11.3.26

சமீபத்தில் நீங்கள் பார்த்து நொந்துபோன தமிழ்ப்படம் எது?

 

கேள்வி பதில்கள் :

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

ஒரு காலத்தில் திருமணம் என்பதை தன் வாழ்க்கையோடு பின்னி பிணைத்துக் கொண்ட பெண்கள் இப்போது திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு அங்கம், அவ்வளவுதான் என்று கருதுவதற்கு பொருளாதார சுதந்திரம் மட்டும்தான் காரணமா?

# காலக்கிரமத்தில் அடிப்படைக் கோட்பாடுகள் பலவும் தேய்ந்தும், உரு மாறியும், முற்றிலும் வேறாகவும் ஆவது இயற்கையின் நியதி.  இவ்வகை மாற்றம் மேல் நோக்கியோ மலினப் பட்டோ இருக்கும் . 

சாதுவாக,  பிறரைச் சார்ந்து,  வீட்டுப் பராமரிப்பு, குழந்தைகள் நலம் என்று மட்டுமே இருந்த பெண் இன்று யாருடனும் சரி நகர் சமானமாக இருக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறாள்.  இது திசை மாறியோ வக்கிரமாகவோ போகும்போது விபரீதங்கள் விளைகின்றன. இதுவே சரியாக பயன்படுத்தப்படும் போது உன்னதம் வெளிப்படுகிறது.

பொருளாதார சுதந்திரம் மிகவும் முக்கியமானதாக மாறிப் போய்விட்ட இந்த காலத்தில் வேறு பல மதிப்பீடுகள் வீரியத்தை இழக்கின்றன.


நெல்லைத்தமிழன் : 

1. பழைய பாடல் வரிகள் நம் மனதில் நிற்பதுபோல, சமீபத்தில் (சில வருடங்கள் ஆயிருந்தாலும் பாதகமில்லை) வந்த பாடல்களில் நீங்கள் அடிக்கடி முணுமுணுப்பது எது?   

# "மாமனாரை மாமியாரை மதிக்கணும்,  மாலையிட்டவனை தினமும் துதிக்கணும்."

சில வருஷங்கள் அல்ல,  பலப்பல வருஷங்களுக்கு  முன்னது.

& என்னுடைய மனதில் அடிக்கடி வரும் பாடல் வரிகள் நிலையாக இருக்காது. அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். 

2.  சமீபத்தில் நீங்கள் பார்த்து நொந்துபோன தமிழ்ப்படம் எது? ஓடிடியில் பார்த்திருந்தாலும்.   

# ஜெயிலர்.

& சமீபத்தில் அல்ல. பல மாதங்களுக்கு முன்பு, படத்தின் பெயரைப் பார்த்து, நகைச்சுவை படம் போலிருக்கு என்று நினைத்து, பார்த்த படம் " இருட்டு அறையில் முரட்டுக் குத்து " கண்றாவி, ஆபாசம் பேத்தல் படம்.  

3.  நாமெல்லாம் (வாசகர்கள்) சந்திப்பதுபோல ஏதேனும் விசேஷம் எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவில் உண்டா?  

# இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

& வீடியோ conferencing மூலம் அனைவருக்கும் ஒத்து வரும் நேரத்தில் நம் whatsapp குழுவில் முயற்சி செய்யலாம். But, count me out - due to obvious reasons. 

4.  யாருடைய மரணம் உங்கள் மனதில் இன்னும் நீங்காமல், நினைத்தால் வருத்தத்தை உண்டாக்குகிறது?  

# காலம் சற்றுக் கடந்து விட்டால்,  யாருடைய மரணமும் நம்மை வருத்தப்படுத்தாது. கென்னடி சுடப்பட்டு இறந்த போது,  நான் மிகவும் வருத்தப்பட்டது நினைவில் இருக்கிறது. அப்போது என் வயது வெறும் 25 என்பதும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

& இன்றைய சூழ்நிலையில் நிதானமாக யோசித்துப் பார்த்தால், அப்படிப்பட்ட மரணம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

5. குழந்தைகளுக்காக நாம் வாழணுமா இல்லை நமக்காக அவர்கள் வாழணுமா? எந்த வயதுகளில்?

