15.7.25

சிறுகதை : அவன் அருளாலே - ஸ்ரீராம்

 முன்கதைச் சுருக்கம்!

சென்ற வருடம் தேன்சிட்டு தீபாவளி மலர் விவரம் பார்த்தபோது அதில் ராஜேஷ்குமார், ஆர்னிகா நாசர், தஞ்சை ஹரணி, ரிஷபன், காலச்சக்கரம் நரசிம்மா கதைகள் இடம்பெற்றிருப்பது தெரியவர, என் கதையும் அந்த வரிசையில் இடம்பெற்றால் எப்படி இருக்கும் என்று ஆசை வந்ததது.   நமக்குதான் புகழ் இல்லை, புகழ் பெற்றவர்கள் நிற்கும் வரிசையில் நாமும் நிற்கலாமே என்கிற பேராசை!  அனுப்பி இருக்க வேண்டிய கடைசி தேதி முதல் நாளுடன் முடிவடைந்திருந்தது.  நம் நண்பர்தானே என்று 'தளிர்' சுரேஷை கேட்டேன்.  'சரி அனுப்புங்க' என்றார் அவர்.  அனுப்பினேன்.  ஏற்றுக்கொண்டு வெளியிட்டார்.  இதழ் வெளிவந்ததும் அனுப்பி வைத்தார்.  பிரித்துப் பார்த்த எனக்கு அதிர்ச்சி.  

என் பெயரில் வெளிவந்திருந்த கதைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.  நான் அனுப்பிய தலைப்பு இல்லை.  வசனங்கள் மாறி இருந்தன.  சில சம்பவங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.  எனக்குத் தெரியாத, பழக்கமில்லாத பாசுரம் சேர்க்கப்பட்டிருந்தது.  முடிவு முற்றிலும் மாறி இருந்தது.  ஒருநாள் முழுவதும் என் கோபத்தைத் தள்ளிப்போட்டும், ஆறாதிருக்கவே, தளிருடன் மெயிலில் சண்டையிட்டேன்.  மாற்றியவர் ஜூனியர் தேஜ் எனும் பொறுப்பாசிரியர் என்று தெரிந்தது.  அவர் கதைகள் எழுதுபவர்; சில புத்தகங்கள் வெளியிட்டிருப்பவர்.  ஒருவகையில் என் உறவினரும் கூட.  

இருக்கட்டும், என்னிடம் சொல்லாமல் கூட எப்படி என் படைப்பை மாற்றலாம்?  ஓரிரு வரிகள் என்றால் கூட பரவாயில்லை..   தலைப்பை மாற்றி, முன்பின் மாற்றி, எக்ஸ்டரா வசனங்கள் சேர்த்து, மற்றும் முடிவை மாற்றி..

சில சண்டைகளுக்குப் பின் தளிர் என் வாதத்தை ஏற்றுக்கொண்டு நான் அனுப்பிய கதையையே அப்படியே போட்டு வேறொரு மின்னிதழ் அனுப்பி வைத்தார்.  அநேகமாக மாற்றப்பட்ட அந்த மின்னிதழ் எனக்கு மட்டும்தான் அனுப்பப்பட்டிருக்கும் என்றும் நினைக்கிறேன்.  எப்படியோ ஒரு கசப்பான அனுபவம்.  நான் அனுப்பி இருந்த ஒரிஜினல் கதையை இன்று செவ்வாய்க்கு கதையாக வெளியிடுகிறேன்.


அவன் அருளாலே  

- ஸ்ரீராம் -



"டடே...   ரங்கா...எப்படி இருக்கே... பார்த்து நாளாச்சு.."  V R மாலில் சுற்றிக் கொண்டிருந்தபோது எதிரே ரங்கனைப் பார்த்ததும் சந்தோஷமானான் குமார்.

ரங்கனும் சட்டென புருவம் உயர்த்தி, அடையாளம் கண்டு விழிகளையும் உதடுகளையும் மலர விட்டான். 

"ஹேய் குமார்...   எத்தனை நாளாச்சு பார்த்து.."

"நாளா?  வருஷங்கள் ஆச்சு...  ஸ்ரீதர் பையன் கல்யாணத்துல பார்த்தது.. அப்புறம் நீ திருநெல்வேலி பக்கம் போயிட்டே... "

"அட..  ஆமாம்..  ஸ்ரீதர் பையன் கல்யாணம் திருப்பதியில நடந்தது ...   நான் போன மாசம் சென்னை வந்துட்டேன். அப்புறம் நாம ஃபோன் கூட பண்ணிக்கறதில்ல ஆமாம், அப்புறம் திருப்பதி மறுபடி போனியா நீ?"

"இலலேடா...   வா...  அப்படி உட்கார்ந்து பேசுவோம்."

Food Court பக்கமாக ஒதுங்கி, காலியாக இருந்த இருக்கைகளில்  உட்கார்ந்தார்கள். 

"இரு வர்றேன்"

வடை போண்டா போல ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்க சங்கீதா பக்கமாக சென்றான் ரங்கன்.

