20.9.25

புற்றுநோய்க்கு தடுப்பூசி மற்றும் நான் படிச்ச கதை

 புற்றுநோய்க்கு தடுப்பூசி ரஷ்யா சாதனை

மாஸ்கோ : புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டு பிடித்துள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  உலகில் லட்சக்கணக்கான பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 100 சதவீத செயல் திறனை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ரஷ்யா கண்டறிந்துள்ள இந்த தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ., வகையைச் சேர்ந்தது. 'என்ட்ரோமிக்ஸ்' என்ற இந்த தடுப்பூசி புற்றுநோய் கட்டிகளை வெற்றிகரமாக அழித்ததாகவும், ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், இந்த தடுப்பூசி பொதுப் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  இந்த தடுப்பூசி ஏற்கனவே ரஷ்யாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புற்றுநோயியல் மையங்களில் ஆரம்பகட்ட மருத்துவப் பயன்பாட்டில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட அதே எம்.ஆர்.என்.ஏ., நுட்பமே இந்த தடுப்பூசிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட அடுத்த தலைமுறை நோயெதிர்ப்பு சிகிச்சையாக இது இருக்கும் எனவும், கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சையைப் போல அல்லாமல் ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தாமல், புற்றுநோய் செல்களை துல்லியமாக குறிவைத்து அழிக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சோதனைகளின் போது கடுமையான பக்கவிளைவுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

=============================================================================================

எலும்பு முறிவுக்கு மூன்றே நிமிடத்தில் தீர்வு: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு



பீஜிங்: உடைந்த எலும்புகளை சரிசெய்ய, 'போன் க்ளூ' எனும் புதிய 'எலும்பு பசை'யை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, எலும்பு முறிவுகளை மிக விரைவாக அதாவது மூன்று நிமிடங்களுக்குள் குணப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.  நம் அண்டை நாடான சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லின் சியான்பெங் தலைமையிலான ஆராய்ச்சியாளர்களால், உடைந்த எலும்புகளை சரிசெய்வதற்கான புதிய எலும்பு பசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'போன் - 2' என பெயரிடப்பட்டுள்ளது.  இதன் மூலம், உடைந்த எலும்புத் துண்டுகளை இரண்டில் இருந்து மூன்று நிமிடங்களில் ஒட்ட வைக்க முடியும் எனவும், இதனால், சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கான நேரம் கணிசமாக குறையும் எனவும் கூறப்படுகிறது. தற்போது பயன்படுத்தப்படும் உலோக உள் வைப்புகளுக்கு பதிலாக இது ஒரு புரட்சிகரமான மாற்றாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது-.  மேலும், எலும்பு குணமாகும் போது, இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்பட்டு விடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனால், உலோக தகடுகள் மற்றும் ஆணிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையில், அவற்றை அகற்ற இரண்டாவதாக செய்யப்படும் அறுவை சிகிச்சை தேவையிருக்காது.  ஆய்வக சோதனைகளில், இந்த பசை மிகவும் வலுவானது என்பது தெரியவந்துள்ளது. இந்த பசையை இதுவரை 150க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் சோதிக்கப்பட்டதில், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் இரண்டிலும் நல்ல முடிவுகளை கொடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்த போன் - 2 பசை பரவலாக பயன்பாட்டுக்கு வர மேலும் சில சோதனைகள் தேவைப்பட்டாலும், இதன் கண்டுபிடிப்பாளர்கள், சீனா மற்றும் சர்வதேச காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

எவ்வளவு வேகமான நீரோட்டம் இருந்தாலும், தண்ணீருக்கு அடியிலும், கடினமாக பரப்பிலும் சிப்பிகள் உறுதியாக ஒட்டிக்கொள்ளும் விதமே, இப்பசை கண்டுபிடிப்புக்கான உத்வேகமாக அமைந்தது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


