செவ்வாய், 18 அக்டோபர், 2022

சிறுகதை : கிளிநொச்சி, கிரிமினல் கிஷோர் - கில்லர்ஜி தேவகோட்டை

 கிளிநொச்சி, கிரிமினல் கிஷோர்

கில்லர்ஜி தேவகோட்டை

===================================


லைபேசியில் இமயவரம்பன் இறந்த செய்தி கேட்டு இதயம்  அடைத்து நின்றனர் அருண்மொழி-நளாயினி தம்பதிகள்.

இறப்பின் துடிப்பா ?

இல்லை இழப்பின் தவிப்பு.

உயிரின் இழப்பா ?

இல்லை பணத்தின் இழப்பு.

ஆம் இமயவரம்பன் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்ட மனிதர் சமூகத்தில் நல்ல பெயர் பெற்றவர். திடீரென்று வந்த மாரடைப்பால் எதிர்பாராத விதமாக நொடியில்  மரணத்தை தழுவினார். அருண்மொழியும் நேர்மையானவனே...
 
இமயவரம்பனின் வீட்டில் பெருங்கொண்ட உறவுகள், நட்புகளின் கூட்டம் கிஷோர் இழவு வீட்டில் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தான் முகத்தில் அண்ணனின் மரணத்தில் சலனமின்றி இருந்தான் மாறாக குரூர புன்னகை முகத்தில் பரவி இருந்ததை அருண்மொழியும் கவனித்தான். இவனிடம் சொல்வோமா ? இச்சூழலில் சொல்வது முறையா ? தனியாக நின்று சிகரெட் புகைத்துக் கொண்டு நின்று யாரிடமோ அலைபேசியில் சிரித்து பேசுகிறானே... பரவாயில்லை மகன்களிடம்தான் சொல்லக்கூடாது. இவனுக்கு இழப்பு இல்லை. சொல்வோம். பேசி முடித்ததும்... சற்று தள்ளி  நின்ற கிஷோரை பின்னால் போய் தொட்டான் அருண்மொழி.
 
வாங்க அருண்மொழி சொல்லுங்க  ?

கிஷோர் இந்த நேரத்துல சொல்றது நல்லாயில்லை ஆனால் அண்ணாச்சி இறந்த செய்தி கேட்டு மனசு கிடந்து அலைபாயுது எப்படி சொல்றதுனு தயக்கமா இருக்கு...
 
பரவாயில்லை அருண்மொழி சும்மா சொல்லுங்க...

அது வந்து அண்ணாச்சி அவசரத் தேவையா இரண்டு நாளில் தர்றேனு என்னிடம் பத்து லட்சம் பணம் வாங்கிட்டு போனார். நான் சரக்கு எடுக்க புறப்பட்டேன் அண்ணாச்சி சொன்னதுக்காக இரண்டுநாள் தள்ளிப் போட்டேன் பலமுறை அண்ணாச்சி எனக்கும் உதவி இருக்கார், நானும் கொடுத்து வாங்கி இருக்கேன். வாய்க்கணக்குதான் அண்ணாச்சி பொய் சொல்லமாட்டார், நானும் அப்படித்தான் வியாபாரத்துல நடந்துக்கிட்டேன். ஆனால் இப்ப திடீர்னு அண்ணாச்சிக்கு இப்படி ஆகிப்போச்சு பசங்கள்ட்ட சொல்ல முடியாதநிலை இது என்னோட தகுதிக்கு அதிகமான பணம் பலபேருடைய வியாபார பணமும் இதிலதான் இருக்கு அதான்....
 
இது வேறு யாருக்கும் தெரியுமா ?

இல்லை எதையும் நாங்க எழுதி வாங்கிறது இல்லை காரணம் இது அடிக்கடி நடக்கிறதுதான்.
 
சரி இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் எட்டாம்நாள் காரியம் முடியட்டும் நாம அப்புறம் பேசுவோம் பசங்கள்ட்ட நான் பேசுறேன்.

