குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சிக்கு பதிலாக என்பது போல எழுத ஆரம்பித்த விஷயத்துக்கு பதிலாக இன்று வேறு விஷயம் பற்றி சொல்லப்போகிறேன்!
இரண்டு நாட்களுக்கு முன் ஆரண்யநிவாஸ் Seven O Clock க்ரூப்பில் அன்றைய டாபிக்காக இன்டோர் கேம்ஸ் பற்றியும், அதில் அசடு வழிந்தது பற்றியும் கேட்டார். முதல் பதில் கொஞ்சம் பொருத்தமாக சொல்லி விட்டாலும் இரண்டாவதில் சொதப்பி விட்டேன். முதலில் பல்லாங்குழி விளையாட்டில் காசி பொத்தும்போது எதிராக விளையாடிய பெண் கையைப் பிராண்டி விட்டார் இருந்தேன். அப்புறம் எல்லோரும் அசடு வழிவது பற்றி சொல்லிக் கொண்டிருந்த போது எனக்கு பம்பர விளையாட்டில் வாங்கிய குத்துகள் நினைவுக்கு வந்தன. அந்நாளைய என் பம்பர பிரதாபத்தை எடுத்து விட்டேன். அப்புறம் கேள்விக்கு பொருத்தமில்லாத பதில் என்பதை நானே உணர்ந்து நீக்கி விடவா என்று கேட்டதும், வேண்டாம், சுவாரஸ்யமாக இருக்கிறது இருக்கட்டும் என்று ஒரு நண்பரும், இன்டோர் கேம்ஸ் என்றதும் வேற எதையாவது எழுதாமல் இருந்தீரே என்று இன்னொரு எழுத்தாள உறுப்பினரும் சொன்னார்கள்.
அந்நாளில் நணபர்கள் ஆடும் ஆட்டம் பார்த்ததும் எனக்கும் அதில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கும்தானே.. நம்மால் முடிகிறதோ இல்லையோ.. நானும் கலந்து கொண்டு விடுவேன். ஸ்கூல் கேம்ஸ் பீறியடில் ஃபுட்பால் ஆடும்போது நம் கைக்கு, மன்னிக்கவும் காலுக்கு பந்து கிடைக்காவிட்டாலும், பந்து எங்கெல்லாம் செல்கிறதோ அதன் கூடவே பொறுப்பாக ஓடுவேன். எப்படியாவது தப்பித்தவறி காலில் பந்து படாதா என்ன.. அபப்டியும் படுமே.. மேலும் சும்மா நின்றாள் விளையாட்டு வாத்தி பக்கத்துக்கு கிரௌண்டில் பத்து சுற்று ஓடச் சொல்லுவார். அதற்கு இதுவே பெட்டர். பின்னாளிலோ என் (முதல்) காதலியின் பார்வையில் வீரமாக படுவதற்கு கபடி ஆடிய விவகாரம் கூட உண்டு. ஒரு எவர்சில்வர் டம்ளர் பரிசு வாங்கினேன்.
எல்லோரும் பம்பரம் விளையாடுவது பார்த்து எனக்கும் ஆசை வந்ததது. மெடிக்கல் காலேஜ் மெயின் ரோடில் பம்பரம் கிடைக்காததால் அண்ணனோ அப்பாவோ ஐயங்கடைத் தெரு பக்கம் செல்லும்போது பளபளவென்று ஒரு புதிய பம்பரம் வாங்கி வந்து கொடுத்தார். அது என்ன பாடு படப்போகிறது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை!