சென்னை ! பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத ஜன நெரிசல் மிகுந்த பெருநகரம் ...
இங்கு எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, உழைப்பின் வழியே கண்ணியம் கண்டு, வானுலகை வென்று நிற்கும் அசாத்திய பெண்மணி இவர். மயிலாப்பூர் சாந்தோம் பீச் கான்வென்டில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவர் ! சென்னை ராஜா அண்ணாமலைபுரத்து வீதிகளில் அன்றாடம் காணும் பவானி பாட்டி எனும் 78 வயது மூதாட்டி நம்மை ஆச்சரியத்தில் அசத்துகிறார் !! தினமும் 6 மணி நேரம் நடந்தே சென்று அனைவரிடமும் பொறி உருண்டை - முறுக்கு போன்ற நொறுக்கு தின்பண்டங்களை விற்று வருபவர். "மூலையில் படுத்து, முடங்கி சாவதை விட ... உழைத்து, துருப்பிடித்து சாவதே மேல்..." என்கிறார் இந்த நம்பிக்கை நட்சத்திர பாட்டி ! தெருவெங்கும் தனது வடிக்கையாளர்களிடம் ஆங்கிலம், ஹிந்தி ,கன்னடம் மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் அசராமல் பேசி வியாபாரம் செய்கிறார் !! வாழ்வதற்கு வழி அறியா கணவன் இரு சிறு குழந்தைகளையும் பவானி பாட்டியை விட்டு விலகினாலும், தன்னம்பிக்கையோடு இரண்டு பிள்ளைகளை வளர்த்து இன்றும் சிறப்பாக வாழ முடியும் என்பதற்கு இவர் ஒரு முன் மாதிரி . உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் உகந்தது இந்த நடைப்பயிற்சி என்பதால் மனநிறைவோடு வீதிகளில் அயராமல் நடந்து நொறுக்குத்தீனி விற்கிறார் இவர். வாழ்க்கையில் வாழ்வதற்கு துணிவின்றி சோர்ந்து விழுந்த இளம் வயது பெண்களை தட்டி எழுப்புகிறது 79 வயது நிரம்பிய வயதான இந்த பெண்மணியின் ஆங்கிலமும் தமிழும் கலந்த கணீர் குரல். கடவுள் கொடுத்த வாழ்க்கையில் என்ன அமைத்திருக்கிறானோ அந்த வாழ்க்கையை‌ ஏற்று மன அமைதியோடு வாழ்ந்து கர்மாவை நிறைவு செய்யுங்கள்.. என மிகவும் தெளிவோடு துணிவோடு பேசும் இவரது குரல் நிச்சயம் அனைத்து இடங்களிலும் ஒலிக்கட்டும். மக்கள் நலனில் பல நல்ல மாற்றங்கள் நிகழட்டும் ! உடலாலும் உள்ளத்தாலும் துவண்டு போனோர் பலரை கண்ணெதிரே நாம் பார்க்கையில், கடவுள் கொடுத்த இந்த மகத்தான வாழ்க்கையை ஏன் உழைப்பின் பயனுள்ள வாழ்க்கையாக மாற்ற முடியாது ! நிச்சயமாக முடியும் என்ற உத்வேகம் வருகிறது இந்த எழுபதாட்டையரின் (septuagenarian) காணொளியை காணும் பொழுது .... இந்த பெண்மணியை போல, எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து நேர்மறையான எண்ணங்கள் வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை என்றும் இனிதாகி பயனுள்ள வாழ்க்கையாக வாழ நிச்சயமாக முடியும். நேர்மறையான எண்ணங்கள் என்றால் என்ன ! என்பதற்கு விளக்கம் கொடுத்தால் இந்த பதிவு இனிதாக அமையும் அல்லவா ! எனக்கு தெரிந்த கருத்துக்களை உங்களுக்கு முன்மொழிகின்றேன்.. நல்லதே நடக்கும் ... நல்லதே நடக்கும் ,,, நன்மையே பயக்கும் ... அகங்காரம் மறையும் ... ஆணவம் தொலையும் ... அகம் மலரும் ... மனம் உவக்கும்... தானம் பெருகும் ... அன்னதானம் பெருகும் ... கைகள் சிவக்கும் ... பாவம் தொலைந்து புண்ணியம் கூடும் ... சிந்தை தெளிந்து நற்பயன் விளையும் ... நினைத்தது கைகூடும் ... நீங்காத புகழ் நிறையும் ... செல்வம் பெருகும் ... உடல் பிணி அகலும் ... உள்ளம் மகிழும் ...வாழ்ந்த பயன் அனைத்தும் பெற்று முக்தி கிடைக்கும் .. இறைவனின் அருளோடு ...
எனும் நினைவுதனை அகத்தில் இருத்தி வாழ்ந்து பாருங்கள். நீங்களும், நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா
=====================================================================================

 

நான் படிச்ச கதை

முள்

கதையாசிரியர்: சாரு நிவேதிதா


www.charuonline.com (தமிழ் வலைத்தளம்), | charunivedita.com (ஆங்கில வலைத்தளம்)

சாரு நிவேதிதாவின் இயற்பெயர் அறிவழகன். அரசுவேலையில் இருந்தமையால் சாரு நிவேதிதா என்று பெயர் சூட்டிக்கொண்டார். சாரு என்பது சாரு மஜூம்தாரின் முதல் பாதி.

முன்னுரை.

ர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர் சாரு. இவரது படைப்புகள் பின் நவீனத்துவ இதழியல் என்று வகைப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான கதைகள் முடிவை தெளிவாகக் கூறாமல் வாசகர்களின் ஊகத்திற்கு விட்டு விடும். சமுதாயத்தின் மறுபக்கத்தையும் தயங்காமல் வெளிச்சம் போட்டுக் காட்டுபவர் சாரு.

தன்னைத்தானே விமரிசித்துக்கொள்ளவும் தயங்காதவர்.  

முள் என்ற இச்சிறுகதை கணையாழியில் வெளியான ஒன்று. 100 சிறந்த கதைகளில் ஒன்றாக எஸ் ரா வால் தேர்ந்தெடுக்கப்பட்டது. தொண்டையில் சிக்கிய முள் என்பது உருவகம். வெளியில் வர முடியாமல் இருக்கிறது, சரி உள்ளே விழுங்கலாமா என்றால் அதுவும் முடியவில்லை, துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் உறுத்திக் கொண்டே இருக்கிறது.  கதை இளமையில் ஏற்படும் விசித்திரமான ஆர்வங்களில் ஒன்றான ப்ரேமம் அல்லது பிரேமை என்ற காந்தக்காதல் பற்றியது. (காதல் என்பதற்கு கண்ணில்லை என்றாலும் அதில் காமம் பொதிந்திருக்கும். Love என்ற ஆங்கில வார்த்தை பல அர்த்தங்களை தோற்றுவிக்கும்). Infatuation என்றும் சொல்ல முடியாது. அது ஒரு electro-magnetic force என்று கொள்ளலாம்....   அதாவது பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் என்ற திரைப் படத்தில் கமலுக்கும் ஸ்ரீவித்யாவிற்கும் இடையில் ஒரு காந்தப்புலம் தோன்றுமே அது போன்ற காதலே இக்கதையும். 

