28.9.25

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 25 :: நெல்லைத்தமிழன்.

 

இராஜராஜ சோழன் பல துறைகளிலும் வித்தகனாக விளங்கினான். அவன் பெற்ற வெற்றிகளாலும் அவனுடைய திறமைகளாலும் அவனுக்கு நிறைய சிறப்புப் பெயர்கள் விளங்கிவந்தன. 

பாண்டிய குலாசினி (குல நாசினி என்று அர்த்தம்), க்ஷத்திரிய சிகாமணி, நித்த விநோதன், கேரளாந்தகன், உய்யக்கொண்டான், அருண்மொழி தேவன் என்றெல்லாம் பல பெயர்கள் இராஜராஜனுக்கு இருந்தன. சோழப்பிரதேசத்தை ஒன்பது வளநாடுகளாகப் பிரித்து அவற்றிர்க்கு தன் பெயர்களை இட்டான். அதில் தஞ்சாவூர் என்பது பாண்டிய குலாசினி வளநாட்டில் வரும்.  (பாண்டிய குலாசினி  வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூரில் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ராஜராஜேச்வரம் என்று பெருவுடையார் கல்வெட்டு பகரும்). 

இந்த தஞ்சை பெருவுடையார் கோயில் கிபி 1004ல் ஆரம்பிக்கப்பட்டு 1009ல் முடிந்திருக்கவேண்டும். இதன் குடமுழுக்கு 1010ல் நடந்த து. கிபி 1011ல் இந்தக் கோயிலின் விமானத்தில் கல்வெட்டு வெட்ட இராஜராஜன் கட்டளையிட்டிருப்பதால், திருமுழுக்கு அதன் முன்னர் முடிந்திருக்கவேண்டும் இந்தக் கோயிலின் முதல் வாயிலான திருத்தோரண வாயில், கேரளாந்தகன் வாயில் எனவும், இரண்டாம் வாயிலான திருமாளிகை வாயில், இராஜராஜன் வாயில் எனவும் அந்நாட்களில் வழங்கப்பட்டு வந்தன.

முடிந்தவரை தெரியாத செய்திகளை மாத்திரமே சொல்லவேண்டும் என்று நினைப்பதால் கோயில் சம்பந்தமான பல செய்திகளை நான் எழுதவில்லை. 

ராஜராஜ சோழனுக்கு முன்பு வரை சோழநாடு என்று பெயர் பெற்றிருந்தது, இராஜராஜன் காலதில்தான் சோழமண்டலம் என வழங்கப்பட்ட து. 

சோழ மண்டலத்தை பல வளநாடுகளாகப் பிரித்து, ஒவ்வொரு வளநாட்டையும் சிறிய நாடு அல்லது கூற்றங்களாகப் பிரித்து, அதனை ஊர்ச்சபைகளாகவும் பிரிக்கச் செய்தான்.  அதுமட்டுமல்லாமல், சோழமண்டலம் முழுவதையும் நில அளவுகள் செய்தது இவனுடைய 16ம் ஆட்சியாண்டுதான். இதனை vision உள்ளவர்கள்தாம் சிந்தித்துச் செய்ய முடியும். அதனால்தான் ராஜராஜ சோழனை இன்றும் நாம் நினைவுகொள்கிறோம்.

சோழ நாட்டை சோழமண்டலமாகச் செய்தது போல, தொண்டை நாடு  ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்றும் பாண்டியநாடு இராஜராஜ மண்டலமென்றும், நுளம்பபாடி நிகரிலிச் சோழ மண்டலமாகவும், ஈழம் மும்முடிச் சோழமண்டலமாகவும் பெயர் மாற்றம் பெற்றன. இவனை அடியொற்றி இவனது மகன் இராஜேந்திர சோழன், கங்கபாடியை முடிகொண்ட சோழமண்டலம் என்றும், தடிகைபாடியை விக்கிரம சோழ மண்டலமென்றும் நுளம்ப பாடி, நிகரிலி சோழ மண்டலமென்றும் பெயர் மாற்றம் பெற்றன. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு தலைவர் அரசு நிர்வாகப்  பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  பிறகு வந்த ஆட்சிக்காலத்திலும் சில மண்டலங்கள் பெயர் மாற்றம் பெற்றன. மண்டலங்களுக்கு அரசியார் பெயர்களும் சூட்டப்பட்டிருந்தன. கல்வெட்டுகள் பிரகாரம் சுமார் 40க்கும் மேற்பட்ட மண்டலங்களின் பெயர்கள் கிடைக்கின்றன.

