7.7.25

"திங்க"க்கிழமை : சீமைச்சக்கை/bread fruit வறுவல் -  கீதா ரெங்கன் ரெஸிப்பி 

                                                 

                                                        இடிச்சக்கை/பலாப்பிஞ்சு வறுவல் 

ரொம்ப நாளாக இதை அனுப்ப நினைத்து நினைத்து, இப்பதான் அனுப்ப முடிந்தது. என் யதார்த்த பிரச்சனைகள் இந்த வறுவலோடு வேண்டாம். நல்ல மகிழ்வோடு சாப்பிடுவதை விட்டு....எதுக்கு இல்லையா?!

இடிச்சக்கையில் பொடித்துவல், பொடித்தூவல், புலாவ், அவியல், கூட்டு, வட இந்திய கிரேவி என்று பல வகைகளில் செய்வதோடு, இந்த வறுவலும் செய்யலாம்.

இடிச்சக்கையை வகுந்து கொண்டு, சிறிய துண்டுகளாக்கிக் கொண்டு தோலை எடுத்துவிட்டு, அதனை இன்னும் கொஞ்சம் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொண்டு - படங்களில் உள்ளது போல் - அதன் பின் அதை வறுவல் சீவலில் சீவிக் கொள்ளவும். 

ரெண்டையும் வறுவல் செய்தேனான்னு நினைக்காதீங்க. பொடித்துவல் செய்துவிட்டு, மீதியைக் கொஞ்சமே கொஞ்சம் வறுவல். அதுவும் வந்தவங்க, நீங்க இதுல வறுவல் செய்வீங்களே என்று கேட்டதால்...


அடுப்பில் எண்ணைச் சட்டியில் எண்ணை விட்டு அது நன்றாகச் சூடாகட்டும். அதற்குள் ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் இவற்றைக் கலந்து தயாராக வைத்துக் கொள்ளவும். (இந்தப் பகுதி எல்லாம் காணொளியில்)
கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் இவற்றைக் கலந்து

நான், வாணலியில் கொஞ்சமாக எண்ணை விட்டுக் கொண்டு இப்படி நீட்டமான வடிகரண்டியை வைத்து அப்பளத் துண்டுகள், சிப்ஸ் எல்லாம் பொரித்தெடுப்பது வழக்கம்.

நீங்கள், உங்கள் வசதிப்படி எண்ணை சற்றுக் கூடுதலாக வைத்துக் கொண்டு பொரிக்கலாம். 



  
எண்ணை  நன்றாகச் சூடானதும், சீவி வைத்திருப்பவற்றை எண்ணையில் போட்டுப் பொரிக்கவும். பொரிந்து வரும் சமயம் கலந்து வைத்திருக்கும் கலவை - உ+ம தூ+பெ தூ - தண்ணீரை ஸ்பூனில் எடுத்துப் பொரிந்து கொண்டிருக்கும் சிப்ஸ் மீது சுற்றிலும் விடவும். சத்தம் அடங்கி, சிப்ஸ் நன்றாகப் பொரிந்து வந்ததும் எண்ணையை வடித்து சிப்ஸை எடுத்துவிட வேண்டியதுதான். (இப்படி சிப்ஸில் இந்தக் கலவையை விடுவதால்தான் நான் எண்ணையைக் குறைவாக வைப்பது வழக்கம்.)

காணொளியில் இதைக் குலுக்கி 'சல சல' என்று சத்தம் வருவதைக் காட்டியிருப்பேன். அதாவது வாயில் போட்டால் மெலிதாக மொறு மொறுவென இருக்கும் என்பதைச் சொல்ல.

இடிச்சக்கை  வறுவல் ரெடி!! 


https://youtube.com/shorts/Y-SeFQZE1m8

விருப்பம் இருந்தால் காணொளியைப் பார்க்கலாம்.

27 கருத்துகள்:

  1. முதன் முதலா இடிசக்கை வறுவல் கேள்விப்படுகிறேன்.