தொண்டையில் சிக்கும் முள் தவறு செய்யாமல் இருக்க முன்னெச்சரிக்கை செய்து உறுத்திக்கொண்டே இருக்கிறது. முடிவு? பிரிவு? 

கதை 1979 ல் வெளியான ஒன்று என்பதையும் அறிந்து கதையை வாசிக்க கோருகிறேன்.  

கதை எடிட் செய்யப்பட்டு சுருக்கம் மட்டுமே தரப்பட்டுள்ளது, கதை என்பதை காட்டிலும் நிகழ்ச்சி தொகுப்பு என்று கூறலாம். கதையின் சுட்டி

முள்

https://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_04.html

தின/வார இதழ்: கணையாழி

சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)

 முள்

 

இன்றோடு பதினஞ்சு நாளைக்கு மேல் இருக்கும் தொண்டையில் இந்த முள் சிக்கி. மீன் சாப்பிட்ட போதுதான் சிக்கியிருக்க வேண்டும். இதுக்குத்தான் நான் ருசியா இருக்கிற மீனாயிருந்தாலும் முள் மீனாக இருந்தால் தொடுவதேயில்லை. சில மீன்களில் நடுமுள் மட்டும் இருக்கும். கோழிச் சிறகுமாதிரி. சில மீன்களில் சதைக்கு உள்ளேயெல்லாம் ஒரே முள்ளாயிருக்கும். கார்த்திகை வாளை, முள்ளு வாளை எல்லாம் இந்த வகையறாதான். ஆனால் இந்த இரண்டு ரகத்திலும் சேராத ஒரு மீன்கோலா மீன். இதுக்கும் நடுமுள் உண்டு. அதோடு பாதி பாகம் சதையோடு முள் கலந்தும், பாதி வெறும் சதையாகவும் இருக்கும்.

அத்தையும், மாமாவும் வந்து இன்னையோட பதினஞ்சு நாளா ஆவுது…? பதினஞ்சு நிமிஷமா ஓடிப்போச்சு.. எனக்கு இந்த முள் தொண்டையிலெ சிக்கியதே இவர்கள் வந்த அன்றைக்குத்தான்.. மாமா வந்ததுமே நைனா மார்க்கெட் கிளம்பிட்டாங்கமீன் இல்லாவிட்டால் சாப்பாட்டையே தொடமாட்டார் மாமாஅதுவும் கோலா மீன் என்றால் அவருக்கு உயிர்

அவரோடு அன்று சாப்பிட்டபோது சிக்கியதுதான்அதுக்குப் பிறகு மீனையே தொடவில்லை நான்இந்த முள்ளை நினைத்தால் மீன் ஆசையே விட்டுப்போய்விடுகிறதுஎன் அத்தை மீனெல்லாம் சாப்பிடுவதில்லைஎப்பவாவது எங்கள் கட்டாயத்துக்காக சாப்பிடும்போதெல்லாம் சாப்பிட்ட பிறகு வாந்திஎடுக்கவும் தவறுவதில்லைமாமாவுக்கு எதிர் என் அத்தைபடிப்பது என்றால் அத்தைக்குக் கொள்ளை ஆசைசமையல் முடிந்து விட்டால் கையில் புத்தகம் தான்…. மாமாவோ ஏதாவது படிக்கிறார் என்றால் அது வாரா வாரம் ராசிபலன் மட்டுமாகத்தான் இருக்கும்!

எழுதுவதிலும் அப்படித்தான்அத்தை எனக்கு எழுதின எல்லா கடிதங்களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். கவித்துவ மிக்க அந்தக் கடிதங்களை எத்தனை முறை படித்திருக்கிறேன் தெரியுமா…! மாமாவோ தன் பேனாவைத் திறப்பது கையெழுத்துப் போட அல்லது தன் அம்மாவுக்குக் கடிதம் எழுத இந்த இரண்டுக்கும் மட்டும்தான். (தேவரீர் அம்மாவுக்கு உங்கள் மகன் எழுதிக்கொள்வது. க்ஷேமம், க்ஷேமத்திற்கு பதில். நான் வரும் பத்தாந்தேதி அங்கு வருகிறேன். வேறு ஒன்றும் விசேஷம் இல்லை. இப்படிக்கு…) ஆரம்பத்தில் தன் அம்மாவுக்குக்கூட அத்தையின் மூலம்தான் எழுதிக்கொண்டிருந்தாராம். ஆனால் அவர் அம்மாவிடமிருந்து எனக்கு நேரடியாக ஒரு லெட்டர் எழுதக்கூட உனக்கு நேரம் இல்லையா? இனிமேல் உன் பெண்டாட்டியை விட்டு எழுதாதேஇஷ்டமிருந்தால் நீயே உன் கைப்பட எழுதுஎன்று பாட்டுவாங்கிய பிறகுதான் அந்தக் கடிதம் கூட அவர் எழுதுகிறார். இதுக்குப் பிறகு மாமா எழுதச் சொன்னாலும் அத்தை எழுதுவதில்லை. இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.

