நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 11
இளையாழ்வார் என்ற பெயருடன் அவதரித்திருந்த இராமானுஜர் வரலாற்றை நாம் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். இவருடைய வரலாறு ஓரளவு விளக்கமாகவே குருபரம்பரையில் எழுதப்பட்டுள்ளது. இவருடைய வரலாற்றைச் சுருக்கமாகவே பார்க்கப்போகிறோம். இருந்தாலும் அவர் வரலாற்றில் தொடர்புள்ளவர்களையும் நாம் ஓரளவு தெரிந்துகொள்ளவேண்டும்.
இளையாழ்வாரின் தகப்பனாரான கேசவ ஸோமயாஜிக்கு இரண்டு பெண்கள். புருஷமங்கலத்தைச் சேர்ந்த அனந்த தீக்ஷிதர் கேசவ ஸோமயாஜியின் மூத்த பெண்ணான பூமிதேவியைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுடைய திருக்குமாரருக்கு தாசரதி என்ற பெயர். இவரே பிற்காலத்தில் இராமானுஜரை தன் ஆச்சார்யாராகக் கொண்டு முதலியாண்டான் என்ற பெயர் பெற்றார். திருக்குருகைக் காவலப்பனுடைய குமாரர் மஹா காருணிகர் என்பவர், கேசவ ஸோமயாஜியின் இரண்டாவது பெண்ணான கமலாதேவியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருக்குமாரராக அவதரித்தவர் வரதவிஷ்ணு என்ற ஆச்சார்யர். மஹா காருணிகர், காஞ்சீபுரத்தில் நடாதூர் என்ற அக்ரஹாரத்தைத் தோற்றுவித்தவர். வரதவிஷ்ணுவின் பெயர் நடாதூர் ஆழ்வான் என்றாயிற்று. (பெரும்பாலான வைணவர்களுக்கு அவர்கள் வம்சம் தோன்றிய ஊரின் பெயர் அவர்களுடைய ‘சர்மா’ என்று சொல்லப்படும் பெயரில் இருக்கும். தற்காலத்தில் பள்ளிக்கு வேறு பெயர் வைத்துக்கொள்வார்கள். சேட்லூர், ஈச்சம்பாடி, நடாதூர் என்று பல வம்சங்கள் உண்டு. இப்படி ஊர் பெயர் இல்லாத வைணவர்களும் உண்டு. நாங்கள் நடாதூர் வம்சம்)
இராமானுஜர் வாழ்வில் இப்போது திருக்கச்சி நம்பி வரப்போகிறார். அதனால் திருக்கச்சி நம்பியின் வரலாற்றைப் பார்த்துவிடலாம் (எப்போதும்போல சுருக்கமாக)
சென்னைக்கு அருகிலுள்ள பூவிருந்தவல்லியில் (பூந்தமல்லி. இதன் வரலாற்றுப் பெயர் பூந்தண்மலி. இதற்கு தர்மபுரி மற்றும் புஷ்பமங்கலம் என்ற பெயரும் இருந்திருக்கிறது) வீரராகவச் செட்டியார், கமலையார் தம்பதிகளுக்கு 1009ல் கடைசி குமாரனாகப் பிறந்தவர். இவரது சகோதரர்கள் திருவேங்கடவர், அருள்கூரப்பன், மலைகுனிய நின்றார். திருக்கச்சி நம்பிகளின் பெயர் கஜேந்திர தாசர் என்கின்றனர். சிலர், இந்தப் பெயர் காஞ்சி வரதராஜப் பெருமாள் கொடுத்த பெயர், திருக்கச்சி நம்பிகளின் இயற்பெயர், பார்கவப் பிரியர் (திருமழிசை ஆழ்வாரின் அருளால் பிறந்ததால்) என்றும் சொல்கின்றனர். வைசிய குலம் என்பதால், தன்னுடைய சொத்தின் ஒரு பகுதியைப் பிரித்து மகன்களுக்குக் கொடுத்து வாணிபம் செய்து பொருள் ஈட்டுங்கள் என்று வீரராகவச் செட்டியார் சொல்ல, மற்றவர்கள் பொருளீட்ட, கஜேந்திர தாசரோ, ஒரு நந்தவனம் அமைத்து தினமும் பூக்களைத் தொடுத்து காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு நடந்து சென்று மாலை கொடுக்கும் கைங்கர்யம் செய்துவந்தார். சில காலங்களில் பெருமாளுக்கு விசிறி வீசும் கைங்கர்யமும் (இதற்கு திரு ஆலவட்டக் கைங்கர்யம் என்று பெயர்) செய்துவந்தார்.
பொருள் மீது பற்றில்லாமல், தனக்குச் சேவைகள் செய்துவந்த திருக்கச்சி நம்பியிடம் தேவப்பெருமாள் அவருடன் திரைக்குப் பின்னாலிருந்து பேச ஆரம்பித்துவிட்டார்.
இவரது பெருமை அறிந்து திருக்குலத்தைச் சேர்ந்த ஒருவர், திருக்கச்சி நம்பி தினமும் குளித்துவிட்டு வரும்போது, அவரது பாதம் பட்ட மண்ணை நெற்றியில் பூசிக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். திருக்கச்சி நம்பி, இதன் காரணத்தைப் பற்றிக் கேட்க, அந்த பக்தரோ, நீங்கள் பெருமாளிடம் நேரடியாகப் பேசுகிறீர்கள், உங்கள் பாதம் பட்ட மண்ணைப் பூசிக்கொள்வதால் எனக்கும் மோட்சம் கிடைக்கும் என்றாராம். அன்று திருக்கச்சி நம்பி, காஞ்சிப் பெருமாளுக்கு திரு ஆலவட்டக் கைங்கர்யம் செய்யும்போது இதைப் பற்றிக் கேட்க, பெருமாளும், நிச்சயம் அவனுக்கு மோட்சம் உண்டு என்றாராம். உடனே திருக்கச்சி நம்பி, தனக்கு மோட்சம் உண்டா என்று கேட்க, நீ தினமும் எனக்கு விசிறி வீசும் கைங்கர்யம் செய்கிறாய், நான் உன்னிடம் பேசுகிறேன். இதற்கும் அதற்கும் சரியாகப் போய்விட்டது. உனக்கு மோட்சம் வேண்டுமென்றால், தகுந்த ஆச்சார்யனை அடை என்றார்.
அதற்கு அவர் என்ன செய்தார் என்று பார்ப்பதற்கு முன்பாக ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்னத்தின் ஒரு ஸ்லோகத்தின் அர்த்தத்தைப் பார்த்துவிடுவோம்.
நிராஸ கஸ்யாபி, ந தாவ து3த்ஸஹே*
மஹேஶ! ஹாதும், தவ பாத3 பங்கஜம் |
ருஷா நிரஸ்தோ’பி, ஶிஶு:ஸ் தநந்த4ய:*
ந ஜாது மாதுஶ், சரணௌ ஜிஹாஸதி || (26)
இந்த ஸ்லோகத்தில் ஆளவந்தார், இறைவன், தன் பெருமைக்கு ஏற்படும் குற்றத்தையும் பார்க்காமல் தன்னைக் கைவிட்டாலும், தான் அவனை விட்டுவிட மாட்டேன் என்று சொல்கிறார். இதனை ‘அகதித்வம்’ என்பர். அதாவது ‘வேறு புகலில்லாத நிலை’. இத்தகைய விச்வாசத்தைத்தான் ஒருவர் கொண்டிருக்க வேண்டும்.