ரொம்ப நன்றி கிஷோர்.
 
கிஷோர், அருண்மொழியின் முதுகில் தட்டிக் கொடுத்தான் அவனது முகத்தில் ஒரு குரூரகோணம் வந்து மறைந்தது. கிஷோரைப்பற்றி அருண்மொழிக்கு நன்றாகவே தெரியும் எல்லோருமே ஆடை உற்பத்தி தொழில் செய்பவர்கள்தான் ஆனால் இவன் பணவிசயத்தில் சற்று கோல்மால்க்காரன்தான் இருப்பினும் இன்று இவனது உதவி தேவைப்படுகிறதே... மனம் சற்று ஆறுதலாக கூட்டத்தோடு போய் அமர்ந்து கொண்டான்.
 
இமயவரம்பனின் மனைவியும், மூன்று மகன்களும்,  மருமக்கள்மாரும், ஒரே மகளும், மருமகனும், பெயரன், பெயர்த்திகளும் இறுதிச் சடங்குகளை நிகழ்த்திக் கொண்டு இருந்தனர். இமயவரம்பன் இறுதிப்பயணத்திற்கு ஆயத்தமானார்.
 
ட்டாம்நாள் காரியம் முடிந்த மறுநாள் வீட்டின் அழைப்பு மணியோசை கேட்டு வாயிலை திறந்தான் அருண்மொழி. வாசலில் கிஷோர்.
 
வாங்க கிஷோர்...

உள்ளே அழைத்து சோபாவில் அமரச் சொல்லி விட்டு உள்ளே போய் வந்தான் சற்று நேரத்தில் காஃபியோடு வெளியே வந்த நளாயினி...
 
வாங்க அண்ணே நல்லா இருக்கீங்களா ?

ம்... நல்லா இருக்கேன்மா..
 
காஃபி சாப்பிடுங்க..

சொல்லி விட்டு கணவன் அருகில் நின்றாள் நளாயினி இருவரும் அமைதியாக காஃபி குடித்தவுடன் கிஷோர் தொடங்கினான்.
 
அருண் சொல்லுங்க...

அதான் கிஷோர் சொன்னேனே... பத்து லட்சம் அவசரத் தேவையா அண்ணாச்சி கேட்டாரு கொடுத்தேன் ஆதாரம் இல்லை.
 
ஆமாணே எங்க வாழ்க்கை தொடருவது உங்க கையிலதாணே இருக்கு எங்களோட தகுதிக்கு பெரிய பணம் நீங்கதான்ணே குடும்பத்துல பேசி வாங்கி கொடுக்கணும்.
கையெடுத்து கும்பிட்டாள் நளாயினி.
 
சரி அருண்மொழி நான் சொல்றபடி கேட்டால் உங்களோட பணம் திரும்ப வரும் என்ன சொல்றீங்க ?

சொ... சொல்லுங்க... ?
 
வாக்கு மாற மாட்டீங்களே... ?

கிஷோர் நான் பொய் சொல்லவில்லை பணம் கொடுத்தது உண்மை.
 
அருண் நீங்க பொய் சொல்லமாட்டீங்க எனக்கு நல்லாவே தெரியும்.

நான் என்ன செய்யணும் ?
 
நான் அண்ணன் குடும்பத்துல பேசி நிச்சயமாக பணம் வாங்கித் தர்றேன். உங்களோட பணம் பத்து லட்சம்தானே ?

ஆமா...
 
ஆனால் முப்பது லட்சம்னு சொல்லணும்... சம்மதமா ?

கிஷோர்...
 
சட்டென சோபாவிலிருந்து எழுந்து விட்டான் அருண்மொழி.
 
அட உட்காருங்க அருண் ஏன்... இப்படி பயப்படுறீங்க ?

முப்பது லட்சமா... எதுக்கு ?
 
