புதன், 12 அக்டோபர், 2022

'வைராக்கியம்' என்றால் என்ன ?

 வர வர 'எங்களை' கேள்வி கேட்கவே ஆளில்லாமல் போயிடுச்சு! 

அதனால - நாங்க கேட்கிறோம் : 

1) 'வைராக்கியம்' என்றால் என்ன ? வெகு நாட்களாக நீங்கள் கடைபிடித்து வரும் வைராக்கியம் எது? ஏன்? 

2) நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவரா? உங்கள் குடியிருப்பில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் தளத்தில் - கார்களை நிறுத்துபவர்கள், பெரும்பாலும் 

a) காரின் முன்பக்கம் சுவற்றை பார்த்தபடி இருக்கும் நிலையில் நிறுத்துகிறார்களா? 

அல்லது 

b) காரின் முன்பக்கம், காரை நேரே வெளியே எடுத்து ஓட்டிச் செல்லும் வகையில் (காரின் டிக்கி சுவர் பக்கமாக இருப்பதுபோல் ) நிறுத்துகிறார்களா?


நீங்கள் (கார் வைத்திருப்பவர்கள் / ஓட்டுபவர்கள்) எந்த வகை? ஏன்? 
a and b வகை கார் நிறுத்தம் - பற்றி நீங்கள் என்ன  நினைக்கிறீர்கள்? 

3) வெளி மாநிலங்களில் இருக்கும்போது - உங்கள் மாநில பதிவு எண் கொண்ட கார் / லாரி ஆகியவைகளை, விசேஷ அக்கறையுடன் கவனிப்பீர்களா? அல்லது அதை எல்லாம் கவனிப்பதே இல்லையா? 

4) தீபாவளி வெடி / வாண வகைகளில் உங்களுக்குப் பிடித்தது எது? பிடிக்காதது எது? ஏன்? 

5) அந்தக் காலத்தில், நீங்கள் அதிகம் விரும்பிப் படித்த தீபாவளி மலர் - எந்தப் பத்திரிகையின் வெளியீடு ? விரும்பிப் படித்த பகுதி எது? 

= = = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்க : 

குறிப்பு : உங்கள் கருத்து - இங்கு இடம் பெற்றுள்ள படத்தைப் பற்றித்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. இந்தப் படத்தைப் பார்த்ததும், உங்கள் வாழ்வில் நடைபெற்ற சம்பவம் ஏதாவது அல்லது நீங்கள் பார்த்த கேட்ட ஏதேனும் ஒரு சம்பவம் நினைவுக்கு வரக்கூடும். அதை எழுதலாம்.   

1) 

2) 


3) 

= = = = = 

  

93 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. நான் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கவில்லை. என்னிடம் தற்போது கார் கிடையாது. 

  என்னுடைய கவனிப்பு. வெளியில் புறப்படும்போது கார் எடுப்பது அர்ஜன்ட் ஆக இருக்கும். ஆக ரிவேர்ஸ் எடுப்பது எல்லாம் கஷ்டம். நேரம் அதிகம் ஆகும். அதே சமயம் காரை  நிறுத்தி விட்டு வீட்டிற்கு செல்ல சிறிது நிறம் செலவிடுதலில் இழப்பு இல்லை. ஆக எப்போதும் காரை எடுக்கக் கூடிய வகையில் வழியை நோக்கி நிறுத்துவதே நல்லது. 

  மேலும் பார்க்கிங் ஸ்லாட் இரண்டு வகையில் வரைந்திருப்பார்கள். ஒன்று நாலு பக்கமும் 90 டிகிரி உள்ள செவ்வகமாக வரைந்து இருக்கும். இவற்றில் முன் கூறியபடி காரை அவசரமாக வெளியில் எடுக்க தோதுவாக நிறுத்துவது நல்லது. சாய்வு வரைகோடுகள் வரைந்து சாய் சதுர அமைப்பில் ஸ்லாட் உள்ள போது காரின் பின்பக்கம்  வழியை பார்த்தபடி தான் நிறுத்த வேண்டும்.  

  படம் பார்த்து சொல்வது.
  1. எனக்கு ஜீப்ரா தான் பிடிக்கும். அல்ஜீப்ரா பிடிக்காது 
  2. குரங்கு சேஷ்டை. திருடாமல் யாசிக்கின்றனவே.
  3. கன்னி பூஜை இப்படி நிக்க வைத்து செய்வது அல்ல. 