இறைவனே, நீ என்னைத் தள்ளினாலும், நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை விடுவதற்குத் துணிய மாட்டேன். தாயானவள், தன்னுடைய, பால் குடிக்கும் குழந்தையைக் கோபத்தில் தள்ளினாலும், அந்தக் குழந்தை எவ்வாறு தாயின் காலை விடாமல் இருக்க்கிறதோ அது போல என்கிறார்.
இதைப்போன்ற அர்த்தம் உடைய ஒரு சில பிரபந்தப் பாடல்கள் இருந்தாலும் குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி, ஐந்தாம் பத்தில் உள்ள முதல் பாடல் பொருத்தமாக இருக்கிறது. இதில் திருவித்துவக் கோட்டு இறைவனைப் பற்றிப் பாடுகிறார்.
##தருதுயரம் தடாயேல்* உன் சரணல்லால் சரணில்லை*
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ்* வித்துவக்கோட்டம்மானே*
அரிசினத்தால் ஈன்ற * தாய் அகற்றிடினும்* மற்றவள்தன்-
அருள்நினைந்தே* அழும்குழவி* அதுவே போன்றிருந்தேனே
பொருள்: மணம் மிக்க மலர்ச் சோலைகள் சூழ்ந்த திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கும் இறைவனே, என்னுடைய துன்பங்களை நீக்க மாட்டாய் என்றாலும், உன் திருவடிகளைத் தவிர எனக்கு வேறு புகலிடம் இல்லை. கோபத்தினால் தான் ஈன்ற குழந்தையை தாய் தள்ளிவிட்டாலும் அந்தக் குழந்தை தாயின் அன்பை நினைத்து, அவள் தயவை நாடி அழுவது போல, நானும் அப்படியே இருக்கிறேன் என்கிறார்.
தரு துயரம்-நீ கொடுக்கின்ற துன்பம், தடாயேல்-நீக்காவிட்டால். அரி சினம்-வெட்டிப் போடும் அளவு கோபம்.
பெரியவாச்சான் பிள்ளை, இந்தப் பாசுரத்திற்கு விளக்கம் எழுதும்போது ஒரு சில வரலாற்றுச் சம்பவங்களை எழுதுகிறார். விளக்கமான பொருளைப் பிறகு காண்போம்.
திருவித்துவக்கோடு கோயில் (நான் சென்றிருந்தபோது எடுத்த படம்) இதனை அங்குள்ளவர்கள் அஞ்சு கோயில் என்பர். பாண்டவ சகோதரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோயிலை இந்த வளாகத்தில் அமைத்துள்ளனர். யாத்திரைத் தொடர் எழுதும்போது எழுதுகிறேன்.
தொடர்வோம்...
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நான் படிச்ச கதை (JKC)
மொழிபெயர்ப்பாளர். திரைப்படப் பாடலாசிரியர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி, மக்கள் தொடர்புப் பிரிவின் மாநில துணைத் தலைவர். சென்னை, கோவை, புதுவைத் தொலைக்காட்சி நிலையங்களில் நிலைய அதிகாரியாகப் பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
1962, அக்டோபர் 10ம் தேதி பாளையங்கோட்டையில் பிறந்தார். தந்தை ஆ. கணபதி புகழ்பெற்ற கவிஞர். சென்னை சாரதா வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, எத்திராஜ் கல்லூரியில் பட்டம் பெற்றார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளம் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் கணவர் கவிஞர் பால ரமணி. நான்கு நாவல்கள், நான்கு குறுநாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், பல கவிதைத் தொகுப்புகள், 3 கட்டுரைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன. இலக்கிய சிந்தனை, காசியூர் ரங்கம்மாள் விருது, லில்லி தேவசிகாமணி விருது, உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். நெல்லை இலக்கிய வட்டம், ‘எழுத்துலக சிற்பி’ என்கிற பட்டத்தை இவருக்கு வழங்கியிருக்கிறது. தேனீ இலக்கியக் கழகம் ‘கவிச் செம்மல்’ பட்டம் வழங்கியிருக்கிறது. கல்லூரி, பல்கலைக்கழக பாடநூல்களிலும் இவர் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
கூடுதல் விவரங்களுக்கு
புகுமுன்
கொஞ்சம் மாறுபட்ட விருப்பங்கள் உடைய ஒரு முதிர்கன்னியின் கதை. கல்யாணம் ஆகாத/திகையாத கதாநாயகிக்கு ஆசிரியர் சூட்டும் பெயர் கல்யாணலட்சுமி! படிக்கும்போது சே என்ன கதை இது என்ற எரிச்சல்/கோபம் வரலாம். பொறுமை தேவை. கதையின் நடை சிவசங்கரியை நினைவூட்டுகிறது. சில வருடங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் இப்படியும் நடந்தது. பத்திரிகைகளில் ஒரு விவாத பொருளாக இருந்தது.
தோஷம்
ஒரே நாளின் மூன்று காட்சிகளின் தொகுப்பு இது
கதாநாயகி : கல்யாணலட்சுமி
களம் : தனியார் மருத்துவமனை, அலுவலகம், வீடு.
பிரச்னைகள்: இரண்டு
காட்சி ஒன்று
”இது – கலாசார அதிர்ச்சி தரக்கூடியது. நீங்கள் சந்திக்க வேண்டிய
சமூகப் பிரச்னைகள் ஏராளம். காறி உமிழ்வார்கள். வார்த்தையால் விளாசுவார்கள்.
ஊர்ப்பிரஷ்டம் செய்வார்கள். அது தரும் மன அழுத்தம் உங்களையே சிதைக்கக் கூடும்.
எல்லாவற்றையும் நினைப்பில் வையுங்கள். வாழ்த்துகள்…”
காலையிலேயே வந்திருந்த கல்யாணலட்சுமியிடம் சொல்லப்பட்ட வாசகம் இது
– நூறாவது முறையாக. ஆலோசனை சமயங்களிலெல்லாம் மந்திரமாக ஓதப்பட்ட விஷயம்தான்.
சகலத்தையும் நிறைவேற்றி இன்று மொத்தமாகச் சொன்னபோது, சிரிப்பைத் துணைக்குச்
சேர்த்துக் கொண்டாள் கல்யாணலட்சுமி.
”இத்தனை வயதுவரை என்னைத் துரத்தாத சமூகப் பிரச்னையா டாக்டர்?
சமூகம் துளைத்துப் பார்த்தே என் உடம்பு முழுசும் சல்லடையாகி விட்டது. அது தராத மன
அழுத்தமா? சமூகத்தைக் குப்பைத்தொட்டியில் போடுங்கள். காறி உமிழும் அதன் எச்சில்
காய்ந்து விடும். குதர்க்க வார்த்தைகள் ஓய்ந்துவிடும். ஆனால் இந்த வரம் – ஜென்ம
சாபல்யமல்லவா? மரித்துப் போயிருந்த எனக்கு உயிரூட்டி இருக்கிறீர்கள்… நன்றி
டாக்டர்…”
ஒற்றை வளையல் தவழ்ந்த மருத்துவரின் கையை எடுத்து முத்தமிட்டாள்
கல்யாணலட்சுமி.
காட்சி இரண்டு
அந்தக் கல்யாண அழைப்பிதழிலிருந்த நாகஸ்வர கோஷ்டியினர் சகலரும்
குட்டி குட்டியாகக் கீழிறங்கினர். சுண்டுவிரல் அளவுக்கு நாகஸ்வரம். மேளம். தவில்.
சகலத்தையும் மூச்சைப்பிடித்து வாசித்தனர். ஊர்வலத்தின் முன்னால் நடந்தனர்.
