திங்கள், 17 அக்டோபர், 2022

"திங்க"க்கிழமை  :  சிறு உருளை ரோஸ்ட் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி 

 அன்புள்ள ஸ்ரீராம்,

அவசரமாக ஒரு தி பதிவு கேட்டதால் இந்தப் பதிவு..

அன்புடன்

நெல்லைத்தமிழன் 

திங்கக்கிழமை பதிவு - சிறு உருளை ரோஸ்ட் -  நெல்லைத்தமிழன்

 

இங்கு அருகிலிருக்கும் மார்க்கெட்டில் நிறைய சிறு உருளைக்கிழங்கு, ஒரு தட்டு 20 ரூபாய்க்கு என்று வந்தது. மண்ணிலிருந்து அப்போதுதான் பறித்த மணம். எனக்கோ அதை வாங்க ரொம்ப ஆசை. ஆனால் வீட்டில், எப்போதும் உருளைதானா, எங்களுக்கு வேண்டாம் (பிடிக்காததால் அல்ல. கார்போஹைட்ரேட் ஜாஸ்தி என்பதால்) என்று சொல்வாங்க. நானோ, எனக்குப் பிடிக்கும் என்று வாங்கிவிடுவேன் (இதுபோல சிறிய வெங்காயமும். அதற்கும் எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆர்வம் கிடையாது)


எனக்கு இந்த உருளை ரோஸ்ட் சுடச் சுட இருக்கும்போதே, தயிர் சாதமோ இல்லை சாத்துமது/சாம்பார்/கூட்டு சாதமோ தட்டில் போட்டுக்கொண்டு, துணையாக வாணலியிலிருந்தே எடுத்துப் போட்டுக்கொள்வேன். ஆறினால் அவ்வளவு இஷ்டம் கிடையாது.


 

சரி...இப்போது  எப்படிச் செய்தேன் என்று பார்ப்போம்.


தேவையானவை

 

வேகவைத்து தோலுரித்துக்கொண்ட சிறு உருளைக்கிழங்குகள்

மிளகாய் பொடி, பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, நல்லெண்ணெய் தேவையான அளவு

தாளிக்க நல்லெண்ணெய், கடுகு



செய்முறை


1. நன்றாக வேகவைத்த உருளையைத் தோலுரித்து, ஊசி/கத்தி முனையால் (நான் குழிப்பணியாரம் எடுக்கும் கம்பியை உபயோகித்தேன்) உடையாமல் குத்திக்கொள்ளவும்.


2. உப்பு துளி அதிகமாக, மஞ்சள்பொடி, பெருங்காயப்பொடி, காரப்பொடி கலவையை உருளையின் மீது நன்கு பிரட்டி வைக்கவும்.


3. ஒரு அரைமணி முக்கால் மணி நேரம் அப்படியே வைத்துவிடுங்கள். உப்பு காரம் உள்ள இறங்கட்டும்.


4.  கடாயில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய். சூடானதும் கடுகு திருவமாறுங்கள்.


5. மேரினேட் ஆன (ஊறின) சிறு உருளைக்கிழங்கைச் சேர்த்து ரோஸ்ட் செய்யுங்கள்.


6. கறுத்துவிடாமல், முறுமுறுவென ரோஸ்ட் செய்யவும்.


7. நான் ரொம்ப ரோஸ்ட் செய்யச் சொல்லமாட்டேன். காரம் குறைந்துவிடுகிறது என்பது என் எண்ணம்.






என்னடா...ரோஸ்ட் ஆனபிறகு உருளைக்கிழங்கு எண்ணிக்கை குறைந்துவிட்டதே என்று நினைக்காதீர்கள். படம் எடுக்க மறந்துவிட்டேன். அப்புறம் இன்னொருநாள் பண்ணும்போது படம் எடுத்துக்கொண்டேன். அது கீழே உள்ளது.



சின்னவெங்காய சாம்பார், உருளை ரோஸ்ட்,  தயிர்சாதம் உருளை ரோஸ்ட், சாத்துமது உருளை ரோஸ்ட் என்று உருளை ரோஸ்ட் எதுகூட வேணும்னாலும் சேர்ந்துக்கும் (பருப்புருண்டை குழம்பு தவிர).