என் புதிய பளபள பம்பரத்துடன்
பம்பரக் குழுவுக்கு நானும் சென்றேன். ராஜா தன் பம்பரத்தின் ஆணியால் தன்னைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்து நடுவில் தன் பம்பரத்தை ஒரு முத்தம் கொடுத்து விட்டு வட்டத்தின் நடுவில் வைத்தான். மற்றவர்களும் அதேபோல் நடுவில் வைத்தார்கள். நானும்! ஆனால் முத்தமெல்லாம் கொடுக்கவில்லை. ஒன் டூ த்ரீ சொன்னார்களா "சா பூ த்ரீ" போட்டார்களா நினைவில்லை, திடீரென எல்லோரும் பாய்ந்து அவரவர் பம்பரத்தை கையில் கவர்ந்து கரகரவென கயிறு சுற்றி முரட்டுக்குத்து, அரைக்குத்து என்று வீசி கீழே விழுந்து சுற்றும் பம்பரத்தை கயிறால் சுற்றி தூக்கி லபக்கென உள்ளங்கையில் விட்டுக் கொண்டு "அபீட்" என்று குரல் கொடுத்தனர். அதற்கு ஏன் அப்பீட் என்று பெயர் வந்தததோ? சந்தானம் தனது காமெடிகளில் அப்பீட்டுக்கு வேறு பொருள் தந்து காமெடி செய்வார்! சிலர் சுற்றும் பம்பரத்தை சும்மா கயிறால் சுற்றித் தூக்கி கேட்ச் பிடித்து அபீட் என்றனர். எனக்கு குத்தும் வராது, ஸ்பின் பௌலிங் போல முழங்கையை ஒரு மாதிரி வளைத்து போடும் சாட்டையும் வராது. 'இழுப்பு' என்று சொல்லப்படும் கல் வீசுவது போல வீசி அபீட் எடுப்பேன். சமயங்களில் அவசரமாக சுற்றியதில் கயிறு சரியாக சுற்றப்படாமல் கழன்று வீசி எறியப்பட்டு திரும்பி 'இழுப்பதற்குள்' தூரத்துக்கு ஓடிச்சென்று மானத்தை வாங்கும். தனியாக இருக்கும்போது 'குத்து' பழகி சபையில் குத்தினால் ஆணி தரையில் படாமல் மண்டை தரையில் பட்டு 'மொட்டை' அடித்து -அதற்கு அதுதான் பெயர் - எங்காவது புதரில் போய் ஒளிந்து கொள்ளும்.
நடுவில் நேரத்துக்குள் அபீட் எடுக்க முடியாதவர்கள் பம்பரம் வட்டத்துக்குள் பலியாடு போல வைக்கப்படும். அவ்வளவுதான் அனைவரும் தங்கள் பம்பரங்களால் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் பம்பரங்களைத் தாக்குவார்கள். வட்டத்திலிருந்து வெளியே எடுத்து விடவேண்டும். அப்படி வெளியே வந்து விடும் பம்பரத்தை சொந்தக்காரன் மகிழ்ந்து தானும் தாக்கும் செயலில் ஈடுபடுவான். இதில் வேண்டியவர்களுக்கு சட்டென அதிகம் காயப்படாமல் அவர்கள் பம்பரத்தை வெளியில் எடுத்துக் கொடுத்து விடும் திறமைசாலிகள் இருப்பார்கள். குத்துகிற குத்தில் சமயங்களில் பம்பரம் இரண்டாக பிளந்து விடுவதும் நடக்கும். ராஜாவுக்கு மணி என்றொரு அண்ணன் உண்டு. கருப்பாக இருந்தாலும் கலையான முகம். ஒல்லியாக இருந்தாலும் உரமேறிய உடம்பு, கைகள். அக்கேஷனலாக எங்களுடன் சும்மா இரண்டு ஆட்டம் என்று விளையாட வரும்போது எங்கள் பம்பரங்கள் பதறும். கோலிகுண்டு விளையாட்டிலும் அவர் அப்படிதான். மோதி எனப்படும் அந்த பெரிய கோலியால் சின்ன கோலிகளை ஒரு அடியிலேயே நொறுக்கி விடுவார்! என்னுடைய பம்பரம் எப்போதுமே பெரிய பழுவேட்டரையர்தான். அதன் உடம்பில் ஆயிரம் விழுப்புண்கள் இருக்கும்.
