அரசுப் பள்ளியில் ஆசிரியர் தொலைத்த வைரக்கல் மோதிரத்தை நேர்மையுடன் ஒப்படைத்த மாணவர்கள்

பூந்தமல்லி அரசு பள்ளியில் கிடந்த வைர மோதிரத்தை கண்டெடுத்து, ஆசிரியையிடம் நேர்மையுடன் ஒப்படைத்த இரு மாணவர்களை, ஆசிரியர்கள் நேற்று பாராட்டினர். பூந்தமல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் ஆசிரியையாக பணியுரியும் கவுசல்யா என்பவர், வைரக்கல் பதித்த மோதிரத்தை, பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் தொலைத்துவிட்டார். இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய். பள்ளி வளாகம் முழுதும் தேடியும், மோதிரம் கிடைக்கவில்லை. இந்நிலையில், அதே பள்ளியில் எட்டாவது பயிலும் சம்சுதீன், ஏழாவது பயிலும் ஷாநவாஸ் ஆகியோர், பள்ளியில் விளையாடும் போது மோதிரத்தை கண்டெடுத்து, ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, நேற்று காலை பள்ளி துவங்கியதும், அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் சம்சுதீன், ஷாநவாஸ் ஆகியோரின் நேர்மையை பாராட்டிய ஆசிரியர்கள், அவர்களுக்கு பரிசு வழங்கினர்.
=======================================================================================
==================================================================================================================================================================================

நான் (JKC) படிச்ச நாட்டார் கதைகள்
இரண்டு
கதையாசிரியர் : அ. கா.
பெருமாள்
அ.கா. பெருமாள் செப்டம்பர் 28, 1947-ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கை என்ற
ஊரில் அழகம்பெருமாள், பகவதி அம்மா
ஆகியோருக்குப் பிறந்தவர். அ.கா.பெருமாளின் முழுப்பெயர் அ. காக்கும்
பெருமாள் (பறக்கை “பறவைக்கரசனூர்”
என்றும் “பக்ஷிராஜபுரம்” என்றும்
அழைக்கப்படும் வைணவத்தலம்). இவரது
தந்தையான அழகம்பெருமாள் மலையாள ஆசிரியராகவும், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார்.
அ. கா. பெருமாள் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில்
"நாஞ்சில் நாட்டு
வில்லுப்பாட்டுகள்" எனும்
தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். 1973 முதல் ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா
கலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். நாகர்கோவிலில்
வாழ்கிறார். இலக்கிய ஆய்வாளராக
தன் வாழ்க்கையை தொடங்கிய இவர் பின்னர் நாட்டாரியல், தொல்லியல், இலக்கிய வரலாறு ஆகிய மூன்று களங்களில் சிறப்புடன் பணியாற்றினார்.
மக்கள் வரலாறு என்பது எழுதப்
படாமல் அவர்களின் வாய்மொழியாகவே புழங்குவது. அந்த மாற்று வரலாற்றை நாட்டாரியல் ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்து
பதிவுசெய்தவர் என்று அ.கா.பெருமாள் அவர்களைக் குறிப்பிடலாம்.
இவரைப்பற்றி மேலும் அறிய
இவருடைய
வலைத்தளம்
முன்னுரை
வேதம், புராணம் இவற்றைப் பரவலாக அறிவதற்கு முன் பழங்குடி மக்கள் போல் தமிழரும் சிறு
குறு “நினைவில் வாழும் மனித
தெய்வங்களை” வழிபட்டுக் கொண்டிருந்தனர். வீரமரணம் அடைந்த வீரர்கள், அசாதாரண மரணம் அடைந்த பெண்கள், உடன்கட்டை ஏறி சதியான பெண்கள் என்று
இத்தெய்வங்களின் பட்டியல் நீளும். இத்தகைய
தெய்வங்கள் ஊர்க்காவல் தெய்வங்களாகவும், பிணி தீர்க்கும் தெய்வங்களாகவும் அறியப்பட்டனர், அறியப்படுகின்றனர். சைவம், வைணவம், என்று இந்து மதம்
பரவினாலும், குல தெய்வம், ஊர்க்காவல் தெய்வம் என்று சிறு தெய்வ வழிபாடு
தற்போதும் நிலை நிற்கிறது.