சுட்டுவிரல் நீளத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்கேந்தினவர்களின் கம்பீர நடை. உள்ளங்கை
நீள ஊர்வல காரில் – பெண்ணும் மாப்பிளையும் பிடிப்பிள்ளையார் மாதிரி – ஒரு இன்ச்
உயரத்தில் வெட்கமாக இருந்தார்கள். கல்யாணத்துக்கு விலாசம் சொல்லும் கலாட்டா,
சிரிப்பு, கதம்ப வாசனை எல்லாமே லில்லிபுட் அளவில்.
போன மாசம்தான் பணியில் சேர்ந்த டைப்பிஸ்ட்டின் கல்யாணப் பத்திரிகை
அது. கல்யாணலட்சுமி அதைக் கண்கொட்டாமல் பார்த்தாள். பார்க்கப் பார்க்க, சுவாரஸ்யம்
வலைபின்னியது. மேஜையில் கன்னத்தைச் சரித்து – அழைப்பிதழை ஐம்பதாவது முறையாக
வாசித்து முடித்தாள். சகலவாசகங்களும் மனப்பாடம். இதுமாதிரியான நூற்றுக்கணக்கான
பத்திரிகைகளை ரசித்து ஏங்கிய முன் அனுபவம். ஒவ்வொரு தரம் வாங்கும்போதும் ‘நானும்
ஒரு நாள் இதுமாதிரி விநியோகிப்பேன். திருமணக்களை சொட்டச்சொட்ட, வெட்கம் இழையோடப்
பத்திரிகை தருவேன். குடும்பத்தோட வந்துருங்க. இருந்து சாப்பிட்டுத்தான் போகணும்…
இன்னபிற கல்யாண அழைப்பிதழ் வசனங்களைச் சொல்லுவேன்…’ இப்படியான கனவு சுவாசம்…
பதினெட்டு வருஷமாகக் கனவிலேயே குடியிருக்கிறது. அவளின் காலத்தில் ஒரு
வசனத்தைக்கூடப் பிரயோகிக்கும் சம்பவம் நிகழாத விசனம். நம்பிக்கை இழை உயிரிழந்து
கொண்டிருக்கிறது நாளுக்கு நாள். இனி? முற்றுப்புள்ளிதான்.
தேவாங்கு மாதிரி குட்டிகளுக்குக் கூடக் கல்யாணம் சுலபமாக நடக்கிறது
– எந்தத் தடங்கலும் இல்லாமல். கல்யாணத்துக்கு அப்புறம், விடுப்பு முடிந்து
வரும்போது – அதுகள் மூஞ்சியில் நூறு வாட்ஸ் பல்ப் மாதிரி தேஜஸ் வந்து தொலைக்கிறதே…
அது என்ன இழவு ரசவாத வித்தையோ? இது கூடப் பரவாயில்லை. தேவாங்கும் பிள்ளை உண்டாகிப்
பெற்றுப் பிழைத்துக் கையிலொரு குட்டியோடு, அம்மாக் களையோடு வலம் வருமே… கொடுத்து
வைத்த நாய்கள். கல்யாணலட்சுமிக்குள் பொறாமை பொறி பறந்தது.
‘கண்விழிப்பதும் சோற்றில் கை நனைப்பதும், பேருந்துக் கூட்டத்தில்
கூழாவதும், வியர்வை நாற்றத்தில் பாழாவதும், அலுவலக நாற்காலியைத் தேய்த்து,
மாற்றமேயில்லாத மணித்துளியை அடைகாப்பதும், பெண் பார்க்கும் படலத்தில் வெட்கத்தைத்
தேடி எடுத்து முகத்தில் அப்பிக் கொள்வதும், மாப்பிள்ளையின் தலையசைப்புக்கு
ஏங்குவதும், மறுப்பு சுமக்கும் கடுதாசிகளை வெறுப்புடன் ஜீரணிப்பதும், பெருமூச்சும்
பின்னிரவு அழுகையும் பிறரின் கல்யாணத்தில் வயிற்றில் தகிக்கும் பொறாமை அக்கினியில்
வெந்து போவதும்தான் என் ஜென்மக்கடனோ? புருஷனின் ஸ்பரிசத்துக்கும் ஆண்மைத்தனமான
வருடலுக்கும் மோகம் தரும் முத்தத்துக்கும் பித்தம் தரும் கொஞ்சலுக்கும் ஏங்கியே
செத்துப் போவேனோ?’ நித்தமும் புழுங்குவாள் கல்யாணலட்சுமி.
‘ஒற்றை ஜீவனாகவே மரித்து விடுவேனா? என் அன்பை, என் நேசத்தை, என்
பிரேமையை, என் காதலை, என் ஸ்நேகத்தை ஸ்வீகரிக்க ஜீவனே கிடையாதா? கிடைக்காதா?
எனக்கான வேர்ப்பிடி மண் இல்லாமல் தரிசாகத்தான் போவேனா? அம்மா, அப்பாவுக்கப்புறம்
நானும் நாலு சுவருமாக ஜீவிக்கவா? வீட்டின் பல்லியும் பாசியும் ஒட்டடையும் ஸ்டெனோ
குறிப்பேடும்தான் என் சுவாசத்துணையா? உயிரோடு, மனசோடு, உணர்வோடு நெருங்க
யாருமேயில்லாத அநாதைப் பிறப்பா நான்?’ கண்ணீரில் உருகுவாள் கல்யாணலட்சுமி.
இத்தனை வயசுக்கும் ஒற்றைப் பொம்பளையாயிருப்பதில் இன்னொரு கஷ்டமும்
கூட. முப்பது வயசிலேயே கொஞ்சம் கொஞ்சமாகக் குழைவையும் மென்மையையும் தாரைவார்க்க
ஆரம்பித்தாயிற்று. முகத்திலும் தாடையிலும் ஆங்காங்கே கனமான ஒற்றை முடியின் ரோம
சாம்ராஜ்யம். மெதுமெதுவாக உடம்பு முழுவதும் ஒரு பிளாஸ்டிக் தன்மை. விறைப்பின்
ஆக்கிரமிப்பு. தவிர்க்கவே இயலாமல் ஆம்பளைத்தனமான தடதடவென்ற நடை. எந்தக் கொம்பனைப்
பற்றியும் கவலையேயில்லை என்கிற தெனாவெட்டான தோரணை. நளினம் தொலைத்த மூங்கில்
முதிர்ச்சி. இளமையில் மென்மையாயிருந்த எனக்குள்ளிருந்து இன்னொரு நான் ஜனனம்.
புதுசாகக் கல்யாணமானதுகள் ஸ்கூட்டர், பைக் என்று இளமை ஜொலிக்கப்
பறப்பதைப் பார்க்கும்போது மனசு நமநமக்கும். வெறுப்பாயிருக்கும். அப்படி இறுக்கிப்
பிடித்துப் பறக்க எனக்கு வாய்க்கவில்லையே! ஆதங்கம். ‘வேகமாய்ப் போய் முட்டிமோதிக்
கவிழுங்கடா நாய்களா…’ மனசு அனிச்சையாகச் சாபமிடும். கல்யாணத்துக்குப் போனால்
‘ஏதாவது பிரச்னை வெடிக்காதா? இந்தப் பெண் வேண்டாம். இதோ இவளைக் கட்டிக்
கொள்கிறேன்…’ திடீர்த் திருப்பமாகத் தாலி என் கழுத்தில் ஏறாதா? ஆயிரம்
எதிர்பார்ப்பு கல்யாணலட்சுமிக்குள் முளைவிடும்.
