பொதுவாக ஒரு கோயில் என்பது நகரத்தின் மத்தியில் அமைந்திருப்பதுதான் வழக்கம். கோயிலைச் சுற்றி நான்கு வீதிகள், அதைத் தொடர்ந்து பலப் பல வீதிகள், கோயிலுக்கு அருகில் குளம் என்றுதான் அமையும். ஆனால் இப்போதுள்ள தஞ்சை மாநகரை மனதில் வைக்காமல் பார்த்தால், இது கோயிலைச் சுற்றி அமைந்த நகரமல்ல என்பது புரியும்.
15ம் நூற்றாண்டில் (1530 வாக்கில்…16ம் நூற்றாண்டு) இப்போது நாம் காணும் தஞ்சை அரண்மனை, பெரிய கோயிலில் உள்ள வெளிப்புறக் கோட்டை, அகழி ஆகியவை புதிதாக எடுக்கப்பெற்றன. செவ்வப்ப நாயக்கர், அதன் பிறகு அச்சுதப்ப நாயக்கர், பிறகு ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவ நாயக்கர் போன்ற மன்னர்கள் இந்த தஞ்சைக் கோயில் பொலிவு பெற முக்கியக் காரணம். அப்படியென்றால், 11ம் நூற்றாண்டில் (1000களில்) கட்டிய தஞ்சைப் பெரியகோயில் என்னவாக ஆயிற்று?
தஞ்சைப் பெரிய கோயிலை இப்போதுதான் காண ஆரம்பித்திருக்கிறோம். அதற்குள் அது பொலிவிழந்த காரணத்தைக் காண வேண்டாம். பிறகு ஒரு பகுதியில் பார்ப்போம்.
விஜயாலய சோழன் கிபி 850, தஞ்சையை ஆட்சிபுரிந்துகொண்டிருந்த முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றினான். தற்போதுள்ள பகுதியை நம் மனக்கண்ணில் கொண்டுவந்தால், சோழச் சிற்றரசர்களாக பழையாறைப் பகுதியில் வாழ்ந்தவர்கள், அங்கிருந்து சுமார் 30 கிமீ தூரம் உள்ள தஞ்சைப் பகுதியை ஆண்டுவந்த முத்தரையர்களை வெற்றிபெற்றார்கள் என்பதை யோசித்தால் இருவரும் சிற்றரசர்களே என்பது தெரியும். இந்த முத்தரையர்களைப் பற்றி பலவிதமான கருத்துகள் இருக்கின்றன. இவர்கள் பல்லவ மரபைச் சேர்ந்தவர்கள், கன்னட நாட்டிலிருந்து வந்தவர்கள் (அங்குள்ளவர்களுக்கு விருத்தராஜா-மூத்த அரையர், முத்தரையர் என்ற பட்டப்பெயர் கல்வெட்டுகளில் இருந்தது), இல்லை இவர்கள் பழந்தமிழர்களான பெரும்பிடுகு வழி வந்தவர்கள் என்றெல்லாம் சொல்கின்றனர். ஆனால் நாம் ஓரளவு நடுநிலையுடன் வரலாற்றைப் பார்த்தால், பலவித கலப்புகள் ஏற்பட்டு, தமிழகத்தில் சேரர், தெலுங்கு பேசும் மக்கள், வடமொழியைக் கொண்டவர்கள் - பிராமணர்கள் அல்லர் என்று பலவிதமானவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரியும். ஒரு அரசன் வெற்றி பெறும்போது, அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கே புலம் பெயர்வதும், அரசன் படையெடுத்து ஒரு நாட்டை வெல்லும்போது அங்கிருந்து கொண்டுவந்த கைதிகள் (தோற்ற வீரர்கள், மக்கள், பெண்டிர்.. ஆயிரக்கணக்கில் இருக்கும்) புதிய நாட்டிலேயே வேரூன்றுவதும் நிகழ்ந்திருக்கின்றன. அதனால்தான் தமிழகத்தில் பல்வேறு மொழி பேசுபவர்களும், குறிப்பாக தெலுங்கு மொழி பேசுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
விஜயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றும்போது, இந்த நகரம் மாட மாளிகைகளும், சுண்ணாம்புப் பூச்சுகளோடு எழிலுடன் விளங்கியதாம். இதில் நமக்கு சந்தேகமே எழாது. காரணம், திருநாவுக்கரசர், தஞ்சை தளிக்குளம் என்ற மகாதேவர் கோயிலைப் பற்றியும், திருமங்கையாழ்வார், வம்புலாம்சோலை மாமதிள் தஞ்சை மாமணிக்கோயில் என்று தஞ்சையைப் பற்றித் தன் பாசுரங்களிலும் சொல்லியிருப்பது உண்மையே என்பது புரியும்.
