ரீ மீ 12 - அபிமன்யு முந்தைய வார பதிவு சுட்டி.
ரீட்டா பற்றி மாதுரியுடன் பேசியபோது, ரீட்டா ஏன் சொந்தமாக கார் வைத்துக்கொள்ளவில்லை என்று கேட்டான் அருண். அதற்கு மாதுரி - 'ரீட்டா 'சொந்தக் கார் வாங்குவதாக இருந்தால், BMW கார்தான் வாங்குவது' என்று தீர்மானமாக இருந்தாள். இந்த பங்களாவை வாங்கி இங்கு குடியேறிய நாளிலிருந்து, மார்ஸ் (MAARS) கார் ரென்டல் சர்வீஸ் கார் புக்கிங் செய்து அந்த வாடகைக் காரில் மட்டுமே தான் செல்லவேண்டிய இடங்களுக்கு சென்று வருவது வழக்கம்' - என்று தெரிவித்தார்.
'ரீட்டா சமீபத்தில் அவளுடைய போனிலிருந்து உங்களுக்கு ஏதேனும் ஃபோட்டோ அனுப்பியது உண்டா ?' என்று கேட்ட அருணுக்கு மாதுரி, ஒரு மாதத்திற்கு முன்பு தனக்கு ரீட்டா அனுப்பிய படம் ஒன்றை, அருணின் ஃபோன் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்பினாள்.
நீச்சல் உடையில், ரீட்டா ஒரு காரின் முன்பு நின்று எடுத்துக்கொண்ட ஃபோட்டோ. அதோடு கூட ஒரு சிறு குறிப்பு : " பெரியம்மா - கூடிய விரைவில் இந்தக் காரும், இதன் சொந்தக்காரரும் எனக்குச் சொந்தம்! "
அ : " அதன் பிறகு, அந்தக் கார் பற்றி, அதன் சொந்தக்காரர் பற்றி ரீட்டாவிடம் ஏதாவது விசாரித்தீர்களா "
மா : " கேட்டேன். ஆனால், 'மேற்கொண்டு எந்த விவரமும் இப்போதைக்குச் சொல்லமாட்டேன்' என்று ரீட்டா சொன்னாள். எப்படியோ கூடிய விரைவில், ரீட்டா கல்யாணம் பண்ணிக்கொண்டு சந்தோஷமாக இருந்தால் சரிதான் என்று நினைத்து, நான் அதுபற்றி அவளிடம் வேறு எதுவும் கேட்கவில்லை."
அ : ரீட்டா எப்பொழுதும் கீழே உள்ள இந்த அறையில்தான் படுத்துத் தூங்குவார்களா? உங்கள் அறை எங்கே இருக்கு? "
மா : " ஆமாம். ரீட்டாவின் பெட் ரூம், ஆபீஸ் ரூம் லைப்ரரி, குளியலறை எல்லாமே கீழேதான். என்னுடைய ரூம், குளியலறை எல்லாம் முதல் மாடியில். வேலைக்காரர்கள், சமையல் செய்பவர் ஏலவொருமே ரீட்டா ஊரில் இல்லை என்றால், மதியானம் கிளம்பிச் சென்றுவிடுவார்கள். நான் கூட சாயந்தரம் ஆறு மணி ஆகிவிட்டால், முதல் மாடியில் என்னுடைய ரூமுக்குப் போய்விடுவேன். ரீட்டா எப்போதுமே காலை ஆறுமணிக்கு எழுந்துகொண்டுவிடுவாள். காலை ஏழு மணி ஆகியும் ரீட்டா எழுந்துகொல்லவில்லை என்றதும் கீழே வந்து அவளுடைய பெட் ரூம் போய்ப் பார்த்தேன். அப்போதான் ரீட்டா உயிருடன் இல்லை என்று தெரிந்தது. " கண்ணில் வந்த நீரைத் துடைத்தபடி தடுமாற்றத்துடன் மாதுரி சொன்னதைக் கேட்ட அருண், மேற்கொண்டு மாதுரியை ஒன்றும் கேள்வி கேட்காமல் வெளியே வந்தான்.
ரீட்டாவின் பங்களாவிற்கு வெளியே , எதிரே இருந்த பங்களா சொந்தக்காரரின் கார் டிரைவர் நாராயணனைப் பார்க்க நேர்ந்தது. அந்த பங்களா சொந்தக்காரரின் காரைத் துடைத்துக்கொண்டிருந்த நாராயணனிடம், பேச்சுக் கொடுத்து, ரீட்டா பற்றி விசாரித்தான் அருண்.
