4.3.26

Dejavu அனுபவங்கள் உண்டா?

 

கேள்வி பதில்கள் : 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

விஜய்,சங்கீதா மண முறிவு த.வெ.க. வின் ஓட்டு வங்கியை பாதிக்குமா?

# வோட்டு வங்கி இருக்குமானால் பாதிக்காது.  ( ம.மு தெரிந்த விஷயம்தானே)

Dejavu அனுபவங்கள் உண்டா?

# உண்டு. ஆனால் அற்பமான முக்கியத்துவம் இல்லாதவை.‌

பொதுவாக பெண்களுக்கு குயிலைப் பழிக்கும் குரல்தான் அழகு என்பார்கள். அதற்கு மாற்றாக கரகர வென்றிருக்கும் ராணி முகர்ஜியின் குரலை ரசிப்பதுண்டா? 'சர்வம் மாயா' பட ஹீரோயின் குரல் கூட சற்று கனம்தான் ஆனாலும் இனிமை என்றுதான் எனக்குத் தோன்றியது.

பி.கு.: சமீப காலங்களில் நடிகைகளின் படங்களை வெளியிடுவதில்லை என்னும் குறையைத் தீர்க்கலாம்.


# அதிகம் படம் பார்ப்பதில்லை. ராணி முகர்ஜி குரல் நினைவில்லை. அவர் படமும் பார்த்ததில்லை என்றே நினைக்கிறேன். ஒருவரது குரல் நம்மைக் கவர்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

நெல்லைத்தமிழன் : 

1. பார்வைக் குறைவு, கேட்கும் தன்மைக் குறைவு, ருசி அறியாத தன்மை, பல் பிரச்சனை போன்று பலவும் மனிதனுக்கு வயது ஆக ஆக வரும் பிரச்சனைகள். இவற்றில் எது பெரிய பிரச்சனை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?  

# பெரியது,  சிறியது என்று பாகுபாடு செய்து பார்க்க முடியாத அளவுக்கு, வயது அதிகமாவதால் ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளுமே மிகுந்த சிரமங்களை அளிக்கத்தான் செய்கின்றன.எனினும் கண்-காது மந்தம் , மறதி இவற்றின் விளைவாக மிக அதிக சங்கடங்கள் வரும் என்று நான் நினைக்கிறேன்.

2.  கத்தரிக்காயை பலரும் விரும்பாததன் காரணம் என்ன? ஏன் அலர்ஜிக்கு கத்திரிக்காய் காரணமாக அமைந்துவிடுகிறது?  

# கத்தரிக்காயில் பலவகை உண்டு என்பது ஒரு காரணமாக இருக்கலாம். பொய்யூர் கத்தரி, வேலூர் முள் கத்தரி இவை மிகவும் சுவை மிக்கவை.‌

கத்தரி சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படுத்தும் என்பதால் இதைத் தவிர்ப்பதுண்டு.

3. குழந்தைகளைக் கடத்துவது அல்லது அவர்களை இச்சைக்கு உபயோகிப்பது போன்ற குற்றங்களைச் செய்பவர்களை சக கைதிகளே விரும்பாததன் காரணம் என்னவாயிருக்கும்?  

# குழந்தை என்பது தெய்வாம்சம் என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை. இதனால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மிகவும் கொடூரமானவர்களால் கூட மன்னிக்க முடியாதவை ஆகிவிடுகின்றன.

4.  வாக்களிக்காதவர்களுக்கு ரேஷன் போன்ற அரசு உதவிகள் கிடையாது, தேசத் துரோகக் குற்றம் செய்தால் குடும்பத்தின் சொத்து பறிக்கப்படும் என்றெல்லாம் அவசியமான சட்டங்களை ஏன் ஜனநாயக நாடு கொண்டுவருவதில்லை?  யோகியின் புல்டோசர், சில நேரங்களில் நம்மூர் போலிஸின் மாவுக்கட்டு போன்றவை என்னைக் கவருவதால் இந்தக் கேள்வி  

# நீங்கள் குறிப்பிடும் தண்டனைகள் வாக்களிக்காத குற்றத்திற்கு அளிக்கப்படுவதற்குத்  தகுதியானவை அல்ல என்பது மட்டுமல்ல அதை சரி பார்த்து தண்டனை வழங்குவதிலும் பல சிரமங்கள் ஏற்பட வழி இருக்கிறது.‌ ஒரு தவறை இன்னொரு தவறு கொண்டு திருத்த இயலாது.

