30.9.25

ஒரே ஒரு ஊரிலே - தொடர் கதை - ஸ்கை :: பகுதி 11: " மனம் போல் மாங்கல்யம் "

 

ஸ்கை முன்னுரை :

வாசகர்களுக்கு வணக்கம். 

'ஒரே ஒரு ஊரிலே' என்ற இந்தத் தொடர் கதை, ஒரு சமூக நாவலாக மனதில் உருவாக்கி எழுத ஆரம்பிக்கப்பட்டது. 

இந்தக் கதையில், 'சமுதாயத்தில் பல நிலைகளில் உள்ள மனிதர்களை, அரசியல் எப்படி பாதிக்கின்றது' என்ற கருத்தை சுருக்கமாக எடுத்துக் காட்டுவதுதான் நோக்கம். 

இன்று முடியும் இந்த முதல் பகுதியோடு, அரசியல் பிரமுகர், இளம் காதலர்கள், வணிகக் குடும்பம், ஒப்பந்ததாரர் குடும்பம், ஜோதிடர்கள் ஆகியோரின் ஆரம்ப நிலைகள் விவரிக்கப்பட்டன. அரசியல் இன்னும் முழு வீச்சில் கதைக்குள் வரவில்லை. இரண்டாம் பாகத்தில், அரசியல் + அதைச் சார்ந்த மற்ற பாதிப்புகள் கதையில் இடம் பெறும். 

மீதி விஷயங்களை கீழே பின்னுரையில் காணவும். 

= = = = = = = = = = = =

முந்தைய பகுதி சுட்டி <<<<<< 

ராஜாவும் சாந்தியும் தங்கள் கல்யாணப் பத்திரிக்கையை ராமசாமிக்கு கொடுப்பதற்காக எடுத்துச் சென்றார்கள். 

ராமசாமியை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தார்கள்.‌

" வா ராஜா, வாம்மா சாந்தி. உட்காருங்க. மேஜை மீது இருந்த ஃபோனை எடுத்து, " ரெண்டு கூல் டிரிங்க்ஸ் கொண்டு வாங்க" என்றார். 

" சார், எங்க கல்யாணப் பத்திரிக்கை கொடுப்பதற்கு வந்தோம். " என்றாள் சாந்தி. 

" ராஜா தம்பி நேத்திக்கே ஃபோன்ல சொல்லியாச்சு. ரொம்ப சந்தோஷம். கல்யாண தேதியில ஊரில் இருந்தால் நிச்சயம் வருகிறேன். " 

" சார் கல்யாணம் நடக்க இருப்பது திருத்தணி கோயில்ல" என்றான் ராஜா. 

" என்னிக்கு கல்யாணம்?" 

" மே மாதம் 14" கூல் டிரிங்க்ஸ் வந்தது. அதை சாந்தியும் ராஜாவும் ஆளுக்கு ஒரு கிளாஸ் எடுத்துக் கொண்டனர். 

ராமசாமி உதவியாளரை அழைத்தார். 

வந்தவரிடம், "மே 14 ஆம் தேதி எனக்கு என்ன எங்கேஜ்மெண்ட்ஸ் என்று பாருப்பா" என்றார். 

உதவியாளர் தன் கையில் இருந்த நாட்குறிப்பு புத்தகத்தைப் பார்த்து, " சார் அன்னிக்கு கார்த்திகேயபுரத்தில் ஒரு கிரகப்பிரவேசம். கட்சிப் பிரமுகர் ரெண்டு வாரம் முன்பே வந்து உங்களை பத்திரிக்கை கொடுத்து அழைத்தார்.  நீங்க நேரம் இருந்தால் வர்றேன்னு சொல்லியிருக்கீங்க. " 

" அட! ஆமாம்! கார்த்திகேயபுரம் திருத்தணி கோயில் பக்கத்தில்தானே இருக்கு?" 

" ஆமாம் சார்" 

" சரி. நான் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று அவருக்கு தகவல் அனுப்பிடுங்க. " 

உதவியாளர் அகன்றதும்" ராஜா தம்பீ , நான் கல்யாணத்திற்கு வர்றேன். எத்தனை மணிக்கு முஹூர்த்தம்? " என்று கேட்டார். 