  வைராக்கியம் என்பது தினமும் ஒரு  பதிவை பிரசுரிப்பது. வருடத்தில் எல்லா நாட்களிலும் புது பதிவுகள் பிரசுரம் ஆகும்படி பார்த்துக் கொள்வது. 

  Jayakumar

  பதிலளிநீக்கு
 3. எல்லோருக்கும் காலை வணக்கம்.

  வைராக்கியம் என்பது பிடிவாதத்திலிருந்து சற்று வித்தியாசப்படும் என்றாலும் நாம் பொதுவாக இதை பிடிவாதம் என்ற பொருளில்தான் பயன்படுத்துகிறோம். சில சமயங்களில் பிடிவாதமாகக் கொள்ளப்படும் நிலை வரும்.

  வைராக்கியம் என்பது நல்ல கொள்கைகளில் உறுதியாக இருப்பதைக் குறிப்பது. மதியாதார் வாசலை மிதிக்கமாட்டேன் என்பது வைராக்கியம் ஆனால் இது பிடிவாதம் என்றும் சில சமயங்களில் குறிப்பாக குடும்ப உறவுகளில் அர்த்தம் கொள்ளப்படும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  நம்மால் பிறருக்கு நன்மை தரும் எந்த ஒரு செயலையும் விடாமல் (அதனால் நமக்கு எந்த துன்பங்கள், இன்னல்கள் வந்தாலும்) செய்ய வேண்டுமென மனதில் உறுதியுடன் செயல்படுவதை வைராக்கியம் என வைத்துக் கொள்ளலாமா ?

  இது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் துவக்கமானால் நல்லது. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருந்ததுண்டு. திருவனந்தபுரத்தில் இருந்த போது அப்படி ஒரு வளாகத்தில் இருந்ததுண்டு. நல்ல விரிவான அகலமான வளாகம் அப்போதைய காலகட்டத்தில் கார்கள் வைத்திருந்தவர்கள் சிலரே. விரிவான வளாகம் என்பதால் பெரும்பாலும் (பி) முறையில் நிறுத்தி வைப்பார்கள் பார்க்கிங்க் ஏரியா என்று தனியாக கிடையாது எல்லம் அவரவர் வீட்டு வாசலில் என்பதால் பெரும்பாலும் சுவரை ஒட்டி பக்கவாட்டில், வளாகத்தில் வாசலை நோக்கி பின்பக்கம் இருப்பதாகவும், சிலர் வாசலை நோக்கி காரின் முன்புறம் இருப்பதாகவும் நிறுத்தியதுண்டு.

  இதில் சொல்ல பல உண்டு. அதாவது நிறுத்தும் இடம் பொருத்தும் யார் நிறுத்துகிறார்கள் என்பதைப் பொருத்தும் உண்டு. அதாவது ஓட்டுநரா, உரிமையாளரா...என்று

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆழமாக யோசித்துள்ளீர்கள்! கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 6. சென்னையில் இருந்த போது ஒரு சிறிய அடுக்குமாடி 9 வீடுகள் உள்ளவை....அப்போது எங்கள் வீட்டில் கார் இருந்த சமயம். எங்கள் வீட்டு சாரதி நான். கார் பார்க்கிங்க் ஸ்லாட் உண்டு ஆனால் மிக கிகக் குறுகிய இடம். தெருவும் மிக மிகக் குறுகியது. எனவே நான் பெரும்பாலும் நிறுத்துவது முன்பக்கம் சுவரை நோக்கித்தான் இருக்கும். அதுவும் அருகில் இருக்கும் இரு ஸ்லாட்டிலும் கார்கள் அல்லது இரு சக்கரங்கள் நெருக்கியடித்து வைத்திருந்தால். காரணம் நான் ரிவர்ஸ் எடுத்து எடுத்து (மிகவும் குறுகிய தெரு, வண்டிகள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும்) முன்பக்கம் கேட்டை நோக்கி நிறுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பின்பக்கம் கேட்டை நோக்கி நிறுத்துவதே பல சமயங்களில் பாடாகிவிடும்...இரு தூண்களுக்கு இடையில் மிகவும் சரியாக (சின்ன கார்கள்தான் நிறுத்த முடியும் பெரிய கார்கள் முடியாது) நிறுத்த வேண்டும்.