குறு
சிறு தெய்வங்களின் பின்னணி, வாய் வழி செய்தியாக,
நாட்டுப்புற பாடலாக, வில்லுப்பாட்டாக நிலவுகின்றன. . இவற்றை ஆராய்ந்து தொகுத்து வெளியிட்ட பெருமை அ
கா பெருமாளைச் சேரும்.
“மக்கள் வரலாறு என்பது எழுதப்
படாமல் அவர்களின் வாய்மொழியாகவே புழங்குவது. அந்த மாற்று வரலாற்றை நாட்டாரியல் ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்து
பதிவுசெய்பவர் என்று அ.கா.பெருமாள் அவர்களைக் குறிப்பிடலாம்” - ஜெயமோகன்.
இரண்டு கதைகள் இங்கு இடம் பெற்றுள்ளன. நாஞ்சில் தமிழில் நாட்டார் வழக்கு மொழியில்
எழுதப்பட்ட தனித்தன்மை வாய்ந்தவை. சிறப்பு என்று கூற முடியாவிட்டாலும்
வாசிக்கலாம். இக்கதைகள் tamilvu.org என்ற தளத்தில் இருந்து குருட்டாம்போக்கில்
எடுக்கப்பட்டவை.
கட்டிலவதானம்
கதை
திருவிதாங்கூரின் தலைநகரமாக இருந்த
பத்மநாபபுரத்தை அடுத்த ஊர்களில் குறுப்புகள் என்னும் சாதியினர் வாழ்ந்து
வந்தார்கள். (இவர்கள் வேளிமலையை ஒட்டிய பகுதிகளில் வாழ்ந்த
இடையர் சாதி கிருஷ்ணன் வகையினர் என்று இவர்களுக்குப் பெயர் உண்டு. கேரளத்தில் ஆயுதப்பயிற்சி காரணமாக நாயர்களுக்கு
வழங்கப்படும் குலப்பட்டமாகிய 'குறுப்பு'க்கும் இதற்கும் தொடர்பு இல்லை)
இவர்களின் தலைவர் பெரிய பண்டாரம் என்பவருக்குச்
சொந்தமாக நிதிராணி மலையில் பெரிய தோட்டம் இருந்தது.
அந்தத் தோட்டத்தில் குறுப்புமார்கள் வேலை
செய்து வந்தனர். ஒருமுறை அந்தத்
தோட்டத்தில் வாழைப்பயிர் செய்ய தீர்மானித்தார்கள். அதற்காக வேலையை ஆரம்பிக்க நல்ல நாளைத் தெரிவு செய்ய பத்மநாபபுரத்திலிருந்த இல்லத்துப்
போற்றியை அணுகினர். அவர் சொன்ன
நேரத்தில் வாழைக்கன்றை நட்டனர்.
வாழைகள் செழிப்பாய் வளர்ந்தன. நன்றாய்க் காய்த்தன. அப்போது
பத்மநாபபுரத்தை அடுத்த மேலாங்கோடு என்ற ஊரிலிருந்த இசக்கியம்மை அந்தத்
தோட்டத்திற்கு வந்தாள். பச்சை
பச்சையாய் காய்த்துக் கிடந்த காய்களைப் பார்த்தாள். உடனே பெரிய கிளியாக உருமாறினாள். மொந்தன் குலை ஒன்றைக் கொத்தி அறுத்தாள்.
நிதிராணிமலை குகை ஒன்றில் அதை மறைத்து
வைத்தாள்.