" காலை 9 மணிக்கு மேல் பத்தரை மணிக்குள்" 

" கிரகப்பிரவேசம் காலையிலேயே முடிஞ்சிடும். அங்கே டிஃபன் சாப்பிட்டுவிட்டு நேரே உங்க கல்யாணத்துக்கு வந்துடறேன். அன்றைக்கு அங்கேதான் எனக்கு சாப்பாடு. சரியா?"

" சரி சார். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். கல்யாணத்தில் நீங்கதான் தாலி எடுத்துக் கொடுக்கணும். உங்களிடமிருந்து வாங்கி, சாந்தி கழுத்தில் தாலியைக் கட்டலாம் என்று இருக்கேன். உங்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லைதானே?" 

" சரி தம்பி. ஆனா இதைப்பற்றி இப்போ ஒன்றும் உறுதியாக சொல்லமுடியாது. கல்யாணப் பத்திரிகையில் இது பற்றி ஒன்றும் போடவில்லைதானே?" 

" போடவில்லை சார். " 

" ஓ கே. நிச்சயம் உங்க கல்யாணத்தை நடத்தி வைக்க வருவேன். அப்படி வரமுடியவில்லை என்றால் முன்கூட்டியே செய்தி அனுப்பி விடுகிறேன். " 

" சரி சார். நாங்க வர்றோம்" என்று விடை பெற்று புறப்பட்டார்கள் ராஜாவும் சாந்தியும். 

= ====

அழகரின் குடும்பம், சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர்கள் எல்லோரும் மே 12 ஆம் தேதியன்று தனிப் பேருந்து ஒன்றில் திருத்தணி புறப்பட்டனர். 

தாலி கட்டுவது கோயிலில் என்றாலும் கோயில் அருகில் இருந்த பாக்யலக்ஷ்மி கல்யாண மண்டபத்தில் மற்ற சம்பிரதாயங்கள் யாவும் நடத்துவது என்று இரு வீட்டாரும் தீர்மானித்திருந்தனர். 

பெண் வீட்டாருடன் வந்தவர்கள், மாப்பிள்ளை வீட்டாருடன் வருபவர்கள் எல்லோரும் தங்குவதற்கு, பக்கத்து நட்சத்திர ஹோட்டலில் அறைகள் பதிவு செய்திருந்தார்கள். 

மே 13 மதியம் செல்வ மீனா குடும்ப உறவினர்கள், சொந்த பந்தங்கள் எல்லோரும் ஒரு தனிப் பேருந்தில் வந்து சேர்ந்தனர். 

தயாராக இருந்த நாதஸ்வர தவில் குழுவினர் கல்யாண வசந்த ராகம் வாசித்து கொட்டி முழக்கினார்கள். 

முதலில் செல்வம், மீனா பிறகு ராஜா மற்றும் குடும்பப் பெரியவர் பேருந்தை விட்டு இறங்கினார்கள். 

கெட்டி மேளம் கொட்ட, அவர்கள் நால்வருக்கும் ஆரத்தி எடுத்து ராஜாவிற்கு நெற்றியில் திலகம் இட்டு வரவேற்றனர் பெண் வீட்டார். 

ராஜாவின் கண்கள் சுற்று முற்றிலும் சுழன்று சாந்தியைத் தேடின. சாந்தி அவன் கண்களில் படவில்லை! 

சற்று நேரம் கழித்து ராஜாவின் ஃபோன் சைலண்ட் மோடில் அதிர்ந்தது. 

சாந்தி!

" ராஜா, உள்ளே வந்தவுடனேயே யாரை அப்படி கண்ணால் துழாவி துழாவித் தேடினே?" 

திடுக்கிட்ட ராஜா, சாந்தி எங்கோ மறைந்திருந்து தன்னை கவனித்துக்கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான். 

" ஓ அதுவா? என்னுடைய ஃப்ரெண்ட் மஞ்சுவுக்கு கல்யாணப் பத்திரிக்கை அனுப்பி இருந்தேனே, அவ வந்துட்டாளான்னு தேடினேன்." 