டேய் ராஜாநான் வெளியே போறேன்.. வர்றீயா…?”

மாமாவின் பிசிறான குரல் கேட்டு என் சிந்தனை அறுந்தது. அப்போது அங்கு வந்த என் அத்தை என்னை முந்திக் கொண்டு சொன்னார்கள்.

ராஜாவுக்கு உடம்பு சரியில்லைஅது வராது

சரி சரிநீயே அவனைப் பூட்டி வச்சுக்க…”

-மாமா கோபத்துடன் சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.

மாமாவுக்கு சாயங்காலம் ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை வெளியே போய் ஊர் சுற்றாவிட்டால் தலையே வெடித்துவிடும்பாவம்அத்தைவீட்டில் தனியாவே இருந்திருந்து எப்படித்தான் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறதோ…?

அத்தையின் பேச்சில் இப்போதெல்லாம் ஒன்றைக் கவனித்தேன். கொஞ்ச நாளாக அத்தை என்னிடம் டாபோட்டுப் பேசுவதில்லை. பத்து வருஷ வித்யாஸம் பெரிசு இல்லையா? ஆனால் இப்படிப் பேசுவதுதான் எனக்குப் பிடிக்குது..

நெற்றியில் ஒரு மென்மையான ஸ்பரிஸத்தை உணர்ந்து நிமிர்ந்து பார்க்கிறேன்….

அத்தை

ராஜாநெத்தியெல்லாம் ரொம்ப சுடுதே..” என்று சொல்லிக்கொண்டே படுத்திருந்த என் பக்கத்தில் அமர்ந்து என் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார்கள். நெற்றி சுடுவதென்ன…? இந்தத் திண்ணை இருட்டில் இப்படிக் கிடைத்த அத்தையின் இந்த அண்மைக்காக அப்படியே நான் எரிந்து போவதற்கும் தயார்….

வெகுநேரம் இருவரும் பேசவே இல்லை.

திடீரென்று அத்தை கேட்டார்கள்.

தொண்டையிலே முள் சிக்கிட்டுன்னியே..  போய்டுச்சா..?”

ம்ஹூம்.. இல்லெ…”

அப்படின்னா நான் சொல்ற மாதிரி செய்சாப்பிடும்போது சூடான வெறும் சாதத்தை ஒரு பெரிய உருண்டையா உருட்டி வாயில் போட்டு விழுங்கு. போய்டும்…”

இதுக்கு நான் பதில் சொல்லவில்லைஎன் கையைப் பிடித்துக் கொண்டிருக்கிற அத்தையின் கைகளை அப்படியே எடுத்து ஒரு முத்தம் கொடுத்தால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்ஆனால்?

இதைச் செய்ய என்னைத் தடுப்பது எது?

‘Love has no taboos’ என்று படித்திருக்கிறேன். ஆனால் அத்தையின் மேல் நான் கொண்டுள்ளது காதலா…? காதல்.. சே.. தொடர்கதைகள்ளேயும், சினிமாவிலேயும் இந்த வார்த்தையைப் போட்டு ரொம்ப அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

Is it sex-love…?

நோஅப்படி என்னால் நினைக்க முடியவில்லை. இது ஒரு tender devotion…. ஆனா இதன் எல்லை எதுவாக இருக்கும்….?

அனாவசியமாக மனசைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறேன்அத்தையின் மேல் எனக்குள்ள ப்ரேமை இன்று நேற்று ஏற்பட்டதா என்ன?

அப்போது ஆறு வயசிருக்கும்அத்தை அடிக்கடி என்னிடம் ராஜா.. நீ யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போற…?” என்று கேட்பார்கள். நான் ஒவ்வொரு முறையும் உங்களைத்தான்உங்களைத்தான்என்று சொல்வேன்.

கொஞ்சங்கூட மறக்கவில்லை.

அத்தைஉங்களைத்தான் நான் கட்டிக்குவேன். ஆனா நான் உங்களைக் கட்டிக்கிறப்போ உங்க கை தோலெல்லாம் அவ்வாவுக்கு இருக்கிற மாதிரி கொழ கொழன்னு சுருங்கி இருக்கக்கூடாதுஇப்ப இருக்கிற மாதிரியே இருக்கணும்என்று சொல்லி அத்தையின் கைச்சதையைத் தொட்டுக் காண்பிப்பேன்

உடனே அத்தை சிரித்துக்கொண்டே என் அம்மாவிடம் “பார்த்தீங்களா … ராஜா சொல்றதெ” என்று ஆரம்பித்து நான் சொன்னதையெல்லாம் சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள்.

இப்போது மீண்டும் அதை நினைத்துப் பார்க்கிறேன்.. ஆனால் இப்போதெல்லாம் அத்தை ஏன் அந்தக் கேள்வியைக் கேட்பதே இல்லை…?