அப்பொழுது நாராயணன் சொன்ன சில தகவல்கள் அருணை சிந்திக்க வைத்தன. " ரீட்டாம்மா ரொம்ப நல்லவங்க. அவங்க இருக்கிற இந்த பங்களாவைக் கட்டியவர், குடும்பத்தோடு வெளிநாட்டில் குடியேறப் போகுமுன், இந்த பங்களாவை வந்த விலைக்கு விற்றுவிட முடிவு செய்தார். அதிர்ஷ்டவசமாக ரீட்டாம்மா, விளம்பரம் பார்த்து இதை வாங்கி, இங்கே குடியேறிட்டாங்க. அவங்களுக்கு எங்காவது சவாரி செல்ல வேண்டும் என்றால், மார்ஸ் கம்பெனி கார் சர்வீசிற்கு ஃபோன் செய்வாங்க. மார்ஸ் கம்பெனி கார் வெவ்வேறு கார் வந்தாலும், டிரைவர் மட்டும் எப்போதும் ராஜு என்று ஒருவர்தான் வருவார். ரீட்டாம்மா புறப்பட கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும்போது ராஜு இங்கே வந்து என்னுடன் பேசிக்கொண்டிருப்பார். ரீட்டாம்மா மூன்று நாட்களுக்கு முன்பு காரில் புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு ராஜுவைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தேன். அதற்குப் பின் ராஜுவைப் பார்க்கவில்லை."
அ : " ரீட்டா நேற்று வந்தபோது மார்ஸ் கம்பெனி காரில்தான் வந்தாங்களா ?"
நா : " இல்லை சார்! அதுதான் ஆச்சரியமாக இருந்தது. நேத்திக்கி சாயந்தரம் மார்ஸ் கம்பெனி கார் ஒன்று வந்தது. 'சரி ரீட்டாம்மா வருகிறார்கள் போலிருக்கு' என்று நினைத்து, ராஜுவைப் பார்த்துப் பேசலாம் என்று காத்திருந்தேன். ஆனால் மார்ஸ் கம்பெனி காரிலிருந்து வேறு யாரோ ஒரு டிரைவர் இறங்கி, உள்ளே சென்று, பெரியம்மாவிடம் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். சுமார் அரைமணி நேரம் கழித்து, அந்த டிரைவர் வெளியே வந்து, அந்தக் காரில் புறப்பட்டுச் சென்றார். அவரை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. பெரியம்மாவிடம் அவர் யார் என்று கேட்டேன். ஏர் கண்டிஷனர் ரிப்பேர் செய்ய வந்த மெக்கானிக் என்று சொன்னார்கள்."
அ : " அப்படியானால், ரீட்டா திரும்பி வந்ததை நீங்கள் பார்க்கவில்லையா ?"
நா : " பார்த்தேன். நேற்று இரவு ஏழு மணி சுமாருக்கு மழை பெய்ய ஆரம்பித்தது. இந்தக் காரை ரெக்ஸின் கவர் போட்டு மூடலாம் என்று கவர் கொண்டு வந்து மூட ஆரம்பித்தேன். மழை கொஞ்சம் பலமாகப் பெய்ய ஆரம்பித்தது. அப்போது எதிர் பங்களாவுக்கு அருகே ஒரு நீல நிறக் கார் வந்துநின்றது. வந்து நின்ற உடனேயே காரின் விளக்குகள் எல்லாம் ஆஃப் செய்யப்பட்டது. காரிலிருந்து ரீட்டாம்மா இறங்கி, காரை ஓட்டி வந்தவரிடம் நன்றி சொல்லிவிட்டு, வீட்டிற்குள் வேகமாக போயிட்டாங்க. காரை ஓட்டி வந்தவரும் காரிலிருந்து இறங்காமலேயே திரும்பக் காரை ஓட்டிச் சென்றுவிட்டார். "
அ : " அந்தக் காரின் பதிவு எண் என்ன என்று பார்த்தீர்களா ?"