குமாருக்கு ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது நினைவில் Fast Forward ல்  ஓடியது.

ஸ்ரீதர் மகனுக்கு கல்யாணம் என்று  பத்திரிகை கொடுத்திருந்தான்.  ஏதோ வேண்டுதலால், கல்யாணம் திருப்பதியில்.  ஆனால் கோவிலில் அல்ல, வெளியில் ஒரு மண்டபத்தில். 

"நல்லவேளை, பெருமாளை சேவிச்சு நாளாச்சேன்னு மனசுல தோணித்து...  கூப்டுட்டான்.." என்றான் ரங்கன்.  குரலில் உற்சாகம் பொங்கியது.

"அவன் கூப்பிடலைடா...   ஸ்ரீதர் கூப்பிட்டிருக்கான்.."  சிரித்தான் குமார்.

"போடா...  இப்படி வாய்ப்பு வர்றதே பெருமாளால்தான்...  கோவிந்தா..  வர்றேன்ப்பா..."  மேல் நோக்கி கும்பிடு போட்டான் ரங்கன். 

ரங்கன், ஸ்ரீதர் பையன் கல்யாணத்தைப் பற்றி பேசியதைவிட, அதற்கான ஏற்பாடுகளை விட கோவில் ஏற்பாடுகளைத்தான் பெரிதாக செய்து கொண்டிருந்தான்.

"ஆன்லைன்ல தரிசன டிக்கெட் புக் பண்ணிடுங்க...   கல்யாணத்துக்கு போய்வர மூன்று வண்டி அரேன்ஜ் பண்ணி இருக்கோம்" என்றாள் சரோஜா, ஸ்ரீதர் மனைவி.

குமார் ரங்கனிடம் வந்தான். "டேய் ரங்கா..  ஆன்லைன்ல புக் பண்ணணுமாமே...  எனக்கு பழக்கமில்லை...   எங்களுக்கும் சேர்த்து நீயே பண்ணிக் கொடுத்துடேன்.."

"இங்கேயே இரு..  நான் கேட்கற விவரங்கள்லாம் கொடு..  யார் யார் வர்றீங்க?  எத்தனை பேர் வர்றீங்க?  ஒரு ஆளுக்கு முன்னூறு ரூபாய் ஆகும்"

"மாமியார் இதைச் சொன்ன நாளிலிருந்தே எக்ஸைட் ஆயிட்டா...   ஏற்கெனவே சொல்லிக்கிட்டு இருந்தா...  முடியலைன்னாலும் பெருமாளை கும்பிட்டே  ஆகணும்னு அவங்களும் வர்றாங்க...   ஸோ அஞ்சு பேர்"

"குட்...   பெருமாள் உங்க எல்லோரையுமே கூப்பிட்டிருக்காரா?" என்று கேட்டபடியே அவர்களுக்கு ஆன்லைனில் நேரம் பதிவு செய்தான் ரங்கன்.

"ஸ்ரீதர் என்னைக் கூப்பிட்டான்.  நானும் என் பொண்டாட்டியும் கிளமபறதா இருந்தோம்.  மாமியாரும் வர்றேன்னா..  பொண்ணு, பையனையும் சேர்த்து எல்லோரையுமே நான்தாண்டா அழைச்சுக்கிட்டு வர்றேன்"  சிரித்தான் குமார்.

"அப்படி சொல்லாதேடா...   அவன் அருளாலே அவன் தாள் வணங்கி..."

"டேய் அது சிவனுக்கு சொல்றதுடா...  நீ பார்க்கப் போறது பெருமாள..  அதுவும் ஸ்ரீதர் பையன் கல்யாணம் முடிஞ்சு.."

"நான் மட்டுமா, நீங்களும்தாண்டா...   மேலும் அர்த்தம்தாண்டா முக்கியம்..  அவன் அழைக்காமல் போக முடியுமா சொல்லு.."

"சரிப்பா...  அப்படியே இருந்துட்டு போகட்டும்..  நான் ஸ்ரீதர் பையன் கல்யாணத்துக்கு வர்றேன்.  அப்படியே பெருமாளையும் பார்த்து ஒரு அட்டெண்டன்ஸ் போடறேன்...  போடறோம்...   நாங்க அஞ்சு பேர் இல்லையா?"  மறுபடி சிரித்தான் குமார்.

திருப்பதியில் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.  திருமணத்துக்கு முதல் நாளே ரங்கனும் அவன் மனைவியும் சென்று பெருமாளை ஒரு முறை பார்த்து விட்டு வந்து விட்டதை பூரிப்புடன் சொன்னார்கள்.  இலவச தரிசனம் காலியாக இருந்ததாம்.  