என்ன இப்படி சின்னக் குழந்தை மாதிரி இருக்கீங்க... ? முப்பது லட்சம் வாங்கியதாக பெரியவனிடம் சொல்லுங்க, நானும் ஆமானு சொல்லி பணத்தை வாங்கித் தர்றேன். உங்களோட பணம் போக பாக்கி இருபது லட்சத்தை அடுத்த ஒரு மணி நேரத்தில எனக்கு தந்திடணும். இந்த விசயம் நம்ம மூணு பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்ன சொல்றீங்க ?
 
இது தப்பு இல்லையா கிஷோர் ?

என்ன இது உலகம் தெரியாமல் பேசுறீங்க... ? சரி வேண்டாம்னா சொல்லுங்க நான் போறேன் ஆனால் உங்களால பசங்கள்ட்ட வாங்க முடியாது.
 
அருண்மொழி, மனைவி நளாயினியை பார்த்தான் அவள் கணவனைப் பார்த்தாள். பிறகு விழிகளால் சம்மதம் சொன்னாள். வேறு வழியில்லை என்பதையும் பார்வையால் விளக்கினாள்.
 
நீதானா.. எடுத்து சொல்லும்மா...

அண்ணே உங்க குடும்ப விவகாரம் நாளைக்கு எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வந்துடக்கூடாதுணே... எங்களுக்கு எங்க பணம் மட்டும் வந்தால் போதும்ணே...
 
சரிம்மா... உங்களுக்கு பிரச்சனை வராது நான் சொன்னபடியே... நாளைக்கு வீட்டுக்கு வந்து பசங்கள்ட்ட சொல்லுங்க உங்க பணம் கண்டிப்பாக கிடைக்கும் அதற்கு நான் பொறுப்பு.
 
சொல்லி விட்டு எழுந்தான் கிஷோர்.

சரி அருண்மொழி நாளைக்கு வீட்டுக்கு வாங்க, நானும் வீட்ல இருப்பேன் இப்பவே பசங்கள்ட்ட சொல்லி வைக்கிறேன் சரியா ?

அருண்மொழி பூம் பூம் மாடுபோல தலையாட்டினான், கிஷோரை வாசல்வரை வந்து வழியனுப்பி விட்டு வீட்டுக்குள் நுழைந்த தம்பதியினர்...
 
என்னங்க இந்தா ஆளு நம்மளை வில்லங்கத்துல மாட்டி விட்ற மாட்டாரே ?

இவன் ஒரு கிரிமினல் எனக்கு நல்லாவே தெரியும் நளாயினி, ஆனால் நம்ம பணம் வேண்டுமானால் இவன் வழியில் போகணும். அவனுக்கு இருபது லட்சம் நம்ம மூலமாக கிடைப்பதால் நமக்கு இடையூறு செய்ய மாட்டான்.
 
நாளைக்கு வீட்டுக்கு போயி சொல்லுங்க வேறென்ன செய்யிறது ? நமக்கு தெய்வம் துணை இருக்கும், நம்ம பணம் போதும் அவங்க பணம் அவங்க குடும்பத்து ஆளுக்கிட்டேதானே போகுது. இறைவன் மேலே பாரத்தை போட்டு விட்டு போயிட்டு வாங்க......
 
றுநாள் காலை பத்து மணி இமயவரம்பன் பங்களாவின் உள்ளே நுழைந்தான் அருண்மொழி. வீட்டில் கிஷோரும் இருந்தான். இமயவரம்பனின் மனைவி சோகமே உருவாக இருந்தார். அவருக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு அமைதியாக அமர்ந்தான் அருண்மொழி. கிஷோர் பேச்சை ஆரம்பித்தான்.
 
அண்ணி இவருதான் அருண்மொழி அண்ணன் இருக்கிட்டே ரொம்ப காலமாக வியாபாரம் வச்சு இருக்காரு எனக்கும் ரொம்ப காலமாக தெரியும். அண்ணன் இறக்குறதுக்கு இரண்டு நாளைக்கு முன்பு அவசரத் தேவையாக     இவருக்கிட்டே முப்பது லட்ச ரூபாய் வாங்கியிருக்கார். அண்ணன் இறந்த அன்றைக்கே இவரும் என்னிடம் சொன்னார். நேற்றுதான் முகேஷிடமும் சொல்லி இருந்தேன்.
 