# உங்கள் கேள்வியைப் பார்த்தால்,  சினிமாக்களில் வருவது போல,  தன் வாழ்க்கையைத் தியாகம் செய்து கொண்டு குழந்தைகளுக்காக பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களுக்காக குழந்தைகளோ வாழ்வதைக் குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. 

ஒரு லட்சியம் என்று பார்த்தால் வாழ்க்கை என்பதே தனக்காகத்தான் முதற்கண் வாழ வேண்டும். அதில் எல்லாருடைய நலமும் அவரவர்களுக்கு ஒத்த அளவில் நம் கவனத்தில் இருக்க வேண்டும். 

எல்லாரும் எல்லாருக்காகவும் வாழ்வது என்பது ஒரு லட்சிய நிலை. அடைய முடிந்தால் அதுவே சிறப்பு. 

குழந்தைகளிடம் சரியான மதிப்பீடுகள் வரும் வரை பெற்றோர்கள் அவர்களை  அனுசரித்து வாழ வேண்டும். பெற்றோர்களுக்கு தற்சார்பு நிலை குறையும்போது அவர்கள் அந்திம காலம் வரை குழந்தைகள் அனுசரித்து வாழ வேண்டும். சிக்கல் நிறைந்து கஷ்டமான ஒன்றானாலும் இதுதான் நிதர்சனம்.

= = = = = = = = = =

படமும் பதமும் :

நெல்லைத்தமிழன் :


ஒரு வருடத்துக்கு முன்பு, நியூசிலாண்டின், வகாரி/வெள்ளைத் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு, அதனால் ஏற்பட்ட மனித உயிரிழப்பு என்பதைப் பற்றிய டாக்குமெண்டரி பார்த்தேன். எரிமலை வெடிக்கும் அன்றைய தினம் வரை சுற்றுலாப் பயணிகள் அந்த எரிமலையைப் பார்க்கச் சென்றிருந்தனர். (படகில் அந்த இடத்திற்குச் செல்லவேண்டும்). அந்த சோகமான தினத்தில் திடும் என்று எரிமலை வெடித்து ஏகப்பட்ட உயிர்களை பலிவாங்கியது. எப்போதும்போல், நிகழ்வு நடந்ததும், அங்கு சுற்றுலா செல்லத் தடைவிதித்துவிட்டது அரசாங்கம். அதற்கும் மேலே உள்ள படத்திற்கும் என்ன சம்பந்தம்? பிலிப்பைன்ஸ் சென்றிருந்தபோது தால் எரிமலைப் பகுதிக்கு, படகில் ஏரியைக் கடந்து, பிறகு குதிரையில் ஏறி எரிமலைப் பகுதியை அடைந்தேன். கடைசியாக 1911ல் எரிமலை வெடித்ததாம். பிறகு 1965-77ல் கொஞ்சம் கொஞ்சம் புகை வந்ததாம். அவ்ளோதானாம். அதனைச் சென்று பார்த்தபோது வியப்பாக இருந்தது (எரிமலைக் குழம்புலாம் இல்லை. தண்ணீர்தான் இருந்தது. சுற்றியுள்ள மண் சிவப்பு நிறமாக இருந்தது). வரும் வழியில் பூமியின் சிறிய திறப்புகளில் புகை வருவதைப் பார்த்தேன் (படங்களும் எடுத்தேன்).


