர் தொழில் பிரமிக்கவைக்கவில்லை. தொழிலில் பேதமில்லை. ஆனால் அவர் குழந்தைகளின் எண்ணவோட்டம், போதும் என்ற திருப்தி என்னைக் கவர்கிறது. அவங்க நல்லா படிப்பதே, தாயின் கஷ்டவாழ்க்கைக்குச் செய்யும் கைம்மாறு.

  பதிலளிநீக்கு
 17. நேற்று திருச்சிற்றம்பலம் பார்த்தேன். குரங்கு பொம்மை படத்திற்கு அப்புறம் இவ்வளவு அருமையான படம், நான் பார்த்ததில்லை. வெகு இயல்பான படம். தனுஷ் கனடா செல்வது மட்டும் ஒட்டவில்லை. கதைதான் திரைப்படத்தின் அடிப்படை என்று இந்தக் காலத்தில் நிரூபிக்க வந்த படம். சிறுகதைக்கும் ஒரு உதாரணம்

  பதிலளிநீக்கு
 18. சிவக்குமாரைப்போன்ற மனிதர் பலர் இருக்கக்கூடும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் . இதுதான் இந்த நாட்டின் உண்மையான கேரக்டர். இப்படித்தான் இந்த தேசம் நகர்ந்துகொண்டிருக்கிறது காலங்காலமாக..

  பதிலளிநீக்கு
 19. ஓட்டுனர் சிவகுமார் மற்றும் டீ விற்கும் நாராயணியம்மாள் உயர்ந்த பிறவிகள்.

  பதிலளிநீக்கு
 20. @ கீதா..

  // எழுதி வைக்க முடியாத அளவு வேலைகள், மனதில் எத்தனையோ சிந்தனைகள்....
  மனம் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டே இருக்கு..//

  இருக்கலாம்... அதற்காக குழாய்க்குள் ஓடுகின்ற தண்ணீராக இருக்க முடியாதே..

  அவர்கள் சொல்கிற மாதிரியில் எழுதுவதற்கு வேறு ஆட்கள் எதற்கு?.. அவர்களே அவர்களைப் போல் எழுதி விடலாமே..

  பயிற்சி எடுத்துக் கொண்டு எல்லாம் சிறுகதை எழுத முடியாது..

  எழுத எழுத அதுவே பயிற்சி ஆகி விடும்...

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் சகோதரரே
  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.

  அரசு பஸ் நடத்துனரின் ஆசையற்ற நல்ல செயல் மிகவும் போற்றுதலுக்குரியது. இவரைப் போல சிலர் தன் கடமையென, பிற எதற்கும் ஆசைப்படாமல் இருப்பதால்தான் உலகம் இன்றும் தன் இயல்பு மாறாமல் இயங்கி கொண்டிருக்கிறது.

  ப. நாராயணம்மாளின் மனோ திடத்தை பாராட்டுவோம். அவரின் குழந்தைகள் அவரின் உழைப்பை என்றும் மறவாமல் சிறந்த முறையில் வாழ்வில் வாழ்ந்து அவரை கௌரவிக்க வேண்டுமாய் இறைவனை பிரார்த்தித்துக் கொள்ளுவோம்.

  எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதைகள் எழுதுவதற்கான இலக்கணங்களை படிக்கத் தந்த ஜெயக்குமார் சந்திரசேகர் சகோதரருக்கு மனமார்ந்த நன்றி.

  கருத்துரைகள் எல்லாம் . நன்றாக உள்ளது.

  /பயிற்சி எடுத்துக் கொண்டு எல்லாம் சிறுகதை எழுத முடியாது..

  எழுத எழுத அதுவே பயிற்சி ஆகி விடும்.../

  சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் விளக்கமும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் விளக்கமும் நன்றாக உள்ளது. //

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 22. தம்பி துரையின் மனதின் குரலை (Maan ki baat) மிகவும் ரசித்தேன். நல்ல எழுத்தாளர்களின் குணம் இது. மனத்தில் இருப்பதை மறைக்காமல் சொல்வது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // நல்ல எழுத்தாளர்களின் குணம் இது. மனத்தில் இருப்பதை மறைக்காமல் சொல்வது... //

   ஜீவி அண்ணா அவர்களது கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 23. இந்த மாதிரி பேட்டி மாதிரி
  கத்தரித்து எடுத்ததெல்லாம் நிஜ சுஜாதாவை பிரதிநிதித்துவப் படுத்தாது. அவர் எழுத்தைக் கூர்மையாகக் கவனித்தவர்கள் கதை எழுதும் கலையில் அவர் எவ்வளவு வேறுவிதத் தனித்தன்மைகளைப் பெற்றிருந்தார் என்பதை அறிவார்கள். ஆக மேற்கண்ட உபதேசங்களும் சுஜாதாவே சொன்ன லாண்டரி கணக்கு மாதிரி தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // கதை எழுதும் கலையில் அவர் எவ்வளவு வேறுவிதத் தனித்தன்மைகளைப் பெற்றிருந்தார்..//

   சிறப்பு..