அது சரி… பல கல்வெட்டுகள் (அதிலும் ராஜராஜசோழன் காலத்துக்கு முந்தையவை) சமஸ்கிருத மொழியில் ச்லோகங்களாகவே எழுதப்பட்டுள்ளனவே. என்ன காரணமாக இருக்கும்? இராஜராஜனின் மெய்கீர்த்தியும் ஆரம்பத்தில் வடமொழி மங்கலத்தில் ஆரம்பித்து பிறகு முழுவதும் தமிழில்-அப்போதிருந்த தமிழில் இருக்கும். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று உங்களுக்குத் தோன்றுகிறது? எழுதுங்களேன்.
தஞ்சை மாநகரை சோழன் கைப்பற்றியவுடன், நிசும்பசூதனிக்கு ஒரு கோயில் எழுப்பினான். (கொற்றவை, பிடாரி, காளிதேவி என்று பல பெயர்களில் அம்மன் கோயில் உண்டு. சோழனுக்கு அவள் ‘நிசும்பசூதனி’). இவை எல்லாமே பராசக்தியின் வெவ்வேறு வடிவங்கள்.
கீழவாசலிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சாலையில் உள்ள குயவர் தெருவில் இருக்கும் காளி கோயிலில் உள்ள சிலை, இந்த நிசும்பசூதனியாக இருக்கும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதினர். (பீடத்தின் மேல் அமர்ந்து, வலது காலை மடக்கி, இட து காலைத் தொங்கவிட்டுக் காணப்படும் சிற்பம். இது சோழர் பாணிச் சிற்பம்). தஞ்சை பூமால்ராவுத்தன் கோயில் தெருவிலிலுள்ள காளிகோயிலில் காணப்படும் நெடிதுயர்ந்த திருமேனியே விஜயாலயச் சோழன் நிர்மாணித்த நிசும்பசூதனி என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இது பொதுவாக இருக்கும் பிடாரி, மாகாளி சிலையிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது என்பது ஒரு காரணம்.
நிசும்பசூதனி – இங்கு வலக்கால் ஊன்றியிருக்கும் தலை மற்றும் அசுரர்கள் தெளிவாகத் தெரிகிறார்கள்.
ஆமாம் நிசும்பசூதனி என்றால் என்ன? பராசக்தி, துர்கா பரமேசுவரியாக இரக்தபீஜன் எனும் அரக்கனை அழித்தபோது, அரக்கனின் மகன்களான நிசும்பன் முதலிலும் பின்னர் அவன் தம்பி சும்பனும் தேவியுடன் போர் தொடுத்தனர். அகம்பிடித்த அரக்கர்கள் இருவரையும் தேவி அழித்தாள். அப்போது அவள் பூண்ட வடிவே 'நிசும்பசூதனி' என்று சொல்கிறார்கள்.
ஆறு அடிக்கும் உயரமான இந்தச் சிலையில், தேவி அமர்ந்த கோலத்தில், பல கரங்களுடனும், கரங்களில் பல படைக்கலன்களுடனும், தலையில் கேசம் தீ போல மேலெழும் விதத்திலும், முகத்தில் உறுதியுடனும், வலது காதில் பிரேத குண்டலத்துடனும், பாம்பை ஆடையாக அணிந்த துபோலவும், உடலில் சதையில்லாமல் மெலிதாகவும், மண்டை ஓடுகள் அணிந்த மாலையுடனும், அவளது காலின் கீழ் நான்கு அசுரர்களும் (சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன்) வதைபடுவதுபோல் இருக்கும் காட்சி மயிற்கூச்செரியவைக்குமாம் (இந்த இரண்டு கோயில்களுக்கும் துரை செல்வராஜு சார் அடுத்த முறை கூட்டிக்கொண்டு செல்வார் என்று நினைக்கிறேன்.. ஆமாம் அவர் தரிசித்துவிட்டாரா?)