" அவளுக்கு நீயும் பத்திரிகை அனுப்பினியா! நான் அனுப்பிய பத்திரிகை பார்த்துவிட்டுத்தான் மஞ்சு வந்திருக்கான்னு நெனச்சேன்." 

" ஹி ஹி ! நான் மஞ்சுவுக்கு கல்யாணப் பத்திரிக்கை அனுப்பவில்லை!" என்றான் ராஜா. " அது சரி, நெசம்மாவே மஞ்சு வந்திருக்காளா?" 

" இதோ என் பக்கத்துலதான் இருக்கா. மாப்பிள்ளைத் தோழன் போல மஞ்சுதான் பெண் பக்கத்து தோழி. அவதான் நீ உள்ள வந்ததும் என்னைத் தேடுவதைக் காட்டி என்னை கேலி செய்தாள்" 

" அடப் பாவி ! எங்கே இருந்து ரெண்டு பேரும் இதையெல்லாம் பார்த்தீங்க?" 

" எங்க ரூம்ல இருக்கிற க்ளோஸுடு சர்க்யூட் டி வி லதான் " 

" ஓஹோ இப்படி ஒரு ரூட்டு இருக்குதா! சரி இப்போவும் அந்த டி வி ல நான் இருக்கேனா?" 

" ஆசையப் பாரு! எப்போ பாத்தாலும் உங்க மூஞ்சியையே காட்டிக்கிட்டு இருப்பாங்களா? கல்யாணத்துக்கு வருபவர்களை மட்டுமே அங்கே இருக்கிற காமிரா மேன் வீடியோ எடுத்து ரிலே பண்ணுவார். நீங்க மாப்பிள்ளை என்பதால் உங்களுக்கு அதிக கவரேஜ். அவ்வளவுதான். இப்போ கல்யாண மேடை பக்கத்துல ஏதோ குட்டீஸ் விளையாடிக்கிட்டு இருப்பதைத்தான் காட்டுறாங்க." 

" மாப்பிள்ளை யாரு கிட்டே பேசிக்கிட்டு இருக்கீங்க?" என்று கேட்டபடி அருகில் வந்தார் அழகர். 

" உங்க பொண்ணுக்கிட்டதான் பேசிக்கிட்டு இருக்கேன் மாமா" 

" ஏற்கெனவே நீங்க ரெண்டு பேரும் நிறைய பேசி இருக்கீங்க. இனிமேலும் பேசப் போறீங்க. இப்போ என்ன அவசரம். சரி உங்க ரூம் எங்கே இருக்குன்னு காட்டறேன் வாங்க" என்று சொல்லி, மண்டபத்தின் இரண்டாவது மாடிக்கு அழைத்துச் சென்றார் அழகர். 

" மாப்ளே இந்த இரண்டாவது ஃப்ளோர் ரூம்கள் எல்லாமே உங்களோடு வந்த சொந்த பந்தங்கள் தங்குவதற்குதான். உங்களுக்கு மட்டும் தனி ரூம் இந்த முதல் ரூம். போய் குளித்துவிட்டு, மேலே மூணாவது ஃப்ளோர் டைனிங் ஹாலுக்கு வந்துடுங்க" என்று சொல்லிச் சென்றார் அழகர்.

தன்னுடைய அறைக்குப் போய் சாந்திக்கு ஃபோன் செய்தான் ராஜா. " ஏய் நான் என்னுடைய ரூமுக்கு வந்துட்டேன்." 

" தெரியும். பார்த்தேன்." 

"அதையுமா டி வி ல காட்டினாங்க?"

" இல்லை. நீங்க கீழ் ஃப்ளோர்லயே நின்னு பேசிக்கொண்டு இருந்ததை அப்பாவிடம் காட்டி நான்தான் உங்களை உங்க ரூமுக்கு வழி காட்டச் சொன்னேன்" 

" நீ எந்த ஃப்ளோர்ல இருக்கே? " 

" நாங்க எல்லோரும் முதல் மாடி " 

ராஜா தன் அறையின் கதவைத் திறந்து, கிரில் தடுப்பு வழியாக முதல் மாடி பகுதியைப் பார்த்தான். 

சாந்தி புன்னகையுடன் எதிர்ப்புற அறை வாசலலிருந்து கை அசைத்தாள்.

