18.2.26

எந்தக் காரணமும் இல்லாமல் ஒருவரை/ஒருத்தியை வெறுக்க முடியுமா?

 

கேள்வி பதில்கள் : 

கீதா சாம்பசிவம்: 

உலகெங்கும் மாமியார், மருமகள் இடையேயான இடைவெளிக்கு மனதத்துவரீதியான காரணம் உண்டா? இது என்னைக் கொஞ்சம் இல்லை நிறையவே குழப்பமடைய வைக்கும் ஒரு விஷயம். பெண்கள் கல்யாணம் நிச்சயம் ஆனதிலிருந்தே மாமியார் என்னும் உறவை வெறுக்கும் காரணம் என்ன? அதுவே அவங்க சொந்த அம்மான்னா வேறே நியாயம். ஏன் இந்த முரண்பாடு?

# நிச்சயமாக இது எல்லா இடங்களுக்கும் பொருந்தாது.  எனினும், மாமியார் மருமகள் இடையே முழு நம்பிக்கையும் பெரிய அளவில் இணக்கமோ பிரியமோ காணப்படுவதில்லை என்பதில் உண்மை இல்லாமலில்லை.

"என்னை என் களத்திலிருந்து பிடுங்கி வந்த மனுஷி " என்று மருமகளும், " என் அன்பான பிள்ளையின் அன்புக்கு என்னைக் காட்டிலும் அதிகம் பாத்திரமாகி இருப்பவள் " என்று மாமியாரும் தாம் அறியாமலே ஒரு மனப்போக்கு கொண்டவராக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதே போல் தன்னை விட மற்றவர் செல்வாக்காக, வசதியாக ஏன்- அழகாகக் கூட  இருப்பது காரணமாக சில மன வேறுபாடுகள் தோன்றும். தன் மகள் மருமகள் இருவரையும் ஒப்பிட்டு ஆழ்மனதில் பொறாமை முளைப்பதை உணராமலே வளர்த்துக் கொள்வது மனித இயல்பு.

தான் ஏமாற்றப் பட்டு விட்டோம் அல்லது ஏமாறுகிறோம் என்ற உணர்வு வருமானால் பிணக்கு தான் பின்விளைவு.

எந்தக் காரணமும் இல்லாமல் ஒருவரை/ஒருத்தியை வெறுக்க முடியுமா?

# முடியும். நம் மன அலைகள் சில அலைகளை வெளித் தள்ளுகின்றன.  அது ஏன் என்று விளக்க இயலாது. 

சிலரைப் பார்த்ததுமே பேசத் தோன்றுவதும் சிலரிடம் நெருங்காமல் விலகி இருப்பதற்கும் என்ன காரணம்? போன ஜென்மத்துச் சொச்சமா?

# கர்ம பலன்தான் தொடர்கிறதே தவிர விருப்பு வெறுப்புகள் அல்ல. முந்தைய கேள்வியை இங்கு இணைத்துப் பார்க்கவும்.

போன ஜன்மத்துத் தம்பதிகள் இந்த ஜன்மத்திலும் ஒன்று சேருவார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

# முடியவில்லை.

ஆண்  குழந்தைக்கே முக்கியத்துவம் அளிப்பதின் காரணம் என்ன?

# பெண் மணமாகி இடம் மாறி விடுகிறாள், நமக்கு ஆதரவாக  இருக்க இயலாது என்பதால் இருக்கும்.  மகள்களை சொத்துரிமை தராமல் விலக்கி வைத்திருந்த சமுகம்தானே. 

இப்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் 40 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் ஒரே பிள்ளையாக இருப்பதால் அவங்க குடும்பத்தில் சந்ததிப் பெருக்கமே இல்லாமல் முற்றிலும் அழிந்து விடும். இந்நிலை உருவாவது ஏற்கக் கூடியதா?

# இதில் ஏற்கவோ எதிர்க்கவோ எதுவுமில்லை. முற்றிலும் நம்பிக்கை அடிப்படையிலான விஷயம்.

நெல்லைத்தமிழன் : 

1. மதுரையைச் சேர்ந்த விருமாண்டியின் தலைமுறை, 60,000 வருடங்களுக்கு முன்பு, 9 தலைமுறையைச் சேர்ந்த 13 பேர்களுடன் ஆப்பிரிக்காவிலிருந்து மதுரையில் குடியேறிய நேரடிச் சந்ததியினர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆமாம், நீங்க உங்க சொத்தை ஆப்பிரிக்காவிலிருந்து எப்போ மீட்கப் போறீங்க?   

# எங்கு யார் சொன்ன தகவல் இது ?

2. புத்தகங்களில் அறிவியல் புத்தகங்கள், சரித்திர நாவல்கள், வரலாற்றுப் புத்தகங்கள், உடல் நலத்துக்குள்ளானவை போன்றவை தவிர,  கவிதைகள், அத்தைப் பாட்டி கதைகள் போன்றவற்றால் யாருக்கேனும் உபயோகம் இருக்கிறதா?  

# பொழுது போக்கும் ஒரு உபயோகம்தானே.

3. பக்கத்து வீட்டில் தகறாரு பண்ணிக்கொண்டிருந்த இருவரை விலக்கிவிட்டதால் நீங்களும் நோபல் சமாதானப் பரிசுக்குத் தகுதியானவர் ஆகிவிட்டீர்களா?   

# நோபல் இலக்கியம் மற்றும் சமாதானம் இவற்றுக்கு வழங்குவதில் பல ஆட்சேபங்கள் வந்திருக்கின்றன. தற்போது நோபல் பரிசின் மதிப்பு மரியாதை கூட முன்பு போல் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது.