தப்பித்தவறி அபீட் எடுத்து விட்டோ, அல்லது உள்ளே இருந்து நம் பம்பரம் வெளியே கொண்டு வரப்பட்டாலோ, மற்ற பம்பரங்கள் மீது தாக்குவதில் நாமும் ஈடுபட வேண்டும். நமக்கெங்கே பம்பரக்குத்து வரும்? ஆனால் அந்த சமயத்தில் பம்பரம் சுற்றா விட்டாலும் உள்ளே வட்டத்தில் இருக்கும் பம்பரம் மேல் நாம் குத்தும் நம் பம்பரம் பட்டால் போதும். படாவிட்டால் மறுபடி நம் பம்பரம் உள்ளேதான்!
பம்பரம் விளையாட்டின் முறைகளை இங்கே படிக்கலாம். (இங்கே என்னும் வார்த்தையில் க்ளிக் செய்யவும்)
=========================================================================================
கொத்தமங்கலம் சுப்பு தன் அனுபவங்கள் எழுதியது 1953 பேசும் படம் புத்தகத்தில்! அதிலிருந்து கொஞ்சம்...
வருஷம் சுமார் 1935. பர்மாவிலே ஐராவதி நதிக் கரையிலே ஒரு அழகான ஊர். இயற்கை எழில் பொருந்திய ரமணீயமான சோலை. பாக்கு மரங்களும் நிழல்தரும் மா, பலா முதலிய பல மரங்களும் நிறைந்த குளுகுளுவென்றிருந்த அந்தச் சோலை, ஆற் றின் கரையிலே இருந்தது. அங்கே நானும் என் முதலாளியும் நின்றிருந்தோம். என் கையிலே ஒரு கடிதம்.
'எனக்கு இரண்டாவது குழந்தை ஆணாகப் பிறந்திருக்கிறதாம். செய்தி வந்திருக்கிறது. நான் போய்வர உத்தரவு தரவேணும்' என்றேன்.
'சௌகரியப்படாது. நீ இல்லாமல் இங்கே என் வட்டிக் கடை வியாபாரமும் மற்ற வேலைகளும் என்ன ஆவது?' என்றார் முதலானி. புரட்டாசி மாதம் அது. சனிக்கிழமை உற்சவத்தையும் அங்கேயே செய்து விட்டு தீபாவளி சமயத்திலே ஊருக்குத் திரும்பினேன். அப்போது எனக்கு வயது இருபத்தி ஐந்து இருக்கும்.
வந்த இரண்டொரு மாதங்களில் என் ஆசை மனைவியை இழந்து விட் டேன்.
என் வாழ்வின் முதற் பகுதி அத்துடன் முடிவுற்றது. என் இளம் பருவ வாழ்க்கை அத்துடன் முடிந்து எண்ணி விட்டதாகத்தான் நான் எண்ணினேண். நான் படித்தது மூன்றாம் பாரம் வரைதான். அப்போதே எனக்குத் தமிழ்ப்பற்று அதிகம். நிறைய கவிதைகளை எழுதிக் குவித்தேன். விழலுக்கு இறைத்த நீராகப்போய் விட்டன அவை.
என் வாழ்வின் முதற் பகுதி அத்துடன் முடிவுற்றது. என் இளம் பருவ வாழ்க்கை அத்துடன் முடிந்து எண்ணி விட்டதாகத்தான் நான் எண்ணினேண். நான் படித்தது மூன்றாம் பாரம் வரைதான். அப்போதே எனக்குத் தமிழ்ப்பற்று அதிகம். நிறைய கவிதைகளை எழுதிக் குவித்தேன். விழலுக்கு இறைத்த நீராகப்போய் விட்டன அவை.
வட்டி கடை குமாஸ்தாவானேன். கற்பனைக் கோட்டை இடிந்தது. மனைவியின் பிரிவு இன்ப வாழ்வுக்கே உலை வைத்தது.
மகிழ்ச்சி வெறுப்பாகியது. எதிரே ஒரு பிரம்மாண்டமான பாலைவனமாகக் காட்சியளித்தது வருங்காலம். ஊரிலேயே இருக்கப் பிடிக்கவில்லை. அப்போது கொத்தமல்கலம் சீனு லோடஸ் பிக்சர்ஸாரின் ஒரிஜினல் சாரங்கதராவில் நடித்து முடிது அடுத்தபடியாக பட்டணத்தாரில் நடிக்கவிருந்தார். எனக்கு அவர் கடிதமெழுதினார். நானும் அவரும் கொத்தமங்கலத்தில் பல வருஷம ஒன்றாகப் பழகியவர்கள். எங்களை கூடப்பிறந்தவார்கள் என்று இப்போ தும் கூடப் பலர் நினைக்கின்றனர். இருவரும் உயிர்த் தோழர்கள்.
