செவ்வாய், 25 அக்டோபர், 2022

சிறுகதை : " ராமநாதா - நான் உன்னைக் .. " :: அருண் ஜவர்லால்

 

சித்திரமும், கதையும் : அருண் ஜவர்லால் - (from facebook)  

ஜெயராஜ் மாதிரி படம் வரைந்து கதை எழுத ஆசை. Neela Chandrasekaran Aunty போன வாரம் படத்திற்கு கதை ஒன்று எழுதியிருந்தார்கள்.

Inspired by the art, நான் கொஞ்சம் ஓவியத்தை எனக்கு பிடித்தது போல மாற்றி வரைந்து, ஒரு சிறுகதையும் எழுதியிருக்கேன், James Hadley Chase கதை மாதிரி.

-----------------------------------------------------------

ஸ்மித் அண்ட் வெஸ்ஸன். 

செமி ஆட்டோமேட்டிக் ரிவால்வர். முதல் குண்டு சுடுவதற்கு மட்டும் சுடும் சுத்தியலை (firing pin/hammer) பின்னால் இழுக்க வேண்டும். மிச்ச ஐந்து தோட்டாக்களையும் துப்பாக்கியே தானியங்கி சுட்டு விடும்.

மனோகர் இந்தத் துப்பாக்கியை வாங்க பட்ட பாடு அவனுக்கு மட்டும்தான் தெரியும். சாதாரண மஸ்தான்களுக்கும், ரோட் சைட் பிஸ்தாக்களுக்கும் துப்பாக்கி எங்கே கிடைக்கும் என்று தெரியாது. ஒரு போலீஸ்காரனுக்கும் நக்சலுக்கு மட்டும்தான் துப்பாக்கி எங்கே வாங்க முடியும் என்று தெரியும். நக்சல்களை தேடி அலைவது துர்லபம். போலீஸ்தான் நல்ல சோர்ஸ். ஆனால் ரிஸ்க் அதிகம்.

மனோகர் கையில் இருந்த இந்த துப்பாக்கி 2009 ஆம் ஆண்டு ஒரு அமெரிக்க சுற்றுலா பயணி இடமிருந்து கைப்பற்றியது. மகாபலிபுரத்தில் தங்கியிருந்த அந்த வெள்ளைக்காரன் கடற்கரையோரம் தன் சக நண்பர்களிடம் காட்டிப் பெருமை பேசிக்கொண்டு இருந்தபோது, லோக்கல் இன்ஸ்பெக்டர் அவனிடமிருந்தது அதைக் கைப்பற்றி ரெக்கார்ட் ரூமில் வைத்து, பின் அதை மறந்தே விட்டார். அந்த இன்ஸ்பெக்டரும் மாற்றலாகி சென்று விட்டார். ஏட்டு பரமசிவத்தை டாஸ்மாக்கில் சந்தித்து, நண்பனாகி இப்படி ஒரு துப்பாக்கி இருந்ததைக் கண்டுபிடித்து, பணம் வெட்டி அதை வாங்கி வருவதற்குள் மனோகர் பாதி வாழ்க்கை தீர்ந்துவிட்டது.

இன்று தன்னை 14 வருடம் சிறைக்கு அனுப்பிய ஜட்ஜ் ராமநாதனையும் அவன் குடும்பத்தினரையும் சுட்டுக் கொன்றுவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தான் மனோகர். 

ராமநாதன். மகா கிராதகன். ஜெயிலுக்கு செல்லும் முன் தன் குழந்தையை ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் என்று  மன்றாடி மனோகர் ஹை கோர்ட்டில் அழுத காட்சி அங்கு கூடி இருந்த எல்லோர் மனதையும் கரைத்தது. ஆனால் அதற்கு  ராமநாதன், முடியவே முடியாது என்று ஒரே பேச்சாக சொல்லிவிட்டார். விடுதலை பெற்று வந்து பார்த்தால் பெண்ஜாதி இறந்துவிட்டாள் என்று தெரிந்து கொண்டான். குழந்தைப் பற்றி தகவல் இல்லை. கொலை வெறி மனோகருக்கு!

நீதி அரசராம், நீதிச் செம்மலாம்.    "செத்தடா டேய்!"

ராமநாதன் வீட்டு வாசலை வந்தடைந்தான். ஒரு இளைய மங்கை ஸ்கிப்பிங் செய்து கொண்டிருந்தாள். 