’ராஜா நீ யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போற…?’

அப்படியே அத்தை கேட்டாலும் முன்பு சொன்னது போல் என்னால் பதில் சொல்ல முடியுமா?

’அத்தை… உங்களைத்தான் நான் கட்டிக்குவேன்… ஏன்னா உங்கள் கை பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி இருந்த மாதிரி இல்லன்னாலும் உங்க மனசு அப்படியேதான் இருக்கு…’

திடீரென்று தெரு நாய்களின் காதைக் கிழிக்கிற சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தது. அட எப்படி இங்கே வந்து படுத்திருக்கிறேன்…? கடைசியில் அத்தையோடு பேசிக் கொண்டிருந்தது நினைவிருக்கு… அப்புறம் தூக்கக் கலக்கத்தில் இங்கே வந்து படுத்தது நினைவு இல்லை. இனிமேல் எப்படித் தூக்கம் வரும்? விடிகிற நேரம்… கொஞ்ச நேரம் புரண்டு கொண்டிருந்து விட்டு எழுந்தேன்…

பாத்ரூமுக்குப் போய் பேஸ்ட்டும், ப்ரஷ்ஷும் எடுத்துக்கொண்டு கொல்லைப் பக்கம் போனேன். ப்ரஷ் பண்ணிக்கொண்டிருக்கும் போதே முள் நெருடுவது தெரிகிறது… பல்லைத் துலக்கிவிட்டு கட்டை விரலால் நாக்கை வழித்தேன். சரி… இன்று எப்படியும் இந்த முள்ளை எடுத்துவிட வேண்டும்… கட்டை விரலையும், சுட்டு விரலையும் மாற்றி மாற்றித் தொண்டைக்குள் விட்டுக் குடைந்தேன்… ஏகமாய் வாந்தி வந்ததுதான் மிச்சம்.

முள் அப்படியேத்தான் இருந்தது….

இதுக்கு முன்னால் கூட மீன் சாப்பிட்டபோது முள் சிக்கியிருக்கிறது… ஆனால் இந்த மாதிரி பதினஞ்சு நாள் இருபது நாளென்று உயிரை வாங்கியதில்லை.

டிஃபனை முடித்துவிட்டு அத்தையுடன் பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். தம்பி வந்து சொன்னான், யாரோ கூப்பிடுவதாக. வெளியே வந்து பார்த்தால்…. பேபி.

“என்னடா இது அதிசயமா இருக்கு.. பதினொரு மணி வரைக்கும் மார்க்கெட்லெயில்ல சுத்திக்கிட்டு இருப்ப…”

”இன்னைக்கு நான் மார்க்கெட்டுக்குப் போகலெ.. சரி வா… கொஞ்சம் ஈச்சந்தோட்டம் வரைக்கும் போயிட்டு வரலாம்.”

“இதோ வர்றேன்… சித்த இரு” என்று அவனிடம் சொல்லிவிட்டு உள்ளே வந்தேன். அத்தையிடம் போய் “கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்திர்றேன் அத்தை…” என்றேன்.

“சீக்கிரமா வந்திடு ராஜா…”

-நான் இப்போது வெளியில் போவதை அத்தை விரும்பவே இல்லை. இருந்தாலும் பேபியின் முகத்தில் தெரிந்த அந்த சீரியஸ்னஸ்..

கிளம்பிவிட்டேன்.

பேசிக்கொண்டே ஈச்சந்தோட்டம் வந்தோம். பெயர்தான் ஈச்சந்தோட்டம். ஆனால் ஒரு ஈச்ச மரம் கூடக் கிடையாது.. எப்பவோ ஈச்சந்தோட்டமாக இருந்திருக்கலாம்.. இப்போது எஞ்சி நிற்பதென்னவோ பெயர் மட்டுந்தான்… பேசாமல் புளியந்தோப்பு என்று பெயரை மாற்றி விடலாம்… அவ்வளவு புளிய மரங்கள்…

ஒரு புளிய மரத்தடியில் அமர்ந்தோம்… ஒரு பெரிய வேரில் முதுகைச் சாய்த்து திண்டில் அமர்ந்திருக்கும் செட்டியார் மாதிரி உட்கார்ந்து கொண்டான் பேபி….

மெதுவாக விஷயத்தை ஆரம்பித்து பிறகு சரமாரியாகப் பொழிய ஆரம்பித்தான்

விஷயம் வேறொன்றுமில்லை.. இவன் அப்பாவுக்கு ஏகமான சொத்து இருக்கு… இருந்தாலும் மகன் தன்னை மாதிரி நிலத்தில் இறங்காமல் ஒரு டாக்டராகி விட வேண்டும் என்று தீவிரமான ஆசை. இவனோ பி.யூ.சி.யைத் தாண்டவில்லை. பயாலஜி, ஜூவாலஜி புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருதுங்கிறான். விவசாயத்தில்தான் ஈடுபாடு. இவன் M.B.B.S. போகாததால் ஜன்ம எதிரியாகப் பார்க்கிறார் தந்தை.. அப்புறம் சச்சரவுக்கு கேட்கணுமா… உணர்ச்சிவேகத்தில் என்னென்னவோ முடிவுகள் எடுத்துக்கிட்டு இருக்கான்…

“சரி வா, ரொம்ப தாகமா இருக்கு… அந்த வீட்லே போயி கொஞ்சம் தண்ணி குடிப்போம்.”