திருமணம் முடிந்து மண்டபம் காலி பண்ணிக் கிளம்பினார்கள்.  தரிசனத்தை முடித்துக்கொண்டு அப்படியே சென்னை திரும்புவதாக ஏற்பாடு. ஸ்ரீதர் எல்லோருக்குமாய்ச் சேர்த்து மூன்று ட்ராவலர் வண்டிகள் ஏற்பாடு செய்திருந்தான்.  மூன்று டிரைவர்களும் இவர்களை எல்லாம் இறக்கிவிட்டு,  தாங்கள் கோவிலிலிருந்து தரிசனம் முடிவந்து வெளியே வரும் இடத்தில் நிற்பதாய்ச் சொல்லி சென்று விட்டார்கள்.  ஆதார் கார்ட் நகல் தவிர, அலைபேசி உட்பட, எல்லாவற்றையும் வண்டியில் வைத்து அனுப்பி விட்டார்கள். 

ஸ்ரீதர் எல்லோரிடமும் ஏதோ பேப்பரை வாங்கிக் கொண்டிருந்தான்.  டிக்கெட் சைஸை விட அது பெரிதாக இருந்தது.  அருகில் சென்று குமாரும் தங்கள் ஆதார் கார்ட் நகல்களை அவனிடம் கொடுக்க, ஸ்ரீதர் கேட்டான், " ஆன்லைன் டிக்கெட் பிரிண்ட்டவுட்  எங்கே?"

"அதை எடுக்கலையே....    யாரும் சொல்லலையே...."

"ஏன், உனக்குத் தெரியாதா குமார்?" - ரங்கன் கேட்டான். 

"தெரியாதுடா"

"நீ எதுவும் எடுக்கலையா?" மகனிடம் கேட்டான் குமார்.

"நீ ஒன்றும் சொல்லலையேப்பா..."

"செல்லில் காபி இருக்கேடா... டிரெயின்ல எல்லாம் அப்படிதானே காட்டுவோம்?"

"செல் எங்கே இருக்கு?  வண்டில போயிடுச்சே...  அது கைல இருந்தாலுமே வெளில வாங்கி வச்சுடுவாங்களேடா.." என்றான் ரங்கன்.

நேரமாகிக் கொண்டிருந்தது. 

"எல்லோருக்கும் நேரமாகுது குமார்...   ஒரு செட்டை உள்ளே அனுப்புகிறேன்" - ஸ்ரீதர்.

எல்லோரும் குமாரைப் பார்த்துக் கொண்டிருக்க, மனைவியும்,  காது சரியாகக் கேட்காத மாமியாரும், உள்ளே செல்லும் நபர்களுடன் சேர்ந்து உள்ளே செல்ல  தயாராக அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்தார்கள்.

ஸ்ரீதர் மென்மையாக அவர்களை விலக்கி குமார் அருகே அனுப்பி விட்டு மற்றவர்களை உள்ளே அனுப்பினான்.  அவனும் உள்ளே செல்லத் தயாராகும் முன்பு குமாரிடம் வந்தான்.  "இன்னும் 45 நிமிஷத்துல தரிசன டைம்...  இங்கே எங்காவது நெட் சென்டர் இருந்தால் சட்டென ஒரு ஜெராக்ஸ் எடுக்க முடியுதா பார்...   எடுத்துட்டா உள்ளே வா...  அங்கே இருப்போம்"

குமாரின் மகன் ஒருபுறமும் இவன் ஒருபுறமும் ஓட, மனைவி அம்மாவுக்கு நிலைமையை விளக்கிக் கொண்டிருந்தாள்.

நேரம் சென்று கொண்டிருக்க, மகன் மெதுவாக நடந்து வந்தான்.  "என்னடா... ஜெராக்ஸ் எடுத்துட்டியா?"

"எப்படிப்பா...  எடுக்க முடியல..  புது ப்ராப்ளம்.... நாம இப்போ இருக்கறது வேற ஸ்டேட்...  மெயிலில் லாகின் பண்ணினால்,  ஆந்திராவில் 'எங்கோ உன் மெயிலை யாரோ லாகின் செய்கிறார்கள்.  நீதானா வேற யாராவதா?  நீதான்னா மொபைல்ல ஒரு OTP வந்திருக்கும்...  அதை இங்கே கொடு'  அப்படீன்னுது"

"கொடுக்க வேண்டியதுதானே?" - கேட்கும்போதே குமாருக்கும் நிலைமை விளங்கியது.    மொபைல் பையில் இருக்கிறது.  பை வண்டியில் இருக்கிறது.  வண்டி எங்கே இருக்கிறது என்றே தெரியாது.  அது எந்தப் பக்கம் இருக்கிறது என்று கேட்டால்,  'அந்தப் பக்கமாக சுற்றிச் செல்ல வேண்டும்..  இரண்டு மூன்று இடங்கள் இருக்கின்றன' என்றார்கள்.  மாமியாரின் ஏமாற்றம் கண்களில் கண்ணீராக வெளிவந்தது.  மனைவி ஆற்றாமையுடன் மற்றவர்கள் உள்ளே சென்ற பாதையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  மகள் எங்கோ சென்று விட்டு வந்தாள்.  