5.  செரிமானக் கோளாறுகளுக்கு என்ன காரணம்? சுலபமாக அதனை எப்படிச் சரி செய்வது? பாட்டி வைத்தியம் அல்லது தாத்தா வைத்தியம்.

# சரியான நேரத்தில் சரியான அளவில் சரியான உணவு உட்கொண்டால் பிரச்சனைகள் வருவது அபூர்வம்.‌ அதையும் மீறி ஏதாவது ஜீரணக் கோளாறு ஏற்படுமானால் சுக்குப்பொடி வெல்லம் கலந்து எடுத்துக் கொள்ளலாம். அஷ்ட சூரணம் என்பது ஆயுர்வேத மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் ஜீரணத்திற்கான மருந்து.‌ ஒன்று அல்லது இரண்டு வேளை பட்டினி கிடத்தலும், இரண்டொரு நாட்கள் தொடர்ந்து  சாத்வீகமான உணவு ( மோர் சாதம்-சின்ன வெங்காயம் )  உட்கொள்ளுதலும் பெரும்பாலான ஜீரணக் கோளாறுகளை சரி செய்துவிடும்.

= = = = = = = = =

படமும், பதமும்: 

நெல்லைத்தமிழன் :


அட... கல்லாலான குளியல் தொட்டியா? பார்க்க அழகா இருக்கேன்னு நினைப்பவர்களுக்கு. இது மம்மியை வைக்கும் பெட்டி. இறந்தவரை செழுமைப்படுத்தி பதனப்படுத்தி வைத்தால் அது 'மம்மி'. 


இதோ...மூடி வைத்தாகிவிட்டது.  அட என்னப்பா... அவனவன் தங்கத்துல பெட்டி செஞ்சு வைப்பாங்க, தங்க கிரீடம் முகமூடிலாம் இருக்கும்னு சொல்றாங்க. நீ என்னடான்னா கல்லுல உள்ளதைக் காண்பித்து மம்மியை வைக்கும் பெட்டின்றயே என நினைக்கிறீர்களா? எல்லோரும் பணக்காரங்க இல்லையே. ஆளுக்கேத்த ஜாடி. அவ்ளோதான். அது சரி மம்மியைப் பார்க்கணுமா?


அது பக்கத்துல நின்னுக்கிட்டு ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு நினைச்சேன்.. என்னவோ வேண்டாம்னு தோன்றிவிட்டது.  உடலை லினன் துணிகொண்டு மூடியிருப்பதைப் பார்த்தீர்களா?  அது சரி... "மம்மிகளை பக்கத்திலிருந்து பார்த்திருக்க. வீட்டுக்கு வந்து குளிச்சயா" என்று கேட்டீர்களானால் நீங்க பூமர் அங்கிள்/பூமர் ஆண்டி.  இந்தக் கேள்வி உங்க மனசுல எழவில்லை என்றால் நீங்களும் GenZதான்!