$ பங்களாதேஷ் இடைக்கால அதிபராயிருந்து, இப்போது தேர்தலுக்குப் பின்  வெளியேறும் முகமது யூனுஸ் கூட நோபல் பரிசு பெற்றவர்தான்!

4. பிகாசோ போல, வாழ்ந்த காலத்தில் தங்களின் ஓவியக் கலையால் நிறைய சம்பாதித்துப் பெரும் பணக்காரர்களாக ஆனவர் உண்டா? இல்லை டா வின்ஸி போல செத்த பிறகுதான் அவருடைய கலை, கோடிக்கணக்கான டாலர்களுக்கு விலை பேசப்படுமா?   

# சால்வடார் டாலி இருந்தாரே. நமக்கு தெரியாத இன்னும் பலரும் இருந்திருக்கக்கூடும்.

5. ஓ.டி.டி தளங்களில் ஏகப்பட்ட படங்கள், தொடர்கள், டாகுமெண்டரிகள் இருக்கின்றன. ஒரு ஓடிடி தளத்தில் என்ன என்ன இருக்கின்றன என்பதை எப்படி அறிந்துகொள்வது? ஒவ்வொன்றாகத் தேடுவது முடியாத காரியமல்லவா? ஏன் இதனைப் பற்றி ஒரு தளமும் சிந்திப்பதில்லை?

# என்ன வேண்டும் என்று தெரிந்து கொண்ட பிறகுதான் ஓடிடி தளத்தில் தேட வேண்டும். கொஞ்சமாக இருந்தால்தானே மெனு கார்டு போட முடியும் ?

$ அந்தந்த OTT தளங்களைத் திறந்தால் உள்ளே என்னென்ன படங்கள் இருக்கின்றன என்று பார்க்க முடிகிறதே...

6. யாரை சமூகம் ரொம்ப காலமாக நினைவுகூரும்? எழுத்தாளர்களையா, அரசர்களையா, நடிக நடிகைகளையா, சமூக சேவகர்களையா?   காலத்தை வென்றவன்/வள் (இந்த வள் பெண்ணுக்காக) என்று யாரையேனும் சொல்ல இயலுமா?

# இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த யார் யாரை நாம் நினைவு வைத்துக் கொண்டு போற்றுகிறோம் என்று யோசித்துப் பார்த்தால் இது தானே விளங்கி விடுமே.  இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் போனாலும் ஆதிசங்கரர் இயேசுநாதர் கௌதம புத்தர் இவர்களெல்லாம் மக்கள் நினைவில் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதில் கம்பர் வால்மீகி புதுமைப்பித்தன் இவர்களெல்லாம் இருப்பார்களா என்று நாம் உறுதியாக சொல்வதற்கில்லை.

= = = = = = = = = = =

படமும் பதமும் :

பானுமதி வெங்கடேஸ்வரன் : 




வயிற்றுக்கு சோறுண்டு கண்டீர் இங்கே வழிபடும் மனிதருக்கெல்லாம்ஞாயிறன்று சிவராத்திரியை முன்னிட்டு கனடாவில் இருக்கும் சாயி சென்டரில் ஞாயிறு மாலை ஆறு மணிக்குத் தொடங்கி,திங்கள் காலை ஆறு மணி வரை ருத்ரம் ஓதுதல் மற்றும் பஜனை இருந்தது. 
அதில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு  வந்தவுடன் சமோசா வுடன் காபி, 7:30 முதல் 9:30 வரை பாஸ்தாவில் ordinary, spicy என்று இரண்டு வகை, இரண்டு வித சட்னிகள், சாம்பார், மிளகாய்ப் பொடியோடு மசால் தோசை. Coconut milk ball sweet.
11 மணியிலிருந்து டெக்கர் சாண்ட்விச், தேன்குழல், சுகியன் போல ஒரு இனிப்பு இருந்தது. 
இவைகளைத் தவிர சமைத்த உணவு சாப்பிடாதவர்களுக்காக பழங்களும் இருந்தன. மாலையிலிருந்து காலை நிகழ்ச்சி முடியும் வரை சுடச்சுட அருமையான காபி கிடைத்தது ஒரு சிறப்பு.

நெல்லைத்தமிழன் : 
 

பஹ்ரைனில் நிறைய கஃபூஸ் கடைகள் உண்டு. இது ஈரானிய ரொட்டிகள் தயாரிக்கும் கடைகள். அரசு, மிகச் சலுகை விலையில் எவ்வளவோ வருடங்களுக்கு முன்பிருந்தே, கோதுமை மாவு, மைதா, ரவை போன்றவைகளை மக்களுக்குக் கிடைக்கும்படிச் செய்துகொண்டிருந்தது. இந்திய கோதுமை மாவு கிலோ 40 ரூபாய் என்றால் அரசு தரும் கோதுமை மாவு 10 ரூபாய். கபூஸ் என்று சொல்வது நம்முடைய தந்தூரி ரொட்டி, நான் போன்றதுபோல.  இதில் 1 1/2 அடி அளவு மெல்லிய ரொட்டியும் கிடைக்கும் அல்லது 1 அடிக்கு கொஞ்சம் தடிமனான ரொட்டியும் கிடைக்கும். 5 ரொட்டிகள், அதிகமில்லை 12 ரூபாய். 2018 வரை நிலைமை அப்படித்தான் இருந்தது. இதில் சீஸ் போட்ட ரொட்டி வேண்டும் என்றால் அது ஒன்று 12 ரூபாய். ரொம்ப ருசியாக இருக்கும். வீட்டில் சைட் டிஷ் செய்துகொண்டால் இந்த ரொட்டிக்கு மிக நன்றாக இருக்கும். பஹ்ரைன் மக்கள் இதனை 20-30 என்று வீடுகளுக்கு வாங்கிச் செல்வார்கள். இதற்கு கடையிலேயே 12 ரூபாய் அல்லது 24 ரூபாய்க்கு கொண்டைக் கடலையை வைத்துச் செய்யும் சைட் டிஷ் கொடுப்பார்கள்.