நீங்களும் செய்துபாருங்கள்.


அன்புடன் 

நெல்லைத்தமிழன்

63 கருத்துகள்:

  1. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்...ஆனால் தமிழகத்தில் சில தசாப்தங்களாக, திருக்குறள் இந்து நூல் அல்ல என்று சொல்வது, அதற்காக விவாதங்கள் செய்வது, அதை நிறுவவதற்காக ருத்திராட்ச மாலை, காவி துறவி உடை இவற்றை நீக்குவதுதான் ட்ரெண்டே தவிர, மறந்தும் குறள் வழி நடப்பது அல்ல. ஆனால் நீங்க என்னவோ குறளின் அர்த்தத்தை உணரவேண்டும் என்ற எண்ணத்தில் குறளைப் பகிர்கிறீர்கள்.

      நீக்கு
    2. அன்பின் நெல்லை..

      மிகச் சரியாக சொல்லியிருக்கின்றீர்கள்.. முதல் ஆளாக வருவதற்கு சூழ் நிலை அமையும் போது நிச்சயம் ஒரு குறள் தான்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அன்பின்
    வணக்கங்களுடன்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  3. சிறு கிழங்கு வறுவல் மிகவும் பிடித்தது.. குவைத்தில் இருந்த போது அடிக்கடி செய்வேன்...

    ஒரே அளவில் சிறியதாகக் கிடைக்கும் போது அதுவே தனி மகிழ்ச்சி..

    இப்போது அதிகமாக உ.கி. சாப்பிடுவதில்லை..

    இதிலேயே சிறு வெங்காயம் சேர்த்து வேறொரு பக்குவமும் உள்ளது..

    அது அப்புறம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்த அளவில் மிக அழகான உருளைக்கிழங்குகள் யூரோப்பிலிருந்து மார்க்கெட்டுக்கு (மிடில் ஈஸ்ட்) வருபவைதான். யூனிஃபார்ம் ஆக வெள்ளைக்காரத் தோலுடன் இருப்பது. ஆனால் அவற்றையும் சில நேரங்களில் வாங்கி ஏமாந்திருக்கிறேன். இனிப்பு உருளையாக இருக்கும். அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

      நீக்கு
  4. //தயிர் சாதமோ இல்லை சாத்துமது, சாம்பார்/கூட்டு சாதமோ. //

    மாற்றத்தை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்... விரல்கள் சரியானபோதும் இலக்கியப் பதிவுகள் வெளியிட ஆரம்பிக்கவில்லை நீங்கள் என்பதை நினைவுபடுத்துகிறேன். இலக்கியம் சார்ந்த (அத்துடன் கதையையும் கோர்ப்பது) பதிவுகள் புத்தகமாக வரும் தகுதி படைத்தவை

      நீக்கு
    2. நன்றி முரளி.
      செய்கிறேன். ஜனவரியில் சென்னை வந்ததும் முழுமையாக பதிவுலகில் தடம் பதிக்கலாம் என்று எண்ணம். அந்த சமயத்தில் நீங்கள் சென்னை வந்தால் நேரடி சந்திப்புக்கு வாய்ப்பு ஏற்படும். இருக்கவே
      இருக்கிறார் ஸ்ரீராம்.

      நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கட்டுரைகள் -- இது வரை எழுதியவை-- ஏற்கனவே 'இலக்கிய இன்பம்' என்ற பெயரில் மெந்நூல் வடிவில் அமேசான் கிண்டில் பதிப்பில் கிடைக்கிறது. தொடர்ந்து எழுத ஆசை இருக்கிறது. நிச்சயம் முயற்சிக்கிறேன்.
      நீங்கள் நினைவு கூர்ந்ததில் கூடுதல் உற்சாகமும் ஏற்பட்டிருக்கு.

      நீக்கு
    3. இலக்கியத்தை அரசியலுக்குத்தான் உபயோகிக்கிறார்கள், 5 சதம் கூட இலக்கியம் தெரியாதவர்கள். நீங்கள் ஒரு கதை, அதை இலக்கியப் பாடலுடன் இணைத்து எழுதியது உண்மையிலேயே எனக்கு மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. நல்லா எழுதத் தெரிந்தவங்க, தொடர்ந்து எழுதணும்.