குறுப்புகள் வாழைக்குலையை அறுத்துச் சென்ற
ராட்சதக் கிளியைப் பார்த்து அதிசயித்தனர்.
பெரிய குறுப்பு எசமானிடம் அந்தச் செய்தியைச்
சொன்னார்கள். பெரிய குறுப்பு
கிளியைக் கொல்ல குகையின் வாசலில் தீ வைத்து மூட்டம் போடச் சொன்னான். தோட்டத்து வேலைக்காரர்களான குறுப்புகளும்
அப்படியே செய்தனர். இதனால் கோபம்
கொண்ட இசக்கியம்மை மந்திரமூர்த்தி வாதைகளை அழைத்துக்கொண்டு குறுப்புகள் வாழ்ந்த
ஊர்களுக்குச் சென்றாள். அங்கு
ஆண்களையும் பெண்களையும் அடித்தாள். வீட்டின் மேல் கல்லை எறிந்தாள். நடுநிசியில் ஆரவாரம் செய்தாள்.
ஊரில் நடந்த ஆதாளிக்குக் காரணத்தை அறிய
மந்திரம் அறிந்த போத்தி ஒருவரை வரவழைத்தார் பெரிய குறுப்பு. போத்தியும் மந்திரம் போட்டுப் பார்த்து காரணம் கண்டுபிடித்தார். போத்தி ஊருக்குச் சாந்தி செய்ய பெரிய சடங்குகள்
செய்தார். ஊரைச் சுற்றி
மந்தரமேற்றிய முளையடித்து வாதைகளை விரட்டினார். ஊர்க்காரர்கள் போத்தியைக் கொண்டாடி உமக்கு என்ன பரிசு வேண்டும் எனக்
கேட்டனர். போத்தி மரத்தால் ஆன
பெரிய கட்டில் வேண்டும் எனக் கேட்டார். பெரிய குறுப்பும் மலையிலிருந்து காஞ்சிரமரம் வெட்டிக் கொண்டுவந்து ஒரு பெரிய
கட்டிலைச் செய்து கொடுத்தார்.
காட்டில் வாழ்ந்துவந்த மலையிசக்கியம்மை அந்த
மரத்தில்தான் வாசம் செய்தாள். அவள் அக்கட்டிலிலேயே ஊருக்கு வந்துசேர்ந்தாள்.
போத்தி கட்டிலைத் தன் வீட்டிற்குக்
கொண்டு சென்றார். உறவினர்கள்
எல்லோரும் கட்டிலை அதிசயத்துடன் பார்த்தனர். அன்று இரவு போத்தி கட்டிலில் படுத்த கொஞ்ச நேரத்தில் அவருக்கு மார்பை
அடைத்தது. அவரைச்சுற்றி இசக்கி
ஆதாளி செய்தபடி வந்தாள். போத்தியை
அடித்தாள். உறவினர்கள்
பார்த்துக்கொண்டிருந்தபோதே அவர் மூச்சுத்திணறி துடித்து கட்டிலில் கிடந்து
இறந்தார். அவர் கட்டிலில் குடிகொண்டிருந்த
இசக்கியம்மையால்தான் இறந்தார் என்பதை அறியாத உறவினர்கள் சிலர் போத்திக்கு உரிமையான
அக்கட்டிலில் உரிமை கொண்டாட ஆரம்பித்தனர். கட்டிலை அவர்கள் ஒவ்வொருவராக தங்கள் வீடுகளுக்குக் கொண்டுசென்றனர். அதில் படுத்த ஒவ்வொருவராக உயிர்விட்டனர்.
இசக்கி அவர்களையும் கொன்றாள்.