முகேஷ்...

அம்மா..
 
அப்பா வச்சுட்டு போன கடன் யாருக்கும் இருக்ககூடாது அவரது ஆத்மா சாந்தியடையணும், அவருக்கு கடன் இருப்பது பிடிக்காது உள்ளே போய் பணத்தை எடுத்துட்டு வா
 
சரிம்மா...

உள்ளே சென்ற முகேஷ் இரண்டாயிரம் ரூபாய் கட்டுகளை அள்ளி வந்தான். அதை எச்சில் ஒழுக கிஷோர் பார்த்ததை அருண்மொழியும் கவனித்தான்.
 
அருண் ஸார் இந்தாங்க உங்களோட முப்பது லட்ச ரூபாய்.

முகேஷ் சொன்னதை கேட்டு அருண்மொழி கலங்கிய விழிகளுடன் சொன்னான்.
 
அம்மா என்னை மன்னிச்சுடுங்க என்னோட பணம் பத்து லட்சம்தான் அதை மட்டும் கொடுங்க போதும்.

அப்ப ஏன் முப்பது லட்சம்னு சொன்னீங்க ?
 
மன்னிக்கணும் பணத்தாசை புடிச்சு சொல்லிட்டேன், இவ்வளவு நல்ல மனசுக்காரங்களா இருக்கீங்க... ‘’நானும்’’ துரோகம் செய்யக்கூடாது
 
இருளடைந்து போன கிஷோரின் முகம் கோபத்தால் சிவந்தது.
 
கிஷோர் என்ன இப்படி சொல்றாரு... ?

தெரியலை அண்ணி அருண் விளையாடுறீங்களா ? நீங்க எங்க அண்ணனுக்கு பணம் கொடுக்கவேயில்லை. எந்திரிச்சு வெளியே போங்க...
 
அப்ப எதுக்கு சித்தப்பா நேற்று அப்பா உங்களிடம் சொன்னதாக சொன்னீங்க ?

அது... வந்து... இவரு ரொம்ப காலமா அண்ணனோட வியாபாரத்துல இருந்தவரு பொய் சொல்ல மாட்டார்னு சொன்னேன்.
 
இல்லை முகேஷ் இவரு நல்லவருதான் பத்து லட்ச ரூபாய்தான் என்னோடதுனு சொல்றதுலயே தெரியுதே... அவரு பணத்தை கொடுத்து விடு.
 
முகேஷ் பத்து லட்சத்தை மட்டும் கொடுக்க...
 
அம்மா ரொம்ப நன்றி. நான் பொய் சொன்னதுக்காக மன்னிச்சுடுங்க...

போயிட்டு வாங்க என்னோட கணவர் நல்லவரிடம் மட்டும்தான் வியாபாரம் வச்சுக்கிருவாருனு எனக்கு நல்லாவே தெரியும், உங்களைப் பற்றியும் நிறைய சொல்லி இருக்கார்.
 
பணத்தை வாங்கிக் கொண்டு அருண்மொழி வீட்டுக்கு புறப்பட்டான்.

வீட்டுக்கு வந்து மனைவியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது.. கிஷோரிடமிருந்து அலைபேசி வந்தது.
 
சொல்லுங்க கிஷோர்.

என்ன விளையாடுறீங்களா ? எதுக்காக இப்படி மாற்றி சொன்னீங்க ?
 
எனக்கு மற்றவங்களோட பணத்தை எடுக்கிறது பிடிக்காது அதனாலதான் பொய் சொல்ல விரும்பலை.

அப்படினா இதை முதல்லயே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே... காரியம் முடிந்ததும் என்னைக் கழட்டி விடுறியா ?  நம்பிக்கைத்துரோகி.
 