ஆனால் இரண்டு தினங்களுக்கெல்லாம் எனக்கு ஊரிலிருந்து ஒரு தந்தி வந்ததுதான் ஆச்சரியமாயிருந்தது. "உன் உடம்பு இப்போது எப்படியிருக்கிறது?" என்பதுதான அந்தத் தந்தியின் வாசகம்.
எனக்கு உடம்பு சரியில்லை என்று உறவினருக்கு யார் சொன்னது? சிந்தித்தேன் மறுநாள் சென்னை தினசரிகளில் செய்தியைக் கண்டு ஆச்சரியப்பட்டோம்.
"கொத்தமங்கலம் சுப்பு கடலில் மூழகினார். போராடிக் கரை சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தில்லை." இந்தச் செய்தி எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு எனக்கு அனேகமாகச் செட்டியார் வேஷம்தான் கிடைத்தது.
"கொத்தமங்கலம் சுப்பு கடலில் மூழகினார். போராடிக் கரை சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தில்லை." இந்தச் செய்தி எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு எனக்கு அனேகமாகச் செட்டியார் வேஷம்தான் கிடைத்தது.
பட்டணத்தார் படம் முடிந்ததும் ஊர் திரும்பினேன். பழையபடி செட்டியார் கடையில் குமாஸ்தா வேலையில் அமர்ந்தேன். படங்களுக்கு நாம் ஏன் கதை எழுதக் கூடாது என்று தோன்றியது எனக்கு. 'சமூகத் தொண்டு' என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் கல்கி" ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தலைப்பு, கருத்து இரண்டும் எனக்குப் பிடித்திருந்தன அதையே கருத்தாகக் "சமூகத்தொண்டு என்று ஒரு கதை எழுதினேன். இது சுமார் 36-37-ல இருக்கும்.
அந்தக் கதையை மதுரை மோஹன் மூவிடோன் கம்பெனியார் படமாகத் தயாரித்தனர். 'மோகனா' என்ற அந்தப்படத்தில் எம் கே. ராதா - டி. என். மீனாக்ஷி இருவரும் பிரதம பாகத்தில நடித்தனர். இதிலே சமூகத் தொண்டு செய்யும் காட்சியில் ஜம்னாலால் பஜாஜ் குடும்பத்தினர் தாங்களே முன் வந்து தொண்டு செய்தனர்.
பம்பாயில் தயாரான இப்படத்திற்கு எனக்கும் நல்ல பெயர். ஆனால் இது பண விஷயத்தில் ஒரு வெற்றியாக அமையவில்லை.
இதன் பிறகு ஜூபிடரிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கே 'அனாதைப்பெண்' மைனர் ராஜாமணி' இரு படங்களிலும் செட்டியார் வேஷத்தில் நடித்தேன். கதை, வசனம், பாடல் எல்லாவற்றிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. அதற்கு 'சமூகத் தொண்டு' வெகுவாகப் பயன்பட்டது. எனது வாழ்வே பாதி இலக்கியமும் பாதி பட உலகமுமாக அமைந்து விட்டது. இயன்ற போதெல்லாம் தவறாது எழுதிக் கொண்டேயிருந்தேன்....
=====================================================================================
சுவாரஸ்ய செய்தி ஒன்று..
ஓடும் லாரியில் இருந்து தப்பிய நாய்க்கூட்டம்; 17 கி.மீ., தூரம் பயணித்து வீடு திரும்பிய புத்திசாலித்தனம்!