இந்த மண்டல முறை தற்போதுள்ள மாவட்டங்களையோ இல்லை மாநிலங்களையோ ஒத்திருந்தது. இந்த சோழர்காலப் பகுப்பு முறை, அதன் பெயர்கள், நாயக்கர் மற்றும் மராத்தியர் காலத்திலும் தொடர்ந்தது. அவர்களும் சோழவளநாடு என்றே அழைத்துக்கொண்டார்கள். ஆங்கிலேய ஆட்சியின்போதுதான் மாவட்டங்களாகப் பெயர் பெற்றன.

பாண்டிய குலாசினி வளநாட்டில் சுமார் 21 கூற்றங்கள் இருந்தன (ஆற்காடு, பூதலூர், கிளியூர், கீழ்குடி என்று பல). அவற்றுள் ஒன்றுதான் தஞ்சாவூர் கூற்றம். மன்னனது அரண்மனை தஞ்சையில் இருந்தது, அங்குதான் ராஜராஜ சோழன் இருந்தான் என்பதால் தஞ்சை முக்கியத்துவம் பெற்றது. அவனுடைய காலத்துக்கு முன்பு, பழையாறையில் அரண்மனை இருந்தது. இது தவிர, மன்னர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று தங்குவார்கள் என்பதால் பல இடங்களில் மன்னன் தங்குவதற்குரிய அரண்மனைகள் இருந்தன. இராஜராஜ சோழனின் தந்தை காஞ்சீபுரத்தில் இருந்த அரண்மனைக்கு பொன் வேய்ந்து அங்கேயே தன் கடைசி காலங்களில் தங்கியிருந்தார் என்பது நமக்குத் தெரியும் (பொன்மாளிகை துஞ்சிய தேவர் என்பவர் இவர்தான்). தஞ்சையை விஜயாலய சோழன் முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றியபின், அவர்கள் அரண்மனை இருந்த இடத்தையே விரிவுபடுத்தி அரண்மனை செய்துகொண்டான் என்று சொல்லமுடியும். அவனுக்குப் பிறகு ஆதித்தன், பராந்தகச் சோழன், கண்டராதித்தன் மற்றும் அரிஞ்சயன் காலம்வரை தஞ்சையிலிருந்த அரண்மனையில்தான் அரசர்கள் தங்கியிருந்து ஆட்சி புரிந்தனர்.  ஆமாம் இதையெல்லாம் எப்படிச் சொல்கிறார்கள்?

பராந்தகனை, செப்பேடுகள் தஞ்சையர்கோன், தஞ்சைக்காவலன் என்று சொல்கின்றன. கண்டராதித்த சோழனின் திருவிசைப்பாவில் ‘தஞ்சையர் கோன்’ என்று வருவதால் அவரும் தஞ்சையிலிருந்துதான் ஆட்சி செய்தான் என்று கொள்ளலாம்.  இந்தச் சமயத்தில் அவர்களுக்கு பழையாறையில், முடிகொண்ட சோழபுரத்து அரண்மனையும், நந்திபுரத்தில் ஆயிரத்தளி அரண்மனையும் இருந்தன. சுந்தரச் சோழருக்கோ பழையாறை மற்றும் நந்திபுரத்தில் இருந்த அரண்மனைகளே பிடித்திருந்தன. அங்கிருந்துதான் அவர் அலுவல் மேற்கொண்டார். இது தவிர அவர் காஞ்சீபுரத்தில் இருந்த அரண்மனைக்குப் பொன் வேய்ந்து அங்கு தன் கடைசிகாலத்தில் இருந்தார் என்பதைப் பார்த்தோம். அந்தச் சமயத்தில் (பழையாறை அரண்மனைகளில்) அவரது பட்ட த்து இளவரசன் ஆதித்த கரிகாலன் தஞ்சை அரண்மனையிலிருந்து அரசு காரியங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அங்கிருந்தபோதுதான், வீரபாண்டியன் மீது போர் தொடுத்து அவனுடைய தலையைக் கொய்து தஞ்சை நகரின் கோட்டை வாசலில் பெரிய மரக்கழியின் உச்சியில் சொருகி வைத்தான் என்று எசாலம் செப்பேடுகளில் குறிப்பிடப்படுகிறது. 