எரிமலை உச்சியிலிருந்து பார்க்கும்போது தெரிந்த தண்ணீர் (கரைகளில் கந்தகம் படிந்திருக்கும்). அப்போதெல்லாம் எனக்கு பயம் இல்லை. பிறகு 2011ல் எரிமலை புகை கக்கியது. அதன் பிறகு அந்த இடமே வாழத் தகுதியற்ற இடம் என்று அரசு சொல்லிவிட்டது. நான் சென்றிருந்த சமயம் எரிமலை வெடித்திருந்தால்?  இதுபோல தாய்வானிலும் கொஞ்சம் ஆக்டிவ் ஆக இருக்கும் எரிமலைப் பகுதியில் பயணம் செய்தோம் (குடும்பத்துடன்). மலைப்பகுதி அது. எரிமலைப் புகை வெளியே வந்துகொண்டிருந்தது. அருகில் தண்ணீர் எரிமலைக் குழம்புபோல கொதித்து வெளியே வருவதையும் பார்த்தேன். அந்த இடத்தில் கந்தகப் புகை நிறைய ஆங்காங்கே வந்துகொண்டிருந்தன. என் பையன், இது ரொம்ப டேஞ்சர், மூச்சுக்குழாய், லிவரைப் பாதிக்கும் என்று எச்சரித்தான் (அவன் நிறைய படிப்பவன்). அதன் பிறகுதான் அதன் ஆபத்து எனக்குப் புரிந்தது. இந்தப் பயணங்களைப் பற்றி படங்களுடன் எப்போது எழுதப் போகிறேனோ!


எரிமலை, பின்னால் (நடுவில்) தெரியும் மலைதான். அதன் உச்சிக்குத்தான் குதிரையில் பயணம் செய்தேன்.

**************************

ஸ்ரீராம்...



எத்தனை கதைகளை அடக்கிய கற்களோ
உடைந்த கற்களில் எத்தனை சம்பவங்களோ, அனுபவங்களோ
உடைந்தது கற்கள் மட்டும்தான் என்று நம்புவோம்; பிரார்த்திப்போம்
கற்கள் உடைவதில்லை மீண்டும் உயிர் பெற்று புதிய வீடுகள் ஆகின்றன.
கற்கள் புதுப்பிக்கப்படுவது போல் கனவுகளும் புதுப்பிக்கப்படுகின்றன
பழைய சோகங்கள் மறைந்து புதிய இன்பங்கள் தலை தூக்கட்டும்
புதிய கட்டிடம் உருவாவது போல் வண்ணமயமாய் புதிய வாழ்க்கை உதயமாகட்டும்



= = = = = = = = = = = = =

படங்கள் பார்த்து கதை, சம்பவம் சொல்லுங்கள்!  இடம் சுட்டி பொருள்!






==========================================================================================

நம்புங்கள்..  இது ஜெ.. ஓவியம்!



============================================================================================

KGG பக்கம் : 


என்னிடம் எப்போதும் 3 சிம்கள் உண்டு. 

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சென்னையிலும் பெங்களூரிலும் மாறி மாறி இருக்கவேண்டிய சூழ்நிலையில் சென்னை ஏர்டெல் எண் ஒன்று, சீப் ஆகக் கிடைத்ததால், சென்னை பிஎஸ்என்எல் சிம் ஒன்று, பெங்களூரில் பயன்படுத்த பெங்களூர் ஏர்டெல் சிம் ஒன்று. 

இவற்றில் கடந்த 8 வருடங்களாக கிட்டத்தட்ட பெங்களூரில் மட்டுமே இருக்கவேண்டிய சூழ்நிலை வந்ததால், பெரும்பாலும் கைவசம் பெங்களூர் சிம் போடப்பட்ட ஃபோன் மட்டுமே வைத்திருப்பேன். 

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கி பரிவர்த்தனைகள் எல்லாமே நான் அதிகம் பயன் படுத்தாத, சென்னை சிம் உள்ள ஃபோன் மூலமாகவே செய்வேன். 

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒருநாள் மாலை பொழுது. அலை பேசியில் என்னென்னவோ சோதனைகள் செய்து கொண்டு இருந்தேன். 