தஞ்சை என்ற பெயரை நினைத்தவுடன் விஜயாலய சோழன் நிர்மாணித்த நிசும்பசூதனி பற்றிய தேடலின்போது கிடைத்த விவரங்கள் மேலே எழுதினேன்.
தஞ்சையில் சோழர்கள் பல கோயில்களை எழுப்பியிருக்கின்றனர். அதிலும் வெற்றிக்குப்பிறகு எழுப்பப்பட்ட நிசும்பசூதனி கோயில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் அனைத்தும் அழிந்துபட்டாலும், தேவியின் திருமேனி இன்னமும் இருப்பதே நமக்கு மிக மகிழ்ச்சியான செய்திதான். (இதை எழுதும்போது திருச்சியிலிருந்து 20 கிமீ தூர த்தில் உள்ள லால்குடி அருகே உள்ள காட்டூர் என்று சொல்லப்படும் கொத்தமங்கலத்தில் உள்ள இராஜகேசரி விண்ணகரம் என்ற பெருமாள் கோயிலைப்பற்றிப் பார்க்க/படிக்க நேர்ந்தது. இதன் அடிப்பாகம் கற்றளியாகவும் மேல்பாகம் முழுவதும் செங்கல்லினால் அமைந்த விமானமாகவும் மிகவும் சிதைவுற்ற நிலையில் உள்ளது. இங்குதான் இராஜராஜன் ஐப்பசி சதய நாளில் பிறந்தவன் என்று கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. அரசுகளின் அலட்சியத்தினால் இந்தக் கோயில் மிகவும் சிதைவுற்று உடைந்துவிடும் நிலையில் உள்ளது. கோயிலில் மூர்த்தங்கள் எதுவும் இல்லை) உங்கள் புரிதலுக்காக (நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பது) கீழே இணையத்தில் கிடை த்த இரு படங்களைக் கொடுத்துள்ளேன். இதுவும் நான் சென்று பார்க்க நினைத்திருக்கும் கோயில்.
இதோ நீங்கள் நந்தி மண்டபத்தை நெருங்கிவிட்டீர்கள். இனி ‘சிவன்’ சிந்தனைதான் மனதை ஆக்கிரமிக்கவேண்டும், வேறு எண்ணம் கூடாது என்று சொல்கிறதோ இங்கு வைக்கப்பட்டிருக்கும் ‘சிவ சிவ’ என்ற எழுத்துக்கள்?
நந்தி மண்டபத்தின் விதானத்தில் அழகிய ஓவியங்கள் அமைந்திருக்கின்றன. இவை நாயக்கர் காலத்தவை. (16ம் நூற்றாண்டு)… ஓ.. தஞ்சைக் கோயிலில், அதுவும் இராஜராஜ சோழன் கட்டிய கோயிலில் இவங்க வந்து மாற்றம் செய்துவிட்டார்களா என்று அலட்சியமாக நினைத்துவிடாதீர்கள். இந்த நாயக்கர் வம்சத்திற்கு இந்து சமயத்திற்குத் தொண்டாற்றியதில் மிகப் பெரிய பங்கு இருக்கிறது. வெளிநாட்டு முஸ்லீம்கள் படையெடுப்பினால் அழிந்த நம் இந்து சமயப் பாரம்பர்யத்தை மீட்டெடுத்ததில் மிகப் பெரிய தொண்டாற்றியவர்கள் இவர்கள்.