    பலாச்சுளை (காய் பத்த்தில்) சிப்ஸ் சாப்பிட்டிருக்கேன். இந்த வறுவல் சாப்பிட்டதே இல்லை. அருமையான செய்முறை. என்ன ஒண்ணு... இன்னும் எட்டு மாதம் காத்திருந்து, பிஞ்சு சக்கை வாங்கிச் செய்துபார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, இதிலும் செய்யலாம் இடிச்சக்கை போலக் கிடைக்கும் ப்ரெட் ஃப்ரூட் - சீமைச்சக்கை என்று சொல்லப்படுவதும் இங்கு நன்றாகக் கிடைக்கிறது அதிலும் செய்யலாம். சின்னதாக வாங்கினால் நன்றாக இருக்கும் விதை இருந்தால் எடுத்துவிட வேண்டும் நான் வாங்கிய சக்கையில் விதைகள் கொஞ்சம் இருந்தன...அது தானாகவே வந்துவிடும்.

      ரெண்டிலுமே செஞ்சு பாருங்க நல்லாருக்கும். இதுவே பாத்தீங்கனா எனக்குமே டவுட் வந்தது. அவங்க ஹலசின காயி ந்னு சொல்லிதான் கொடுத்தாங்க ஒரு கன்னட வீட்டில் (தனி வீடு) அவங்க வீட்டில் காய்த்தது என்று அவங்க யூஸ் பண்ண மாட்டாங்கன்னு கிடைத்தது, இங்கு பழைய ஏரியாவில் இரண்டு மரங்களும் உண்டு.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  2. ​படத்தில் உள்ளது சீமைச்சக்க என்கிற bread fruit. இதற்கும் சக்கை எனப்படும் பலாவிற்கும் சம்பந்தம் இல்லை. இதனை குருமா செய்தால் அருமையாக இருக்கும். பக்கத்து வீட்டில் இருந்தது. வெட்டிவிட்டார்கள். காய்க்குள் விதை என்பது கிடையாது. பெங்களூரில் இது கிடைத்தது ஆச்சர்யம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கெ அண்ணா எனக்கும் அந்த டவுட் வந்தது ஆனால் பழைய ஏரியாவில் ஏலஹங்கா பகுதியில் தனிவீட்டில் உள்ள ஒரு கன்னடிகா வீட்டில் காய்த்தது கொடுத்தாங்க. அவங்க சொன்னது ஹலசின காயி ரொம்ப பிஞ்சுன்னு. இங்குக் கடைகளில் நிறைய கிடைக்கிறது ப்ரெட் ஃப்ரூட்டும், இடிச்சக்கையும். அவங்க ப்ரெட் ஹன்னு என்று சொல்லாமல் கோமள ஹலசின்னு சொன்னதால்

      எனக்கும் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியும் அண்ணா. இதில் மேல் பகுதி சுர சுரன்னும் இருந்தது. ஆனால் அதே சமயம் முள் நெருக்கமாக இல்லையேன்னும் தோன்றியது. உள்ளே கொஞ்சம் வளர்ந்த விதைகளும் இருந்தன. அது வெட்டும் போது உதிர்ந்தன.

      முதலில் யோசித்தேன் தலைப்பு ப்ரெட் ஃப்ரூட் சீமைச்சக்கை/இடிச்சக்கை வறுவல்னு போடலமான்னு. கடைசில இப்படிப் போட்டுவிட்டேன்.

      இடிச்சக்கையிலும் வறுவல் செய்வதுண்டு. ப்ரெட் ஃப்ரூட்டிலும் வறுவல் செய்வதுண்டு.

      கன்னடிகா வீட்டிற்குச் சென்று மரத்தைப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். நான் போகலை அவங்க நம்ம வீட்டுக்கு வந்து கொடுத்ததால். நானும் அதற்கு அடுத்த நாளுக்கு அடுத்த நாள் நம்ம வீட்டுக்கு வரவங்களுக்குப் பிடிச்சதாச்சேன்னு ஒரு நாள் வைத்துவிட்டுச் செய்தேன்.

      இரண்டிலுமே புலாவ், குருமா, அவியல் போல, பொடித்துவல் எல்லாமே செய்யலாம்.