அப்போது என்னுடைய சென்னை போனில் மொபைல் பேங்கிங் செய்ய முயற்சி செய்யும்போது, என்னுடைய பாங்க் அக்கவுண்ட் திறக்க வரவில்லை. 
e KYC விவரங்கள், கொடுத்தால் சரியாகும் என்று தெரிந்துகொண்டேன். அந்த விவரங்களைக் கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்ளாமல் பாங்க்குக்கு நேரே வந்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று செய்தி வந்தது. 

அது மட்டும் அல்ல - திடீரென்று என்னுடைய பெங்களூரு ஃபோன் ஸ்கிரீன் லாக் ஆகிவிட்டது. password கொடு என்று ஒரு செய்தி திரும்பத் திரும்ப திரையில் வந்தது. ஃபோன் பயன் படுத்த முடியவில்லை. 

என்னென்னவோ வழக்கமான passwords கொடுத்தும் பலன் இல்லை. 

நான் எப்பொழுதும் பல தளங்களின் கடவுச் சொல்களை ஞாபகம் வைத்து இருப்பது கடினம் என்பதால், அவற்றை ஒரு text file ஆக உருவாக்கி என்னுடைய போனில் வைத்து இருந்தேன். 

சோகக் கதை என்ன என்றால், அந்த ஃபைல் இந்த போனில் மாட்டிவிட்டது! இப்போ பாஸ்வேர்ட் என்ன என்று தெரியவில்லை. ஃபோன் பயன்படுத்த இயலவில்லை. 

பலவாறு குழம்பி அந்த போனை முழுவதுமாக reset செய்தேன். 

அதற்குப் பின் கூகிள் உதவியால் அந்த போனில் முன்பு இருந்த சில app களைத் திரும்பக் கொண்டு வந்தேன். இன்னமும் 100% recovery இல்லை. 80% recovery ஆஃப் data வந்ததால் சமாளித்து வருகிறேன். 

அதற்குப் பின்னும் வேறு ஒரு பிரச்சனை. 

அடுத்த வாரம் அது என்ன என்று எழுதுகிறேன். 

(தொடரும்) 

= = = = = = = = = = 

சில உளவியல் சமாச்சாரங்கள் அதிசய விவரங்கள் கொண்டதாக இருக்கும். அவற்றில் ஒன்று, இதோ இங்கே - ஒரு facebook பதிவு. 

வரலாற்றில் தொடர் கொலைகள் எப்போதும் நடந்து வந்தாலும், எந்தவித நோக்கமும் இன்றி உளவியல் காரணங்களுக்காகக் கொலை செய்யும் சீரியல் கில்லர்கள் பற்றிய பிம்பம் ஜாக் தி ரிப்பர் (Jack the Ripper) காலத்தில்தான் பிரபலமானது. 

புள்ளிவிவரங்களின்படி, இத்தகைய கொலைகாரர்களின் எண்ணிக்கை 1970 மற்றும் 1980-களில் அதன் உச்சத்தைத் தொட்டது; குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தக் காலகட்டத்தில் பல கொடூரமான தொடர் கொலைகாரர்கள் உருவானார்கள். 

நிபுணர்களின் தரவுகளின்படி, 1980-களின் இறுதியிலிருந்து தொடர் கொலைகளின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாகக் குறைந்துவிட்டது. 1990-களுக்குப் பிறகு 'டெட் பண்டி' (Ted Bundy) அல்லது 'ஜெப்ரி டாமர்' (Jeffrey Dahmer) போன்ற உலகையே உலுக்கிய பிரம்மாண்டமான தொடர் கொலைகாரர்கள் உருவாவது மிகக் குறைவாகவே உள்ளது.

தொடர் கொலைகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தக் கொலைக் குற்றங்களே 1990-களுக்குப் பிறகு பெருமளவில் குறைந்ததற்கு அறிவியலாளர்கள் முன்வைக்கும் சில முக்கிய காரணங்கள்:

ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் 'சைக்கோ' திரைப்படம் வெளியான பிறகு, அறிமுகமில்லாத நபர்களிடம் உதவி கேட்பதோ அல்லது முன்பின் தெரியாதவர்களின் வாகனங்களில் ஏறி பயணம் செய்வதோ (Hitchhiking) ஆபத்தானது என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாகப் பதிந்தது. அதன்பின் குழந்தைகளை முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகவிடுவது, லிப்ட் கேட்பது எல்லாம் வெகுவாக குறைந்தன.