      நான் பெங்களூர்வாசியாகிவிட்டேன். இங்க பெங்களூரிலேயே ரஞ்சனி நாராயணன் அவர்கள், கீதா ரங்கன்(க்கா) தவிர வேறு யாரையும் சந்திக்கவில்லை. ஜிஎம்பி சார், கேஜிஜி சார் போன்றோரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. சென்னையில் இருந்தபோதும், வல்லிம்மா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு தவறிவிட்டது (அவர் பிஸியாக இருந்தார்). எபி ஆசிரியர்கள் சிலரைச் சந்தித்திருக்கிறேன்.

      நீக்கு
    4. எப்பொழுது நீங்கள்
      ( பிப்ரவரிக்கு மேல் ) சென்னை வந்தாலும் ஸ்ரீராமுடன் தொடர்பு கொள்ளுங்கள். நாம் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம்.

      நீக்கு
    5. ஸ்ரீராம், அவருக்கு இருக்கும் பணியில் இதையெல்லாம் செய்வது சந்தேகம் என்றே நான் நினைக்கிறேன். அதனால் இருவரும், விரைவில் அவர் மகனுக்குத் திருமணம் நிச்சயம் ஆகணும்னு நினைத்துக்கொள்வோம். அப்போது எல்லோருமே சந்திக்கலாம், கேஜி..க்கள் உட்பட, விருந்து ஃப்ரீ ஹா ஹா ஹா.

      நீக்கு
  5. //திருவமாறுங்கள். //

    நாங்கள் உபயோகப்படுத்தாத வார்த்தை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரம்பரை வார்த்தைகளை மறந்துவிடக்கூடாது என்பதற்காக உபயோகிப்பேன்.

      நீக்கு
  6. சுலபமான முறையாக இருக்கிறதே... நான்கூட செய்யலாம் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா. நீங்களும் சமைத்திருக்கிறீர்கள் அல்லவா? தனியாக இருந்தபோது?

      நீக்கு
    2. தனியாக இருந்தபோது அல்ல!

      (தற்போது) தனியாக இருக்கின்றபோது...

      நீக்கு
  7. முறுமுறுக்குப் பதில் நாங்கள் மொறுமொறு என்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எழுதியதுதான் சரி. நான் எழுதியிருப்பது தட்டச்சுப் பிழை என்றே வைத்துக்கொள்ளலாம்.

      நீக்கு
  8. முழு உருளைக்கிழங்காய் இல்லாமல் தோசைத் திருப்பியால் லேசாகக் குத்தி இரண்டு - மூன்று
    துண்டுகளாக்கி விடுவது வழக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மனைவியும் அப்படிச் செய்வாள். ஆனால் ஆசையோடு வாங்கிய சிறுகிழங்கை, பாதியாக உடைப்பது எனக்குப் பிடிக்காது. இந்த ஊரில் மண் வாசனையோடு சிறு உருளை கிடைக்கும். என்ன ஒண்ணு... என் பெண்..என்ன எப்போதும் உருளைக்கிழங்கு சாப்பிடுகிறீர்கள்..நல்லதில்லை என்று சொன்னதால் இடைவெளி விட்டிருக்கிறேன். எதைச் செய்தாலும் உருளையில் ரோஸ்ட் கொஞ்சமாகச் செய்யச்சொல்வது என் வழக்கம்.

      நீக்கு
  9. ஆஹா. சின்ன உருளை ரோஸ்ட். காரப்பொடிக்கு பதில் மிளகுப்பொடி (pepper ) போட்டு  ரோஸ்ட் பண்ணினால் சுவை கூடும். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவைகூடும். உடலுக்கு நல்லது. சந்தேகமில்லை. ஆனால் அதற்கு அவ்வளவாக வரவேற்பில்லை. அது சரி...கடைகளில் கிடைக்கும் மிளகுப்பொடி பாக்கெட்டில், எவ்வளவு சதவிகிதம் மிளகுப்பொடி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

      நீக்கு
    2. ஆமாம் ஜெகே அண்ணா பெப்பர் ரோஸ்ட் பிரமாதமா இருக்கும்

      நெல்லை எதுக்கு கடையில் வாங்க வேண்டும்? வீட்டிலேயே பொடித்துக் கொள்ளலாமே. நான் அப்படித்தான் செய்வது வழக்கம்.