பாரதச் சிந்தனையில் நாம் எப்போதும் ஆன்மாவிற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். உடலுக்கு (உருவத்துக்கு) அல்ல என்று நினைக்கிறேன். அதனால்தான் கோயிலில் உள்ள சிற்பங்களிலோ இல்லை சிலைகளிலோ, இதுதான் இந்த அரசர் என்று சொல்ல இயலாது. அதாவது அந்த அரசர் போல நாம் உருவத்தைச் செதுக்குவதில்லை.  எந்த அரசரை எடுத்துக்கொண்டாலும், தெய்வச் சிலைகளைச் செதுக்கும் பாணியில் சிற்பிகள் செய்துவிடுவார்கள். நீங்க இராஜராஜன், உலோகமாதேவி (உலோகம் னா மெட்டல் இல்லை. உலக மகா தேவி) சிலைகள்ல கூட இதனைப் பார்க்கலாம். ஆனால் கிரேக்க எகிப்திய ரோமப் பேரரசுகளின் சிற்பிகள் ஆள் எப்படி இருக்கானோ அதேபோலத்தான் சிலையையும் செதுக்குவார்கள். நீங்கள் மேலே பார்ப்பது, உடலை உள்ளே வைத்துப் புதைக்கும் பெட்டிதான். ஆனால் அதன் மேலே அவர் எப்படி இருந்திருப்பாரோ அதேபோலச் செதுக்கியுள்ளார்கள். உங்களுக்கு பாரதீயச் சிந்தனை பிடித்திருக்கிறதா இல்லை மேற்கத்தைய சிந்தனை பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன். 


பொட்டிக்குள்ள ஒண்ணும் இருக்காதுன்னு நம்பி பக்கத்துல நின்னு போட்டோ பிடித்துக்கொண்டேன்!

நெல்லை பகிர்ந்திருக்கும் படங்கள் பார்த்ததும் என் பழைய கவிதைகளிலிருந்து இரண்டை இங்கு பகிர்கிறேன்!

முழுவதும்
மூடி விடாதீர்கள்
கொஞ்சமாவது
காற்று வேண்டும்
எனக்கு...

தினம் தினம்
எழுந்து வருவதே
சிரமமாயிருக்கிறது.
யாரோ
என் கல்லறையை
மறுபடி மறுபடி
மூடி விடுகிறார்கள்.

= = = = = = = = = =


சென்னை திநகர் பரபரப்பான வியாபார தெரு ஒன்றில் காலை முதல் மதியம் வரையும், மறுபடியும் அதே நாள் இரவு பத்து மணி போலவும் இருக்க நேரிட்டது.  அப்போது எடுத்த படங்கள்..  காலை பரபரப்பாகவும், இரவு அமைதியாக, காலியாகவும்!

 


***************************************************






1801... 

தூக்குக்கயிறுகள் புனிதம் அடைந்த ஆண்டு. மருது
சகோதரர்கள், மருதுவின் மகன்களான சிவஞானம், உடையான். சிவத்தையாவுடன் கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையையும் வெள்ளையர் ஆட்சி தூக்கில் போட்ட ஆண்டு அது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். தூக்கில் போடுவது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிறவித் தொழிலாக மாறிப்போனது. இந்த வரலாறுகள் அறியா மக்கள்தான், 1857-ம் ஆண்டை முதலாவது இந்தியச் சுதந்திரப் போர் ஆண்டாகச் சொல்வார்கள்: நம்புவார்கள்; படிப்பார்கள்.

அந்தப் புரட்சிகரமான 1801-ம் ஆண்டை மீட்டுக் கொண்டு வருகிறார் டாக்டர் ராஜேந்திரன். இனப்பற்றும், மொழிப்பற்றும், வரலாற்று அறிவும் ஒரு தேர்ந்த நிர்வாகிக்கு இருந்தால், எத்தகைய படைப்பைக் கொடுப்பார் என்பதற்கு உதாரணமாகவே ராஜேந்திரனின் ஆய்வுகள் அமையும். இந்த நூலும் அப்படித்தான் அமைந்திருக்கிறது.

ஒருவிதத்தில் பார்த்தால் இது மருதுபாண்டியர் வரலாறு. மருதுபாண்டியர் வழியாக தென்னிந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாறு. இந்த வரலாற்றை டாக்டர் ராஜய்யன், எஸ்.எம்.கமால், மீ.மனோகரன் போன்றவர்கள் செறிவான ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார்கள். ராஜேந்திரன் வேறொரு பாணியைக் கையில் எடுத்துள்ளார். அதுதான் வரலாற்றைப் புனைவுக்கான நடையில் வழங்குவது. இது புனைவு அல்ல. அத்தனைக்கும் ஆதாரங்கள் உள்ளன. ஆனால், படிக்கச் சுவையான நடையில் தர இதுவே வசதியான பாணி.அதில்ராஜேந்திரன்வென்றிருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் வெற்றி.