அவ்வளவு ஏன்? பாத்ரூமில் குளிக்கையில் கையோடு ரகசியமாகக் கொண்டு
வந்திருக்கும் மஞ்சள் கயிற்றைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு, கோத்திருக்கும் மஞ்சள்
கிழங்கைக் கண்ணில் ஒத்திக்கொள்வதும், அதை வெற்று மார்பில் படரவிட்டுக் கண்ணாடி
பார்த்துப் பூரிப்பதும், வெளியே வரும்போது கழறறி அலமாரியில் ஒளித்து வைப்பதும்கூட
ரகசியக் கடமைதானே? இந்த முப்பத்தெட்டு வயசுக்குத் தேவையா இது மாதிரி திருட்டு
சுவாசம்?
”லக்னத்துலேர்ந்து எட்டாமிடம் சுத்தமில்லே…”
”களத்திர ஸ்தானம் நீசமாயிருக்கு…”
”மாங்கல்ய ஸ்தானம் பலமாயில்லியே ஜாதகத்துல. உங்க திசைக்கே ஒரு
கும்பிடு…”
சகலரின் வசனமும் இதுதான். முதுகெலும்பில்லாத முட்டாள்கள்.
பிடரியில் இடித்துப் புறமுதுகிட்டு ஓடினவர்களை இழுத்துப் பிடிக்கவா முடியும்?
அவனவன் சோறும் நீரும் ஏற்கனவே எழுதப்பட்டதுதானே? தோஷம் இல்லாத பெண்ணின் புருஷன்
எவனாவது நூறாண்டு இருந்திருக்கிறானா? ஜாதகச்சிறை இங்கு மட்டும்தானே? பேசாமல்
அமெரிக்கனோ, ஆப்பிரிக்கனோ கிடைத்தால் இழுத்துக்கொண்டு ஓடி விடலாம். இப்படியான
நினைப்பில் ஆழ்பவள்தான் கல்யாணலட்சுமி.
பன்னிரண்டு கட்டங்களுக்குள் கையும் காலும் விரித்து அவளை
ஆணியடித்து மாட்டியது மாதிரி இருக்கிறது. ஒவ்வொரு கட்டமும் பாம்பாக மாறி, உயிரோடு
அவளை விழுங்குவது மாதிரியும் இருக்கிறது. தப்பித்தல் இல்லாமல் எல்லாக் கிரகங்களுமே
வேலியாக நின்று தொடர்ச்சியாகத் துரத்துவது மாதிரியும் இருக்கிறது.
”தோஷம் தோஷம்னு சொல்லாதீங்க தரகரே! பொண்ணு, மாசம் நாலாயிரம்
சம்பாதிக்கறா… சமையல் அபாரம்…”
”ம்… இருக்கலாம். திருக்கணிதம், வாக்கியப் பஞ்சாங்கம் எப்படிப்
போனாலும் செவ்வாய் தோஷம். ஏகதோஷம் – ஜாதகத்தை முன்னப்பின்ன மாத்தி எழுதி
முடிச்சுடலாம்தான். தெரிஞ்சுடுத்துன்னா பிரச்னை. ஒரு லட்சம் ரொக்கம் குடுத்தா –
ஒப்புக்க வெச்சுடலாம்…” ஆசைகாட்டினார் தரகர்.
களத்திர ஸ்தானத்தைச் சுத்தப்படுத்த ஒரு லட்சமா? புதர்
மண்டிக்கிடக்கும் தரிசுநிலமா அந்தக் கட்டம்? அப்படியேனும் ஒரு மீசைக்குப்
பொண்டாட்டியாகித் தாசி வேலை பண்ணவா? எவன்டா கண்டுபிடிச்சான் ஜாதகத்தை? தூத்தேறி.
”பொண்ணுக்கு வயசாயிடுச்சே…”
”முகம் முத்திப்போச்சு மாமி உங்க மகளுக்கு…”
”ரெண்டாம் தாரத்துக்குக்கூட இளசைத்தான் கேக்கறாங்க…”
பருவத்துக்கேற்ற வசனச்சாட்டை செருகல்.
”கல்யாணலட்சுமி மேடம். போன் உங்களுக்குத்தான்…” உலுக்கப்பட்டாள்.
”ஹலோ..?”
”எப்படி ஃபீல் பண்றீங்க லட்சுமி? கஷ்டமாயில்லியே? சந்தோஷமா
இருக்கீங்களா?” எதிர்முனையில் மருத்துவர்.
”ம். ரொம்ப… ரொம்ப் கர்வமாயிருக்கேன்…”
வயிற்றுக்குள் ஐஸ்க்ரீம் மழை ஜிலுஜிலுவென்று நெளிந்தோடியது.
சுகமின்னல் ஜனனம். இத்தனை நாளும் உணராத வித்தியாச அனுபவம். கனவை நிஜமென்று
ஆக்கிக்கொண்ட கர்வம் – அவளுக்குள் குறுக்கும் நெடுக்குமாகப் பாவு கட்டியது. வேறு
யாருக்கும் தெரியாத ரகசியத்தைக் கர்ப்பம் சுமப்பது கர்வமாக இருந்தது. நிஜமா?
நிஜம்தானா? என் கனவின் நீட்சியா? விடியலின் சூரியக்கதிரா? எனக்கே எனக்கா?
இப்போதெல்லாம் கடைக்குப் போனால் குழந்தைகள் பகுதியிலேயே
குடியிருந்துவிடலாமா என்று மனசு கிறங்குகிறது. அந்த இடத்துக்கே ஒரு பாப்பா வாசனை
வீசுகிறது. காற்று கூடப் பூ மாதிரி மெல்லிசாகப் பேசுகிறது. உள்ளங்கை அகலத்தில்
பாப்பா ஜட்டி, பாப்பா சட்டைக்குள் சொர்க்கத்தின் முகவரி நெய்திருப்பதாகத்
தெரிகிறது.
புருஷன் ஆசையைக்கூடத் தகனம் செய்துவிடலாம். ஆலாகப் பறக்கக் கூடிய
அளவுக்குத் தகுதியேயில்லாத ஆசை என்று மனசைச் சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால்,
குழந்தை ஆசை? எனக்கே எனக்கென்று ஒரு குழந்தை. நானே வயிற்றில் சுமந்து அணு அணுவாக
ரசித்து, வளர்ச்சியைச் சுகித்து, மசக்கையில் துவண்டு, மூச்சு முட்ட வயிறு பெருத்து,
நிறை மாசமாகிப் பெற்றுப் பிழைத்துப் பூச்செண்டு மாதிரி கைநிறையக் குழந்தையை
வாரியெடுத்து – அதன் தேவலோக வாசனையை உயிரெல்லாம் ஸ்வீகரிக்கும் வரம். இந்த
இப்பிறவியில் கிடைக்குமா? பட்டாம்பூச்சியை – கண்திறக்கும் பாப்பாவைத் தரிசனம்
செய்தால் பண்ணிய பாவமெல்லாம் கரையாதோ?
அன்றைக்கொரு நாள் பேருந்தில் கைக்குழந்தையோடு
உட்கார்ந்திருந்தவளிடம் தயக்கமாகக் கேட்டு அவளின் குழந்தையை, உடம்பு நெகிழ நெகிழ
மடியில் தாங்கிக் கொண்ட அந்த அஞ்சு நிமிஷத்தில் தலையோடு காலாகப் புல்லரித்தது.
தொடைகள் வழவழத்தன. கண்ணீர் பொங்கியது. பரவசத்தில் லேசாய் ஒன்றுக்குக் கூடப்
போய்விட்டது எனக்கு. குழந்தை… குழந்தை! என் மடியில் ஒரு குழந்தை என்று
சந்தோஷத்தில் ஜுரமே வந்துவிட்டது.