****

மாப்பிள்ளை அழைப்பு, தொடங்கி, எல்லா சம்பிரதாயங்களும் சிறப்பாக நடந்தேறின. 

கல்யாண கோஷ்டி புரோகிதர் உட்பட எல்லோரும் கோவிலை அடைந்தனர். 

கோவில் மண்டபத்தில் மந்திரங்கள் சொல்லப்பட்டு தாலி கட்டும் நேரம் வந்தபோது நான்கைந்து பேர் பின் தொடர, சரியாக அங்கு வந்து சேர்ந்தார் ராமசாமி.

தட்டிலிருந்த தாலியை தன் கைகளால் எடுத்து ராஜாவிடம் கொடுத்தார். கெட்டி மேளம் ஒலிக்க, மாங்கல்ய மந்திரம் சொல்லி சாந்தியின் கழுத்தில் தாலி கட்டினான் ராஜா. அட்சதை போட்டு ஆசிர்வாதம் செய்தார் ராமசாமி.

பிறகு ராஜாவின் காதருகே தணிந்த குரலில் கேட்டார். " தம்பீ இங்கேயே பரிசுப் பொருளைக் கொடுத்துவிட்டு, வாழ்த்திப் பேசிவிட்டு நான் கிளம்பட்டுமா?" 

ராஜா, தன் அருகே இருந்த அழகரிடம் இது பற்றி கேட்டான்.

அழகர், ராஜாவிடம் " மாப்பிள்ளை கோவிலில் தாலி கட்ட மட்டும்தான் அனுமதி. நாம் சன்னிதிக்கு போய் ஒரு அர்ச்சனை செய்துவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான். அவரை கல்யாண மேடை எதிரில் முதல் வரிசையில் உட்காரச் சொல்லுங்க. அர்ச்சனை முடித்துவிட்டு நாம கிளம்பலாம்." 

ராஜா, ராமசாமியிடம் அந்த தகவலை சொன்னான்.

ராமசாமி " சரி தம்பி. நாங்க அங்கே போயி விருந்து சாப்பிட்டுவிட்டு தயாராக இருக்கோம். நீங்க வந்ததும் பரிசைக் கொடுத்துவிட்டு வாழ்த்திப் பேசிட்டு கிளம்பறேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார். 

கோவிலில் மூலவர் சந்நிதிக்குச் சென்று, தம்பதியர் அர்ச்சனை செய்து முடித்துவிட்டு, கல்யாண மண்டபம் நோக்கிக் கிளம்பினர் இரு குடும்பத்தவர்களும். 

கோவிலுக்கு வெளியே வந்ததும், புகைப்பட / வீடியோ குழுக்கள், தாங்கள் விரும்பிய வகையில், ஃபோட்டோ ஷூட் படங்கள் எடுத்தனர். 

அழகர் அவர்களிடம், 'ஃபோட்டோ ஷூட் என்ற பெயரில் தாறுமாறாக படங்கள் எடுக்கக் கூடாது' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். 

பிறகு, கோவில் கல்யாண கோஷ்டி, கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தனர். 

மந்திரி ராமசாமி வருவதைப் பற்றி அழகர் முன்பே சமையல் காண்டிராக்டரிடம் சொல்லியிருந்தார். 

ராமசாமி கல்யாண மண்டபம் வந்ததும் அவரையும் உடன் வந்தவர்களையும் வரவேற்று அவர்களை டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்று சிறப்பாக தனிப்பட்ட கவனம் செலுத்தி விருந்து படைத்தனர் கேட்டரிங் குழுவினர். 

அவர்கள் விருந்து சாப்பிட்டுவிட்டு, கீழே கல்யாண அரங்குக்கு வந்து சேர்ந்தனர். 

சாந்தி ராஜா குடும்பத்தினர் கோவிலிலிருந்து திரும்ப வந்து கல்யாண மேடையில் இருந்தனர். 

மேடையில் ராமசாமி வாழ்த்திப் பேசுவதற்கு ஒரு மைக் தயாராக இருந்தது.