போத்தியின் உறவினர்கள் தங்களின்
குடும்பத்துக்கு யமனாக இருக்கும் கட்டிலை விற்றுவிட முடிவு செய்தனர். இரணியல் சந்தையில் யாருக்கும் தெரியாமல் கட்டிலைக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு நாடார் வியாபாரியின் மூலம் கட்டிலை
விற்க ஏற்பாடு செய்தனர். அப்போது
புத்தளத்தைச் சார்ந்த முத்துவேலன் என்பவர் அச்சந்தைக்கு வந்திருந்தார். அவர் கட்டிலின் அழகைப் பார்த்து ஆசைப்பட்டார்.
நல்ல விலை கொடுத்து வாங்கிச் சென்றார்.
முத்துவேலன் கட்டிலை வீட்டிற்கு கொண்டு சென்று
பாதுகாப்பான அறையில் வைத்தான். அன்று இரவு அவர் அதில் படுத்ததுமே
மூச்சுத்திணறி துடித்தார். அவரை
சூழ்ந்து இசக்கியும் பேய்களும் ஆதாளியிட்டன. அவர் இறந்துபோனார். அவரது
உறவினர்கள் புத்தளத்திலிருந்த சோதிகிரி என்ற மந்திரவாதியை அழைத்து கட்டிலில் மை
போட்டுப் பார்த்தனர். சோதிகிரி
அக்கட்டிலில் இசக்கி அம்மை உறைந்திருப்பதைக் கூறினான். உடனே வேலனின் மக்கள் கட்டிலை ஊர்ச்
சுடுகாட்டுக்குக் கொண்டுசென்று குழியில் வைத்து எரித்துவிட்டனர். உறவினர்களும் சுடுகாட்டிலிருந்து வீடு
திரும்பினர்.
சுடுகாட்டுக் குழியிலிருந்து எரிந்த
கட்டிலின் கால் ஒன்று தீயின் வேகத்தால் தெறித்து விழுந்தது. அது ஒரு வேலிச்செடியின் மீது விழுந்து
தொங்கியது. மறுநாள் சுடுகாட்டுப்
பக்கம் வந்த நாடாத்தி ஒருத்தி, வேலியில்
கிடந்த கட்டில் காலை விறகு என்று எடுத்துச் சென்றாள். அவள் அதை வீட்டிற்குக் கொண்டு சென்று வீட்டில்
வைத்ததும் இசக்கி அந்த நாடாத்தியைக் கொன்றாள்.
அவளது உறவினர்கள், நாடாத்தியின் இறப்பிற்குக் காரணம் தெரியாமல்
இருந்தபோது ஊர்கோவில் சாமியாடி "காட்டு இசக்கி கட்டில் கால் வழியே இங்கு வந்துவிட்டாள். அவளுக்குக் கோவில் எடுத்து வழிபடுங்கள்"
என்றார். ஊர்க்காரர்களும் உண்மையை உணர்ந்து அம்மையை இறக்கி கோயில் கட்டி வழிபட
ஆரம்பித்தனர். அவள் அங்கே உறைந்து
அவர்களுக்கு அருள்பாலித்தாள்.
இந்நூல் குறித்த ஓலைச் சுவடி தமிழ்ப் பல்கலைக்
கழகத்தில் க.எண் 1845 ல் உள்ளது.
முத்துப்பட்டன்
கதை, கேரளம்
கேரளத்தில் நெடுமங்காடு அருகே உள்ள ஆரியநாடு செழிப்புடைய நாடு. அந்த நாட்டில் பிராமணச் சாதியைச் சார்ந்த ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் கடைசியாகப் பிறந்தவன் முத்துப்பட்டன். அவன் நல்ல உடல் வலிமை உடையவன். போர்க்கலைகளைப் படித்தவன். வாள் யுத்தத்தில் வல்லவன்.
ஒருமுறை முத்துப்பட்டனுக்கும் அவனது
சகோதரர்களுக்கும் இடையே மாறுபாடு வந்தது. அதனால் முத்துப்பட்டன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டே புறப்பட்டுவிட்டான்.