யாரு நான் நம்பிக்கைத் துரோகியா ? சொந்த அண்ணனோட பணத்தை கொள்ளையடிக்கப் பார்க்கிறே அதுவும் இழவு விழுந்த வீட்ல... நான் நினைச்சு இருந்தால் உன்னைக் காட்டிக் கொடுத்து இருக்க முடியும். எனக்கு உதவிய உன்னைக் காப்பாற்றி விட்ருக்கேன். உன்னைப்பற்றி எனக்கு நல்லாவே தெரியும் அதனாலதான் நீ என்னோட வீட்ல வந்து பேசியதை அலைபேசியில பதிவு செய்து வச்சு இருக்கேன் அதை இப்பக்கூட உன்னோட அண்ணன் குடும்பத்துல கொடுக்க முடியும். ஆனால் குடும்பத்துல நம்மால் பிரச்சனை வேண்டாம்னு நான் பொய் சொன்னதாக சொல்லி மன்னிப்பு கேட்டு வந்து இருக்கேன். இதுக்கு மேலே என்னோட விசயத்துல நுழைஞ்சே பதிவு பண்ணியதை முகேஷுக்கு அனுப்பி வச்சுடுவேன் ஜாக்கிரதை.

சொல்லி விட்டு அலைபேசியை துண்டித்தான் அருண்மொழி.
 
றுவாரம் காலை அழைப்பு மணியொலிக்க..  வாயிலில் முகேஷ்.

வா முகேஷ் வா உள்ளே வா

உள்ளே வந்த அமர்ந்த முகேஷை வரவேற்று காஃபி கொடுத்தாள் நளாயினி.
 
சொல்லு முகேஷ் என்ன விசயம் ?

அப்பா உங்களிடம் முப்பது லட்சம் வாங்கியதாக சொல்லி விட்டு கிடைக்கப் போற நேரத்துல எதற்காக பத்து லட்சம்னு உண்மையை சொன்னீங்க ?
 
அது... வந்து முகேஷ் மனசாட்சி உறுத்துச்சு. அதான்...

அப்பா உங்களிடம் வாங்கிய பத்து லட்ச ரூபாயை எழுதி வச்சு இருந்தாரு... அது மட்டுமல்ல எல்லோருடைய வரவு செலவையும் அதை அவரு இறந்த இரண்டாவது நாளே நாங்க எல்லோரும் படிச்சுட்டோம். சித்தப்பாவைத் தவிர, ஆனால் அப்பா உங்களிடம் முப்பது லட்சம் வாங்கியதை சித்தப்பா நேரில் பார்த்ததாக என்னிடம் சொல்லவும். எனக்கு சந்தேகம் வந்து அம்மாவிடம் சொன்னேன். பிறகு எல்லோரும் கலந்து பேசி, காவல்துறையில் இருக்கும் தங்கச்சி மாப்பிள்ளை உதவியாலே சித்தப்பாவுக்கு வரும் அலைபேசி இணைப்புகளை கேட்டோம். அதுல பணம் வாங்கிய மறுநிமிஷமே உங்களுக்கும், சித்தப்பாவுக்கும் நடந்த வாக்குவாதம் தெரியும். இது மட்டும் இல்லை. நிறைய கோல்மால் வேலைகளை சித்தப்பா செய்துட்டாரு... அதனாலே எங்க ஐயாவோட சொத்துகள் எல்லாவற்றையுமே சித்தப்பாவுக்கு கொடுத்துட்டோம் நாங்க பங்கு வேண்டாம்னு சொல்லி எழுதி கொடுத்துட்டோம். இனி எங்களோட விசயத்துல தலையீடு இருக்காது. எங்க அப்பா அதிகமாகவே எங்களுக்கு சொத்து சேர்த்துட்டாரு... அப்பாவுக்கு முதல் மாரடைப்பு வந்தபோதே எல்லா வியாபார விசயங்களையும் என்னிடம் சொல்லி வச்சுட்டாரு... எல்லோருடைய குணங்களையும் சொல்லி, யாரிடம் தொடர்பு வைக்கணும்னு சொல்லி இருக்காரு இதையெல்லாம் உங்களிடம் சொல்றதுக்கு காரணம். உங்களோட நேர்மையை பாராட்டி விட்டு உங்களோட தொடர்ந்து வியாபாரம் வச்சுக்கிறணும்னு அம்மா சொல்லிட்டு வரச்சொன்னாங்க.. வழக்கம் போலவே நம்மகிட்டே சரக்கு எடுத்துக்கிறலாம்.
 