ராமசாமியின் கார் டிரைவர் காரிலிருந்து ஒரு பெரிய பரிசுப் பெட்டியைக் கொண்டு வந்து கல்யாண மேடையில் வைத்தார். பிறகு அவரே அந்த பரிசுப் பெட்டியைப் பிரித்து உள்ளே இருந்த நாலடி உயரம் உள்ள ஒரு ஜோடி வெள்ளிக் குத்துவிளக்குகளை வெளியே எடுத்து நிறுத்தி வைத்தார். 

கூட்டத்தில் இருந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள். 

அந்த ஒரு ஜோடி வெள்ளிக் குத்துவிளக்குகளில் எண்ணெய் ஊற்றி, திரியிட்டார் டிரைவர். ராமசாமி குத்துவிளக்குகளின் எல்லா முகங்களையும் பொறுமையாக ஏற்றினார். 

மைக் அருகே சென்ற ராமசாமி, " இன்று வாழ்க்கையில் இணைகின்ற இந்த இளம் ஜோடிக்கு இந்த ஜோடி விளக்குகளை என்னுடைய அன்புப் பரிசாக அளிக்கின்றேன். இந்த இணை பிரியாத ஜோடி விளக்குகள் போல இவர்களும் வாழ்கை முழுவதும் இணை பிரியாமல் ஒளி வீச வேண்டும் என்று வாழ்த்துகிறேன்." என்றார். 

கூட்டத்தினர் மகிழ்ச்சியுடன் மெலிதாக கை தட்டினர்.

" தம்பி ராஜாவை அவருடைய பள்ளிக்கூட நாட்களிலிருந்தே எனக்குத் தெரியும். தேர்தல் சமயத்தில் இந்த இருவரும் என்னுடைய வெற்றிக்காக மிகவும் பாடுபட்டார்கள். இந்த நல்ல நாளில் தம்பி ராஜாவுக்கு மேலும் ஒரு பரிசு கொடுக்கப் போகிறேன். வருகின்ற ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ராஜாவை என்னுடைய உதவியாளர்களில் ஒருவராக நியமிக்கின்றேன். இதோ அதற்கான அரசாங்க கடிதம்" என்று சொல்லி ஒரு உறையை ராஜாவிடம் கொடுத்தார் ராமசாமி. 

ராஜாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒன்றும் சொல்லாமல் அவர் கொடுத்த உறையைக் கையில் வாங்கி, சாந்தியிடம் கொடுத்தான் அவன்.

" நண்பர்களே! அவசர வேலையாக நான் சென்னை திரும்பச் செல்ல வேண்டியுள்ளதால் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்" என்று சொல்லி, ராஜாவுடன் கைக்குலுக்கி மற்றவர்களைப் பார்த்து வணக்கம் செய்து கிளம்பிச் சென்றார் ராமசாமி.

**. **

ராமசாமி தன் பரிவாரங்களுடன் கிளம்பிச் சென்றதும், ராஜாவின் அருகே சென்ற அழகர், " மாப்பிள்ளை - என்ன இது இப்படி திடீரென ஓர் அறிவிப்பை செய்துவிட்டார் அவர்? மாப்பிள்ளை - இது எல்லாம் வேண்டாம். சென்னை சென்றதும், அவரைப் பார்த்து இந்த வேலை வேண்டாம் என்று சொல்லிவிடுங்க" என்றார். 

ராஜா அவரிடம் " மாமா - அவர் எனக்கு பி ஏ வேலை கொடுக்கின்றேன் என்று முன்பு சொன்னபோதே அவரிடம் நான் கல்யாணத்துக்குப் பிறகு, சாந்தியுடன் ஆலோசித்து என் முடிவை சொல்வதாக சொல்லியிருந்தேன். ஆனால் அவர் ஏனோ அவசரப்பட்டு திடீரென இப்படி ஒரு அறிவிப்பை செய்துவிட்டார். எப்படியும் இன்னும் ஒன்றரை மாதம் அவகாசம் உள்ளது. அதற்குள் நானும் சாந்தியும் நன்கு ஆலோசித்து ஒரு முடிவெடுக்கிறோம். நீங்கள் கவலைப் படும்படி எதுவும் நேராமல் பார்த்துககொள்கிறோம்" என்றான். 