அந்தக் கிழவனின் மகளாக இருக்குமோ? இல்லை பேத்தியா? யாரோ எவளோ! மொத்தத்தில் இன்று அவன் வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் முக்தி. மனோகர் மெல்ல அவளைக் குறி பார்த்துக் கொண்டிருந்தான்.

"மலர் உள்ள வா..", என்று ஒரு பெண் குரல் உள்ளிருந்து கேட்டது.

அந்தப் பெண் படக்கென்று கதவை திறந்து கொண்டு முயல் போல் உள்ளே ஓடியது. 

"அடச் சீய்!", என்று நொந்து கொண்டான் மனோகர்.

மனோகர் மெல்லமாக வீட்டு சுவர் அருகே சென்றான், துப்பாக்கியை ஜேபிக்குள் பொறுமையாக வைத்துக் கொண்டு சுவர் ஏறி குதித்தான். சென்டரிக்கள் கண்ணில் படாமல் மெல்லமாக, மிக மெல்லமாக தோட்டத்தை தாண்டி ஒரு பெரிய கண்ணாடி ஜன்னல் அருகே வந்து நின்றான். உள்ளே அந்த ராமநாதன் குடும்பம் மொத்தமும் இருந்தால் ஒட்டுமொத்த ஜோலி முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்தான். 

அப்பொழுது ஜட்ஜ் ராமநாதன் கையிலியும் முண்டா பனியனும் போட்டுக் கொண்டு முகப்பு அறைக்கு வந்தார். அருகில் அவன் பேத்தி மலரும் உட்கார்ந்து கொண்டிருந்தாள். 

ராமநாதன் மனைவியோ,  "மலர் உனக்கு நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? வயசு வந்த பொண்ணு வீட்டு வாசலில் போய் விளையாடுறேன் குதிக்கிறேன்னு போய் நிக்காதேன்னு?"

"நீ ஒரு சுத்த போர் கிராண்ட்மா", என்று ஸ்டைலாக அந்த பெண் பதில் சொன்னது.  பேத்திதான் போல.

மனோகர் கண்ணில் பழிவாங்கும் வெறி கொப்பளித்தது. துப்பாக்கியை ஜேபியிலிருந்து எடுத்தான் ஜன்னல் மேல் வைத்தான். குறி பார்த்தான்.

"டுமீல்!"

கண்ணாடி சிதறியது. துப்பாக்கி சுட்ட ஜோரில் Recoil ஆகி மனோகர் பின்பக்கமாக பறந்து சென்று விழுந்தான். 

வாசல் பக்கம் இருந்து காவல் சென்டரிக்கள், அவனை சுற்றி வளைத்துப் பிடித்தார்கள்.

"செத்தானா நீதிக் கிழம்?" என்று கிறுக்கன் போல் சிரித்தான் மனோகர்.

ஆம்புலன்ஸ் வரும் சத்தம் கேட்டது. வீட்டுக்குள் அழுகை ஒப்பாரி கூச்சல் என்ற பல சப்தங்கள் கேட்டன. 

'கிழவன் செத்துப் போய்ட்டான் போல இருக்கு' என்று மனசுக்குள் ஆனந்தப்பட்டுக் கொண்டான் மனோகர்.

பிணத்தை வெள்ளைத் துணி போர்த்தி வெளியில் நான்கு பேர் ஆம்புலன்ஸுக்கு எடுத்து சென்றனர். அந்தக் காட்சியை பார்த்த மனோகர் 'இன்னும் 14 ஆண்டுகள் சிறைக்கு சென்றாலும் சரி; தூக்கில் தொங்கினாலும் சரி என்னுடைய பழிவாங்கும் படலம் முடிந்தது' என்று சந்தோஷப்பட்டுக்  கொண்டான். எல்லாரையும் போட்டிருக்கணும்..சரி ஒரு உயிர் போனாலும் முக்கியமான ஆள் அவுட்.

அவனையும் காவல்துறையினர் பிடித்துக் கொண்டு சென்று விட்டனர்.

வெளியில் ஒரு பெரிய கூட்டம் சேர்ந்தது. கூட்டத்தில் ஒருவர் இன்னொருவரை பார்த்து கேட்டார்,  "இங்க என்ன ஒரே கூட்டம்?"