  அப்படி ஒரு முறை போக்குவரத்தை அனுசரித்து கொஞ்சம் வளைத்து வளைத்து எடுத்து நிறுத்தும் சமயம், தொட்டடுத்து இருக்கும் நம் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் காரை ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். அவர் நம் ஃப்ளாடைக் கடந்து ஃப்ளாட்டை ஒட்டியிருக்கும் தெருவில் இருக்கும் அவர் வீட்டிற்கு நுழைய வேண்டும். (அவர் வீட்டு விலாசம் காக்க காக்க படத்தில் கமல் சொல்லுவதாக வரும்..) குடியிருப்பின் கேட் வேறு சுவரோடு ஒட்டி நிற்காது பல சமயங்களில்.

  நான் எடுத்து வண்டியை உள்ளே வைக்கும் வரை அவர் பொறுமையாகக் காத்திருந்து சென்றார். ஆனால் பலரும் ஹார்ன் அடித்து நம்மை ஒருவழியாக்கிவிடுவார்கள்.

  அந்த இடத்தில் (ஏ) என்றாலும் சரி (பி) என்றாலும் சரி வளைத்து ஒடித்து என்று ஒரு மூன்று நான்கு முறையாவது செய்துதான் வைக்க வேண்டிவரும். அது போன்று எடுக்கும் போது எப்படி நிறுத்தியிருந்தாலும் அத்தனை சிரமம் இருக்காது என்றாலும் சில சமயம் சிரமமாக இருக்கும் அதுவும் வண்டிகள் ஹார்ன்..... எனவே அப்போதைய நிலையைப் பொருத்து நிறுத்தியதுண்டு.

  வீட்டுப் பெரியவர்களை கோயில்களுக்கு அழைத்துச் சென்று நெடுந்தொலைவு எல்லாம் ஓட்டிய காலம் அது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளக்கமான, விவரமான கருத்துரைக்கு நன்றி. (காக்க காக்க படத்தில் கமல் வருகிறாரா? நான் பார்த்த ஞாபகம் இல்லை!)

   நீக்கு
  2. ஓ படம் பெயர் தப்பாகிவிட்டது கௌ அண்ணா...ஹ்ஜிஹிஹி.......படம் வேட்டையாடு விளையாடு!!! நம் வீட்டருகில் இயக்குநரின் வீட்டிலேயே சில ஷாட்கள், சீன்கள் எடுத்தார்கள்..அதிகாலை 4 மணிக்கு...கமல் போலீஸ் ஜீப்பை ஓட்டிக் கொண்டு தெருவில் நுழைவது போன்ற ஷாட்ஸ், வில்லன்கள் இயக்குனரின் வீட்டி மாடியிலிருந்து குதித்து ஓடுவது போன்ற ஷாட்ஸ்...

   கீதா

   நீக்கு
  3. வெறும்ன கருத்தை எழுதிவிட்டு, கலாய்த்துவிட்டுச் சென்றுவிடுவேன்.

   கீதா ரங்கன் திறமைகள் அதிகம் கொண்டவர். கடும் உழைப்பு, அட்ஜஸ்ட் பண்ணிச் செல்வது, எதையும் நகைச்சுவையாக அணுகுவது என்று இவர் திறமைகள் ஏராளம். இந்தச் சமயத்தில் இவரைப் பாராட்டத் தோன்றுகிறது. வாழ்க பல்லாண்டு. அவருக்கு இன்னும் சந்தோஷமாக, கவலைகள் இல்லாத எதிர்காலம் இருக்கிறது.

   நான் பஹ்ரைனில் இருபது வருடங்கள் கார் வைத்திருந்தேன். இந்த ஊரில் கார் ஓட்ட முடியாது என மனதளவில் நான் நம்பிவிட்டேன். லைசென்சே இன்னும் வாங்கவில்லை. மனைவியோ, கார் வாங்கணும்னு என்னைத் தூண்டிக்கொண்டே இருக்கிறாள். கீதா ரங்கன், சர்வ சாதாரணமாக நெடுந்தொலைவெல்லாம் கார் ஓட்டியிருக்கேன் என்று சொல்லும்போது பிரமிப்புதான்.

   நீக்கு
  4. நன்றி கீதா ரெங்கன், and நெல்லைத்தமிழன்.

