திங்கள், 24 அக்டோபர், 2022

'திங்க'க் கிழமை – தீபாவளி ஸ்பெஷல் ஹார்லிக்ஸ் மைசூர்பாக் – நெல்லைத்தமிழன் ரெஸிபி

 

என்னடா இதுஇந்த ஸ்வீட் எப்போதும் செய்வதுதானே, இதில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்று நினைக்கவேண்டாம்.  புத்தாண்டில், எங்கள் பிளாக்கில் இனிப்பு செய்முறை பகிரவில்லை. தீபாவளிக்கும் அப்படி ஆகிவிடக்கூடாதே என்றுதான் ஸ்ரீராமிடம், இந்தத் திங்கட் கிழமைக்கு இனிப்பு செய்முறையா என்று கேட்டேன். இல்லையென்றால் நான் கடைசி நிமிட த்தில் அனுப்பினால் வெளியிடமுடியுமா என்று கேட்டேன்.  ஸ்ரீராம் யோசித்துவிட்டுப் பிறகு சரி என்று சொன்னார். அதனால் இன்று உட்கார்ந்து தட்டச்சு செய்து அனுப்புகிறேன்.

அது சரிவிழாக்காலம், விசேஷ நாள் என்றால் இனிப்புதான் வெளியிடவேண்டுமா, மசால் வடை போன்ற கார வகைகள் கூடாதா? என்று கேட்டால், எல்லோரும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்என்றுதானே சொல்கிறார்கள். அதனால் இனிப்புப் பதிவுதான் சரியாக இருக்கும் என்பது என் எண்ணம்.

நான் ரோஸ் மைதா இனிப்பு செய்தேன். அது மைசூர்பாக் போன்று அழகாக துண்டம் துண்டமாக வந்திருக்கவேண்டும். ஆனால் கொஞ்சம் அல்வா பதத்திற்கு வந்துவிட்டது. அதாவது துண்டமாக வந்தது ஆனால் வாயிலிட்டால் கெட்டியான அல்வா போன்று வந்தது. எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஆனால் நல்ல துண்டங்களாக வந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.  

என் பெண், நேற்று ஹார்லிக்ஸ் மைசூர்பாக் செய்தாள். அது ரொம்ப நன்றாக வந்திருந்தது. இன்று காலையில் சோன்பப்டி செய்தாள். நாங்கள் வெளியில் சென்றுவிட்டு வந்தபோது, அதன் சிறு துண்டைத் தந்தாள். நன்றாக வந்திருந்தது, ஆனால் துண்டம் துண்டமாக வரவில்லை. தனியாக அதனை நன்றாக இழுக்கமுடியவில்லை என்றாள்.  

என் மாமனார், வெளியில் எங்குமே சாப்பிட மாட்டார். என்னிடம் (எங்களிடம்) சோன்ப ப்டி சாப்பிடவேண்டும் என்று நிறைய தடவை சொன்னார். அப்போதெல்லாம் நான் செய்ய முயற்சிக்கவில்லை. இன்று அவள் செய்திருந்தைச் சாப்பிட்டபோது எனக்கு அவர் நினைவுதான் வந்தது. என் மனைவி, ஒக்கோரை எனப்படும் இனிப்பு செய்தாள்.  இன்று எதைப் பகிர்வது என்று யோசித்து, என் பெண் செய்திருந்த ஹார்லிக்ஸ் மைசூர்பாக் மிக அருமையாக வந்திருந்ததால், அதனையே பகிர்கிறேன். மற்றவை மெதுவாக வெளிவரும்.

சில நாட்கள் முன்பு, என் பெண், மினி பிட்சா செய்தாள். அது பார்க்க மிக அழகாகவும் ருசியாகவும் இருந்தது.  அதனை ஒரு நாள் பகிர்கிறேன். அவள் அவனில், நிறைய bake செய்வாள். (வெண்ணெய் போன்றவற்றைச் சேர்ப்பதில் எந்தக் குறையும் வைக்கமாட்டாள். அப்படீன்னாக்க, என் ஹெல்த்துக்கு அவை டேஞ்சர் என்ற எண்ணம் எனக்கு உண்டு). அவள் செய்த தேங்காய் பன் மிக மிக ருசியாக இருந்தது. அவளிடம் படங்கள் வாங்கி (ஆரம்பத்திலிருந்து படங்கள் எடுத்திருப்பாளா என்பது சந்தேகம்தான்), அவற்றையும் பிறகு பகிரலாம் என்று நினைத்திருக்கிறேன்.