என்னுடைய நினைப்பு தெரிந்த சமீப நாட்களாக அம்மாவுக்கு இந்தக் கவலை
வேறு வயிற்றில் புளி கரைக்கிறது.
”அப்படி ஏதும் பண்ணிடாதேடீ. மானமே போயிடும்…” அம்மா மனசுக்குள்
அரற்றுவது – சுவாசம் வழியாக வெளியேறி கல்யாணலட்சுமியின் காதுக்குக் கேட்கிறதுதான்.
ஆனால், வேறு வழி?
‘மதுரை அத்தை பொண்ணுக்கு ரெட்டைக் குழந்தைங்க பொறந்திருக்கே… அவளை
வேணும்னா கேட்டுப் பார்க்கலாமா?’
ஆயத்தக் குழந்தையா என் தேவை? தத்தெடுத்ததைவிடப் பெத்தெடுக்கும்
சுகத்துக்குதானே ஒற்றைக்கால் தவமிருக்கிறேன்? நானே கருத்தரித்து, வித்து தாங்கி,
மார்னிங் சிக்னெஸ்ஸில் கிறுகிறுத்து, குமட்டி, வாந்தியெடுத்து, வலியெடுத்துப்
பெற்றுப் பால் கொடுக்க, முலைக்காம்பை அது கடிக்கும்போது கிடைக்கும் சுகவலியை
ஸ்வீகரிக்க, நானே பெற்றெடுக்கும் சுகம்தானே என் தேடல்? பிரசவவலி என்னைப்
பிழிந்தெடுக்க வேண்டும். உயிர் ஜனனத்துக்காக உடல் முறுக்க வேண்டும். வியர்க்க
வேண்டும். விறுவிறுக்க வேண்டும். வெள்ளை முத்தாகப் பால் சொட்ட வேண்டும். ரோஜா
இதழால் குழந்தை சப்பிக் குடிக்க வேண்டும். குளுகுளுவென்று உடம்பு முழுசும்
குற்றாலம் குடியிருக்க வேண்டும்.
என்னை நானே தாய்மையில் குளிப்பாட்டிக் கொள்ள வேண்டும். எனக்கு நானே
தரும் வரம் அது. எனக்கு நானே சூட்டிக் கொள்ளும் கிரீடம் அது. என் நேசத்தின் நீட்சி
அது. என் பாசத்தின் பரப்பளவு அது. என் உயிரைச் சுமந்திருக்கும் ஜீவப் பெட்டகம்
அது.
சமூகம் என்னைப் பிய்த்துச் சுவைத்து மென்று தின்று துப்பினாலும்
பரவாயில்லை. எல்லா வாசலும் அடைக்கப்பட்ட சமூகக் கல்லறையில் எனக்கான சுவாசக் குழாயை
நானே அமைத்துக் கொண்டது நியாயம்தான். மனைவி வரம்தான் மறுக்கப்பட்டது. அம்மா
அவதாரம் எனக்கு நானே தரும் வரம். ஒற்றை மனுஷியாக்கி என்னைச் சுண்ணாம்புக்
காளவாய்க்குள் தள்ளியவர்களுக்கு நான் தரும் அக்கினிக் குளியல். கட்டங்களுக்குள்
சிக்கிய சகதிச் சமூகத்தை நசுக்க வந்த தேவன் என் வயிற்றுக்குள் கோயில்
கொண்டிருக்கிறான்.
”என்ன மேடம்? பூரிப்பாயிருக்கீங்க? கல்யாணம் நிச்சயமாயிருச்சா?”
”ம்ஹும். கர்ப்பம் நிச்சயமாயிருச்சு…”
அதிர்ச்சியில் குளித்தாள் கேள்வியை எழுப்பியவள். நிறைவாகச்
சிரித்தாள் கல்யாணலட்சுமி.
காட்சி மூன்று
”பொண்ணு கல்யாணம் பத்திக் கொஞ்சம்கூடக் கவலையில்லாமல இருக்கேளே…”
”என்னடி பண்ணட்டும்? அவ கொடுப்பினை அவ்வளவுதான். களத்திரம் சுத்தமில்ல. தோஷம் நல்லதுக்குதான்னு வெச்சுக்க. அவ சம்பாத்யம் வேணும்டி. ஒரு கால பூஜைகூட இல்லாத கோயில் சம்பாவனைல மூணு ஜீவனம் நடக்குமாடி…”
பூட்டிய கதவு தாண்டிக் காதுக்குள் நுழைந்த வார்த்தைகளின் குணம்,
மணம், தன்மை கல்யாணலட்சுமிக்கு அடையாளம் தெரிந்தது. கதவு திறந்தாள் அம்மா.
”வந்துட்டியாடி? பாலை வார்த்தே… பஸ் ஸ்டாண்டிலே வந்து
பார்க்கறதுக்கு அப்பா கிளம்பிண்டிருக்கார்…”
”………….”
”முகம் ஜொலிக்கிறதே, பிரமோஷன் கிடைச்ச மாதிரி…”
”பிரமோஷன்தான்…”
”நிஜம்மாவாடீ?”
”ம்… மாமனார் – மாமியார் ஆகாமலே நீங்க தாத்தா – பாட்டி
ஆகப்போறீங்க…”
”அடிப்பாவி… நினைச்சதைப் பண்ணிட்டியே. குடிமுழுகிடுச்சே.
அருவருப்பா இல்லியா? ஏன்னா… இங்க சித்த வாங்கோ…” பதறினாள் அம்மா.
களத்திரஸ்தானாதிபதி சரியில்லையென்றால் புத்திரஸ்தானாதிபதி சரியாயிருக்க
முடியாதா? சரிபண்ண முடியாதா?
புத்திரஸ்தானத்தை நானே ஸ்புடம் போட்டுக் கொண்டேன். விதை நெல் –
கடன் வாங்கி.
நவாம்சம், ராசிக்கட்டம் எல்லாவற்றிலும் ஸ்டெதாஸ்கோப்பும் ஊசியும்
உட்கார்ந்திருக்கும் புதுஜாதகம் இது. ஊசியே என் கணவன். டாக்டரே தரகர். வயிற்றில் நீந்தும்
இரவல் வித்து… என் உடம்பு முழுசும் சொர்க்கத்தைக் காப்பியம் எழுதுகிறது.
அம்மா, அப்பா என்று இரண்டு முகம் கொண்ட புது அம்மன் நான். ஜாதகமாம்
ஜாதகம். பொல்லாத ஜாதகம்.
***
என்னுரை
சில வருடங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் இது போன்று ஒரு சம்பவம்
செய்தித்தாள்களில் அடிபட்டது. 50 வயது முடிந்த ஒரு அரசு வேலையில் இருந்த
பெண்ணிற்கு ஒரு “குஞ்சுக்கால் வீட்டில் காணனும்” என்று ஆசை. கணவன் இல்லை,
பிள்ளைகள் இல்லை, ஆர்த்தவம் நின்று விட்டது. அடுத்துள்ள கருத்தரிப்பு மையத்தில்
சென்று ivf மூலம் கரு உண்டாக்கி அதை சுமந்து ஒரு ஆண்குழந்தையைப் பிரசவித்து
குழந்தைக்கு ஒரு வயது முடிந்தது. இப்படி இது மருத்துவமனைக்கு ஒரு பெயர்
பெற்றுத் தந்தது.