பிரிட்டிஷ் கவர்னர்கள், கலெக்டர்களின் வாழ்க்கையையும், சுதந்திரப் போராளிகளின் வாழ்க்கையையும் ஆவணங்களில் இருந்து எடுத்துக் கோத்துள்ளதால் நேரடி வர்ணனையாகவே இருக்கின்றன பல்வேறு பக்கங்கள்
அதுவும் தூக்குக் காட்சிகள் மனதை ரணம் ஆக்குகின்றன.

 "அதிகார வெறியில் சுருக்குக் கயிறுகளைத் தொங்கவிட்டுக் காத்திருந்த வெள்ளைக் கழுகுகளின் காதுகள் மட்டுமல்ல... ஐம்புலன்களும் மரத்துப் போயிருந்தன. வெட்டப்பட்ட பனை மரங்களில் இருந்த ஈரம்கூட, அங்கிருந்த மனிதர்களின் மனங்களில் இல்லை” என்கிறார். பிரிட்டிஷ் அதிகாரிகளுடன். பெரிய மருதுவும் சின்ன மருதுவும் செய்யும் வாதங்கள் விறுவிறுப்பானவை. வேலு நாச்சியாருக்கும் மருது சகோதரர்களுக்குமான நட்பும் உறவும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

வரலாறு சொல்ல இது புதிய பாணி. வரலாறு புரிய இது புதிய ஏணி!

******************************************************

KGG பக்கம் : அடுத்த வாரம் பார்ப்போம். இந்த வாரம் கே ஜி ஜி ரொம்ப பிசி !!

= = = = = = = = = = == = = = = == = = = = = = = = = = = = = = = = = = =

மாம்லா லீகல் ஹை - தமிழ் வசனங்களில் பார்த்தேன்!


NetFlix ல் நான் பார்த்த தொடர்.  ஒரு மாதிரி சுவாரஸ்யமாகவே இருந்தது. ரவி கிஷன் முக்கிய பாத்திரத்தில்.  நிதி பிஷ்ட், யஷ்பால் ஷர்மா என்று நடிகர்கள்.  ஒரு கோர்ட்டில் நடக்கும் நிகழ்வுகளை நகிகைச்வையாக சொல்லி இருக்கிறார்கள்.  உண்மை சம்பவங்கள்.  சின்னச் சின்ன செய்ட்றஹித் துணுக்குகளை சம்பவங்களாக்கி கதை புனைந்திருக்கிறார்கள்.  உதாரணமாக சிறைக் கைதிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஸெக்ஸ் அனுமதிக்கபபடவேண்டும் என்று ஒரு தீர்ப்பு.  அதை வைத்து ஒரு கதை.  2024ல் வந்த பழைய கதைதான்.

ரவி கிஷன் தியாகி என்கிற கதாபாத்திரத்தில் முக்கிய வக்கீல்.  அவ்சர் தன் தந்தை ஒரு நீதிபதி என்பதை ஏன் மறைக்கிறார் என்பது ஒரு செண்டிமெண்ட் கதை.  கடைசியில் அது விடுபடும்.  நெகிழ்வாகவும் ரசிக்கும்படியும் இருக்கும்.

மேல்நாட்டில் பி எல் படித்து வரும் ஒரு பெண் கோர்ட்டில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் கதை.  நிறைய வக்கீல்கள் இருப்பதால் சீனியர் வக்கீல்களுக்கு ஆள் பிடித்துக் கொடுத்து கமிஷனிலேயே சம்பாதிக்க நினைக்கிறார்கள்.

தியாகியின் அடிப்பொடிகளில் இவருக்கும் ஒரு சீனியர் வக்கீல் ஒரு கதை சொல்கிறார்.  உள்ளிருந்து தானும் அதைக் கேட்கும் தியாகி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கிறார்.  அந்தக் கதை...