-பேச்சை மாற்றி அவனைக் கிளப்பினேன்.

தண்ணீரைக் குடித்துவிட்டு அங்கேயே தீப்பெட்டி வாங்கி சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான்… எனக்குத் தண்ணீரைக் குடித்ததும் முள் அதிகமாக நெருட ஆரம்பித்தது…

குமட்டியது.

இவனுக்கும் தெரியும். கோலா மீனைச் சாப்பிட்டு எனக்கு முள் சிக்கிக்கொண்டது. அதுதான் எந்நேரமும் புலம்பிக் கொண்டே இருக்கிறேனே…

“ராஜா.. இந்த முள் இவ்வளவு நாள் போகாம இருக்கிறதப் பாத்தா இது முள்ளு தானான்னே எனக்குச் சந்தேகமா இருக்கு. ஒரு வேளை முடி கிடி சாப்பாட்டில் கிடந்து சிக்கிக்கொண்டிருந்தால்….?”

எனக்கு முடி என்றதும் பயமாகி விட்டது… அதோடு விடாமல், “ஒரு வேளை ஒன்னோட ப்ரமையாவும் இருக்கலாம்” என்றான்.

எனக்கு எரிச்சல் வந்துவிட்டது.

“அப்படின்னா… உன் அப்பாவோட நான் நேத்து ராத்திரி சினிமா பார்த்தேனே.. அவர் எப்படி அந்த நேரத்துலெ உன்னோட சண்டை போட்டிருக்க முடியும்… ஏதாவது கனவு கினவு கண்டிருப்பெ…”

”எனக்குக் கோபம் வரல்லெ…”

என் எரிச்சல் இன்னும் அதிகமாகியது.

“என்ன ராஜா.. இவ்வளவு நேரம்? இனிமே நீ வெளியே போகக் கூடாது நாளைக்கு நாங்க ஊருக்குப் போற வரைக்கும் வீட்லயேதான் இருக்கணும்…”

வீட்டில் நுழைவதற்குள் அத்தையின் ஆர்டர்

“இப்ப என்ன ஊருக்கு அவசரம்? இன்னும் அஞ்சாறு நாள் கழிச்சுக் கிளம்பறது…”

“நான் என்ன பண்றது ராஜா… உன் மாமாதானே…”

“ஆமா, நீங்களும்தான் ஊருக்குப் போகணும் போகணும்னு பறக்கறீங்க…”

-இதுக்கு அத்தை பதில் சொல்லவில்லை.

நான் போய் கொல்லைக் கிணற்றில் குளித்துவிட்டு, திண்ணைக்கு வந்தேன்… அத்தை இல்லை. அறையில் படுத்திருக்கலாம் என்று அறைக்கு வந்தேன். அங்கே….

டேபிளின்மீது தலையைக் கவிழ்த்துக்கொண்டு சின்னக் குழந்தை மாதிரி குலுங்கிக் குலுங்கி

“அத்தை… என்ன இது?”

தலையின் மீது கைவைத்து நிமிர்த்தினேன்.

“இப்ப உனக்குத் திருப்திதானே ராஜா… இவ்வளவுதான் நீ என்னத் தெரிஞ்சுக்கிட்டது…”

-எனக்கு என் மேலேயே வெறுப்பு ஏற்பட்டது. எவ்வளவு மென்மையான மனசைப் புண்படுத்தி இருக்கிறேன்.

தலையின் மீது வைத்த கையை நான் எடுக்கவே இல்லை.

இன்னும் சில நிமிஷங்கள்தான்… அப்புறம் வீடே வெறிச்சோடிக் கிடக்கும்…

இதோ புறப்பட்டு விட்டார்கள்… அத்தையும் மாமாவும்.. நானும் கிளம்பினேன், ஸ்டேஷன் வரைக்கும்….

ட்ரெய்ன் எட்டு மணிக்குத்தான் கிளம்பும்… ஒரு மணி நேரம் முன்னாலேயே வந்தாச்சு.. தம்பியும், மாமாவும் ஜன்னலோரத்தில் இடம் பிடித்துவிட்டார்கள்.

அத்தை என்னுடனேயே நின்று கொண்டிருக்கிறார்கள். “அடிக்கடி லெட்டர் எழுதுவியா…” என்று கேட்டுக்கொண்டே என் கைகளைப் பற்றிக் கொள்கிறார்கள்…

கண்ணீர்….

எனக்கு அப்படியே அத்தையைக் கட்டிக்கொண்டு கதற வேண்டும் போல் இருக்கு… ஆனால் கண்களில் ததும்பிய கண்ணீரைக்கூட கீழுதட்டைப் பற்களால் கடித்துக்கொண்டு அடக்கிக் கொள்கிறேன்…

எவ்வளவு நேரம் இப்படிப் போனதோ தெரியவில்லை. திடீரென்று அத்தை கண்களைத் துடைத்துக்கொண்டு உள்ளே போய் தம்பி உட்கார்ந்திருந்த இடத்தில் அமர்ந்தார்கள். தம்பி கீழே இறங்கினான்….