"ஒன்னும் இல்லைங்க நம்ம ஜட்ஜ் ஐயா 14 வருஷம் முன்னாடி, ஒரு கொலைகாரனை ஜெயிலுக்கு அனுப்பினார். கொலைகாரன் பொண்டாட்டி பிரசவம் முடிச்சி கொஞ்ச நாளில் செத்துப்போயிட்டா. இத்தனை வருஷம். ஜட்ஜ் ஐயா அவன் குழந்தையை  தன்னோட மகளா வளர்த்துக்கிட்டு வந்தார்  அந்தப் பொண்ண யாரோ  சுட்டுக்  கொன்னுட்டாங்க பாவம்..!"

= = = = =

40 கருத்துகள்:

 1. என்ன கதையோ? ..

  'ஒண்ணும் இல்லீங்க..' என்று கூட்டத்திலிருந்து நடந்த விஷயத்தை விளக்கிச் சொன்ன அந்த ஆளுக்கு ஆதியோடு அந்தமாய் எல்லாம் தெரிந்திருக்கிறதே! கதாசிரியர் கூட அந்தக் கூட்டத்திலிருந்திருப்பார் போலிருக்கு. தான் கேட்டதை அப்படியே கதை பண்ணிட்டாரோ? .
  எபி ஆசிரியர் குழாமில் யாருக்கோ எங்கோ வாசித்த ஏதோ ஒண்ணு
  செவ்வாய்க் கிழமைக்கு உபயோகப் பட்டிருக்கு பாருங்க. அதைச் சொல்லணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெருவில் உள்ள ஆட்களுக்கு, அந்தந்த தெருவில் உள்ள பெரிய மனிதர்கள் பற்றிய - நல்லதோ / கெட்டதோ பல விஷயங்கள் தெரிந்திருக்கும். அதில் ஒருவர்தான் கூறியிருக்கவேண்டும். இதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். ராமாயணத்தில் கூட - ஒரு சலவைத் தொழிலாளி சொல்லும் சந்தேகக் கருத்து சீதையை ராமனிடமிருந்து பிரிக்கவில்லையா?

   நீக்கு
  2. பதில் அளித்தவர் ஜட்ஜ் வீட்டு சமையல்காரர் என்று தோன்றுகிறது.
   கதைக்குக் கால் உண்டா என்று ஒரு 'சொலவடை' வழக்கில் உண்டு. ஒரு சிறு ட்விஸ்ட் , ஒரு எதிர்பாராத திருப்பம், ஒரு அசாதாரணமான நோக்கு என்று கதைக்கு மெருகு ஊட்ட பல அம்சங்கள் உண்டு.

   நீக்கு
 2. அன்பின் வணக்கங்களுடன்

  வாழிய நலம் எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரிந்துதான் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 5. விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனைகளையும் கடந்து கைத்துப்பாக்கி (மகாபலிபுரத்திற்கு) வரும் இடத்தில் மேனி சிலிர்க்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமெரிக்கப் பயணி துப்பாக்கியின் உரிமத்துடன்தான் தன்னுடைய லக்கேஜுடன் கொண்டுவந்திருப்பார் என்று நினைக்கிறேன். அதைக் கைப்பற்றிய போலீஸ்காரர் என்ன காரணமாக அதை பறிமுதல் செய்தார் என்பது தெரியவில்லை.
   40 வருடங்களுக்கு முன்பு, மகாபலிபுரம் அருகே, ஒரு இங்க்லாண்ட் கார் அநாமத்தாக நின்றுகொண்டு இருந்தது. அதுபற்றி போலீஸ் எவ்வளவோ விஜாரித்தும் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இங்க்லாண்ட் கார் என்பதால் எங்கள் அசோக் லேலண்ட் உதவியை நாடினார்கள். பிறகு நடந்தவை பற்றி எல்லாம் விவரமாக பிறகு எழுதுகிறேன்.

   நீக்கு
  2. // அமெரிக்கப் பயணி துப்பாக்கியின் உரிமத்துடன்தான் தன்னுடைய லக்கேஜுடன் கொண்டுவந்திருப்பார் என்று நினைக்கிறேன்..

   அனுமதியுடன் உள்ளே வந்த பொருள் என்றால் திரும்பச் செல்லும் போது டிக்ளேர் செய்ய வேண்டாமா?..

   ஒருவேளை - அமெரிக்க பயணி இங்கேயே தலைமறைவு ஆகி விட்டாரோ?..

   நீக்கு
  3. // ஒருவேளை - அமெரிக்க பயணி இங்கேயே தலைமறைவு ஆகி விட்டாரோ?..// அப்படியும் இருக்கலாம் !!