என்று சொல்லி விட்டு எழுந்த, முகேஷ் அருண்மொழியின் கையை பிடித்து குலுக்கினான் அதில் ஒரு அழுத்தம் இருந்தது.
 
வெளியில் வந்து மகிழுந்தில் ஏறிப்போன முகேஷுக்கு கை காட்டி அனுப்பினர். அருண்மொழி-நளாயினி தம்பதியினர்.
 
கில்லர்ஜி தேவகோட்டை

43 கருத்துகள்:

 1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று..

  குறள் நெறி வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

  வாழிய நலம்..

  பதிலளிநீக்கு
 3. நேர்மையும் நியாயமும் தோற்றதாக
  இதுவரைக்கும் செய்தி ஏதும் இல்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது, எது வெற்றி என்று நாம் புரிந்துகொள்வதைப் பொறுத்தது.

   கருப்புத் திருடன், ஸ்விஸ் பேங்கில் அக்கவுன்ட் வைத்திருப்பவன் என்றெல்லாம் வாழும் காலத்தில் இழிவுபடுத்தியவர்கள், இத்தனை வருடங்களுக்குப் பின்னும், மக்கள் ஆதரவைப் பெற்றுப் பலமுறை ஆட்சி செய்த கருணாநிதி போல் ஆட்சி கொடுப்போம் என்று சொல்லாமல் காமராஜர் ஆட்சி தருவோம் என்று சொல்லுவதும் வெற்றிதான்.

   நீக்கு
  2. மக்களிடம் கருத்து கேட்கச் சொல்லியும் இன்னும் கேட்கவில்லையே கடலுக்குள் பேனா வைப்பதற்கு!...

   நீக்கு
  3. சமுத்திர ராஜன் கோபம் கொண்டு, இவர்கள் தலையில் எதையாவது எழுதிவைத்திடப்
   போகிறார்.

   நீக்கு
  4. நேர்மையும் நியாயமும் தோற்றதாக
   இதுவரைக்கும் செய்தி ஏதும் இல்லை..//

   அண்ணா என் கருத்து தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று முதல் வரி சொல்லிக் கொண்டே தொடங்குகிறேன்.

   வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பதே கிடையாது. வாழ்க்கை பந்தயம் இல்லையே அல்லது வழக்கு என்றால் வாழ்க்கையின் வழக்கு இறைவனின் கோர்ட்டில்தானே...

   இரண்டாவது, நேர்மையும் நியாயமும் தோற்றது அல்லது வெற்றி கொண்டது என்பதை விட நீதி கிடைத்தது அல்லது உணரப்பட்டது என்று சொல்லலாமோ என்று தோன்றுகிறது.

   என்னைப் பொருத்தவரை நேர்மையும் நியாயமும் உணரப்படுவது என்பது மிக மிக மிக அபூர்வம்.

   நேர்மையாக, நியாயமாக வாழ்ந்து, செய்யாத ஒன்றிற்கு பழி சுமந்து கொண்டிருப்பவர்..மொத்தம் மூன்று பழிகள்.....பொதுவெளியில் ஒன்று, குடும்பத்தில் இரண்டு....என்று .அதனால் மன வருத்தம் உளைச்சல் என்று இன்னும் தவறு செய்யவில்லை என்பது உணரப்படாமல் அதை நம்பாமல் .....இருப்பவர்களால் எத்தனை மன வேதனைகள்....

