தஞ்சை பெரிய கோயிலைப் பார்த்து பிரமித்த நாம், தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழி மெய்யா என்று பார்க்க வேண்டாமா?
கல்கியின் எழுத்தினால், தமிழகத்தில் இராஜராஜ சோழனின் வரலாறு அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சுந்தரச் சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் அகால மரணம் எய்த, அவனுக்குப் பின், தம்பியான அருண்மொழி பட்டமேற்க முடியாமல், சிற்றப்பன் உத்தமச் சோழன் என்ற பெயரில் பட்த்திற்கு வந்தான். உத்தமச் சோழன் பதினைந்து ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தின் அரசனாக இருந்து மறைந்த பிறகு அருண்மொழி, இராஜராஜன் என்ற பெயரில் பட்டத்திற்கு வந்தான். அவன் பிறந்த வருடம் 947-948. தந்தை சுந்தரச் சோழன் மறையும்போது, கிட்டத்தட்ட 28 வயது ஆகியிருந்தது. அதற்கு 7 ஆண்டுகள் முன்பாகவே (அதாவது ஆதித்த கரிகாலன் மறைந்த தும்), சுந்தரச் சோழனின் பெரியப்பா கண்டராதித்தரின் மகன் அரசாட்சிக்கு ஆசைப்பட்ட தால், நியாயப்படி அரசுரிமை தனக்குத்தான் உரியது என்று உரிமை கோரியதால், அவனையே இளவரசனாக ஆக்கினர். சுந்தரச் சோழர் உடல் நலம் இல்லாது இருந்ததால், உத்தமச் சோழன் என்ற பெயரில் சோழ அரசனானான். அவனுக்குப் பிறகு அரியணை அருண்மொழிக்குச் சேரவேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்தது. உத்தமச் சோழன் 985ல் மறைந்த தும், அருண்மொழித்தேவர் சோழ அரசனானார். அவர் ஆட்சிக்கு வந்து 3ம் ஆண்டு வெட்டப்பட்ட கல்வெட்டுகளில்தான் ராஜ ராஜத் தேவர் என்ற பெயர் அருண்மொழிக்கு வழங்கலாயிற்று.
ஒரு அரசன் பட்டத்திற்கு வருவதற்கே பல வருடங்களாகிவிடும். அவனுக்கு அரசுரிமை இருந்து (அதாவது மூத்த மகன்), வீரனாகவும் இருந்தால், அவனை நாட்டின் ஒரு பகுதியின் படைத்தளபதியாக ஆக்குவார்கள், இளவரசனாகவும் அறிவிப்பார்கள். இளவரசன் என்று பட்டம் பெற்றுவிட்டாலே, அவனைக் காக்க தனியாக ஒரு படை உருவாகிவிடும். (வேளக்காரப் படை). இளவரசனை இவர்களை மீறி யாரும் சந்திக்க முடியாது. பாதுகாக்கப்படும் இளவரசனுக்கு ஏதேனும் ஆனால், இவர்கள்தாம் பொறுப்பு. பிற்கால அரசனாகப்போகும் இந்த இளவரசனுக்கு எல்லாவற்றிலும் பயிற்சியும், கல்வியும், பொறுப்பும் கொடுக்கப்படும்.
இன்றைக்கு நாம் அரசியல் கட்சிகளில் பார்ப்பதுபோல, அடுத்த வாரிசு அதாவது இளவரசன் உதயமாகிவிட்டால், அவனுக்கென்று தனிப்பட்ட நம்பிக்கையானவர்கள், நண்பர்கள், ஒற்றர்கள் என்று பல தரப்பினரும் உருவாகிவிடுவர். அவர்களுக்கும் அரசனுடையவர்களுக்கும் உரசல் நடந்துதான் ஆகவேண்டும். அதனால், அரசனுக்கும் இளவரசனுக்கும் நல்ல புரிதல் இருக்கவேண்டும். தந்தை தனயன் இவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரே ரத்தம் என்பதால், இருவரும் இணைந்துதான் இராஜ்ஜியத்தைக் கட்டிக்காப்பாற்ற வேண்டும். அவர்களும் சாதாரண மனிதர்களே என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இருந்தாலும் நமது பொது நம்பிக்கை, அரசர்கள் தர்மம் வழுவாது நடந்தார்கள், அவர்களுக்கு ஆலோசனை சொல்ல உரிய அமைச்சர் பெருமக்கள் இருந்தார்கள் என்பதுதான். எப்படி அரசனுக்கும் இளவரசனுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் நடைபெற்றிருக்கும், எதை வைத்து தகவல்களைச் சரிபார்ப்பார்கள், ஒற்றர்கள் யாருடைய கைப்பாவையாக ஆகியிருப்பார்களா என்பதெல்லாம் நாவலுக்கு ஏற்ற கருக்கள்.