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
    2. ஜெ கே அண்ணா, அப்ப தலைப்பில் சீமைச்சக்கை/bread fruit/இடிச்சக்கை

      என்று மாற்றிடலாமோ? என்ன சொல்றீங்க?

      ஸ்ரீராம்கிட்ட சொல்கிறேன். வித்தியாசம் தெரிந்த எனக்குமே டவுட்டாகத்தான் இருந்தது.

      கீதா

      நீக்கு
    3. ஜெ கே அண்ணா இன்னொன்று, ப்ரெட் ஃப்ரூட்டில் விதைகளும் உள்ளவை உண்டு. விதைகள் இல்லாதவையும் உண்டு. நான் இங்கு பெங்களூர் வந்த புதிதில் கடையில் வாங்கியதில் விதைகள் இருக்கவில்லை.

      கீதா

      நீக்கு
  3. நான் எப்போதும் நிறைய எண்ணெய் வைக்கச் சொல்லுவேன். மனைவி, நீங்கள் சொல்வதுபோல், குறைவாக எண்ணெய் வைத்து பொரித்து, மீண்டும் அந்த எண்ணெயை உபயோகிக்காமல் இருப்பதையே விரும்புவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை நிறைய எண்ணை வைத்தால் இப்படியானவற்றிற்கு அந்தக் கசண்டு அடியில் தங்கும். அது போல அப்பளம் பொரித்தாலும் அதில் உள்ள அரிசி மாவு அடியில் தங்கும். எனவே கொஞ்சமாக வைத்துச் செய்வதுதான் நல்லது. ஏன்னா எண்ணை வேஸ்ட் ஆகாது. கொஞ்சமாக மீறும். முதலில் கொஞ்சம் அதிகமாகப் போட்டுப் பொரித்துவிட்டு எண்ணை குறையக் குறைய கடைசியில் ஒரு துண்டு போட்டுப் போரித்தாலும் போதும் என்று எண்ணை அவ்வளவாக மீறாது. மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பதாலும்ம் ஹையோ வேஸ்டா போகுதேன்னும் மனசு சங்கடப் படாமல் இருக்கும்.

      எண்ணை விற்கும் விலையில்!!!

      விலையை விடுங்க உடம்புக்காகவும் பொரிப்பது ரொம்ப ரொம்ப ரொம்ப அபூர்வம் ஆகிவிட்டது. ஸ்னாக்ஸ் பழக்கமும் இல்லை.

      கீதா

      நீக்கு
    2. இந்த மாதிரி குறைந்த எண்ணெய் வைத்தால், ரொம்ப நேரம் அடுப்படியில் நின்றுகொண்டே பொரித்துக்கொண்டிருக்கணும். நான் மனைவியிடம் சொல்வது, நிறைய எண்ணெய் வைத்தால் கொஞ்சம் சீக்கிரம் வேலை ஆயிடும், அப்புறம் மறுநாள் அதே எண்ணெயில் அப்பளாம் பொரித்துவிடலாம் என்பேன். ஆனால் அவங்க அவங்க ஏரியாவில், அவங்க செய்யும் வேலையில் அடுத்தவங்க ஆலோசனை சரிப்படாது. ஏற்றுக்கொள்வதும் கடினம்.

      நீக்கு
    3. காணொளி பார்த்தேன். நல்லாப் பண்ணியிருக்கீங்க.

      நீக்கு
    4. நெல்லை உங்க கமென்டுக்கு - சிரித்துவிட்டேன். ஆனா நிறையப்பேர் இருந்தால் நீங்க சொல்றது சரி. இரண்டு மூன்று பேர்தான் எனும் போது எவ்வளவு வேணும்? கொஞ்சம் தானே! அதனால்தான். கொஞ்சமா பொரிக்கறப்ப கொஞ்சம் போதுமேன்னுதான்

