செவ்வாய், 11 அக்டோபர், 2022

சிறுகதை - இணக்கம் - பானுமதி வெங்கடேஸ்வரன்

இணக்கம் 

பானுமதி வெங்கடேஸ்வரன் 

'நமஸ்காரம் அண்ணா.!" உற்சாகமாக ஒலித்தது கீர்த்திவாசன் குரல். 

"சொல்லு, எப்படி இருக்க? என்ன விசேஷம்?"

எக்ஸலெண்ட்! நெக்ஸ்ட் சண்டே நீங்க ஃப்ரீதானே?

"எனக்கு என்ன பெரிசா ப்ரோக்ராம்?.. என்ன விஷயம் சொல்லு.."

"க்ருபாவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிறது, அடுத்த சண்டே என்கேஜ்மெண்ட். நீங்களும் மன்னியும் கண்டிப்பா வந்து நடத்தி கொடுக்கணும்".

"வெரி குட்! வெரி குட்!.. கண்டிப்பா வரோம், அதை விட வேற என்ன வேலை?' பொண்ணு எந்த ஊர்?"

"பொண்ணோட நேடிவ் கோயம்புத்தூர்.. இப்போ இங்க சென்னையில்தான் ஒர்க் பண்ரா." 

"எப்போ கல்யாணம்?" 

தை மாசம்..

"தை னா இன்னும் ஆறு மாசம் இருக்கே? ஏன் அவ்வளவு தள்ளிப் போடற?"

"அவாளுக்கு பேசிப் பழகி புரிஞ்சுக்கணுமாம்..தவிர கல்யாண ஏற்பாடுகள் பண்ண வேண்டாமா..?"   

"கல்யாண ஏற்பாடா? அதெல்லாம் காண்ட்ராக்டர் தானே பண்ணப் போறார்?"  என்று மட்டும் கேட்டேன். ஆறு மாதத்தில் என்ன புரிந்து கொள்ள முடியும்? என்று தோன்றியதை கேட்கவில்லை. 

"மண்டபம் பார்க்கணுமே?"

"இது சொன்னாயே, ரொம்ப கரெக்ட், என்கேஜ்மெண்ட் எங்க பண்ணப் போற?"

"வேளச்சேரி ஏ டூ பி, நான் உங்களுக்கு டீடைல்ஸ் அனுப்பறேன்.." கீர்த்திவாசன் தொடர்பை துண்டித்தான். 

*********

கீர்த்திவாசனை எனக்கு சிறு குழந்தையாக இருந்ததிலிருந்தே  தெரியும். எங்கள் வீட்டிற்கு அடுத்த வீடு. என்னை விட பத்து வயது சிறியவன்.  என்னிடம் கணக்கு பாடங்கள் கேட்டுக் கொண்டவன். மேற்படிப்பு, உத்தியோகம் எல்லாவற்றிலும் என் ஆலோசனைக்கு  மதிப்பு கொடுத்தவன். 

அவன் அம்மாவும், என் அம்மாவும் நெருங்கிய தோழிகள். அவன் அக்காவும் என் தங்கையும் ஒரே வகுப்பு, குடும்ப நண்பர்கள் என்பதற்கு சரியான உதாரணம். அதுவும் என்னுடைய அலுவலகத்திலேயே அவனும் வேலைக்கு சேர்ந்த பிறகு அலுவலக அரசியல், நெளிவு, சுளிவுகள், எல்லாவற்றிலும் அவனை வழி நடத்தியதில் என்னை அவனுடைய குருவாகவே கருதத் தொடங்கி விட்டான். எல்லோரிடமும் என்னை தன்னுடைய மென்டார், காட் ஃபாதர் என்றெல்லாம் அறிமுகப்படுத்துவான். நான் வேறு நிறுவனம் மாறினாலும் அவனுடன் தொடர்பு மட்டும் விட்டுப் போகவேயில்லை. 

அப்படிப்பட்ட கீர்த்திவாசனின் மகனின் நிச்சயதார்த்தத்திற்கு செல்லாமல் இருக்க முடியுமா? நானும் என் மனைவியும் சென்றோம். இப்போதைய மாடல் படி மிகவும் விமரிசையாக நடத்தப்பட்ட நிச்சயதார்த்தம். அதில் கேண்டிட் ஃபோட்டோகிராஃபி என்று விதம் விதமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள். மூன்று
இனிப்புகளோடு விருந்து. எல்லாவற்றையும் விட முக்கியமாக ஜோடிப் பொருத்தமும் நன்றாக இருந்தது. 