"'ஃப்ரீ தர்ஷன்' கியூ பார்த்தேன்..  அது வழியாகவாவது போகலாமான்னு...   ஊ..  ஹூம்..  சான்ஸே இல்லை"

அங்கு வாசலில் நின்றவர்களிடம் குமார் கெஞ்சிப் பார்த்தான்.  மறுத்து விட்டார்கள்.  இரண்டு மூன்று செல்வாக்கான மனிதர்களைத் தெரியும்தானே.  ஆனால் அவர்களின் தொடர்பு எண் மொபைலில் அல்லவா இருக்கிறது?

செயலற்று நின்றிருந்தான் குமார்.  இதற்குள் அரை மணி நேரம் ஓடி இருந்தது.

"அப்படியே பெருமாளையும் பார்த்து ஒரு அட்டண்டன்ஸ் போட்டுட்டு வந்துடுவேன்.."  தன் குரல் தனக்குள்ளேயே கேட்பது போல இருந்தது.  'எங்கே...   உள்ளே சென்றால்தானே அட்டெண்டன்ஸ் போட?'   நிமிர்ந்து கோபுரத்தைப் பார்த்தான்.  

'இப்படி கூட நடக்குமா?'

வாசல் வரை அனுமதித்ததற்கு மனதுக்குள் நன்றி சொன்னான்.  சுற்றி வந்த வண்டிகளில் வந்த ஜீப் ஒன்றை நிறுத்தினான்.  அதில் ஏறி தாங்கள் வந்த வண்டியை தேடத் தொடங்கினான்.  மாமியார் மட்டும் பெருமாளிடம் முறையிட்டு புலம்பிக் கொண்டே வந்தாள்.  திருவேங்கடத்தானை தரிசிக்க முடியாத ஏமாற்றம் அவள் புலம்பலில் இருந்தது.  தங்கள் வண்டியை எப்படி தேடுவது என்கிற கவலை குமாருக்கு.  

ஏதோ துக்கம் காரணமாக கோவிலுக்குள் வரக்கூடாது என்ற காரணத்தால் உள்ளே வராமல் போன இரண்டு வயதான தம்பதியர்கள் வழியில் கண்ணில் பட்டார்கள்.  இவர்கள் வண்டியில் வந்தவர்கள்தான் அது என்று மகனும் மகளும் அடையாளம் கண்டார்கள்.  அவர்கள் உதவியுடன் வண்டியை அடைந்து, ஏறி அமர்ந்து மற்றவர்களுக்காக காத்திருக்கத் தொடங்கினார்கள்.

மனதுக்குள் வெறுமையாக உணர்ந்தான்.

அடுத்த 10 நிமிடங்களில் தரிசனம் முடிந்து திரும்பி வந்த குழுவில் இருந்த ஸ்ரீதரிடம் நிலைமையை சொல்லிக் கொண்டிருந்தபோது ரங்கனும் கேட்டுக் கொண்டிருந்தான்.  கேலியாகச் சிரிப்பான் என்று எதிர்பார்த்தான் குமார்.  ரங்கன் முகத்தில் வருத்தம்தான் தெரிந்தது.

ங்கன் இரண்டு செட் சாம்பார் வடையுடன் வருவதைப் பார்த்தான் குமார்..  ரங்கன் இவன் அருகில்  உட்கார்ந்தான்.  இவனிடம் ஒரு கப்பை வைத்தான்.

"நீ அப்புறம் திருப்பதி போனியா?' குமார் ரங்கனிடம் கேட்டான்.

"மாசா மாசம் போயிட்டு வர்ரேண்டா...  நாம பார்த்துண்டப்புறம் அடுத்த வருஷமே கொரோனா வந்துடுச்சு இல்லையா?  அந்த காலகட்டத்துல  அங்கே போகவே முடியலைன்னு ரொம்ப வருத்தமா இருந்தது.  அந்த பயமும் தடையும் நீங்கிய பிறகு மாசா மாசம் போய் தரிசனம் பண்ணிட்டு வந்துடறோம்.   நீ?"

"இன்னும் இல்லடா..."

"இன்னும் போகலையா?"

"ஊ...ஹூம்" - உதட்டைப் பிதுக்கினான் குமார்.

"ஏண்டா...  இப்போ போகலாமே...."

குமார் நிமிர்ந்து பார்க்காமல் பதில் சொன்னான்.

"மாமியாரால எப்படியும் வரமுடியாது.  90 வயசாயிடுச்சு.  தள்ளாமை.  சிரமம்.  நான் அவன் கூப்பிடட்டும்னு காத்துகிட்டு இருக்கேன்.  நான் வரணும்னு நேரம் வந்தா  எப்படியாவது என்னை அங்கே வரவழைச்சுடுவான் இல்லையா?"

45 கருத்துகள்:

  1. உங்களுக்கு இப்படி நிஜமாகவே இப்படி ஒரு அனுபவம் உண்டு இல்லையா? அதை எ.பி.யிலும் பகிர்ந்து கொண்டிருந்தீர்கள். அதையே கதையாக்கி விட்டீர்கள். ஒரு நல்ல எழுத்தாளர் கதையைத் தேடி வெளியே போக மாட்டார் என்பார் சுஜாதா. நீங்கள் நல்ல எழுத்தாளர் என்று நிரூபித்து விட்டீர்கள்! கீப் இட் அப்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா... நன்றி. நினைவு வைத்திருக்கிறீர்கள்.