DNA பரிசோதனை மற்றும் கைரேகைத் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்ததால், முதல் கொலைக்குப் பிறகே குற்றவாளிகள் எளிதில் பிடிபட்டு விடுகின்றனர்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாகனங்களின் எஞ்சின் சத்தத்தைக் குறைக்கப் பெட்ரோலில் 'டெட்ரா எத்தில் லீட்' (Tetraethyl lead) சேர்க்கப்பட்டது. 1970 மற்றும் 1980-களில் இது உச்சத்தில் இருந்தபோதுதான் தொடர் கொலைகளும் பெருகின.

காரீயம் (Lead) என்பது ஒரு நச்சுத்தன்மை கொண்ட உலோகம். இது உடலில் நுழையும்போது குழந்தைகளின் வளரும் மூளையைத் தீவிரமாகப் பாதிக்கிறது.
குறிப்பாக, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் (Impulse control) முடிவெடுப்பதற்கும் பொறுப்பான முன் மூளைப் பகுதி (Prefrontal Cortex) காரீய நச்சால் சிதைக்கப்படுகிறது. இதனால் ஒருவருக்குத் திடீர் கோபமும் வன்முறை எண்ணங்களும் எளிதாக உருவாகின்றன.

1950 மற்றும் 60-களில் பிறந்த குழந்தைகள் காற்றில் கலந்திருந்த காரீய நச்சைச் சுவாசித்துக் கொண்டே வளர்ந்தார்கள். அவர்கள் 20 வயதை எட்டியபோது (அதாவது 1970 மற்றும் 80-களில்), அவர்களில் சிலரிடம் இந்த வன்முறை எண்ணங்கள் தொடர் கொலைகளாக வெடித்தன.

பெட்ரோல் மட்டுமின்றி பழைய காலத்துக் குடிநீர்க் குழாய்களிலும் காரீயம் (Lead pipes) பயன்படுத்தப்பட்டது. இதிலிருந்து கசிந்த நச்சு குடிநீர் வழியாக உடலுக்குள் சென்று மனநலப் பாதிப்புகளையும் கட்டுப்படுத்த முடியாத ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்தியது.

 இந்த 'காரீயம்-குற்றக் கோட்பாடு' (Lead-Crime Hypothesis) சற்று சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், இதற்கு வலுவான அறிவியல் அடிப்படைகள் உள்ளன.

1970-களின் இறுதியில் பெட்ரோலில் காரீயம் சேர்ப்பது படிப்படியாகத் தடை செய்யப்பட்டு, 2002-ல் முழுமையாக நிறுத்தப்பட்டது. காற்றில் காரீயத்தின் அளவு குறையத் தொடங்கிய 20 ஆண்டுகளுக்குப் பிறகு (அதாவது 1990-களின் தொடக்கத்தில்), கொலைக் குற்றங்களின் விகிதமும் உலகளவில் சரியத் தொடங்கியது.

தற்போது தடய அறிவியல் முன்னேற்றம், டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் காரீயம் இல்லாத தூய்மையான சுற்றுச்சூழல் ஆகிய மூன்றும் இணைந்து நிஜ உலகில் தொடர் கொலைகாரர்களின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன. 

இருப்பினும், கொரிய மற்றும் இந்தியத் திரைப்படங்கள் இன்றும் இவர்களை ஒரு புனைவு நாயகர்களாகச் சித்தரித்துத் திரையில் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

#history_is_his_story

~ நியாண்டர் செல்வன். 