என் பெண்ணுக்கு என்னிடம் ஒரு மிகப் பெரிய குறை உண்டு. நான் அவளை, அவள் திறமைகளைப் போதுமான அளவு அப்ரிஷியேட் செய்வதில்லை என்று. எந்த goalஐ அவள் அடைந்தாலும், ‘அது என்னாச்சுஎன்று இன்னொன்றைப் பற்றியே நான் பேசுகிறேன் என்று அவளுக்குக் குறை.  ஒரு நாள், கண்ணில் நீர்த்துளிகளோடு என்னிடம் இதைப்பற்றிச் சொன்னாள். நான் சொன்னேன்..' I may be wrong, ஆனால் இதைத்தான் நான் என் அப்பாவிடம் கற்றுக்கொண்டிருக்கிறேன். நம் குழந்தைகளை நாம் எப்போதும் பாராட்டி, சிலாகித்துப் பேசக்கூடாது என்று. நம் achievementனால நமக்குப் பெருமிதம் அளவுக்கு அதிகமாக வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, உன்  திறமைகளைக் கண்டு, ரொம்ப simpleஆக, அது என் ஜீன், என் அம்மாவின் ஜீன் என்றெல்லாம் சொல்லிவிடுவேன். அதை என்னால் மாற்றிக்கொள்ள முடியாது. ஆனால் நீ ரொம்பத் திறமைசாலி, am proud of you all the time, ஆனால் அதனைக் காட்டிக்கொள்ள மாட்டேன்' என்று சொல்லிவிட்டேன்.  

அவள் வரைந்து தந்த கிருஷ்ணன் படம்தான், என்னுடைய deity. அதாவது தினமும் விஷ்ணு சஹஸ்ரநாம ம் சொல்லி முடிக்கும்போது, அந்த உருவம்தான் என் மனதிலிறுத்துவேன்.

நெய் ஹார்லிக்ஸ் மைசூர்பாக் செய்முறை

தேவையானவை

கடலை மாவு 100 கிராம்

ஹார்லிக்ஸ் பவுடர் 45 கிராம்

ஜீனி/சர்க்கரை 250 கிராம்

நெய் 200 கிராம்

 செய்முறை

ஒரு தட்டில் நெய் தடவி (அல்லது பட்டர் பேப்பர் விரித்து) தயாராக வைத்துக் கொள்ளவும்.

கடலைமாவை, ஒரு கடாயில் சிவப்பாகாமல் வறுத்துக்கொள்ளவும். இது அதன் பச்சை வாசனை போவதற்கு.

இதனுடன், ஹார்லிக்ஸ் பவுடர், நெய் கலந்து நன்றாகக் கலக்கிவைத்துக்கொள்ளவும்.

அடுப்பின் ஒரு கடாயில், ஜீனி, அத்துடன் அதே அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். ஓரிழை பதத்திற்கு வந்ததும் கடலைமாவு/நெய்/ஹார்லிக்ஸ் கலவையைக் கொட்டிக் கிளறவும்.

தணலை மெதுவாக எரியவிட்டு, கிளறவும். சிறிது நேரத்தில், கடாயின் பக்கவாட்டில் ஒட்டாமல் வரும்.

உடனே இதனை, நெய் தடவிய தட்டில் கொட்டவும். சிறிது ஆறியபிறகு கத்தியால் துண்டுகளாகக் கட் செய்யவும்.

சிறிது நேரம் கழித்து, துண்டுகளைத் தனித்தனியாக எடுக்க முடியும். நெய் ஹார்லிக்ஸ் மைசூர்பாக் தயார்.

அவள் செய்த உடனேயே அவள் பாட்டியின் வீட்டுக்குச் (அடுத்த பில்டிங்தான்) சென்று, அதையும், நான் செய்த ரோஸ் மைதா ஸ்வீட்டையும் கொடுத்துவிட்டு வந்தாள். பக்கத்திலிருக்கும் என் மனைவியின் அக்கா வீட்டிற்கும் சென்று அங்கும் கொடுத்துவிட்டு வந்தாள். அவள் இனிப்பு, கேக் வகைகள் நன்றாகச் செய்வதில் எனக்குப் பெருமிதம்தான்.

ஹார்லிக்ஸ் மைசூர்பாக் இதுவரை செய்துபார்த்ததில்லை என்றால், கண்டிப்பாகச் செய்துபாருங்கள். நன்றாகவே இருக்கும்.இந்த நாள் உங்கள் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும். அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்.