   நீக்கு
 24. இந்தப் பகுதியை அயர்ச்சியில்லாமல் தொடர்ச்சியாகத் தொடரும் ஜெஸி ஸாருக்குப் பாராட்டுகள். எடுத்துக் கொண்ட பணியை பாதியில் விட்டு விடாமல் பொறுப்புடன் தொடரும் அவரின் சிறப்பு இது. அவர் களைப்பைப் போக்க வேறு சிலரும் இந்தப் பகுதிக்கு எழுத முன் வந்தால் வேறு பட்ட கோணங்களில் பிறரின் வாசிப்பு ரசனைகளையும் நாம் வாசித்துக் களிக்க வாய்ப்பிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல யோசனை தான்.. இதற்கு முன்பே ஒருதரம் சொல்லி
   இருக்கின்றீர்கள்.. இருந்தாலும் அந்த அளவுக்கு சாமர்த்தியம் போதாது..

   இன்று காலையில் பதிவிலுள்ள செய்தி ஒன்றைப் படித்ததும் மனதுக்குள் மத்தாப்பு.. அப்பொழுதே சிறுகதையாக வடித்தேன்.. திங்களன்று காலை தஞ்சையம்பதியில் வெளியாகும்...

   நீக்கு
 25. ஓட்டுனர் சிவக்குமார் நல்ல குணம் வாழ்க , வாழ்க வளமுடன்.

  //வயசு கூடுறதனால ஓய்வுக்கு அடிக்கடி உடல் கெஞ்சுது. பத்து நிமிஷம் கண்ணயர்ந்தா, 'நீ இப்படி துாங்கினா பிள்ளைகளோட பசி தணிக்க என்ன பண்ணுவே'ன்னு மனசு சத்தம் போடுது; அடுத்த நிமிஷமே துாக்கத்தை உதறிட்டு சைக்கிள் மிதிக்க ஆரம்பிச்சிடுறேன்!//

  தாய்மை வாழ்க ! நெகிழ்ந்து போகிறது உள்ளம்.
  அம்மாவின் கஷ்டம் தெரிந்த குழந்தைகள், பொறுப்புணர்ந்து படித்து தாயை நன்கு பார்த்து கொள்வார்கள்.

  பதிலளிநீக்கு
 26. தி.ஜானகிராமன் , சுஜாதா சிறுகதை என்றால் என்ன என்ற பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 27. //இந்தப் பகுதியை அயர்ச்சியில்லாமல் தொடர்ச்சியாகத் தொடரும் ஜெஸி ஸாருக்குப் பாராட்டுகள். எடுத்துக் கொண்ட பணியை பாதியில் விட்டு விடாமல் பொறுப்புடன் தொடரும் அவரின் சிறப்பு இது//

  ஜீவி அய்யாவுக்கு நன்றி. தற்போது மிகவும் மெனக்கிடாமல் கட்டுரையை எளிமையாக ஒரு சில கருத்துக்களுடன் முடித்து விடுகிறேன். ஆகவே களைப்பு அதிகம் இல்லை. 

  சுஜாதாவின் நடை எடுத்துக்கொண்ட கருப்பிரகாரம் மாறும் என்பது உண்மை. 
  இதைப்பற்றி ஒரு நீண்ட கட்டுரையே உதாரணங்களுடன் எழுதமுடியும். 
  மற்றவர்கள் இப்பகுதிக்கு எழுதவேண்டும் என்று விருப்பத்தால் தான் நானும் தொடர்ந்து எழுதுகிறேன். அந்த கிரியா ஊக்கி (catalyst) செயல்பட தாமதம் ஆகிறது. 

  கருத்துரைகளுக்கு நன்றி கூறுகிறேன். 

  Jayakumar

  பதிலளிநீக்கு
 28. சிவகுமாரை போற்றுகிறோம்.

  உழைக்கும் கரங்கள் நலமுடன் வாழட்டும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!