ஒரு நீதிபதி தன் இரு மகன்களுக்குச் சொன்ன கதை. இருவரையும் ஒரு அறையில் வைத்து பூட்டினாராம் அந்த நீதிபதி.   எப்படியாவது வெளியில் வரவேண்டும் என்பது அவர் தன் மகன்களுக்கு சொல்வது.  கதவுக்கு பாத்ரூம் கிடையாது.  ஜன்னல்கள் கிடையாது. ஒரு மகன் பெயர் புராண்.  இன்னொரு மகன் பெயர் சனாதன்! சனாதன் வெளியில் வந்து விடுகிறார்.  எப்படி வெளிவந்தார் என்றால் கதவு தாயிடப்படவே இல்லையாம். பொதுவாக கதவு தாழிடப்பட்டிருக்கும் என்றே மற்ற முயற்சிகளை செய்வார்கள். எல்லா கதவும் திறந்து தான் இருக்கும் வித்தியாசமாக யோசிக்க வேண்டும் என்று சொல்வார்.

தொடரில் வந்த சில வாசகங்கள் கவர்ந்தன.  அதில் ஒன்று,

"குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது பெத்தவங்க கைய புடிச்சு கற்றுக் கொடுக்கலைன்னா குழந்தைகள் நடக்காம கூட போகலாம் ஆனால் அதே சமயம்அப்பா அம்மா கைய விட மறுத்துட்டாங்கனா அவங்களுக்கு ஓட்றதே மறந்து போகலாம்.  அந்தக் குழந்தைங்க வாழ்க்கையில் ஓடுறது எப்படின்னு கத்துக்க மாட்டாங்க.."

இன்னொன்று..நீதிபதி ஆனால் வக்கீல் அளவு காசு வருமா, பெருமையா என்று கேள்வி வருகிறது தியாகிக்கு.  அப்போது அவர் சந்திக்கும் ஒரு நீதிபதி பதவி ஏத்துக்காதே என்கிறார்.  அதற்கு அவர் சொல்லும் காரணம்,

"சிக்னல்ல மாட்னவன் எங்க அப்பா போலீஸ்டா அப்படின்னு சொல்லுவான் எங்க அப்பா கலெக்டர் டா அப்படின்னு சொல்லுவான் எவனாவது எங்க அப்பா ஜட்ஜ்ன்னு சொல்வானா"

ஜட்ஜ் ஆக தயங்கும்  லீடிங் லாயரை - தியாகியை -  இன்னொரு நீதிபதி நீதிமன்றத்துக்குள் அழைத்துச் சென்று காட்டுகிறார் நான் என்ன பார்க்க வேண்டும் என்று அவர் கேட்கிறார் தியாகி.  "லாயர்ஸ் எல்லாம் யாரை பார்க்கிறார்கள்" 
நீதிபதி எல்லாருடைய பார்வையும் யார் மேல் இருக்கிறது நீதிபதியின் மேல்"

"நீதிபதி யாரை பார்க்கிறார்"
"வக்கீல்களை பார்க்கிறார்."