காடு மலைகள் எல்லாம் அலைந்தான். கொட்டாரக்கரை என்ற ஊருக்கு வந்தான். கொட்டாரக்கரையில் அப்போது அரசனாயிருந்தவன்
பெயர் ராமராசன். அந்த அரசன்
முத்துப்பட்டனைத் தன் பாதுகாப்பு படைவீரனாக வைத்துக்கொண்டான். பல சிறப்புகள் அவனுக்குச் செய்தான்.
முத்துப்பட்டன் அண்ணன்மார்கள் தம்பியைத் தேடி
ஒவ்வொரு ஊராக வந்தார்கள். கொட்டாரக்கரைக்கும் வந்தனர். அங்கு பவிசோடு இருந்த தம்பியைக் கண்டனர்.
"தம்பி! எங்கள் தவறுகளை மன்னித்துவிடு. சேஷையர் மகளை உனக்குப் பேசி முடித்திருக்கிறோம்.
நீ சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டாயே,
எங்களுடன் வீட்டுக்கு வா" என்றனர். முத்துப்பட்டனோ "நான்
இப்போது ராமராசனின் சேவகன். அவரிடம்
உத்தரவு கேளுங்கள். வருகிறேன்"
என்றான். அண்ணன்மார்கள் ராமராசரிடம் தம்பியை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டனர்.
ராமராசனும் மகிழ்ந்து அனுமதியும்
கொடுத்தார். முத்துப்பட்டனுக்கும்
பரிசுகளும் கொடுத்தனர்.
முத்துப்பட்டன் அண்ணன்மார்களுடன் ஆரியங்காவு
காட்டு வழியே தன் ஊருக்குச் சென்றான்.
ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோவில் வந்து
பட்டன்மார்கள் பூஜை செய்து கும்பிட்டார்கள். வழியில் பாபநாசம் அரசடித்துறை என்ற இடத்தில் தங்கினார்கள். முத்துப்பட்டன் "நான் இங்கு கொஞ்ச நேரம் இருந்து சிவ பூஜை
செய்து வருகிறேன், நீங்கள்
வேண்டுமானால் செல்லுங்கள்" என்றான்.
அண்ணன்மார்கள் அவனது பொருளுக்கு
ஆசைப்பட்டு அவனை அங்கேயே விட்டுவிட்டு சுமையுடன் நடந்தார்கள்.
முத்துப்பட்டன் அந்தப் பாறையில் கண் அயர்ந்த
நேரம் மெல்லிய குரலில் யாரோ பாடுவதைக் கேட்டான்.
திரும்பிப் பார்த்தான். இரண்டு பெண்கள், இரண்டு நாயுடன் வருவதைக் கண்டான். அழகான பெண்களின் அருகே சென்றான்.
அப்பெண்களிடம் "இனிய குரல் வளமும் அழகிய அழகும் பொருந்திய
பெண்களே! உங்கள் அழகு என்னை
மயக்குகிறது. என் தாபத்தைத்
தீருங்கள்" என்றான்.
அந்தப் பெண்களோ "என்ன அநியாயம் இது. நாங்கள்
சக்கிலியப் பெண்கள். நீரோ
பிராமணச் சாதியினர். இதை நீர்
கேட்கவே கூடாது" என்றனர்.
முத்துப்பட்டன் அவர்களிடம் "நீங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியாது. உங்களுக்காக நான் எல்லா உறவுகளையும் விட்டுவிட்டு இங்கேயே தங்கத் தயாராக
இருக்கிறேன் என்னை
அணைத்துக்கொள்ளுங்கள்" என்றான்.
அவர்கள் அஞ்சி ஓடினர். முத்துப்பட்டன் அவர்களைத் துரத்தினான். அவர்கள் காட்டு மரங்களுக்குள் நுழைந்து ஓடினர்.
பட்டன் விடவில்லை. அப்பெண்களோ குறுக்கு வழியே போய் தந்தையை
அடைந்தனர். காட்டில் ஓடமுடியாத
பட்டன் நின்றுவிட்டான்.