நா : " சரியாகத் தெரியவில்லை. ஆனால் தெரு விளக்கின் வெளிச்சத்தில் ஒரு செகண்ட் பார்த்தபோது பதிவு எண் 8888 என்று பார்த்த ஞாபகம். "
= = = = = = = = = = = =
மறுநாள் மதிவாணன் (CV235 வாங்கிய மூன்றாவது நபர்) விலாசத்திற்கு, போலீஸ் ஜீப்பில் சென்றான் அருண்.
அப்பொழுது அவனுடைய நினைவுகள் எல்லாம் யார் கொலையாளி என்பதிலேயே சுற்றிச் சுற்றி வந்தது.
ரீட்டாவின் மரணத்திற்குக் காரணம் CV235 விஷஜாடி.
அதை வாங்கியவர்கள், மூன்று பேர். 1) ஆனந்த், 2) அருண் என்கிற நான், மற்றும் 3) மதிவாணன். ஆனந்த் அனுப்பிய விஷ ஜாடி, அதிர்ஷ்டவசமாக ரீட்டாவின் மரணத்திற்குக் காரணம் இல்லை. நான் வாங்கிய விஷ ஜாடி, மனசாட்சி உறுத்தியதால், பயன்படுத்தப்படாமல் என்னிடத்திலேயே இருக்கிறது. மதிவாணன் யார்? அவர் வாங்கிய விஷ ஜாடி, எப்படி ரீட்டாவின் அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏர் கண்டிஷனருக்கு வந்து சேர்ந்தது?
இதற்குள் மதிவாணன் விலாசத்திற்கு போலீஸ் ஜீப் போய் நின்றது.
அது ஒரு கார் கராஜ். முகப்பில் M A A R S என்று எழுதியிருந்தது. ஆங்காங்கே சில கார்கள் - அவற்றில் சில மெக்கானிக்குகள் என்று மும்முரமாக ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.
போலீஸ் ஜீப்பைப் பார்த்ததும் உள்ளேயிருந்து ஒருவர் வந்தார். " யார் நீங்க? என்ன வேண்டும் உங்களுக்கு?"
அ : " மதிவாணன் அவர்களைப் பார்க்கவேண்டும். "
வந்தவர் : " முதலாளியா? அவர் மலேசியாவில் இருக்கிறார். "
அ : " எப்போது போனார்? எப்போது திரும்ப வருவார்? "
வந்தவர் : " ஐந்து வருடங்களாக அங்கேதான் இருக்கார். எப்போது வருவார் என்று தெரியாது. "
அ : " நீங்கள் யார்? இங்கே நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் ?"
வ : " என் பெயர் கோதண்டன். நான் இந்த மார்ஸ் கம்பெனி மேனேஜர்."
அ : " முதலாளி மலேசியாவில் இருக்கிறார் என்று சொல்கிறீர்கள் ஆனால் அவர் பெயருக்கு சில நாட்களுக்கு முன்பு பார்சல் வந்திருக்கிறதே! அதை யார் வாங்கினார்கள்? "
கோ : " உள்ளே ஆபீஸ் அறைக்கு வாங்க சார். உட்காருங்க - நாங்க இங்கே கார் ரிப்பேர் செய்வது, சர்வீஸ் செய்வது, எல்லாம் செய்கிறோம். மற்றும் மார்ஸ் வாடகைக் கார் கால் ஆபீஸ் எல்லாம் நடத்துகிறோம். சில ஃபாரீன் கார் சர்வீஸ் செய்ய, ஸ்பேர் பார்ட்ஸ் வெளிநாடுகளிலிருந்துதான் வாங்கவேண்டும். எல்லா ஆர்டர்களும் முதலாளி பெயரில்தான் அனுப்புவோம்; முதலாளி பெயருக்குத்தான் பார்சல் வரும். அவற்றை ஆர்டர் நம்பர் மூலம் பிரித்து, எந்தக் காருக்கு உபயோகப்படுத்த வேண்டுமோ அதற்கு உபயோகப்படுத்திக்கொள்வோம். நீங்கள் சொல்லும் பார்சல் என்ன ஆர்டர் நம்பர் என்று சொல்லுங்கள், பார்த்து, விவரம் சொல்கிறேன். "
அ : " ராஜு என்று ஒரு டிரைவர் இங்கே வேலை பார்க்கிறாரா? "