   தவறு நம்மீது இல்லை என்றால் எதற்காகக் கவலைப்பட வேண்டும் பழி சொல்பவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும் என்று சொல்லலாம்.... ஆனால் அது ஏற்படுத்தும் உளைச்சல்...வேதனை....அதைக் கடப்பது என்பது அத்தனை எளிதல்ல..

   எனக்குத் தெரிந்து நீதியும் நியாயமும் உணரப்படுபவை, கோர்ட் என்றால் நியாயம் கிடைப்பவை என்பது அரிது...எழுத்தில் எழுதலாம், கதையில் நாம் சொல்லலாம்....ஆனால் யதார்த்தம் வேறு

   கீதா

   நீக்கு
  5. கில்லர்ஜி நியாயமாக நேர்மையாகத்தான் இருக்கிறார்...தன் குழந்தைகளிடம் உறவுகளிடம்... ஆனால் அவரை அவர் வீட்டில் யாரும் புரிந்துகொள்ளவில்லையே....

   கீதா

   நீக்கு
 4. எதுக்காக கிளிநொச்சி வரைக்கும் போகணும்!?..

  உள்ளூர்லயே நிறைய ஓணான்கள் கிடக்குதுல்லா!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த கிளிநொச்சி விளம்பர பலகையால் உதித்த கதை ஜி

   நிறைய விடயங்கள் எனக்கு கொடுப்பது புகைப்படங்களும், காணொளிகளுமே...

   நீக்கு
 5. கதை மிகவும் பிடித்திருந்தது.

  பையன்களிடம் இருக்கும் நேர்மை, பெரும்பாலும் சகோதர்ர்களிடம் இருக்காது. அதிலும் வியாபாரத்தில்.

  உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் திருச்சி நேரு ராமஜயம் நெப்போலியன் கதை

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 7. கதை மிக அருமை.

  //உங்களோட நேர்மையை பாராட்டி விட்டு உங்களோட தொடர்ந்து வியாபாரம் வச்சுக்கிறணும்னு அம்மா சொல்லிட்டு வரச்சொன்னாங்க.. வழக்கம் போலவே நம்மகிட்டே சரக்கு எடுத்துக்கிறலாம்.//

  நேர்மைக்கு கிடைத்த பரிசு.

  இந்த கதை முன்பே படித்து இருக்கிறேன் உங்கள் தளத்தில் என்று நினைக்கிறேன் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது நோஷன் பிரஸில் போட்டிக்கு அனுப்பி வெற்றி கோப்பை நழுவி விட்டதால் கை கழுவி விட்டு வந்த கதை.

   ஆம் நீங்கள் அந்த தளத்தில் படித்து இருந்தீர்கள். நன்றி

   நீக்கு
 8. நாணயம் வெல்லும் என்பதை உணர்த்தும் அருமையான கதை. மீசைக்கார நண்பருக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைய வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் கில்லர்ஜி சகோதரரே

  நல்ல கதை. உண்மையும், நேர்மையும் என்றும் தோற்றதில்லை. அதுபோல் நேர்மையானவர்கள் உண்மையை தவிர வேறு எதுவும் பேசுவதில்லை. அதன் பலன் அவர்களுக்கு நல்லதே நடக்கும். இறுதி முடிவு சுபமாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி.

  இந்தக் கதையை தங்கள் தளத்தில் படித்து ரசித்திருக்கிறேன். பாராட்டுக்கள். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது தளம் அல்ல நோஷன் பிரஸ் தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 11. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்!

  பதிலளிநீக்கு
 12. அருமையான கதை தேவகோட்டை ஜி! வாய்மையே வெல்லுமென்று நிரூபித்த கதை. பெரிதாய் பணம் புழங்கும் இடங்களில்,
  பல சிறிய மனிதர்களும், நேர்மையான சில பெரிய மனிதர்களும் உண்டு.