   நீக்கு
  5. கீதா ரெங்கனைப்பற்றி அறிய, அறிய மஹா மலைப்பு ஏற்படுகிறது. சகலகலாவல்லி? சல்யூட்!

   நீக்கு
 7. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 8. வைராக்கியம்/பிடிவாதம் இரண்டும் வேறு வேறு என்றாலும் புரிஞ்சு கொள்வதில் இருக்கு. பெரும்பாலும் வைராக்கியம் பிடிவாதமாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.
  அடுக்கு மாடிக்குடியிருப்பு வளாகம் தான் இப்போப் பத்து வருஷங்களுக்கு மேலாக. ஆனால் காரெல்லாம் வைச்சுக்கலை. ஆகவே கார் வைச்சிருப்பவங்க எப்படி நிறுத்தினாலும் ஒண்ணும் பிரச்னை இல்லை. எங்கள் வளாகத்தின் கார் பார்க்கிங் மிக மிக மிகப் பெரியது. சில வீடுகளுக்கு இரண்டு கார் நிறுத்திக்கும் அளவுக்குப் பார்க்கிங் இடம் கொடுத்திருப்பாங்க. ஆகவே பெரும்பாலும் பிரச்னைகள் ஏதும் இல்லை. இரு சக்கர வாகனங்களுக்குத் தனி இடம்.

  பதிலளிநீக்கு
 9. முன்னெல்லாம் ஒரு வழக்கம் இருந்தது. வெளிமாநிலப் பதிவு எண்கள் கொண்ட வண்டிகள்/வாகனங்களைக் கவனிப்பது என. இப்போல்லாம் இல்லை.
  தீபாவளி என்றாலே பட்டாசு வகைகள் தானே. இதில் பிடித்தது/பிடிக்காதது என்றெல்லாம் இல்லை. சின்ன வயசில் எல்லாமே பிடித்தது. இப்போப் புகை ஒத்துக்கறதில்லை என்பதால் அன்று வெளியேயே வர மாட்டேன். :(

  கல்கி தீபாவளி மலரும் கலைமகள் தீபாவளி மலரும். இரண்டிலும் அறிவார்ந்த பல நல்ல விஷயங்கள் படிக்கக் கிடைக்கும். ஒரு சில இன்னமும் பத்திரப்படுத்தியும் வைச்சிருக்கேன்.அதில் சுஜாதா எழுதிய கதை ஒன்று "அலை பாயுதே!" திரைப்படமாக வந்தது வெளி வந்திருக்கு. இன்னொன்றில் கர்நாடகக் "கடுபு" பற்றிச் சித்தப்பா எழுதிய நகைச்சுவைக் கதை ஒன்று, சுஜாதாவைக் குதிரை கடித்த நகைச்சுவைக் கட்டுரை

  பதிலளிநீக்கு
 10. கு.கு.வுக்கும் முதலில் ஜீப்ராவை வைச்சு விளையாடவே ரொம்பப் பிடிச்சிருந்தது. பின்னாட்களில் மாறிப் போச்சு. இப்போ அவங்க அப்பாவுடன் பரமபதம், லூடோ விளையாடி அப்பாவைத் தோற்கடிப்பது பிடிச்சிருக்கு. :)

  இங்கே கணினி அறை ஜன்னலில் தினமும் 3 குரங்கார்கள் படுத்துத் தூங்க வராங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! போறச்சே காலைக்கடன்களையும் இங்கேயே கழிச்சுட்டுப் போறாங்க! :(
  இது என்ன பூஜைனு தெரியலை. ஆனால் உடை கறுப்பு வண்ணத்தில் இருப்பது சரியில்லையோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போக் கொஞ்சம் முன்னாடி பால்கனியில் அப்பாவும்/குழந்தையுமா இரண்டு வந்தன. நம்மவர் சும்மா இருக்காமல் ஆப்பிள் பழத்தைக் கொடுத்திருக்கார். தின்னுட்டு உடனே வந்தது. விரட்டி விட்டோம். சமையலறைப் பக்கம் செர்விஸ் ஏரியாவின் கதவைத் திறக்கவே இல்லை. சமையலறைக்கு வருவது சுலபம். பயமாகவே இருக்கு! :(

   நீக்கு
 11. // வர வர 'எங்களை' கேள்வி கேட்கவே ஆளில்லாமல் போயிடுச்சு!.. //

  நல்லது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேளுங்க, கேளுங்க. இல்லையேல் எங்கள் எல்லோருக்கும் போர் அடிக்கிறது!!