      கீதா

      நீக்கு
    5. நெல்லை உங்க கமென்டுக்கு - சிரித்துவிட்டேன். ஆனா நிறையப்பேர் இருந்தால் நீங்க சொல்றது சரி. இரண்டு மூன்று பேர்தான் எனும் போது எவ்வளவு வேணும்? கொஞ்சம் தானே! அதனால்தான். கொஞ்சமா பொரிக்கறப்ப கொஞ்சம் போதுமேன்னுதான்

      கீதா

      நீக்கு
    6. காணொளி பார்த்தேன். நல்லாப் பண்ணியிருக்கீங்க.//

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  4. புதிய தகவல்..
    புதிய செய்முறை.. அருமை

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்குதான் வித்தியாசமாக, புதியதாகச் செய்வது பிடிக்குமே. அப்படியான முயற்சிதான். மிக்க நன்றி துரை அண்ணா.

      கீதா

      நீக்கு
  5. //நான் எப்போதும் நிறைய எண்ணெய் வைக்கச் சொல்லுவேன். மனைவி, நீங்கள் சொல்வதுபோல், குறைவாக எண்ணெய் வைத்து பொரித்து, மீண்டும் அந்த எண்ணெயை உபயோகிக்காமல் இருப்பதையே விரும்புவார்.// what Nellai, husband said is true. Me also konjam oil than.. appadi oNNum neram edukkaathu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுப்படி வேலைல அவங்கதானே எக்ஸ்பர்ட் கீதா சாம்பசிவம் மேடம். ஆனால் அதை சட் என்று ஒத்துக்கொள்வதுதான் எங்களுக்குக் கஷ்டம். என்ன இருந்தாலும் நாங்கள்.... ஹாஹாஹா

      நீக்கு
    2. வாங்க கீதாக்கா....அதே தான் அதேதான்.

      நெல்லை அதானே ஒத்துக்கிட்டா அப்புறம் என்னாறது!!!!!!!!!!!!!!!!!!!ஹூக்கும்.

      கீதா

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரி

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
    இன்றைய திங்களில் தங்களது செய்முறையான இடிச்கை வறுவல் நன்றாக இருக்கிறது. நாங்கள் எப்போதும் பலாப்பழம் வாங்குவதே அரிது. சிறுவயதிலாவது எப்பொழுதாவது சாப்பிட்டுள்ளேன். திருமணத்திற்கு பிறகு எங்கள் வீட்டில் இதன் உபயோகம் இருந்ததில்லை. அரிதிலும் அரிதாக எனக்கு மட்டும் வாங்கித் தருவார்கள். ஒவ்வொருவரின் டேஸ்டும் ஒவ்வொரு விதந்தானே..!

    காணொளியும் கண்டேன். நீங்கள் செய்த முறைகளும், பனங்களும் சூப்பர். எண்ணெய்யில் மஞ்சள் உப்புத்ததூள் கலந்த தண்ணீரை விடும் போது எண்ணெய் தெறிக்காதா? ஒரு வேளை அந்த வாயகன்ற கரண்டியில்னால்தான் வெளியில் வாரி தெறிக்காமல் இருக்குமோ? நன்றாக செய்துள்ளீர்கள்.தங்களது புது விதமான முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா தலைப்பில் கரெக்ஷனையும் பார்த்துடுங்க.....

      ஆமாம் அக்கா. ஒவ்வொருவரது டேஸ்டும் ஒவ்வொரு விதம்தான். ஓ வீட்டில் பலாப்பழம் பிடிக்கறதில்லையோ?

      காணொளி பார்த்ததற்கும் நன்றி கமலாக்கா

      //எண்ணெய்யில் மஞ்சள் உப்புத்ததூள் கலந்த தண்ணீரை விடும் போது எண்ணெய் தெறிக்காதா? அப்படித் தெரிக்காது கொஞ்சம் சட சட சத்தம் வரும் ஆனால் அப்படித் தெரிக்காது. நம்ம வீட்டில் பாட்டிஸ், விசேஷங்களுக்குச் சமைக்க வந்தவங்க எல்லாம் வாழை சிப்ஸ், பலாக்கா சிப்ஸ், சேனை சிப்ஸ் எல்லாம் இப்படிப் பொரித்து செய்யறதைப் பார்த்துப் பழக்கம் அதனால அப்படியே பின்பற்றுகிறேன். காரத்தூள் மட்டும் வெளியில் எடுத்த பிறகு தூவிக் கலப்பாங்க. நான் காரத்தூள் போடுவதில்லை.