மாவு பிசைய பெரிய மெஷின். பிறகு கைகளால் ரொட்டியைத் தட்டி, பிறகு தந்தூரில் வைத்து எடுத்துத் தருவார்கள்.


சுத்தமான தயாரிப்பு.

= = = = = = = =



எகிப்து நாட்டில் பிரமிடுகளில் உள்ள மன்னர்களின் கல்லறைகளில், 2000 ஆண்டுகள் பழமையான, தமிழ் - பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள், கடல் கடந்து வணிகம் செய்தது உறுதியாகி உள்ளது.

எகிப்தின் புகழ்பெற்ற பிரமிடுகளில் உள்ள மன்னர்களின் கல்லறைகளில், சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மொத்தம் 30 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 20 கல்வெட்டுகளில், தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளது.
கல்வெட்டுகளில் 'சிகை கொற்றன் என்ற பெயர், 5 பிரமிடுகளில், 8 இடங்களில் இடம்பெற்றுள்ளது. ஒரு கல்வெட்டில், 'சிகை கொற்றன் வர கண்ட' என பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள். 'சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தார்'  என்பதாகும்.

இதன் மூலம், தமிழ் வணிகர், 2000 ஆண்டுகளுக்கு முன்பே, கடல் கடந்து எகிப்து சென்று வணிகம் செய்தது உறுதியாகி உள்ளது. மேலும், ரோமர்கள் காலத்தில், இந்தியா மற்றும் எகிப்து இடையே, வலுவான வர்த்தக உறவுகள் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்-பிராமி கல்வெட்டுகள், வெளிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பழங்கால தமிழ் வர்த்தகர்கள், உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதற்கு, இக்கண்டுபிடிப்பு மேலும் வலுசேர்த்துள்ளது.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

தமிழிசைக்கும் ஹிந்துஸ்தானி இசைக்கும் சிண்டு முடிதல்...


அ. லெ நடராஜன் 1943 ல் எழுதிய தமிழ் இசைப் பாட்டுக்கள் என்கிற புத்தகத்திலிருந்து டி. கே/ சி முதலியாரின் முகவுரையில் ஆரம்பபபகுதி! :-

தாமரை, நீலோத்பலம், ஆம்பல் முதலிய மலர்கள் பூத்திருப்பதைக் கண்டால், அவைகளின் உருவத்தை, அற்புதமான உருவத்தை, எப்படி உண்டாக்கியது இந்தத் தடாகம் என்று அதிசயிக்கிறோம்.

அப்படியே, நம்முடைய முன்னோர்களின் இதயத்தின் ஆழ்ந்த ஆனந்த தத்துவத்திலிருந்து பண்கள் ஒலியுருவமாய்ப் பூத்தன. அந்த இசைமலர்களின் இதழ்களையும், நெளிவுகளையும், குழைவுகளையும் வியந்து வியந்து அனுபவித்தார்கள், அவைசகளுக்குப் பெயரிட வேண்டிய அவசியமும் நேர்ந்தது; (வரம்பிட்ட எந்த உருவத்துக்கும் பெயரிட வேண்டிய அவசியம் நேரத்தானே செய்யும்) பெயரிடவும் செய்தார்கள். புஷ்பங்களை வைத்தே பெயரிட்டார்கள். மருதம் (மருதமலர்),கு,றிஞ்சி (குறிஞ்சிமலர்), பாலை (பாலைமலர்), என்று நிலத்துக்குப் பெயர் கொடுத்தமாதிரி பண்களுக்கும் பெயர் கொடுத்தார்கள்.

இந்த விதமாகப் பெயர் கொடுத்ததிலிருந்தே நம்மவர்கள் பண்களை எவ்வளவாக அனுபவித்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. பெயர் கொடுத்ததே அற்புதம்; அதைவிட அற்புதம், தொடர்ச்சியாய்ப் பாடிப் பாடி பூர்வமான உருவத்தோடு நம் கைக்கு அந்தப் பண்கள் வந்திருப்பதுதான்.

* இசை மலர்கள் ​நம் கையிலிருக்கின்றன. ​நாம் அனுப​வித்துக் கொண்டும் இருக்கிறோம். பெயர்கள்தான் மாறியும் சிதைந்தும் போயிருக்கின்றன.

மிழ் நாட்டுக்கும் வட நாட்டுக்கும் நாலாயிர ஐயாயிர வருஷங்களாகவே தொடர்பு இருந்து வந்திருக்கிறது.

நம்மவர்கள் கங்கைக்கும் காசிக்கும் போயிருக்கிறார்கள். அப்படியே, கங்கைப் தொடர்புபிரதேசத்திலுள்ளவர்களும், ராமேசுவரத்துக்கும், கன்யாகுமரிக்கும். யாத்திரை வந்திருக்கிறார்கள்.

ப்படி வந்தவர்களில்ச் சிலர் தமிழ் நாட்டிலுள்ள பல ஸ்தலங்களில் வருஷக் கணக்காகத் தங்கினார்கள். தங்கி யிருந்த காலத்தில் கோயில்களில்பாடிய பாடல்களுக்குச் செவி கொடுத்து வந்தார்கள்.  தேவாரங்களையோ, நடனபதங்களையோ பாடும்போது பாடல்களின் பொருளோ, இதய பாவமோ, அவர்களுக்குத் தெரியவில்லைதான். ஆனால், பண்களின் வேறுபாட்டை ஒருவாறு உணர்ந்துகொண்டார்கள். பண்களுக்கான ஸ்வரஸ்தானங்களையும் குறித்துக் கொண்டார்கள். இப்படிக் குறித்துக்கொண்ட ஸ்வரங்களின் ஏற்ற இறக்கங்களை, தங்கள் நாட்டுக்குக் கொண்டு போனார்கள். அங்கே அவைகளை (ஸ்வர வரிசைகளைத் தான்) பாடவும் செய்தார்கள் - சங்கீதத்தில் வேறுபாடு வேண்டுமென்ற ஒரு காரணத்துக்காகத்தான்.