நான் ரொம்ப சிறியவனாக இருக்கிறேனாம். பெருவுடையாருக்கு ஏற்றபடியான அளவில் இல்லையாம். அதனால் என்னைவிட மிகப் பெரிதான அளவில் 16 அடி நீளம், 13 அடி உயரம் உள்ள புது நந்தியை நாயக்கர்கள் அமைத்துவிட்டார்கள். என்னை பிரகாரத்தில் வைத்துவிட்டார்கள். இறைவனுடைய அளவுக்கு ஏற்றபடி நந்தி இருக்கவேண்டும் என்று ஏதேனும் இருக்கிறதா என்ன? இறைவன் உயரத்தை யாரேனும் நினைத்துப்பார்க்க முடியுமா? இருந்தாலும் மராத்தியர்கள் ஆசை. அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. என்னால் இங்கிருந்தபடியே எல்லா பக்தர்களையும் பார்க்க முடிகிறது.
பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையில் பார்த்த நந்தியையும் (இதுபோல மணிகளுடனும் சிறிய கொம்புகளுடனும் கூடியது) பழுவேட்டரையர் பாணி நந்தி என்று குறிப்பிட்டிருந்தனர்.தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் போன்று இங்கும் இராஜராஜன் வாயிலுக்கு வெளியேதான் நந்தியும் பலிபீடமும் அமைந்திருந்திருக்கவேண்டும், முஸ்லீம் படையெடுப்பு காரணமாக ஏற்பட்ட சிதைவில், பிறகு வந்த நாயக்க மன்னர்கள், இந்த நந்தியை வெளிப்பிராகாரத்தில் (திருச்சுற்று) வைத்துவிட்டு, ஒற்றைக்கல்லால் ஆன மிகப் பெரும் நந்தியை தற்போதுள்ள இட த்தில் வைத்திருக்கிறார்கள்.
இந்த நந்தி மண்டபம், நந்தி, மற்றும் பல்வேறு செய்திகளைச் சொல்லும் நேரம் இதுவல்ல. அதனை எழுதுவதற்கு முன்பு, தஞ்சை எவ்வாறு நாயக்கர் ஆட்சிக்குள் வந்தது என்று எழுதவேண்டும். அதனைப் பிறகு காண்போம். அப்போது இந்தப் படங்களைத் திரும்ப ஒரு முறை பார்த்தால் எளிதாகப் புரிந்துவிடும்.
சோழர் தலைநகரமாக தஞ்சை பல வருடங்கள் இருந்ததில்லை. உறையூர், பழையாறை போன்றவை அந்தச் சிறப்பினைப் பெற்றிருந்தன. அந்த நகரங்களைவிட, கங்கைகொண்ட சோழபுரம் 200 ஆண்டுகளுக்கும் குறையாமல் சோழப் பேரரசின் தலைநகரமாக இருந்தது. அப்படி இருந்தபோதிலும் தஞ்சை பெருவுடையார் கோயிலின் சிறப்பால் இராஜராஜ சோழனுக்கே நிலைபெற்ற பெருமை இருந்துவந்திருக்கிறது.
