30.3.26

"திங்க"க்கிழமை :: உப்புமா கொழுக்கட்டை --- ஸ்ரீராம்

பச்சரிசி - நாலரை மான்பிடி  (அப்படீன்னா எவ்ளோன்னு தெரியும்தானே?!)

து.பருப்பு - பெரிய கரண்டியால் ஒன்று அல்லது சிறிய கப் ஒன்று 

மிளகு - மூன்று டேபிள் ஸ்பூன் 

சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன் 
மிளகாய் வத்தல் 6 
கறிவேப்பிலை கொஞ்சம் 
பெருங்காயம் 
தேங்காய்த்துருவல் ஒரு சிறிய மூடி 
உப்பு 

சரியாகச் செய்ய வேண்டுமென்றால் அரிசியைக் களைந்து, உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஆனால் நாங்கள் இங்கே அரிசியைக் களைந்து (உலர்த்த நேரமில்லாமல் - பசி நேரம்) எடுத்துக் கொண்டு அரிசி, மிளகு சீரகம் எல்லாவற்றையும் சேர்த்துப்போட்டு ஒன்றுக்கு இரண்டாய் மிக்சியில் அரைத்துக் கொண்டோம்.


நாங்கள் குக்கரில் வைத்தாலும், வெங்கலப்பானையில் வைப்பது விசேஷம்.  அல்லது வாணலியில் செய்வார்கள்.  குக்கரில் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை தேங்காய்த்துருவல் ஆகியவற்றை (அடுப்பை ஆன் செய்து விட்டீர்களா என்று பார்த்துக் கொள்ளவும்!) அதனதன் வரிசையில் தாளித்துக்கொண்டு, அரைத்த அரிசிக் கலவையையும் போட்டுக்கொண்டு கண் திட்டமாய் ஐந்து சொம்பு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்தோம்.  தேவையை விட கொஞ்சம் அதிகமாக தண்ணீர் சேர்க்கலாம். குக்கரை மூடி,  இரண்டு அல்லது மூன்று விசில் உங்கள் குக்கர் வழக்கத்தை வைத்து வந்ததும் இறக்கி வைத்து விசில் அடங்கியதும் திறந்து, லேசாகக் கிளறி, 





அதை ஆறுவதற்கு முன் தட்டில் கொட்டி, கை சூடு பொறுப்பதற்காக கொஞ்சம் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு உருண்டை பிடித்து, இட்லித் தட்டில் வைத்து, அடுப்பில் ஏற்றி, ( அடுப்பைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன!) எட்டு அல்லது பத்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் உப்புமா கொழுக்கட்டை ரெடி.  






தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது உங்கள் விருப்பம்போல. 

வெறும் உப்புமாவாக சாப்பிட வேண்டுமென்றால்,  குக்கர் அல்லது வாணலி அல்லது வெங்கலப்பானையிலிருந்து எடுக்கும் முன் ஒரு பதம் இருக்குமே..  அங்கேயே இன்னும் கொஞ்சம் பிரட்டி எடுத்து அப்படியே சாப்பிடலாம்.

நாம்தான் கொழுக்கட்டை வடிவத்துக்கு வந்திருக்கிறோமே.. அதை அவரவர் அளவு, தேவைக்கேற்ப தட்டிலிட்டு சூடு ஆறும் முன் உண்டு களியுங்கள்!


எதையும் ஒரு புதிய வடிவத்தில் பார்க்கும்போது ஒரு உற்சாகம் வருகிறது.  நாக்கின் சுவை நரம்பு மீட்டப்படுகிறது.  சூடாகச் சாப்பிட்டால் சொர்க்கம்தான்.  உப்புமா பிடிக்காதவர்கள் கூட இப்படி செய்தால் சாப்பிடும் ஆவல் வரும். 

சரிதானே!

=========================================================================================

ஆட்டோகிராஃப் சொல்லும் கதை.  ஏதோ ஒரு பழைய பைண்டிங்கிலிருந்து எடுத்தது.  விகடன் என்று நினைக்கிறேன்.  நடிகை சரோஜாதேவியின் தீபாவளிகள்!