தந்தையிடம் "தந்தையே எங்களை ஒரு பட்டன் துரத்தி வருகிறான்"
என்றனர். தந்தையான பகடை "இப்போதே
அப்பாதகனைக் கொன்று வருகிறேன்" என்று கூறி வல்லயத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
பகடை காட்டுவழியே வரும்போது பட்டன் காட்டுச் செடிகளுக்கிடையே கிடந்தான். பகடை அழகொளிரக் கிடக்கும் பட்டனைப் பார்த்து ஐயோ இத்தனை அழகான இளைஞன் யாரோ? இவன் தந்தை யாரோ என எண்ணினான். சிறிய கல்லை அவன் மேல் விட்டெறிந்தான். பட்டன் விழித்தான். சக்கிலியனைப் பார்த்தான். நீர் யார் ? எனக் கேட்டான்.
சக்கிலியன் என் பேர் வால பகடை. என் புதல்விகள் பொம்மக்காவும் திம்மக்காவும்
இந்தக் காட்டுவழியே வரும்போது ஒரு பட்டன் அவர்களை மோசம் செய்ய வந்திருக்கிறான்.
அவனைக் கண்டதுண்டமாக வெட்டி காட்டு
நரிகளுக்குப் போட வந்தேன் என்றான்.
அதைக் கேட்ட பட்டன் புலம்ப ஆரம்பித்தான். ஐயோ மாமனாரே, உன்
மக்களுக்காக ஆசைப்பட்டது நான்தான். உன் பெண்களுக்காக உடன் பிறந்தவர்களை வெறுத்து நிற்கிறேன். நாலுபேர் அறிய உன் பெண்களை மணம்
செய்துகொள்ளுகிறேன் என்றான்.
பகடையோ ஐயோ நான் சக்கிலியன். நாய் சாதி. என்னை நீங்கள்
தீண்டமுடியுமா? நாங்கள் செத்த
மாட்டைத் தின்பாம். சேரியில்
வாழ்வோம். தோலை அழுக வைப்போம்.
மாடு அறுப்போம். சாராயம் குடிப்போம். இது வேண்டாம் அந்தணரே என்றான்.
பட்டனோ மாமனே சொல்வதைக் கேள், புண்ணியம் உண்டு. உன்
மக்களை எனக்கு மணம் செய்து வை. உன்
ஜாதியில் நான் இணைந்துவிடுகிறேன் என்றான்.
பகடை எங்களைப்போல் நீயும் தோல் செருப்பு அணிந்து பூ நூல் அறுத்து குடுமி இல்லாமல் இருந்தால் என் மக்களை உனக்குத் தருகிறேன். நீ உன் தமயன்மார்களிடம் இதைச் சொல்லி வரவேண்டும் என்றான்.
முத்துப்பட்டன்
சக்கிலியன் பேச்சுக்குச் சம்மதித்தான்.
தன் அண்ணன்மார்களைத் தேடிச் சென்றான்.
அவர்கள் விக்கிரமசிங்கபுரம்
அக்கிரகாரத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்றான். தான் ஒரு சக்கிலியனின் புதல்விகளை மணம் செய்யப் போவதைச் சொல்லி அனுமதி
கேட்டான். அண்ணன்மார்கள் உனக்கு
என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா?
என்று கேட்டு பொங்கி எழுந்தனர். பலவாறாக நயந்தும் பயந்தும் சொல்லிப்பேர்த்தனர்.
பட்டன் கேட்கவில்லை. பட்டனைப் பெரிய அறையில் அடைத்து வைத்தனர்.
முத்துப்பட்டனோ நில அறைக்கல்லைத் தூக்கி
எறிந்துவிட்டு வெளியே வந்தான். விக்கிரமபுரச் சந்தையில் தோல் செருப்பு
தைத்துக்கொண்டான். பூநூலை
அறுத்தான். குடுமியைக் களைந்தான்.