கோ : " சார் - மார்ஸ் கம்பெனி கார்களுக்கு இந்த சென்னையில் பல இடங்களில் கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளையிலும் பல டிரைவர்கள் இருப்பார்கள். இந்த ஆபீஸிற்கு கால் டாக்ஸி புக் செய்ய வருகின்ற அழைப்புகளை, அழைப்பவர்களின் விலாசத்திற்கு அருகே உள்ள கிளையிலிருந்து டாக்ஸி அனுப்ப ஏற்பாடு செய்வோம். கொஞ்சம் இருங்கள் உள்ளே அலைபேசி கால் வருகிறது. கஸ்டமர் கால் என்று நினைக்கிறேன். இதோ வந்துவிடுகிறேன். உட்கார்ந்திருங்கள். "
உள்ளே இன்னொரு அறைக்குச் சென்ற கோதண்டம் அங்கே யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், அருண் உட்காரந்திருந்த நாற்காலி அருகில் மேஜை மீது இருந்த லெட்டர் ஹெட் ஃபேன் காற்றில் கொஞ்சம் திறந்தது. அருண் அதில் இருந்த பெயரைப் பார்த்தான். " M A A R S " Mathi Abi Automobile Rental & Service"
உள்ளேயிருந்து வந்த கோதண்டம், அருணிடம் " ஒரு நிமிஷம் சார் - இதோ ஒரு டிரைவரை கஸ்டமர் விலாசத்திற்கு அனுப்பிவிட்டு வருகிறேன்" என்று சொல்லி வெளியே சென்றார். ஐந்து நிமிட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை.
அதே நேரத்தில், அருணின் அலை பேசியில் ஒரு அழைப்பு. அழைத்தவர் மார்த்தாண்டம், எஸ் பி - அருணின் மேல் அதிகாரி. " அருண் இப்போ நீ எங்கே எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் அதை எல்லாவற்றையும் விட்டுவிட்டு நேரே இங்கே வா. மிக அவசரம். "
அருண் உடனடியாக மார்ஸ் கம்பெனி விட்டுக் கிளம்பினான். கோதண்டத்தைப் பார்த்து - தான் பிறகு வருவதாக சொல்லிப் புறப்பட்டான். அதற்காகவே காத்திருந்தது போல, கோதண்டம் " சரி சார்" என்று சொல்லி உள்ளே சென்றார்.
= = = = = =
அருண் மார்த்தாண்டம் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான்.
மா : " வா அருண். ஊரப்பாக்கம் பெண் தற்கொலைக் கேஸைத்தானே விசாரணை செய்துகொண்டு இருக்கிறாய்?"
அ : " ஆமாம் சார் - ஆனால் அது தற்கொலை இல்லை .. "
மா : " அருண் நான் சொல்வதை கவனமாகக் கேள். தற்கொலையோ அல்லது கொலையோ - அந்தப் பெண் இறந்தது இறந்ததுதான். இனிமேல் திரும்ப வரப்போவது இல்லை. இந்தக் கேஸில் அரசியல் பிரமுகர் யாரோ சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று தெரிய வருகிறது. நாம் அரசியல் சம்பந்தப்பட்டவர்களைப் பகைத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் பிழைக்கும் வழி. இந்தக் கேஸை சட்டென்று சுமுகமாக / கமுக்கமாக முடித்து வைப்பதற்கு வழியைப் பார். அதற்காக நீ சேகரித்து வைத்துள்ள ஆதாரங்கள் சாட்சிகள் எல்லாவற்றையும் எப்படி வேண்டுமானாலும் இங்கிருந்து எடுத்துச் செல்ல நான் அனுமதி தருகிறேன். என்னுடைய பதவி உயர்வு, உன்னுடைய பதவி உயர்வு இதெல்லாம் முக்கியம். நான் சொல்லும் விலாசத்திற்கு சென்று அங்கு இருப்பவரைப் பார்த்து அவர் சொல்லுவது போல செய். ஏதேனும் சந்தேகம் வந்தால், எனக்கு ஃபோன் செய். " என்று சொல்லி ஒரு விலாசம் கொடுத்தார்.
அருணை ஏற்றிக்கொண்ட போலீஸ் ஜீப் டிரைவர் அந்த விலாசத்திற்கு வண்டியை ஓட்டினார்.
= = = = = = = = = = = = =
போலீஸ் ஜீப்பில் சென்றுகொண்டிருந்த அருணுக்கு சற்றே குழப்பமாக இருந்தது.