      //ஒரு வேளை அந்த வாயகன்ற கரண்டியில்னால்தான் வெளியில் வாரி தெறிக்காமல் இருக்குமோ?//

      இல்லை அக்கா நார்மல் வாணலியில் செய்தாலும் கொஞ்சம் சட சட ன்னு வரும் கொஞ்சம் அடுப்பின் மீது படும் ஆனால் இப்படிக் கரண்டியில் வைத்தாலும் சடசடன்னு சத்தம் வரும் ஆனால் தெரிக்காது வடிப்பதும் சௌகரியமாக இருக்கும் .

      வந்தவர்கள் எண்ணைப் பண்டங்கள் என்றால் (அவங்க எல்லாம் எண்ணையில் பொரிந்ததும் அப்படியே எண்ணையோடு சொட்டச் சொட்டஎடுத்து வடிதட்டில் போட்டு அடியில் வைக்கும் கிண்ணமோ தட்டிலோ எண்ணை வடிந்திருக்கும். அதனால் டிஷ்ஷு வைச்சுப் போடச் சொன்னதால் போட்டென்.

      ஆனால் நான் எண்ணையை நன்றாக வடித்துவிட்டுத்தான் தட்டில் போடுவது வழக்கம். கொஞ்சம் நேரம் எடுக்கலாம் ஆனால் பொறுமையாகச் செய்யும் போது வடிதட்டு பயன்படுத்தாமல் எக்ஸ்ட்ரா பாத்திரம் ஆகாமல்.....ஹிஹிஹிஹி.....என் பாட்டி எண்ணையை நன்றாக வடித்துவிட்டுத்தான் எடுப்பார் அதனால் தட்டில்போட்டாலும் கொஞ்சம் கூட எண்ணை ஆகாது தட்டில். அவரிடம் கற்றுக் கொண்டதால் பெரும்பாலும் நன்றாக வடித்து எடுத்துவிடுவதால் தட்டில் எண்ணை வடியாது ஆகாது என்பதால் டிஷ்ஷு பேப்பர் கூடப் பயன்படுத்துவதில்லை.

      புதுசு புதுசா செய்து பார்க்க ரொம்பப் பிடிக்கும். கற்றுக் கொள்ளவும் ...அது ஒரு உத்வேகத்தை, ஆர்வத்தை, நம் மனசை நன்றாக வைத்துக் கொள்ள உதவுமே இல்லையாக்கா?

      நன்றி கமலாக்கா.

      கீதா

      நீக்கு
    2. /என் பாட்டி எண்ணையை நன்றாக வடித்துவிட்டுத்தான் எடுப்பார் அதனால் தட்டில்போட்டாலும் கொஞ்சம் கூட எண்ணை ஆகாது தட்டில். அவரிடம் கற்றுக் கொண்டதால் பெரும்பாலும் நன்றாக வடித்து எடுத்துவிடுவதால் தட்டில் எண்ணை வடியாது ஆகாது என்பதால் டிஷ்ஷு பேப்பர் கூடப் பயன்படுத்துவதில்லை./