பகடையின் வீட்டிற்கு வந்தான்.
வால பகடை வேறுவழியில்லாமல் திருமணத்திற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான். தன் ஜாதிச் சனங்களை வரவழைத்தான். பெரிய பந்தலிட்டான். வாழைக்குலை நாட்டினான். பெரிய மணவறை செய்தான். பட்டனுக்குத் தன் மகளைக் கொடுத்தான். திருமணம் இனிதே நடந்தது. பொம்மக்காளும் திம்மக்காளும் சாதி முறைப்படி பட்டனுக்கு சாப்பாடு கொண்டு வைத்தனர். தன் பங்கு மாடுகன்றுகளுடன் முத்துப்பட்டன் சக்கிலிய குடியில் வாழவந்தான்.
திருமணம் முடிந்ததும் சக்கிலியப் பெண்கள்
கும்மி அடித்தனர். அவர்களுடன்
சேர்ந்து முத்துப்பட்டனும் கும்மியை ரசித்தான். கும்மி முடிந்ததும் பட்டன் பொம்மக்கா மடியில் தலையையும் திம்மக்கா மடியில்
காலையும் வைத்து உறஙகினான். உறஙகும்போது
தன் கையில் கட்டிய காப்பு நூலைக் கரையான் அரிக்கவும், உடம்பு கெட்டுப்படவும், கோழிக்கூட்டிலிருந்து வரவும் கனவு கண்டான்.
அந்த வேளையில் ஒரு தொப்பி ஆள் வந்தான். அண்ணே முத்துப்பட்டா உங்கள் கிடை மாடுகளை வன்னியர் கொண்டு போகிறார்கள்
என்றான். பட்டன் சினத்தோடு
எழுந்தான். 'என் மாடுகளைத்
திருடிய 'வன்னியரையும்
உப்பளங்கோட்டை மறவர்களையும் இப்பொழுதே அழிக்கிறேன்' எனக் கூறிப் புறப்பட்டான்.
முத்துப்பட்டனை அவன் மனைவிகள் ஏதோ சூழ்ச்சி
இருக்கிறது என்று சொல்லி தடுத்தனர்.
பட்டனோ அவர்கள் சொன்னதை கேட்க வில்லை.
மனைவிகள் வளர்த்த ஆச்சி நாய், பூச்சி நாயை துணைக்கு அழைத்துக்கொண்டு 1000
வன்னியர்களை எதிர்க்கச் சென்றான்.
அவர்களுடன் போரிட்டு எல்லோரையும் வெட்டி
வீழ்த்தி மாடுகளை மீட்டான். பின்னர்
உடம்பில் பட்ட குருதியை ஒரு சுனையில் கழுவச் சென்றான்.
அப்போது ஏற்கனவே ஏற்பாடுசெய்திருந்தபடி சப்பாணி
ஒருவன் பின்னாலிருந்து பட்டனைக் குத்திக் கொன்றுவிட்டான். அவரை
தாக்கியவனையும் வீழ்த்தினார். பட்டன்
இறந்ததைப் பார்த்து ஆச்சி நாய், பூச்சி
நாய் சக்கிலியனின் வீட்டிற்கு ஓடி பொம்மக்கா திம்மக்காவை பிடித்து இழுத்தது.
பொம்மக்காவும் திம்மக்காவும் பட்டனுக்கு
ஏதோ ஆகிவிட்டது என்பதை உணர்ந்து சாதமும் கறியும் எடுத்துக்கொண்டு நாயின் பின்னால்
சென்றனர்.