   நீக்கு
 12. இதுவும் நன்றாகத் தான் இருக்கின்றது..

  பதிலளிநீக்கு
 13. வைராக்கியம் ஒரு உயர்ந்த குணம். ஆனால் மக்கள் அதை பிடிவாதம் என்ற வகையில் ஒதுக்குகிறார்கள்.

  அவர்கள்தான் வாழ்வில் வைராக்கியம் வைத்து எதையும் சாதிக்காதவர்கள்.

  பதிலளிநீக்கு
 14. நான் பிளாட்டில் குடியிருக்கவில்லை. ஆனால் நிறுத்தும் பொழுது, சுவற்றின் புறத்தில் டிக்கி இருப்பதுபோல் நிறுத்துவேன் காரணம் மறுதினம் தொடங்கும்போது முன்னோட்டு போவது போலிருக்க வேண்டும் அதுவே வெற்றியின் வழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரெக்ட். பலரும் இதை சொல்லக் கேட்டிருக்கிறேன்.

   நீக்கு
 15. 'வைராக்கியம்' என்றால் என்ன ? வெகு நாட்களாக நீங்கள் கடைபிடித்து வரும் வைராக்கியம் எது? ஏன்?

  உலக இன்பங்கள், இன்ப சாதனங்கள் மீதான பற்றை அறவே நீக்குவதே வைராக்கியம் என்று ஞானிகள் சொல்கிறார்கள் (இன்ப சிந்தனைகள் கூட ஆகாதாம்). சந்நியாசம் பெற வைராக்கிய நுழைவுத் தேர்வில் முதல் அடம்ப்டில் தேற வேண்டும்.

  ஆதி சங்கரர் கொடுத்திருக்கும் வைராக்கிய சுலோகங்கள் நமக்கு நிறைய பலனைக் கொடுத்திருக்கின்றன. அதில் முக்கியமானது டிஎம் சௌந்தரராஜன் பாடிய வீடு வரை உறவு, வீதி வரை மனைவி பாடல். நான் கடைபிடிக்கும் வைராக்கியம் ஒன்று இருக்கிறது. எந்த வைராக்கியமும் கடைபிடிக்கக் கூடாது என்பதே.
  மற்றபடி வைராக்கியம் வடமொழிச் சொல். இதற்கும் கல்யாண் ஜுவல்ர்ஸ் ஜிஆர்டி தனுஷ்க் ஆதரவாளர்களுக்கும் தொடர்பு கிடையாது என்று தோன்றுகிறது.

  -மந

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரைக்கு நன்றி. முகமூடி நண்பரே.

   நீக்கு
  2. இதற்கும் கல்யாண் ஜுவல்ர்ஸ் ஜிஆர்டி தனுஷ்க் ஆதரவாளர்களுக்கும் தொடர்பு கிடையாது என்று தோன்றுகிறது.//

   இத பார்த்ததும் நெல்லைன்னு நினைச்சேன்!!!
   இல்லைனா பானுக்காவாக இருக்கும்னு நினைத்தேன்..ஆதிசங்கரர் என்றெல்லாம் வருகிறதே அதனால்...அப்படிச் சொல்லிவிட்டுகடைசியில் இப்படி முடிப்பாங்க அவங்க அதனால்.... ஹிஹிஹிஹி ஆனால் -மந....யார் என்று தெரியவில்லை.

   கீதா

   நீக்கு
  3. ம ந - பதிவுக்கு ஒருமுறைதான் வருவார். கருத்து எழுதிவிட்டு காணாமல் போய் விடுவார்!

   நீக்கு
 16. இந்த வகையான எண்களை விஷேசமாக கவனித்து குறிப்பு எடுப்பது, புகைப்படம் எடுப்பது எனது மூன்றரை அகவையிலிருந்து இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 17. சிறிய அகவையில் வெடி வெடிப்பதில் மிகவும் ஈடுபாடு உள்ளவர், வித்தியாசமாக யோசித்து மரக்கிளையில் தொங்கவிட்டு தீ வைப்பது, சக்தியில் பாலீதீனில் சொருகி வைத்து தீ வைப்பது இப்படி நிறைய உண்டு.