" குற்றவாளி யாரை பார்க்கிறார்?"
 குற்றவாளி லாயர்களிடம் உதவி கேட்டு வந்திருந்தாலும் நீதிபதியின் கருணையை எதிர்பார்த்து நிற்கிறார்.  அவர் வாழ்க்கை இப்போது நீதிபதியின் கையில் இருக்கிறது.  தீர்ப்புக்காக வழக்கறிஞர்களும் நீதிபதியை பார்க்கிறார்கள்.  தீர்ப்பு முடிந்ததும் குற்றவாளியின் கண்களை நன்றி, எதிர்பார்ப்பு, கருணை...எத்தனை விதமான எமோஷன்கள் தெரிகின்றன...  ஜட்ஜ் கிட்ட இருந்து கருணை எதிர்பார்க்கிறாங்க... இன்னும் சில நிமிடங்கள்ல இந்த நீதிபதி தான் என் வாழ்க்கையை முடிவெடுக்க போற ஒரே ஆள்.  குற்றவாளியின் கண்களில் ஒருவிதமான உணர்வுகளை பார்க்கலாம் கொஞ்சம் நிம்மதி, கொஞ்சம் நன்றி உணர்வு, கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் பெருமை,...   தீர்ப்பு வாசித்து முடித்ததும் நீதிபதி குற்றவாளியின் கண்களை பார்க்கிறார்.  ஒரு நிம்மதி, ஒரு நன்றி உணர்வை அதில் பார்க்கிறார்.  இதுதான் ஒரு நீதிபதியின் பெருமை. அவரால் ஒரு வாழ்வை தீர்மானிக்க முடிகிறது. ஒரு மனிதனின் நம்பிக்கையை உணர்வுகளை காப்பாற்ற முடிகிறது."
என்னை மாதிரி ஒரு பாவியால நல்ல நீதிபதியாக இருக்க முடியுமா என்று கேட்கிறார் தியாகி 

"ஒரு வக்கீலாக நான் எவ்வளவோ பாவங்கள் செய்திருக்கிறேன்.  என்னால் நீதிபதியாக நியாயமாக நடக்க முடியுமா?"


"யாராயிருந்தாலும் கான்ஸ்டிடியூஷன் மேல கைவைத்து உறுதிமொழி எடுத்த பிறகு தானாக ஒரு மாற்றம் வரும் அவர்களால் தப்பு பண்ண முடியாது"

ஒரு நேரத்தில் முதலில் வெளிநாட்டில் படித்துவிட்டு பெரும் காணவனுகளுடன் வந்த பெண் சொல்கிறாள்...

"நீதிக்கும் சட்டத்துக்கும் இவ்வளவு பெரிய தூரம் வித்தியாசம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை"

ஒருமுறை பார்க்கலாம்.


15 கருத்துகள்:

  1. அக்கா நீங்க எந்த Dejavu பத்தி கேக்கறீங்கன்னு தெரியலையே!!!! ஹாஹா ஏனென்றால் மார்க்கெட் analysis chart ஒன்றும் உண்டு!!!!

    இருந்தாலும் நீங்க கேட்பது என்னன்னு புரியுது!! சிறிய வயதில் நாங்கள் தம்பி தங்கைகள் சேர்ந்து இரவு படிக்கிறோம் என்று இருக்கும் நேரத்தில் பரீட்சித்துப் பார்த்து, அதில் நான் தான் கண்ணை மூடிக் கொண்டு வரவழைக்கும் கதாபாத்திரம்! ஒரு டம்ளரை கவிழ்த்து வைத்துக் கொண்டு கையை அதன் மேல் வைத்துக் கொண்டு நாம் கேட்கும் கேள்விக்கு ஆம் இல்லை பதிலை அது நகர்ந்து சொல்லும் என்று. அதன் பின் காயினை வைத்தும் பரீட்சித்தோம். நகர்ந்தது என்று மத்தவங்க சொன்னாங்க. முகம் எல்லாம் அவர்களுக்கு வியர்த்து ....நான் கண்ணைத் திறந்து பார்த்தப்ப எனக்கு ஒன்றும் தெரியலை. மத்தவங்க ரொம்பவே பயந்து போய் போது போதும் என்று சொன்னார்கள். ஆனால் கொஞ்ச நேரம் ஒருவித அமைதி நிலைக்குப் போயிருந்தேன் என்று மட்டும் தெரிந்தது எனக்கு....எனக்கு மிகவும் பிடித்தமான என் மனதிற்கு நெருங்கிய என்னிடம் அத்தனை பாசமாக இருந்த என் அத்தையின் மரணம் என்னை பாதித்திருந்ததால் அவர்களை மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பெண்களுக்குக் கர கர குரல் கூட அழகுதான். சிலரின் குரலில் கம்பீரமும் தெரியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. என்னென்னவோ படங்கள் போட்டிருக்கீங்க கௌ அண்ணா. இவங்கலாம் யாருங்க?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் தெரியாது. ஸ்ரீ யைக் கேட்போம்!