மேலை நாட்டாருக்கு, உள்ள பண் ஒரே பண்தான். அப்பாவிகள் என்ன செய்வார்கள்? அப்படியும் இப்படியுமாக ஸ்வரங்களை ஜோடித்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். வட நாட்டாரும், அதே முறையில் பண் வேறுபாடு என்று சொல்லுவதற்கில்லாமல் தமிழ் நாட்டி லிருந்து போன ஸ்வர வரிசைகளையே வைத்துக் கொண்டு பாடி வந்தார்கள். ஆனால், தமிழ்நாட்டுப் பெயர்களை அப்படியே ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுவது கஷ்டமாய் இருந்ததால் (உண்மையில்க் கஷ்டந்தானே,) ஏதேதோ பெயர்களை வைத்துக்கொண்டார்கள். தெற்கே யிருந்து வடக்கே திரும்பும்போது அனேக தேசங்களின் பெயர் தெரிய வந்தது; அந்தத் தேசங் களின் பெயர்களைச் சில ஸ்வர வரிசைகளுக்குக் கொடுத்து வந்தார்கள். மேலே கண்ட ஸ்வரவரிசைகளுக்கு இலக்கணமும் அமைத்துக்கொண்டார்கள். இலக்கணம் அமையவும், அங்குள்ள சங்கீதத்தில் ஸ்தானம் பெற்றுவிட்டன, அந்த ஸ்வரவரிசைகள்.

ல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டுப் பண்கள் வடநாட்டில் இடம்பெற்று, வேறான பெயர்கள் பெற்று, இலக்கணமும் பெற்று, வழங்க நேர்ந்தது. இப்படி வடக்கே வளர்ந்த சங்கீதத்துக்கு தேசிக சங்கீதம் என்றும் பிற்காலத்தில் ஹிந்துஸ்தானி சங்கீதம் என்றும் பெயர் வந்தது.

நாளடைவில் மேலே சொன்ன தேசிக சங்கீதத்தைப் பாடிக்கொண்டே தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்து சிலர் வந்தார்கள். தமிழ் நாட்டுக் கோயில்களுக்குள் அவர்கள் புகுந்தார்கள். அங்குள்ள தொன்மையான சங்கீதத்தைக் கேட்டார்கள். ராக வேறுபாடுகளையும் கண்டார்கள். ஸ்வர வரிசைகளையும் கண்டு அதிசயித்தார்கள். "பார்த்தீர்களா நம்முடைய சங்கீதமே இங்கே இருக்கிறது?ராகங்களும் நம்முடைய ராகங்களே. பெயர்கள்தான் வேறு" என்பதாக!

பாடல்களைக் கேட்கும்போது வடநாட்டுப் பெயர்களையே இட்டுப் பேசி வந்தார்கள் அவர்கள். வடநாட்டிலிருந்து வந்த அவர்களுக்குத் தமிழ் நாட்டிலுள்ள கோயில்களில் சில கைங்கர்யங்கள் செய்ய ஸ்தானம் கிடைத்ததும், தமிழ் நாட்டுப் புராதானமான சங்கீதத்தோடு நெருங்கிப் பழகச் சந்தர்ப்பங் கிடைத்தது, அவசியமே நேர்ந்தது.

ந்தக் காரணமாகவே அவர்கள் ஒரு பண்ணுக்கு, பூர்வமான தமிழ்ப் பெயரையும் வடநாட்டிலிருந்து வந்த புதுப் பெயரையுமே வழங்கி வந்தார்கள்.
தேசிகம் ஒதுங்கியே விட்டது.  நாளடைவில் வடமொழி சம்பந்தம் கோயிலுக்குள் அதிகமாகவும், தமிழ்ப் பெயர்கள் ஒதுங்கி விட்டன. பண்களுக்கு வட நாட்டுப் பெயர்களாகவே அனேகமாய் அமைந்திருப்பதற்குக் காரணம் இதுதான். இத்தனைக் குட்டிக் கரணங்களுக்குள்ளும் ஒரு காரியம் தெளிவு. வடநாட்டு ஸ்வரவரிசைச் சங்கீதம் கோயிலுக்குள் புகவில்லை; தமிழர் காதுக்குள்ளும் புகவில்லை. தேசிகம் துண்டாய்த்தான் நின்று விட்டது. தமிழ்ப் பண்கள் தான் தமிழனுக்கும் தமிழ் நாட்டுக்கும் தமிழ் நாட்டுத் தெய்வங்களுக்கும் உவந்ததாய் இருந்து வந்திருக்கிறது. இன்றைக்குமே உவந்ததாய் இருக்கிறது.

= = = = = = = = = = = = = = = = = = = =

KGG பக்கம். 

உலகக் கோப்பை கிரிக்கெட் ஜியோ hotstar ல பார்த்துக் கொண்டிருக்கும்போது போட்டிகளுக்கு இடையே நேரம் கிடைக்கும்போது அல்லது போட்டி போர் அடிக்கும்போது Amazon Prime Video பக்கங்களை சும்மா ஒரு பார்வை இடுவது உண்டு. 