  பதிலளிநீக்கு
 18. 3. கவனிப்பதுண்டு. விசேஷ அக்கறை என்றில்லை.....சும்மா...

  4. பல வருடங்களாக தீபாவளி வெடி / வான வேடிக்கை வகைகள் வாங்குவதில்லை. வாங்கிய ஏதோ ஒரு காலத்தில் தரைச்சக்கரம், பூஞ்சட்டி பிடிக்கும். அது போல வான வேடிக்கைகள் எங்கள் குடும்பம் (பெரிய குடும்பம் - புகுந்த வீடு), நட்புகள் என்று எல்லோரும் சேர்ந்து விட்டதுண்டு ஆனால் பெயர் எதுவும் நினைவில் இல்லை. பல வருடங்கள் ஆகிவிட்டதே!

  கீதா

  பதிலளிநீக்கு
 19. 5. ஒரு காலத்தில் என் பாட்டி (அப்பாவின் அம்மா) கல்கி மற்றும் கலைமகள் சந்தா கட்டி வாங்குவார்கள். அப்படி வந்த மலர்களில் ஒன்றோ ரெண்டோ எனக்கு வாய்ப்பு கிடைத்த போது பார்த்ததுண்டு. ஆனால் அதில் இருந்தவை நினைவில் இல்லை.

  சமீபத்தில் ஒரு 3,4 வருடங்கள் முன் உறவினர் வீட்டில் ஒரு தீபாவளி மலர்...எந்த இதழின் என் பது மறந்துவிட்டது...ஏனென்றால் மனதை ஈர்க்காததால்

  கீதா

  பதிலளிநீக்கு
 20. முதல் படத்தைப் பார்த்ததுமே டக்கென்று நினைவிற்கு வந்த குழந்தை கீதாக்காவின் குட்டிக் குஞ்சுலு!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 21. இரண்டாவது படம் - எல்லாருமே ரொம்ப ஞானியாகிட்டாங்க போல இத்தனை பொறுமையா இருக்காங்களே!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 22. 3. வடு படம் - இது ஏதோ ஒரு நடனக் குழு இப்படி ஏதேனும் ஒன்று நடனத்தில் வருமோ என்னவோ...அதை மட்டும் இப்படி போஸ் கொடுத்து எடுத்திருக்காங்களோ என்று தோன்றுகிறது. அப்பெண் ஷாலை குறுக்கே போட்டு மடித்து முடிந்திருப்பதைப் பார்க்கும் போது நடனக்குழு என்றே தோன்றுகிறது

  கீதா

  பதிலளிநீக்கு
 23. முன்பே சொல்லி இருப்பேன்..

  இது ஒரு நடனக் குழு என்பதைச் சொல்வதனால் என்ன ஆகப் போகின்றது?..

  பதிலளிநீக்கு
 24. மறுதினம் தொடங்கும்போது முன்னோட்டிப் போவது போல் இருக்க வேண்டும் அதுவே வெற்றியின் வழி...

  உண்மை..

  என்னிடம் நாலு சக்கர வாகனம் இன்னும் அமையவில்லை.. நானும் இதையே சொல்லியிருப்பேன்..

  பதிலளிநீக்கு
 25. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

  பதிலளிநீக்கு
 26. இங்கே பெரும்பாலும் எல்லோரும் அடுக்கு மாடி குடியிருப்புகள் தான்! காரை நிறுத்தும்போதே, டிக்கி பின்னால் இருக்கும்படி முன் நோக்கித்தான் காரை நிற்பாட்டும் வழக்கம். அது தான் காரை திரும்பவும் வெளியே எடுக்கும்போது வசதி.வெற்றி வழி என்றெல்லாம் நினைத்ததில்லை. இப்போது தான் அது மாதிரி கேள்விப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 27. வைராக்கியம் என்பது அவரவர் மனதுக்கு தோன்றும் நியாங்கள் தான்! சில சமயங்களில் இக்கட்டான சூழ்நிலைகளில் சில வைராக்கியங்கள் தளர்வதுண்டு! ஆனாலும் பெரும்பாலான சமயங்களில் இந்த வைராக்கியங்களால் நன்மை தான் விளைந்திருக்கின்றன!

  பதிலளிநீக்கு
 28. ஊரில் தீபாவளியைப்பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டன! எப்படி இருந்தாலும் புஸ்வாணமும் சங்கு சக்கரமும் தான் பிடிக்கும்!