      நீக்கு
    2. வாங்க கீதா... தேஜாவு என்றால் அப்போது நீங்கள் பார்க்கும் பொருள் ஏற்கனவே பார்த்தது போலவோ, அப்போது நடக்கும் ஒரு சம்பவம் ஏற்கனவே எப்போதோ நடந்தது போலவோ உணரும் நேரம் . அதற்கு தேஜாவு என்று பெயர்.

      அந்தப் பெண்.... கீழே உள்ள பெரிய படத்தில் கீழ் அவர் பெயர் இருக்கிறது பாருங்கள். சர்வம் மாயா கதாநாயகி

      நீக்கு
  4. நெல்லை நீங்க கேட்டிருப்பதில் எல்லாமே வயதானால்தான் வரும் என்றில்லை பிறவியிலிருந்து அல்லது சின்ன வயசிலேயே கூட வருமே.

    ருசி அறியாத தன்மை//

    இது வருவதற்குக் காரணம் மணம் அறியும் தன்மை போவதால். இது சில சமயம் தலையில் அடிபட்டால் கூடப் போகும் வாய்ப்பு உண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இந்தப் பிரச்சனைகளில் ருசி அறியும் தன்மையை விட மற்றவை எல்லாம்...சங்கடங்கள்....ஆனா நீங்க முக்கியமான ஒன்றை விட்டுட்டீங்க நெல்லை. மறதி. அது இன்னும் மோசம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நெல்லை, செரிமானக் கோளாறுக்குக் காரணம் நம் உணவுப் பழக்கம்தான். வயதாகும் போது ஒரு சில உணவுகளைத் தவிர்த்தல் நலம் நம்மை நாமே அறிந்து கொண்டால் இதைத் தவிர்க்கலாமே.

    வேறு காரணங்கள் என்றால் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை தேவைப்படும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஆசிரியரின் பதில்கள் நன்று!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நெல்லை, அந்தக் கல்லாலான தொட்டி போன்ற வடிவத்தைப் பார்த்ததும் தோன்றியது நீங்க சொல்லியிருபப்துதான் கல்லறை போன்றுதான் தோன்றியது. அதான் மம்மி!!!! குளியல் தொட்டி போல படலை!!!! காரணம் நெட்டில் பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட நம்மூர் தாழி போன்ற ஒன்று என்று சொல்லலாமோ?

    //இந்தக் கேள்வி உங்க மனசுல எழவில்லை என்றால் நீங்களும் GenZதான்!//

    ம்ஹூம் இந்தக் கேள்வியே இங்க வாசிச்சப்புறம்தான் ஓ இப்படி ஒன்னு கேப்பாங்கல்ல? என்று தோன்றியது. ஸோ நான் இப்போதைய குழந்தை!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. பாரதச் சிந்தனையில் நாம் எப்போதும் ஆன்மாவிற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். //

    நெல்லை பிற தத்துவங்களிலும் கூட soul, spirit என்று சொல்லப்படுவதுண்டே. மேலை நாட்டு உளவியலில் soul என்று நிறைய சொல்லப்படுவதுண்டு.

    //அது பக்கத்துல நின்னுக்கிட்டு ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு நினைச்சேன்.. என்னவோ வேண்டாம்னு தோன்றிவிட்டது. //

    என்னாது? அப்ப அடுத்தாப்ல உள்ள ஃபோட்டோ என்னவாம்!!??? அதான் ஒரு ஃபோட்டோ புடிச்சிட்டீங்களே!!!!! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம் கவிதைகளை மீண்டும் ரசித்தேன். வாசித்த நினைவு இருக்கே! பொ எ வை - ஆல்!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம், படங்கள் நல்லாருக்கு. இரண்டிற்கும் கவிதை பிறந்திருக்குமே!

    காலையில் களையுடன்
    ஆரவாரத்தில் நான்!
    இரவில் அமைதியால்
    பொலிவுடன்.

    இது கவிதை இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!