நான் ஜன்னலருகில் போய் அத்தையின் கையைப் பிடித்துக்கொண்டேன்.

‘இந்தக் கைக்கு இப்படியே ஒரு முத்தம் கொடுத்தால் என்ன…?’

ட்ரெய்ன் லேசாக நகர்ந்தது. நான் கைகளை எடுத்துக்கொண்டேன்…. ட்ரெய்ன் கொஞ்சங் கொஞ்சமாக வேகம் பெறுகிறது.

வெளிச்சம் தெரிகிற வரை ஒரு கை மட்டும் அசைந்து கொண்டிருந்தது தெரிந்தது.

வீட்டிற்கு வந்து அறைக்குள் போய் லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு நாற்காலியில் அமர்ந்தேன். ஒரு பெண்ணின் குரல். ‘கோலா…. கோலா… ரூபாய்க்கு ஏழு கோலா… கோலா….’ என்று ஒரு ராகத்துடன் ஒலித்தது…

கொல்லைப்பக்கம் போய் சுட்டுவிரலைத் தொண்டைக்குள் விட்டுக் குடைந்தேன்

குமட்டல்தான் வந்தது

முள்….?

– கணையாழி, டிசம்பர் 1979

அத்தை இருந்தால் உறுத்தும் முள்ளை அத்தை எடுத்து விட்டு போனாளோ? முள் போனாலும் முள் இருப்பதாய் ஒரு உறுத்தல்.

14 கருத்துகள்:

  1. உழைப்பாளர் பவானி பாட்டியைப் பற்றி, படிக்க ரசனை இல்லாத நடையில் எழுதியிருக்கிறாரே. பவானி பாட்டியின் நேர்மறைச் சிந்தனை காராட்டுக்குரியது.

    புற்றுநோய்க்கான வேக்சின், எலும்பு சேர்க்கும் பசை பயன்பாட்டுக்கு வரட்டும், குறைந்த விலையில்.

    பதிலளிநீக்கு
  2. சாருவின் முள் கதை இயல்பான நடை, எளிதில் கையாளமுடியாத கரு. என்ன சொல்ல வந்தாரோ அதனை படிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்ளும்படியாகச் சொல்லியிருக்கிறார்.

    அவர் கதை பெரும்பாலும் அவர் வாழ்வில் நடந்தவற்றைப் புனைவுகளோடு சொல்வதாகத்தான் இருக்கும். அவருடைய கதை நாவல்களின் கருக்களுக்காகவே வெகு ஜன பத்திரிகையாளர்களால் புறக்கணிக்கப்பட்டவர் அவர்.

    பதிலளிநீக்கு
  3. கதை என்ற பெயரில் இன்று பகிர்ந்து கொண்டிருக்கும் சமாச்சாரத்தில் தேடு தேடு என்று தேடினாலும் கதை என்ற ஒன்று மட்டும் எங்கேயும் காணோம்.
    மொத்தத்தில் குப்பை. இதைப் போய் கிளறியிருக்கிறாரே என்று
    தோன்றியது.
    இனி வரும் சனிக்கிழமைகளிலாவது வாசகர்களை ஏமாற்றாதீர்கள்.
    நல்ல கதைகளை வாசிக்கும் திருப்தியை ஏற்படுத்துவது உங்களிடம் தான் இருக்கிறது. அதைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது, நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​இன்றைய கதைப்பகிர்வு தங்களுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது என்றால் அதுவே சாருவின் வெற்றி. இது போன்ற சர்ச்சைகளை ஏற்படுத்தி வேடிக்கை பார்ப்பதே அவருடைய தொழில்.

      இரண்டு காரணங்கள் இக்கதையை இங்கு வெளியிடத்தூண்டின. ஒன்று எஸ் ரா வின் 100 சிறந்த கதைகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது, இரண்டு இலக்கிய வாசனை உள்ள சிற்றிதழ் கணையாழியில் பிரசுரமானது.

      1970 களில் பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ் என்று பா இயக்குனர்கள் காதல் என்ற சங்க காலம் முதல் தற்போது வரை நிலவும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நிறைய திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றனர். அதன் அடிப்படையில் தான் சாரு இக்கதையையும் 1976இல் எழுதியிருக்கிறார் என்பது எனது அனுமானம்.

      Jayakumar

      நீக்கு
    2. // 1970 களில் பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ் என்று பா இயக்குனர்கள் காதல் என்ற சங்க காலம் முதல் தற்போது வரை நிலவும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நிறைய திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றனர் //

      இது காதல் என்கிற கருப்பொருளில் வரும் என்று சொல்கிறீர்களா?  இது காமம்.  இன்ஸெஸ்ட்.

      நீக்கு
    3. கணையாழியிலேயேயே வந்தது என்று பார்த்ததும்தான் இதை வெளியிட தடை இல்லை என்று தோன்றியது.

      நீக்கு
    4. ​// Is it sex-love…?
      நோ… அப்படி என்னால் நினைக்க முடியவில்லை. இது ஒரு tender devotion…. ஆனா இதன் எல்லை எதுவாக இருக்கும்….?​//

      விடை கதையில்

      நீக்கு
  4. புற்று நோய்க்கான தடுப்பூசி செய்தி நல்ல செய்தி. எளிய மக்களுக்கும் பயனுள்ள வகையில் வர வேண்டும்.