ஓடும் லாரியிலிருந்து தப்பித்த ஏழு நாய்கள் தங்கள் உரிமையாளர்களிடம் திரும்ப வந்து இணைவதற்காக, சீனாவில் 17 கி.மீ., தூரம் ஒன்றாக பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
சீனாவின் ஜிலின் மாகாணத்தின் சாங்சுன் நகரில் உள்ள ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் ஓடும் லாரியிலிருந்து தப்பித்த ஏழு வெவ்வேறு இனங்களை சார்ந்த நாய்கள் கூட்டமாக நடந்து செல்லும் வீடியோ பேசும் பொருளாகியது. நாய் இறைச்சிக் கடை ஒன்றில் வேலை பார்க்கும் திருடர்கள் நாயை கடத்தி ஒரு லாரியில் அடைத்து கொண்டு சென்றுள்ளனர். அப்போது தான் ஏழு நாய்களும் லாரியில் இருந்து தப்பித்துள்ளன.
இரண்டு நாட்களில் 17 கி.மீ தூரம் பயணித்த அந்த நாய்கள் மீண்டும் தங்கள் உரிமையாளர்களிடம் வந்து சேர்ந்துள்ளன. சாலையில் வரும்போது அந்த நாய்களை கோர்கி (Corgi) நாய் வழி நடத்தியது, வீடியோக்களின் மூலம் தெரியவந்துள்ளது. வரும் வழியில் காயமடைந்த ஜெர்மன் ஷெப்பர்டைப் பாதுகாப்பாக நாய்கள் சேர்ந்து நடத்தி கொண்டு வந்த அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. இந்த நாய்கள் குழுவில் காயம் அடைந்த ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட், ஒரு கோர்கி, கோல்டன் ரெட்ரீவர்ஸ், லாப்ரடார்ஸ் மற்றும் பெக்கினீஸ் நாய்கள் ஆகியவை இருந்தன. இந்த சம்பவம், ஆபத்து நேரத்தில் விலங்குகள் தங்களுக்குள் பேணும் ஒற்றுமை மற்றும் புத்திசாலித்தனத்திற்குச் சிறந்த உதாரணமாக அமைந்திருந்தது.
இந்த நாய்கள் கூட்டத்தை பார்த்த சமூக வலைதள பயனர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: அவை ஆபத்தில் சிக்கிய சிறு சகோதரர்கள் கூட்டத்தை போல ஒற்றுமையாக சாலையில் வலம் வந்தன. நான் அந்த நாய்களுக்கு பலமுறை உதவ முயன்றேன். அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல முயன்றேன். ஆனால் அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு ஒற்றுமையாக சாலைகளில் புத்திசாலிதனமாக நாய்கள் ஒற்றுமையாக செயல்பட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
=======================================================================================
நாம் அந்தப் பாடல்களை கேட்டிருப்போம். ஆனால் அதன் நுணுக்கங்கள் நமக்குத் தெரியாமலே ரசித்திருப்போம். தெரிந்தால் இன்னமும் ரசிக்கலாமே...
===========================================================================================
ஒவ்வொரு
வளர்பிறையிலும்
வானம் பார்த்தபடி
காத்திருக்கிறேன்
நிலவு
வளர்ந்து
ஒருநாள்
வானத்தையே நிறைக்குமென... 2013
=====================================================================================
எனக்கு இன்று பதினெட்டு வயசாகிறது. எத்தனை மாறியிருக்கிறேன்! போன வருஷம் தைத்த ப்ளௌஸ் எல்லாம் பிடிக்கிறது. உயரமாக வளர்ந்திருக்கிறேன். கண்ணாடிக்கு முன்னாலே விதவிதமா டிரஸ் லயும் அன்டிரஸ்லேயும் நின்று என்னையே பார்த்துக்கிற மோது வெட்கமாகவும் இருக்கிறது. தொடர்ந்து பார்த்துக் கொள்ள ஆசையாகயும் இருக்கிறது. ரேடியோ சிலோன் கேட்டு அலுத்துப்போய் விட்டது. வராந்தாவில் உட்கார்த்து ஆண்களைப் பார்த்து ஒவ்வொருவருக்கும் மார்க்' போட்டுக் கொண்டிருக்கிறேன். எல்லாரையும் 'அவ'ரோடு ஒப்பிட்டும் பார்க்கிறேன். இந்த ஒரு வாரத்திலே என் உடம்பிலே புதுசா ரத்தம் ஓடுகிறாற் போலத் தெரிகிறது! எதுக்கோ விதம் விதமாக அலங்காரம் செய்துகொள்கிறேன்.