      நெல்லை பேசாம ஒரு லேப் ஆரம்பிச்சுடுங்க!!! ஹாஹாஹாஹா எல்லாப் பொடிகளையும் டெஸ்ட் பண்ணிப் பார்க்க...

      கீதா

      நீக்கு
    3. பெப்பர் காலிஃப்ளவர் ரொம்பப் பிடிக்கும். பெப்பர் உருளையும் நல்லா இருக்கும். பசங்க லைக் பண்ணுவதில்லை.

      நீக்கு
  10. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!!!
    சிறிய உருளை ரோஸ்ட் சுலபமான செய்முறையில், பார்ப்பதற்கு அழகாகவும் உள்ளது.

    பதிலளிநீக்கு
  11. தோற்றம் அரை நெல்லிக்காய் போன்று உள்ளது... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா... இது நாலைந்து அரைநெல்லி சைஸ். சில நாட்களுக்கு முன்பு, ஒரு சேர் (அரைப்படிக்கும் சிறிது குறைவுன்னு நினைக்கிறேன்) 20 ரூபாய் என்ற விலையில் அரைநெல்லி வாங்கிவந்தேன். ஸ்கூல் கால நினைவுக்குப் போய்விட்டேன். ஒரு நாள்தான் கிடைத்தது.

      நீக்கு
    2. என்ன அநியாயம்..இதற்கு எழுதின மறுமொழி காணாமல் போய்விட்டது.....

      நீக்கு
    3. காணாமல் போன மறுமொழியை ஆசிரியர்கள் மீட்டுக்கொண்டு வரவில்லை. சில நாட்கள் முன்பு சேர் (அரைப்படிக்குக் கொஞ்சம் கம்மி) அரிநெல்லி வாங்கிச்சாப்பிட்டேன். ரொம்ப ருசி. இந்த உருளை, 5 அரிநெல்லி சைஸ்.

      நீக்கு
  12. நெல்லை....ஆஹா Simple but elegant, yummy....

    நானும் இப்படி மாரினேட் செய்துதான் செய்வது வழக்கம். குழந்தை உருளை என்றால் அப்படியே இப்படியே நீங்கள் செஞ்சுருக்காப்லதான். பெரியது என்றால் மட்டும் துண்டுகளாக்கி....

    உங்கள் கோம்போ டிட்டோ,

    இதிலும் இன்னும் நிறைய வெரைட்டிஸ் இருக்கு இதே ரோஸ்டில்....சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // குழந்தை உருளை என்றால்.. //

      குழந்தை என்ற வார்த்தையை தவிர்த்து இருக்கலாம்..

      முற்றிய உருளையை கிழட்டு உருளை என்று சொல்வதில்லையே ஏன்?...

      நீக்கு
    2. உருளை ரோஸ்டை, அடுப்பிலிருந்து எடுக்கும்போதே தட்டுல போட்டுக்கணும். எங்க வீட்டில் ஆறினபிறகு சாப்பிடுவாங்க. சூடாச் சாப்பிடுவதில் உள்ள ருசி தெரியலையே என்பேன். சூட்டுல என்ன ருசி தெரியும் என்பது அவர்கள் பதில்.

      நீக்கு
  13. செமையா வந்திருக்கு நெல்லை. சூப்பர் போங்க...நானும் ஊசியல் சின்ன தாகக் குத்திவிட்டு உள்ளெ உப்பு காரம் இறங்கும் என்பதால்,,,,

    நல்லா வந்திருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் மோர் சாதமும் யம்மி.... இன்னும் மூன்று நாட்கள் நான் கரண்டி பிடிக்கணும். இப்போ ப்ராக்கோலி செய்தேன். அதுக்கு உப்பு குறைவாகப் போட்டாலே போதும் என்பதைக் கற்றுக்கொண்டேன். ஹிஹி

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. மிகவும் நன்றாக இருக்கிறது நீங்கள் செய்வதற்கு கேட்பானே அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி காமாட்சியம்மா... கத்துக்குட்டிகளைப் பாராட்டும் மனதிற்கு நன்றி

      நீக்கு
    2. மிக்க நன்றி காமாட்சியம்மா. கத்துக்குட்டிகளைப் பெரியவர்கள் பாராட்டும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