நாங்கள் அமெரிக்கா சென்று இரண்டு வருடங்களாகி விட்டது, மகன் வரச்சொல்லி அழைத்தான். அடுத்த மாதம் விடுமுறையில் வரும் மகனோடு நாங்களும் கிளம்புவதாக இருக்கிறோம். திரும்பி வர ஆறு மாதங்களாகும். வரும் வழியில் கட்டாரில் இருக்கும் மகள் வீட்டில் இரண்டு மாதங்கள், ஆக திரும்புவதற்கு எட்டு மாதங்கள் ஆகி விடலாம். இப்பொழுதே  திருமண பரிசை கொடுத்து விடலாம் என்றேன், என் மனைவி ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் பூங்கொத்து மட்டும் கொடுத்து வாழ்த்தி விட்டு வந்தோம். திருமணத்தை நேரிடையாக கண்டு களிக்க வெப் லிங்க் அனுப்பி இருந்தான். பார்த்தோம். 

*****
ஊர் திரும்பியதும் க்ருபாவையும், அவன் மனைவியையும் விருந்திற்கு அழைக்க வேண்டும். நாம் நேரில் போய் கல்யாணம் விசாரித்து விட்டு, அப்படியே அவர்களை சாப்பிட கூப்பிட்டு விட்டு வரலாம் என்று புது மணமக்களுக்கு பரிசாக வெள்ளி ஜோதி ஒரு ஜோடி வாங்கி கொண்டேன். 

கீர்த்திவாசன் எங்கள் வருகையை எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தது போல தெரிந்தது. "வாங்கோ வாங்கோ! எப்போ ஊரிலிருந்து வந்தேள்?" என்று எங்களை வரவேற்று உட்காரச் சொன்னவன், உள்ளே சென்று மனைவியை அழைத்தான். அவள் படுத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். 'இந்த நேரத்தில் படுத்துக் கொள்ள மாட்டாளே' என்று நினைத்தேன். 'உடம்பு சரியில்லை' என்றாள்.  வழக்கம் போல பேசவும் இல்லை. 

"ஆல்பம் வந்து விட்டதா?" 

"இல்ல, அவன் பாட்டுக்கு எக்கச்சக்கமா போட்டோஸ் எடுத்து ஒரு பென் ட்ரைவ் கொடுத்து நம்மை செலக்ட் பண்ணி கொடுங்கள். என்கிறான். இங்க யாருக்கு டைம் இருக்கு?"

"உண்மைதான், டிஜிட்டல் என்பதால் நிறைய எடுத்து விடுகிறார்கள். சரி எங்க க்ருபாவும்? திவ்யாவும்?" 

"க்ருபா இங்கதான் இருக்கான்" என்றவன்,"க்ருபா.." என்று குரல் கொடுத்ததும்,"டூ மினிட்ஸ்" என்று உள்ளிருந்து குரல் வந்தது. சற்று நேரத்தில் சட்டையை மாட்டியபடி வெளிப்பட்டான் க்ருபா. அவனும் கூட இளைத்தது போல இருந்தான். 

"ஹலோ ஆங்கிள், ஹாய் ஆண்டி, எப்படி இருக்கீங்க?"

"நாங்கள் ஃபர்ஸ்ட் கிளாஸா இருக்கோம். நீ எப்படி இருக்க? எங்க உன் பெட்டர் ஹாஃப்? கண்ணுல காட்ட மாட்டேங்கற?"

"அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கா.."

"அதுக்குள்ள அனுப்பிட்டயா?.. குட்! கங்ராஜுலேஷன்ஸ்"

"அதெல்லாம் இல்ல அங்கிள்.." என்று சங்கடமாக சிரித்தான்.

"உங்.களுக்காக கிஃப்ட் வாங்கிட்டு வந்தோம். திவ்யா இல்லங்கறயே? சரி நீ மட்டும் வாங்கிக்கோ" நான் சொன்னதும் க்ருபா அப்பாவையும் அம்மாவையும் பார்த்தான். பின்னர்,"இல்லை அங்கிள், இந்த கிஃப்ட் இப்போ வாங்கிக்க முடியாது.. "என்றவன் கொஞ்சம் இடைவெளி விட்டு,"வீ ஆர் செபரேடட், டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணியிருக்கோம்" என்றதும் அதிர்ந்து போனேன். 

"வாட்..?  வொய்?"

"எங்களுக்குள்ள கம்பாட்டிபிலிட்டி இல்லை, ஸோ வீ ஹேவ் டிசைடட் டு பார்ட்.." சாதாரணமாக சொன்னான். உள்ளுக்குள் எப்படி உணர்ந்தானோ? 
அவன் தாய் சட்டென்று எழுந்து சமையலறைக்குள் சென்றாள். கீர்த்திவாசன் மேஜை மேல் இருந்த புத்தகத்தை புரட்டினான். ஹாலில் விரும்பத்தகாத அமைதி நிலவியது. 

அதற்குப் பிறகு எங்களாலும் அங்கு இருக்க முடியவில்லை. கீர்த்திவாசன் மனைவி கொண்டு வைத்த காபியை குடித்து  விட்டு, கிளம்பினோம். 

வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது என் மனைவி,"கம்பாட்டிபிலிட்டி இல்லன்னு மூணு மாசத்துக்குள்ள தெரிஞ்சுடுமா? கல்யாணத்துக்கு முன்னால டேட் பண்ணினார்களே? அப்போ தெரியலையா?" என்று கேட்டாள்.

"நம்ம ரெண்டு பேருக்கும் கம்பாட்டிபிலிட்டி இருக்கா?" என்று பதிலுக்கு நான் கேட்டதற்கு எப்போதும் போல் பதில் சொல்லாமல் சிரித்தாள். அந்த சிரிப்புக்கு என்ன பொருள் என்று எப்போதும் போல் எனக்கு புரியவில்லை. 

*****

42 கருத்துகள்:

  1. //திருமணத்தை நேரிடையாக கண்டு களிக்க வெப் லிங்க் அனுப்பி இருந்தான். பார்த்தோம். //

    காலம் எவ்வளவு மாற்றங்களை தருகிறது.

    ஆறு மாதத்தில் புரிந்து கொள்ள முடியுமா ? என்ற போதே இது விவாகரத்து ஆகும் என்று கணிக்க முடிந்தது.

    ஹூம் இனி இவைகளை சாதாரணமாக நடக்கலாம்.

    கடந்துதானே ஆகணும் வேறு வழி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்11 அக்டோபர், 2022 அன்று AM 9:30

      மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நன்றி

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அட! இன்று பானுக்கா எழுதிய கதையா!! ரொம்ப நாளாகிவிட்டது. வாசித்துவிட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை./மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. தற்கால இளைஞர்களின் எண்ணங்கள். இப்படித்தான். :(

    பதிலளிநீக்கு
  6. அட்டகாசமான கதை பானுக்கா. எழுதியவிதம் சூப்பர்ப். க்ரிஸ்பாக அப்படியே நடப்பதை சொல்லியவிதம்...அருமை.

    6 மாதத்தில் என்ன புரிந்துவிடும்? டிட்டோ....அதை அப்படியே கடைசிவரியில் முந்தைய தலைமுறையிலும் இருக்கத்தான் செய்கிறது என்று எண்ணப்போக்கையும் சொல்லி ஆனால் இப்போதைய தலைமுறைக்கும் முந்தைய தலைமுறைக்கும் உள்ள வித்தியாசத்தை கால மாற்றாத்தை நச்சென்று சொல்லிவிட்டீர்கள் இதுதான் கதையின் ஹைலைட். டாலரென்ஸ் லெவல்!! சூப்பர்ப்! அதிகமாக இப்போது நடக்கும் ஒன்றை நீங்கள் சொல்லிய விதம் தான் செம...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //6 மாதத்தில் என்ன புரிந்துவிடும்?// - நீங்க சொல்றபடி பார்த்தால் 7 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தால்தான் நன்கு புரியும். அதற்கப்புறம் மேரேஜ் வச்சிக்கலாம்னு சொல்றீங்களா? இன்னாபா இது..இந்தக் காலத்து அம்மாக்கள் இவ்வளவு மோசமான சஜஷன்ஸ்லாம் அள்ளி விடறாங்க. அடுத்தவங்க எக்கேடு கெட்டுப் போனா நமக்கென்ன என்பதாலா?

      நீக்கு
    2. ஹையோ நெல்லை ஒழுங்கா கருத்தை வாசிக்காம சொல்லக் கூடாது....நான் அப்படிச் சொல்லவே இல்லையே...உங்களோடு விவாதத்தில் நான் இல்லை...என் கருத்தை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல் சொல்லியிருக்கீங்க...

      கீதா

      நீக்கு
    3. உங்களுக்குப் புரியலைனா என்ன?!!!!!!!!!கதை எழுதிய பானுக்காவுக்கு என் கருத்து நன்றாகப் புரிந்தது. கதையின் ஹைலைட்டே அதுதான் அதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன்...எழுதியவங்களுக்குப் புரிந்தால் போதும்

      கீதா

      நீக்கு
    4. //நான் அப்படிச் சொல்லவே இல்லையே...// - ஹா ஹா ஹா... ப்ரெஷர் 190ஐத் தாண்டிவிட்டது போலிருக்கே....

      நீக்கு
    5. ஹாஹாஹா நெல்லை நீங்க வேற எனக்காவது ப்ரஷராவது !!! இந்த இடத்துல மட்டும் அக்கான்னு சொல்லிக்கிறேன்!! போனா போகுது....தம்பிக்கிட்ட சும்மா ஒரு சின்ன ...என்ன சொல்றது சண்டைனா சரி வராது....சும்மா சீண்டல்னு வைச்சுக்கோங்க......வழக்கமா சிரிப்பு போடுவேன் இந்த வாட்டி !!!!!!! இப்படி போட்டுட்டு ஓடிட்டேன்....ஹிஹிஹிஹி....அதான் உங்களுக்கு ப்ரஷர் போல தோணிருக்கு!! (ஆனா இங்க வீட்டில் அந்த சமயத்தில் அந்தக் கருத்து போடும் போது கொஞ்சம் பரபரப்புதான்!!!!!!!!