= = = = = =


= = = = = = = = =

50 கருத்துகள்:

 1. ஆஹா அருமையான பதிவு. தீபாவளிக்குப் பொருத்தம். கிருஷ்ணன் படமும் அழகாக இருக்கிறது. பாராட்டுகள்.
  கங்கா ஸ்நானம் ஆச்சா?
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாதிபேர் ஆச்சு..  அதாவது பெரியவர்கள் ஆச்சு..  சிறியவர்கள் எழவேண்டும்!!!

   நீக்கு
 2. அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே..  அதே...  நன்றி.  உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.    வாங்க துரை அண்ணா..    வணக்கம்.

   நீக்கு
 3. சிறப்பான செய்முறை விளக்கம்.

  அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஜி.  உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.    

   நீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  எ. பிக்கும், எ. பி ஆசிரியர்கள் அனைவருக்கும் எ. பி வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ஹார்லிக்ஸ் மைசூர்பாக் மிக அருமையாக வந்துள்ளது. படங்கள் செய்முறை அனைத்தும் படுஜோராக உள்ளது.

  கிருஷ்ணன் ஓவியம் மிக அழகாக இருக்கிறது. பல திறமைகளோடு அசத்தும் தங்கள் மகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை கூறுங்கள். பல கலைகள் கற்ற அவர்கள் பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம். உங்கள் வீட்டிலும் சிறப்பாக்க் கொண்டாடியிருப்பீர்கள்.

   நீக்கு
  2. தங்களைப்போன்ற பெரியவர்களின் வாழ்த்துகள் அவள் வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மிக்க நன்றி.

   அது சரி.... நீங்கள் எங்கள் நெல்லைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று ஆணித்தரமாகச் சொல்லும்படி, நம்ம ஊர் பாரம்பர்ய செய்முறை ஒன்று போடுங்களேன்

   நீக்கு
 6. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

  கடைசி நேரத்தில் அனுப்பியதென்றாலும் வெளியிட்ட எங்கள் பிளாக்கிற்கு நன்றி, குறிப்பா கௌதமன் சாருக்கு.

  பதிலளிநீக்கு
 7. ஹார்லிக்ஸ் மைசூர்பாக் மிக அருமையாக வந்துள்ளது..

  படங்கள் அழகு..

  தீபாவளி நாளில் இனிமை..

  பதிலளிநீக்கு
 8. ஹார்லிக்ஸ் என்றவுடன் நான் அசடு வழிந்த சந்தர்ப்பங்கள் தான் நினைவில் வந்தது.

  பாஸ் ஹார்லிக்ஸ், இட்லி மிளகாய்பொடி, பருப்புப் பொடி, என்ற இவற்றை ஒரே மாதிரியான ஹார்லிக்ஸ் குப்பிகளில் வைத்து வித்யாசம் இல்லாமல் அடுத்து அடுத்து வைத்திருப்பார். ஒருமுறை இட்லிக்கு மிளகாய்ப்பொடி வைத்து சாப்பிட எண்ணி ஒரு குப்பியில் இருந்து பொடி எடுத்து தட்டில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிக்  குழைத்து தொட்டுச்  சாப்பிட அசடு  வழிந்ததை என்ன சொல்வது. ஹார்லிக்ஸ்!. அதே போன்று தான் சூடு சோற்றில் பருப்புப்பொடி என்று ஹார்லிக்ஸ் போட்டு நெய் விட்டு பிசைந்து வாயில் போட்டபோதும். ஆனால் ஹார்லிக்ஸ் சாதமும் நன்றாகத் தான் இருந்தது. 

  என்னைப்போல் இட்லிக்கும் சோற்றுக்கும் ஹார்லிக்ஸ் உபயோகித்தவர் யாரும் இருக்க மாட்டார்கள். 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பருப்புப் பொடி, தோசை/இட்லி மிளகாய்ப் பொடி எல்லாம் திறக்கையிலேயே காரம் மூக்கில் ஏறுமே? அதே ஹார்லிக்ஸில் எந்தவிதமான வாசனையும் வராது. மேலும் பொடிகள் எல்லாம் ஹார்லிக்ஸ் அளவுக்கு அத்தனை நைஸாகவும் இருக்காது. இருந்தாலும் ஒரே மாதிரியான பாட்டில்கள் என்பதால் எந்த சாமானைப் போட்டிருக்கோமோ அதன் பெயரை எழுதி ஒட்டி விடலாம். என் மாமியாருக்கு அப்படி ஒட்டினாலும் தடுமாறும் என்பது வேற விஷயம். :)))))

   நீக்கு
  2. இது உண்மை. தற்போதைய ஹார்லிக்ஸ் பாட்டில்கள் உள்ளே இருப்பது என்ன என்று பார்க்க முடியாமல் முழுவதும் (மூடி உட்பட) எழுத்து படம் ஆகியவற்றால் கவர் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாவது அவசரத்தில் மூடியைத் திறந்து எடுக்கும் போது என்னைப் போன்றவர்களுக்கு கவனம் போதாது.