= = = = = = = 

7 கருத்துகள்:

  1. படம் பார்த்து சம்பவம்.... எத்தனையோ நினைவுகளுக்குள் ஒன்றச் செய்துவிட்டீர்கள்.

    கந்தமாறன், வந்தியத்தேவன், பெரிய பழுவேட்டரையர்.
    பொன்னியின் செல்வன்.
    3....
    யானைமேல் துஞ்சிய தேவர்? ராஜாதித்தன்?

    பதிலளிநீக்கு
  2. ஆகமொத்தம் தொடர் கொலைகார்ர்கள் மீது தவறல்ல, சிஸ்டத்தின் மீதுதான் தவறு என்று சொல்லிட்டாங்க.

    அப்போ பலரும் தொடர் கொலைகார்ர்களாக ஆகியிருக்கணுமே.

    பதிலளிநீக்கு
  3. பாஸ்வேர்ட், மொபைல் பேங்கிங், மொபைல் லிங்க், கே ஒய் சி எல்லாமே சிக்கல் நிறைந்த சமாச்சாரங்கள். போன் தொலைந்தால் வேறு வகைச் சிக்கல்கள். என்னாச்சுன்னு சொல்லுங்க. கே ஒய் சிக்காக வங்கிக்கிக்குப் போவது இன்னும் கடி

    பதிலளிநீக்கு
  4. இடிந்த வீடுகள் மண்டபங்கள் எனக்கு கவிதையில் கூறப்பட்ட எண்ணங்களைத் தோற்றுவிக்கும். படம் அனுப்பி கவிதை எழுதச் சொல்லலாம் என நினைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  5. நானும் இருட்டு அறையில்.... படம் ஐந்து நிமிடங்கள் பார்த்து அசிங்கமாக இருக்கிறதே என்று பார்ப்பதை விட்டுவிட்டேன் ஒரு வாரம் முன்பு. ஜெயிலர் படம் இரண்டு முறைக்கு மேல் பார்த்தேன் (திருடும் போர்ஷன் ஓட்டுவேன்). அதை நல்லா இல்லை என்று சொன்ன புண்ணியவானைக் கட்டிவைத்து இ.அ.மு.சி படம் முழுவதையும் பார்க்க வைக்கணும்.

    ஜெயிலர் வில்லன் போதைச் சமாச்சாரங்களால் உடல் கெட்ட செய்தி படித்தீர்களா?

    பதிலளிநீக்கு
  6. இ.சு.பொ.வி 1 ----- பொன்னியின் செல்வன் கதை ஆரம்பக் காலம். சம்புவரையர் அரண்மனையில் பெரிய பழுவேட்டரையர் தலைமையில் சதியாலசனை. அந்த சமயம் வந்த வல்லவரையனைக் கந்தமாறன் பழுவேட்டரையருக்கு அறிமுகம் செய்து வைக்கிறான்
    இ.சு.பொ.வி 2 ------ மந்தாகினி காவேரியில் தவறி விழுந்து மூழ்கவிருந்த அருள்மொழி வர்மரைக் காப்பாற்றுகின்றார். எல்லோரும் (ஸுந்தர சோழர் தவிர) காவேரி அம்மனே வந்து காப்பாற்றினார் என்று கருதுகின்றனர்.
    இ.சு.பொ.வி 3 ------- கால்கள் இரண்டையும் இழந்தும் பழுவேட்டரையர் குல முன்னோர் இரு வீரர்கள் சுமந்து செல்ல வாள் சுழற்றி சோழர் படைக்கு வெற்றி தேடித் தருகிறார்.
    இ.சு.பொ.வி 4 ------ யானை மேல் துஞ்சிய தேவர்.....சுந்தர சோழரின் மூதாதை. சோழ சாம்ராஜ்யத்திற்கு அடித்தளம் போட்டவர்.
    எல்லாப் படங்களும் பொன்னியின் செல்வன் கதையில் வரும்.

    பதிலளிநீக்கு
  7. நெல்லையின் ஐந்தாவது கேள்விக்கு பதில் சிறப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!