அப்படி மேய்ந்த போது கண்ணில் பட்ட ஒரு படத்தின் பெயர் : 

Pachuvum Athbutha Vilakkum !  'அடேடே மாயாஜாலப் படம் போலிருக்கே' என்று  அம்புலிமாமா பிரியனான எனக்கு சுவாரஸ்யம் வந்துவிட்டது. 


மலையாளப் படம். 

மலையாளத்தில் நேக்குத் தெரிஞ்சதெல்லாம் மோகன்லால், மமூட்டி ( சமீப காலத்தில் பிரித்வி ராஜ் ) மற்றும் பாவனா. அவ்வளவே! 

பச்சுவா அல்லது பாச்சுவா என்று சந்தேகம் வந்தது, இப்போ நமக்கு முக்கியம் அற்புத விளக்கு மட்டும்தான் வேண்டும் என்று பார்க்க ஆரம்பித்தேன். 


Link for trailer : 


படம் மும்பை ஆயுர்வேத பார்மசி யில் ஆரம்பித்து கொச்சி வந்து ( அ விளக்கு இன்னும் வரவில்லை ) பெண் பார்த்து, மீன் முள்ளில் தொண்டையில் சிக்கி ( அ வி வரவில்லை) ஃப்ளைட் தவறவிட்டு ஒரு மூதாட்டிக்கு உதவியாக ரயில் ஏறி ஐயப்ப சிறுவன் அறிமுகம் ஆகி ( அ வி வரவில்லை) மும்பை போகும் வழியில் கோவாவில் மூதாட்டி இறங்கி ஓட, பச்சுவும் ஐயப்ப சிறுவனும் மும்பை போகாமல்   மூதாட்டியைத் தொடர - மூதாட்டி இவர்கள் கண்ணில் மிளகு பொடி தூவி தப்பிக்க .. விடாமல் எப்படியோ அவர் சென்ற இடத்தைத் தேடி பச்சு + ஐயப்பன் சென்று அங்கே hostile ஹம்ஸத்வனியை (Anjana Jayaprakash) சந்திக்க .. இவர்தான் படத்தின் கதாநாயகி - ஆனால் .. 


இவர்தான் கதாநாயகி என்பது நமக்கு படம் முடியும்போதுதான் தெரிய வருகிறது. 

அந்த 'அற்புத விளக்கு' மட்டும் எது, எங்கே இருக்கிறது என்று கடைசி வரை நமக்குத் தெரியாது!

நிறைய திருப்பங்கள் விரும்புபவர்கள் இந்தப் படத்தை பார்க்கலாம்! 

Amazon Prime Video. 

= = = = = = = = = = =

51 கருத்துகள்:

  1. எப்படியோ கேஜிஜி சார், பாவனாவைக் கொண்டுவந்துவிட்டார். படம் போட சந்தர்ப்பம் இல்லையே என வருத்தப்பட்டிருப்பாரோ?

    பதிலளிநீக்கு
  2. சிவராத்திரி உணவுத் திருவிழாச் செய்தி கண்ணைக் கவர்ந்தது. ஒரு பெண்மணி மாத்திரம் கிச்சன் வேலைகளின்போது தலைக்கு நெட் போட்டிருக்கிறார். மற்ற இருவரும் ஏன் போடவில்லை?

    பக்கத்தில் உள்ளவர்கள் கடக் முடக் என்று தேன்கிழல் சாப்பிட்டால் பஜன், ருத்ரம் ரசிக்க இயலுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கேள்வி. அடுத்த புதனுக்கான கேள்வியா - அல்லது பா வெ மேடம் பதில் அளிக்க வேண்டுமா?

      நீக்கு
    2. தலைக்கு நெட் போட்டிருக்கும் பெண்மணி ஆரம்பத்திலிருந்தே தோசை வார்த்துக் கொண்டிருந்தார். முதலில் வந்தவர்கள் தலைக்கு நெட் போட்டுக் கொள்ள வலியிறுத்தப் பட்டார்கள். நாங்கள் சாப்பிட்டு விட்டு வந்தோம், பின்னால் வந்தவர்களை வற்புறுத்தவில்லை. சாதாரணமாக பிரசாதம் வழங்குபவர்களே நெட் போட்டுக் கொள்ள வேண்டும் என்பார்கள்.

      நீக்கு
    3. //பக்கத்தில் உள்ளவர்கள் கடக் முடக் என்று தேன்கிழல் சாப்பிட்டால் பஜன், ருத்ரம் ரசிக்க இயலுமா?// ஹஹா உங்களுக்கென்று சந்தேகம் வருகிறதே.. பஜன் ஹாலுக்குள் உணவு பண்டங்களுக்கு அனுமதி கிடையாது. அதனால் no kadak mudak noise inside the bhajan hall. :))

      நீக்கு
  3. வடக்கத்திய இசைக்கு ஹிந்துஸ்தானி இசை என்று பெயர் வந்தது எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எபி நண்பர்களும் பதிலளித்து இந்த இந்துஸ்தானி விஷயத்தில் என் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கலாம்.

      நீக்கு
    2. வாசகர்கள் பதில் அளிக்கவும்.

      நீக்கு
    3. ​ஜீவி சார் அறியாததா! வடக்கு தெற்கு என்ற பாகுபாடு பிற்காலத்தில் ஏற்பட்டவை. அன்று ஒரே பாரதம் அதாவது ஹிந்துஸ்தான் மட்டுமே இருந்தது. ஹிந்துஸ்தானில் புழங்கிய இசை ஹிந்துஸ்தானி இசை.

      Jayakumar

      நீக்கு
    4. ஆஹா. இவரைத்தான் + இதைத்தான் எதிர் பார்த்தேன்.

      நீக்கு
    5. கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டுகளில், வட இந்தியாவில் நிலவிய பாரசீக, துருக்கிய மற்றும் இஸ்லாமிய கலாச்சார தாக்கங்களுடன், இந்தியாவின் பூர்வீக இசை கலந்து உருவானதே ஹிந்துஸ்தானி இசை ஆகும். 