      நீக்கு
    3. யாரு கத்துக்குட்டி நீங்களா ஆச்சரியம் அன்புடன்

      நீக்கு
  16. சிறு உருளை ரோஸ்ட் பார்க்கவே நன்றாக இருக்கிறது.
    எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் செய்தால் உருளை ரோஸ்ட் செய்வேன். சாம்பார் சாதம், ரசசாதம் இதற்கும் நன்றாக இருக்கும்.
    வீட்டில் எல்லோருக்கும் பிடித்தது வேகவைத்து உரித்து கொண்டு இருந்தால் ஒன்று எடுத்து கொள்கிறேன் என்று என் கணவர் எடுத்து கொள்வார்கள்.

    படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று மனைவியை எலுமிச்சை சாதம் செய்யச் சொல்ல இருந்தேன் (மாலையில் சாப்பிட). அவளோ கரண்டியை என் கையில் கொடுத்துவிட்டாள். நீங்கள் சொன்ன எல்லா காம்பினேஷனும் இதற்கு ரொம்ப நன்றாக இருக்கும். நன்றி.

      நீக்கு
  17. //https://sivamgss.blogspot.com/2015/08/blog-post_12.html// ஹெஹெஹெஹெ, இது 2015 ஆம் வருஷம் அப்பு அவ அம்மாவோட வந்திருந்தப்போப் போட்டது. அதுக்கப்புறமா நிறையத் தரம் பண்ணியாச்சு. பாரம்பரியச் சமையல்களில் இதையும் சேர்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க எழுதாத சமையல் குறிப்பு உண்டா கீசா மேடம்... வெங்காய சாம்பார் பண்ணணும். மனைவி செய்தால் நல்லா சாப்பிடலாம். பார்ப்போம்.

      நீக்கு
    2. நிறைய எழுதியிருக்கீங்க கீசா மேடம். இதற்கு வேறொரு மறுமொழி கொடுத்திருந்தேன். காணாமல் போய் விட்டது.

      பாரம்பர்யச் சமையலில் இதுவும் ஒன்றா? உங்க வயசு 16ன்னு காண்பிப்பதற்காக இப்படிச் சொல்லலாமா?

      நீக்கு
  18. இப்போக் கொஞ்ச நாட்கள் முன்னாடி கூட சி.உ.கி. பண்ணினேன். முந்தாநாள் ராத்திரிச் சப்பாத்திக்குச் சி.வெ. போட்டு உ.கி.மசாலா காரப்பொடி சேர்த்தது. ஆனால் நான் சாம்பார்ப் பொடி தான் போட்டேன். அதுவே காரமா இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போல்லாம் வர வர எனக்கு வெங்காயம் பிடிப்பதில்லை (நான் ஒருத்தன் சாப்பிட உ.கி வெங் வாங்குவேன்). சாம்பார்பொடியை கரேமதில் போட்டால் எனக்குப் பிடிப்பதில்லை.

      நீக்கு
  19. இந்த மாதிரிப் பழுப்பு நிற முளைக்கட்டிய உ.கி. இனிமேல் வாங்காதீங்க. கூடியவரை உ.கி.யில் குத்துக்கள் இல்லாமல் பார்த்துப் பொறுக்கி எடுங்க. முளைக்கட்டிய உ.கி. சமைப்பது அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை. எங்க வீட்டிலும் கு.கு. பெரிய பேத்தி ஆகியோருக்கு உ.கி. அத்தனை பிடிக்காது. கு,கு. வாழைத்தண்டெல்லாம் சாப்பிட்டுவிடும். உ.கி. என்றால் துப்பும். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆக்சுவலா உருளை நல்லா இருந்தது. முளைகட்ட வில்லை. படத்தைப் பெரிதுபடுத்திப் பார்த்தால் தெரியும். ஆனால் சில சமயங்களில் பெரிய உருளை, முளையை அவங்க எடுத்துட்டு விப்பாங்க, கவனிக்காம வாங்கிடுவேன். முளை வந்தது, பச்சைக் கலர் உள்ளது இரண்டுமே நல்லதல்ல என்று மாத்திரம் தெரியும்.