      கீதா

      நீக்கு
  7. அன்பின் வணக்கங்கங்கள்..

    வாழிய நலம்...

    பதிலளிநீக்கு
  8. ஊருக்குள் பரவலாக நடந்து கொண்டிருக்கும் நவீன நாகரிகம்...

    பானுமதி வெங்கடேஸ்வரன் தனது கைவண்ணத்தில் காணொளி போலத் தந்திருக்கின்றார்..

    சிறப்பு...

    பதிலளிநீக்கு
  9. கடைசி வரியில் இருக்கிறது வாழ்க்கையின் கோட்பாடு. இதை வாசித்ததும் சமீபத்தில் நான் ரசித்துப் பார்த்த ரேவதி சங்கரன் அவர் கணவர் இருவரும் இணைந்து அளித்த பேட்டி காணொளியை நினைவுபடுத்திக் கொள்ளாமல் இருக்க முடியலை.

    குடும்ப வாழ்க்கைன்னா விட்டுக் கொடுத்தல் ஒருவரை ஒருவர் மதித்தல் இது ரொம்ப முக்கியம் தன் கணவர் அப்படி இருந்ததால்தான் தான் இந்த அளவிற்குப் பரிமளிக்க முடிந்தது என்று சொல்லியிருந்ததோடு அவர் சொன்ன ஒரு விஷயம் - Ideal couple, Made for each other, Marriages are made in heaven போன்றவை எல்லாம் அப்படிக் கிடையாவே கிடையாது .....விட்டுக் கொடுத்து, ஒருவருக்கொருவர் ஆதரவாக, தனித்தன்மையை திறமையை ஊக்குவித்தல் இருந்தால்தான்...எங்களுக்குள்ளும் கருத்துவேறுபாடுகள் வரும் தான் ஆனால் அது புரிதல் விட்டுக் கொடுத்தல் என்பதாலும் என் கணவர் என்னை ஆதரித்து ஊக்கப்படுத்தி உறுதுணையாக இருந்ததால்தான் என்னால் இப்படியான நிலையை அடைய முடிந்தது என்று சொல்லியிருந்தார். அவர் கணவரும் செம கிண்டல்...கண்ணிற்கும் மனதிற்கும் இனிமையாக இருந்த ஒரு காணொளி!

    இது இப்போதைய தலைமுறைகளிலும் இருக்கின்றது இல்லை என்று சொல்ல முடியாது பல ஜோடிகள் பொதுவெளியில் திறமையுடன் இயங்குகிறார்கள்தான். மறுபுறம் இப்படியான பிரிதல்களும் நடக்கின்றன. கொஞ்சம் கூடுதல் ஆகியிருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Made for each other, Marriages are made in heaven// - இவைதான், நெடுங்காலம் நீடித்திருக்கும் திருமணத்தில், இருவரும் 60 வயதாகும்போது புரிந்துகொள்வது. We generally get what we deserve or what is mostly suitable to continue in a marriage contract/பந்தம். மற்றபடி எக்செப்ஷன்ஸைப் பற்றிப் பேசி உபயோகமில்லை.

      நீக்கு
    2. புரிதலும் விட்டுக் கொடுத்தலும்....

      ஆனால் இதிலும் ஒருவர் மட்டும் எப்போதும் அடிபட்டுக் கொண்டே இருந்தால் வாழ்க்கையில் விரக்திதான்வ் அரும் அதற்குப் பிரிதல் நல்லது என்றே சொல்லுவேன்.

      கீதா

      நீக்கு
    3. //எப்போதும் அடிபட்டுக் கொண்டே இருந்தால்// - அப்படிப் பெரும்பாலும் நடக்காது. அதுக்குள்ள ஒருத்தருக்கு சப்போர்ட்டுக்கு பையன்/பெண் வந்துடுவாங்க

      நீக்கு
    4. அப்படி இல்லாததை பார்த்திருக்கேன் நெல்லை....பையன் / பெண் வந்தாலும் அவங்களாலும் சமாளிக்க முடியாமல்...பியான்ட் த லிமிட்ஸ் ....அதையும் மீறி வாழும் பெண்கள் வேறு வழியில்லாமல் அப்படி பொறுத்து பொறுத்து கடைசியில் 50 ஐ தொடும் போது மனம் பாதிக்கப்பட்டு ஹிஸ்டீரிக்கலாக....

      நெல்லை இதெல்லாம் நாம் நம்மைச் சுற்றிப் பார்க்கும் போதுதான் தெரியும்...உறவுகளிலும் நட்புகளிலும் காண்கிறேன். நாம் குடும்பம் என்றால் பிரியாமல் பெண்ணும் சரி ஆணும் சரி பொறுத்து பொறுத்துப் போக வேண்டும் என்று நினைக்கிறோம். இல்லை என்றால் இதுதான் விதி விதிக்கப்பட்டது வாழ்ந்துதான் ஆகணும் என்று நினைக்கிறோம் ஒரு கட்டமைப்பையும் சொல்கிறோம். அதனால் இப்படியானவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை. அப்படிக் கஷ்டப்படும் ஆண் ஒருவரின் பரிதாபநிலை என் உறவில் ஒருவர்...