கண்டராதித்தர் மறைந்ததும் (கிபி 962) அவரது செம்பியன்மாதேவி தன் குழந்தையான மதுராந்தகனுக்காக உயிர் வாழ்ந்திருந்தார். கண்டராதித்தனுக்குப் பின் அவனது தம்பி அரிஞ்சயசோழன் ஆட்சியிலும், அதன் பிறகு அரிஞ்சயசோழன் மகன் சுந்தரச் சோழனின் ஆட்சியிலும், பிறகு உத்தமச்சோழன் ஆட்சியிலும், அதன் பிறகான ராஜராஜ சோழனின் ஆட்சியிலும் கிபி 1001 வரையிலும் உயிர் வாழ்ந்திருந்தார். கிட்டத்தட்ட ராஜமாதா. இவர் பல கோயில்களை செங்கல்லிலிருந்து கற்றளியாக ஆக்கியவர், நிறைய இறையிலி நிலங்கள் கொடுத்தவர், பல கோயில்களுக்கு பொன் வெள்ளியிலாலான கலன்கள் செய்துகொடுத்திருக்கிறார். இவர் கடைசியாக திருப்பணி செய்த கோயில் திருவக்கரையிலுள்ள சந்திரமௌலீஸ்வரர் கோயில் (இது முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பெற்றது. கோயில் படங்கள் இரண்டை இணையத்திலிருந்து கீழே கொடுத்துள்ளேன். பார்த்த உடனேயே சோழர் கலை அமைப்பு என்பது தெரியும்)
ராஜராஜன் ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டிற்குள் சேர பாண்டிய மன்னர்களைத் தோற்கடித்தான். அந்த வெற்றியினால் அந்த இரு மன்னவர்களின் முடியும் இவன் வசமாயிற்று. காந்தளூர் வெற்றிக்குப் பிறகு ராஜராஜன் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுவதால், அந்தப் பெயர், அரச பதவிக்கு வந்து மூன்றாண்டுகள் கழித்தே இவனுக்கு வந்திருக்கவேண்டும். சேர பாண்டியர்களை வென்றதால் மும்முடிச் சோழன் என்றும் அழைக்கப்பட்டான். அதனால் ஆட்சிக்கு வந்தபோது அருண்மொழி வர்மன் என்றிருந்த பெயர், காந்தளூர்ச் சாலை வெற்றிக்குப் பிறகு ராஜராஜன் என்று மாறியிருக்கிறது (988ல்)
கல்வெட்டுகளில் அரசனின் மெய்க்கீர்த்தியை எழுதும் வழக்கத்தை (அதுவும் தமிழில்) கொண்டுவந்தவன் இவனே என்று கூறலாம். இந்த மெய்கீர்த்தி, அரசன் பெறும் வெற்றிகளினால் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகும். அதுவும் எல்லாம் வரிசைப்படி அதில் குறிக்கப்படுவதால், முதலில் நடந்தது என்ன, அதற்கு அப்புறம் என்ன வெற்றி என்பதெல்லாம் சுலபமாகப் புலப்படும்.
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும், தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக், காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி, வேங்கை நாடும் கங்கபாடியும், நுளம்பபாடியும் தடிகைபாடியும், குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும், எண் திசை புகழ்தர ஈழமண்டலமும், இரட்டபாடி ஏழரை இலக்கமும், முந்நீர் பழந்தீவு பன்னீராயிரமும், திண்திறல் வென்றித் தண்டாற் கொண்ட தன், எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும், தொழுதகை விளங்கும் யாண்டே, செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோ ராஜகேசரி வன்மரான ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு
சுருக்கமான பொருள்: செல்வத்துக்கு அதிபதியான இலக்குமியையும், நிலத்துக்கு அதிபதியான பூமாதேவியையும் தனக்கே உரிமை பூண்டவனாக இருக்கிறான். வேங்கை நாடு-கிருஷ்ணா கோதாவரி நதிகளுக்கிடையேயான கீழைச் சாளுக்கிய நாடு. கங்கபாடி-மைசூருக்குத் தெற்கே கங்கர்களின் நாடான கங்கபாடி (இதன் தலைநகரம் தலைக்காடு-தழைக்காடு), மைசூர் இராஜ்யத்தின் கீழ்ப்பகுதியையும் பல்லாரியையும் தன்னுள் கொண்ட நாடான நுளம்பபாடி (இதனை பல்லவர்களின் ஒரு கிளையான நுளம்பர்கள் ஆண்டுவந்தனர்) , மைசூரைத் தன்னகத்தே கொண்ட அரசான தணிகைபாடி (தடிகைபாடி என்றும் குறிப்பிடப்படுகிறது), சேரநாட்டில் உள்ள கொல்லம், ஒரிசாவின் தென்பகுதியில் இருந்த கலிங்க நாடு, இலங்கை, மஹாராஷ்டிராவின் தென்பகுதியான இரட்டைப்பாடி, கடல் படை கொண்டு வென்ற, முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என்று அழைக்கப்பட்ட மாலத்தீவுகள். திறமை மிக்க படைகளைக் கொண்டு வெற்றி பெறும் இராஜராஜனுக்கு எல்லா ஆண்டும் பெருமை வாய்ந்த ஆண்ட. செழியன் என்று அழைக்கப்பட்ட பாண்டியர்களின் புகழ் மங்கும்படியாகச் செய்த ராஜகேசரி ராஜராஜ தேவர்.