(ஒரே ஒரு ஊரிலே - பாகம் 1 முற்றும்) 

= = = = = = = = = = 

பாகம் 1 பின்னுரை. 

வலைப்பதிவில் தொடர்கதை என்பது ஒரு விஷப் பரிட்சை. இதை எ பி ஆசிரியர்கள் குழுவினர் திரும்பத் திரும்ப எல்லா மொழிகளிலும் என்னிடம் கூறினார்கள். வலையில் பொறுமையாக தொடர்கதை படிப்பவர்கள் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்று அவர்கள் கூறினார்கள்.  இருப்பினும் ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று சொல்லி ஆரம்பித்தேன். 

இந்தப் பகுதிக்குப் பிறகு, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு, வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிந்தால் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று எனக்கு ஒரு தீர்வு கிடைக்கும். 

1) கதையின் பாகம் 2 தொடரலாமா - வேண்டாமா?

2) கதை இதோடு நிறுத்திவிடலாம் என்று பெரும்பான்மையான வாசகர்கள் நினைத்தால், 

இதோ பாகம் 2 : 

சென்னை சென்றதும், ராஜாவும் சாந்தியும் ராமசாமியின் அலுவலகத்திற்குச் சென்றுனர். ராஜா குடும்பச் சூழல்கள் காரணமாக பி ஏ வேலையை ஏற்றுக்கொள்ள இயலாத நிலை என்று கூறி அப்பாய்ண்ட்மென்ட் கடிதத்தைத் திருப்பிக் கொடுத்தான். ஆனால் தேவைப் படும் நேரங்களில் ராமசாமிக்கு பொதுக்கூட்டங்களுக்கு பேச வேண்டிய உரைகள் போன்ற சில உதவிகள் நட்பின் அடிப்படையில் செய்வதாக உறுதி அளித்தான். 

" அவர்கள் இருவரும் அதற்குப் பின் சந்தோஷமாக நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள்" 

3) கதையை, நான் விரும்பிய வகையில் தொடரலாம் என்று நீங்கள் அனுமதி அளித்தால், இரண்டாம் பாகம் சில வாரங்களுக்குப் பிறகு தொடரும். 

முடிவு உங்கள் கையில் .. 

அன்புடன் 

'ஸ்கை' 

🙏🙏

= = = = = = = = =


19 கருத்துகள்:

  1. இன்றைய கதை விறுவிறுப்பாகச் சென்றது.

    இராமசாமி லேட்டாக வந்து முகூர்த்தம் தவறிவிடுமா? அரசியல்வாதிக்கு ஆயிரம் வேலையல்லவா என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
  2. பத்திரிகை தொடர்கதையோ இல்லை பிளாக் தொடர்கதையோ... அந்த அந்த வாரப்பகுதிகள் அப்போது எழுதினால், தொடரை மீண்டும் படிக்கும்போது பல பகுதிகள் நெருடும், சில வாரங்களில் தேவையில்லாமல் சஸ்பென்ஸ் திணித்து முடித்திருக்கிறார் என்று தோன்றும்.

    ஓவியரும் சொதப்பிவிடுவார்கள் என்பதால், கிழவியோ குமரியோ இல்லை பெண்ணோ... அனைவரையும் ஒரே முகத்துடன் வரையும் ஓவியரை புக் செய்துவிடுவார்கள்.

    இந்தத் தொடரை மீண்டும் முழுமையாகப் படிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. மீண்டும் படித்து உங்கள் கருத்துகளை விளக்கமாக இங்கே பதியவும்.

      நீக்கு
  3. இரண்டாம் பாகத்தில், அரசியல் + அதைச் சார்ந்த மற்ற பாதிப்புகள் கதையில் இடம் பெறும். //

    ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊக்கம் அளிக்கும் பின்னூட்டத்திற்கு ஸ்கை சார்பில் நன்றி.

      நீக்கு
  4. ///ஃபோட்டோ ஷூட் என்ற பெயரில் தாறுமாறாக படங்கள் எடுக்கக் கூடாது///

    முத்தான வரிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரசிப்புக்கு நன்றி. ஸ்கை சந்தோஷப்படுவார்.