சுந்தரச் சோழன் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளிலேயே தன் மூத்த மகனை இளவரசனாக ஆக்கிவிடுகிறான் (ஆதித்த கரிகாலன்). அதுபோல, ராஜராஜ சோழன் என்ற பெயர் சூட்டிக்கொண்ட காலத்திலேயே (அதாவது தன் மூன்றாம் ஆண்டு அரசாட்சியின்போதே) தன்னுடைய மகன் இராஜேந்திர சோழனை இளவரசனாக ஆக்கியிருக்கவேண்டும்.
இதில் நாம் குறிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டியது, ராஜராஜ சோழனுக்கு நிறைய மனைவியர் இருந்தார்கள். அவனுடைய பட்டமகிஷி உலகமகாதேவி (தந்தி சக்தி விடங்கி என்ற பெயர்). ராஜராஜ சோழனின் இரண்டாம் மனைவி வானமா தேவி (திரிபுவன மாதேவி). இவள் சேரர் குல இளவரசி. வானமாதேவியின் மகன் நம் ராஜேந்திர சோழன். ராஜராஜ சோழனின் இன்னொரு மனைவி பஞ்சவன் மாதேவி, பழுவேட்டரையர் குலத்தைச் சார்ந்தவர். சுமார் பதினைந்து மனைவியரைப் பெற்றிருந்தான் ராஜராஜ சோழன். அதிக மனைவியர்கள் அரசனுக்கு அமைவது இயல்பு. இதன் மூலம் பிற அரசர்களோடு, குலங்களோடு மணத் தொடர்பு ஏற்படுவதால் அரசருக்கு பகை குறையும், பல குலங்களின் ஆதரவும் இருக்கும். உதாரணமாக ராஜராஜன் சோழனின் மனைவியருள் ஒருவர் மீனவன் மாதேவியார். இவர் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். இராஜராஜன் கடல் கடந்து படையெடுத்துச் சென்றதை நினைத்தால் இதனைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு மகன் மாத்திரம் இருந்தால் அரசுரிமைப் பிரச்சனையோ இல்லை குலங்களிடையே மனவருத்தமோ ஏற்படாது. ராஜராஜனுக்கு இராஜேந்திரன் ஒரே மகன். அவனைத் தவிர ராஜராஜனுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர்.
அருண்மொழித்தேவன், உத்தமச் சோழனுக்குப் பிறகு அரியணை ஏறினான். தன்னுடைய அரசில் அவன், உத்தமச் சோழனின் மகனான மதுராந்தகன் கண்டராதித்தனை கோயில்களைக் கண்காணிக்கும் பணியில் அமர்த்தியிருந்தான் (சோழ சாம்ராஜ்யத்தின் அறநிலையத்துறை போலிருக்கு). பிற்பாடு ஒரு பிரச்சனையில் இவனது பதவி பறிக்கப்பட்டது.
ராஜராஜ சோழன் சைவ சமயத்தைக் கடைபிடித்தான், அவனது சமய அறிவு, பக்தி அவனது பாட்டி செம்பியன் மாதேவியால் (கண்டராதித்தர் மனைவி) அவனுக்கு சிறு வயதிலிருந்தே ஊட்டப்பட்ட து. அளவில்லாத வீரம், கடல் கடந்து இலங்கைக்கு அப்பாலும் பல போர்களில் வென்றது, படைபலத்தை அளவில்லாமல் பெருக்கியது, திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி என்பவரைக் கொண்டு ஏடுபடுத்தியது, பிற சமயங்களான வைணவம், பௌத்தம், ஜைனம் போன்றவற்றிர்க்கும் ஆதரவளித்தது என்று பல சிறப்புகளைப் பெற்றிருந்தாலும், ராஜராஜ சோழன் என்றதும் நமக்கு நினைவுக்கு வரும் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியதன் மூலம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் நினைவில் நிலைத்துவிட்டான்.
இராஜராஜன் 1012ல் ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்திருக்கவேண்டும். அதற்குப் பிறகு இரண்டாண்டுகள் இருந்து 1014ல் மறைந்திருக்கவேண்டும். திருவிசை நல்லூர் கோயிலில் துலாபாரம் அளித்ததும், தன் மனைவி உலகமஹா தேவியுடன் ஹிரண்யகர்பம் புகுந்ததும் (இது பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம். தங்கத்தால் செய்த பசுவில் நுழைந்து வெளிவருவது, பிறகு அந்த தங்கப் பசுவைத் தானம் செய்துவிடுவது) கல்வெட்டுகளினால் தெரியவருகிறது.