ஒவ்வொரு தீபாவளிக்கும் எனக்கு எங்கிருந்தாவது சொல்லி வைத்தாற்போல் ஒரு ஆபத்து வந்து விடும்.  அந்த தீபாவளி எனக்கு "கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி"யாகி விடும்......!

ஒரு வருடம் பரிசு வாங்க டெல்லிக்குப் போயிருந்தேன்.  தீபாவளிக்குச் சென்னை  திரும்பலாம் என்று நினைத்து, டெல்லி விமான நிலையத்தை நெருங்கும்போது நான் சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானது. காரைப் பார்த்துக் கொண்டிருந்தபோது என் தலைக்கு மேலே நான் செல்ல இருந்த விமானம் சென்னைக்குப் பறநதது.

வேறு வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு ரயிலில் மூன்றம் வருப்பில் ஏறினேன். அந்த வருட தீபாவளி ரயிலில் கழிந்ததது.

மறு வருடம் தீபாவளிக்கு சில வருடங்கள் முன் பூனாவில் ஒரு ஹிந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.  படப்பிடிப்பில் கதாநாயகன் கதாநாயகியின் தலையில் குறும்பாக ஒரு கல்லை வீசி அடிக்க வேண்டும். இது காட்சி.  குறும்பாக அவர் அடிக்கப்போக, அது பெரிய வம்பாகப் போய் விட்டது.  என் தலையில் பெரிய காயம் ஏற்பட்டு விட்டது.  அந்த வருட தீபாவளி தலைக்கட்டுடன் கழிந்தது.

திருமணம் ஆன பின் எங்கள் தலை தீபாவளி வந்தது.  எனக்கு ஏதாவது விபத்து நேரக்கூடாதே என்று பயந்து கொண்டே இருந்தேன்.
பெங்களுருவிலிருந்து என் கணவரின் பெற்றோர், உறவினர், பலரும் வந்து விட்டனர்.  அவர்தான் பாக்கி.

பெங்களூரில் பிளேனை என் கணவர்  தவற விட்டு விட்டார்.  எப்படியும் தலை தீபாவளிக்கு' வந்தாக வேண்டுமே என்று, கையில் எனக்காக வாங்கிய பரிசுப்பொருள்களுடன் ரயிலில் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறி அவஸ்தைப்பட்டு வந்து சேர்ந்தார்.

இந்த வருட தீபாவளியாவது ஒழுங்காக நடக்க வேண்டுமே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தேன்.

சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போன என் தந்தையாரால் அவரைப் பார்க்க முடியவில்லை.  அவரும் 'டக்'கென்று ஒரு டாக்சியைப் பிடித்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார்.அரை நேருக்குநேர் பார்த்துத்தான் எனக்கு உயிர் வந்ததது.  அவர் எனக்கு பரிசாகக் கொண்டு வந்த  ஜிமிக்கியையும், பட்டுப் புடவையையும் என்னிடம் கொடுத்து மகிழ்ந்தார்.  நானும் அவற்றைப் போட்டு மகிழ்ந்தேன்.  தன் கையிலிருந்த ஜெர்மன் காமிராவினால் என்னை பல படங்கள் எடுத்து மகிழ்ந்தார்.  அதில் ஒன்றுதான் இது. 

அவருக்கு அந்தக் காமிரா என்றால் ரொம்பப் பிரியம்.  நாங்கள் அயல் நாடுகளுக்குப் போயிருந்தபோது அதை ரஷ்யாவில் தொலைத்து விட்டார்.  மிகவும் கவலைப் பட்டார்.  பாவம்!  எதையோ பறிகொடுத்தது போல் கலங்கிப் போனார்.  பிறகு எப்படியோ லண்டனில் எங்கள் கையில் அது கிடைத்தது.  யாரோ நல்லவர் அதை எடுத்து லண்டனுக்கு அனுப்பி வைத்திருந்தார். 

அவருக்கு அது மிகவும் ராசியான காமிராவாம்.

B. சரோஜா தேவி ஸ்ரீஹர்ஷா.

==========================================================================================


ஒரு கையறுநிலை கணவனின் கண்ணீர்க் கடிதம்!