  பதிலளிநீக்கு
 29. அந்தக் கால தீபாவளி மலர்கள் [ அறுபதுகளில்] போட்டி போட்டுக்கொண்டு ஓவியங்களையும் நல்ல சிறுகதைகளையும் பிரசுரிப்பார்கள். கலைமகளில் ஓவியங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். என் ஆதர்ச ஓவியர் திரு.நடராஜனின் ஓவியங்களை எப்போதும் சேகரித்து வைப்பேன்.
  அந்தக்காலம் இனி வருமா?

  பதிலளிநீக்கு
 30. (வைராக்கியம்) திண்மை :-

  உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
  வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (24)

  இன்றைய காலத்தில் திண்மை :-

  வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
  புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று (273)

  பதிலளிநீக்கு
 31. நம்ம பிரச்சனை, வைராக்யம்னா என்னன்னே தெரியாமலிருப்பது. கடைசிவரை பையனிடம் பேசாமல் வைராக்யமாக இருந்தார் என்பது பிடிவாதம்.

  வைராக்யமா பிறர் தயவில் வாழாமலிருந்தார். அரசனைப் பாடிப் பொருள் தேடாமல், மலையளவு பொன் கொடுத்தாலும் மானிடனைப் பாடேன் என்று வைராக்யமாக இருந்தார், என்பது போலத்தான் வைராக்யம் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளவேண்டும். அதாவது காரணத்தைப் பொருத்துதான் வைராக்யமா அல்லது பிடிவாதமா என்று தெரியும்.

  பதிலளிநீக்கு
 32. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது வைராக்யமல்ல. புலாலுண்ணுபவன், புலாலின் தீமையறிந்து, கைவிட்டேன் என வாழ்வது வைராக்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தீமையறிந்து விடுவது வைராக்கியம் அல்ல, விவேகம்.
   நன்மையறிந்து, முக்கியமாக இன்பமறிந்து(ம்) விடுவதே வைராக்கியம்.
   பற்றறுத்தலும் வைராக்கியமும் ஓர்ப்படி மைத்துனர் உறவுமுறை.
   (மீண்டு-ம் வந்தேன்)
   - மந

   நீக்கு
  2. மீண்டும் வந்தது சரி; ம ந - விளக்கம் தேவை.

   நீக்கு
 33. கார் இருக்கிறது ஓட்டத் தெரியாது டிக்கி சுவர்பக்கமாக இருக்குமாறு பாக் செய்வோம். அடுக்குமாடி தனி வீடு என வேலைக்கு ஏற்றபடி வாழ்கிறோம்.

  தீபாவளிக்கு சிறுவயதில் இருந்தே மத்தாப்புதான் .பட்டாசு எப்போதும் ஆபத்து என்பது எமது தந்தையாரின் கருத்து சுற்றுசூழல் பாதுகாப்பையும் கருதி அப்படியே இப்பொழுதும் செய்கிறோம்.
  கல்கி தீபாவளி மலர்,கலைமகள் தீபாவளி மலர் ஜோக்ஸ், கதைகள், ஓவியங்கள் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 34. படம் கருத்து - பஞ்சு பொம்மைகள் எங்கள் வீட்டிலும் ஒரு கலெக்சன் இருக்கிறது பேரனுடையது.

  கூடை நிறைய வாழைப்பழம் விருந்தினருக்கு கொண்டாட்டம்தான்.

  குருவிடம் ஆசீர்வாதம் போல் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 35. 2 a), b): டெல்லியில் வைத்திருக்கவில்லை. பெங்களூரில் இருக்கிறது கார். நான் க்யூபாவில் காரோட்டியவன். பழகியதோ கென்யாவில். அதனால் நம்ம ’’நாட்டு ‘ ரோடுகளில் சர்க்கஸ் செய்ய நான் தயார் செய்யப்படவில்லை! பெங்களூரில், Ez 'driver-ஐ அழைத்து ஓட்டவைக்கிறேன். நல்ல காரில் பயணத்தை எஞ்ஜாய் செய்யணும்னா, அடுத்தவரை ஓட்டவிடுவதே வழி.. பெங்களூர் குண்டு குழி ரோடுகளில் அதுவே நேர்வழி!