தஞ்சாவூர் கூற்றத்தில் இருந்த ஊர்களில் சில, கண்ணங்குடி (இப்போ கண்நந்தங்குடி என்று வழங்குகிறது என நினைக்கிறேன்), கருந்திட்டைக்குடி, குருகாடி (இப்போ குருவாடி), நத்தமங்கலம், தஞ்சாவூர் போன்றவை. 

தஞ்சையின் வட திசையிலுள்ள நகரப் பகுதி கருந்திட்டைக்குடி என்பது (தற்போது கரந்தை… நினைவுக்கு வருகிறாரா நம் பிரபல பதிவர்?)  இந்தப் பகுதி வெண்ணாற்றுக்குத் தெற்குப் பகுதியிலும் வீரசோழ வடவாற்றுக்கு வடக்கிலுமாக இரண்டு ஆறுகளுக்கிடையே அமைந்த வளமான பகுதி. தஞ்சையைவிட மிகப் பழமையான ஊர் என்ற பெருமை இந்த கருந்திட்டைக்குடிக்கு உண்டு.

நாம் மேலோட்டமாகப் படித்திருப்பதால், சோழ அரண்மனையை பாண்டிய மன்னன் தன் வெற்றிக்குப் பிறகு இடித்துவிட்டான், அதனால் காணக்கிடைக்கவில்லை என்றெல்லாம் நம் நினைவுக்கு வரும். அதில் முழு உண்மை இல்லை. ஏனென்றால் பாண்டிய மன்னன் அழித்த அரண்மனை(கள்) எது(எவை) என்பது நமக்குத் தெரியவேண்டும்.

தஞ்சாவூரில் மன்னனின் அரண்மனை தஞ்சை பெரியகோயிலுக்கு அருகாமையில்தான் அமைந்திருந்திருக்கவேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கோயிலுக்கு உண்டான தளிச்சேரிப் பெண்கள் வசித்த வீதிகள் கோயிலின் வடமேற்கில் உள்ள அணுக்கன் திருவாயிலை ஒட்டியே இருந்திருக்கவேண்டும்.  சங்கநிதி, பதுமநிதி, அஷ்டமங்கலங்கள் எல்லாம் இந்த அணுக்கன் வாயிலிலேயும், இதன் எதிரே உள்ள அர்த்த மண்டபத்தின் வடக்குப்புற வாயிலிலேயும் மாத்திரம் காணப்படுவதால் இராஜராஜன் இந்த வாயில் வழியாகத்தான் கோயிலுக்குள் நுழைந்திருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த அரண்மனை விஷயத்தை வரும் பகுதியில்தான் தொடரவேண்டும். காரணம், இராஜராஜன் நுழைந்த அந்த வடவாயிலை அடுத்த பகுதியில்தான் காண்போம் என்று நினைக்கிறேன்.












கோயிலின் பக்கத்தில் மனிதர்கள் சிறு துரும்பாகத் தெரிவர். அதுவே இந்தக் கோயிலின் பிரம்மாண்டத்தைச் சொல்லும்  இருந்தாலும் கோயிலின் பின் பகுதியில் நான் மாத்திரம் நின்றுகொண்டு எடுத்துக்கொண்ட இந்தப் புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது.


ஒவ்வொரு பகுதியிலும் நுழைவாயிலின் இரு புறமும் ஒற்றைக் கல்லால் அமைக்கப்பட்ட துவாரபாலகர்கள். எப்படி யோசித்து, அதற்கான கற்களை 75 கிமீ தூரம் கொண்டுவந்து செதுக்கிக் கட்டியிருக்கிறார்கள் பாருங்கள்.




இந்த சுப்ரமணியர் கோயில், 16ம் நூற்றாண்டில் செவப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் கர்பக்ரஹம், அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் உள்ளன. ஆறு முகங்களோடு மயில் மீது அமர்ந்திருக்கும் கோலத்தில் ஒற்றைக் கல்லால் செய்யப்பட்ட மூர்த்தம் கர்பக்ரஹத்தில் உள்ளது. கோயிலின் வெளிப்புறச் சுவற்றில் நிறைய சிற்பங்களும், சிவபுராணம் மற்றும் இராமாயணக் காட்சிகளும் செதுக்கப்பட்டிருக்கின்றன.