திடீரென்று ஒரு செய்தி, குழந்தை ஒரு தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில்
தலைகுப்புற விழுந்து இறந்து போயிருந்தது. பல வித ஊகங்கள். குழந்தை கொல்லப்பட்டது
என்றும், கொலை செய்தவர் அந்த பெண், இல்லை, பெண்ணின் சொத்துக்கு ஆசைப்பட்ட
உறவினர்கள் என்று பல உறுதி செய்யமுடியாத ஊகங்கள். கேஸ் accidental death என்று
முடித்து வைக்கப்பட்டது.
பெண்மை என்பது யாது? அதன் நோக்கம் என்ன? அது எப்போது முழுமை அடைகிறது?
என்ற கேள்விகளோடு அரட்டையை துவங்கி
வைக்கிறேன்.
பெண் பெற்றோருக்கு பிரியமுள்ள மகளாக (அன்பு செய்ய ஓர் உயிர்),
கணவனுக்கு படுக்கையில் சுகம் தருபவளாக, குடும்பத்தை நிர்வகிக்கும் நிர்வாக
அதிகாரியாக, தன்னால் மட்டுமே முடியும் என்ற நிலையில் குடும்பத்தின் சந்ததிகளை
உருவாக்குபவளாக, சாகும் வரை உழைப்பு என்று உழைப்பவளாக இருப்பதைக் கண்டாலும்
இவற்றில் எந்த position அவளுக்கு பூர்ண திருப்தியை அளிக்கிறது என்பதே
விவாதத்திற்குரியது. இந்த கதையில் குழந்தை பெறுவதே பூர்ண திருப்தி என்ற நிலை.
வாசகர்கள் பலரும் பெண்கள், அனுபவம் மிக்கவர்கள். அவரவர் கருத்துக்களைக் கூறலாம்.
நன்றி sirukathaigal.com
பாடகி சித்ராவுக்கும் ஆசைப்பட்டுப் பெற்றுக்கொண்ட குழந்தையை கவனக்குறைவால் தவறி விட்ட சம்பவம் நடந்ததல்லவா? திராவிட எழுத்தாளர்னதும் இந்த மாதிரிச் சிந்தனை உள்ள கதையை எதிர்பார்க்கலாம்.
பதிலளிநீக்குஉணர்வுபூர்வமான கதை. நல்ல ஒரு தீர்வை கைக்கொண்டிருக்கிறாள் க.லட்சுமி! கல்யாணம் ஆகாதது பெற்றோர்களின் சுயநலமாகக் கூட இருக்கலாம். திருவானந்தபுரம் சம்பவம் மனதுக்குள் ஆராயப்பட வேண்டியது. இரண்டு பக்கமும் யோசிக்கலாம். அதையே தனிக் கதையாக்கலாம்!
பதிலளிநீக்குஸ்ரீராம்! ஒட்டுமொத்த கதை பற்றி உங்கள் கருத்தாகக் குறிப்பு கொடுத்து விட்டீர்கள். சரி.
நீக்குகதை வாசிப்பு அதோடு முடிந்ததா என்ன?
கதாசிரியர் தன் மனதில் படிந்த கதையை எழுத்தில் கொண்டு வந்ததைப் பற்றி எழுதி இருக்கலாம் இல்லையா?
நீங்களும் ஒரு கதாசிரியர் என்பதால் உங்களிடம் இந்தக் கோரிக்கை.
சனிக்கிழமை கதைகள், கதைகள் எழுதுவோருக்கு ஒரு பயிற்சிக்களமாகவும் இருக்க இதுவே வாய்ப்பாவும் அமையக் கூடும்.
பொதுவாக இது மாதிரி கதைகளை, படைப்புகளை நான் 'அவர் அப்படி படைத்திருக்கிறார், கொடுத்திருக்கிறார்' என்று மட்டும் பார்க்கிறேன் ஜீவி ஸார். அதில் திருத்தமோ, மாற்றங்களோ மனதில் தோன்றுவதில்லை.
நீக்குஆனால் நான் எழுதும் படைப்புகளில் இப்படி அப்படி இருக்கலாம் என்று தோன்றுவதற்கேற்ப மாற்றிக் கொள்கிறேன். எழுதி முடித்தபின் சமயங்களில் முதல் பாராவை வேறு இடத்திற்கு மாற்றி நான்காவது பாராவை ய்முதல் பாராவாக்கி, சில வரிகளை மாற்றி என்று மாற்றி எழுதுவேன். ஆனால் அது ரொம்ப ரொம்ப ரொம்ப ரேர்.
இன்று பதிவில் நான் ஒரு நுட்பமான மாறுதல் செய்தேன். யாராவது கண்டு பிடிக்கிறார்களா பார்ப்போம்!
வாரம் ஒரு பாசுர பதிவும், நான் படிச்ச கதைப்பகுதி மட்டுமே இடம் பெற்றிருப்பதை குறிப்பிடுகிறீர்களா .?
நீக்குஎப்பவுமே அப்படிதானே? அது இல்லை. எழுதிய நெல்லைக்கும், நான் மாற்றும் முன்பு அதாவது ஆறு மணிக்கு முன்பு படித்தவர்களும் மட்டுமே கண்டு பிடிக்க முடியும்!
நீக்குபுரியவில்லையே..! நானும் இன்று சீக்கிரமாக 5.30 மணிக்குள் படித்து விட்டேன். அப்போது ஏதும் மனதில் புலப்படவில்லையே .! நீங்களோ , இல்லைப் ஆறுக்குள் படித்தவர்களோ சொன்னால்தான் புரியும்.
நீக்குஇன்றும் ஒரு பயணம் உள்ளது.( இளையமகன் வீட்டிலிருந்து) அது முடித்து வந்த பின்தான் அதை படிக்க முடியும். நான் விட்ட பதிவுகளையும்... அதனால், அனைவரும் மன்னிக்கவும். நன்றி.
ஆ! ஸ்ரீராம் நான் இன்று காலையில் பார்க்காமல் போய்விட்டேனே!
நீக்குமற்றபடி கதை பற்றிய உங்கள் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன் ஸ்ரீராம்.
நானும் யார் என்ன என்பதைப் பார்ப்பதில்லை. கதையை மட்டுமே எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பது மட்டுமே.
கீதா
பாஸின் சித்தி மகன் பெயர் தாசரதி. பெயர் விளக்கம் இன்று தெரிந்தது.
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். நானும் எதைப் படித்தாலும் அதில் புதிதாகத் தெரிந்துகொள்ள ஏதோ ஒன்று இருப்பதைக் கவனித்திருக்கிறேன்.
நீக்குநடாதூர் நம்பி என்ற பெயர் மனதில் நிழலாடுகிறது. அவரேதான் இவரா?
பதிலளிநீக்குதாசரதி என்பது ராமனின் பெயர். தசரதனின் மகன் என்று பொருள்படுமோ?
நீக்கு/சிலர், இந்தப் பெயர் காஞ்சி வரதராஜப் பெருமாள் கொடுத்த பெயர், திருக்கச்சி நம்பிகளின் இயற்பெயர், பார்கவப் பிரியர் (திருமழிசை ஆழ்வாரின் அருளால் பிறந்ததால்) என்றும் சொல்கின்றனர்./
பதிலளிநீக்குபுரியவில்லையே! திருமழிசை ஆழ்வாருக்கும் "பார்கவன்" என்ற பெயருக்கும் என்ன சம்பந்தம்? சற்றே விளக்க முடியுமா?
Bhargavan is a Sanskrit-origin Hindu male name meaning "descendant of Bhrigu,"
நீக்குIt is also a name for Lord Shiva in Ahobilam,
முருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்வோம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கமும் பிரார்த்தனையும்.