      அடிபடுதல் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும்...

      கீதா

      நீக்கு
  10. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  11. மேற்கத்திய கலாசாரங்களை முழுமையாக ஏற்கவும் முடியவில்லை. இந்திய மரபு சார்ந்த கலாசாரங்களை முழுமையாக விடவும் மனசில்லை. இதுவே இன்றைய இரண்டும் கெட்டான் போக்கு. இந்தக் கதை அதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

     பிரியக்கூடியவர், இவரை நமக்குச் சேர்ந்தவர் தானா என்று ஆராய்ச்சி செய்யும் மனப்பான்மை உள்ளவர் ஏன் அவ்வளவு விமரிசையாகச் செலவு செய்து திருமணம் நடத்த வேண்டும். லிவிங் டுகெதரில் சேர்ந்து வாழ்ந்து பின்னர் இறுதி முடிவு எடுக்கலாம் அல்லவா? 

    இக்கருத்துக்கள் புண்படுத்துமானால் நீக்கி விடவும். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா நீங்கள் சொல்லும் பாயின்டை நானும் யோசித்ததுண்டு....எதற்கு இப்படிச் செய்ய வேண்டும் என்று. அதை எல்லாம் எந்த இளசுகளும் யோசிப்பதில்லையே. வாங்க பழகிப்பார்கலாம்னு பழகிட்டு....இவனை என்னால் கணவனாக நினைத்துப் பார்க்க முடியலை என்று விட்டு அடுத்த பையனை பெற்றோர் காட்டினால் அவனுடனும் இப்படிச் சுற்றிவிட்டு மீண்டும் நோ சரிப்பட்டு வராது என்று சொல்லி க்டைசியில் ஒருவனை ஓகே என்று சொல்லி இப்படித்தான் தாம் தூம்னு பண்ணிக் கொள்கிறார்கள் ஒரு சிலது தொடர்கிறது ஒரு சிலது இப்படித்தான் டைரக்டர் சீன் கட் சொல்வது போல அடுத்த சீன் போவதற்குள்ளேயே மூட்டைகட்டும்படி ஆகிவிடுகிறது!!!!!

      கீதா

      நீக்கு
    2. என் அம்மா வழி உறவில் ஒரு பெண்ணுக்கு இப்படித்தான் விமரிசையாகக் கல்யாணம் சாஸ்திர சம்பிரதாயப்படி நிகழ்ந்தது. நாங்க எல்லாம் சந்தோஷமாகப் போய்க் கூடிக்களித்திருந்தோம். மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்திற்கு யானை எல்லாம் வந்து மணமக்களுக்கு மாலைகள் போட்டு அமர்க்களமாக நடந்தது. ஆனால் அந்தப் பெண் ஆறு மாதம் கூடச் சேர்ந்து இருக்கலை தான் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊரிலிருந்து மாற்றல் பெற்றுக் கணவன் வீட்டுக்கும் போகலை. கணவன் வீட்டில் மிக ஆசாரமானவர்கள். மிகுந்த தெய்வபக்தி உள்ளவர்கள். கதாகாலட்சேபம்/பஜனை என்று கடைப்பிடிக்கும் குடும்பம். என்ன நடந்ததோ பெண் அம்மா வீட்டிலேயே இருந்துவிட்டுப் பின்னர் வேலையிலும் சேர்ந்து விட்டாள். வருடங்கள் பறந்தன. அந்தப் பிள்ளைக்கு விவாகரத்து கிடைத்தவுடனேயே அவன் பெற்றோர் வேறு பெண்ணைத் திருமணம் செய்து வைத்துக் குழந்தைகளும் பிறந்து விட்டன. இந்தப் பெண் அப்படியே! பெற்றோரும் வேறு வரன்களை முயற்சி செய்து பின்னர் இப்போ ஒரு வருஷத்திற்கு முன்னால் அவளுடைய நீண்ட வருடக் காதலனை (பள்ளி நாட்களில் இருந்து காதலாம்) மணந்து கொண்டு (இருவரும் ஒரே அலுவலகம். அப்போக் கூட முதல்லேயே சொல்லித் தொலைக்கலை! அந்த முதல் கல்யாணம் ஆகும்வரை எதையும் காட்டிக்கவும் இல்லை. அநியாயமாக ஒரு அப்பாவிப் பையனின் வாழ்க்கையில் கரும்புள்ளி.)சந்தோஷமாக இருக்கிறாள் என்று கேள்விப் பட்டேன்.

      நீக்கு
    3. //லிவிங் டுகெதரில் சேர்ந்து வாழ்ந்து// அப்படீன்னாக்க என்னா?