      ஆம் சகோதரி. எங்கள் பிறந்த வீட்டிலும், பட்சணங்கள் (வருடந்தோறும் கோகுலாஷடமி பட்சணங்கள் ஒரு மாதத்திற்கு மேலேயே வரும். அவ்வளவு விதவிதமாகவும், நிறையவும் பண்ணுவார்கள்.) செய்யும் போது எண்ணெய் பெரிய பெரிய வடிகட்டிதான் பயன்படுத்துவார்கள். . என் திருமணத்திற்கு சீர்வரிசை முழுவதும் (100, 100என) பட்சணங்கள். எல்லாமே அம்மாவும், பாட்டியும் வந திருத்த உறவுகளில் சிலரும் சேர்ந்துதான் பண்ணினார்கள். சமையல் ஆட்கள் எவரையும் வைத்துக் கொள்ளவில்லை. பட்சணங்கள் பண்ணுவமென்றால் எங்கள் அம்மாவுக்கு அவ்வளவு விருப்பம். மிக சுத்தமாகவும் ஒரு சொட்டு எண்ணெய் கீழே விழாமலும் செய்வார்கள். அவர்களிடமிருந்துதாற் நானும் இந்த விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஆனால், சோதனை என்னவென்றல் புகுந்த வீட்டில் பட்சணங்கள் சாப்பிடுவதும் அவ்வளவாக பிடிக்காது. எனக்கு அப்போது இது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருந்தது. அதிலிருந்தும் ஒவ்வொருவருக்கும் ஒரு டேஸ்ட் உள்ளதென அந்த 19 வயதில் புரிந்து கொண்டேன். :))

      இப்போது நானும் எண்ணெய் பட்சணங்கள் செய்யும் போது டிஷ்யூ பேப்பர் உபயோகிப்பதில்லை. வடிகட்டி பாத்திரரந்தான். எண்ணெய்யை நன்றாக எண்ணெய் சட்டியிலேயே வடித்து எடுப்பதால், , அந்தப் பாத்திரத்திலும் அடியில் எண்ணெய் சேராது. இந்த விஷயத்தில் உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒத்துப் போகிறது. விரிவான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. ஹைஃபைவ் கமலாக்கா....ஆமாம், நீங்க எழுதியிருக்கும் அனுபவமேதான், என் பாட்டி பாட்டியின் தங்கை இருவருமே என் மாமா பெண் கல்யாத்திற்கு வீட்டிலேயே அத்தனையும் செய்தாங்க. பக்ஷணம் முதல் சாப்பாடு வரை.....வீட்டின் முன் பந்தல் என்று...

      அதே போன்று உங்கள் வீட்டிலும் என்பது வாசிக்க சந்தோஷமாக இருக்கு கமலாக்கா.

      எங்கள் தளத்தில் உங்கள் கருத்துக்கான துளசியின் பதில் வந்துவிட்டது எங்கள் தளத்தில் போட இதோ போகிறேன்.

      கீதா

      நீக்கு
  7. சீமைசக்கை வறுவல் நன்றாக வந்துள்ளது.

    நாங்கள் இதை ஈரப்பலா என்போம். முன்னர் எனது பகிரிவில் பகிர்ந்திருக்கிறேன் காரக்கறியாகவும், சிப்ஸ் ஆகவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி. ஈரப்பலா! ஆ இது தெரிந்தும் இது டக்கென்று மனதில் வரவில்லை பாருங்க. அங்கு சொல்லப்படும் பெயர்.

      மாதேவி உங்கள் பகிர்வையும் பார்த்துவிட்டேன். செய்முறைக்கு முன் வெள்ளவத்தையில் வாங்கியது குறித்து ரொம்ப சுவாரசியமாக அழகாக எழுதியிருக்கீங்க.

      செய்முறையும் பார்த்துக் கொண்டுவிட்டேன், மாதேவி. செய்து பார்த்துவிடுகிறேன் காரக்கறியை. சிப்ஸ் நீங்கள் எடுத்த பிறகு உப்பு காரம் சேர்த்திருக்கீங்க நான் பொரியும் போதே சேர்த்துவிடுகிறேன். இங்கு நன்றாகக் கிடைக்கிறது. கோடைகாலத்திலும் கிடைக்கும்... ஆகஸ்ட் வரை கிடைக்கும் இச்சக்கை. இடிச்சக்கை இப்ப கண்ணில் படவில்லை.

      நன்றி மாதேவி.

      கீதா

      நீக்கு
    2. மாதேவி, மத்தவங்க பார்த்துக்கொள்வதற்கும் இங்கே அந்த லிங்கை பகிர்கிறேன்.

      http://sinnutasty.blogspot.com/2009/12/blog-post_1711.html

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!