  பதிலளிநீக்கு
 13. முன்னாடியே படிச்சு இருந்தாலும் மறுபடியும் படிச்சு ரசிச்சேன் கில்லர்ஜி. அருமையான நிகழ்வு. இதைக் கதை என நான் கருதவில்லை.

  பதிலளிநீக்கு
 14. "வாய்மையே வெல்லும்" ஹூம். நம்பிக்கை போய் விட்டது நிகழ் காலத்தில் (ஆட்சியில்). கதையிலாவது வென்றதே!
  Jayakumar

  பதிலளிநீக்கு
 15. கில்லர்ஜி அருமையான கதை நல்லா எழுதியிருக்கீங்க கில்லர்ஜி. அங்கும் வாசித்துக் கருத்திட்ட நினைவு நீங்கள் போட்டியில் கலந்து கொண்ட போது.

  இன்னும் நிறைய கதை எழுதுங்க்ள் கில்லர்ஜி

  வாழ்த்துகள் பாராட்டுகள். பரிசு கிடைக்கலைனா என்ன....அத விடுங்க...நன்றாக எழுதறீங்க அது போதும்....இன்னும் எழுத எழுத நல்லா வரும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 16. ஆ! இங்கு நான் போட்ட கருத்து காணாமல் போயிடுச்சே......

  கீதா

  பதிலளிநீக்கு
 17. முன்பு படித்திருக்கிறேன். நேர்மை வாழ்க.

  பதிலளிநீக்கு
 18. கதைத் தலைப்பில் பாருங்கள்! எத்தனை 'கி' பாருங்க..
  கில்லர்ஜி நமக்குத் தெரியும். அதனாலே அவரைத் தெரிஞ்சது.
  கிஷோர் இந்தக் கதையில் ஒரு பாத்திரப் படைப்பு என்றளவில் கிஷோர் ஓக்கே. அவன் குரூர மனம் கொண்டவனாதலால் கிரிமினல் கிஷோர் ஆனான் என்பதால் அதுவும் ஓக்கே. எஞ்சி இருக்கிற கிளிநொச்சி?
  கடைசி வரை அந்தக் கிளி நொச்சி உபயோகக் காரணம் தெரியாமலேயே மறைச்சிட்டார் பாருங்க. இந்த கில்லர்ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழக்கமாக நான் காணும், புகைப்படங்களில் இருந்தே கதைக்கு "கரு" கிடைக்கும்.

   மேலும் மூன்றடுக்கு தலைப்பு நமது வழக்கமான பாணி. இதுவும் அப்படியே...

   நீக்கு
 19. கட்டுக்கோப்பான கதை.
  கிளிநொச்சி கிஷோரின் கையில் சிகரெட், வாயில் புகைச்சல், முகத்தில் குரூர புன்னகை என்று வில்லனை ஆரம்பத்திலேயே இனம் காட்டி கடைசியில் அவனின் குரூர திட்டத்தை அம்பலமாக்கும் வரை கதாசிரியர் அயராமல் கதையை நடத்திச் சென்றிருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். கொஞசம் கூட எழுத்தில் பதட்டம் காட்டாமல் 'அமைதியான நதியினிலே ஓடம்' என்பது போல கதையை நடத்திச் சென்று முடித்த
  இந்த மாதிரி கதைகளிடமிருந்து விடுபட்ட மாறுபட்ட அணுகல் இந்தக் கதையின் விசேஷ சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதையின் நுணுக்கமான இடங்களை கூர்ந்து கவனித்தமைக்கு மிக்க நன்றி.

   (சிகரெட் சாதாரண விஷயம்தான் ஆனால் இடம், பொருள், ஏவல் என்பது அவசியம்.)

   நீக்கு
  2. அட! சிகரெட் உங்கள் அபிமான வஸ்துவா?

   நீக்கு
 20. கில்லர்ஜியின் அடுத்த கதை எபியில் எப்போ என்று கேட்கத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள், நண்பரே!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!