ரீட்டாவின் கர்ப்பத்திற்கு + மரணத்திற்குக் காரணமானவர் அரசியல் பிரமுகர் அல்லது அவர் சம்பந்தப்பட்டவர். ஆனால் அவரை, ரீட்டாவின் மரணத்தோடு சம்பந்தப்படுத்த போதுமான நேரடி சாட்சியங்கள் இல்லை. மார்ஸ் கம்பெனி ஆட்களோ அல்லது ரீட்டாவின் எதிர் பங்களா கார் டிரைவர் நாராயணனோ பயம் காரணமாக சாட்சி சொல்ல முன்வரமாட்டார்கள். அருனுடைய பதவி உயர்வு, மேலதிகாரி பதவி உயர்வு எல்லாம் கேள்விக்குறி ஆகிவிடும். ஏன்? அருணின் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம்.
கிடைத்த விவரங்களை + சாட்சியங்களை வைத்து கோர்ட், கேஸ் என்று ஆரம்பித்தால் CV235 வாங்கிய மூவரின் (ஆனந்த் , அருண் மற்றும் மதிவாணன் ) பெயரும் சேர்க்கப்படவேண்டும். உடனடியாக ஆனந்த் வேலை, அந்தஸ்து எல்லாம் இழந்து வீதிக்கு வந்துவிட நேரும். 'வேறு எந்தப் பெண்ணும் தன் வாழ்க்கையில் இல்லை' என்று பொய் சொன்ன ஆனந்தை ரீத்திகா டிவோர்ஸ் செய்துவிடக்கூடும்.
கொலை செய்யும் நோக்கத்தோடு CV235 வாங்கிய ஆனந்த் குற்றவாளி என்றால், அதே நோக்கத்தோடு அந்த விஷ ஜாடியை வாங்கிய அருணும் குற்றவாளிதானே?
ரீட்டா தற்கொலை செய்துகொண்டு இறந்தாள் என்று சொன்னால் - அருணின் மனசாட்சி வாழ்நாள் முழுவதும் அவனை உறுத்திக்கொண்டே இருக்கும். உண்மைக் குற்றவாளியான அரசியல் பிரமுகர் தப்பித்துவிடுவார். ஆனால் அருணுடைய பதவி உயர்வு, அதிகாரி மார்த்தாண்டம் அவர்களின் பதவி உயர்வு இரண்டுக்கும் பங்கம் வராது.
இந்த கட்டத்தில், வாசகர்களாகிய உங்களிடம் ஒரு கேள்வி.
" அருண் என்ன செய்யலாம் ? என்ன செய்தால் சரியாக இருக்கும்? " உங்கள் ஆலோசனைகளை ஒரு நண்பராகவோ அல்லது நீதிபதியாகவோ அல்லது வழக்கில் ஒரு ஜுரர் என்ற நிலையிலோ கருத்துரையாக எழுதுங்கள்"
(அடுத்த பதிவு வெளியாகும் முன்பு உங்கள் ஆலோசனையை எழுதுங்கள் )
நல்ல ஆலோசனைக்கு (அது கதாசிரியர் எழுதி வைத்துள்ள முடிவுக்கு மாறுபட்டதாக இருந்தாலும்) பரிசு உண்டு.
அடுத்த பதிவு இந்தக் கதையின் இறுதிப் பகுதி)
= = = = = = = = = = = = =
இதுவரை வெளியிடப்பட்ட பகுதிகள் - ஒரே இடத்தில் (google drive ) இங்கு சென்று படியுங்கள் அல்லது download செய்துகொள்ளுங்கள்.
சோதனை முயற்சி. ரீட்டா & மீட்டா கதை இதுவரை PDF link
= = = = = = = = =
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவேண்டுவோம்
நீக்குபாவம் ரீட்டா...
பதிலளிநீக்குமுடிவு
மனசை நெருடுகின்றது
பேராசை பெருநஷ்டம்.
நீக்குபேராசை -
நீக்குயாரிடத்தில் தான் இல்லை?
என்னிடத்தில் இல்லை.
நீக்குஅருணின் மனசாட்சி வாழ்நாள் முழுவதும் அவனை உறுத்திக்கொண்டே இருக்கும்.//
பதிலளிநீக்குஅருண் பதிவு உயர்வை எதிர்பார்க்காமல், தன் மனசாட்சிக்கு மதிப்பு அளித்து உண்மை குற்றவாளியை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
நல்ல கருத்து. ஆனால் நடைமுறை சாத்தியம்?