      "ஹிந்துஸ்தான்" என்பது வட இந்தியப் பகுதியைக் குறிப்பதால், அப்பகுதியில் வளர்ந்த இந்த இசை வகை இப்பெயரைப் பெற்றது.  ஹிந்துஸ்தானி இசை உருவான விதம், இஸ்லாமிய கலாச்சார தாக்கம்: டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர் ஆட்சிக் காலத்தில், பாரசீக இசை மற்றும் கருவிகள் (சித்தார், சரோத் போன்றவை) இந்திய இசையுடன் இணைந்தன.

      தென்னிந்தியாவில் கர்நாடக இசை தனித்து வளர்ந்த நிலையில், வட இந்தியாவில் இந்த புதிய பாணி இசையானது விக்கிப்பீடியா படி, 'ஹிந்துஸ்தானி' என அழைக்கப்பட்டது. அமீர் குஸ்ரு போன்ற கலைஞர்கள், பாரசீக மற்றும் இந்திய இசை மரபுகளை இணைத்து, இந்த இசை வடிவத்தை வளர்த்தெடுத்தனர்.  இது பெரும்பாலும் வட இந்திய மொழிகள் மற்றும் ஹிந்தி-உருது கலந்த பேச்சு வழக்குகளை அடிப்படையாகக் கொண்டது

      நீக்கு
    6. இப்போதும் பாகிஸ்தானியர்கள், இந்தியா என்று சொல்வதில்லை. ஹிந்துஸ்தான் என்றே சொல்கிறார்கள். நம் ஆரம்பகட்டத் தலைவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தனை செய்ய இயலவில்லை. நாடு நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் நாட்டைக் குலைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம், வாழ்க வளமுடன்!

      பதிலளிநீக்கு

      நீக்கு
  5. கேள்வி பதில்கள் சிந்திக்க வைத்தன....

    வட காட்டு / தமிழ் காட்டு ? நடு நடுவே இப்படி வந்திருக்கிறது புத்தக அறிமுகத்தில்... வேண்டுமென்றே இப்படி அச்சாகி இருக்கிறதா?

    ஹிந்துஸ்தானி - விற்பன்னர்கள் வந்து தான் சொல்ல வேண்டும்! :)

    பதிலளிநீக்கு
  6. கேள்விகளுக்கு , பதில்களை ஆசிரியர்கள் நன்றாக சொன்னீர்கள்

    ஒரு தொலைகாட்சியில் ஒரு ஜோதிடர் சொன்னார் ஜாதக ரீதியாக நட்புகள் கிடைக்கும் என்று. நீங்கள் சொல்வது போல கர்ம பலன் தான் போலும்.

    பதிலளிநீக்கு
  7. கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை எது பழமையானது?

    கர்நாடக இசை பழமையானது. இது இந்தியாவின் பண்டைய இசை மரபுகளுக்கு நெருக்கமான, தென்னிந்தியாவின் தூய்மையான வடிவம். இந்துஸ்தானி இசை பாரசீக, அரேபிய தாக்கங்களுடன் உருவானது. 16-ஆம் நூற்றாண்டு வரை இரண்டு இசைகளும் ஒன்றாக இருந்தன, பின்னர் தனித்தனி வடிவங்களைப் பெற்றன.

    கர்நாடக இசை பக்தி இயக்க காலத்திலும் (15-16ஆம் நூற்றாண்டு), இந்துஸ்தானி பின்னர் வளர்ச்சியடைந்தன.  

    முக்கிய வேறுபாடுகள்:
    கர்நாடக இசை: பக்திக்கு முக்கியத்துவம் அளித்து, இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக, அமைக்கப்பட்ட கீர்த்தனைகளுடன் (கட்டமைக்கப்பட்ட) பாடும் முறை.
    இந்துஸ்தானி இசை: கற்பனைத் திறனுக்கும், மேம்பட்ட (improvisation) ஆலாபனைக்கும் முக்கியத்துவம் அளிக்கும், பாரசீக இசை தாக்கம் கொண்ட வடஇந்திய இசை வகை.

    காலம்: கர்நாடக இசை பண்டைய இந்திய இசை மரபுகளுக்கு நெருக்கமான, தூய்மையான வடிவமாகக் கருதப்படுகிறது.  இரண்டுமே ஒரே வேரிலிருந்து (வேத கால இசை) வந்தாலும், காலப்போக்கில் கர்நாடக இசை தன் பழமையான வடிவத்தை அதிகமாகத் தக்கவைத்துக் கொண்டுள்ளது

    பதிலளிநீக்கு
  8. தமிழ் இசைக்கும் இந்துஸ்தானி இசைக்கும் வேறுபாட்டைப் பேசியவர்கள் கருநாடக சங்கீதம் பற்றி மூச்சு விடவில்லையே. கர்நாடக சங்கீத்த்தில் மேளகர்த்தா ராகங்களுக்கும் கிரந்த எழுத்துகளுக்கும் தொடர்பு உண்டு. அதனால் கர்நாடக இசை, தமிழ் இசையிலிருந்து அந்நியப்பட்டது. தமிழ் இசையில் யாராவது பாடுகிறார்களா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழிசை மேடையில் பேசுவார். அவ்வளவுதான்:))

      நீக்கு
    2. // கர்நாடக இசை, தமிழ் இசையிலிருந்து அந்நியப்பட்டது. //

      கர்நாடக இசைக்கும் பழங்காலத் தமிழிசைக்கும் - பண் - நெருங்கிய தொடர்பு இருந்தாலும், அவை தனித்தனி அடையாளங்களைக் கொண்டுள்ளன. தமிழிசை பண்களையும் யாழ் போன்ற கருவிகளையும் அடிப்படையாகக் கொண்டது, அது இந்த கட்டுரையிலேயே இடம் பெற்றிருக்கிறது.   கர்நாடக இசை ராகம், தாளம் மற்றும் கிருதிகளை (சுவரங்கள்) மையமாகக் கொண்ட முறைப்படுத்தப்பட்ட வடிவமாகும். இருப்பினும், கர்நாடக இசை என்பது தமிழிசையின் ஒரு கிளை அல்லது நவீன வடிவம் என்றும் கருதப்படுகிறது. 