      உ.கி. பிடிக்கவில்லை என்பது நல்லதுதான். பிற்காலத்தில் உ.கி இல்லாத உணவே இல்லை என்று ஆகிடப்போகிறது. கு கு, உ.கி. சிப்ஸ்லாம் கேட்குமா இல்லை நைசா அதுக்கெல்லாம் தடாவா?

      நீக்கு
    2. உ.கி. பச்சைக்கிழங்கோட படத்தைப் பெரிது பண்ணிப் பார்த்துட்டு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமான முளையைப் பார்த்துட்டே சொல்றேன்.சொன்னேன். பெரிய பேத்திக் குறிப்பிட்ட ப்ரான்ட் சிப்ஸைச் சாப்பிடுவாள். லேஸ். கு.குவுக்கும் அதே போல் ஒரே ஒரு ப்ராண்ட் உ.கி.சிப்ஸ் மட்டும் பிடிக்கும்.

      நீக்கு
    3. நல்லவேளை இந்த கீசா மேடம், உயர்நீதி மன்றத்தில் என்மீது வழக்குப் போடவில்லை. I have a peculiar likings. வெளிநாட்டு பிராண்டுகள் எதையும் முடிந்தவரை வாங்கமாட்டேன். அவங்கள்லாம் கண்ட கண்ட கெமிக்கல்களைச் சேர்த்து நாக்குக்கு ருசி, பிறகு ஹாஸ்பிடல் என்று திட்டமிட்டுச் செயல்படுபவர்கள் என்பது என் நம்பிக்கை. ஒரு தடவை எங்கள் கம்பெனி அவுட்லெட்டில், பிட்சாவிற்குப் பதில், உருளை ஃப்ரை என்று ஒன்று வாங்கினேன். மிக மிக ருசியாக இருந்தது. அடப்பாவி..இத்தனைநாள் இதனைச் சாப்பிடவில்லையே என்று நினைத்தேன். பிறகு உள்ளே சென்று (நான் இருந்த பதவிக்கு எங்கும் செல்லலாம்) எப்படிப் பண்ணுகிறார்கள் என்று பார்த்தால், ஃப்ரீசரில் இருக்கும், அமெரிக்காவிலிருந்து வந்த ஃப்ரோசன் மசாலா உருளையை அவனில் போட்டு எடுக்கிறார்கள். அடச்சீ என்று தோன்றிவிட்டது.

      நீக்கு
  20. நேற்றில் இருந்து இணையம் வரவே இல்லை. இப்போத் தான் அரை மணி முன்னால் வந்தது. எல்லோருக்கும் இணையம் இருந்தது எங்க வீட்டில் மட்டும் இல்லை. கு.கு.வை நேத்திக்குப் பார்க்கவே முடியலை. ஃபோனில் அது எங்களை விசாரித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போல்லாம் இணையத்தில் உங்களைக் காண்பது அபூர்வமாகிவருகிறது. உடல் நலம் கொஞ்சம் சரியில்லையோ என்று நினைத்துக்கொள்வேன்.

      நீக்கு
    2. உடம்பு மட்டும் காரணம் இல்லை. ரொம்ப உட்கார்ந்தால் கால் பாதங்கள் மறுபடி வீக்கம் அடைகிறது. என்றாலும் இரண்டு மணி நேரமாவது உட்காரத்தான் செய்கிறேன். நேற்றுத் தான் சுத்தமா இணையமே இல்லை.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      இங்கும் இன்று காலையிலிருந்தே இதே பிரச்சனைதான். அதனால்தான் காலையில் வர இயலவில்லை. ஒரு வாரமாக ஒரே மழை. இந்த மழையினால் இப்படி அடிக்கடி வருவதுதான். இன்று நல்ல வெய்யில் வந்துள்ளது.

      நான் வருவதற்குள் உ. கி ரோஸ்ட் ஆறி அவலாகி இருக்கும். ஆனால் ஆறிப்போனதில் உப்புக்காரம் நன்கு சேர்ந்து ருசியாகவும் இருக்கும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. பெங்களூரில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த மழை, தூரல், குளிர், காற்றுக்காலங்கள்தாம். அதிலும் மழையில், தூரலில் நடக்க நான் அஞ்சுவதே இல்லை.