நீக்குஅன்பின் நெல்லை அவர்களது
பதிலளிநீக்குபணி சிறக்க பிரார்த்தனைகள்...
என்னுரையில் உள்ள "ஸ்பின்னிங் சொத்துக்கு" என்பதை பெண்ணின் சொத்துக்கு என்று திருத்திக்கொள்ள கோருகிறேன்.
பதிலளிநீக்குDone.
நீக்குஇப்போது கைத்தலபேசியில்
பதிலளிநீக்குவாசிப்பது மேலும் சிரமமாக உள்ளது...
:(
நீக்குபக்தி மயமான வாரம் ஒரு பாசுரத்திற்கும், கதை வாசிப்பு பகுதிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது, ஏதாவது ஒன்றை வேறு கிழமைக்கு மாற்றி விடலாம் என்று தோன்றுகிறது, பாசிட்டிவ் செய்திகளை திரும்பக் கொண்டு வரலாம். உதவ AI இருக்கிறதே.
பதிலளிநீக்குJayakumar
வேறு நாள் எதுவும் சௌகர்யமாக இல்லையே JKC ஸார்...
நீக்குபுதன், வியாழன் வெள்ளிக்கு இதை மாற்றினால் பாசுரம் வெள்ளத்தில் மூழ்கி பத்தோடு பதிந்தோன்றாகி விடும். அவற்றில் ஒன்றை சனிக்கிழமைக்குக் கொண்டு வந்தாலும் நான் படிச்ச கதை மூழ்கி விடும்.
செவ்வாய்க்கு மாற்றலாம். கதை ஒன்று விமர்சனம் ஒன்று என்று..
திங்களிலோ, ஞாயிறிலோ ஒத்து வராது.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவு அருமை. குருபரம்பரை தொடர் பாசுர பதிவு, அதன் விளக்கங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.
/பொருள் மீது பற்றில்லாமல், தனக்குச் சேவைகள் செய்துவந்த திருக்கச்சி நம்பியிடம் தேவப்பெருமாள் அவருடன் திரைக்குப் பின்னாலிருந்து பேச ஆரம்பித்துவிட்டார். /
ஆகா..! இறைவனின் அன்பை என்னவென்று சொல்வது.? இதற்கு அருகதை பெற்ற இறைவனின் தொண்டரான திருக்கச்சி நம்பி அவர்களின் பாதம் பற்றி நானும் வணங்கிக் கொண்டேன். 🙏.
/மணம் மிக்க மலர்ச் சோலைகள் சூழ்ந்த திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கும் இறைவனே, என்னுடைய துன்பங்களை நீக்க மாட்டாய் என்றாலும், உன் திருவடிகளைத் தவிர எனக்கு வேறு புகலிடம் இல்லை. கோபத்தினால் தான் ஈன்ற குழந்தையை தாய் தள்ளிவிட்டாலும் அந்தக் குழந்தை தாயின் அன்பை நினைத்து, அவள் தயவை நாடி அழுவது போல, நானும் அப்படியே இருக்கிறேன் என்கிறார். /
ஆம் இறைவனை நம் தாயாக நினைத்து விட்டால், நம் துக்கங்கள் யாவும் நீர்த்துப் போய் விடும். நல்ல பாடல், அதன் விளக்கமும் அருமை.
பொதுவாக இறைவன் சன்னிதியில் நமக்குள்ள எத்தனையோ பிரச்சனைகளை மானசீகமாக சொல்ல நினைக்கும் போது, நமக்கு அவை அனைத்தையும் சொல்ல விடாமல், நம் மனது மறக்கடித்து விடும் என்பது நான் கண்ட உண்மை. "நான் உன்னை எப்போதாவது மறந்தாலும், நீ என்னை எப்போதும் மறவாதிருக்க வேண்டும்." என்பதே முக்கால்வாசி என் தினசரி பிரார்த்தனை.
இதையெல்லாம் நான் படித்து அறிந்ததில்லை. இப்போது நல்ல விபரத்துடனும், விளக்கத்துடன் நீங்கள் எழுதுவதை படித்து தெளிவடைகிறேன். மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... திருப்பதி பெருமாள் முன்பு நான் வேண்டிக்கொள்ள நினைத்தவைகள் மறந்துவிடுவதை பலமுறை அனுபவித்திருக்கிறேன். இறைவன் அருளால் ஒரு பயணத்தில் பலமுறை அவன் தரிசனம் வாய்த்துவிடுவதால் ஒரு தரிசனத்தில் கோரிக்கைகளைஅவனிடம்்சொல்லிவிடுவேன்.
நீக்குபலருக்கு இந்தப் பகுதி புதிதாக இருக்கும் என எண்ணித்தான் எழுதுகிறேன். இப்போல்லாம் தினமும் பாசுர விளக்கத்தையும் சேர்த்துவிடுகிறேன். நன்றி
மிகவும் கடினமான ஒரு விஷயத்தை அனாயாசமாக கையாண்டிருக்கிறார் ஆசிரியர். இந்தக் கதை எழுதப்பட்ட காலம் தெரியவில்லை, தற்சமயம் இது போன்ற விஷயங்கள் வரத் தொடங்கி விட்டன. நடிகை ரேவதி கூட செயற்கை கருத்தரிப்பு முறையில்தான் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார். படிப்பவர்களுக்கு வெறுப்பு வராமல் எழுதப்பட்டிருக்கும் திறமையை பாராட்ட வேண்டும்.
பதிலளிநீக்குதிருக்கக்சி நம்பிகளின் சரிதம், அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம், அத்ற்கேற்ற ஆள்வந்தாரின் ஸ்லோகம், அதே பொருளுடைய குலசேகர ஆழ்வார் பாசுரம், அது சம்பந்தப்பட்ட கோவில் என்று எல்லாவற்றையும் அழகாக இணைத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். நன்றி
நீக்கு//(பெரும்பாலான வைணவர்களுக்கு அவர்கள் வம்சம் தோன்றிய ஊரின் பெயர் அவர்களுடைய ‘சர்மா’ என்று சொல்லப்படும் பெயரில் இருக்கும். // தெங்கலையைச் சார்ந்தவர்களுக்கு மட்டும்தான் இப்படியா? வடகலையிலும் உண்டா? எங்கள் நண்பர்கள் இரண்டு பேர்கள்(ஈருவருமே தென்கலை) ஒருவருக்கு இனிஷியல் ஆம்பூர் கிடாம்பி என்றும் இன்னொருவருக்கு குன்னவாக்கம் விஞ்சிமோர் என்பதைக் குறிக்கும் கே.வி. என்பது இனிஷியல். கமலஹாசன் அக்கா மகனுக்குக் கூட கௌதம் கந்தாடை என்றுதான் பெயர். இவையெல்லாம் ஆச்சாரியனைத் தான் குறிக்கிறாதா? அல்லது என் புரிதல் தவறா?
பதிலளிநீக்குஇதல் கலை பேதம் கிடையாது. கிடாம்பி என்ற வம்சம் இரு கலையிலும் உண்டு. சிலருக்கு ஆச்சார்ய வம்சப் பெயர். கிடாம்பி, கந்தாடை என்பது போல.விஞ்சிமூர் ஊர்ப்பெயர், வம்சப் பெயர்.
நீக்குபாஸின் சித்தியின் இரண்டாவது மருமகள் கிடாம்பி குடும்பம். அந்த மருமகளின் தம்பி சித்தார்த் கிடாம்பி இப்போது சிங்கப்பூரில் பணிபுரிகிறார்.