      தமிழில் பாடவில்லை, பாடுவதில்லை என்பதுதானே பெரும்பான்மையினர் குற்றச்சாட்டு?  உன்னால் முடியும் தம்பி, சிந்துபைரவி போன்ற படங்களில் KB சொன்னது, TMK சொல்வது...!

      நீக்கு
    3. தியாகய்யர், மு.சா தீக்ஷிதர், புரந்தரதாசர், பத்ரச்சலர் என்று எல்லோரும் அறிய சொல்லப்படுவது போல தமிழ் கிருதிகளை இயற்றியவர்கள் பெயர் சொல்லப்படுவதில்லை.  முத்துத்தாண்டவர், பாபநாசம் சிவன், ஊத்துக்காடு, என்று யோசித்துதான் சொல்ல வேண்டும்,.  அதுவும் நாம்தான் சொல்லிக்கொள்ள வேண்டும்!

      நீக்கு
    4. //முத்துத்தாண்டவர், பாபநாசம் சிவன், ஊத்துக்காடு, என்று யோசித்துதான் சொல்ல வேண்டும்,. அதுவும் நாம்தான் சொல்லிக்கொள்ள வேண்டும்!// 100% சரி.

      நீக்கு
  9. எந்தக் காரணமும் இல்லாமல் ஒருவரை வெறுப்பதோ இல்லை விரும்புவதோ சாத்தியமே இல்லை. நம் மன விருப்பம் எண்ண அலைகள்தாம் விருப்பு வெறுப்புக்குக் காரணம். பல நேரங்களில் வெளிப்படையாகச் சொல்லாத்தினால் நமக்குத் தெரிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எந்தக் காரணமும் இல்லாமல் ஒருவரை வெறுப்பதோ இல்லை விரும்புவதோ சாத்தியமே இல்லை. //

      அப்படிச் சொல்ல முடியாது.. எனக்கு அனுபவம் உண்டு.

      நீக்கு
    2. அது சாத்தியமே இல்லை ஸ்ரீராம். ஆழ் மனதில் ஏதேனும் பிடிக்காது. காரணம் இல்லாமல் காரியம் இல்லை

      நீக்கு
    3. இல்லை நெல்லை..   நான் அனுபவபப்ட்டிருக்கிறேன் என்று சொல்கிறேனே.. இது மாதிரி விஷயத்தில்  என் மனம் சொன்னது எண்பது சதவிகிதம் சரியாய் இருக்கும்.

      நீக்கு
  10. விருமாண்டியின் தலைமுறை... நம்பகமான காணொளி மற்றும் செய்திகளில் முன்பு படித்தது. நமக்கு தமிழர் ஆதிகுடி என்று சொல்லிக்கொள்வதில் சந்தோஷம். அந்தத் தமிழர் யார் என்பது தெரியாது.

    பதிலளிநீக்கு
  11. போன ஜென்மத்து கணவன் மனைவி..... கணவன் கொடுமைப்படுத்தியிருந்தால் அடுத்த ஜென்மத்தில் தான் கணவனாகப் பிறந்து ஆட்டிவைக்கணும் என நினைத்திருப்பார்களாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்மம் சரியாக தீரா விட்டால் மறுபடி அதே கணவன் கணவனாகவும் மனைவி அதே மனைவியாகவும் பிறப்பார்களோ!!

      நீக்கு
    2. "ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா.." என்று வேறு பாடி இருக்கிறார்கள்!

      நீக்கு
  12. ஆண் குழந்தைக்கு முக்கியத்துவம்.... இது அந்த அந்த சமூகம் இருந்த நிலை. இலங்கைத் தமிழர்கள் பெண் குழந்தைகளை விரும்புவார்கள். காரணம் மகன் அடுத்த வீட்டுக்கு மருமகனாய் கிளம்பிவிடுவதால். நம்மை கடைசி வரை யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம்.

    இந்த எண்ணம் விரைவில் காலாவதியாகிக்கொண்டிருக்கிறது. எத்தனை குழந்தைகள் இருந்தாலும் நமக்கு நாமே என்பதை நோக்கிச் சமூகம் முன்னேறுகிறது.

    பதிலளிநீக்கு
  13. நாலு நாட்களுக்கு முன் தேரழுந்தூரில் கம்பர் மேட்டைப் பார்க்கச் சென்றிருந்தேன். கம்பர் யாரென்றே பலருக்கும் தெரியவில்லை. கம்பன் கழகம் இல்லாவிட்டால் சுத்தம்..இந்த, நம் முன்னோர்களின் பெருமை தெரியாத தபிழரின் மறதிதான், உங்களுக்கு ஏபிசிடி கத்துக் கொடுத்ததே எங்க கட்சிதான், நாங்க இல்லைனா உங்களுக்கு உடை உடுத்தக்கூடத் தெரியாது என ஒரு சில கட்சிகள் பேசுகின்றன

    பதிலளிநீக்கு
  14. படமும் பதமும் பகிர்வுகள் நன்றாக இருக்கிறது.
    பானுமதி சாயி சென்டரில் சிவன் ராத்திரிக்கு தோசை சுடும் தொண்டு செய்வது பாராட்ட வேண்டும். படம் நன்றாக இருக்கிறது.