      நீக்கு
    2. பானுக்கா அவர் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார். நாம் நம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து பார்த்தாலும் நிறைய கிடைக்கும் என்று..

      கீதா

      நீக்கு
    3. ஆனால் அதை கதையாக்கும் திறமை வேண்டும்!!!!!!!

      கீதா

      நீக்கு
  2. ஶ்ரீராம் முன்பு உங்கள் அனுபவமாக இதை எழுதி நான் படித்த நினைவு. கதையில் மகள் மாத்திரம் வந்திருக்கிறாள்.

    கதை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஏதாவது நடந்து அந்த ஐந்து பேரும் தரிசன வரிசையில் சேர்ந்துவிடமாட்டார்களா என்று எதிர்பார்க்கும் வண்ணம் கதை சென்றது.

    இந்த மாதிரி கதையை, வலிந்து திருப்பங்களோடு, இல்லை தரிசனம் கிடைத்ததுபோல மாற்றவேண்டிய அவசியம் இல்லை. இந்த முடிவு, நடையே மிக நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை,

      // ஏதாவது நடந்து அந்த ஐந்து பேரும் தரிசன வரிசையில் சேர்ந்துவிடமாட்டார்களா என்று எதிர்பார்க்கும் வண்ணம் கதை சென்றது. //

      அந்த உணர்வை கதையில் கொஞ்சமாவது கொண்டு வந்திருக்கிறேன் என்பதில் திருப்தி.

      // இந்த மாதிரி கதையை, வலிந்து திருப்பங்களோடு, இல்லை தரிசனம் கிடைத்ததுபோல மாற்றவேண்டிய அவசியம் இல்லை.  //

      அதேதான் நடந்தது.  நிஜங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனசு.  கற்பனையிலேயே சுகம் காணும் வழக்கம்!

      நீக்கு
    2. யெஸ்ஸு....நெல்லை.

      கீதா

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. ஶ்ரீராம், உங்கள் திருப்பதி அனுபவம் நல்ல நினைவு இருக்கு. வியாழனில் சொல்லியிருந்தீங்க.

    அதையே அழகா கதையாக்கி எழுதியது நல்லாருக்கு ஶ்ரீராம். சம்பவத்தை எப்படிக் கதையாக்கலாம் என்பதற்கு நல்ல உதாரணமாக. இதை உங்களிடம் அப்பவே சொன்ன நினைவு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... நன்றி. ஆமாம். அனுபவம் கதையானது.

      நீக்கு
    2. ஸ்ரீராம் அனுபவம் கதையாவது எளிதல்ல!!! அதுக்குத்தான் உங்களுக்கு ஷொட்டு.

      சுஜாதாவுமே தன் அனுபவங்கள் பலதையும் கதையில் கொண்டுவந்திருப்பாரே!!

      கீதா

      நீக்கு
    3. நன்றி கீதா.  இன்னும் இன்னும் மெருகேறணும்.

      நீக்கு
  5. திருப்பதி என்றதும் எனக்குப் பல நினைவுகள் வருகின்றன. சிறு வயதில் குலசேகரன் படிக்கு முன்பு நின்று பெருமாளை தரிசித்ததும், அங்கேயே தீர்த்தம் சடாரி வாங்கியதும். கடைசியாக சென்ற மார்கழியில் ஒரே நாளில் இரண்டு முறை (காலை 2 1/2 மணி மற்றும் காலை ஆறு மணி) மனதுக்கு நிறைவாக்க் கிடைத்த தரிசனங்களும் நினைவுக்கு வருது.

    இப்போது நினைவுக்கு வருவது, ஃப்ரிட்ஜில் தூங்கிக்கொண்டிருக்கும் லட்டுகளை எடுத்து வெளியில் போடச் சொல்லணும் (அது இருக்கும் இரண்டு பெரிய லட்டுகள் உட்பட, பத்துக்கும் மேல்). அடுத்து எப்போ தரிசனத்துக்குச் செல்லலாம் என யோசிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, லட்டுகளை விநியோகம் செய்திருக்க வேண்டாமோ...   ஒன்று தெரியுமா நெல்லை?  இந்த சம்பவத்துக்கு அப்புறம் குமாரனாகிய நான் இன்னும் திருப்பபதி செல்லவில்லை!

      குமார் என்று சொல்லிக் கொண்டாலும் கதையில் வரும்போது கலவையான கேரக்டர் சித்தரிப்புகள் இருக்கும்.  அந்தக் குமார் முழுமுழுக்க நானல்ல!  டிஸ்கி!!

      நீக்கு
  6. முன் சுருக்கம்....வருத்தமான விஷயம். ஶ்ரீராம். நம் ஒப்புதல் இல்லாமல் மாற்றுதல் நல்ல விஷயம் அல்ல. அதுவும் நீங்க சொல்லியிருக்கும் பாயிண்ட் இ டிட்டோ.