நீக்குமேலும் கிடாம்பி எனும் இந்தப் பெயர் எனக்கு வேறு எதையோ நினைவு படுத்துகிறது. எது என்று நினைவுக்கு வரவில்லை.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதைப்பகிர்வும் நன்றாக உள்ளது. முன்னுரை பின்னுரை பகுதியும் அருமை. பின்னுரையில் வந்த விபத்துப் பகுதி படித்ததில்லை. எவ்வளவு கஸ்டங்களையும் தாண்டி வந்தாலும், நடப்பவை நடந்து கொண்டுதான் உள்ளது என்ற தத்துவ குணத்தை நாம் பெற வேண்டும் என்ற நியதி என்றுமே மாறாதது.
கதாசிரியரின் திறமை மிக்க பக்குவப்பட்ட எழுத்துக்களை படித்து ரசித்தேன். தாய்மையின் விகசிப்பை ஒரு பெண் எவ்வாறு பெறுகிறாள் என்பதை குறித்த எழுத்துக்கள் கதாசிரியரின் முழு எழுத்துத் திறமையையும் காட்டுகிறது. அவருக்குப் பாராட்டுக்கள்.
/அம்மா, அப்பா என்று இரண்டு முகம் கொண்ட புது அம்மன் நான். ஜாதகமாம் ஜாதகம். பொல்லாத ஜாதகம்./
ஜாதகத்தை பார்த்துப் பார்த்து அதை குறித்து விமர்சித்து அலுத்துப்போன மனம் எடுக்கும் முடிவு. அவலை மெல்லும் சமூகம் எத்தனை நாள் பேசும்.? நாளடைவில் அவலும் வாய்க்குப் பிடிக்காது போகும் என்ற நம்பிக்கை அந்தப் பெண்ணின் முடிவு என்பதை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.
வித்தியாசமான இக்கதையை இங்கு படிக்கத்தந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாசுரம் பகுதி வைணவத்தில் மிக முக்கியமான இராமானுஜர் பகுதிக்கு வந்தாச்சு! இராமானுஜர் பற்றிய ஒரு புத்தகம் நாம் வீட்டில் முன்பு இருந்ததை வாசித்திருக்கிறேன். யார் எழுதியது என்று மறந்துவிட்டது, நெல்லை.
பதிலளிநீக்குஇப்போது உங்க எழுத்திலும் வாசிக்கக் கிடைத்துவிட்டது. நல்லா எழுதறீங்க நெல்லை.
என் அப்பா வழியில் இந்த ஆச்சாரியார் வம்சம் பெயர் எதுவும் இல்லையே......என் புகுந்த வீட்டில் வாங்கல் கிடாம்பி! நடாதூர், எல்லாம் உண்டு. பிறந்த வீட்டில் நஹி!
கீதா
ஏனென்றால் நாங்கள் தின்னவேலி. தின்னவேலிக்காரங்களை சேர்த்துக்கவே மாட்டாங்க!!! எனக்கு அதில் பெருமையும் சந்தோஷமுமே!
நீக்குகீதா
வாங்க கீதா ரங்கன் க்கா... தின்னவேலி இல்லையே. நீங்க நாஞ்சில் நாடுனா... திருவிதாங்கூர் அரசு. போனாப் போகுதுன்னு உங்களை தமிழச்சியா ஒத்துக்கிட்டிருக்கோம்.
நீக்குஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் கதைகள் நன்றாக இருக்கும் எழுத்தும்.
பதிலளிநீக்குஇந்தக் கதை அட்டகாசமான நடையில் எழுத்தில், உணர்வுகளுடன் மிக ஆழமான கருவை எடுத்தாண்டு இருக்காங்க. எனக்கு கதை மிகவும் பிடித்தது. அனாயாசமாகக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர்!
கீதா
அதே சமயம் நடைமுறையில் கேவலமாகப் பார்க்கப்பட்ட காலகட்டத்தில் எழுதியிருக்காங்க. சம்பளம் 4000 என்று சொல்லப்பட்டிருப்பதால் கொஞ்சம் முந்தைய வருடங்களில் எழுதபப்ட்ட கதை என்று...
பதிலளிநீக்குஇப்ப இது அவுட் டேட்டட்!!!! அதாவது சர்வ சகஜமாக, திருமணம் ஆனவங்களும் சரி, திருமணம் வேண்டாம் எனும் பெண்கள் தாய்மை என்பதை மட்டும் அனுபவிக்க ஆசைப்பட்டு இப்படிப் பெற்றுக் கொள்வது பற்றி சில வருட்னகளுக்கும் முன் ஒரு கட்டுரையே வந்தது ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில்.
எப்படித் தெரியவந்தது என்றால், நான் எழுதத் தொடங்கி முடித்திருக்கும் ஆனால் இன்னும் நிறைய தட்டிக் கொட்டல் தேவைப்படும் கதைக்குத் தேவைப்பட்டதால் தேடிய போது தெரிந்து கொண்டேன். fertility மையங்கள் இருக்கின்றனவே.
இப்ப அதையும் தாண்டி, NKNK க்கு காலம் மாறியிருக்கிறது. திருமணம் வேண்டாம் என்றும் முடிவுக்கும் மாறிக் கொண்டிருக்கிறது.
கீதா
இன்னொரு கருத்து அந்த ஐடியில் போட்டது வரவே இல்லை...
பதிலளிநீக்குஸ்லோகத்தின் அர்த்தம் மிகவும் ரசித்தேன்.
அதற்கு இணையான பாசுரம் சூப்பர் நெல்லை. நல்லாருக்கு பொருத்திப் பொருத்து எடுத்துப் போடறீங்களே சூப்பர்.
//இதனை ‘அகதித்வம்’ என்பர். அதாவது ‘வேறு புகலில்லாத நிலை’.//
எனக்கு இதுதான் நேற்று பகிரப்பட்ட கவிதையிலும் தோன்றியது.
கீதா
காலை வணக்கம்.
பதிலளிநீக்குபாசுரம் பகிர்வு நன்று. தாசரதி - தசரதனின் பிள்ளை ராமனும் தாசரதி தான். நண்பர் ரிஷபன் அவர்கள் இந்தப் பெயரில் தொடர்ந்து கவிதைகள் எழுதி அதனை புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கிறார்.
கதை - நன்று. வித்தியாசமான கதைக் களன். அந்தப் பெண்ணின் கோணத்தில் அவர் எடுத்த முடிவு சரியானதாக இருக்கலாம். சமீபத்தில் ஹிந்தியில் Badhaai Ho என்று ஒரு படம் வந்தது . தமிழிலும் கூட அதே படத்தினை சத்யராஜ் - ஊர்வசி நடித்து எடுத்திருந்தார்கள். வயதான அம்மா கர்ப்பமாவது போன்ற கதை. Badhaai Ho படத்தில் நடித்த நீனா குப்தா - 66 வயது... அவர் சமீபத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் பார்த்தவர்கள் புதிதாக ஒரு புரளியைக் கிளப்பிவிட்டனர். படத்தில் நிகழ்ந்தது போல நிஜத்திலும் 66 வயதில் அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற புரளி தான் அது. இல்லை என்று நீனா குப்தாவே சொல்லி விட்டார்.
ஆனால் ரேவதி போல ஏற்கனவே ஷபானா ஆஸ்மி அப்படி குழந்தை பெற்றிருக்கிறார் என்று படித்த நினைவு. நீங்கள் சொல்லும் சத்யராஜ் ஊர்வசி படம் பார்த்திருக்கிறேன்.
நீக்கு