  சுவரைப் பார்த்து டிக்கி இருக்குமாறு பார்க் செய்யவிரும்புவன். வாடகை டிரைவர் என் வண்டியை அவ்வப்போது பார்க் செய்வதால் அடுத்த வண்டிக்கு மிக அருகில் உரச நேரும்படி நிறுத்தவில்லையே என்று மற்றும் சரி பார்த்துக்கொள்வது வழக்கம். எங்கள் அபார்ட்மெண்ட் பார்க்கிங் ஸ்பேஸ் விசாலமானது.

  பதிலளிநீக்கு
 36. வணக்கம் சகோதரரே

  குடியிருப்பது அப்பார்ட்மெண்ட் என்றாலும், கார் இனிமேல்தான் வாங்க வேண்டும். இப்போதைக்கு குழந்தைகளிடம் உள்ளது டூவீலர்தான். குடியிருக்கும் எல்லோரும் அப்படி, இப்படி என கார்களை வைத்துப் பார்த்துள்ளேன். நாங்கள் வாங்கிய பிறகுதான் இதைப்பற்றி யோசிக்க வேண்டும்.

  தீபாவளி வெடிகள், அந்த மத்தாப்பு வாசனைகள் முன்பு ரொம்ப பிடித்தது. இப்போது வெடிச் சத்தம் நெஞ்சை படபடக்க வைக்கிறது. அந்த வாசனையும் இப்போதுள்ள வெடிகளில் இல்லை என்றே தோன்றுகிறது. தவிரவும் இப்போது வெடிகள் வெடிக்க கட்டுப்பாடுகள் வந்ததும் சௌகரியமாகத்தான் உள்ளது.

  சின்ன வயதில் இருக்கும் போது ஐந்து ரூபாய்க்கு நிறைய வெடிகள், மத்தாப்பு வகைகள் என கிடைக்கும். . இப்போது வாங்கும் விலையிலா ஒவ்வொன்றும் உள்ளது.? ஆனாலும், தடைகள் காரணமாக இருந்தாலும், அந்த இரண்டு மூன்று தினங்களில் மக்கள் காசை கரியாக்கி விட்டுதான் ஓய்கிறார்கள். அதென்னவோ அப்போதைய மகிழ்ச்சிகள் (வெடிகள், துணிமணிகள், இந்த மாதிரி தீபாவளி மலர்கள் வாங்கி படிக்கும் போது வரும் சுவாரஸ்யங்கள். ) இப்போது இல்லையெனத்தான் தோன்றுகிறது. கேள்விகளுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 37. கேள்விக் கனைகளையும் பதில் கருத்துருக்களையும் படித்து ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 38. இந்தக் காலத்தில் கல்யாணம் என்பது மிக மலிவான ஒன்றாக ஆகிவிட்டதோ?

  பேருந்துகள் நிற்குமிடத்தின் நிழற்குடையில் வைத்து ஒரு சிறுவன் இன்னொரு சிறுமிக்குத் தாலி கட்டி இருக்கிறானே? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
  தாலி கட்டிவிட்டால் அந்தப் பெண் தனக்கு உரிமை என்னும் எண்ணத்தில் கட்டி இருப்பானோ? அப்போ பெண் என்பவள் ஒரு ஆணின் உடைமைதானா?
  திருமண பந்தம் என்பது அதன் உள்ளார்ந்த மதிப்புகள் குறித்து அறியாமல் வெறும் தாலி.கட்டிக்கொண்டால் திருமணம் முடிந்தது என்னும் கட்டுக்குள் வந்திருப்பதற்கு யார் அல்லது எது காரணம்?
  அந்தக் குழந்தைகளின் பெற்றோர் இதைக் குறித்து என்ன சொல்கின்றனர்?
  அந்தச் சிறுமி தாலி கட்டிக்கொள்வதன் விபரீதம் புரியாமல் சிரிப்புடன் முகத்தை மட்டும் மூடிக் கொள்வது சரியா?

  இருவரும் இப்போதே திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தத் தயாராகி விட்டார்களா?

  பதிலளிநீக்கு
 39. வீண் பிடிவாதம், வீம்பு கூட சில சமயங்களில் வைராக்கியம் எனும் பெயரில் சொல்லப்படுவதுண்டு. நல்ல கொள்கைகளில் உறுதியாக நிற்பதுதான் வைராக்கியம். என் உழைப்பில்தான் நான் உயர்வேன் என்று சொல்லி நிற்பது வைராக்கியம்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!