    அதுக்குப் பயந்து நான் அனுப்புவதற்குத் தயங்குகிறேன், ஶ்ரீராம். நான் ஒன்றும்.பெரிய எழுத்தாளர் இல்லைதான் ..ஆனால் நம்.கதை நமக்கு இல்லையா...

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரளவுக்கு ஓரிரு வார்த்தைகளை மாற்றினால் ஓகே.  அதுவும் படைப்பாளிக்கு சொல்லி விட்டு..  இங்கு நடந்தது அநியாயம்.

      நீக்கு
    2. ஆமாம் அதேதான் ஸ்ரீராம். அந்த ஓரிரு வார்த்தைகள் மாற்றினாலும் எழுதியவருக்குச் சொல்ல வேண்டும், நீங்க சொல்லியிருப்பது போல. கண்டிப்பாக நடந்தது நியாயமல்ல.

      கீதா

      நீக்கு
    3. இந்த மாதிரி கதையில் நிறைய மாற்றங்கள் செய்ய இரண்டே காரணங்கள் தாம். நான் உன்னைவிடப் பெரிய எழுத்தாளர் என்ற எண்ணம் மற்றது எனக்கு மாத்திரமே வாசகர்களின் பல்ஸ் தெரியும் என்ற எண்ணம். இத்தகையவர்கள் அவர்களே எல்லாக் கதைகளையும் எழுதி இதழை நிரப்புவது வரவேற்கத்தகுந்தது

      நீக்கு
    4. கரெக்ட்.  அதேதான்.  நான் அவர்களிடம் என்ன கேட்டேன் என்றால் "இப்படிச் செய்வதாய் இருந்தால் நான் ஏன் சிரமப்பட்டு எழுதி அனுப்ப வேண்டும்?  ஒன்று, நான் ஒரு கருவை அனுப்பி, இதை டெவெலப்; செய்து கதையாக்கி என் பெயரில் போட்டு விடுங்கள் என்றோ, OR எதையாவது ஒரு கதையை எழுதி என் பெயரைப் போட்டு விடுங்கள் என்றோ சொல்லலாமே" என்றேன்.  ஒருவேளை அவர் ​மாற்றிய கதை நன்றாயிருக்கிறது என்றே வைத்துக் கொண்டாலும் ஓசி புகழ் எனக்கெதுக்கு?

      நீக்கு
  7. அந்த ஏமாற்றம் கதையில் பளிச்.

    நடந்ததைச் சொன்னாலும், கதைக்காக மாற்றாமல், அதாவது சுபமாகத்தான் முடிக்கணும்னு அந்த ஏமாற்றத்தை கதையிலேனும் கொண்டுவருவது என்பதற்குச் செல்லாமல், இப்படி முடித்தது சூப்பர், ஸ்ரீராம்.

    வருத்தித் திணிப்பது போலல்லாத முடிவுகள் என்னை இப்படியான முடிவுகள் ஈர்க்கும்.

    இயல்பான முடிவு. இயல்பான சம்பவங்கள். சம்பவங்களில் கூட வேறு எதுவும் திணிக்காமல்...

    ஸ்ரீராம், இப்பவும் மீண்டும் வாசித்தேன். அப்போது வாசித்ததை விட (கதையை) இப்ப இன்னும் இந்த விஷயங்கள் பட்டன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பனைகளை விட நிஜங்கள் சுவையாய் இருக்கும் என்று சொல்லலாமா?

      நீக்கு
  8. நமக்கு எது எது கொடுப்பினையோ அதுதான் நடக்கும்...

    வித்யாசமான கதை
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  9. கதை நன்றாக உள்ளது.

    மிக்க ஆவலுடன் தரிசனத்துக்கு வந்தவர்களுக்கு தரிசனம் கிடைத்துவிடாதா? என்ற எண்ணம் படிக்கும்போது தோன்றியது.

    நன்றாக எழுதியுள்ளீர்கள் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்து பாராட்டியதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை மிக அருமையாக இருக்கிறது. அதுவும் தங்களின் நிஜமான அனுபவமே ஒரு கதையாகி உள்ளது என அனைவரைப் போலவே எனக்குக்கும் தெரிந்தது. ஒர வியாழன் பகிர்வில் உங்கள் அனுபவத்தை வருத்தமாக எழுதியிருந்தீர்கள். நினைவிருக்கிறது.

    இன்று வழக்கப்படி கா லையில் பதிவை படித்து விட்டேன். உடன் கருத்துத் தர இயலவில்லை. சரி ஒரு பதினொன்றுக்கு என் வழக்கப்படி நீளமான கருத்துரையை தட்டச்சு செய்தேன். அதை வெளியிடும் சமயத்தில், என் கை விரல்களின் தவறுதலாய் முழுக்க கருத்தும் மாயமாகி விட்டது. எதற்கும் ரங்கனின் துணை வேண்டுமல்லவா? என நினைத்தபடி இப்போது தருகிறேன்.