நீக்குகதையிலும் அரசியல் விளையாடுகிறது - எல்லா இடங்களிலும் விளையாடுவது போல!
பதிலளிநீக்குஅருண் என்ன முடிவு செய்திருப்பார் என்று தெரிந்து கொள்ள அடுத்த செவ்வாய் வரை காத்திருக்கிறேன்.
நன்றி.
நீக்குபணமும் அரசியல் செல்வாக்கும் உள்ள இடத்தில் நீதி வெளியில் வரமுடிவதில்லை.
பதிலளிநீக்குஅருண் உண்மையை எடுத்துக்காட்டுவாரா? முடிவு பொறுத்திருந்து பார்ப்போம்.
அருணுக்கு நீங்கள் எதுவும் ஆலோசனை சொல்ல இல்லையா?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள் இன்று கொஞ்சம் உடம்புக்கு முடியவில்லை. அதனால் தாமதம்.
இன்றைய கதையின் முக்கியமான திருப்பங்களை இப்போதுதான் ரசித்துப் படித்தேன். தாங்கள் அளித்த PDF லிங்க் சென்றும் ஒருமுறை ஆழ்ந்து வாசித்து வந்தேன்.
கதையில் நீங்கள் சொல்வது போல் எப்போதும் வீட்டுக்கு ரீட்டாவை கொண்டு விடும் ராஜு இல்லாமல், மதிவாணன் அனுப்பிய ஏ. சி ரிப்பேர் செய்பவரின் உதவியோடு ரீட்டா தன் கடைசி நாளுக்கு முன்னர் காரில் வந்து இறங்கியுள்ளார். அதை ரீட்டாவின் பெரியம்மா மூலமாக எதிர் வீட்டிலிருக்கும் கார் ஓட்டுனர் நாராயணன் தெரிந்து கொண்டிருக்கிறார்.
மறுநாள் முகம் தெரியாத யாரோ ஒரு நபருடன் வந்துள்ளாள் .அவர்தான் மதிவாணன் என நான் நினைக்கிறேன். அவரின் மற்றொரு பெயர் (அரசியலில்) அபிமன்யுவாக இருக்க கூடும். இந்த மதிவாணன், மார்ஸ் கார் கம்பெனி, அந்த அரசியல்வாதி மகன் அபிமன்யு அனைவரும் ஒரே நேர் கோட்டில்தான் வருகிறார்கள் என்பது என் சந்தேகம். ரீட்டாவும் மறுநாள் வந்திறங்கிய கார் அவள் மிகவும் ஆசைப்பட்டு பெரியம்மாவிடம் தெரிவித்த நீலநிற கார்.
ஆகவே அடுத்த வாரத்திற்குள் தீர விசாரிக்கும் அருண் யாருக்கும் பங்கம் வராமல் தன் சந்தேகங்களுடன் பயணித்து இதில் வேற்றி அடைந்து விடுவார் என நம்புகிறேன்.
ரீட்டாவின் மிரட்டலுக்கு கோபமடைந்து அந்த விஷ வாய்வு ஜாடியை அவர் (அருண்) வாங்கியும் தவறு செய்ய கூடாதென்ற நல்ல மனதுடன் அவளுக்கு அனுப்பாமல் இருந்திருக்கும் அவருக்கு அந்த விஷத்தினால்தான் அவளுக்கு மரணம் உண்டாகியிருக்கிறது என்பதை உணர்ந்த பிறகும், அவள் தற்கொலையினால் மரணமுற்றாள் என கேஸை முடிக்க மனது வராது என நினைக்கிறேன். சரியான கோணத்தில் சென்று விசாரித்து விடுவார். பொறுமையுடன் காத்திருப்பர். அடுத்த வாரத்திற்கான பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
நீக்கு*பொறுமையுடன் காத்திருப்பர்.*
பொறுமையுடன் காத்திருப்போம் என வர வேண்டியது தட்டச்சு பிழையாகி தவறுதலாக வந்துள்ளது. மன்னிக்கவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல கருத்துரை. கதையை ஆழ்ந்து படித்து கருத்துரை எழுதியுள்ளீர்கள். நன்றி.
நீக்கு