சுப்ரமண்யர், மயில் வாகனத்தில். 






அறுமுகன் கோயில் (சுப்ரமண்யர் கோயில்) மிகுந்த கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. 16ம் நூற்றாண்டில்தான் கட்டப்பட்டிருக்கிறது. இது பற்றி விவரமாக நான் இன்னொரு பதிவில் எழுதுகிறேன். இங்குள்ள சிற்பங்கள், செய்கலை நேர்த்தி மிக மிக அழகுவாய்ந்தவை. 

எத்தனை வருடங்கள் உழைத்து உருவாக்கிய கோயில் இது.  இதனைப் பற்றி பல்வேறு செய்திகளை நீங்கள் படித்திருப்பீர்கள். அதனால் அவற்றைப் பற்றி நிறைய எழுத வேண்டியதில்லை. இருந்தாலும் அங்கிருக்கும் சிற்பங்கள் போன்றவற்றைக் காணவேண்டாமா?  அடுத்த வாரம் தொடர்வோமா?

(தொடரும்) 

12 கருத்துகள்:

  1. சிறந்த படைப்பு...
    துல்லியமாக தகவல்கள்..
    தலை வணங்குகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். நீங்க உள்ளூர்கார்ர். அதனால் எழுதும்போது தவறு வந்துவிடக் கூடாது என நினைப்பேன்.

      நீக்கு
  2. முருகன் கோயிலை எழுப்பியவர்களும் சோழர்களே என்ற கருத்தும் உண்டு... அங்கு சோழர் காலத்து கல்வெட்டு ஒன்று கூட இல்லை என்பதே பிரச்னை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கலாம். அங்கு முருகன் கோவில் இருந்து, பழுதுபட்டு, முற்றிலும் சீரமைக்கப்பட்டிருந்திருக்கலாம். இருந்தாலும் அங்கு நாயக்கர் காலக் கல்வெட்டு இருப்பதாகத்தான் அறிகிறேன்.

      நீக்கு
  3. எட்டாம் வகுப்பில் எனது ஆசிரியர்களின் கூற்றுப்படியே மேற்சொன்ன கருத்து..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு வயதில் ஆசிரியர் கூறுவது, மற்றும் நாம் மதிக்கும் பெரியோர்கள் கூறுவது வரலாற்று உண்மையாக்க்கூட இருக்கும். இருந்தாலும் பட்டயங்கள், கல்வெட்டுகள், நூல்கள் ஆகியவையே வரலாற்றை அறுதியிடுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

      நீக்கு
  4. தூங்கியவன் கன்று கிடாக் கன்று என்றொரு பழமொழி கிராமப் புறங்களில் உண்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா. அருமையான பழமொழி. அதனால்தான் கோவிலை ஆக்கிரமித்துக்கொண்டு, அதன் அருகில் உள்ள குளத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டு, இது சோழர் காலத்திலிருந்து எங்களுடையது எனச் சொல்லித் திரிகின்றனர். திரையுலகிலும், தூங்கும்போது காலாட்டிக்கொண்டே தூங்கவேண்டும், இல்லையென்றால் ஆள் அவுட் என நினைத்துவிடுவார்கள் என்பர்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இந்த வார கோவில் பதிவும், படங்களும் எப்போதும் போல் அருமை. சோழ மன்னர்களின் சிறப்பை அதுவும் இராஜராஜன் சோழனின் சிறப்பை நன்றாக விவரித்து எழுதியுள்ளீர்கள். அந்தக்காலத்திற்கே போய் வந்த உணர்வு கிடைத்தது ஐந்து வருடத்தில் இவ்வளவு பெரிய கோவில் நிறைவுற்றது வியப்புத்தான்..!

    படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. சிற்பங்கள் மிக தெளிவு. சுப்பிரமணியர் கோவில் அழகாக உள்ளது. துவார பாலகர்கள் கண்கொள்ளா காட்சி. நீங்கள் கோவிலைப் பற்றி கூறிய தகவல்களை மனதில் இருத்திக் கொண்டு மீண்டும் ஒரு முறை அங்குச் சென்று நிதானமாக சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எழுகிறது இறைவன் அருளால் வாய்ப்பு கிடைத்தால், பார்க்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!