    கதையில் உங்கள் முன்னுரை அனுபவம் படித்ததில் வருத்தம் வந்தது. இப்படி யெல்லாம் மனிதர்கள் என்ற கோபம் எனக்கே எழுந்தது. உங்களது அனுபவத்தோடு ஒத்துப் போகிற மாதிரி என் அனுபவமும் ஒன்று உள்ளது. டிராப்டில் எழுதி வைத்துள்ளேன்.

    என் இளைய மகனின் திருமணம் ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு அருகில் ஒரு மணடபத்தில் நடந்தது. நான் ஸ்ரீ ரங்கனை தரிசிக்க ஆவல் கொண்டேன். ஆனால் "அவன்" அப்போது அழைக்கவில்லை. பின் ஐந்தாறு வருடங்களுக்குப் பின் "அவனாகவே" அழைத்தான். அப்போது சென்று தரிசித்து வந்த மகிழ்வை என் பதிவில் மகிழ்வுடன் ஒப்புவித்தேன். அதுபோல், உங்களது கதையை பொய்யாக்குவது போல திருப்பதி பாலாஜி விரைவில் அழைப்பான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.   கமெண்ட்டையே ரங்கன் காணாமல் அடித்து விட்டான் என்றால் என்ன சொல்ல...   அதில் அப்படி என்ன இருந்திருக்கும் என்றும் அறிய ஆவல் வருகிறது.  நாமே நினைத்தாலும் அதை அபப்டியே திரும்பக் கொணர முடியாது!  உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
    2. இப்போது அதையே நினைவுபடுத்தி வேறு சொற்களுடன் வந்துள்ளது. மற்றபடி இதே ரகமான அர்த்தங்கள்தாம். நான் என்ன சொல்ல வருகிறேனென்றால், எதையும் நடத்தி வைப்பவன் "அவன்தான்." "அவன்" நினைத்தாலின்றி நம் எண்ணங்கள் எளிதில் எதுவும் நிறைவேறாது. சிலர் எதற்கும் முயற்சி என்கிறார்கள். வாஸ்தவந்தான்..! அந்த முயற்சிக்கும் அவன்தான் தூண்டுகோலாக இருக்க வேண்டுமேயன்றி, நம் கையில் எதுவுமில்லை. (அவன் படைத்த பத்து விரல்களைத்தவிர..) சில சமயங்களில் நம் முயற்சியும், அவனருளும் இணைகிறது. அதுதான் தெய்வசங்கல்பம்.

      நீக்கு
    3. ஓகே ஓகே ஓகே அக்கா... ஓகே சரண்டர்!

      நீக்கு
    4. ஹா ஹா ஹா. மனித முயற்சியும், தெய்வ விருப்பமுனமான கருத்தில் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டேனோ.? வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் அவ்வாறு எழுத வைத்து விட்டன. மனதில் வைத்துக் கொள்ளாமல் மன்னிக்கவும்.

      நீக்கு
    5. அதுதானே பார்த்தேன்.. இன்னும் மன்னிக்கவும் வரலைன்னு கவலையா இருந்தது! :)

      நீக்கு
    6. Interesting indeed! ஒருமுறை தேவராஜ முதலியார் பகவான் ரமணரிடம் பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற பெரிய நிகழ்வுகளை மட்டுமே விதி உள்ளடக்குகிறதா அல்லது சிறிய விஷயங்களையும் உள்ளடக்கியதா என்று கேட்டார். பகவான், பேனா குப்பியை நகர்த்தி, இந்த சிறிய இயக்கம் கூட விதியின் கீழ் வருகிறது என்றார்.

      நமது செயல்கள் ஒருபுறம் இருக்கட்டும்; 'நம்' எண்ணங்கள் கூட நம்முடையது அல்ல (ஒரு முழு நிமிடம் எண்ணங்களை கட்டுப்படுத்த அல்லது நிறுத்த முயற்சி செய்யுங்கள் :-) ) நமது எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை (pre programmed). 'நாம்' சிந்திக்கிறோம், 'நாம்' செயல்படுகிறோம் என்பது மாயையின் மகத்தான வெற்றி!! அதனால்தான் ஜெகன்மாதாவை மகாமாயா என்று கொண்டாடுகிறோம்.

      ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே 
          அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
      Makes sense?

      நீக்கு
  11. வாழ்த்துகள். அருமையான, இயல்பான நடை. நம்பகத்தன்மை இக்கதையில் அற்புதமாய் வெளிப்பட்டிருக்கிறது.

    கதையில் பாசாங்கு இருந்தால், அறிவார்ந்த வாசகர்கள் அரை மைல் தூரத்திலேயே மோப்பம் பிடித்துவிடுவார்கள். தேன்சிட்டு சொதப்பல் version முடிவு - ஈசாப்பு கதை போல 'இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால்' ரகத்தில் குழந்தைத்தனமாக, பாசுர மேற்கோள் வலிந்து திணித்துள்ளது. இயற்கையிலேயே அழகான மணப்பெண்ணுக்கு ஒப்பனை என்ற பெயரில் பெயிண்ட் அடித்த பேய்க்கோலம் போல ஆக்கி வைத்திருக்கிறார்கள். என்னவோ போடா மாதவா.