    அட! சீனாவின் எலும்பு முறிவுப் பசை ஃபெவிக்கால் போல இருக்கிறதே! ஒரு வேளை ஃபெவி க்விக் போன்றவைதான் இந்த ஆராய்ச்சியின் அடிப்படையாக இருந்திருக்குமோ ஒரு இன்ஸ்பிரேஷன்?

    இது எவ்வளவு தூரம் ஆயுள் கொண்டது என்று தெரிந்தால் நல்லது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பவானி பாட்டி அசத்தல். நட்சத்திர பாட்டியேதான்! முன்னுதாரணம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நுண்ணிய ஒரு உணர்வு ஒரு சிலருக்கு வருவது... இலை மறை காயாக, இயல்பாகச் சொல்லிச் செல்கிறார் சாரு. அவருடைய எழுத்திலிருந்து இது கொஞ்சம் வித்தியாசமானதோ?

    முள்ளின் உருவகம்!!!

    //‘Love has no taboos’ என்று படித்திருக்கிறேன். ஆனால் அத்தையின் மேல் நான் கொண்டுள்ளது காதலா…? காதல்.. சே.. தொடர்கதைகள்ளேயும், சினிமாவிலேயும் இந்த வார்த்தையைப் போட்டு ரொம்ப அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

    Is it sex-love…?

    நோ… அப்படி என்னால் நினைக்க முடியவில்லை. இது ஒரு tender devotion…. ஆனா இதன் எல்லை எதுவாக இருக்கும்….?//

    நல்ல எக்ஸ்ப்ரெஷன். இன்னவென்று சொல்லத் தெரியாத ஒரு உணர்வு.

    கதையை வாசித்ததும், எனக்கும் என் அத்தை (களுக்குமான) க்குமான உணர்வு பந்தம் நினைவுக்கு வந்தது. சின்ன அத்தை கல்யாணம் ஆகிச் சென்ற போது என் வயது 4,5 வயதிருந்திருக்கும். அத்தையின் கணவர் கல்கத்தாவில் வேலை என்பதால் இருவரும் புறப்பட்ட போது நான் அவர்கள் முன், அத்தையின் கையைப் பிடித்துக் கொண்டு அத்தை என்னை விட்டுப் போகாதே என்று திருக்குறுங்குடித் தெருவில் மண்ணில் அழுது புரண்டது இன்னும் என் நினைவில். பெரிய அத்தைதான் என்னை குண்டுகட்டாகத் தூக்கிக் கொண்டு வயல்வெளிகளுக்குச் சென்றுவிட்டார். பெரிய அத்தையும் என் ஃபேவரிட். பல நாட்கள் பிரிந்த துயரில் இருந்து ஜுரம் வந்து....எப்போது அத்தை வந்தாலும் அவரோடுதான் இருப்பேன் அவருக்கும் என் மீது அத்தனைப் பிரியம் . அது ஒரு கதை.....பெரிய அத்தை ரொம்பச் சிறிய வயதி மறைந்துவிட்டார். அவரது நிறைய குணங்கள், கலைகள் எனக்கு வந்திருப்பதாகத் தெரிந்தது.

    கதையில் ஆண், பெரியவனும் கூட. எனவே அந்த உணர்வுகள் subtle ஆகச் சொல்லப்பட்டிருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா.. நீங்கள் சொல்லும் இந்த சம்பவம், உணர்விலிருந்து சாருவின் கதை சற்று தள்ளி வேறொரு தூரத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. நம் சமூகத்தில் ஆண் கொஞ்சம் வளர்ந்துவிட்டாலோ, இல்லை பெண் பெரியவளானாலோ தொட்டுப் பேசுவதற்கு தடை இருக்கிறது (இருந்தது) தெரியுமா? 4-5 வயதுப் பாசம் வேறு. சாரு பூடகமாகச் சொல்வது வேறு. இதைத்தான் சிக்மென்ட் ஃப்ராய்ட் தன் கருத்தியலாக எழுதியிருக்கிறார்.

      நீக்கு
  7. கொஞ்சம் கீழான தெருக்கூத்துகளில் பாலியல் சீண்டல், பாலியல் பேச்சுகள் நகைச்சுவை போன்றவை இருக்கும். கொஞ்சம் மேலான சமூகத்தில் எதுவும் கொச்சையாக இராது, பொதுவா ரொம்ப பாலிஷ்டா உணர்வுகள் இருக்கும், அல்லது சப்ஜெக்டே இறை மற்றும் பக்தி உணர்வுக்குக் கொண்டுசெல்லப்படும். இரண்டுமே கிட்டத்தட்ட அதே மனித உணர்வுதான். ஒன்று மனிதனைச் செம்மைப்படுத்தும். இன்னொன்று கீழ் நிலைக்குக் கொண்டு செல்லும். எது சமூகத்திற்கு நல்லது, என்பதை எழுதுபவன் தீர்மானிக்கிறான். உடலில் உண்மை இருந்தாலும் பிறர் முன்னே மறைத்துக்கொண்டு வருவதன் காரணம் புரிந்தால் எந்த வகை எழுத்து உயர்ந்தது என்பது புரிந்துவிடும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!