பட்டன் இறந்துகிடந்த இடத்திற்கு அவர்கள் வந்தனர். இறந்த கணவனைப் பார்த்ததும் அலறிப் புலம்பி சட்டியை எறிந்துவிட்டு அவன் மேலே
விழுந்து அழுதனர். பட்டனை
எடுத்தத் தோள் மேல் போட்டுக்கொண்டு சிங்கம்பட்டி அரண்மனைக்குச் சென்றனர். அரசனிடம் தங்கள் வரலாற்றைக் கூறி தாங்கள்
பட்டனுடன் தீயிலே இறக்க அனுமதி கேட்டனர். பழிபாவம் ஏற்படும் என்று மன்னன் மறுத்துப் பார்த்தான். பெண்கள் ஒரேயடியாய் கெஞ்சினர்.
அவர்கள் கற்பின் உறுதியைக் கண்ட மன்னன் பெரும் தீ வளர்க்க உதவினான். அத்தீயில் இருவரும் பாய்ந்து உயிரை விட்டனர், கூடவே ஆச்சி நாயும் பூச்சி நாயும் தீயில் விழுந்து உயிர் விட்டது. அவர்கள் கதையைக் கேட்ட ஊரார் அவர்கள் தெய்வங்களாகிவிட்டதை அறிந்தனர். சிங்கம்பட்டி மன்னன் அவர்களுக்குக் கோயில் எடுப்பித்து பலியும் பூசனையும் செய்வித்தான். அவர்கள் தெய்வங்களாகி (பட்டவராயர் சன்னிதி ) ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோவிலில் (பாபநாசம் - திருநெல்வேலி) அருள் புரிந்து வருகிறார்கள்.
முத்து பட்டன் வில்லுப்பாட்டு/சொரிமுத்து அய்யனார் கோயில்/
https://www.tirunelveli.today/ta/karaiyar-sorimuthu-ayyanar-kovil/
பட்டவராயர் சன்னிதி
பாசிடிவ் செய்திகளில் அந்த இரு இளைஞர்களும் கவர்கிறார்கள். எதைப்பற்றியும் சிந்திக்காமல் மாரடைப்பு வந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவியது. பாராட்ட வேண்டும்.
பதிலளிநீக்குபள்ளி மாணவர்கள் இருவருக்கும் பாராட்டுகள்.
கீதா
கதைகள்.ஓகே. சொல்ல ஒன்றும் இல்லை.
பதிலளிநீக்குஎங்க ஊர்ப்பாக்கம்.இசைக்கியம்மன் ரொம்ப பிரபலம் பலருக்கும் அப்பெயர் இருக்கும்.
சொரிமுத்து ஐயனார் கோயில் சென்றிருக்கிறேன். அது அமைந்திருக்கும் அப்பகுதியும் ஆறும் இயற்கை அழகு. அருவிகள் அருகில். காட்டுப்பகுதியில். நான் துறை செல்வராஜூ அண்ணா இக்கோவில் பற்றி எழுதியிருக்கிறார்.
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. ஒரு உயிரைக்காக்க மருத்துவமனை வரை ஓடி மருத்துவம் செய்த மருத்துவரையும், இதயம் பிரச்சனை காரணமாக, பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்ப்பித்து காப்பாற்றிய இளைஞர்களையும் மனதாற வாழ்த்துவோம். பாராட்டுவோம்.
இன்றைய கதைகள் நன்றாக உள்ளது. மந்திர தந்திர கதைகள் இன்னமும் உண்மையாகத்தான் உள்ளது. அதை போற்றி, அவர்களையே கடவுளாக வழிபடுவோரும் உள்ளனர். சகோதரி கீதாரெங்கன் சொல்வது போல நானும் இக்கோவில் பார்த்திருக்கிறேன். எங்கள் அண்ணன் குடும்பத்துடன் தாமிரவருணி ஆற்றங்கரைக்கு, இயற்கை சூழ்ந்த இடங்களுக்கென ஒரு முறை சென்ற போது கோவிலைப் பார்த்தோம். கோவிலுக்குள் செல்லவில்லை. எங்கள் ஊர் பக்கமும் இசக்கியம்மை பெயர் கொண்டவர்கள் அதிகம். கதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.