இது போல, ஒவ்வொரு அரசனின் மெய்கீர்த்தியும் அதன் தொடக்கத்தை வைத்து இந்த அரசனுடையது என்று அறிய முடியுமாம். இராஜராஜன், ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல என்று தொடங்குவான். அதுவே ‘திருமன்னி வளர’ என்று தொடங்கினால் இராஜேந்திர சோழன், “திருமன்னி விளங்கு” என்றால் முதலாம் குலோத்துங்கன் என்றெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்.
ரொம்பப் பக்கத்தில் சென்றுவிட்டால் கோயிலின் பிரம்மாண்டம் தெரியவில்லை அல்லவா?
இன்றைக்கு வரலாற்றுத் துணுக்குகளும் படங்களும் அதிகமாகிவிட்டன. அடுத்த பகுதியில் தொடர்வோம்.
// தஞ்சைப் பெரிய கோயிலை இப்போதுதான் காண ஆரம்பித்திருக்கிறோம். அதற்குள் அது பொலிவிழந்த காரணத்தைக் காண வேண்டாம். பிறகு ஒரு பகுதியில் பார்ப்போம்.
பதிலளிநீக்குஇந்த நந்தி மண்டபம், நந்தி, மற்றும் பல்வேறு செய்திகளைச் சொல்லும் நேரம் இதுவல்ல.
அதனை எழுதுவதற்கு முன்பு, தஞ்சை எவ்வாறு நாயக்கர் ஆட்சிக்குள் வந்தது என்று எழுதவேண்டும். அதனைப் பிறகு காண்போம். //
அப்புறம் சொல்றேன், அப்புறம் சொல்றேன்னு மூணு அரியர்ஸ் இருக்கு. எப்புறம் வரும் என்று சொல்லவேண்டும்! மறக்காமலிருக்க வேண்டும்!!!
வாங்க ஶ்ரீராம். இந்த விவரங்கள் வரும் பகுதிகளில் வரும். இந்தத் தொடர் பதிவில் தஞ்சை மராத்தியர் ஆட்சிக்கு உட்பட்டது வரை வரும். வரும் ஜனவரி வரை வரலாம்.
நீக்குஉக்ரமாகாளி நிசும்பசூதனி சிற்பங்களில் அந்தக் கால சிற்பமாக கடைசியில் காட்டப்பட்டிருப்பது அழகாக அலங்காரங்கள் இல்லாமல் இயற்கையாக இருக்கிறது.
பதிலளிநீக்குஎனக்கு தோன்றியதையே நீங்களும் படத்தை அடுத்து சொல்லி இருக்கிறீர்கள்.
ஆமாம் ஶ்ரீராம். பல்வேறு சிலைகள், சிற்பங்கள் பல கோயில்களில் இடம் மாறியிருக்கின்றன அல்லது வேறு கோயில்களுக்குத் தூக்கிச் செல்லப்பட்டிருக்கின்றன.
நீக்குதற்போதிருக்கும் திருக்கழுகுன்றம் பல்லவர் காலத்தின் ஆரம்பத்திலிருந்து (அதற்கு முன்பும்) இருந்திருக்கிறது. 3ம் நூற்றாண்டில் கருவறையாக இருந்து, பழைய இலக்கியங்களில் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருந்த இடம் இப்போது அலுவலகமாக இயங்கிக்கொண்டிருக்குறது-மூலவர் வேறு இடத்திற்குச் சென்றுவிட்டார், இன்னும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றியும் படிக்க நேரிட்டது.
// இதற்கெல்லாம் என்ன காரணம் என்று உங்களுக்குத் தோன்றுகிறது? எழுதுங்களேன்.//
பதிலளிநீக்குதிராவிட மாடல்தான் காரணம். திராவிட தலைவர்கள் அப்போதே உதயமாகி இருந்தார்கள். அவர்கள் மக்களிடையே எழுச்சியையும் கல்வியையும் புகுத்தி மொழிப்பற்றின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தினார்கள்.