மன்னிக்கவும் விடைகள் எடுத்து வைத்திருந்த படம் தொலைந்து விட்டது.  முகங்களை கண்டுபிடிக்க வேண்டுமாம்.  அதாவது எது யார் என்று.   என்னால் நான்கு பேர்களைதான் அடையாளம் காண முடிகிறது!


அப்பவும் இதே நிலைதானா?!!

25 கருத்துகள்:

  1. அரிசி உப்புமா, நாங்கள் வாணலியில் கிளறி, உருண்டை பிடித்து இட்லி தட்டில் அல்லது பாத்திரத்தில் போட்டு வேகவைப்போம்.

    வெறும்னவே சாப்பிடலாம். எனக்கு மிபொடி எண்ணெய் தொட்டுச் சாப்பிடப் பிடிக்கும்.

    படத்தில் பெருங்காயம் கவர்கிறது. என்ன பிராண்ட்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  ஆமாம் நானும் சொல்லி இருக்கிறேன்.  இபப்டி சாப்பிட்டால் உப்புமா என்னும் எண்ணம் மறந்து ஏதோ புதிய பண்டம் என்று சாப்பிடலாம்.  இதை பிடி கொழுக்கட்டை என்றும் சொல்வார்கள்.  பதிவில் இணைக்க மரனது விட்டேன்!  வெங்கலப்பானையில் செய்தால் விசேஷம்.

      வெறுமனே ஒன்று சாப்பிடலாம்.  அப்புறம் ஒரு மிளகாய்ப் பொடியாவது வேண்டும்!!!  

      நீக்கு
    2. பெருங்காயம் நல்ல பிராண்ட்.  நாங்கள் LG யை டிவோர்ஸ்  கன நாட்களாகிறது! இந்த பிராண்டின் பெயர் பாஸைக் கேட்டுச் சொல்கிறேன்.  எனக்கு சட்டென பெயர் மறந்து விட்டது.  ரொம்ப நல்லா இருக்கும்.  ஹோசூரில்தான் தயாரிக்கிறார்கள்.

      நீக்கு
  2. சட்னு பார்த்து ஐந்து முகங்களைக் கண்டுபிடித்துவிட்டேன். நாலைவிட ஐந்து பெரிதல்லவா?

    பதிலளிநீக்கு
  3. பிரபலஸ்தர்கள் என்ன எழுதினாலும் பத்திரிகையில் இடம் உண்டு. அவர்கள் படம் ஒரு பக்கத்தை எடுத்துக்கொள்ளும்.

    துபே ஏசி மூன்றாம் வகுப்பில் ஊருக்குச் சென்றதே நியூஸ். அந்தக் காலத்தில் மூன்றாம் வகுப்புப் பெட்டி. உங்களுக்கு கரி எஞ்சின், மூன்றாம் வகுப்புப் பெட்டி நினைவிருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாக நினைவிருக்கிறது. பிரபலங்கள் - அதுவும் கன்னடத்துப் பைங்கிளி எதை மிழற்றினாலும் அந்தக் காலத்தில் ரசித்திருப்பார்களே...

      நீக்கு
  4. மனைவி ஊருக்குப் போனா இரண்டு மூன்று நாட்கள் சுவர்கம்தான். மூணாவது நாள் வீடு அமைதியா இருப்பது தெரியும். பிறகு சாப்பாட்டுப் பிரச்சனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  சமீபத்தில் என் பேஸ்புக் நண்பர் சரவணா கூட சென்ற வாரம் அவர் மனைவி ஊருக்குப் போன் அனுபவத்தை இப்படிதான்  எழுதி இருந்தார். 

      நீக்கு
  5. எனக்கு அரிசி உப்புமாக்கு தேங்காய் துவையல். இன்று செய்யச் சொல்லலாமா இல்லை வெயிட் கார்பினால் ஏறிடுமான்னு யோசிக்கறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடக்கடவுளே..  நான் பிடித்ததைச் சாப்பிட தயங்குவதே இல்லை நெல்லை!