   நீக்கு
 6. போய் அந்தப் பக்கமா வெளையாடுங்க!....

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  கதை நன்றாக உள்ளது. முடிவு இப்படித்தான் வருமென தொடக்கத்திலேயே நானும் ஊகித்தேன். கதைகள் என்பது பொதுவாக கற்பனைகள் கலந்ததுதான். சிலசமயம் அது வாழ்க்கையின் சுவடுகளாகவும் மாற வாய்ப்புக்கள் உள்ளது. எல்லாமே விதியின் பயன்தான். கதைக்குப் பொருத்தமான ஓவியமும் நன்றாக உள்ளது. அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. படம் நன்று. ரொம்பத் தெளிவாகப் படம் போட்டிருக்கலாம். இருந்தாலும் ஜெ இன்ஸ்பிரேஷன் நன்று.

  துப்பாக்கி வந்த வித்த்தை வேறுமாதிரி எழுதியிருக்கலாம். முடிவை பாதிக் கதையிலேயே ஊகித்துவிட முடிந்தது.

  பதிலளிநீக்கு
 9. முடிவை அந்த பேத்தி வரும்போதே ஊகிக்க முடிகிறது. என்றாலும் கதை சுவாரஸ்யமாக நகர்ந்து செல்கிற மாதிரியான எழுத்து!

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 11. முதலில் நீதி அரசர் குழந்தையை எடுத்து வளர்த்து இருப்பார் என்று நினைத்தேன், சரியாக இருந்தது. கொல்ல வந்தவர் அந்த விஷயம் தெரிந்து மனம் மாறி திரும்பியது மாதிரி காட்டி இருக்கலாம். இப்படி வளரும் குழந்தையை கொன்று இருக்க வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 12. ஓவியத்தில் சிறிது நேரம் முன் விளையாடிய குழந்தை சிறிது நேரத்தில் மறைந்தது வருத்தமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'சிறிது நேரம் முன் விளயாடிய...'
   மனதை நெகிழ்த்திய வரிகள் உங்களது.

   நீக்கு
 13. இக்கதையின் தொடக்க நிகழ்வினை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் பார்த்ததாக நினைவு.

  பதிலளிநீக்கு
 14. ஆரம்ப முயற்சி என்பதால் பாராட்டுகள். விறுவிறுப்பாகக் கதையைக் கொண்டு போகத் தெரிந்திருக்கே! சஸ்பென்ஸைக் குழந்தை இருக்குமிடம் தெரியலை என்னும்போதே யூகம் செய்ய முடிகிறது. இறக்கப் போவதும் அந்தக் குழந்தைதான் என்பதையும் யூகம் செய்ய முடிகிறது. என்றாலும் ஆரம்ப கால எழுத்தாளருக்கு இது நல்லதொரு தூண்டுகோல்! தொடர்ந்து எழுத எழுதப் பழகிடும். படமும் நன்றாகவே வரைஞ்சிருக்கார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆரம்ப முயற்சியா?
   எழுதி எழுதி உரமேறிய கைக்காரர் அல்லவா, அவர்?

   நீக்கு
  2. நீங்க சொல்லுவது திரு ஜவர்லாலைனு நினைக்கிறேன். இது அவர் பிள்ளை அருண் ஜவர்லால்/ அதிகம் தமிழில் எழுதினதாகத் தெரியலை.

   நீக்கு
 15. கதையின் கரு நன்று ஆனால் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 16. இந்தியா உட்பட்ட பல நாடுகளில் வாட்ஸ் அப் செயலி இன்று பகல் 12.30லிருந்து செயல்படவில்லை. வாசகர்கள் கவனத்திற்கு..

  பதிலளிநீக்கு
 17. எஸ். மேலே 'நம்ம' ராமன் ஸார் சொல்லியிருக்கிற படி நிறைய உண்டுகள் உண்டு தான். அனாவசியமா ஒரு குழந்தையை பலி கொடுத்ததில் எந்த டிவிஸ்ட்டோ திருப்பமோ இல்லை.
  இதே கதையை நம்ம நாட்டு பாணியில் மாற்றி எழுதி அனுப்புகிறேன்.
  இன்னொரு செவ்வாய்க் கிழமைக்கு இன்னொரு கதை ஆச்சு. சரியா?

  பதிலளிநீக்கு
 18. கதை ஆரம்பத்திலேயே முடிவு தெரிந்து விடுகிறது. படம் நன்று.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!