அப்போது வந்த ஒரு செய்திப் பத்திரிகையில் அப்போதே நாயக்கர் வம்சத்தில் வந்த பெரியார் ஒருவர் மொழிச் சீர்திருத்தத்தைப் பற்றி எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓலைகளில் ஆணிகளால் கீறும்போதும், கல்வெட்டுகளில் உளியால் செதுக்கும்போதும் ஏற்படும் சிரமங்கள் பற்றி அந்தக் கட்டுரை சொன்னது.
உளியால் அவர்கள் மட்டும்தான் செதுக்க வேண்டுமா என்கிற வினாவையும் அதில் அவர் எழுப்பி இருந்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தொடர்ந்த ஜீன் காரணமாக உளியின் ஓசை என்று ஒரு காவியமும் படைக்கப்பட்டது.
தமிழகத்தில் கிமுவிலும் பல்வேறு மொழி பேசும் மக்களும் வாழ்ந்திருந்தனர். அதுபோல ப்ராக்ருதம், சமஸ்கிருதம் போன்றவையும் வழக்கில் இருந்தன. தமிழ் மொழிதான் மெஜாரிட்டி என்பதையும் மனதில் வைக்கவும். ராஜராஜனின் மகத்தான சாதனையாக நான் கருதுவது, எல்லாவற்றையும் கல்வெட்டில் மிக அழகாகச் செதுக்கச் செய்தது.
நீக்குஈவெ ராமசாமி நாயக்கர் தன்னை கன்னடர் என்றே சொல்லிக்கொண்டார். தமிழை காட்டுமிராண்டி பாஷை எனச் சொன்னவரும் அவரே. திராவிடம் என்ற வார்த்தையைக் கொண்டுவந்தவர்கள் தெலுங்கர். காரணம், தமிழை உயர்த்திப்பிடித்தால் தமிழகத்தில் அவர்கள் அரசியலில் கோலோச்சமுடியாது என்ற காரணமே. இதே காரணம்தான் மத்த்தால் தனி தேசத்தை உருவாக்க வைத்தது
இன்றைய வரலாற்று பாடம் கொஞ்சம் கூடுதல். நினைவில் தக்க வைக்க முடியவில்லை. உதாரணமாக மெய்க்கீர்த்தி முழுவதையும் நீங்கள் எப்படித்தான் நினைவில் வைத்திருந்தீர்களோ என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குஆழ்வார்க்கடியான் போன்று தீவிர வைணவர் ஆன நீங்கள் சைவ பெருவுடையார் கோயிலைப்பற்றியும் விவரமாக எழுதுவதும் படம்களை போடுவதும் வியப்பை தருகின்றன.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். மெய்கீர்த்தியை நினைவில் எப்படி வைத்திருக்கமுடியும்? ஓரளவுதான் நினைவில் இருக்கும். தீவிர வைணவம் என்று என்னிடம் கிடையாது. இந்து மதத்தின் எந்தக் கூறையும் குறை சொல்லுதலோ இல்லை தாழ்த்திப் பேசுதலோ எனக்குப் பிடிப்பதில்லை. பக்தி என்று வரும்போது, அதில் கட்சி சேர்ப்பது சரியான விஷயமாகத் தெரிவதில்லை.
நீக்குவரலாறு பாட ஆசிரியர் நெல்லை, நான் அடுத்த வகுப்புக்கு லீவு போட இப்பவே லீவு லெட்டர் கொடுத்திட்டேன்.
பதிலளிநீக்குஇன்னிக்குப் பாடத்துலயும் டெஸ்ட் வைச்சிருக்கீங்களே!!!!! ஹாஹாஹாஹாஹா....முடிஞ்ச வரை பதில் சொல்லறேன் ஹிஹிஹி ஏனென்றால் பாடம் சரியா படிக்க முடியலை ரொம்ப பிசி!!!!!