    நெல்லையின் தந்தூரில் ரொட்டி செய்வது படம் அருமை. நாங்கள் டெல்லியில் இது போல கடைகளில் சாப்பிட்டு இருக்கிறோம் அப்போது பார்த்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பானுமதி சாயி சென்டரில் சிவன் ராத்திரிக்கு தோசை சுடும் தொண்டு செய்வது பாராட்ட வேண்டும்.// அப்படியெல்லாம் இல்லை. நான் கடைசியில்தான் தோசை சுடுவதற்குச் சென்றேன். இங்கே ஒவ்வொருவர் செய்யும் சேவைகளைப் பார்க்கும்பொழுது என் பங்கு மிகவும் சிறியது. __/\__

      நீக்கு
  15. சிறப்பான பதிவு...
    இசை ஆராய்ச்சி அற்புதம்

    பதிலளிநீக்கு
  16. நெல்லை அவர்களது கருத்துகள் அழகு

    பதிலளிநீக்கு
  17. கெளதம் சார் சொன்ன படம் ஜியோ hotstar ல பார்த்து விட்டேன். கேரளாவில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றிய கதைதான். வீட்டில் வேலை பார்த்த சிறுமியை படிக்க வைக்க போராடும் பாட்டியின் கதைதான்.

    //அந்த 'அற்புத விளக்கு' மட்டும் எது, எங்கே இருக்கிறது என்று கடைசி வரை நமக்குத் தெரியாது!//

    பச்சுவுக்கு உதவும் அந்த பெண் தான் அற்புதவிளக்கு. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி கொள்வார்களே . அந்த சிறுமியை இருவரும் சேர்ந்து காப்பாற்றுவது என்று கதை நன்றாக போகும் எனக்கு பிடித்து இருந்தது.

    பதிலளிநீக்கு
  18. கீதா அக்காவின் கேள்விகள் எல்லாமுமே உளவியல் ரீதியான பார்வையில் பார்க்க முடியும் பதில்கள் நான் கொடுத்தால் லெக்சர் போல ஆகிடும் என்பதால் கடந்து செல்கிறேன்.!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒப்புக் கொள்ளவே முடியாது. மனோதத்துவ ரீதியான விளக்கத்தைதானே கீதா அக்கா எதிர்பார்க்கிறார், நாங்களும். சுருக்கமாக சொல்ல முயற்ச்சி பண்ணுங்கள். அல்லது விளக்கமாக வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளில் எழுதுங்கள்.

      நீக்கு
  19. கவிதைகள், அத்தைப் பாட்டி கதைகள் போன்றவற்றால் யாருக்கேனும் உபயோகம் இருக்கிறதா? //

    நெல்லை, இந்தக் கேள்வியே எழுதுபவரின் எழுத்தை நாம் தாழ்த்துவது போல் இருக்கு இல்லையா?

    எங்கள் வீட்டில் என் ஆர்வங்கள், ஒரு காசுக்குப் பிரயோஜனமில்லாத குப்பைன்னு சொன்னப்போ, சொல்லப்படும் போது.... என் சுய மரியாதை, சுயம் இழந்த மனநிலையை அடைந்தேன். அது என்னை எவ்வளவு தாழ்த்தியது என்பது எனக்குத்தான் தெரியும். வானொலி நிலையத்துக்குப் போய் உரை ஆற்றி அது பேசப்பட்டப்ப, நான் அடைந்த மகிழ்ச்சி, "ஓ இதுல ஒரு ப்ரோக்ராமும்மு 30 ரூ கிடைக்கிறதா? அப்ப இன்னும் செய்ன்னு சொன்னப்ப வெறுத்துப் போனேன். இது என் ஆளுமைத் திறனையே வீழ்த்தியது என்பதுதான் உண்மை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை கலையணர்வைத்தூண்டும் என்று சொல்லலாம்.  பொதுவாக இளம் வயதில் மனதில் விதைக்கபப்டும் எண்ணங்களே அவன் வாழ்வின் ஆதார குணங்களை கட்டமைக்கும்.  இந்தக் காலத்தில் மாரல் சைன்ஸ் வகுப்பையே எடுத்து விட்டார்கள் பள்ளிகளிலிருந்து...  அட்றா அவளை வெட்றா அவளை கேட்டு வளரும் குழந்தைகளின் காதல் எப்படி இருக்கும்?  ஆஸிட் வீசும்.  கள்ளக்காதலில் ஓடிப்போகும்.  

      நீக்கு
  20. நெல்லை, நாம சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிச்சது, காலேஜ்ல துறை சார்ந்த படிப்பு, அதெல்லாமும் கூட சும்மா மார்க் வாங்கத்தானே படிச்சோம் ஒருசிலரைத் தவிர அவங்களுக்கு அது வாழ்க்கையில் கொண்டு போறாங்க...மத்தபடி பலருக்கும் அது எந்தவகையில் உதவுகின்றன? அதோடு பள்ளிக்கூடம் கல்லூரிகளில் life skills கத்துக் கொடுத்தா நல்லாருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. பக்கத்து வீட்டில் தகறாரு பண்ணிக்கொண்டிருந்த இருவரை விலக்கிவிட்டதால் நீங்களும் நோபல் சமாதானப் பரிசுக்குத் தகுதியானவர் ஆகிவிட்டீர்களா? //

    ஹாஹாஹா...சிரிச்சுப்புட்டேன்! நெல்லை!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. பானுக்கா படங்கள் சிறப்பு என்றால் கூடவே தோசை அது இதுன்னு சொல்லிருக்கீங்களே! ஆஹா போட வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!