      நீக்கு
  5. " அவர்கள் இருவரும் அதற்குப் பின் சந்தோஷமாக நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள்.. "

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடித்துவிடலாம் என்று சொல்கிறார் போலிருக்கு!

      நீக்கு
  6. மந்திரி ராமசாமி வருவதைப் பற்றி அழகர் முன்பே சமையல் காண்டிராக்டரிடம் சொல்லியிருந்தார். //

    ஓ ராமசாமி மந்திரியாகிட்டார் இல்லையா?

    பாருங்க ஸ்கையின் பின்னுரையை வாசிக்கும் முன்னரே என் முதல் கருத்தில் அவர் கேட்டதற்கான பதில் கொடுத்துவிட்டேன்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. சென்னை சென்றதும், ராஜாவும் சாந்தியும் ராமசாமியின் அலுவலகத்திற்குச் சென்றுனர். ராஜா குடும்பச் சூழல்கள் காரணமாக பி ஏ வேலையை ஏற்றுக்கொள்ள இயலாத நிலை என்று கூறி அப்பாய்ண்ட்மென்ட் கடிதத்தைத் திருப்பிக் கொடுத்தான். ஆனால் தேவைப் படும் நேரங்களில் ராமசாமிக்கு பொதுக்கூட்டங்களுக்கு பேச வேண்டிய உரைகள் போன்ற சில உதவிகள் நட்பின் அடிப்படையில் செய்வதாக உறுதி அளித்தான்.

    " அவர்கள் இருவரும் அதற்குப் பின் சந்தோஷமாக நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள்" //

    என்ன இது? இதுதான் பாகம் 2? ம்.....

    ஓ அப்ப ஸ்கை தான் நினைத்தபடி தொடர்ந்தால் ராஜா ராமசாமியின் பி ஏ வாக என்னெல்லாம் கஷ்டங்கள் சந்த்திக்கிறான் என்று தொடர் வந்து பின்னர் ஒரு வழியா சுபம் போடுவார் போலும் ஸ்கை!

    இப்படி வந்தால் சுவாரசியமாக இருக்கும் என்று தோன்றுகிறது இல்லைனா கதையில் எதுவுமே இல்லாதது போல இருக்கிறது அதாவது முதல் பாகம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம். பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய பகுதி கதை சுபமாக நிறைவடைந்துள்ளது. மனதிற்கு நிறைவாக உள்ளது. ஆனால், 2 ம் பாகத்தில், ராஜா ஏற்றுக் கொள்ளும் அரசாங்க வேலை காரணமாக பல இன்னல்களை அவர்கள் சந்தித்து, இறுதியில் சுபமாக முடியுமா என்ற நம்பிக்கையோடு தொடருமா? என்ற கதைப் போக்கும் நம் மனதை கவருமா என்ற எண்ணம் வருகிறது. சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் தன் கருத்தில் சொல்வது போல கதையில் எதுவுமே இல்லைங்கிற மாதிரி இருக்கிறது என்ற எண்ணமும் வருகிறது. இந்த இரண்டு மன போராட்டத்தில் இந்த முதல் பகுதியை எங்களிடம் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் ஸ்கை.

    முன்பு ஒரு திரைப்படம் தொலைக்காட்சியில் பார்த்த நினைவு வருகிறது. அது என்ன திரைப்படமென்று (தலைப்பு) நினைவில் இல்லை. நினைவில் வந்தால் பிறகு சொல்கிறேன். (சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் படத்தின் பெயரை கண்டு பிடித்து விடுவார் என நினைக்கிறேன்.) அதில் கதாநாயகன் ஒரு தொண்டனாக அரசியலால் ஈர்க்கப்பட்டு அதன் பின் அவன் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை காட்சிபடுத்தியிருப்பார்கள்.

    இப்போதைக்கு முதல் பாகம் நன்றாக உள்ளது. "ஸ்கை"க்கு மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். இனியாவது" ஸ்கை" தன்னை யாரென்று வெளிப்படுத்துவாரா ? இல்லை 2ம் பாகமும் முடிந்த பின்னர்தானா ? அனைத்திற்கும் காத்திருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!