    Once again, splendid job, Sriramji!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீநிவாஸன் ஸார்.    (ஹிஹிஹி...  சரிதானே?)

      //  தேன்சிட்டு சொதப்பல் version முடிவு - ஈசாப்பு கதை போல 'இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால்' ரகத்தில் குழந்தைத்தனமாக, பாசுர மேற்கோள் வலிந்து திணித்துள்ளது. //

      ஆஹா..  அதை நீங்கள் படித்துள்ளீர்கள் போலிருக்கிறதே...  நான் நினைப்பவர்தான் நீங்களா என்றும் தெரியவில்லை!!!  உங்களுக்கு திருத்தப்பட்ட பாதிப்பு வரவில்லையா?

      //அருமையான, இயல்பான நடை. நம்பகத்தன்மை இக்கதையில் அற்புதமாய் வெளிப்பட்டிருக்கிறது. //

      மிக மிக நன்றி.

      //Once again, splendid job, Sriramji! //

      ஆஹா... தன்யனானேன்.

      நீக்கு
    2. ஸ்ரீநிவாஸன் ஸார். (ஹிஹிஹி... சரிதானே?) //

      உங்கள் கதையிலேயே என் பெயர் இடம் பெற்றுள்ளது :-)

      நாம் இதுவரை சந்தித்ததில்லை; நான் அவன் இல்லை :-)

      நீக்கு
  12. ​என்ன சொல்வது என்று தெரியவில்லை. அனுபவங்களே கதைகள் ஆகும்போது அவை செய்தி சொல்லல் என்றாகி விடுகிறது. என்னுடைய சனிக்கிழமை கதையும் அப்படியே.

    கதவு திறக்க சாவி வேண்டும். சாவி எடுக்க கதவு திறக்க வேண்டும். இப்படியான இக்கட்டில் என்ன செய்வது.இதைத்தான் dead lock என்று நாங்கள் கூறுவோம் ஆகவே எப்போதும் பிளான் B வேண்டும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையிலிருந்து காணோமே என்று பார்த்துக் கொண்டிருந்தேன். நலம்தானே ஜே கே சி சார்? நன்றி.

      நீக்கு
  13. கதை மிக அருமை. நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.

    ஏதாவது அற்புதம் நிழ்ந்து குமார் குடும்பம் பெருமாளை தரிசனம் செய்து விடமாட்டாரா என்ற எண்ணம் வந்தது.

    மலையப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்று பல காலம் தவம் இருந்து "அவன் கூப்பிட்டால்தான் உண்டு "என்று சொல்வார்கள் .

    //"சரிப்பா... அப்படியே இருந்துட்டு போகட்டும்.. நான் ஸ்ரீதர் பையன் கல்யாணத்துக்கு வர்றேன். அப்படியே பெருமாளையும் பார்த்து ஒரு அட்டெண்டன்ஸ் போடறேன்... போடறோம்... நாங்க அஞ்சு பேர் இல்லையா?" மறுபடி சிரித்தான் குமார்.//

    தன்னைப்பார்க்க மட்டுமே வர வேண்டும் என்று பெருமாள் நினைத்து விட்டார் போலும். அடுத்த முறை எல்லோரும் பெருமாளை பார்க்க ஒரு பயணத்திட்டம் அமைத்து போய் வரட்டும்.

    மாமியாருக்கு ஏன் தரிசனம் கிடைக்காது, வயது 90 ஆனால் வரக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்களா?
    அவர்கள் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டாமா?
    வயதானவர்களுக்கு முன்னுரிமை உண்டு என்றார்களே!

    பதிலளிநீக்கு
  14. முன்பு நம் கதையை பத்திரிக்கைக்கு அனுப்பினால் கதை மாற்றம் செய்வோம் கேட்க கூடாது என்று ஒரு கண்டிஷன் போடுவார்கள்.
    அது இப்போதும் இருக்கிறதா என்ன?

    பதிலளிநீக்கு
  15. //குட்... பெருமாள் உங்க எல்லோரையுமே கூப்பிட்டிருக்காரா?" என்று கேட்டபடியே அவர்களுக்கு ஆன்லைனில் நேரம் பதிவு செய்தான் ரங்கன்.//

    ஆமாம் என்று சொல்லி இருக்க வேண்டுமோ! கல்யாணத்துக்கு வரும் போது பெருமாளையும் பார்க்க எண்ணம், மாமியாருக்கு பெருமாளை சேவிக்க ஆசை, நிறைவேறினால் சந்தோஷம் படுவோம் என்று சொல்லி இருக்கனுமோ!
    பெருமாளின் எண்ணம் தானே நடக்கும் நாம் என்ன நினைத்தாலும் .

    எனக்கும் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல் குலதெய்வம் தரிசனம் கிடைத்தது."

    ஓரு பதிவில் சொல்கிறேன் எங்கள் அனுபவத்தை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!