   நீக்கு

  3. அடுத்த திங்கள்கிழமை ஹார்லிக்ஸ் சாதம் என்று ரெசிபி போட்டுடலாமா?

   நீக்கு
  4. ஜெயகுமார் சார்... சில வாரங்களுக்கு முன் நான் ரவா இட்லியும் கொத்தமல்லித் தொக்கும் கேட்டிருந்தேன். இந்த ஊரில் இட்லி ரவை என அரிசி ரவையும் கிடைக்கும். சில நேரங்களில் அதில் செய்த இட்லி எனக்குப் பிடிக்கும். அன்று அவசரத்தில் அந்த ரவையை உபயோகித்து ரவா இட்லி செய்தாள். எனக்குப் பிடிக்கவேயில்லை.

   நானும் அவசரத்தில் பாசிப்பருப்புக்குப் பதில் உடைத்த உளுத்தம்பருப்பை ஊறவைத்திருக்கிறேன்.

   சாத்த்தில் இந்த மிஸ்டேக் செய்ததில்லை

   நீக்கு
  5. என் பெண், பாட்டில்கள் அத்தனையிலும் பெயர் போட்ட லேபில் ஒட்டியிருக்கிறாள். வாங்கும் சாமான்களை ஒரு இடத்தில் வைப்பது மனைவி வேலை. காலியாக காலியாக பாட்டில்களில் நிரப்புவது என் வேலை. அப்போதான் அடுத்து என்ன வாங்கணும்னு தெரியும்.

   நீக்கு
 9. அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
  புதிய இனிப்பு-ஹார்லிக்ஸ் மைசூர் பாக் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. செய்து பார்த்தாலும் அதிக ருசியுடன் இருக்குமென்று நினைக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 10. நெல்லை செய்திருக்கும் ரோஸ் நிற கேக்கும் நன்றாகவே இருக்கு. கேக்காய் வரலைனா என்ன? அல்வானு சொல்லிடலாம். நெல்லையின் பெண்ணோ புலிக்குப் பிறந்தது என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். கொஞ்சம் தாராளமாய் மனசு விட்டுப் பாராட்டவும் வேண்டும். குழந்தை தானே! மனம் வருந்தினால்? ரொம்பவெல்லாம் பாராட்டாமல் நன்றாக வந்திருக்கே என்று சொன்னாலே போதுமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்ட்ட சொல்லுவேன். Let us go back using time machine. விட்டுப்போனதெல்லாம் வாங்கித்தர.றேன்னு.. அவள் வாங்கிட்டாலும்.. என்பாள். You will be like this only ம்பாள்

   நீக்கு
  2. பொதுவாக வீட்டுக்கு வந்த மருமகள்களைத் தான் குற்றம் சொல்லுவார்கள். அல்லது எது செய்தாலும் நன்றாக இருக்கிறது என்றே ஒத்துக்க மாட்டாங்க.உங்க விஷயத்தில் பெண்ணையே இப்படி நடத்தறீங்க! :( கண்களில் கண்ணீரைப் பார்த்தும் இளகலை. ஆனாலும் உங்க பெண் ரொம்பப் பொறுமைசாலி தான். போகிற இடத்தில் சகல சௌபாக்கியங்களும் பெற்று நன்றாக சந்தோஷமாக வாழப் பிரார்த்தனைகள். நல்ல இடமாப் பார்த்துப் பொறுமையா நிதானத்துடன் தேர்ந்தெடுங்கள். உங்க கையில் இருப்பது காணக்கிடைக்காத வைரம்.

   நீக்கு
  3. ஹாஹாஹா... இதைப்பற்றிப் பிறிதொரு நாள் எழுதறேன் கீசா மேடம்.