      நீக்கு
    4. கீதாக்கா நீங்கள் சொல்லியிருப்பது போலவும் நடக்கிறதுதான்...

      நீங்களே கூட இதை முன்ன ஒரு தடவை சொல்லியிருக்கீங்களோ..ஏதோ ஒரு சின்ன நினைவு

      கீதா

      நீக்கு
  12. அன்புள்ள பானுமதி அம்மா, இன்றைய கதை அருமை! நிகழ்காலத்தின் கண்ணாடியாய் திகழ்கிறது கதை. உப்பு பெறாத விஷயத்திற்கெல்லாம் விவாகரத்து நடக்கிறது.விட்டுக்கொடுத்தல் இருவருக்குள்ளும் இல்லை எனும் பொழுது கடினமே.

    பதிலளிநீக்கு
  13. //இப்பொழுதே திருமண பரிசை கொடுத்து விடலாம் என்றேன், என் மனைவி ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் பூங்கொத்து மட்டும் கொடுத்து வாழ்த்தி விட்டு வந்தோம். //

    தாலி கழுத்தில் ஏறும் வரை எதுவும் நிச்சயம் இல்லை என்று சொல்வார்கள். அதனால் திருமணம் முடிந்து சடங்குகள் முடிந்த பின்னே பரிசு கொடுக்கச் சொல்வர்கள். அதுவரை கை குலுக்க கூடாது ஆசீர்வாதம் செய்ய கூடாது என்பார்கள்.
    முதல் நாளே வரவேற்பில் பரிசு கொடுத்து விடுகிறார்கள். மறு நாள் வேலை, விடுமுறை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.


    இந்தக் கால கட்டத்தில் நடந்து கொண்டு இருப்பதை கதையாக சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதுவரை கை குலுக்க கூடாது // - இதற்குக் காரணம் வேறு. 1. பெண்ணின் அப்பா, பெண்ணின் கையைப் பிடித்து அவளை அவள் கணவனாகச் சில நிமிடங்களில் ஆகப்போகிறவனிடம் கொடுப்பார். 2. இந்தச் சடங்குகளுக்கு முன்னால், இருவரும் விரதம் இருந்து, திருமணத்தின் முக்கியச் சடங்குகள் முடியும் வரைக்கும் இருவரையும் தொடக்கூடாது என்பது சம்ப்ரதாயம். அதனால்தான் சப்தபதிலாம் முடிந்த பிறகு, பெண்/மாப்பிள்ளை கையைப் பிடித்துக் குலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவிப்பது.

      ரிசப்ஷன் என்று வைப்பது, சடங்கைப் பற்றிக் கவலையில்லாதவர்கள் செய்வது. அவசரப்பட்டு இருவருக்கும் கைகொடுப்பவர்களுக்கும் சடங்குகள் மீது அக்கறை கிடையாது. அப்புறம் எதற்கு சடங்குகள், யாருக்காக இந்தப் போலி சம்ப்ரதாயம் என்று எனக்கும் புரிவதில்லை.

      நீக்கு
    2. அப்பா, அவள் கையைப் பிடித்து ஒப்படைக்கும்வரை, இவன் அவள் கையைப் பிடிக்கக்கூடாது என்பது சம்ப்ரதாயம்

      நீக்கு
  14. வணக்கம் சகோதரி

    கதை இந்த காலத்தின்படி நன்றாக இருக்கிறது. ஆனால் படிக்கும் போது நமக்குத்தான் மன வருத்தத்தை தருகிறது. இவ்வளவு செலவு பண்ணி ஆர்வமாக திருமணம் செய்து அதை உணராத இன்றைய தலைமுறைகளின் முற்போக்கான எண்ணங்கள் மனதை என்னவோ செய்கிறது. மாறும் காலங்களுக்கேற்ப மாறும் சிந்தனைகள் நல்லதா? கெட்டதா? அந்த காலந்தான் அதற்கும் பதில் சொல்ல வேண்டும்.

    /நம்ம ரெண்டு பேருக்கும் கம்பாட்டிபிலிட்டி இருக்கா?" என்று பதிலுக்கு நான் கேட்டதற்கு எப்போதும் போல் பதில் சொல்லாமல் சிரித்தாள். அந்த சிரிப்புக்கு என்ன பொருள் என்று எப்போதும் போல் எனக்கு புரியவில்லை. /

    முற்றுப் பெற்ற இறுதி வரிகள் அனைவருக்கும் மனதில் இருந்து கொண்டே உறுத்தும் தொடக்க வரியோ? கதை நகர்ந்த விதம் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இவ்வளவு செலவு பண்ணி ஆர்வமாக திருமணம் செய்து // பசங்க கேட்டாங்களா? நம்ம பவிசுக்கு, டாம்பீகத்துக்குச் செலவு செய்துவிட்டு பசங்களைக் குறை சொல்லலாமா? இது எப்படி இருக்கு கமலா ஹரிஹரன் மேடம்?