      மிஞ்சிப்போய்விட்டால், வெங்காயத்தை வதக்கி, இதோடு கலந்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொண்டுவிடலாம் கமலா ஹரிஹரன் மேடம்

      நீக்கு
  21. எழுத எழுத கருத்துக்கள் காணாமல் போகின்றன. பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    தங்கள் கைப் பக்குவத்துடனும் படங்களுடனும் உ. கி ரோஸ்ட் ரொம்பவே நன்றாக உள்ளது. நன்றாக விவரித்து எதனுடன் சேர்த்து இதை சாப்பிட்டால் நன்றாக இருக்குமென எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    நானும் இப்படித்தான் செய்வேன். ஆனால் என்னால் சூடாக சாப்பிட முடியாது. ஒவ்வொருரின் டேஸ்ட ஒவ்வொரு விதம். (தவிரவும் முதலில் எல்லோருக்கும் பரிமாறி அவரவர்கள் அலுவலகத்திற்கு அனுப்பிய பின் நான் சாப்பிடும் போது கண்டிப்பாக ஆறித்தான் போயிருக்கும்.) படங்களைப் பார்த்தவுடன் இதை உடனடியாக செய்ய வேண்டுமென தோன்றுகிறது.

    உ. கி கொஞ்சம் வாய்வு பிடிப்பை வேறு தரும். (பல சமயங்களில். சில சமயங்களில் உடம்போடு ஒத்துழைக்கும். எப்போதெல்லாம் என்று அதற்கும் சரி, நமக்கும் சரி தெரியாது.) ஆனால் படங்களை பார்க்கும் போது சாப்பிட வேண்டுமென தோன்றுகிற மாதிரி எழுதி அனுப்பிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... என் இளமைக்கால நிகழ்வுகளால் (என் பெரியம்மாவுக்கு சுடச் சுடச் சாப்பிடப்பிடிக்கும். ஆனால் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு கடைசியில் அவர் சாப்பிட உட்காரும்போது எல்லாமே ஆறி அவலாயிருக்கும்...அவர் சமைப்பது, மண்/களிமண்ணில் செய்த இரட்டைஅடுப்பில்), என் மனைவியிடம் எக்காரணம் கொண்டும் எனக்காகக் காத்திருக்கக்கூடாது, எப்போ சாப்பிடணும்னு தோணுதோ உடனே அப்போதே சாப்பிட்டுவிடணும் என்று திருமணம் ஆனபோதே சொல்லியிருந்தேன். எப்படி இருந்தாலும் எனக்கு அடுப்பிலிருந்து இறக்கும்போதே சுடச் சுடச் சாப்பிடத்தான் பிடிக்கும். சமீப காலங்களில் எனக்குள்ளதைத் தட்டில் வாங்கிக்கொண்டு, தனியாக அமர்ந்து ருசித்துச் சாப்பிடுவதுதான் பிடித்திருக்கிறது. கஷ்டப்பட்டு செய்யும் உணவை, ரசித்து உண்பதுதான் அந்த உணவுக்கு நாம் தரும் கௌரவம் என்று நான் நினைப்பதுதான் காரணம்.

      நீக்கு
  23. ஆகா! அருமை.

    நானும் கண்டால் வாங்கி செய்துவிடுவேன் . எங்கள் வீட்டில் பிடிக்கும்.

    இதே உருளையை வேக வைத்து எடுத்து ஸ்பினாச் கலந்து சமைப்பேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உருளைக்கிழங்கு, வாரம் ஒரு முறையாவது செய்யாதவர்கள் அபூர்வம். செய்வது சுலபம். பசங்க ரொம்ப விரும்பிச் சாப்பிடுவாங்க. எனக்கு ஆலு மேத்தி பிடிக்கும். என் அம்மா செய்த உருளை பொடிமாஸ் பிடிக்கும், ஆனால் மனைவி செய்வதை, நல்லா இருக்கு என்றுதான் சொல்லவேண்டியிருக்கு. சின்ன வயதுல அபூர்வமாகக் கிடைத்ததால் அதன் ருசி மனதில் தங்கிவிடுகிறது. வளர்ந்தபிறகு, எல்லாமே எங்கேயும் கிடைத்துவிடுவதால் ருசி தங்கமாட்டேன் என்கிறது.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!