என் அகுமை சுநந்தா. நீ ஒரு பைத்தியம். எப்படிப்பட்ட பைத்தியம்? எழுதாதே! அந்த வார்த்தையை உபயோகிக்காதே!
அவர் கொடுத்த புஸ்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டேன்.. ரகசியமாக!
=======================================================================
சென்ற வாரம் JKC நான் பெரிதாகத்தான் கவிதை எழுதுவேன் என்று குறிப்பிட்டிருந்ததால் வேறு ஏதோ தேடும் கிடைத்த இதை உடனே பகிர்கிறேன்!
==========================================================================================
=============================================================================================



















இன்றைய கதம்பம் ரொம்ப சுருக்கமாக இருப்பதாக ஒரு எண்ணம்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை.. ஆமாம். சும்மா ஒரு மாறுதலுக்குதான்...
நீக்குபம்பரம் விளையாட்டில் ஏதும் சாகசம் பண்ணிய நினைவு இல்லை.
பதிலளிநீக்குநைலான் கயிறு... படமுள்ள பகுதியாகப் போடவில்லையே என்று தோன்றியது.
அதிலிருந்த படங்களில் சுவாரஸ்யம் இல்லை! மேலும் சுநந்தாவின் டைரிக்காக பகிர்ந்தேன்!
நீக்குநாய்கள் பற்றி படிக்கும்போது எனக்கு ஒன்று தோன்றியது. மோத் எனப்படும் பூச்சிகள் வீட்டில் பறக்க ஆரம்பித்தன. கொசு மட்டையை வைத்துத் தாக்கிய சில நாட்களிலேயே புதிய பூச்சிகள் தப்பிக்க மேற்கூரையில் ஒட்டியிருக்க ஆரம்பித்தன.
பதிலளிநீக்குஒவ்வொரு உயிருக்கும் தப்பிக்க மூளை செயல்பட்டு புது வழிகளைக் கண்டுபிடிக்கிறது எனத் தோன்றியது.
உண்மைதானே அது? ஏதோ ஒரு தீவில் குரங்குகள் பழங்களை ஆற்று நீரில் கழுவி உண்டனவாம். தொடர்ச்சியாக எல்லா நாட்டிலும் அதேபோன்ற செயல்கள் நடந்தனவாம் என்று படித்திருக்கிறேன்.
நீக்குபாடல் நுணுக்கங்கள்... அதுவாகவே அமைந்துவிடுகிறதா இல்லை போஸ்ட்மார்டம் பண்ணுபவர்கள் அதீதமாக யோசிக்கிறார்களா என்று தோன்றும்.
பதிலளிநீக்குபாடகர்களும் அவர் எப்படி சில இடங்களை பாடச்சொல்லுவார் என்று சொல்லி இருப்பதைப் பார்த்திருக்கிறேன் / படித்திருக்கிறேன். உதாரணமாக வளையோசை கலகலவென பாடலில் அந்த ஆரம்ப இசையில் நேர்ந்த மாற்றம் பற்றி நெப்போலியன் சொன்னது... இளையராஜாவின் திறமை பற்றியும் நுணுக்கம் பற்றியும் SPB மிக அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.
நீக்குபழைய ஜோக்குகள், நகைச்சுவையை எப்படி எழுதுவது என்பதற்குப் பயிற்சிக்கூடமாய், அதாவது evolveஆகியிருக்கிறது. அவற்றையே மேம்படுத்தி பல ஜோக்குகளைத் தயாரித்திருக்கின்றனர்.
பதிலளிநீக்குஎம் எஸ் விஸ்வநாதன் இசைக்கு சொன்னது போல புதிதாக என்று எதுவுமே இல்லை. ஒன்றிலிருந்து ஒன்று... அதிலிருந்து இன்னொன்று...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.