      நீக்கு
    2. நெல்லை பசங்க கேக்கலையா!! ஹாஹாஹா...பெற்றோர் ஒரு புறம் என்றாலும்...அவர்கள் இது போதும் என்றாலும் பசங்க நிறையவே கேக்கறாங்க தெரியுமா? பெரும்பாலும் பசங்க தங்கள் கல்யாணம் எப்படி நடக்க வேண்டும்னு சொல்லிடறாங்க....நீங்க எந்தக் காலத்தில் இருக்கீங்க!!!!!!

      பெற்றோர் என்ன கேண்டிட் ஃபோட்டோகிராஃபி பத்தி பேசுவாங்கன்னு நினைக்கறீங்க!!?? அதாவது மிடில்க்ளாஸ் பெற்றோரை சொல்கிறேன்..

      தங்கள் உடை முதல் எப்படி இருக்க வேண்டும் பெற்றோர் என்ன அணிய வேண்டும் என்றும் இளசுகள் முடிவு செய்யும் காலம் இது...

      இல்லைனா பெற்றோர் சொல்லிடணும், இந்தப்பா/இந்தாம்மா நாங்க இப்படித்தான் பண்ண முடியும்...எங்களால இப்படித்தான் இவ்வளவுதான் முடியும்....நீங்க உங்க விருப்பப்படி கல்யாணம் நிகழ்வுகள் இருக்கணும்னா நீங்க சம்பாதிச்சு பண்ணிக்கோங்க....எங்ககிட்ட அந்த மாதிரியான செலவுகளுக்கு ஒரு பைசா கேக்கக் கூடாது இல்லைனா நாங்க பண்ணுவதை ஏற்கணும், என்று சொல்ல வேண்டும். சொல்லுவாங்களா பெற்றோர்...??!!!!!

      கீதா

      நீக்கு
    3. //பசங்க நிறையவே கேக்கறாங்க தெரியுமா? // - இன்னும் அனுபவம் வரலை. ஆனால் உறவினர் திருமணத்தில் கேண்டிட் கேமரா பற்றில்லாம் பேசிப் புலம்பினாங்க (வேற என்ன பண்ணமுடியும்). என்னைக் கேட்டால் (கேட்டாகணும்..ஹாஹா), இந்தாம்மா, assets like gold no issues. இந்தச் செலவு இவ்வளவு ஆகுது, வேணுமா, இல்லை இதைக் குறைத்து கேஷ் கொடுத்துடவா... இப்படிக் கேட்கலாம் என்று நினைத்திருக்கிறேன். சும்மா ஆடம்பரமா பண்ணி ஏதேனும், யாருக்கேனும் (கேடரர், மண்டப வாலா, போட்டோகிராபர் தவிர) உபயோகம் உண்டா?

      Marriage atrocities பற்றி யாரேனும் எழுதினாத் தேவலை. அந்தக் காலத்துல, சின்னக் குழந்தைக்குக் கல்யாணம் என்பதால், பொம்மை etc யைக் கடை பரப்பினார்கள். இப்போ அதையும் ஆடம்பரமா, மேரேஜ் காண்டிராக்டர் செய்கிறார். அதையும் திருமணம் நடத்துபவர்கள் பெருமையடித்துக்கொள்கிறார்கள். என்னைக் கேட்டால், வர்றவங்களுக்கு Toys R Usல நுழைவுச் சீட்டு வாங்கிக்கொடுத்து, அங்க உள்ள பொம்மையெல்லாம் கல்யாண மண்டபத்தில் இருக்கறதா நினைச்சுக்கோங்க என்று சொல்லிடலாம்னு நினைக்கிறேன். ஹா ஹா ஹா

      நீக்கு
    4. எனக்கு, பெண்ணுக்கு ஒரு நிலை, பையன் திருமணத்துக்கு ஒரு நிலைன்னு கிடையாது.

      நீக்கு
    5. நெல்லை உங்கள் கருத்துகலை டிட்டோ செய்கிறேன். நல்ல பாயின்ட்ஸ்....குட் லக்!!!! //(கேடரர், மண்டப வாலா, போட்டோகிராபர் தவிர) // இவங்க மூன்று பேரும் உங்கள் பிடிக்குள் இருக்க வேண்டும்!!! இவை மூன்றும் தான் செலவு கூடுதல்!! இப்போதைய திருமணங்களில்...நீங்கள் சிம்பிள் சாப்பாடு என்றால் காட்டரரே முகம் சுளிப்பார்!! ஹாஹாஹா ஏனென்றால் எல்லோருக்கும் பழகிவிட்டது இப்போதைய மெனு எல்லாம். கேண்டிட் ஃபோட்டோகிராஃபி வித விதமான லொக்கேஷன் ஃபோட்டோஸ் இல்லை என்றால் ஃபோட்டோகிராஃபர் உங்களை மேலும் கீழும் பார்ப்பார்!!!!