// இதற்கெல்லாம் என்ன காரணம் என்று உங்களுக்குத் தோன்றுகிறது//
டிப்ளமசி? பல மொழி பேசும் சமூக மக்களுக்காகவும், தான் எல்லோரையும் ஆதரிக்கிறேன் என்பதாகவும், கூடவே பூசைளுக்கான மந்திரங்கள் எல்லாம் சமஸ்கிருதம்தானே அப்பவும், ஸோ அதைப் பின்பற்றும் வகையிலும், ஆட்சியின் நிலைப்பாடைச் சொல்லுவதற்காக இருக்கும் என்று தோன்றுகிறது.
கீதா
வாங்க கீதா ரங்கன். நான் படித்ததை, கொஞ்சம் எளிமையாகக் கொடுக்க முயல்கிறேன். எனக்கும் நினைவில் இருக்கவேண்டும் இல்லையா? அரசன் என்பவன் பல்வேறு சமூகத்துக்கும் தலைவன். இருந்தாலும் அப்போது கல்வியறிவு பெற்ற மக்கள் தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அதே சமயம், தமிழ் புலவர்கள், எது தமிழ், எது சமஸ்கிருத வார்த்தை என்பதையும் சரியாக அறிந்திருந்தார்கள், இருமொழி கலப்பு இருந்தபோதும்.
நீக்குஅது சரி.. நீங்க எப்போ பிஸியில்லாம இருந்திருக்கீங்க?
இன்னொன்று சொல்ல விட்டுப் போச்சு முக்கியமானது. சோழர் காலத்துல நினைச்சிருப்பாங்க... பல பல வருஷங்களுக்குப் பிறகு பிறக்கப் போகும் கீதாவுக்கு சமஸ்கிருத்ம் எல்லாம் அவ படிக்க மாட்டா தெரியாது... அவ வந்து பார்த்தா புரிஞ்சுக்கணுமே என்று தமிழ்ல கல்வெட்டு வைச்சிருப்பாங்க!!! ஹிஹிஹிஹி
நீக்குகீதா
சோழர்களும் கூட தமிழகத்தின் வடக்கிலிருந்து வந்ததாகவும் சொல்லப்படும் இல்லையா? அப்ப சமஸ்கிருதமும் புழக்கத்தில் இருந்திருக்கும் அவர்களீடையே?
பதிலளிநீக்குஇன்று நிறைய இருக்கே வாசிக்க.....மெதுவாதா முடியும். செம டைட்
கீதா
என் அப்பா காலம் வரை, பள்ளிகளில் சமஸ்கிருதம் உண்டு. அவர் வேலை பார்க்க ஆரம்பித்ததும் அது இல்லை. பிறகு ஹிந்தி கற்பிக்கும் வாய்ப்பு வந்ததும், அத்தகைய பள்ளிகளை, ஹிந்தியை எதிர்த்த அரசியல்வாதிகள் அனைவரும் எடுத்து நடத்த ஆரம்பித்துவிட்டனர். மங்கலச் சொற்கள் மாத்திரம் சமஸ்கிருதம், மீதி தமிழில் என்று மெய்கீர்த்திகள் ஆகிவிட்டன
நீக்கு(கொற்றவை, பிடாரி, காளிதேவி என்று பல பெயர்களில் அம்மன் கோயில் உண்டு//
பதிலளிநீக்குராஜராஜ சோழன் படத்திலும் கூட பராசக்தியை ஆராதிக்கும் வசனம் உண்டோ? இல்லை வேறு எதுவுடனும் நான் குழப்பிக் கொள்கிறேனோ? தெரியலை
கீதா
எனக்கு ராஜராஜ சோழனிலும் பராசக்தியிலும் சிவாஜி கணேசன் நடித்திருக்கிறார் என்பது மாத்திரமே தெரியும். ஹாஹாஹா
நீக்குநிச்சயம் 'பராசக்தி' பற்றி ராஜராஜ சோழனில் வசனம் இருந்திருக்கும்.
நிசும்பசூதினி - பெயரும் அழகும் உருவச் சிலையும் சூப்பர்.
பதிலளிநீக்குஎல்லாப் படங்களும் வழக்கம் போல் சூப்பர். அப்பால வாரேன்
கீதா