   நீக்கு
 11. ஹார்லிக்ஸை விட அப்போல்லாம் (அதாவது எங்கள் காலத்தில்) போர்ன்விடா போட்டுத் தான் கேக் அதிகம் செய்திருக்கோம். இதே மாதிரிக் கடலை மாவு அல்லது மைதாமாவு போட்டு போர்ன்விடா கேக் பண்ணி இருக்கேன். ஏழு சாமான்கள் சேர்த்து செவன் அப் கேக் என்றும் பண்ணுவோம். அதிகமாக நான் பண்ணுவது பால் பவுடரோடுக் கடலை மாவு சேர்த்துப் பண்ணும் பால் கேக் போன்ற ஒண்ணு தான். இப்போல்லாம் ஸ்வீட்னு எழுதித் தான் பார்க்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனைவி அவள் அம்மா வீட்டுக்குச் சென்று 7 கப் கேக் பண்ணினாள். அவங்க வீட்டுல இப்போதான் சாப்பிட்டேன். சூப்பர்

   நீக்கு
 12. அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 13. ஹார்லிக்ஸ் மைசூர்பாக் மிக நன்றாக இருக்கிறது. மகளுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.. மகள் வரைந்த கிருஷ்ணர் இரு படமும் நன்றாக இருக்கிறது. திறமைகளை பாராட்டி வாழ்த்தி மகிழ்ச்சி படுத்தினால் இன்னும் ஆர்வமாக எல்லாம் செய்வார்கள் .

  ஒரு நாள், கண்ணில் நீர்த்துளிகளோடு என்னிடம் இதைப்பற்றிச் சொன்னாள். //
  கேட்கவே கஷ்டமாய் இருக்கிறது. நம்மிடம் இருக்கும் வரை பெண் குழந்தைகளை போற்ற வேண்டும் . திருமணம் ஆகி விட்டால் வேறு ஊருக்கு, வேறு நாட்டுக்கு போய் விடுவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் கோமதி அரசு மேடம். என்னைப் பொறுத்தவரை படிப்பு மாத்திரமே முக்கியம் என்று நினைப்பேன்.

   நீக்கு
  2. உண்மைதான் கோமதி அரசு மேடம். ஆனால் எனக்கு அவள் நன்றாகப் படிக்கணும் என்பதில்தான் அதிக ஆர்வம்.

   நீக்கு
 14. பாட்டியும், பெரியம்மாவும் பாராட்டி வாழ்த்தி மகிழ்ந்து இருப்பார்கள் குழந்தையை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். அவர்களிடம் இவளுக்கு நல்ல ரிலேஷன். பெண்ணும் அவள் பாட்டியும் ரொம்ப நல்லாச் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

   நீக்கு
  2. அவளை இருவருக்கும் பிடிக்கும். அவளும் அவள் பாட்டியும் (அம்மாவின் அம்மா) சிரிச்சுச் சிரிச்சுப் பேசுவார்கள். சில நேரங்களில் அவர்கள் வீட்டிற்குச் சென்று ஏதேனும் இனிப்பு, பாட்டியின் துணையுடன் செய்வாள். அவளுக்கு பிறருடன் நன்கு பழகத் தெரியும் (ஆனால் அவளுக்குப் பிடிக்கணும். நடிக்கிறவர்களையோ இல்லை உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறவர்களையோ அவளுக்குப் பிடிப்பதில்லை. ரொம்ப அவளைப் பற்றிச் சிலாகிக்க எனக்குப் பிடிப்பதில்லை)

   நீக்கு
  3. பிறருடன் நன்கு பழகத் தெரிந்தால் நல்லது. நல்ல குணம், எல்லா திறமைகளும் அன்பும், கனிவும் கொண்ட பெண் உங்கள் பெண்.
   வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்.

   நீக்கு
 15. மினி பீட்சா,ரோஸ் மைதா ஸ்வீட் சோன்பப்டி எல்லாம் மிக அருமை.
  தித்திக்கும் தீபாவளிதான் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைக்கு இனிப்பு அதிகம். இப்போதான் பத்தாயிரம் (11,000) ஸ்டெப்ஸ் நடந்துவிட்டு வந்தேன்.

   நீக்கு
 16. நேற்று பூராவும் எங்கள் பிளாக் பார்க்கவே இல்லை இன்று தான் இப்போது பார்த்தேன் அருமையான ஹார்லிக்ஸ் மைசூர்பாக ருசிக்க முடிந்தது அருமையான தயாரிப்பு உங்கள் பெண்ணின் திறமைகள் வியக்க வைக்கிறது யாவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் அன்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி காமாட்சி அம்மா. தங்களின் தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 17. நெல்லை தமிழன் மகளுக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!