அருண்மொழியின் 23-25ம் வயதில் பிறந்தவன் ராஜேந்திரன். (970ல்). தந்தை அரசனாக ஆனபோது அவனுக்கு 14 வயது இருக்கலாம். தந்தை 26 ஆண்டுகள் அரசாண்ட பிறகு, ஆட்சிப் பொறுப்பு இராஜேந்திரனுக்கு வந்தது. அதனால் ராஜேந்திர சோழன் முடிசூடிக்கொண்ட போது அவனுடைய வயது சுமார் 40 என்று வைத்துக்கொள்ளலாம்.
யாரை வேண்டுமானாலும் இளவரசனாக ஆக்கிவிட முடியாது. அவன் படைத் தளபதிகள், மண்டல அதிகாரிகள் என்று பலருடைய நம்பிக்கையைப் பெறுபவனாக இருக்கவேண்டும். உரிய பயிற்சிகளுக்குப் பிறகு, அவனை நாட்டின் ஒரு பகுதியின் சேனைத் தலைவனாக (மாதண்ட நாயகர்) ஆக்குவர். போரில் கலந்துகொண்டு படைகளைத் தலைமை தாங்கும் திறமையும் வெற்றிபெறும் திறமையும் இருக்கவேண்டும்.
இராஜராஜனுக்கு தஞ்சை தலைநகரமாக இருந்தது. தன்னுடைய பிள்ளைகளை எங்கு வளர்த்தான்? வரும் வாரங்களில் பார்க்க வாய்ப்பு இருக்கிறதா?
இனி வரும் வாரங்களில் நாம் காணப்போவது, தந்தையைப் போன்றே தனயனும் கட்டிய பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் படங்கள்.
கோவில் வளாகத்துக்குள் (த்வஜஸ்தம்பம் பகுதி) நுழைவதற்கு முன் இருக்கும் துவார பாலகர்கள்.
இந்த முறை சென்றிருந்தபோது கொடிமரத்துக்கு சிவராத்திரி வருவதை முன்னிட்டு கவசம் சார்த்தும் வேலை நடந்துகொண்டிருந்தது.
வைணவக் கோயில்களுக்குச் செல்லும்போது, துவஜஸ்தம்பம் (கொடிமரம்) அருகில் பக்தர்கள் விழுந்து வணங்குவதைப் பார்த்திருப்பீர்கள். அதைத் தாண்டிவிட்டால், வேறு எங்கும் விழுந்து வணங்கக்கூடாது. எந்த சன்னிதியிலும், இல்லை கோயிலின் வேறு எந்த இடத்திலும் விழுந்து வணங்குதல் கிடையாது (பலருக்கு இது தெரியாது). கோயிலுக்குள் ஆச்சார்யர்கள் வந்திருந்தாலும், அவரையும் விழுந்து வணங்கக் கூடாது. கொடிமர உச்சியில் கருடன் இருப்பதாக ஐதீகம். கருடன் வேதமயமானவன். கருடன் மூலவரை நோக்கியே இருப்பான். இருவருக்கும் இடையில் விழுந்து வணங்குவது கிடையாது.
என்னுடைய பார்வையில், இதைப் பின்பற்றாமல், ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் விழுந்து வணங்க ஆரம்பித்தால், யாரும் நிம்மதியாக தரிசனம் செய்தலோ, இல்லை அர்ச்சகர்கள் அவர்கள் கடமையைச் செய்தலோ இயலாது. இதற்காகவே இந்த ஒழுங்குமுறையை வைத்திருக்கிறார்கள்.
வைணவத்தில், இன்னொருவர் பாதத்தைத்
தொட்டு வணங்குவதும் கிடையாது.
பண்டரீபுரம் போன்ற இடங்களில் மூலவர் பாதத்தைத் தொட்டு வணங்கும்
வழிமுறை இருக்கிறது. அதைப்பற்றி இங்கு சொல்லவில்லை. இன்னொருவர்
காலைத் தொட்டு வணங்கும்போது, நம் பாவம்
அவர்களுக்குச் செல்கிறது.
முகப்பில் இருக்கும் தமிழ்க் கல்வெட்டு. இன்னும் நிறைய கல்வெட்டுகள் உள்ளன.
அசப்பில் தஞ்சை பெரியகோயிலுக்கு வந்துவிட்டோமோ என்ற தோற்றம் தரும்.
என்னைப் பார்த்துத்தான் நாயக்கர் காலத்தில் தஞ்சைப் பெரிய கோயிலில் பிரம்மாண்டமான நந்தியை எழுப்பினார்களோ?
முன்பு சென்றிருந்தபோது கோயிலின் வாயில் நடை சார்த்தியிருந்தது. ஆனால் இந்த
முறை திறந்திருந்தது.
அடுத்த
வாரம் தொடர்வோமா?
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!