      குறிப்பாக இரண்டாவது பாரா....நிறைய டிட்டோ செய்கிறேன். கல்யாண அட்ராசிட்டிஸ் பற்றித்தான் நாம அப்பப்ப இங்க பகிர்கிறோமே எல்லாரும். ஸ்ரீராம் கூட அன்று சொல்லியிருந்தார் நானும் இதே கருத்துதான் ஆனால் சில விஷயங்களில் மெஜாரிட்டியாக இருக்கும் போது நமக்குத் தவிர்க்க முடியாது என்று....அதுவும் சரிதான். உறவுகள் அதுவும் நெருங்கிய உறவுகள் ஓகே கோ அஹெட் என்று உறுதுணையாக இருந்து சொன்னால் மட்டுமே நடக்கும். சம்பந்தி வீட்டவரும் ஒத்துழைக்கணும்.

      // /எனக்கு, பெண்ணுக்கு ஒரு நிலை, பையன் திருமணத்துக்கு ஒரு நிலைன்னு கிடையாது.//

      சூப்பர் நெல்லை!!! உங்கள் எண்ணங்கள் ஈடேற வாழ்த்துகள். நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.

      கீதா

      நீக்கு
  15. கதை நன்றாக் இருக்கிறது. புதிய தலைமுறை எப்போதும் பிரிவதற்காகவே காத்திருப்பது போன்று...விட்டுக் கொடுத்து அட்ஜஸ்ட் செய்து போவதற்கு ஒருபோதும் தயாராக இல்லாத மன நிலை....கல்யாணம் என்பது ஒரு கான்ட்ராக்ட் போல..

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  16. இக் காலகட்டத்தை அப்பட்டமாக எடுத்துக் கூறும் கதை. எங்கும் அவசரம் எதற்கும் அவசரம் இருவருக்கும் ஈகோ விட்டுக்கொடுக்காது பிறகென்ன இப்படித்தான் ஆகும்.

    பதிலளிநீக்கு
  17. அருமை. வாழ்வென்பதே விட்டுக் கொடுத்தல், அனுசரித்துப் போதல் இவைதானே.

    பதிலளிநீக்கு
  18. சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நறுக்கென்று மிளகாயைக் கடித்த நிலை.

    வழக்கமான எபி ஃபார்முலா கதைகளிலிருந்து விலகிய கதை. பின்னூட்டங்களைப் பார்த்தால் யாரும் 'அச்சச்சோ.. இப்படிச் செஞ்சிட்டாங்களே' என்று அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரியவில்லை. ஏதோ தங்கள் பணம் போன மாதிரி இவ்வளவு செலவு செஞ்ச கல்யாணம் என்று பணத்தைப் பற்றித் தான் குறிப்பிடல்கள். சமூக சூழல்களுக்கும் போக்குகளுக்கும் இணக்கமாகவே இருக்கும் இனறைய பழந்தலைமுறையினரின்
    நிலையைப் படம் பிடித்துக் காட்டியதோடு அவர்களின் இணக்கத்தையே கதைக்கு தலைப்புமாக கொண்ட கதைப் பின்னல் யதார்த்த சூழல்களுக்கு சரியான சாடல்.

    பதிலளிநீக்கு
  19. கதையின் கடைசி பாரா அற்புதம். 'நம்ம ரெண்டு பேருக்கும் கம்பாட்டிபிலிட்டி இருக்கா' என்ற அந்தக் கேள்வியும் அந்த பதில் சிரிப்பும் அற்புதம். அது இந்தத் தலைமுறை பார்த்து சென்ற. தலைமுறையினரின் இயலாமை ஏளனமும் கூட. அது தான் இன்றைய தலைமுறையினரின் சம்மதமாகவும் தெரிகிறது.
    சொல்லப் போனால் சென்ற தலைமுறை மாதிரி பெற்ற குழந்தைகளை அரட்டி மிரட்டி நம் பண்பாட்டு விழுமியங்களைப் போதிக்காத அவலம்.
    தாய் தந்தையரின் பிணக்கங்களையம் அவர்களுக்குள் இருக்கும் சுய நலன்களையும் ப்சர்த்துப் பார்த்து வளர்ந்து அதற்கே பழகிப் போன குழந்தைகள். வேறு என்ன செய்யும்? இதைத் தான் செய்யும்.
    தாம்பத்திய இணைப்புகள், புனிதங்கள் எல்லாம் சரிப்புட்டு வராத வெற்று சடங்குகள் என்று புறக்கணிக்கத் தான் வைக்கும்.
    சென்ற தலைமுறையினரின் இயலாமைகளை புதுமையான கதையாக்கிய நம் பா.வெ. பாராட்டுக்குரியவர்.

    பதிலளிநீக்கு
  20. என் கதையை வெளியிட்ட எ.பி.தளத்திற்கும், கருத்திட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

    பானுமதி வெங்கடேஸ்வரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!