      நீக்கு
  6. அந்த '74 வருட ஆ.வி. அட்டைப்பட விளாசலை (ஜோக் அல்ல0 எங்கே தேடி கண்டுப்பிடித்து உபயோகப்படுத்திக் கொண்டீர்கள்? இந்த நாட்களுக்கும் பொரித்தமானது, அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்..   அதனால்தானே அதைப் பகிர்ந்தேன்!  இப்போது வாட்ஸாப்பில் வந்தது!

      நீக்கு
  7. உ கொ ரொம்பப் பிடிக்கும். சூப்பரா வந்திருக்கு ஸ்ரீராம்.

    விவரமான படங்கள் காணொளியும்...நானும் சிலப்போ நேரம் இல்லைனா ஈர அரிசியையே பொடித்துவிடுவேன்.

    நான் அளவுக்கு ஏற்ப வெங்கல பானையில் கிளறிவிட்டு உருட்டி குக்கரில் ஸ்டீமரில் வைத்து

    இன்னொன்னு நான் இட்லி தட்டில் வைக்காமல் (பின்ன நிறைய தட்டுகள் ஆகிடுமே...தேய்க்கணுமே!!! அதனால் குக்கர் பாத்திரம் வட்ட பாத்திரம் இருக்கும் இல்லையா அதில் வைத்து எடுத்துவிடுவேன். வெயிட் போடாமல்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா..  நல்ல ஐடியாதான்.   வெங்கலப்பானை தற்சமயம் எங்கள் வீட்டில் இல்லை..  என் அம்மா உபயோகித்தது அண்ணன் வீட்டில் இருக்க வேண்டும்.  ஆனால் அவர்களுக்கு உபயோகிக்கத்தெரியாது.  அவர்கள் குக்கர்தான் உபயோகிக்கிறார்கள்.

      நீக்கு
  8. அதில் ஒன்றுதான் இது. //

    அந்தப் படத்தைக் காணவில்லையே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி பாதி தெரிகிறது பாருங்கள்...  மேட்டரை காபி பண்ணும் ஷோக்கில் படத்தை விட்டிருக்கிறேன் என்று தெரிந்தது.  இப்போது தேடியும் பலனில்லை!  எங்கே எதிலிருந்து எடுத்தேனோ...!

      நீக்கு
  9. ஆடி மாசம் - புன்சிரித்தாலும், ஏன் ஆண்கள் எப்பவுமே இப்படி மனைவியைச் சொல்கிறார்கள் என்பது எனக்கு எப்பவும் எழும் கேள்வி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி பிறந்தது அன்று.. நல்ல பதில் கிடைப்பது என்று?

      நீக்கு
  10. உப்புமா கொழுக்கட்டை வித் தேங்காய் சட்னி மிகவும் பிடிக்கும்.
    குக்கரில் ஐந்து விசில்கள் விட்டால் நன்றாக வெந்து விடுமே? அதை ஏன் மீண்டும் இட்லி தட்டில் வேகவைக்க வேண்டும். நன்றாக வேக விடாமல் முக்கால் பதத்திற்கு வேக விட்டு, பிறகு இட்லி தட்டில் வேக வைக்கலாம் இல்லையா?

    பதிலளிநீக்கு
  11. 9 ராமகிருஷ்ண பரம ஹம்ஸர், 10 சாரதா தேவியார், 15 விவேகானந்தர்
    14 இந்திராகாந்தி, 7 மதர் தெரேசா 12 காந்தி

    இன்னும் தெரியுது பெயர்கள் டக்குனு வர மாட்டேங்குது...நேரமும் இல்லை கூர்ந்து நிதானமாகச் சொல்ல

    கீதா

    பதிலளிநீக்கு
  12. காஸ் விஷ்யாம் ஜோக் முன்னரே வந்திடுச்சோ!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ௳றைந்திருக்கும் முகங்களில் 15 கணித்திருக்கிறேன். அது சரி என்னுடைய குறுக்கெழுத்து விடைகளை எப்போது போடப் போகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  14. சர்வ காலமும் பிறர் முகங்களையே பார்த்தும் அவர் பற்றிப் பேசியும் நம் முகத்தை நாமே இழந்து விடும் இந்த பரிதாபத்தை என்னவென்று சொல்வது?..

    பதிலளிநீக்கு
  15. மறைந்திருக்கும் முகங்களில் என்ரு வாசிக்கவும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!